உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, August 03, 2020

தாமினி என்ன ஆனாள்? - 8

“என்னம்மா… என்ன ஆச்சு? கதவைத் திற! என்று, பதறிப்போய் பாத்ரூம் கதவைத் தட்டினாள் கிருஷ்ணவேணியின் அம்மா கௌரி.

“ஒண்ணும் ஆகல… நீ போ! நான் வரேன்” என்று உள்ளிருந்து சிடுசிடுத்தாள் கிருஷ்ணவேணி.

“என்னங்க… இவ அழறா பாருங்க, என்ன ஏதுன்னு  கேளுங்களேன். எனக்குப் பயம்மா இருக்கே! என்று படபடத்தாள் கௌரி. ‘வாயை மூடிக்கிட்டு வெளியே வா, அப்புறம் நிதானமா பேசிக்கலாம்’ என்று, அறை வாசலில் நின்றபடியே அவளுக்கு சைகை செய்தார் சங்கரநாராயணன். அவள் வெளியில் வந்ததும், கிசுகிசுப்பான குரலில், “அந்த டெல்லிப் பொண்ணை விட்டுட்டு வந்ததுல அவ கொஞ்சம் வருத்தமா இருக்கா. வேற ஒண்ணுமில்ல. போகப் போக சரியாயிடும்” என்றார். அறைக்கதவை லேசாகச் சாத்திக்கொண்டு இருவரும் ஹாலுக்கு வந்தார்கள்.

“இந்த நேரத்துல சாப்பிடுவாளானு தெரியாது. ஆப்பிள் வாங்கிட்டு வந்தது இருக்குமே… அதை கட் பண்ணிக் கொடு. ஹார்லிக்ஸ் ஒரு ரெண்டு டம்ளர் போட்டுக் கொடு. குடிச்சுட்டுப் படுத்துத் தூங்கட்டும். நாள் பூரா கார்ல உட்கார்ந்து வந்தது அலுப்பா இருக்கும். தூங்கி எழுந்தா ஃப்ரெஷ்ஷாயிடுவா. அப்புறம் பேசிக்கலாம்” என்றார் சங்கரநாராயணன்.

ஆனால், கிருஷ்ணவேணி தூங்கவில்லை. படுக்கையில் படுக்கக்கூட இல்லை. கட்டிலில் சுவரோரமாக அமர்ந்து, முழங்காலில் தலையைக் கவிழ்த்துக்கொண்டு இருந்தாள். அம்மா நீட்டிய ஹார்லிக்ஸை மட்டும் வாங்கி, மடக் மடக்கென்று தண்ணீர் குடிக்கிற மாதிரி குடித்துவிட்டு, காலி டம்ளரைக் கொடுத்தாள். அவள் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த தட்டில் இருந்த ஆப்பிள் துண்டங்கள் துரு ஏறிக்கொண்டிருந்தன.

காலை மணி 7.

திலீப் மிகுந்த பரபரப்பில் இருந்தான். மாமியாருக்கு வயசு ஒன்றும் அதிகமில்லை. மிஞ்சிப் போனால் ஐம்பது இருக்கலாம். ஆனாலும், கொஞ்ச நாளாக அடிக்கடி சோர்ந்து சோர்ந்து படுத்துக்கொண்டிருந்தார். திடீர் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். ‘ராமச்சந்திரா’வில் அவளைச் சேர்த்துவிட்டு போன் செய்திருந்தான் மச்சினன். “உதவிக்குத் தங்கச்சி இருந்தா கொஞ்சம் அனுப்பி வைக்க முடியுமா, மச்சான்..? என்று கேட்டிருந்தான். ஆஸ்பத்திரியில் கூடமாட ஒத்தாசைக்கு அவனுக்கும் பாவம் வேறு துணையில்லை. அதனால் திலீப் தன் மனைவியையும் குழந்தையையும் மார்ச் முதல் வாரத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தான். அதன்பின், மாமியாரின் உடல்நிலையில் ஏதும் முன்னேற்றம் தெரியவில்லை என்பதோடு, லாக்டவுன் வேறு வந்துவிட்டதால், மனைவியைத் திரும்ப அழைத்துக்கொண்டு வர முடியாமல் போய்விட்டது.

நேற்றைக்கு மச்சினனிடமிருந்து போன்… மாமியார் தவறிவிட்டார்!

அவசர அவசரமாக  -பாஸுக்கு ஆன்லைனில் அப்ளை செய்தான். சாவு விவகாரம் என்பதால் உடனடியாகக் கிடைத்துவிட்டது. நேற்றைக்கே .டி.எம்மில் கொஞ்சம் பணம் எடுத்து வைத்துக்கொண்டான். அங்கே ஒருவேளை மச்சினனுக்குத் தேவைப்படலாம். ஆதார் கார்டு, -பாஸ் உள்ளிட்ட முக்கியமானவற்றை மறக்காமல் ஒரு பையில் எடுத்து வைத்துக்கொண்டான். எதற்கும் இருக்கட்டும் என்று மூன்று செட் டிரஸ் எடுத்துக்கொண்டான். பத்துப் பன்னிரண்டு நாள்கள் அங்கே தங்கவேண்டி வந்தாலும் வரலாம்.

குழாய்களை மூடினான். லைட், ஃபேன் எல்லாம் அணைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்தான். ஜன்னல்களையெல்லாம் சாத்தினான். அறைக்கதவுகளைப் பூட்டினான். மறக்காமல் மொபைலை எடுத்துக் கொண்டான். கீ பாக்ஸிலிருந்து கார் சாவியை எடுத்துக்கொண்டு வாசல் கதவை நெருங்கியபோது, சட்டைப் பையில் இருந்த மொபைல் ஒலித்தது. ‘இவ்வளவு காலையில் யார்?!

எடுத்துப் பார்த்தான். அவந்திகா சோப்ரா மேடம்.

“ஹலோ மேடம், என்ன இவ்வளவு காலையில…?

“பத்து மணிக்கு இங்க வர முடியுமாப்பா..?

“என்ன மேடம், எங்கேயாவது அர்ஜென்ட்டா போகணுமா?

“இல்லப்பா. இங்கே தாமினின்னு ஒரு பொண்ணு. டெல்லிக்காரப் பொண்ணு. லாக்டவுன்னால அங்கே போக முடியாம மாட்டிக்கிச்சு. இங்கே திருச்சூர்ல அவங்க ரிலேஷன் இருக்காங்களாம். அதான், அவளைக் கொண்டுபோய் அங்க விட்டுட்டு வரணும்..!

“ஐயோ… ரொம்ப ஸாரி மேடம்! எங்க மாமியார் தவறிட்டாங்களாம். மச்சான் போன் பண்ணியிருந்தான். அதான் அவசரமா கிளம்பிட்டிருக்கேன். என் ஃப்ரெண்டு அவெய்லபிளா இருந்தா வரச் சொல்றேன்” என்றபடியே, வாசற்கதவைப் பூட்டி, கேட்டைத் திறந்துகொண்டு வெளியே வந்தான் திலீப்.

“இல்லப்பா, வேண்டாம். உன்னைத் தவிர நான் வேற யாரையும் கூப்பிடறது கிடையாது. அதுவும் இது யாரோ புதுப் பொண்ணு. முடிஞ்சா நீ வா. இல்லாட்டா, அப்புறம் நீ திரும்பி வந்த பிறகு பார்த்துக்கலாம். நாள நாளன்னிக்கு வந்துடுவேதானே?

சோப்ரா மேடம் கூப்பிட்டுப் போக முடியாமல் இருப்பது உறுத்தலாக இருந்தது திலீப்புக்கு.

“வேணா ஒண்ணு பண்ணுங்க மேடம், நான் இப்ப கிளம்பிட்டேன். இன்னும் இருபது நிமிஷத்துல அங்க வந்துடுவேன். அந்தப் பொண்ணை ரெடியா இருக்கச் சொல்லுங்க. திருச்சூர் அட்ரஸ், லேண்ட் மார்க், அவங்க போன் நம்பர் எல்லாம் கொடுங்க. அவங்களுக்கும் போன் பண்ணிச் சொல்லிடுங்க. இதை அங்க விட்டுட்டு அப்படியே நான் கிளம்பிப் போறேன். திருச்சூர்ல எனக்கு லேட்டாயிடக் கூடாது. அதுக்குதான் சொல்றேன். ஓகேவா? என்றபடியே, வாசல் கேட்டின் இரும்புக் கொக்கியைப் போட்டுவிட்டு, கார் டிக்கியைத் திறந்து, தன்னுடைய உடைமைகளை அதில் வைத்துச் சாத்தினான் திலீப். பின்பு முன் கதவைத் திறந்து, டிரைவர் ஸீட்டில் அமர்ந்தான். பர்ஸ், பர்மிஷன் போன்றவற்றை டாஷ் போர்டு கேபினைத் திறந்து வைத்தான். பின்பு, ஸீட் பெல்ட்டை இழுத்து அணிந்துகொண்டான். காரின் குலுக்கலில், எதிரே தொங்கவிடப்பட்டிருந்த கேரள யானையின் அலங்கார முக படாம் ஆடியது. டாஷ்போர்டில் இருந்த குட்டி குருவாயூரப்பனைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டு, காரை ஸ்டார்ட் செய்தான் திலீப். 

“ஓகேப்பா… நீ வா! அவளை ரெடி பண்ணிடறேன்! என்றபடி, தாமினியைத் தயார் செய்ய ஆயத்தமானாள் அவந்திகா.

“தாமினி, தாமினிக்குட்டி… எழுந்திரும்மா! எழுந்து மூஞ்சி கழுவிக்கிட்டு சீக்கிரம் ரெடியாகு. இப்ப கார் வந்துடும்…” என்று அவளை உசுப்பி எழுப்பினாள். தாமினி எழுந்து வாஷ் பேஸினில் பல் விளக்கி, முகம் கழுவித் தயாராகிக்கொண்டிருக்க, அவந்திகா தொடர்ந்து பேசினாள்…

“இதப் பார், எதுக்கும் இந்த மொபைலை வெச்சுக்க. உன்னோடதைத் தொலைச்சுட்டேனு சொன்னியே! இது எங்கிட்ட சும்மாதான் இருக்கு. சாதா போன்தான். உனக்கு உபயோகமா இருக்கும். இதன் நம்பரை இந்த குட்டி டயரில எழுதியிருக்கேன். அப்புறம்… உங்கப்பா நம்பர், திருச்சூர் ரிலேஷன் நம்பர் கீதா, ராஜ்குமார் உனக்கு அவங்களைத் தெரியுமா? உனக்கு ஏதோ அங்கிள், ஆன்ட்டி முறை வேணும்னு சொன்னார் உங்க அப்பா; அவங்க ரெண்டு பேரோட நம்பர், அவங்க அட்ரஸ்… அப்புறம் தன்வந்திரி மேனேஜர் நம்பர்,  என்னோட நம்பர், இப்ப வரப்போற கார் டிரைவர் திலீப்போட நம்பர்னு எல்லா நம்பர்களையும் இதுல எழுதியிருக்கேன்; இந்த மொபைல்லயும் அதை ஸேவ் பண்ணியிருக்கேன். ஒண்ணும் பயமில்ல. திலீப் உன்னைப் பத்திரமா கொண்டுபோய்த் திருச்சூர்ல விட்டுடுவான். அங்கிருந்து, ‘ஸேஃபா வந்து சேர்ந்துட்டேன்’னு எனக்கு மறக்காம போன் பண்ணு, என்ன? நான் இப்பவே உன் அங்கிள், ஆன்ட்டிக்கு போன் பண்ணிச் சொல்லிடறேன். ம்… அப்புறம், நீ திலீப்புக்குப் பைசா எதுவும் தர வேணாம். நான் பார்த்துக்கறேன். இந்தா பர்ஸ்… இதுல உன் கைச்செலவுக்குக் கொஞ்சம் பணம் வெச்சிருக்கேன்; மறுக்காம வாங்கிக்கோ. ஆத்திர அவசரத்துக்கு இருக்கட்டும்…”

தாமினி தன்னை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதைக் கவனியாமல், அவந்திகா சோப்ரா பேசிக்கொண்டே , அலமாரியிலிருந்து ஒரு புத்தம்புது சுடிதாரை எடுத்து வந்தாள். “தாமினி, இங்க வா! இப்படி நில்லு. இது உனக்கு சைஸ் சரியா இருக்கும்னு நினைக்கிறேன். என் பொண்ணு பெங்களூர்ல படிச்சிட்டிருக்கா. ஏப்ரல் 14-தான் அவளுக்கு பர்த்டே. வரேன்னு சொல்லியிருந்தா. வந்தா பிரசன்ட் பண்ணணும்னு வாங்கி வெச்சேன். இனிமே இப்ப எங்க வரப்போறா? வரும்போது பார்த்துக்கலாம். நீயும் எனக்குப் பொண்ணு மாதிரிதான்! இதை என் கிஃப்டா வெச்சுக்கோ…”

நெகிழ்ச்சியில் மனசு திக்குமுக்காட, கன்னங்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, அவந்திகாவை மேலே பேச விடாமல், அவளைச் சுடிதாரோடு இறுக அணைத்துக்கொண்டு குலுங்கினாள் தாமினி.

“ஒரு நாள் பழக்கத்துலேயே இவ்வளவு அன்பு செலுத்த முடியுமா மேடம்? என்றாள்.

“ஏய்… அசடு! என்ன ஒரு நாள்ங்கிறே… வைத்தியசாலையில் இருந்த மிச்ச நாள்லாம் எங்கே போறது? கண்ணைத் துடை. தைரியமா இரு. இன்னும் நீ குழந்தை இல்லை. நீ பத்து பேருக்கு ஆறுதல் சொல்லணும். புரியுதா? நானாக்கும் உன்னை அனுப்பறேன். என் பொண்ணு இருந்திருந்தாள்னா உன்னைப் போகவே விட்டிருக்க மாட்டாள்…”

வாசலில் காரின் பீப் சத்தம் கேட்டது.                                                                             

(தொடரும்)

0 comments: