உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, April 24, 2016

என் புகுந்த வீடு - 15

பூ மனம்!

னந்த விகடனில் நான் பணியில் சேர்ந்த புதிதில் (1995) அங்கே டி.டி.பி. செக்‌ஷனில் மட்டுமே ஐந்தாறு சிஸ்டம்கள் இருக்கும். வெளியிலிருந்து கையெழுத்துப் பிரதிகளாக வரும் சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை டி.டி.பி. ஆபரேட்டர்கள்தான் கம்போஸ் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுப்பார்கள். அதை புரூஃப் ரீடர்கள் பார்த்துத் திருத்திக் கொடுப்பார்கள். அந்தத் திருத்தங்களை மீண்டும் டி.டி.பி-யில் செய்து, வேறு பிரிண்ட் அவுட் தருவார்கள். அதை உதவி ஆசிரியர்களாகிய நாங்கள் ஆங்கங்கே திருத்தி, எடிட் செய்து திரும்பக் கொடுத்தால், அந்தத் திருத்தங்களைச் செய்து மீண்டும் பிரிண்ட் அவுட் எடுத்துத் தருவார்கள்.

நாங்கள் செய்த திருத்தங்கள் சரிவரச் செய்யப்பட்டிருக்கிறதா என்று புரூஃப் ரீடர்கள் புரூஃப் பார்த்து, விட்டுப் போனவற்றை மீண்டும் திருத்தி, தங்கள் கண்களில் படும் பிழைகளையும் திருத்தி, மீண்டும் டி.டி.பி. ஆபரேட்டர்களிடம் கொடுப்பார்கள். இப்படி, கையெழுத்துப் பிரதியாக வந்த ஒரு கதையோ, கட்டுரையோ ஏழெட்டுத் தடவைகளுக்கு மேல் ஆசிரியர் குழுவுக்கும் டி.டி.பி. செக்‌ஷனுக்கும், புரூஃப் ரீடிங் செக்‌ஷனுக்கும் போய்ப் போய் வரும்.

இப்படியாக, ஒரு கட்டுரை அல்லது கதை பத்திரிகையில் வெளியாகும் தகுதி பெறுவதற்குள் அதற்குக் குறைந்தபட்சம் 100 தாள்களுக்கு மேல் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டிருக்கும். எனில், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் ஆகிய இரண்டு பத்திரிகைகளுக்கும் சேர்த்து, ஒரு மாதத்தில் எத்தனை ஆயிரம் பக்கங்கள் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டிருக்கும் என யோசித்துப் பாருங்கள். இதில், பிரசுரமானவை மட்டுமல்ல, பிரசுரமாக கதை, கட்டுரைகளும் அடங்கும். அவற்றுக்கான பிரிண்ட் அவுட்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

இதனால் பிரிண்ட் அவுட் எடுக்கும் செலவு மிக மிக அதிகமானது மட்டுமல்ல; எங்களின் உழைப்பும், நேரமும் அதிக அளவில் விரயமாகிக்கொண்டு இருந்தன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார் அப்போதைய ஜே.எம்.டி-யும் இப்போதைய எங்களின் எம்.டி-யுமான திரு.பா.சீனிவாசன். ஆசிரியர் குழுவில் இருக்கும் அனைவருமே கம்ப்யூட்டர் அறிவு பெற வேண்டும், அவர்களே தங்கள் மேட்டர்களை கம்போஸ் செய்ய வேண்டும், சிஸ்டத்திலேயே திருத்தங்கள் செய்ய வேண்டும், எடிட் செய்ய வேண்டும், லே-அவுட் செய்யப்பட்ட பக்கத்தை சிஸ்டத்திலேயே பார்த்து, லே-அவுட்டுக்கு வெளியே நிற்கும் பகுதிகளை எடிட் செய்து செட் செய்ய வேண்டும் என விரும்பினார். இதற்காக எடிட்டோரியலில் உள்ள அத்தனை பேருக்கும் சிஸ்டம் வழங்க முடிவு செய்தார்.

இதற்கு முன்னோட்டமாக, ஆசிரியர் குழுவில் உள்ள யாராவது ஒருவருக்குப் பரிசோதனை முயற்சியாக ஒரு சிஸ்டம் வழங்கி, அதில் அவர் எப்படிப் பணியாற்றுகிறார், என்னென்ன சிரமங்கள் உண்டாகிறது, அவற்றை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று கணிக்க விரும்பினார். பரிசோதனை எலியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

அதற்குக் காரணம், ஆசிரியர் குழுவில் டைப்ரைட்டிங் பாஸ் செய்திருந்தது நான் மட்டுமே! இன்றைக்கு சிஸ்டத்தில் இயங்குபவர்கள், கம்போஸ் செய்பவர்கள் யாருமே முறையாக டைப்ரைட்டிங் கற்றவர்கள் இல்லை; அது அவசியமும் இல்லை என்று தெளிவாகிவிட்டது. ஆனால், அன்றைக்கு கம்ப்யூட்டரில் கம்போஸ் செய்ய வேண்டுமென்றால் டைப்ரைட்டிங் தெரிந்திருக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. அதன்படி, விகடன் குழுமத்திலேயே முதன்முதலாக, ஆசிரியர் குழுவில் இருந்த ஒருவன் சிஸ்டத்தில் மேட்டர்களை கம்போஸ் செய்யவும், திருத்தவும், லே-அவுட் பக்கங்களைப் பார்த்து எடிட் செய்யவும் பழகினான் என்றால், அது நான்தான்!

“எவ்வளவு நாளைக்குள் சிஸ்டத்தில் கம்போஸ் செய்யப் பழகுவீர்கள்?” என்று ஜே.எம்.டி. கேட்டதற்கு, “ஒரு மாதத்துக்குள் பழகிவிடுவேன்” என்றேன். இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. இன்றைக்குப் புதிதாக ஆசிரியர் குழுவில் சேருபவர்கள் சிஸ்டத்தில் முதல் நாளே உட்கார்ந்து மேட்டர் கம்போஸ் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். யாரும் தட்டச்சு பழகியவர்கள் இல்லை. தேவையும் இல்லை போலிருக்கிறது. ஆனால், அன்று நான் ஒரு மாதம் என்று தவணை கேட்டவுடன், ஜே.எம்.டி. அதைப் பெரிய ஆச்சரியத்தோடு வரவேற்று, “வெரிகுட்! நைஸ்” என்றார்.

அதன்படி நான் கம்ப்யூட்டரில் கம்போஸ் செய்யப் பழகியதோடு, அதில் தேவையான லொகேஷன்களில் ஃபைல் நேம் கொடுத்து ஸேவ் செய்யவும், தேவைப்பட்டால் பிரிண்ட் அவுட் எடுக்கவும், லே-அவுட்களில் எடிட் செய்யவும் ஒரு மாதத்துக்குள் பழகிவிட்டேன்.

அப்போது ஃப்ளாப்பி என்று ஒன்று உண்டு. சதுரமான பிளாஸ்டிக் போல இருக்கும். அதை சிஸ்டத்தில் சொருகி. மேட்டர்களை காப்பி எடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சம் 2 எம்.பி. வரையில் அதில் சேமிக்க முடியும். வீட்டிலும் ஒரு சிஸ்டம் வாங்கி வைத்துக்கொண்டால், ஃப்ளாப்பியில் காப்பி செய்து எடுத்துக்கொண்டு போய், வீட்டிலும் நிதானமாக திருத்திக் கொண்டு வரலாமே என்ற எண்ணம் உண்டானது. சிஸ்டம் வாங்குவதென்றால் ரூ.20,000/- ரூ.30,000/- ஆகுமே என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், வெறும் ரூ.6,000/-க்கு நல்ல சிஸ்டம் வாங்கித் தருகிறேன் என்றான் என் தம்பி. உடனே வாங்கிவிட்டேன். அந்த வகையில் விகடன் குழுமத்திலேயே முதன்முதலில் வீட்டுக்கென தனி பி.சி. வாங்கியவனும் நான்தான்.

சிஸ்டம் வந்ததும், வீட்டிலும் கம்போஸ் செய்யத் தொடங்கினேன். மிக ஆர்வமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. இன்டர்நெட் உபயோகத்துக்கு வந்திருந்த புதுசு. அலுவலகத்து சிஸ்டத்தில், இன்டர்நெட்டில் கூகுளில் தேடவும், இமெயில் ஐ.டி-க்களை ஏற்படுத்தி, பாஸ்வேர்டு செட் செய்யவும் கற்றுக்கொண்டேன். ஆர்வக்கோளாறில் யாஹூ டாட்காம், சிஃபி டாட்காம்,  ரீடிஃப் மெயில் டாட்காம், ஹாட்மெயில் டாட்காம் எனப் பலவற்றில் இமெயில் ஏற்படுத்திக்கொண்டு, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பாஸ்வேர்டு வைத்து, பின்னாளில் எதற்கு எந்த பாஸ்வேர்டு என மறந்துபோனதில் எதையுமே உபயோகிக்க முடியாமல் போனது. பின்னொரு நாளில் ஏற்படுத்திக்கொண்ட ஜிமெயில் கணக்கு மட்டுமே இப்போது உள்ளது. என் வீட்டு சிஸ்டத்துக்கு 2007-லிருந்துதான் இன்டர்நெட் இணைப்பு பெற்றதாக ஞாபகம்.

சேர்மன் பற்றிய இந்தக் கட்டுரைத் தொடரில் இந்தத் தகவல்கள் எதற்கு என நீங்கள் யோசிக்கலாம். விஷயத்துக்கு வருகிறேன்.

எடிட்டோரியலில் எனக்கு சிஸ்டம் வழங்கப்பட்டபோது, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் மேசையிலும் சிஸ்டம் வைக்கப்பட்டு, அவரும் அதில் கம்போஸ் செய்யவும், ஸேவ் செய்யவும் பழகத் தொடங்கியிருந்தார்.

வெறுமே மைக்ரோசாஃப்ட் வேர்ட் பேடில் கம்போஸ் செய்வதைத் தாண்டி, எக்ஸெல் ஷீட்டில் அட்டவணைகள் தயார் செய்யவும் நான் பழகினேன். விகடன் பரிசீலனைக்கு வந்த சிறுகதைகள், அவற்றில் முதல் கட்டத்தில் தேர்வான கதைகள், ஆசிரியரின் பரிசீலனைக்கு வைக்கப்பட்டவை, தேர்வானவை, நிராகரிக்கப்பட்டவை, திருப்பி அனுப்பப்பட்டவை, பிரசுரமானவை, பிரசுரமான விகடன் தேதி ஆகியவற்றின் அட்டவணையை நான் எக்ஸெல் ஷீட்டில் அடித்து வைத்துக்கொண்டேன். ஆசிரியர் தமது படைப்பை பண்ணையில் வளரும் பறவைகள் பற்றிய விவரங்களை எக்ஸெல் ஷீட்டில் தயார் செய்துகொள்வார். எடிட்டோரியலைப் பொறுத்தமட்டில் ‘அலுவலகத்திலேயே எக்ஸெல் ஷீட்டைப் பயன்படுத்தும் இரண்டு பேர் எம்.டி-யும் ரவிபிரகாஷும்தான்’ என்றொரு பேச்சு தமாஷாக நிலவியது. ஆனால், அக்கௌண்ட்ஸில் பலர் எக்ஸெல் ஷீட்டைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் என நினைக்கிறேன்.

சிஸ்டம் பயன்படுத்துவதில் ஏதேனும் சந்தேகம் என்றால், நான் எம்.டி-யைக் கேட்பேன். தெளிவாக விளக்கிச் சொல்வார். அவர் புதிதாக ஏதேனும் பயன்பாட்டைக் கண்டுபிடித்திருந்தால் என்னிடம் அது பற்றிப் பகிர்ந்துகொள்வார்.

ஒருமுறை அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, எக்ஸெல் ஷீட்டில் தான் தயார் செய்து வைத்திருந்த கணக்கு வழக்குகளைக் காண்பித்து விளக்கிக்கொண்டு இருந்தார் எம்.டி. ரொம்ப நீளமாக இருந்த அட்டவணையை ஸ்க்ரால் செய்து இழுத்து இழுத்துப் பார்க்கும்படி இருந்தது. “இப்படித்தான் பார்க்க வேண்டுமா சார்?” என்று கேட்டேன். “வேண்டாமே! அது உங்களுக்குத் தெரியாதா? தேவையில்லாத அட்டவணை ‘காலம்’களை ‘ஹைட்’ பண்ணிக் கொள்ளலாமே!” என்று உற்சாகமாக விளக்கினார்.

பின்னர் எனது எக்ஸெல் அட்டவணையில் எனக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன். அதாவது,  ‘பரிசீலனைக்கு வந்த கதைகள்’ என ஒரு காலத்தின் தலைப்பு இருந்தால், இரண்டு வரியாக அடித்தாலும் ‘பரிசீலனைக்கு’ என வார்த்தை அகலமாக இருக்கும். அதன் கீழ் அதிகபட்சம் மூன்று இலக்க எண்களை மட்டுமே பதிவு செய்வதாக இருக்கும். இப்படி ஒவ்வொரு காலத்தின் தலைப்பும் நீளமாக அமைய, அதில் இடம்பெறும் எண்கள் 3 இலக்கம், 2 இலக்கம் என்றே அமைவதால், அட்டவணையின் அகலம் நீளமாக ஆகி, அட்டவணை ஒருமாதிரி வெலவெலவென்று காலியாகத் தோன்றும். இதற்குப் பதிலாக அட்டவணையின் தலைப்புகளை ஒவ்வொரு காலத்திலும் கீழிருந்து மேலாக அமையும்படி, அதாவது வெர்ட்டிகிளாக அடிக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.

இதை ஆசிரியரிடம் சொன்னதும், “ஆமாம்! அப்படி அடிக்க முடிந்தால் எனக்கும்கூட சௌகரியமாக இருக்கும். அதற்கு ஏதாவது ஒரு வழி கண்டிப்பா இருக்கும். நீங்களும் கண்டுபிடியுங்கோ. நானும் ஏதாவது வழி இருக்குமான்னு தேடிப் பார்க்கிறேன்!” என்றார்.

இரண்டு நாள் கடந்திருக்கும். இன்டர்காம் ஒலித்தது. எடுத்துப் பேசினால் எடிட்டர். “ரவிபிரகாஷ், கொஞ்சம் என் ரூமுக்கு வந்துட்டுப் போறேளா?” என்றார். உடனே எழுந்து போனேன்.

“வாங்கோ! ரெண்டு நாளைக்கு முன்னால கேட்டேளே, வெர்ட்டிகிளா தலைப்பு அடிக்க முடியுமான்னு! எப்படின்னு கண்டுபிடிச்சுட்டேளா?” என்று கேட்டார் புன்சிரிப்போடு.

“இல்லை சார், நானும் எப்படி எப்படியோ ட்ரை பண்ணிப் பார்த்தேன். என்னால கண்டுபிடிக்க முடியலை!” என்றேன்.

“ஆனா, நான் கண்டுபிடிச்சிட்டேனே!” என்றார் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு. “அப்படியா சார்!” என்றேன்.

“ஆமாம்! இங்கே பாருங்கோ...” என்று அதற்கான வழிமுறையை விளக்கினார்.

அப்போதெல்லாம் சிஸ்டத்திலேயே இன்பில்ட்டாக ஃப்ரீசெல் கேம் இருக்கும். (இப்போது ஆன்லைனில் மட்டும் உள்ளது என்று நினைக்கிறேன்.) சீட்டுகளை வரிசைப்படுத்தும் ஆட்டம் அது. ஜாலியாக அதில் சில நேரம் விளையாடிக்கொண்டு இருப்பார் எம்.டி. நான் அவருடைய அறைக்குள் ஏதோ காரியமாகப் போகும்போது, “கொஞ்சம் இருங்கோ! இதை முடிச்சுட்டு வந்துடறேன்!” என்பார். “நான் இதுல ஃபர்ஸ்ட் லெவல் முடிச்சுட்டேன். செகண்ட் லெவல் ஆடிண்டிருக்கேன். நீங்க விளையாடி இருக்கேளா? மூளைக்கு நல்ல வேலை தர்ற கேம் இது. ஆடிப் பாருங்கோ, ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்!” என்பார்.

குழந்தை சட்டென்று கோபப்படும். அதே நேரம் அந்தக் கோபம் வந்த நொடியில் காணாமல் போகும். தனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை ஆர்வத்தோடு மற்றவருக்கு விளக்கிச் சொல்லும். அதே ஆர்வத்தோடு புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும். மனதில் கல்மிஷமின்றி எல்லாருடனும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும்.

தன்னுடைய மனசை இறுதிக்காலம் வரை ஒரு குழந்தையின் மனசைப் போன்று பூ மாதிரி வைத்துக்கொண்டிருந்தவர் எங்கள் சேர்மன். அவருடனான அனுபவங்களை ஒவ்வொரு முறையும் பகிர்ந்துகொள்ளும்போதும், இன்று அவர் எங்களிடையே இல்லையே என்கிற ஏக்கமும் வருத்தமும் ஏற்படத்தான் செய்கிறது.

(இன்னும் சொல்வேன்)

Sunday, April 17, 2016

என் புகுந்த வீடு - 14


சேர்மன் பார்த்துக்கொண்டிருக்கிறார்!

விகடன் சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களைப் பற்றி எழுதத் தொடங்கும்போதெல்லாம் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரின் தாய்மை நிறைந்த அன்பும் மனிதாபிமானமும்தான்! அதற்காக அவர் கோபப்படவே மாட்டார் என்பது அர்த்தமல்ல. கோபம் வரும்; அந்த கோபத்தில் நம் மீதான அக்கறைதான் மிகுந்திருக்கும்.

“சார் யார் மீதாவது கோபப்படுகிறார் என்றால், அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். சார் அவர்களைப் பற்றி ரொம்பவும் அக்கறைப்படுகிறார் என்று அர்த்தம்” என்று சீனியர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால், எம்.டி. அவர்கள் என் மீது ஒருநாளும் கோபப்பட்டதே இல்லை. ‘அவருக்கு என் மீது அக்கறை இல்லையோ! அதனால்தான் கோபப்படவில்லையோ? கோபமூட்டும்படியாக ஏதாவது செய்து வைக்கலாமா!’ என்றெல்லாம்கூடக் குழந்தைத்தனமாக நான் ஆரம்பக் காலங்களில் யோசித்திருக்கிறேன் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.

என் குருநாதர் சாவி அவர்களின் கோபம் பத்திரிகையுலகில் பிரசித்தமானது. ஆனால், அதில் பொதிந்திருந்த அன்பையும் அக்கறையையும் மனதார உணர்ந்தவன் நான். அதற்குச் சற்றும் சளைத்ததல்ல விகடன் சேர்மனின் கோபமும், அதில் நிறைந்திருக்கும் அன்பும் அக்கறையும்! ஆனால், சாவி கோபக்காரர் என்று பிரசித்தமான அளவுக்கு விகடன் சேர்மன் கோபக்காரராகப் பரவலாக அறியப்படவில்லை. காரணம், கோபத்தைவிட அவரின் அன்பும் அடுத்தவரை மதிக்கும் பண்பும் பன்மடங்கு அதிகமாக இருந்ததுதான்!

பரபரப்பான அலுவலக வேலை நேரத்தில் தேவையற்ற போன்கால்கள் வந்தால் எரிச்சலாக இருக்கும். இருப்பினும், பொறுமையாக பதில் சொல்லி, முடிந்த அளவு அவர்களுக்கு உதவவேண்டியது அவசியம் என்று எங்களுக்கு அறிவுறுத்தியவர் சேர்மன். சில நேரங்களில் வேறு டிபார்ட்மெண்ட்டுக்குப் போக வேண்டிய போன் கால்கள் எடிட்டோரியலுக்கு வந்துவிடுவதுண்டு. அது போர்டில் இருக்கும் ஆபரேட்டரின் கவனக்குறைவால் இருக்கலாம்; அல்லது, யாரேனும் வாசகரோ வேறு எவரோ தங்கள் பிரச்னை குறித்து யாரைக் கேட்பது என்று தெரியாமல் எடிட்டோரியலின் நேரடி தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டுவிட்டிருக்கலாம். அவர்களுக்குப் பொறுமையாக பதில் சொல்லி, வேண்டிய உதவியை சம்பந்தப்பட்ட டிபார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள்தான் செய்யவேண்டும் என்று பொறுப்பைத் தள்ளிவிடப் பார்க்காமல், தானே முடிந்த அளவு அவர்களுக்கு உதவ வேண்டும் என்பார் எங்கள் எம்.டி. “வெளியிலிருந்து போன் செய்கிறவர்களுக்கு என்ன டிபார்ட்மெண்ட், யார் இதற்குப் பொறுப்பு என்றெல்லாம் தெரியாது; அவர்களைப் பொறுத்தவரை விகடனுக்குப் போன் செய்திருக்கிறார்கள். தங்களின் போன் அழைப்பை எடுத்துப் பேசுகிறவர்கள்தான் அவர்களைப் பொறுத்தவரை விகடனின் முகம். எனவே, உங்களின் பொறுப்பு முக்கியமானது” என்று அனைவருக்கும் படித்துப் படித்துச் சொல்வார் எம்.டி. வெறுமே வாய் வார்த்தையாக போதிப்பது மட்டுமல்ல; தானே பலமுறை அதை நடைமுறையில் செயல்படுத்தியும் காட்டியுள்ளார்.

வெளியிலிருந்து யாரோ வாசகர் போன் செய்து, சந்தா கட்டிப் படிக்கும் தனக்கு இரண்டு வாரங்களாகப் புத்தகமே வரவில்லை என்று சத்தம் போடுவார். அந்த அழைப்பு நேரடியாக ஆசிரியரின் மேசைக்கு வந்திருக்கும். ஆனால், தான் விகடன் ஆசிரியரோடுதான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை அந்த வாசகர் அறிய மாட்டார். விகடனில் சர்க்குலேஷன் டிபார்ட்மெண்ட்டில் பணியாற்றும் யாரோ ஓர் ஊழியரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றுதான் நினைப்பார். எனவே, அவரின் வார்த்தைகள் சற்றுத் தடிப்பாகக் கூட வரலாம். ஆனாலும், சேர்மன் அந்த வாசகரிடம் மிகப் பொறுமையாகவும் தன்மையாகவும் பேசி, அவருடைய பெயர், சந்தா எண் ஆகியவற்றைக் கேட்டுக் குறித்துக்கொள்வார். பின்பு சப்ஸ்கிரிப்ஷன் டிபார்ட்மெண்ட்டைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லி, அந்த வாசகருக்கு இரண்டு வார புத்தகங்களை அங்குள்ள எஸ்.ஓ. மூலமாக உடனடியாகக் கொடுக்கச் செய்வார். ஏன் புத்தகம் போகவில்லை என விசாரிப்பார். தபாலில் தவறியிருந்தால், புகார் எழுதித் தரச் சொல்வார்.

இன்னும் சில நேரங்களில், வேறு பத்திரிகைக்குப் போக வேண்டிய போன்கால்கள் கூட வந்துவிடுவதுண்டு. அவர்களுக்குப் பொறுமையாக அதை எடுத்துச் சொல்வதோடு, சம்பந்தப்பட்ட பத்திரிகை தொடர்பு எண்களைப் பார்த்துச் சொல்லி, அங்கே தொடர்பு கொள்ளச் சொல்வார். அவருடைய இந்தச் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட நானும் 99 சதவிகிதம் அவரின் வழிமுறையைத்தான் கடைப்பிடித்து வருகிறேன்.

2000-வது ஆண்டில்தான் முதன்முதலாக லேண்ட்லைன் டெலிபோன் கனெக்‌ஷன் வாங்கினேன். அப்போது பி.எஸ்.என்.எல். என்கிற பெயர் கிடையாது. சென்னை டெலிபோன்ஸ்தான். டெலிபோன் டைரக்டரி என தடித்தடியாக மூன்று புத்தகங்கள் தருவார்கள். அதில் பொடிப்பொடியான எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான பெயர்களில் தேடி, நாம் விரும்பும் நபரின், தியேட்டரின், முக்கியப் பிரபலத்தின் தொலைபேசி எண்களைக் கண்டுபிடிப்பது ஒரு ஜாலி விளையாட்டு! டெலிபோன் டைரக்டரி வந்ததும் நான் செய்த முதல் காரியம், என் பெயரைத் தேடி எனக்கான டெலிபோன் எண் சரியாக இருக்கிறதா என்று பார்த்ததுதான்! அப்போது ரவிபிரகாஷ் என்கிற பெயரில் என்னைத் தவிர ஐந்து பேர் இருந்தார்கள்.

சரி, டாப்பிக்கை விட்டு எங்கோ போகிறேன். 

வீட்டுக்கு டெலிபோன் வந்த புதிதில், தேவை இருக்கிறதோ இல்லையோ, தெரிந்தவர்களுக்கெல்லாம் போன் செய்து பேசுவது ஒரு பொழுதுபோக்காக இருந்தது. அலுவலகத்தில் இருந்து காலையில் ஒருமுறை, மாலையில் ஒருமுறை சும்மாவாச்சும் வீட்டுக்குப் போன் செய்து, மனைவியிடமும்  என் குழந்தைகளிடமும் ‘சாப்பிட்டியா? ம்ம்... அப்புறம்...’ என்று விஷயமே இல்லாமல் பேசுவது உண்டு.

அப்போது என் மகனுக்கு ஐந்து வயது. டெலிபோன் செய்யக் கற்றுக்கொண்டுவிட்டான். மிகக் கச்சிதமாக என் அலுவலக நம்பரை டயல் செய்து (பட்டன் டயல்தான்) என்னுடைய இண்டர்காம் இணைப்பு எண்ணை டெலிபோன் ஆபரேட்டரிடம் சொல்லி, என்னைத் தொடர்பு கொண்டு மழலை மொழியில் பேசுவான். ‘அம்மா அடிச்சா; வந்ததும் திட்டு’ என்பான். ‘அக்கா கிள்ளினா’ என்று ஏழு வயது அக்கா மீது புகார் செய்வான்.

அப்படி ஒருநாள் அவன் வழக்கம்போல் ஆனந்த விகடன் அலுவலகத்துக்கு போன் செய்தான். என் இண்டர்காம் எண்ணை மறந்துவிட்டானா அல்லது அவன் மழலையில் சொன்னது டெலிபோன் ஆபரேட்டருக்குத்தான் புரியவில்லையா என்று தெரியவில்லை; எம்.டி-க்கு கனெக்‌ஷன் கொடுத்துவிட்டார் ஆபரேட்டர்.

எம்.டி. எடுத்ததும், வழக்கம்போல் இவன் தன் அம்மா மீது புகார்ப் பட்டியல் வாசித்திருக்கிறான். “எப்போ வருவே வீட்டுக்கு? வரும்போது பாப்பின்ஸ் வாங்கிண்டு வரியா?” என்று கேட்டிருக்கிறான். எம்.டி. பொறுமையாக அவனிடம், “யார் வேண்டும்ப்பா உனக்கு?” என்று கேட்டிருக்கிறார். என் மகன் மழலையில் “டவிபிகாஸ்” என்று சொல்ல, “கொஞ்சம் இருக்கியா? அப்பாவைப் பேசச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு, என் இண்டர்காமுக்கு இணைப்பு கொடுத்தார். 

எடுத்து ‘ஹலோ’ என்றதும், “ரவிபிரகாஷ்! உங்க பையன் பேசறான். லைன்ல இருக்கான். பேசுங்கோ!” என்றார் எம்.டி. தொடர்ந்து ரிசீவரில், “அப்பா... அப்பா...” என்று மகனின் மழலைக் குரல் கேட்டது.

அவனிடம் சிறிது பேசிவிட்டு, “சரி, வைடா போனை! அப்புறமா பேசறேன்” என்று கட் செய்துவிட்டு, டெலிபோன் ஆபரேட்டரைத் தொடர்பு கொண்டு, “இந்த அழைப்பை எம்.டி-க்கு ஏன் கொடுத்தீர்கள்?” என்று கேட்டேன். “உங்க பையனா சார், எடிட்டர்னு கேட்டான். சரி, யாரோ எம்.டி-யோட பேரக் குழந்தை போலிருக்குன்னு நினைச்சுக் கொடுத்துட்டேன்” என்றார். ”கெடுத்தீங்களே காரியத்தை” என்றபடி எம்.டி-யின் அறைக்கு ஓடினேன்.

“வாங்கோ!” என்று பளீரென்று புன்னகைத்தார். “என்ன, பேசினேளா? என்ன சொல்றான் பையன்?” என்றார். 

“சார், அவன்... வந்து... தெரியாம... ஸாரி சார்...” என்று தயங்கினேன் குரல் நடுங்க. “வீட்டுக்குப் போனதும் இப்படியெல்லாம் போன் பண்ணக்கூடாதுன்னு அவனைக் கண்டிச்சு வைக்கிறேன், சார் ” என்றேன்.

“அவன் என்ன தப்பு பண்ணான் கண்டிக்கிறதுக்கு? இந்தச் சின்ன வயசுல நம்பரை கரெக்டா டயல் பண்ணிப் பேசத் தெரிஞ்சிருக்கே, அதைப் பாராட்டுங்கோ!” என்றார்.

“அதில்லே சார், அவன்பாட்டுல எடிட்டர்னு சொல்லி, அவங்க இங்கே லின்க் கொடுத்து, உங்களை அநாவசியமா இடைஞ்சல் பண்ணி...” என்று நான் இழுக்க, “ஒரு இடைஞ்சலும் இல்லே! இங்கே விகடனுக்கு போன் பண்ணிப் பேசறவங்க யாரா இருந்தாலும் அவங்க ஏதோ ஒரு விதத்துல நமக்குத் தொடர்பு உள்ளவங்கதான்; நமக்கு வேண்டியவங்கதான். அவங்க தேவை என்னன்னு கேட்டறிஞ்சு அதைச் செய்து கொடுக்கவேண்டியது நம்ம கடமை. மனசுல எதையும் போட்டுக் குழப்பிக்காம நிம்மதியா போய் உங்க வேலையைப் பாருங்கோ!” என்றார் சேர்மன்.

“சரி சார்” என்று விடைபெற்றுத் திரும்ப யத்தனித்தேன். “போறப்போ உங்க பையனுக்கு மறக்காம பாப்பின்ஸ் வாங்கிண்டு போங்கோ!” என்று சிரித்தார்.

சத்தியமாகச் சொல்கிறேன், அந்தப் பேரன்பின் சுமை தாங்காமல் இப்போதும் என் கண்கள் கலங்குகின்றன.

இன்றைக்கும் ஒவ்வொரு முறை என் மேசை போன் ஒலிக்கும்போதும், என் மொபைல் கூப்பிடும்போதும், “எடுத்து என்னான்னு கேளுங்கோ! அவருக்கு என்ன வேணும்னு கேட்டு, முடிஞ்ச உதவியைச் செய்யுங்கோ”  என்று அருகிலிருந்து எங்கள் மரியாதைக்குரிய சேர்மன் அறிவுறுத்துவது போலவே இருக்கிறது.

அவர் வார்த்தையை வேதவாக்காக இன்றளவிலும் கடைப்பிடித்து, அப்படியேதான் நடந்து வருகிறேன். ஒருவேளை, அழைப்பை ஏற்க முடியாத நிலையில் இருந்தாலும், பின்னர் மிஸ்டு கால்களைப் பார்த்து அவர்களைத் தொடர்பு கொண்டு பேசிவிடுகிறேன்.

காரணம், இப்போதும் சேர்மன் என்னை சதா காலமும் கவனித்துக்கொண்டே இருப்பதாகத்தான் உணர்கிறேன்.

(இன்னும் சொல்வேன்)










Friday, April 01, 2016

என் புகுந்த வீடு - 13


பார்த்தேன்... படித்தேன்... அதிர்ந்தேன்..!

னந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களிடமிருந்து வந்திருந்த மூன்றாவது கடிதம் எனக்கு அவர் மீது உண்டாகியிருந்த வருத்தத்தை அறவே போக்கியதோடு, அத்தனை பெரிய மனிதரைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டுவிட்டோமே என்று என் மீதே என்னைக் கோபம் கொள்ளச் செய்தது. ‘எங்களின் கடிதம் தங்கள் மனத்தைப் புண்படுத்தியிருப்பின் அதற்காக வருந்துகிறோம்’ என்று ஒரு பெரிய பத்திரிகையின் ஆசிரியர் தம் கடிதத்தில் குறிப்பிட்டு எழுதிய பின்னரும், அந்தப் பெருந்தன்மையை உணராத அறிவிலியாய் ‘வேண்டாம். என் கதைகளைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்’ என வீம்பு பிடித்து மீண்டும் கடிதம் எழுதிய என் புத்தியைச் செருப்பால் அடித்துக்கொள்ளத் தோன்றியது.

ஆசிரியர் தமது மூன்றாவது கடிதத்தில், “எங்களின் கடிதம் உங்கள் மனத்தை எந்த அளவுக்குக் காயப்படுத்தியுள்ளது என்பது புரிகிறது. அதற்காக மீண்டும் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றபடி நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களின் கதைகள் எதையும் நாங்கள் திருப்பி அனுப்புவதாக இல்லை. தங்களின் நேர்மையின்மீது கடுகளவும் சந்தேகம் இல்லாமல், முழு மனத்தோடுதான் அவற்றைப் பிரசுரிப்பதாக உள்ளோம். ‘இன்னொரு முறையும் இப்படியான அனுபவம் நேராது என்பதற்கு என்னிடம் எந்த உத்தரவாதமும் இல்லை’ என்கிற தங்களின் வரியும் புரிந்துகொள்ளக்கூடியதே!  ஆனால், அப்படி ஏதேனும் நேர்ந்தாலும், அதற்காக தங்களின் நேர்மையைச் சந்தேகப்படமாட்டோம் என்று என்னால் உத்தரவாதம் தர இயலும். தங்களின் எழுத்துப் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கடிதத்தை எத்தனை முறை படித்திருப்பேன், எவ்வளவு தூரம் கண்கலங்கியிருப்பேன் என்பதற்குக் கணக்கு வழக்கே இல்லை. பின்பு நிதானமாக விகடன் ஆசிரியருக்கு பதில் கடிதம் எழுதினேன். 

“மதிப்பு மிக்க ஐயா, வணக்கம். தங்களின் கடிதம் கண்டேன். தங்கள் பெருந்தன்மைக்கு முன்னால் என்னைத் தூசினும் கீழாக உணர்கிறேன். தங்களுக்கு நான் எழுதிய பதில்களின் நகல்களை இப்போது எடுத்துப் பார்க்கும்போது, அவை பொறுப்பற்ற பதில்களாகவும், அதிகப்பிரசங்கித்தனமாகவும் இருப்பது கண்டு மிகவும் வெட்கப்படுகிறேன். கூசிப்போகிறேன். என் பதில்களை, 22 வயதே ஆன, பக்குவமடையாத மனம் கொண்ட ஓர் இளைஞனின் பிதற்றல்களாக எடுத்துக்கொண்டு என்னை மன்னிக்க வேண்டுகிறேன். இப்படிக்கு, ரவிபிரகாஷ்.

ஆனால், இந்தக் கடிதத்தை நான் எழுதுவதற்கு முன்பே, நண்பர் மார்க்கபந்துவுக்கு நான் எழுதிய நீண்ட புலம்பல் கடிதத்தின் நகலை அப்பா ஆனந்த விகடன் ஆசிரியருக்கு போஸ்ட் செய்திருந்தார் எனப் பின்னர் அப்பா சொல்லித் தெரிந்துகொண்டேன்.

“ரவிபிரகாஷின் தந்தை எழுதுகிறேன். என் மகன் அந்தக் கதையை எதைப் பார்த்தும் காப்பி அடிக்கவில்லை என்பதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். அவன் பெரிய எழுத்தாளனாக வேண்டும் என்பது என் விருப்பம். இந்த விவகாரம் ஏதோ திருஷ்டிப் பரிகாரம்போல் அமைந்துவிட்டது. இத்துடன் ரவி தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தின் நகலை இணைத்துள்ளேன். இதைப் படித்தால், அவன் மீது தவறில்லை என்பது உங்களுக்குப் புரியும். நியாயமாக அவன் இந்த விளக்கங்களைத்தான் முன்பே உங்களுக்கு எழுதியிருக்க வேண்டும். எத்தனையோ எடுத்துச் சொல்லியும் பொறுப்பற்று ஏதேதோ எழுதிவிட்டான். அவன் சிறு பையன். அவனுக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தானும் ஒரு கடிதம் எழுதி இணைத்து அனுப்பியதாக அப்பா சொன்னார்.

ஆனால், அப்பா இந்தக் கடிதத்தை அனுப்பியதாகச் சொன்ன தினத்துக்கு மறுநாளே ஆசிரியரின் மூன்றாவது கடிதமும் வந்துவிட்டதால், அப்பாவின் கடிதத்தையோ, நண்பர் மார்க்கபந்துவுக்கு நான் எழுதிய கடிதத்தின் நகலையோ பார்த்து, அதன்பேரில் ஆசிரியர் எனக்கு அந்த மூன்றாவது கடிதத்தை எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தோம்.

அந்தப் பிரச்னை அத்தோடு ஓய்ந்தது. என் சிறுகதைகளும் மாதத்துக்கு ஒன்றாக அடுத்தடுத்து ஆனந்த விகடன் இதழ்களில் வெளியாகின. அப்பாவுக்குச் சந்தோஷமான சந்தோஷம்!

பின்னாளில் நான் விகடனில் வேலைக்குச் சேர்ந்து, சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசிரியருடன் சற்று நெருங்கிப் பழக ஆரம்பித்த பிறகு, ஒரு நாள் இந்த ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை - முரண்டு’ சிறுகதை விவகாரம் குறித்து அவருடன் பகிர்ந்துகொண்டேன். அவர் எந்த வியப்பையும் காட்டவில்லை.

“தெரியுமே!” என்று சொல்லிப் புன்னகைத்தார். ‘தெரியுமா?!’ என்று நான்தான் வியப்பால் விழிகளை விரித்தேன்.

“எப்படித் தெரியும்னு பார்க்கறேளா... வேலை கேட்டு நீங்க அப்ளிகேஷன் போட்டப்பவே, உங்க பேரைப் பார்த்ததும் கேள்விப்பட்ட பேரா இருக்கேனு தோணிச்சு. வேலுச்சாமியைக் கூப்பிட்டு விசாரிச்சேன். விகடன்ல நீங்க நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கீங்கன்னு சொன்னவர், கூடவே இந்த விஷயத்தையும் சொன்னார்” என்றார் ஆசிரியர்.

வேலுச்சாமி என்று ஆசிரியரால் குறிப்பிடப்பட்டவர் கவிஞரும் நல்ல எழுத்தாளருமான இரா.வேலுச்சாமி. ஆனந்த விகடனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். முரண்டு கதையோடு என் சிறுகதை ஒத்துப்போகிற விஷயத்தைக் கண்டுபிடித்து ஆசிரியரிடம் சொன்னவர் அவர்தான்.

“அது மட்டுமில்லே... விகடன்ல வெளியான உங்களோட இன்னொரு கதை சம்பந்தமாகவும் நீங்க ரொம்பக் கோபப்பட்டுக் கடிதம் எழுதினீங்கன்னும் வேலுச்சாமி சொன்னார்” என்று சொல்லி மர்மமாகப் புன்னகைத்தார் ஆசிரியர்.

தர்மசங்கடமாகத் தலைகுனிந்துகொண்டே, “ஆமாம் சார்” என்றேன். அது பற்றிப் பிறகு எழுதுகிறேன்.

ஆக, பிரச்னைக்குரிய நபர் என்று தெரிந்தும் தயங்காமல் என்னை வேலையில் சேர்த்துக்கொண்ட ஆசிரியரின் பெருந்தன்மையை என்னவென்பது?

எல்லாம் சரி; இப்போது, இந்தக் கட்டுரையை கம்போஸ் செய்துகொண்டிருக்கிறேனே, இந்த நிமிடம் எனக்கு ஒரு புதிய பிரச்னை - பிரச்னை என்று சொல்ல முடியாது - குழப்பம் உண்டாகியிருக்கிறது.

நாஞ்சில் நாடனின் ‘முரண்டு’ சிறுகதையை, 35 ஆண்டுகளுக்கு முன்னால், ஆசிரியர் அனுப்பி வைத்த இலக்கிய சிந்தனைப் புத்தகத்தில் படித்ததோடு சரி; அதற்குப் பிறகு அந்தக் கதையை நான் படிக்கவில்லை; அதற்கான வாய்ப்போ வேளையோ வரவில்லை. ஆனால், இந்தப் பதிவை எழுதும்போது அந்தக் கதையை மீண்டும் தேடியெடுத்துப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் உண்டாகியது. முன்னெல்லாம் அதற்கு வாய்ப்பு கிடையாது. இப்போதுதான் கூகுளாண்டவர் துணை இருக்கிறதே! தேடினேன். கிடைத்தது. படித்ததும் பலத்த அதிர்ச்சிக்கும் குழப்பத்துக்கும் ஒரு சேர ஆளானேன். 

மனதில் தேங்கியிருந்த பழைய ஞாபக அடுக்குகளைப் புரட்டி, அந்தக் கதையை ஒருவாறு நினைவுக்குக் கொண்டு வந்து, கீழ்க்கண்டவாறு அதன் சுருக்கத்தை போன பதிவில் தந்திருந்தேன்.

//ஒரு ரெண்டுங்கெட்டான் இளைஞன். தான் செய்வது இன்னதென்று அவனுக்குத் தெரியாது. ஆனால், அடிக்கடி கள்ளு குடிக்கப் போய்விடுவான். அவனை வைத்துக்கொண்டு அவன் அம்மா போராடுவாள். உறவுக்காரப் பெண் ஒருத்தியை அவனுக்குக் கட்டி வைத்துவிட்டால், அவனுக்கு ஒரு வழி ஏற்படுத்திக் கொடுத்துவிட்ட நிம்மதி தனக்குக் கிடைக்கும் என்று நினைத்து, அதற்கு முனைவாள். அதற்குள் அவன் கள்ளு குடிக்கக் காசு புரட்டுவது எப்படி என்று யோசித்து, குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டால் ரூபாய் கொடுப்பார்கள் என்று தெரிந்துகொண்டு, அங்கே போய் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு விடுகிறான். அம்மாவின் ஆசை நிராசையாகிறது. அவ்வளவுதான் கதை!//

நன்றாக நினைவிருக்கிறது, அன்று நான் படித்த கதை இதுதான். நான் மட்டுமல்ல, என் அப்பாவும் அந்தக் கதையைப் படித்தார். இருவரும் அது பற்றி விவாதம் செய்திருக்கிறோம்.

இலக்கிய சிந்தனைப் புத்தகத்தில் அந்தக் கதை குறைந்தபட்சம் 15, 16 பக்கங்களுக்கு இடம்பெற்றிருந்தது. வளவளவென்று நீண்டிருந்த கதை. மொழிநடையும் கொஞ்சம் சிக்கலாக இருந்தது. புரியாத வட்டாரச் சொற்கள் நிறைய இடம்பெற்றிருந்தன.


ஆனால், சற்று முன்பு நான் கூகுளில் தேடி எடுத்துப் படித்த ‘முரண்டு’ கதை மிகச் சிறிய கதை. நறுக்கென்று கச்சிதமாக எழுதப்பட்டிருந்த கதை. அதிகபட்சம் நாலைந்து பக்கங்கள் வரலாம். இதில் தெரியாத, புரியாத வார்த்தைகள் என்று எதுவும் தட்டுப்படவில்லை. 

முக்கியமாக, இந்த ‘முரண்டு’ கதை என் கதையோடு பெரிதும் ஒத்துப்போகிறது. அதுதான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின விஷயம். (முரண்டு கதையின் யூ.ஆர்.எல். இணைப்பைக் கீழே தந்துள்ளேன்.)

எனில், அன்று புத்தகத்தில் நான் படித்த கதை என்ன? ‘முரண்டு’ கதைக்குப் பதிலாக வேறு ஏதாவது ஒரு கதையைப் படித்துக் குழப்பிக்கொண்டுவிட்டேனா? 

அன்று அந்தப் புத்தகத்தில் ‘முரண்டு’ கதையைத் தவிர வேறு எந்தக் கதையையும் நான் படிக்கவில்லை. அன்றிருந்த மன நிலையில் எனக்கு வேறு எதையும் படிக்கத் தோன்றவில்லை. ‘முரண்டு’ கதையை பதினைந்து பக்கங்களுக்குக் குறையாமல் மிக நீண்ட கதையாகப் படித்தது நன்கு நினைவிருக்கிறது. அதில் புரியாத வட்டாரச் சொற்கள் கலந்திருந்ததும் நினைவிருக்கிறது. கதையில் வரும் மூளை வளர்ச்சியற்ற கதாநாயகன் அடிக்கடி கள்ளு குடிக்கப் போய்விடுவான், அவன் அம்மா விறகுக் கட்டையை எடுத்துக்கொண்டு அவனைத் துரத்திக்கொண்டு ஓடுவாள் என்று படித்த ஞாபகமும் இருக்கிறது.

ஆனால், சற்று முன் படித்த ‘முரண்டு’ கதையில் இது எதையுமே காணவில்லையே? ஒருவேளை, புத்தகம் தயாராகும்போது தவறுதலாக வேறு ஒரு ஃபாரம் இடையில் நுழைந்துவிட்டதா? அதற்கென நியமிக்கப்பட்ட பணியாட்கள்தான் கையால் ஒவ்வொரு ஃபாரமாக எடுத்து அடுக்கி, பைண்டுக்குக் கொடுப்பது வழக்கம் என்பதால், சில புத்தகங்களில் ஃபாரம் மாறிப் போகிற, விட்டுப் போகிற தவறுகள் நடப்பதுண்டு. எனக்கு அனுப்பப்பட்ட இலக்கிய சிந்தனை புத்தகத்திலும் அப்படி ஏதேனும் குளறுபடி நடந்து, நான்தான் தவறாகப் புரிந்துகொண்டேனா?

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இது என்ன புதுக் குழப்பம்?

(தொடர்ந்து சொல்வேன்)

https://nanjilnadan.com/2011/04/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/