“மேடம், கிருஷ் அக்காவுக்கு ஒரு தடவை போன் பண்ணிப் பாருங்களேன்…”
ஒரு புன்னகையோடு, தன் மொபைலிலிருந்து கிருஷ்ணவேணியின் நம்பருக்கு ‘கால்’ செய்தாள் அவந்திகா. லைன் கிடைக்கவில்லை.
“தாமினி, திலீப்புக்கு டயம் ஆகுது. எங்கேயோ அவசரமா போகணும்னு சொல்லிட்டிருந்தான். உனக்குக் கொடுத்த டயரில கிருஷ்ணவேணி நம்பர், அவங்கப்பாவோட நம்பர் எல்லாம்கூட எழுதியிருக்கேன். நீயே அப்புறம் நிதானமா போன் பண்ணிப் பேசு” என்றபடி, அவளை அணைத்தவாறு வாசலுக்கு வந்தாள் அவந்திகா.
“மேடம், ஒரு செல்ஃபி” என்று பழக்க தோஷத்தில், அவந்திகா கொடுத்த செல்போனை எடுத்தாள் தாமினி. கேமரா வசதியெல்லாம் இல்லாத ஆரம்ப கால நோக்கியா மாடல் அது. அவந்திகா புன்னகைத்துக்கொண்டே தனது மொபைலில், தாமினியை அணைத்தவாறு செல்ஃபி எடுத்தாள்.
“கிருஷ் அக்காவும் நானும் எவ்ளோ செல்ஃபி எடுத்திருக்கோம் தெரியுமா, மேடம்! அக்காவோடு சேர்ந்து எடுத்துக்கிட்ட ஃபோட்டோஸ் நிறைய ஸேவ் பண்ணி வெச்சிருந்தேன் என் போன்ல. ப்ச்… எல்லாம் போச்சு! இனிமே, அக்காவைப் பார்க்க முடியுமோ, முடியாதோ… தெரியலை. அவங்ககூட போன்லயாச்சும் பேசலாம்னா அதுகூட முடியமாட்டேங்குதே!”
தாமினியின் தலையைச் செல்லமாகக் கோதிவிட்டு, அவளின் நெற்றியில் முத்தமிட்டாள் அவந்திகா. “ஜாக்கிரதையாப் போயிட்டு வாம்மா! திருச்சூர் போய்ச் சேர எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆயிடும். போய் கீதா ஆன்ட்டியைப் பார்த்ததும் எனக்கு போன் பண்ணு, என்ன? தைரியமா இரு!” என்றாள்.
கண்களில் நீர் தளும்ப, தலையை ஆட்டியபடி காரிடம் வந்தாள் தாமினி. “மேடம், இந்த செல்ஃபியை மறக்காம எங்க அப்பா நம்பருக்கு வாட்ஸப்ல அனுப்பிடுங்க. உங்களைப் பிரிஞ்சுபோறது எனக்குக் கஷ்டமா இருக்கு, மேடம்!” என்றபடி, மீண்டும் ஓடி வந்து அவந்திகாவைக் கட்டிக் கொண்டாள். அவளைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைப்பதற்குள் போதும் போதும் என்றானது அவந்திகாவுக்கு. அவளுக்குமேகூட தாமினியைப் பிரிவது கஷ்டமாகத்தான் இருந்தது.
கார் புறப்பட்டது. அது கண்ணிலிருந்து மறைகிற வரை, அதன் ஜன்னல் வழியே கை நீட்டி டாட்டா காண்பித்துக்கொண்டிருந்தாள் தாமினி.
முதல் நாள், அவள் பாத்ரூமிலிருந்து வந்ததுமே, கிருஷ்ணவேணி போன் செய்த விஷயத்தைச் சொன்னாள் அவந்திகா. “ஐயோ… என்னைக் கூப்பிடக்கூடாதா மேடம்! இப்ப உடனே அவங்களுக்கு கால் பண்ணிக் கொடுங்க” என்று பரபரத்தாள். ஆனால், நாலைந்து தடவை முயன்றும் லைன் கிடைக்கவில்லை.
“தோ பாரும்மா, இப்ப மணி 1:00. நீ முதல்ல படுத்து நல்லா ரெஸ்ட் எடு. அவளும் சென்னை போய்ப் படுத்து, நல்லா தூங்கி எழுந்திருக்கட்டும். காலைல நிதானமா பேசிக்கலாம்; எங்கே போயிடப்போறா?” என்று சமாதானப்படுத்தி தாமினியைப் படுக்க வைத்தாள்.
“இல்ல மேடம், கிருஷ் அக்காவுக்கு என்னைத் தனியா விட்டுட்டுப் போக மனசே இல்லை. அழுதுக்கிட்டே போனாங்க. நான் வைத்தியசாலாவில் தனியா இருப்பேன்னு நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருப்பாங்க. நான் இங்கே உங்களோட ஸேஃபா இருக்கேன்னு தெரிஞ்சால் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க. அதுக்குத்தான் சொல்றேன்…”
“அதான் அவ கிட்ட நானே சொல்லிட்டேனேம்மா… நீ இங்கே என்னோடதான் இருக்கேன்னு. நாளைக்கு திருச்சூர்ல இருக்கிற உங்க ரிலேஷன் வீட்டுக்குப் போகப்போறேங்கிற விஷயமும் அவளுக்குத் தெரியும். அவ இப்ப நிம்மதியா இருப்பா. நீ படுத்துத் தூங்கு. காலையில ரெடியாகிக் கிளம்பணும்.”
படுக்கையில் படுத்துக்கொண்ட பின்பும் கிருஷ்ணவேணியைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தாள் தாமினி.
“நானும் வந்ததுலேர்ந்து பார்க்கறேன்… கிருஷ் அக்கா, கிருஷ் அக்கானே உருகிட்டிருக்கியே… அவ அப்படி என்னதாண்டி சொக்குப்பொடி போட்டா உனக்கு?” என்று தாமினியின் கன்னத்தைக் கிள்ளினாள் அவந்திகா.
“அங்கே அத்தனை பேர் இருந்தாலும், கிருஷ் அக்காவோடு மட்டும்தான் நான் ரொம்ப நெருக்கமா பழகிட்டிருந்தேன் மேடம். அக்கா அவ்ளோ அன்பானவங்க. அவங்க மடியில தலைவெச்சுப் படுத்து, சமயத்துல அப்படியே தூங்கிப் போயிடுவேன். ரொம்ப நேரம் கழிச்சு எழுந்திருச்சுப் பார்த்தா, அக்கா அப்படியே சுவத்துல சாய்ஞ்சு உட்கார்ந்தபடியே தூங்கிட்டிருப்பாங்க. ‘என்னக்கா… என்னைத் தரையில விட்டுட்டு, நீங்க கால் நீட்டிப் படுத்திருக்கக் கூடாதான்னு கேட்டா, ‘நல்லா அசந்து தூங்கிட்டிருந்தே… உன்னை டிஸ்டர்ப் செய்ய விரும்பலே’ன்னுவாங்க. அவங்க என் கன்னத்தை அழுத்திப் பிடிச்சு முத்தமிடறப்போ அவ்ளோ ஆசையா இருக்கும். அவங்க உள்ளங்கை பஞ்சு மாதிரி சாஃப்டா இருக்கும்; சில்லுனு இருக்கும். இன்னும் கொஞ்ச நேரம் அவங்க கையை என் கன்னத்துல வெச்சிருக்க மாட்டாங்களானு தோணும். சத்தியமா சொல்றேன் மேடம், அவங்களுக்குத் தங்கச்சியா நான் பொறந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்! பொறக்கலையே… அவங்க யாரோ, நான் யாரோதானே?”
சென்னையில் கிருஷ்ணவேணி வீட்டுக்குச் செல்வதற்குத்தான் தாமினிக்கு விருப்பம். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை வேறு மாதிரியாக ஆகிவிட்டதே!
“சொன்னாப் புரிஞ்சுக்கோம்மா. நீ கிருஷ்ணவேணியோடு போகப்போறேன்னதும் நான் ‘ஓகே’தானே சொன்னேன். அதுக்கான வாய்ப்பு அமையலே; அதுக்கு நாம என்ன பண்ண முடியும், சொல்லு! திருச்சூர் கீதா ஆன்ட்டி ரொம்ப நல்லவங்க. நீ குழந்தையா இருக்கும்போது எப்பவும் அவங்க மடியிலதான் இருப்பே. உன்னை இறக்கிவிட மனசு வராம இடுப்புல வெச்சுக்கிட்டே சமையல்லேர்ந்து எல்லா வேலையும் பார்ப்பாங்க. உங்கம்மாவுக்குப் பிரசவம் ஆனப்போ, உன்னை முதன்முதல்ல நர்ஸ் கையிலேர்ந்து அவங்கதான் வாங்கிக்கிட்டாங்க. இப்போ இத்தனை வருஷத்துக்குப் பிறகு டீன் ஏஜ் பெண்ணா உன்னைப் பார்க்கிறதுக்கு அவங்க அவ்ளோ ஆர்வமா இருக்காங்க. வேற யோசனை எதுவும் பண்ணாம, மனசைப் போட்டு உழப்பிக்காம அங்கே போய் இரு. ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ… இந்த லாக்டவுனெல்லாம் முடிஞ்சு பப்ளிக் டிரான்ஸ்போர்ட் மறுபடி ரன் ஆகுறப்போ நானே வந்து உன்னை டெல்லிக்கு அழைச்சிட்டு வரேன். அதுவரைக்கும் கீதா ஆன்ட்டி வீட்ல நிம்மதியா இரு. அங்கே உனக்கு எந்தக் குறைச்சலும் இருக்காது. ஜாம் ஜாம்னு ராணி மாதிரி பார்த்துப்பாங்க உன்னை!”
அப்பா தீர்மானமாகச் சொல்லிவிட்ட பிறகு, தாமினிக்கும் மேற்கொண்டு வாதிடத் தோன்றவில்லை.
பழைய நினைவுகளிலிருந்து மீண்டு, ஜன்னல் வழியே பார்த்தபோது, கார் ஒரு பெட்ரோல் பங்க்கில் நின்றிருப்பது தெரிந்தது. பெட்ரோல் பங்க் ஆசாமி திலீப்புக்குத் தெரிந்தவன்போல. சிரித்துப் பேசியபடியே காருக்குப் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தான்.
“எவ்ளோ லிட்டர் போட?”
“டாங்க்கை ஃபுல் பண்ணிடுப்பா!”
“என்ன ஸுஹ்ரத்து… லாங் சவாரியா?” என்றபடி காருள்ளிருந்த தாமினியைப் பார்த்தான்.
“சவாரியெல்லாம் ஒண்ணும் இல்லப்பா. மாமியார் தவறிட்டாங்க. அதான் போயிட்டிருக்கேன். இது தெரிஞ்ச பொண்ணு. வழியில திருச்சூர்ல இறக்கிவிட்டுட்டு, அப்படியே கோயம்புத்தூர் ரூட்டைப் பிடிச்சுப் போயிடுவேன்…”
“அடடா… உன் வொய்ஃபும் குழந்தையும் இப்ப அங்கதானே இருக்காங்க?”
“ஆமாம். வரும்போது அவங்களையும் கூட்டிட்டு வந்துடுவேன்.”
“நீ போய்ச் சேர்ற வரைக்கும் பாடியை வெச்சிருப்பாங்களா?”
“வெச்சிருக்காம? அவங்களுக்கு இருக்கிறதே நான் ஒரு மருமகன்தான். அதனால கண்டிப்பா வெச்சிருப்பாங்க. நாளைக்குதான் கிரிமேஷன்னு மச்சான் சொன்னான்.”
“எப்படியும் நைட் எட்டு மணிக்குள்ள நீ சென்னை போயிடுவேல்ல…?”
சட்டென்று தூக்கிவாரிப் போட்டாற்போல் அவர்களைப் பார்த்தாள் தாமினி. ‘இந்த கார் இப்போது என்னைத் திருச்சூர்ல இறக்கி விட்டுட்டு, கிருஷ் அக்கா இருக்கிற சென்னைக்குதான் போகுதா?’
காலை 8 மணி. சென்னை, அசோக் நகர்.
சுவரோரமாக உட்கார்ந்துகொண்டிருந்த கிருஷ்ணவேணி, அப்படியே மயங்கிச் சரிந்தாள். அடுத்த சில விநாடிகளில் அவளின் உடல் வலிப்பு வந்தது போன்று விலுக் விலுக் என்று இழுக்கத் தொடங்கியது.
(தொடரும்)
0 comments:
Post a Comment