‘ஓம் நமோபகவதே
வாசு தேவாய
தன்வந்த்ரயே
அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய
விநாசநாய த்ருலோக்யநாதாய
மகா விஷ்ணவே நம:’
அந்த நீண்ட கூடத்திலும், வெளியே அதையொட்டிய நீளமான வெராண்டாவிலும் அமர்ந்திருந்த நூற்றிருபது பேரும் கோரஸாக தன்வந்திரி மகா மந்திரத்தை உச்சரித்துவிட்டு, தங்கள் எதிரே போடப்பட்டிருந்த வாழை இலையில் பரிமாறப்பட்டிருந்த உணவை ருசிக்கத் தொடங்கினார்கள்.
ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனக் கலவையாக இருந்த அந்தக் கூட்டத்தில்தான் கிருஷ்ணவேணியும் இருந்தாள். அவள் மனத்தில் உற்சாகம் பொங்கிக்கொண்டிருந்தது. நாளை மறுநாள் இங்கிருந்து கிளம்பிவிடலாம்.
கிருஷ்ணவேணி இங்கு வந்து இன்றோடு அறுபது நாள் ஆகப்போகிறது. பன்னிரண்டு நாள்கள் முன்பாகவே கிளம்பியிருக்க வேண்டியவள். இப்படி ஆகும் என்று அவள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.
கிருஷ்ணவேணி தங்கமான பெண். பயந்த சுபாவி. அதென்னவோ, தங்கமானவர்களெல்லாம் பயந்த சுபாவிகளாகத்தான் இருக்கிறார்கள்.
கிருஷ்ணவேணிக்கு ஹீன உடம்பு. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு. இதனால் பிபி, ஷுகர் என்று சகலமானதும் இருக்கிறது. எத்தனையோ டாக்டர்களிடம் காண்பித்தாகிவிட்டது. கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்குக் கொட்டி அழுதாகிவிட்டது. ஒன்றும் பிரயோஜனமில்லை. யாரோதான் சொன்னார்கள், இதற்கெல்லாம் சரியான வைத்தியம் ஆயுர்வேதம்தான் என்று. அம்பலப்புழாவில் ‘தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலா’ என்று ஒன்றிருப்பதாகவும், அங்கே போனால் பூரண உடல் நலத்துக்கு உத்தரவாதம் என்றும் சொல்லி, போன் நம்பர் எல்லாம் கொடுத்தார்கள். விசாரித்துப் பார்த்ததில், ரொம்பவும் திருப்தியாக இருந்தது கிருஷ்ணவேணியின் பெற்றோருக்கு.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் அங்கேயே தனித்தனி விடுதிகள் இருக்கிறதாம். ஆயுர்வேத சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்பதால், அங்கேயே உணவுக்கூடம் வைத்து, சாத்விக உணவாகச் சமைத்துப் பரிமாறுவார்களாம். எண்ணெய், புளி, கத்திரிக்காய், கொத்தவரங்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு, பயறு வகைகள் எதற்கும் அங்கே இடமில்லை.
‘இது சிகிச்சை முறை இல்லை; வாழ்வியல் முறை’ என்று அவர்கள் சொன்னதே கிருஷ்ணவேணியின் மனசுக்கு இதமாக இருந்தது. ‘நம் உடம்பு பஞ்சேந்திரியங்களால் கெடுகிறது. இங்கே வயிற்றுக்கு உபத்திரவமில்லாத உணவு, கண்ணுக்கு இதமான இயற்கைக் காட்சிகள், காதுக்கினிய சங்கீதம், மாசுபடாத காற்று, மூச்சுப்பயிற்சிக்கு யோகா, உடல் உறுதிக்கு ஆசனங்கள்… தவிர, மூலிகை மருந்துகள், லேகியம், எண்ணெய்க் குளியல், எண்ணெய் மசாஜ் எல்லாம் உண்டு. ஒரு மண்டல காலம், அதாவது நாற்பத்தெட்டு நாள்கள் இங்கே தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டால், மறுபிறவி கிட்டிய மாதிரி புத்தம்புதுசாக வெளியே போகலாம்’ என்று அவர்கள் வர்ணித்தபோதே பாதி உடம்பு குணமாகிவிட்டதுபோலிருந்தது கிருஷ்ணவேணிக்கு.
பிப்ரவரி மாதம்தான் அவளை அவள் பெற்றோர் இங்கே கொண்டு வந்து, முழுசாக ஒரு லட்ச ரூபாய் பணத்தைக் கட்டிச் சேர்த்துவிட்டுப் போனார்கள். இடம் ரம்மியமாக இருந்தது. இந்தியா முழுவதிலிருந்தும் மட்டுமல்ல, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் இங்கிருந்தெல்லாமும் நிறைய பேர் இங்கே வந்து தங்கி, சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆஸ்திரேலியாவிலிருந்தும்கூட ஒரு பெண் வந்திருந்தாள்.
இவர்களில், மூன்று இளைஞர்களும், நான்கு பெண்களும் என ஏழு பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருந்ததில், கிருஷ்ணவேணிக்கு சந்தோஷம். ஒரே குடும்பமாகக் கலந்து பழகியதில் நாள்கள் ஓடியதே தெரியவில்லை. அவர்கள் முன்பே வந்து இங்கே சேர்ந்தவர்கள் என்பதால், ஒவ்வொருவராக விடைபெற்றுக் கிளம்பிப் போய்விட்டார்கள். இவளும் கிளம்பியிருக்க வேண்டியது. திடுமென இப்படி ஊரடங்கு வந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அவசரமாக மாற்று வழி யோசித்து, ஏர் இண்டியாவில் டிக்கெட் புக் செய்துகொண்டாள்.
நாளை மறுநாள் கிளம்பிவிடலாம் என்று ஆசை ஆசையாகக் காத்திருந்த நிலையில், விமானப் போக்குவரத்தும் ரத்தாகிவிட்டதாக செய்திச் சேனல்கள் அலறின. உள்ளுக்குள் கொஞ்சம் பக்கென்றுதான் இருந்தது. இருந்தாலும், பல்லைக் கடித்துக்கொண்டு இந்த ஏப்ரல் மாதத்தைக் கடத்திவிட்டால், நிலைமை சரியாகி, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மே 3-ம் தேதியன்று ரயிலிலேயே சென்னைக்குப் போய்விடலாம் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
சென்னைத் தோழிகள் எல்லாம் சிகிச்சை முடிந்து கிளம்பிப் போய்விட, தாமினி என்கிற டெல்லிப் பெண் ஒருத்திதான் கிருஷ்ணவேணிக்கு நெருக்கமானவளாக இருந்தாள். இவளைவிட இரண்டு வயது சிறியவள். குழந்தை போன்ற முகம். பேச்சும் குழந்தைப் பேச்சு. சரியாகத் தமிழ் பேசத் தெரியாததால் அப்படிக் குழந்தைப் பேச்சாகத் தெரிகிறதோ என்று கிருஷ்ணவேணி ஆரம்பத்தில் நினைத்தாள். அப்படி இல்லை. அவள் நிஜமாகவே குழந்தை மனசுக்காரியாக இருந்தாள். தீதீ, தீதீ என்று கிருஷ்ணவேணியிடம் ஒட்டிக்கொண்டாள்.
நாற்பதெட்டு நாள்கள் என்று மனசுக்குள் பதித்துக்கொண்டு வந்தபோது, அவ்வளவு நாள்களைத் தள்ளுவது சிரமமாக இல்லை. அதையும் தாண்டிச் சில நாள்கள் இங்கே இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு ஆளானபோது, சற்றுச் சோர்வாக இருந்தது. இப்போது, கிளம்பும் நாள் இன்னும் தள்ளிப்போய்விட்டதில், கிருஷ்ணவேணிக்கு அயர்ச்சியாக இருந்தது. புதிதாக யாரையும் சிகிச்சைக்குச் சேர்க்காததாலும், ஏற்கெனவே சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்ட உள்ளூர்வாசிகள் கிளம்பிப்போய்விட்டபடியாலும், இப்போது இங்கே மொத்தமே ஐம்பத்தைந்து பேர்தான். அவ்வளவு பெரிய இடம், கூட்டக் குறைவால் ஜிலோவென்றிருந்தது வேறு வயிற்றில் புளியைக் கரைத்தது.
நாளாக நாளாக நிலைமை இன்னும் மோசமாகியது. ஜெர்மனியைச் சேர்ந்த நாற்பது பேரை அந்த நாடு சிறப்பு விமானம் அனுப்பி மீட்டுக் கொண்டது. இத்தாலி மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டுத் தனி முகாமில் வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். இப்போது மொத்தமே ஏழெட்டுப் பேர்தான். பயிற்சியாளர்கள், பணியாளர்கள் என சமீப நாள்களாக யாருமே வருவதில்லை. ‘கட்டிய பணத்துக்குக் குறிப்பிட்ட நாள்களுக்கு மேலேயே உங்களை வைத்திருந்து சோறு போட்டாகிவிட்டது. இனிமேலும் சாத்தியமில்லை. இனி, உங்கள் வழியைப் பார்த்துக்கொண்டு போங்கள். இந்த வார இறுதிக்குள்ளாக இடத்தை காலி செய்யுங்கள். வைத்தியசாலையை மூட வேண்டும். அரசு உத்தரவு’ என்றது நிர்வாகம்.
ஏழு பேரில் இருவர் ஆண்கள். தைரியமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும், அவர்களுக்கும்கூட உள்ளூரப் பதற்றம் இருக்கத்தான் செய்தது. கிருஷ்ணவேணியுடன் அவளின் பெற்றோர் தினமும் மொபைலில் பேசி, தைரியம் ஊட்டிக்கொண்டிருந்தார்கள். இடத்தை காலி செய்யச் சொன்ன விஷயத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து அவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.
இரண்டு நாள் கழித்து, கிருஷ்ணவேணியிடமிருந்து கொஞ்சம் நல்ல செய்தி கிடைத்தது. சுகாதாரத் துறை அதிகாரிகளும், ஆட்சியரும் வந்து பார்வையிட்டுவிட்டுப் போனார்களாம். அதன்பின், கேரள ஹெல்த் மினிஸ்ட்ரியிலிருந்து உத்தரவு வந்திருக்கிறதாம், இவர்களை எங்கும் வெளியேற்றக்கூடாது என்று. அது மட்டுமல்ல, அடுத்த உத்தரவு வரும் வரையில், இந்த ஏழு பேருக்கு வேண்டிய உணவுக்கும் வைத்தியசாலை நிர்வாகம் ஏற்பாடு செய்துதர வேண்டுமென்று சொல்லியிருக்கிறதாம்.
இரண்டு அறைகள், ஒரு ஹால், ஒரு கிச்சன், சமையல் செய்யத் தேவையான உணவுப் பண்டங்கள் கொஞ்சம் ஆகியவற்றைக் கொடுத்து, ‘இனி உங்கள் பாடு’ என்று வைத்தியசாலையை மூடிவிட்டது நிர்வாகம். வாசல் கேட்டில் ஒரே ஒரு செக்யூரிட்டி.
அவ்வளவு பெரிய இடத்தில், வெறும் ஏழே ஏழு பேர் மட்டும் இயங்குவது, நடுக்கடலில் பயணித்தவர்கள் படகு உடைந்து, ஏதோ ஆளரவமற்ற தீவில் கரை சேர்ந்தது போன்ற உணர்வினையே தந்தது. ஆளாளுக்குத் தங்கள் உறவினர்களுடன் மொபைலில் பேசி, தங்களை எப்படியாவது அழைத்துக்கொள்ளக் கண்ணீர் மல்கினார்கள்.
தாமினி நாளெல்லாம் அழுதுகொண்டே இருந்தாள். கிருஷ்ணவேணிக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ‘ஏய், அழாதே! நான் இருக்கிறேன் உனக்கு. தைரியமாய் இரு’ என்று அவளின் தலையை வருடி, மார்பில் சாய்த்து, முதுகைத் தட்டிச் சமாதானப்படுத்தினாள்.
மே முதல் தேதியன்று கிடைத்த செய்தி, கிருஷ்ணவேணியையும் அடக்கமாட்டாமல் அழச் செய்துவிட்டது. ஆமாம், ஊரடங்கு மேலும் பதினைந்து நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. பித்துப்பிடித்தாற்போல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அடுத்து என்ன செய்வது? புரியவில்லை. நம்மை மீட்க நம் வீட்டார் ஏதேனும் முயற்சி எடுக்கிறார்களா? தெரியவில்லை.
மூன்றாம் நாள், விஷால் குதூகலமாகச் சொன்னான், “நாளை விடியற்காலையில் நாங்கள் ஐந்து பேரும் கிளம்பி பெங்களூர் செல்லப்போகிறோம்…”
“எப்படி, எப்படி?”
“என் பெற்றோர் இங்கே ஒரு டிராவல்ஸைப் பிடிச்சு, எக்கச்சக்கப் பணம் கொடுத்து, எங்களை அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்கள்…”
“பத்திரமாகப் போய்ச் சேர முடியுமா? வழியில் பல இடங்களில் போலீஸ் செக்கப் இருக்கும் என்கிறார்களே. முறையான அரசு அனுமதி பெறாமல் இப்படிப் போனால், வழியில் மடக்கி, எங்காவது முகாமில் கொண்டு போட்டுவிடுவார்கள் என்கிறார்களே. அதற்கும் மேல ஏதாவது கேஸ், கீஸ் போட்டு உள்ளே தள்ளிவிட்டால் என்ன ஆவது?”
“கொஞ்சம் ரிஸ்க்தான். ‘போலீஸுக்கு மாமூல் கொடுத்துக் கொள்ளலாம். எங்கள் டிராவல்ஸ் அதிபருக்கு எல்லா போலீஸும் பழக்கம் உண்டு. பேரைச் சொன்னால் விட்டுவிடுவார்கள். நீங்கள் தைரியமாக வாருங்கள். உங்களை உங்கள் ஊரில் கொண்டு சேர்ப்பது என் பொறுப்பு’ என்கிறார் டிரைவர். துணிந்து கிளம்பப் போகிறோம். நீங்களும் வருவதானால் சொல்லுங்கள். அட்ஜஸ்ட் செய்து உட்கார்ந்துகொள்ளலாம். தலைக்கு முப்பதாயிரம் ரூபாய் பேசியிருக்கிறது” என்றான் விஷால்.
“ஐயோ!”வென்றிருந்தது. ஃப்ளைட் டிக்கெட்டைவிடப் பல மடங்கு ஜாஸ்தியாக இருக்கிறதே!
பணத்தைக்கூட விடுங்கள்; அவர்கள் ஐந்து பேரும் பெங்களூர், மைசூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ணவேணியும் தாமினியும் அங்கே போய் என்ன செய்வார்கள்?
விடியற்காலை 3 மணிக்கெல்லாம் அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். இப்போது கிருஷ்ணவேணி, தாமினி இருவர் மட்டுமே.
அனைவருக்கும் கிருஷ்ணவேணிதான் சமைப்பாள். இனிமேல் இருவருக்குச் சமைத்தால் போதும். என்ன பெரிய சமையல்! கொஞ்சம் சோறு வைத்துக் கொஞ்சம் சாம்பார் வைத்தால், அதுவே பரமானந்தம். எப்படா வீட்டுக்குப் போவோம், அப்பா அம்மாவைப் பார்ப்போம் என்றிருக்கும் மனநிலையில் சோறு எங்கே இறங்குகிறது? நாக்குக்கு ருசி எங்கே தெரிகிறது?
காலை 10 மணிக்கு கிருஷ்ணவேணியின் அப்பா போன் செய்திருந்தார். கூட இருந்த மற்றவர்கள் கிளம்பிப் போய்விட்டதை அவரிடம் சொன்னாள் கிருஷ்ணவேணி. “நானும் தாமினியும் மட்டும்தாம்ப்பா இங்கே இருக்கோம். ரொம்பப் பயம்மா இருக்குப்பா. ப்ளீஸ், ஏதானா செஞ்சு எங்களை அழைச்சுக்கோப்பா” என்று அழுதாள்.
“பதறாதம்மா. அப்படியெல்லாம் அசட்டுத் துணிச்சலா ஏதாவது செய்தோம்னா நிலைமை விபரீதத்துலதான் முடியும். கொஞ்சம் பொறுத்துக்கோ. நான் வாட்ஸப்ல ஒரு நம்பர் அனுப்பறேன். ஶ்ரீதர்னு பேரு. அங்கே உள்ள கலெக்டர்கிட்ட பேசிட்டு, உன் லைனுக்கு வருவார். அவர் சொல்றபடி செய். தைரியமா இரு” என்று கட் செய்தார்.
கிருஷ்ணவேணி காத்திருந்தாள். “அக்கா, உங்களோட என்னையும் அழைச்சிட்டுப் போயிடறீங்களாக்கா?” என்று அவளின் முகவாயை, கன்னங்களைத் தடவியபடி கண்ணீருடன் கேட்டுக்கொண்டிருந்தாள் தாமினி.
மாலையில் அந்த ஶ்ரீதர் பேசினார். “கேரள கவர்ன்மென்ட்டில், சம்பந்தப்பட்ட கலெக்டருடன் பேசியிருக்கிறேன். உங்களை அங்கிருந்து நாகர்கோவில் வரைக்கும் அழைத்துக் கொண்டுவந்துவிட முடியும். இங்கிருந்து சென்னை போவதற்கு நீங்கள் ஏற்பாடு செய்துகொள்கிறீர்களா?” என்று கேட்டார்.
நாகர்கோவிலில் யாரையும் தெரியாது. லாட்ஜில் தனியாக ஒரு பெண் போய் எப்படித் தங்குவது? அதிலும், கிருஷ்ணவேணி போல பயந்த சுபாவமுடைய பெண்ணுக்கு அது சாத்தியமே இல்லை. தவிர, ஹோட்டல்கள், லாட்ஜுகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. எதிலும் யாரையும் புதிதாக அனுமதிக்கக்கூடாது என்று அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. அங்கே போய்த் தங்குவதற்கு, இங்கேயே விழுந்து கிடக்கலாம்.
மே 5. காலையில் அப்பாவிடமிருந்து போன். “கிருஷ்ணவேணி, உடைமைகளையெல்லாம் எடுத்து வெச்சுக்கிட்டுத் தயாரா இரு. நாளைக்கு மதியம் 2 மணி போல அங்கே நாகராஜ்னு ஒருத்தர் கார் கொண்டு வருவார். அவரோட கிளம்பி நீ நேரா சென்னை வந்துடலாம். அவரின் போன் நம்பர் அனுப்பறேன். ஸேவ் பண்ணி வெச்சுக்கோ.”
நாகராஜ் யாரென்று தெரியவில்லை. அப்பா ஆன்லைனில் அப்ளை பண்ணிப் பர்மிஷன் வாங்கிவிட்டாராம். எந்தக் காரில் வருகிறார், கார் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர், அந்த கார் ஓட்டுநரின் ஆதார் நம்பர், அதில் வருகிறவர்களுக்குக் கொரோனா தொற்று இல்லை என்கிற மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் என எல்லாவற்றையும் ரெடி செய்து கொடுத்திருக்கிறாராம். பிரச்னை இல்லாமல் வந்து சேரலாம், அதனால் தைரியமாக அவருடன் கிளம்பி வா என்று சொன்னார்.
“அக்கா, அப்ப நாளைக்கு நாம இங்கிருந்து கிளம்பிடலாம்தானே?” என்று தாமினி கேட்டபோது, அவளின் அழுது வீங்கிய முகத்தில் அத்தனை சந்தோஷம்; மலர்ச்சி! கிருஷ்ணவேணியின் கையை எடுத்து முத்தமிட்டாள் தாமினி.
சொன்னபடி, மறுநாள் மதியம் 3 மணி சுமாருக்கு நாகராஜ் காருடன் வந்தார். கிருஷ்ணவேணி, தாமினி இருவரும் அதில் ஏறப்போனபோது, “இருங்கம்மா. நீங்கதானே கிருஷ்ணவேணி. நீங்க மட்டும் ஏறுங்க” என்றார். “ஏன், இவளும் என்னோடு வரட்டுமே? காரில் இடம் இருக்கிறதுதானே?” என்று கேட்டாள் கிருஷ்ணவேணி.
“காரில் இடம் இருக்கும்மா. ஆனா, கவர்ன்மென்ட் ரூல்ஸ்படி ஒருத்தர்தான் ஏறணும். ஒருத்தருக்குதான் சென்னைக்கு வர பர்மிஷன் பாஸ் இருக்கு. ரெண்டு பேரை ஏத்திக்கிட்டுப் போனேன்னா என் டிரைவிங் லைசென்ஸையே கேன்சல் பண்ணிடுவாங்க. சரி சரி, சீக்கிரம் ஏறுங்க. இப்பக் கிளம்பினோம்னாதான் ராத்திரி 11 மணிக்குள்ளயாவது சென்னை போய்ச் சேர முடியும்” என்று பரபரத்தார் நாகராஜ்.
தாமினி வெடித்து அழத் தொடங்கிவிட்டாள். அவளையும் எப்படியாவது தன்னுடன் அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கிருஷ்ணவேணி, நாகராஜுடன் வாக்குவாதம் செய்யத் தொடங்கினாள்.
“ப்ளீஸ், புரிஞ்சுக்கோங்கம்மா. வழியில மடக்கி இறக்கிவிட்டுட்டாங்கன்னா நம்ம மூணு பேருக்குமே சிக்கல். சீக்கிரம் கிளம்புங்க. போக வர 24 மணி நேரத்துக்குதான் பர்மிஷன். அப்புறம் அதுவும் பிரச்னையாகிடும்” என்றவர், கிருஷ்ணவேணியின் அப்பாவுக்கு போன் போட்டு, கிருஷ்ணவேணியின் பிடிவாதத்தைச் சொன்னார்.
“அவ கிட்டே போனைக் கொடுங்க” என்ற அப்பா, கடுகடுத்த குரலில், “கிருஷ்ணவேணி, என்ன இது சின்னப்புள்ளையாட்டம். அவ யாரோ எவளோ! டெல்லிக்காரி. அவளுக்கு அவங்க பேரன்ட்ஸ் இருக்காங்க. அவங்க ஏதாவது ஆக்ஷன் எடுப்பாங்க. அது நம்ம தலைவலி இல்லே. அவளுக்காகப் பிரார்த்தனை பண்ணுவோம். அதான், நாம செய்ய முடிஞ்சது. நீ தகராறு பண்ணாம சட்டுபுட்டுனு கிளம்பி, வா!” என்று போனை வைத்தார்.
மிகுந்த மனபாரத்துடன் காரில் ஏறினாள் கிருஷ்ணவேணி. வாசல் இரும்புக் கேட்டைப் பற்றியபடி, தரையில் உட்கார்ந்து, நெஞ்சே வெடித்துப்போகிற மாதிரி கதறிக் கதறி அழத் தொடங்கினாள் தாமினி. கார் கதவை டொப்பென்று சாத்தி, காரை நகர்த்தி, வேகம் எடுத்தார் நாகராஜ். தன் கண்களில் வழியும் நீரைக்கூடத் துடைக்கத் தோன்றாமல், பின் கண்ணாடி வழியாக தாமினியைப் பார்த்துக்கொண்டே இருந்தாள் கிருஷ்ணவேணி. கார் அடுத்து வந்த பாதையில் திரும்பியதில், தாமினி கண்களிலிருந்து மறையவும், பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள் கிருஷ்ணவேணி.
பின்குறிப்பு: என்னதான் ஆதார் கார்டு, லைசென்ஸ் என்று பார்த்துப் பார்த்து டிரைவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் பயணத்தை மொபைலில் தொடர்ந்து டிராக் செய்து கண்காணித்தாலும், வழியில் எங்கும் நிற்காமல் பத்து மணி நேரத்துக்கும் மேல் பயணம் செய்து, வழியில் எந்தப் பிரச்னையும், ஆபத்தும் நேராமல் மகள் பத்திரமாக வீடு வந்து சேர வேண்டுமே என்று கிருஷ்ணவேணியின் பெற்றோர் பதைபதைத்துக்கொண்டிருந்தது தனிக் கதை.
0 comments:
Post a Comment