உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, December 22, 2009

குயிலை சந்தித்தது சிங்கம்!

ரு குயிலும் சிங்கமும் சந்தித்து உரையாடிய அபூர்வ நிகழ்ச்சி அது. குயில் - இந்தி() இசைக் குயில் லதா மங்கேஷ்கர். சிங்கம் - நமது ஏழிசை மன்னர் டி.எம்.சௌந்தர்ராஜன்.

டி.எம்.எஸ்-ஸின் தீவிர ரசிகரான விஜயராஜுக்கு, அவரது வாழ்க்கை வரலாற்றை மிக விரிவாகப் பதிவு செய்ய வேண்டும் என்று ஆர்வம். அந்த ஆர்வம் பிறக்கக் காரணமாக இருந்தது, அவர் நேரடியாகப் பார்த்து வருந்திய ஒரு காட்சி.

நேரு ஸ்டேடியம் புதிதாகக் கட்டப்பட்டு, அதன் துவக்க விழா அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டமாக ஏற்பாடாகியிருந்தது. உள்ளே நுழைவதற்கு ஏகப்பட்ட கெடுபிடி, பாதுகாப்பு பந்தோபஸ்துகள்! ஆங்காங்கே ஸ்பீக்கர்களில் 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...', 'நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்...' என்று எம்.ஜி.ஆர். பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டு இருந்தன. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாடகர் டி.எம்.எஸ். நடிகர் நாகேஷோடு வந்தார். அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர் செக்யூரிட்டிகள். "நான்தானப்பா பாடகர் டி.எம்.எஸ். அதோ, அங்கே பாடிக்கிட்டிருக்கே, அந்தப் பாட்டெல்லாம் நான் பாடினதுதானப்பா!" என்று சொல்லிப் பார்த்தார் டி.எம்.எஸ். அவர்களுக்குப் பாவம், இந்தத் திரை இசைச் சக்கரவர்த்தியைத் தெரியவில்லை. உள்ளே விட முடியாது என்று தீர்மானமாக மறுத்துவிட்டனர். நாகேஷ் கோபத்துடன் சண்டையிட, தகவலறிந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் வந்து இருவரையும் உள்ளே அழைத்துப் போனார். இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டு இருந்த விஜயராஜ், அப்போதே முடிவு செய்துவிட்டார், டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கையை விஸ்தாரமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று.

2001-ல் தொடங்கிய அந்தப் பயணம், இதோ இப்போதுதான் சேர வேண்டிய இலக்கை வந்து எட்டியிருக்கிறது.

டி.எம்.எஸ். எங்கே பிறந்தார், எந்தக் கோயில் வளாகத்தில் ஹிந்தி டியூஷன் நடத்தினார், முதன்முதலில் எந்த ஸ்டுடியோவில் பாடினார் என்பதிலிருந்து அவரது ஒவ்வொரு வளர்ச்சியையும் அது தொடர்பான இடங்களுக்கே அவரை அழைத்துச் சென்று பதிவு செய்திருக்கிறேன். அந்தக் காலத்து சரோஜாதேவி, எஸ்.எஸ்.ராஜேந்திரனிலிருந்து இன்றைய ரஜினிகாந்த், .ஆர்.ரஹ்மான், வடிவேலு வரைக்கும் டி.எம்.எஸ்ஸோடு தொடர்புள்ள எந்த ஒரு வி..பி-யையும் விட்டுவிடாமல், கிட்டத்தட்ட ஐம்பது பேருக்கு மேல் அனைவரையும் டி.எம்.எஸ்ஸைச் சந்திக்க வைத்துப் பேச வைத்திருக்கிறேன். அந்த வகையில் இசைக் குயில் லதா மங்கேஷ்கரையும் டி.எம்.எஸ்ஸையும் சந்திக்க வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. லதா மங்கேஷ்கரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். 'இமயத்துடன்' என்கிற இந்த வரலாற்றுப் பதிவுக்கு ஒரு முத்தாய்ப்பாக அந்தச் சந்திப்பு அமைந்துவிட்டதில் எனக்குப்ூரண திருப்தி. இந்த மெகா சீரியல், ஒரு மகா கலைஞனுக்கான உண்மையான அர்ப்பணிப்பாக இருக்கும்" என்கிறார் விஜயராஜ்.

தமிழ் உச்சரிப்புக்கு ஓர் அர்த்தம் கொடுத்துக் கம்பீரப்படுத்திய பாடகரான டி.எம்.எஸ். இந்தியில் பேசுவதைக் கேட்பதே ஒரு ரசனையாக இருக்கிறது. லதா மங்கேஷ்கர், நடிகர் திலகம் சிவாஜியின் பரம ரசிகை. டி.எம்.எஸ்ஸுடன் அவர் பேசியபோதும் அதை வெளிப்படுத்தியுள்ளார்.

"சிவாஜி அண்ணாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் பாடல் காட்சிகளை எல்லாமே பார்த்து ரசிச்சிருக்கேன். அவரே பாடுறது மாதிரி அதெப்படி அத்தனைத் தத்ரூபமா உங்களால பாட முடியுது?" என்று ஒரு குழந்தை போல் ஆச்சரியத்துடன் லதா கேட்க, அதுவரை இயல்பாகப் பேசிக்கொண்டு இருந்த டி.எம்.எஸ்., "அதும்மா... ஒருத்தர் குரலை உன்னிப்பா கவனிச்சு அவர் பேசுற பாணியை மனசுல வாங்கிப்பேன். சிவாஜி பேசும்போது அடிவயித்துல இருந்து கனமா குரல் வரும். இப்ப பாருங்க, இது சிவாஜி வாய்ஸ்..." என்று அடிவயிற்றிலிருந்து சிவாஜி குரலில் பேசிக் காட்டுகிறார்.

"அட, ஆமாம்! அப்படியே இருக்கே" என்று வியந்து போன லதா மங்கேஷ்கர், "ஒரு தடவை சிவாஜி அண்ணன் கிட்டேயே சொல்லியிருக்கேன், டி.எம்.எஸ். குரல் அப்படியே உங்களைப் போலவே இருக்குன்னு. அதுக்கு அவர், 'ஆமாம்மா! இங்கே ராஜ்கபூருக்கு ஒரு முகேஷ் அமைஞ்சது மாதிரி எனக்கு டி.எம்.எஸ். கிடைச்சது என் அதிர்ஷ்டம்தான்'னு சொன்னார்" என்று சொல்ல, "அப்படியா!" என்று ரசித்துப் பெருமிதப்படுகிறார் டி.எம்.எஸ்.

"டி.எம்.எஸ்., பி.சுசீலா காம்பினேஷன்ல வந்த பாடல்கள் அனைத்துமே எனக்குப் பிடிக்கும். என் தங்கை ஆஷாபோன்ஸ்லேக்கு ரொம்பப் பிடித்த பாடல் 'போனால் போகட்டும் போடா...'தான். டி.எம்.எஸ்ஸை எனக்கு ஐம்பது வருஷமா தெரியும்" என்கிறார் லதா.

உடனே டி.எம்.எஸ். தன் ஆல்பத்திலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து லதாவிடம் காட்டுகிறார். "இந்த நிகழ்ச்சி ஞாபகம் இருக்காம்மா?" என்று கேட்கிறார். அதை வாங்கிப் பார்க்கும் லதாவின் விழிகள் வியப்பால் விரிகின்றன. அது, டி.எம்.எஸ். சினிமாவில் பாட வந்து 25 ஆண்டுகள் பூர்த்தியானதையொட்டி ஏவி.எம். எடுத்த ஒரு பாராட்டு விழா நிகழ்ச்சி. அந்தப் படத்தில் ஏவி.எம்., டி.எம்.எஸ்., பி.சுசீலா, கலைஞர் மு.கருணாநிதி இவர்களோடு லதா மங்கேஷ்கரும் இருக்கிறார்.

"இது 37 வருஷத்துக்கு முன்னாடி, 1972-ல் எடுத்த படம்மா. எனக்கு அப்போ சரியா 50 வயசு. இன்னிக்கு எனக்கு 87 வயசாயிடுச்சு" என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்ன டி.எம்.எஸ்., "படைத்தானே... மனிதனை ஆண்டவன் படைத்தானே..." என்று குரலெடுத்துப் பாடுகிறார்.

"அட, இந்த வயசுலயும் துளி பாவம் குறையாம, ஸ்ருதி குறையாம, உச்சரிப்பு தடுமாறாம, என்ன அழகா பாடறீங்க!" என்று லதா வியக்க, தான் மேற்கொண்டு வரும் யோகா, ஆல்ஃபா மெடிட்டேஷன் போன்றவை பற்றி விவரிக்கிறார் டி.எம்.எஸ்.

"எனக்கு இப்போ 81 வயசாகுது" என்று லதா சொல்ல, "அப்படின்னா நீ என்னை விடச் சின்னவ. எனக்குத் தங்கச்சிம்மா!" என்று உருகுகிறார் டி.எம்.எஸ்.

"வயசுல மட்டுமில்ல... உங்களைவிட எல்லா விதத்துலயும் நான் சின்னவதான்" என்கிறது அந்த இந்திய இசைக்குயில் வெகு அடக்கமாக. "இவ்ளோ தூரம் என்னைத் தேடி வந்து பெருமைப்படுத்தினதுக்கு நன்றி! என்னாலதான் இப்பெல்லாம் அதிகம் அலைய முடியலை. நீங்க இதுக்கு முன்னே மும்பை வந்திருக்கீங்களா?"

"கச்சேரி செய்யறதுக்காக அடிக்கடி வருவேன். உங்களையெல்லாம் பார்த்துப் பேச சந்தர்ப்பம் அமைஞ்சது இப்போதான். பகவானா பார்த்து ஏற்படுத்திய சந்திப்பு இது" என்று மேலே கை காட்டி டி.எம்.எஸ். நெகிழ, "ஆமாம். எனக்கும் உங்களைச் சந்திச்சதுல ரொம்பச் சந்தோஷம். இன்னிக்கும் உங்க குரல் மூலமாதான் சிவாஜி அண்ணன் எங்களோடு வாழ்ந்துட்டிருக்கார்" என்கிறார் லதா.

பிரியாவிடை பெற்றுக் கிளம்புகிறார் டி.எம்.எஸ்.

லதாவைச் சந்திப்பதற்கு முன்பாக, வேறொரு முக்கிய இந்திப் பாடகர் வீட்டுக்கும் சென்றார் டி.எம்.எஸ். அவர், மறைந்த முகம்மது ரஃபி. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை, டி.எம்.எஸ்ஸை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, அவரது தொண்டைப் பகுதியைத் தன் விரல்களால் வருடி, "இந்த இடத்திலிருந்துதானா அத்தனை அற்புதமான சங்கீதம் வருது!" என்று வியந்து மகிழ்ந்தவர் முகம்மது ரஃபி. அவர் அப்படி வியப்பதற்குக் காரணமான பாடல், 'தூங்காதே தம்பி தூங்காதே...'.

முகம்மது ரஃபி பெற்ற ஏராளமான விருதுகளையும் கேடயங்களையும் பாராட்டுப் பத்திரங்களையும் ஒரு பெரிய ஹாலில் அழகாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். முகம்மது ரஃபியின் மைத்துனர் பர்வேஷ் அஹமத் அவற்றை டி.எம்.எஸ்ஸுக்கு விளக்குகிறார்.

முகம்மது ரஃபிக்கு அவர் மறைந்து எட்டு வருஷத்துக்குப் பிறகுதான் பத்மஸ்ரீ அவார்டு கிடைச்சுது. உங்களுக்கு ஒரு விஜயராஜ் கிடைச்சது போல ரஃபிக்கு யாரும் கிடைக்கலை. அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு பண்ணலையேங்கிற குறை எனக்கு இருக்கு" என்று ஆதங்கத்தோடு சொல்கிறார் அவர்.

உண்மையில் 'இமயத்துடன்...' என்கிற சீரியல் ஒரு மகா, மெகா முயற்சி!

'இமய'த்துக்காகக் காத்திருக்கிறார்கள் பாட்டு அரசனின் லட்சக்கணக்கான ரசிகர்கள்.

(30.12.09 ஆனந்த விகடன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)

.

Sunday, December 20, 2009

‘பா’ - விமர்சனம்

டி.வி.டி-யில் ‘பா’ பார்த்தேன். ஒரே வரியில் சொல்வதானால் அலுக்கவும் இல்லை; அசத்தவும் இல்லை!

எனக்கு அறவே இந்தி தெரியாது. அதிகம் இந்திப் படங்கள் பார்த்ததில்லை. அதிலும் அமிதாப் பச்சன் நடித்த படம் ஒன்றுகூடப் பார்த்ததில்லை. நான் சினிமா தியேட்டருக்குச் சென்று பார்த்த இந்திப் படங்கள் மொத்தம் இரண்டே இரண்டுதான். ஒன்று, ‘தேஸாப்’. புரியுமோ புரியாதோ என்ற குழப்பத்துடனேயே பார்த்தேன். நன்றாகப் புரிந்தது மட்டுமல்ல; ரொம்பவும் பிடிக்கவும் செய்தது. ஆனாலும், ஏனோ இந்திப் படங்கள் போய்ப் பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவே இல்லை. (இப்போதெல்லாம் எந்தப் படமுமே போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றுவதில்லை என்பது வேறு விஷயம்.) தவிர, தியேட்டருக்குச் சென்று நான் பார்த்த இன்னொரு இந்திப் படம் ‘தாரே ஜமீன் பர்’. அட்டகாசமான படம். என்னை மிகவும் நெகிழ வைத்த படம்.

தவிர, தொலைக்காட்சி ஒளிபரப்பில் ராஜா, துல்ஹே ராஜா, ஹீரோ நம்பர் ஒன் ஆகிய மூன்று இந்திப் படங்கள் பார்த்துள்ளேன். சமீபத்தில் டி.வி.டி-யில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ பார்த்தேன். இவை எதுவுமே ரொம்பப் பிரமாதமான படங்களாக (ஸ்லம்டாக் மில்லியனர் உள்பட) எனக்குத் தோன்றவில்லை. அவ்வளவுதான் நான் பார்த்த மொத்த இந்திப் படங்கள். இன்றைக்கு ‘பா’.

அமிதாப் பச்சனின் நடையுடை பாவனைகள் தெரியும். விளம்பரங்களிலும், பாடல் காட்சிகளிலும், துண்டுத் துண்டாக ஒளிபரப்பான ஒரு சில படக் காட்சிகளிலும் பார்த்திருக்கிறேன். ‘குரோர்பதி’ நிகழ்ச்சியையும் (தமிழ் டப்பிங்கோடு) பார்த்திருக்கிறேன்.

‘பா’ படத்துக்கு வருவோம். எனக்குப் புரிந்த வரையில் இந்த விமர்சனத்தை எழுதியிருக்கிறேன். தவறு இருந்தால் யாரும் கடுப்பாக வேண்டாம்.

அபிஷேக் பச்சன் அரசியலில் பெரிய நிலைக்கு வரவேண்டும் என்று ஆர்வப்படுகிறார். இதனால், திருமணத்தைத் தள்ளிப் போட விரும்புகிறார். டாக்டரும் காதலியுமான வித்யாபாலனின் வயிற்றில் வளரும் கருவை அழித்துவிடச் சொல்கிறார். வித்யாபாலன் மறுத்து, குழந்தையைப் பெற்றுக் கொள்கிறார். அந்தக் குழந்தைக்கு PROGERIA எனப்படும் உடல்ரீதியான குறைபாடு உள்ளது. (விரைவிலேயே மூப்பு அடையும் இந்த வகை நோய் மரபுரீதியானது. இந்த வகைக் குழந்தைகள் பெரும்பாலும் 13 வயதுக்குள் மரணமடைந்துவிடும்; ஒரு சில குழந்தைகள் 20 வயது வரையிலும், மிக மிக அரிதாக 40 வயது வரையிலும் உயிர் வாழக்கூடும் என்று விக்கிபீடியா சொல்கிறது.)

அந்தக் குழந்தை ‘ஆரோ’ கேரக்டரில் நடித்திருப்பவர் அமிதாப் பச்சன். இள வயதுகளில் ஒரு குழந்தையும், ஒரு சிறுவனும் நடித்திருக்கிறார்கள். அமிதாப் பச்சனுக்கு ஆள் யாரென்றே கண்டுபிடிக்க முடியாதபடிக்கு மிகை மேக்கப். ஆனால், வேறு வழியில்லை. இந்த கேரக்டருக்கு இப்படித்தான் போட்டாக வேண்டும். (தசாவதாரத்தில் கமல்ஹாசனுக்கு மிகை மேக்கப் என்று குறை சொன்னவர்கள் எல்லாம் இங்கே அமிதாப்புக்கு அட்டகாசமாக இருப்பதாகச் சொல்வதைக் கண்டு எனக்குச் சிரிப்புதான் வருகிறது. அதென்னவோ, சிலருக்கு இந்திக்காரர்களைப் பாராட்டுவதும், அதையே அட்வான்ஸாகச் செய்து முடிக்கும் நமது கலைஞன் கமல்ஹாசனைக் குறை சொல்வதும் ஒரு வியாதியாக இருக்கிறது.)

நடையுடை பாவனைகளில் ஒரு சிறிதும் அமிதாப் பச்சனைப் பார்க்க முடியவில்லை. குரலைக்கூட மாற்றிக் கொண்டு, ஆளே யாரோவாக - ஆரோ’வாக மாறிவிட்டிருக்கிறார். சபாஷ்! அப்பாவும் மகனுமான நடிகர்கள் படத்திலும் அப்பா-மகனாகவே நடித்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் அமிதாப் தன் மகனுக்கே மகனாக நடித்திருப்பது ஒரு ப்ளஸ். படம் பார்க்க வேண்டும் என்று எண்ணத்தைத் தூண்டுகிற ஓர் உத்தி!

அபிஷேக் பச்சனுக்கு அதிகம் வேலையில்லை. என்றாலும், அவர் வருகிற காட்சிகளில் எல்லாம் மிக இயல்பாக இருக்கிறார். கொடுத்த பாத்திரத்தை அநாயாசமாகச் செய்துவிட்டுப் போகிறார். ஒரு காட்சியில் தன் மகனை (அப்பாவை) உப்பு மூட்டை தூக்கிக்கொண்டு போகிறார்.

வித்யாபாலன் நடித்த வேறு படங்கள் எதுவும் நான் பார்த்திராததால், இந்தப் படத்தில் அவரின் நடிப்பைப் பற்றி இதர பட நடிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை என்னால். இந்தப் படத்தில் அவரின் நடிப்பு மிக யதார்த்தமானது. ரசிக்க வைக்கிற முகப் பொலிவுடன், கேஷுவலாக நடிக்கிறார். ஸ்மிதா பாட்டீல் போன்று மிகச் சிறந்த நடிகையாக வருவார் என்று தோன்றுகிறது. ஒரு காட்சியில் ‘இந்தக் குழந்தையைக் கலைத்துவிடு’ என்று அவரின் அம்மா சொல்ல, அதை மறுத்து எப்படிச் சொல்வது என்று திண்டாடி, கடைசியில் கண்ணீருடன் குழந்தை வேண்டும் என்பார். மிக அற்புதமான நடிப்பு!

நடிப்பின்மீது இவருக்கு உள்ள ஆர்வத்துக்கு ஓர் உதாரணம்... இந்தப் படத்துக்காக ஒரு காட்சியில் சிறுவன் ‘ஆரோ’வை (அமிதாப்பின் இள வயதாக நடித்த ஒரு சிறுவன்) உப்பு மூட்டை தூக்கிச் செல்ல வேண்டும் என்று டைரக்டர் பாலகிருஷ்ணன் (பால்கி) சொல்லியிருக்கிறார். வித்யாபாலனின் எடை 45 கிலோ. கிட்டத்தட்ட அந்தப் பையனின் எடையும் அதே அளவுதான். இதனால், அவனை முதுகில் தூக்கிச் செல்லும்போது தடுமாறி விழுந்துவிட்டார் வித்யாபாலன். அந்தச் சிறுவனும்தான். எல்லோரும் ஓடிப் போய் இருவரையும் தூக்கினார்கள். ‘சரி, அந்தக் காட்சியே வேண்டாம்’ என்று சொன்னார் டைரக்டர். அவர் விரும்பிய ஒரு காட்சி தன் இயலாமையால் ரத்து ஆவதா என்று வருந்திய வித்யா பாலன், பிடிவாதமாக மீண்டும் தான் முயற்சி செய்வதாகச் சொல்லி, அந்தப் பையனைச் சுமந்து சென்றிருக்கிறார். இரண்டு மூன்று டேக்குகளுக்குப் பிறகு, டைரக்டருக்குத் திருப்தியாகி டேக் ஓ.கே. ஆன பிறகுதான் வித்யா பாலனுக்கு மனசு நிறைந்ததாம்.

மனக் கசப்பால் பிரிந்து செல்லும் அபிஷேக் பச்சன் பின்னர் ஒரு பள்ளி விழாவில் கலந்துகொண்டு, ஒரு மாணவன் செய்த கைவினைப் பொருளான உலக உருண்டையைப் பாராட்டிப் பேச, அந்த மாணவன் வேறு யாருமல்ல; ஆரோதான். அவனைத் தன் மகன் என்றே தெரியாமல் பரிசு கொடுத்துவிட்டுப் போகிறார் அபிஷேக். பின்னர் இணைய தளம் மூலம் ‘ஆரோ’ தன் அப்பாவைத் தொடர்பு கொள்கிறான். வெப்காம் மூலம் சாட்டிங் செய்கிறான். அவரது அழைப்பின் பேரில் மும்பையிலிருந்து டெல்லி சென்று அவருடன் சில நாள் இருக்கிறான்.

கிளைமாக்ஸில், ‘ஆரோ’வின் உடல் நிலை சீரியஸாகி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருப்பதைக் கேள்விப்பட்டு வரும் அபிஷேக், அங்கேதான் தன் காதலி வித்யாபாலனை மறுபடி சந்திக்கிறார். ‘ஆரோ’ யாரோ அல்ல, தன் மகன்தான் என்கிற உண்மை தெரிகிறது. அவர் மீது கோபமாக இருந்த தன் அம்மாவை அப்பாவுடன் சேர்த்து வைத்துவிட்டு மகன் கண்ணை மூடுவது பழைய தமிழ் சினிமாக்களை நினைவுபடுத்தினாலும், உருக்கமாக இருக்கிறது.

இசை இளையராஜா. ஆரம்பக் காட்சியில் வருகிற ட்யூன் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே நாம் கேட்டு ரசித்த, ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் இடம்பெற்ற ‘புத்தம் புதுக் காலை, பொன்னிற வேளை...’ பாடல் மெட்டாகும். மற்றபடி இதர பாடல்களும் இனிமையாகவே இருக்கின்றன. படத்தின் தன்மைக்கேற்ப மென்மையாகத் தன் பங்களிப்பை வழங்கியிருக்கிறார் இளையராஜா. ரீரிக்கார்டிங் செய்யப்பட்டிருப்பதே தெரியாமல் படத்தோடு ஒன்றியிருப்பது ஒரு ப்ளஸ். (இளையராஜாவைக் கண்டால் சாருவுக்கு ஏன் ஆகவில்லை என்று தெரியவில்லை. இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டுச் சிரிக்கிறார்கள் இந்திப் படவுலகில் என்று அவர் எழுதியிருப்பதெல்லாம் ஜுர வேகத்தில் பிதற்றிய உளறல்கள் போலத்தான் தோன்றுகிறது எனக்கு.)

அமிதாப் நடிப்பு பெரிய ப்ளஸ். மற்றபடி அனைவரின் நடிப்பும், இளையராஜாவின் இசையும், ஒளிப்பதிவும் இந்தப் படத்தின் பலங்கள்தான்! (அபிஷேக்கின் அப்பாவாக வருபவர் மட்டும் ஏதோ நண்பர் போலத் தோன்றுகிறாரே தவிர, அப்பா மாதிரியே தெரியவில்லை.) ஆனால், கதை..?

‘தாரே ஜமீன் பர்’ படத்தில் அந்தப் பையனுக்கு டிஸ்லெக்ஸியா என்று பிரத்யேகமாக ஒரு நோயைக் குறிப்பிட்டதோடு நின்றுவிடாமல், கதை மொத்தமும் அழகாக, அற்புதமாக அதை மையப்படுத்தியே சுழன்றது. ‘பா’வில் அமிதாப்புக்கு ‘ப்ரோஜேரியா’ நோய் என்று சொல்லி மேக்கப் செய்திருக்கிறார்களே தவிர, கதை அதைச் சுற்றி நகராமல், காதலன் காதலி பிரிவு, அபிஷேக்கின் அரசியல் பிரவேசம், ஊழல் குற்றச்சாட்டு என்று சம்பந்தமில்லாமல் நகர்கிறது. அதே போல, கொடுத்த வரையில் தன் பாத்திரத்தை முழுமையாகச் செய்திருக்கிறார் அமிதாப் பச்சன். அதில் சந்தேகமில்லை. ஆனால், அவரை இன்னமும் பயன்படுத்திக்கொண்டு இருக்கலாம், கதையை அவரை மையப்படுத்தி இன்னும் வலுவான காட்சிகளை அமைத்திருந்தால்! சும்மா கைகளைத் தொங்கப் போட்டுக்கொண்டு நடப்பது, முன்னும் பின்னும் கைகளை ஆட்டி, தலைமேல் விரல்களால் தண்ணீர் தெளிப்பது போல் அபிநயிக்கும் மேனரிஸம் செய்வது, வித்தியாசமான குரலில் பேசுவது, சிரிப்பது என அவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் இயங்க வைத்திருக்கிறார்கள். இதனால், நம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் புஸ்ஸென்று போய்விட்டது.

‘தமிழ் சினிமா ரசிகர்களும், நடிப்பை ஆழ்ந்து நேசித்து அதில் அயர்வில்லாமல் ஈடுபடுகிற கமல்ஹாசனும், இன்னும் பலப்பல நடிகர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களைச் சொல்கிற ஒரு இந்திப் படத்தைப் பார்த்தேன்’ என்று ‘பா’ படத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் ஞாநி. இதெல்லாம் ரொம்ப டூ மச்! அந்த அளவுக்கெல்லாம் இந்தப் படத்தில் ஏதும் இல்லை. சொல்லப்போனால், இயக்கத்தில் குறுக்கிடாமல் இருந்தால், நமது கமல்ஹாசன் இந்தப் பாத்திரத்தை இதைவிடப் பிரமாதமாய்ச் செய்திருப்பார் என்றுதான் நான் நம்புகிறேன்.

‘தாரே ஜமீன் பர்’ படத்தோடு ஒப்பிடும்போது ‘பா’ அதில் பாதி உயரத்தைதான் எட்டுகிறது!