உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, August 03, 2020

தாமினி என்ன ஆனாள்? - 4

கார் திண்டுக்கல்லை நெருங்கிக்கொண்டிருந்தது. மொபைலில் மணி பார்த்தாள் கிருஷ்ணவேணி. இரவு மணி 9.

அப்பாவிடமிருந்து இதுவரை நல்ல செய்தி எதுவும் வரவில்லை. தாமினி என்ன ஆனாள் என்று தெரியவில்லை. அடிவயிற்றைப் பிசைந்தது கிருஷ்ணவேணிக்கு.

‘தப்புப் பண்ணிட்டேன்… தப்புப் பண்ணிட்டேன்… நான் மட்டும் கிளம்பி வந்திருக்கவே கூடாது. போனில் அப்பா அதட்டல் போட்டதும், மறு பேச்சுப் பேசாமல் காரில் ஏறி உட்கார்ந்தது மகா தப்பு. ச்சீ… இவ்வளவு சுயநலக்காரியா நான்? வர முடியாதென்று மறுத்திருந்தால், அப்பா என்ன தலையா வாங்கியிருப்பார்? அவளுக்கும் சேர்த்து ஏதாவது ஏற்பாடு செய்திருக்க மாட்டாரா? ஒரு காரில் ஒருவர்தான் போகலாம் என்றால், இரண்டு காராக ஏற்பாடு செய்திருக்கப் போகிறார்; அவ்வளவுதானே?! ஒரு நிமிஷம் யோசிக்காமல் விட்டுவிட்டேன். என்னவோ ஒரு குழப்பத்தில் ஏறி உட்கார்ந்துவிட்டேன். என்னையே அக்கா, அக்கா என்று சுற்றிச் சுற்றி வந்த வந்த அந்தக் குழந்தையின் மனசை அடித்து நொறுக்கிவிட்டேன். உடைத்துச் சுக்குநூறாக்கிவிட்டேன். எனக்கெல்லாம் நல்ல சாவே கிடையாது!  புழுத்துப் புழுத்துதான் சாகப்போகிறேன் நான்! என்றெல்லாம் தனக்குத்தானே புலம்பிக்கொண்டும், விசும்பி விசும்பி அழுதுகொண்டும் இருந்தாள்.

அப்பா செக்யூரிட்டியிடம் பேசினாராம். “இங்கே இப்போ யாருமே இல்லையே, சார்! எல்லாரும் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்களே? என்றாராம் செக்யூரிட்டி. “இல்லப்பா. இன்னிக்கு மதியம் வரைக்கும் ரெண்டு பேர் இருந்தாங்க. அதுல என் பொண்ணு மட்டும் கிளம்பி, இப்போ சென்னைக்கு வந்திட்டிருக்கு. இன்னொரு பொண்ணு டெல்லிப் பொண்ணு. தாமினின்னு பேரு. அது இன்னமும் அங்கதான் இருக்கு. நல்லா பார்த்துச் சொல்லுப்பா! என்றாராம் அப்பா.

“சார், நீங்க சொல்ற அந்த ரெண்டு பேரையும் எனக்கு நல்லா தெரியும். நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் எல்லா ரூமையும் நல்லா செக் பண்ணிப் பூட்டிட்டுதான் வந்தேன். இங்கே யாருமே இல்லை! நான் மட்டும்தான் இருக்கேன்.

‘ரூம்ல பெட்டி, பைன்னு ஏதாவது இருக்கா, பார்த்தியா?

‘ஒண்ணும் இல்ல சார்! என்ற செக்யூரிட்டி, ‘சார், நான் நைட் டியூட்டி. சாயந்திரம் 6 மணிக்குதான் வந்து சார்ஜ் எடுத்துக்கிட்டேன். காலை டியூட்டி, உதய்னு வேற ஒரு பையன். அவன் தாக்கோலை என்கிட்ட கொடுக்கிறப்போ,  ‘எல்லாரும் கிளம்பிப் போயிட்டாங்க சேட்டா! ரூம் மொத்தமும் காலி. இழுத்துப் பூட்டிட்டு, சொகம்மா பீடி ஊதிக்கிட்டு, காலை நீட்டி நிம்மதியா படுத்துத் தூங்கு’ன்னுட்டுப் போனான். நான் இப்பத்தான் உள்ள போய் ஒரு ரவுண்டு பார்த்துட்டு, கதவையெல்லாம் நல்லாப் பூட்டிட்டு வரேன்… நீங்க போன் பண்றீங்க!

‘உதய்க்கு மொபைல் நம்பர் ஏதாச்சும் இருக்கா? இருந்தா கொடுங்க, அந்தப் பையன் கிட்டயும் விசாரிச்சுப் பார்க்கிறேன்’ என்றாராம் அப்பா. 

செக்யூரிட்டி அந்தப் பையன் நம்பர் கொடுத்தாராம். ஆனால், அந்த எண்ணுக்குப் போன் செய்தால், ‘ஸ்விச்டு ஆஃப்’ என்றே வருகிறதாம். அப்பா இருவரின் மொபைல் எண்களையும் வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார். இவளும் போன் பண்ணிப் பார்த்தாள். அப்பாவிடம் சொன்னதைத்தான் இவளிடமும் சொன்னார் செக்யூரிட்டி.  உதய் நம்பரைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

கார் திருச்சியை நெருங்கிக்கொண்டிருந்தது. மனசின் வலி ஒருபுறம் இருக்க, ரொம்ப நேரமாக உட்கார்ந்தே வந்ததில், கிருஷ்ணவேணிக்கு முதுகும் வலித்தது. இதைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம்; பொறுத்துக்கொள்ள முடியாத வேறு ஒரு அவஸ்தையும் வந்து சேர்ந்தது. அவசரமாக ரெஸ்ட் ரூம் போயாக வேண்டும். நாகராஜிடம் கேட்பதற்கு சங்கோஜமாக இருந்தது. “அண்ணா, கொஞ்சம் ஓரங்கட்டி நிறுத்துங்கண்ணா’ என்றால், “என்ன மேடம், ஏதாவது பிரச்னையா? என்பான்.  அவனிடம் லஜ்ஜையில்லாமல் சொல்ல வேண்டும். என்னவொரு தர்ம சங்கடம்!

பல்லைக் கடித்துக்கொண்டு அந்த அவஸ்தையைப் பொறுத்துக்கொண்டாள். கார் இப்போது திருச்சி பைபாஸில் விரைந்துகொண்டிருந்தது. முன்னாலும் பின்னாலும் வேறு வாகனங்களையே காணோம்! என்.ஹெச்.38 நெடுஞ்சாலையில் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தது கார். சாலையோரம் இருந்த உணவகங்கள் எல்லாம் மூடப்பட்டிருந்தன. மற்ற நாள்களாயிருந்தால், மின்வெளிச்சத்துடன் ஜெகஜ்ஜோதியாக இயங்கிக்கொண்டிருக்கும். கார்கள் வருவதும், கிளம்புவதுமாக இருக்கும்; அவ்வளவு நிசியிலும் யாராவது பூரி தின்றுகொண்டிருப்பார்கள்; ஃப்ரூட் சாலட் சுவைத்துக் கொண்டிருப்பார்கள்; கொத்துபரோட்டா போடும் ‘டண் டண்’ சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும். இப்போது ஒன்றுமே இல்லை. நீள நெடுக ஒரே இருள் மயம். பிரபஞ்சத்தின் ஏகாந்தப் பெருவெளியில் இந்த கார் மட்டும் நீந்திக்கொண்டிருப்பதாகப் பட்டது கிருஷ்ணவேணிக்கு.

யோசித்துக்கொண்டிருந்தபோதே கார் வேகம் குறைந்து, சாலையோரம் நின்றது. நாகராஜ் திரும்பிப் பார்த்தான்.

“கொஞ்சம் இருங்க, இதோ வந்திட்டேன்” என்று இஞ்சினை அணைக்காமல், கீழிறங்கிச் சென்றான். முன் கண்ணாடி வழியாக, அவன் நடந்து செல்வதைப் பார்த்தாள் கிருஷ்ணவேணி. இஞ்சின் லேசான உறுமலோடு இயங்கிக்கொண்டிருந்ததில் கார் லேசாக அதிர்வது போலவே, மனசுக்குள் இனம்புரியாத பயம் தோன்றி, உடம்பில் ஓர் அதிர்வு பரவுவதை உணர்ந்தாள்.

‘எங்கே போகிறான்? இயற்கை உபாதையைக் கழிக்கச் செல்கிறானாயிருக்கும். நானும் அதற்குள் இங்கே எங்காவது இறங்கிப் போய் வரலாமா? என்று யோசித்தாள்.

சுற்றிலும் இருள். இது எந்த இடம் என்று தெரியவில்லையே? கதவைத் திறந்துகொண்டு இறங்கினாள். வெளி வெப்பம் உறைத்தது.  சுற்றுமுற்றும் பார்த்தாள். தனியே செல்ல பயமாக இருந்தது. மீண்டும் காருக்குள் ஏறி அமர்ந்து, கதவைச் சாத்திக்கொண்டாள்.

அதற்குள் அப்பாவிடமிருந்து போன். “என்னம்மா… கார் ரொம்ப நேரமா ஒரே இடத்துல நின்னுட்டிருக்குபோல? என்றார்.

“ஆமாப்பா! இது எந்த இடம்னு தெரியலே. திருச்சியைத் தாண்டிட்டோம். காரை நிறுத்திட்டு நாகராஜ் எங்கேயோ இறங்கிப் போயிருக்காரு. பயம்மா இருக்குப்பா! என்றாள் கிருஷ்ணவேணி.

“பயப்படாதம்மா! நாகராஜ் நல்ல பையன். நல்லா விசாரிச்சுதான் அவனை அனுப்பிவெச்சிருக்கேன். மத்தபடி இதுவரை உனக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே?

“அவசரமா ரெஸ்ட் ரூம் போகணும். என்ன பண்றது, எப்படி இவர்கிட்ட கேக்கறதுன்னு தெரியலை!

“வழியில ஓட்டல் எதுவும் இல்லையா? கும்பகோணம் டிகிரி காப்பி மாதிரி ரோட்டோர காபி கிளப் கூடவா இல்லை? என்றார்.

“இல்லையே!

அவருக்கும் என்ன செய்வது, இவளுக்கு எப்படி உதவுவதென்று தெரியவில்லை. மேற்கொண்டு இவள் ஏதோ சொல்ல முனைவதற்குள்,  சிக்னல் பிரச்னையால் லைன் துண்டிக்கப்பட்டது.

சில நிமிடங்களில் நாகராஜ் வந்தான். காரில் அமர்ந்து, விருட்டென்று கிளப்பினான். ஒரு பர்லாங் தூரம் போயிருக்கும். எதிரே மேம்பாலம் ஒன்று வருவது காரின் ஹெட் லைட் வெளிச்சத்தில் தெரிந்தது. ஆனால், கார் அதில் செல்லாமல், மீண்டும் வேகம் குறைந்து, பாலத்துக்குப் பக்கவாட்டில் செல்லும் சின்ன ரோட்டில் சிறிது தூரம் சென்று நின்றது.

“மேடம், கொஞ்சம் இறங்குங்க” என்றான் நாகராஜ்.

(தொடரும்) 

0 comments: