உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, August 03, 2020

தாமினி என்ன ஆனாள்? - 12

தாமினி இந்திக்காரி. பஞ்சாபி மொழியும் அவளுக்கு அத்துப்படி. ஆங்கிலம் ஓரளவுக்குப் பேசுவாள். இங்கே கேரளா வந்த பின்பு மலையாளமும், கிருஷ்ணவேணியுடன் பழகியதில் தமிழும் அரைகுறையாகப் பேசக் கற்றுக் கொண்டாள். ஆனால், இப்போது சங்கரநாராயணன் படபடவென்று பொரிந்து தள்ளியதில், அவர் ஏதோ கடுங்கோபத்தில் இருக்கிறார் என்று மட்டும் புரிந்ததே தவிர, அவர் சொன்னதில் ஒரு அட்சரம்கூடப் புரியவில்லை அவளுக்கு.

அவளுக்கு இப்போது அவந்திகாவை விட்டால் வேறு வழியில்லை என்று தோன்றியது. ‘கால்’ செய்தாள்.

“மேடம், கிருஷ் அக்கா  ஃபோன் ஸ்விச்டு ஆஃபா இருக்கு. அவங்க அப்பாவுக்கு போன் பண்ணேன். என்னவோ கோபமா பேசி வெச்சுட்டார். நீங்க கொஞ்சம் அவரோட பேச முடியுமா, ப்ளீஸ்!

“சரிம்மா, ட்ரை பண்றேன்.  நீ போனை வை” என்ற அவந்திகா, லைனை ‘கட்’ செய்துவிட்டு, சங்கரநாராயணனின் மொபைலுக்குத் தொடர்புகொண்டாள். அதிசயமாக உடனே லைன் கிடைத்து, இரண்டாவது ரிங்கிலேயே எடுக்கவும் செய்தார்.

“ஹலோ சார், நான் அவந்திகா சோப்ரா பேசறேன். தன்வந்திரி வைத்தியசாலாவில் யோகா டீச்சர்.

“வணக்கம்மா. நானே இப்ப உங்களோட பேசணும்னு நினைச்சிட்டிருந்தேன். மேனேஜர் உங்க நம்பர் அனுப்பியிருந்தார். நேத்தெல்லாம் ட்ரை பண்ணேன். கிடைக்கவே இல்லை. தாமினியை திருச்சூர் அனுப்பிட்டீங்களா? அவங்க ரிலேஷன் நம்பர் இருந்தா கொஞ்சம் வேணுமே?

“தரேன் சார். அதுக்கு முன்னே ஒரு விஷயம். தாமினி இப்போ சென்னைக்குதான் வந்திட்டிருக்கா…”

சில்லென்று முகத்தில் குளிர்காற்று வீசியது மாதிரி இருந்தது சங்கரநாராயணனுக்கு.

“என்ன மேடம், தாமினி இங்க வந்திட்டிருக்காளா? எப்படி, யார் கூட..?

அவந்திகா நேற்றும் இன்றும் நடந்தவற்றைச் சுருக்கமாக அவருக்கு விளக்கினாள்.

“தாமினி இப்போ ரெண்டு மூணு தடவை உங்களுக்கு போன் பண்ணினாளாம். ‘ஆனா, கட்டாயிடுச்சு மேடம்’னா. அதான், நான் பண்றேன். நீங்க உடனே அவளுக்கு உங்களோட அட்ரஸை எஸ்.எம்.எஸ். பண்ணிடறீங்களா?

“என்னது… தாமினி எனக்கு போன் பண்ணாளா? எது, ட்ரிபிள் டூன்னு முடியுமே, அந்த நம்பரா? , காட்! என்று நெற்றியில் தட்டிக்கொண்டார் சங்கரநாராயணன்.

“என்ன சார்…”

“இல்லம்மா. இங்க ஒரு பிரச்னை. அதனால யார் என்னனுகூடக் கேட்டுக்காம கடுமையா திட்டி வெச்சுட்டேன். பாவம் குழந்தை…”

“என்ன பிரச்னை? கிருஷ்ணவேணி பத்திரமா வந்து சேர்ந்துட்டாளில்லையா..?

“வந்தாச்சும்மா. வந்ததுலேர்ந்து தாமினி, தாமினின்னு அனத்திட்டிருக்கா. இன்னிக்குக் காலையில அவளுக்கு ஃபிட் மாதிரி வந்து, டாக்டர் இப்பத்தான் ஊசி போட்டுட்டுப் போயிருக்கார். அந்த ஒரு குழப்பத்துலதான், அனானிமஸ் கால் வரவும், என்ன ஏதுன்னு கேட்டுக்காம கடுப்பா பேசி வெச்சுட்டேன். ஐயம் ஸாரி… இதோ, இப்ப அட்ரஸை அனுப்பிட்டு, அவளோட பேசிடறேன். இன் ஃபேக்ட், நானே உங்க கிட்ட அவ நம்பரைக் கேட்டு வாங்கிப் பேசணும்னு இருந்தேன்…”

“என்ன விஷயம் சார்?

“இல்ல… அவ தன்னோட ரிலேஷன் வீட்டுக்குப் போறதா இருந்தாளாம். அதான், அவளுக்கு இங்க வர விருப்பமானு கேக்கலாம்னு…”

“விருப்பமா… நீங்க வேற… நேத்திலேர்ந்து கிருஷ் அக்கா, கிருஷ் அக்கானு துடியா துடிச்சிட்டிருக்கா! பாருங்களேன், நீங்க கூப்பிடறதுக்கு முன்னால அவளாவே அங்கதான் போவேன்னு பிடிவாதம் பண்ணி வந்துட்டிருக்கா.

“அவளுக்கும்கூட மெடிக்கல் ரிப்போர்ட், -பாஸ்னு எல்லாத்தையும் ரெடி பண்ணி வெச்சிருக்கேன். சரி, இதெல்லாம் இல்லாம அவ எப்படி இங்கே வர முடியும்?

“அதை திலீப் பார்த்துக்கறேன்னுட்டான். அவன் நம்பரையும் இப்ப உங்களுக்கு அனுப்பறேன். முடிஞ்சா அவனோடயும் பேசிடுங்க” என்ற அவந்திகா இருவரின் மொபைல் எண்களையும் அவருக்கு அனுப்பினாள்.

அடுத்த சில நொடிகளில் தாமினியின் மொபைல் ஒலித்தது. எடுத்து “ஹலோ” என்றாள். “தாமினீ…” என்று நீளமான, தழுதழுத்த குரல் ஒலித்தது.

“அங்கிள்… கிருஷ் அக்கா எப்படி இருக்காங்க அங்கிள்? அவங்க கிட்ட போனைக் கொடுங்களேன்…” என்றாள் தாமினி.

“அவ தூங்கிட்டிருக்காம்மா…” என்றவர், காலையில் நடந்த அமர்க்களத்தையும் டாக்டர் வந்துபோனதையும் சொன்னார். “ரொம்ப ஸாரிம்மா… அப்ப இருந்த குழப்பத்துல ‘கால்’ பண்ணினது நீதான்னு தெரியாம கோபமா பேசி வெச்சிட்டேன். நீயும் எனக்கு ஒரு குழந்தைதாம்மா! அட்ரஸ் அனுப்பறேன். பத்திரமா வந்து சேரு. டிரைவர்கிட்ட போனை ஒரு நிமிஷம் கொடேன்” என்றார். கொடுத்தாள்.

“திலீப், வழியில செக்கிங் இருக்குமே… என்ன பண்ணப்போறீங்க? நான் அவளுக்கு வேண்டிய டாகுமென்ட்ஸெல்லாம் ரெடி பண்ணி வெச்சிருக்கேன். எதுக்கும் தேவைப்படலாம், உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். இது உங்க வாட்ஸப் நம்பர்தானே?

“ஆமாம் சார், அனுப்புங்க. தேவைன்னா யூஸ் பண்ணிக்கிறேன்” என்றான் திலீப்.

மாலை மணி 3.

கிருஷ்ணவேணி மெல்லக் கண்களைத் திறந்தாள்.

“கண்ணம்மா… உனக்கு ஒரு குட் நியூஸ்… தாமினி இங்க வந்துட்டிருக்கா. இன்னும்  அஞ்சு மணி நேரத்துல அவ இங்க உன்னோட இருப்பா” என்றார் சங்கரநாராயணன்.

அவ்வளவுதான்… துள்ளி எழுந்து உட்கார்ந்தாள் கிருஷ்ணவேணி. பாய்ந்து வந்து அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

“நெஜம்மாவாப்பா… தாமினி இங்க வந்துட்டிருக்காளா? அவளோட பேசினீங்களா? என்று பரபரத்தாள்.

“ஆமாம்மா. அவந்திகா மேடம் தனக்குத் தெரிஞ்ச ஒருத்தரோடு, கார்ல அவளை அனுப்பிவெச்சிருக்காங்க. அநேகமா இப்ப அவங்க திருச்சியைத் தாண்டி வந்துட்டிருப்பாங்க. பேசறியா அவ கிட்ட..? என்று தன் மொபைலில் தாமினி எண்ணுக்கு டயல் செய்தார். எதிர்முனை எடுத்ததும், “கொஞ்சம் இரும்மா, உன் அக்கா கிட்ட தரேன்” என்று மொபைலை கிருஷ்ணவேணியிடம் கொடுத்தார்.

“அக்கா…” என்று தாமினியின் குரல் காதில் விழுந்த மாத்திரத்தில் கிருஷ்ணவேணியின் கண்கள் உடைப்பெடுத்துக்கொண்டதுபோல் நீரை அருவியாய் வழியவிட்டன. பேச இயலாமல் தத்தளித்தாள்.

“அக்கா… அக்கா… நான் தாமினி பேசறேன். கேக்குதா? ‘குட்டிப் பிசாசே’ன்னு கொஞ்சுவீங்களே, அந்த தாமினிதான் பேசறேங்க்கா..!

“தாமினி… தாமினி…” என்று தழுதழுத்தாளே தவிர, அதைத் தாண்டி வேறு வார்த்தைகள் வரவில்லை கிருஷ்ணவேணிக்கு.

“அக்கா… என்ன இது, எனக்குத் தைரியம் சொல்லிட்டு நீங்க ஏன் இப்படி… அங்கிள் எல்லாம் சொன்னாரு. உடம்பைப் பார்த்துக்கோங்கக்கா. நீங்க இப்படி மயங்கி மயங்கி விழுந்தீங்கன்னா, அப்புறம் உங்க மடியில நான் எப்படிப் படுத்துக்கறதாம்?

“ஸாரிடி… இரக்கமே இல்லாம உன்னை விட்டுட்டு வந்துட்டேன். இந்த ராட்சசியை எதுக்குடி பார்க்கணும்னு வரே! உன் அன்புக்கெல்லாம் நான் லாயக்கே இல்லடி! சனியன் ஒழிஞ்சுதுன்னு தலைமுழுகிட்டு, நீ உன் அங்கிள் வீட்டுல போய் இருப்பியா…”

“அங்கிள் வீட்டுக்குதான் இப்போ வந்துட்டிருக்கேன்…” என்று தாமினி ஏதோ சொல்லத் தொடங்குவதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்து இரண்டு மூன்று தடவை முயன்றாள் தாமினி. கிருஷ்ணவேணியும் முயன்றுகொண்டிருந்தாள். இணைப்பு கிடைக்கவில்லை.

என்றாலும், சற்று நேரம் பேசிக்கொண்டதில் அன்பு உள்ளங்கள் இரண்டும் சற்றுக் குளிர்ந்து போயிருந்தன. கிருஷ்ணவேணியின் மனசுக்குள் வீசிக்கொண்டிருந்த சூறாவளி கரையைக் கடந்ததில், நடுங்கிக்கொண்டிருந்த அவளின் உடம்பு  ஒரு நிதானத்துக்கு  வந்திருந்தது. சோர்வு அகன்று, கொஞ்சம் தெம்பும் பிறந்திருந்தது. உற்சாகமாக எழுந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உடனடியாகச் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தொடங்கினாள்.

“அம்மா… அவளுக்குப் ‘பராந்த்தா’ன்னா ரொம்பப் பிடிக்கும். பொட்டேட்டோ, காலிஃப்ளவர் எல்லாம் போட்டுப் பராந்த்தா பண்ணிடு. முட்டை இருந்தாலும் சேர்த்துக்கோ. சைட் டிஷ்ஷுக்கு குருமா பண்ணிடு. ஒரு வெட்டு வெட்டுவா!

“அப்பா, மேலே லாஃப்ட்டுலேர்ந்து தலகாணி, போர்வையெல்லாம் எடுத்துப் போடுங்கப்பா. எங்களுக்கு முன் ரூமை ஒழிச்சுக் கொடுத்துடுங்க. நானும் அவளும் அந்த ரூம்ல படுத்துக்கறோம். பெட் ஸ்ப்ரெட் இருந்தாலும் எடுத்துப் போடுங்க. மாத்தணும்.

“பாபு, பக்கத்துக் கடைக்குப் போய் பியர்ஸ் சோப்பு இருந்தா வாங்கிட்டு வா. அவ அதைத்தான் தேய்ச்சுக் குளிப்பா. அப்புறம் கோல்கேட் பேஸ்ட்டும் ஒரு டூத் பிரஷ்ஷும் வாங்கிக்க.  அப்படியே பாதாம் மில்க் அல்லது வேற ஏதாவது கூல்டிரிங்க்ஸ் இருந்தாலும் பெரிய பாட்டிலா வாங்கிக்க.

“அவ்வளவுதானா… இன்னும் ஏதாவது விட்டுப் போச்சா? என்றான் பாபு, ஒரு குறும்புப் புன்னகையோடு.

“ஆ… மறந்துட்டேன். பிரெட் பாக்கெட்டும் பீனட் பட்டரும் வாங்கிக்கோ. கடலைமிட்டாய் இருந்தா ஒரு பாக்கெட் வாங்கிக்க.

கிருஷ்ணவேணிக்குள் புகுந்த குதூகலம் அவளை பம்பரமாய் இயக்கியது. தனக்கும் தாமினிக்குமான அறையை அவள் ஒழுங்கு செய்யத் தொடங்கினாள்.

மாலை 7 மணிக்கெல்லாம் அவர்கள் வந்துவிட்டார்கள். வாசலில் கார் சத்தம் கேட்டதும், துள்ளியெழுந்து ஓடினாள் கிருஷ்ணவேணி. காரிலிருந்து இறங்கிய தாமினியும் பசுவைக் கண்ட கன்றுக்குட்டி போல ஓடி வந்து கிருஷ்ணவேணியை இறுகக் கட்டிக்கொண்டாள்.

“சார், அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிறேன்” என்றான் திலீப்.

“இருப்பா” என்றபடி, சங்கரநாராயணன் உள்ளே போய் தன் கேஷ்பேகிலிருந்து பத்தாயிரம் ரூபாய் எடுத்துவந்து அவனிடம் நீட்டினார்.

“ஐயோ, இது எதுக்கு? என்று கைகளைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான் திலீப். “சார், நான் என் பர்சனல் விஷயமா இங்கே வந்தேன். அப்படியே, மேடம் சொன்னாங்களேன்னு இந்தப் பொண்ணையும் அழைச்சுட்டு வந்தேன், அவ்வளவுதான்! உங்ககிட்ட பணம் வாங்கினது தெரிஞ்சா மேடம் என்னைக் கொன்னே போட்டுடுவாங்க” என்று கிளம்ப முற்பட்டான்.

“இருப்பா. என்ன இருந்தாலும் இந்தப் பொண்ணைப் பொறுப்பா கொண்டு வந்து சேர்த்திருக்கே. உண்மையில் எனக்கு நீ எவ்வளவு உபகாரம் பண்ணியிருக்கேன்னு உனக்குத் தெரியாது. என் மனச் சாந்திக்காக இதை நீ வாங்கிட்டுதான் ஆகணும்” என்று அவன் கைகளை இழுத்துப் பணத்தைத் திணித்தார். எண்ணிப் பார்த்துவிட்டு, “சரி, உங்க திருப்திக்காக இதை மட்டும் எடுத்துக்கறேன். இதுக்கே மேடம் என்ன சொல்லப்போறாங்களோ…” என்றபடி ஐயாயிரம் ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டுவிட்டு, மீதியை அவர் கைகளில் தந்துவிட்டுக் கிளம்பினான்  திலீப்.

“தாமினி, உனக்கு என் மேல கோபமில்லையே? சத்தியம் பண்ணு” என்று கை நீட்டினாள் கிருஷ்ணவேணி.

“ஐயோ… இப்ப நீங்கதான் குழந்தையாயிட்டீங்க! உங்க மேல எனக்கு எதுக்குக்கா கோபம் வரப்போகுது… நீங்க என்ன வேணுன்ட்டா என்னை விட்டுட்டு வந்தீங்க… அந்த டிரைவர்கிட்ட எனக்காக எவ்ளோ வாக்குவாதம் பண்ணீங்க…”

“இல்லடி, உன்னை நான் அப்படி அம்போனு விட்டுட்டு வந்திருக்கக் கூடாது. உனக்கு ஒரு ஏற்பாடு பண்ணாம அங்கிருந்து நான் கிளம்பியிருக்கக் கூடாது. அந்த மேனேஜர் மட்டும் உன்னை அழைச்சுட்டுப் போய் அவந்திகா மேடம் வீட்டுல விட்டிருக்கலைன்னா உன் நிலமை என்னாகியிருக்கும்னு யோசிச்சுப் பாரு. சும்மாவே இருட்டைக் கண்டு பயப்படறவ நீ. அவ்ளோ பெரிய இடத்துல ஒரு காக்கா இல்லாம, நீ மட்டும் தனியா… ஐயோ, நினைச்சுப் பார்க்கவே பயங்கரமா இருக்கே! இப்ப வாய் கிழியப் பேசறேன். அப்ப இதைப் பத்திக் கொஞ்சமாச்சும் யோசிச்சனா? அந்த செக்யூரிட்டி கிட்ட கேட்டிருந்தா அவந்திகா மேடத்தின் போன் நம்பர் கொடுத்திருக்கப் போறார். நானே அவங்க கிட்ட பேசி விஷயத்தைச் சொல்லி, உன்னை அந்த கார்லேயே கொண்டு வந்து பத்திரமா அவங்க வீட்டுல விட்டுட்டு வந்திருக்கலாமே? செய்யலியே… செய்யத் தோணலியே… ஏன், அவ்வளவு சுயநலம். நாம எப்படியாவது இங்கிருந்து தப்பிச்சா போதும்கிற சுயநலம். யார் எக்கேடு கெட்டுப் போனா என்ன, நாம நல்லாருந்தா போதும்கிற சுயநலம்… என்னை மன்னிச்சுடுடீ” என்றபடி, தாமினியின் கைகளை எடுத்துத் தன் கன்னங்களில் பட்பட்டென்று அடித்துக் கொண்டாள் கிருஷ்ணவேணி.

“அக்கா… என்னக்கா… உங்க மனசு எனக்குத் தெரியாதா? நீங்க இப்படி ஃபீல் பண்ணுவீங்கன்னுதான் அடம் பிடிச்சு இங்கே வந்திருக்கேன். இப்பவும் பழசையே நினைச்சு அழுதிட்டிருந்தா எப்படி? பாருங்க, நீங்க குழந்தையாயிட்டீங்க. நான் என்னவோ பெரிய மனுஷி மாதிரி உங்களுக்கு ஆறுதல் சொல்லிட்டிருக்கேன். ம்… படுங்க” என்றபடி, கிருஷ்ணவேணியைத் தன் மடியில் தலைவைத்துப் படுக்கச் செய்தாள் தாமினி.

ஓர் அன்னையின் அரவணைப்போடு அவளின் கைகள் கிருஷ்ணவேணியின் முதுகை மெதுவாகத் தட்டிக்கொண்டிருக்க, சின்னக் குழந்தை போல் விசும்பிக்கொண்டிருந்தது அந்தப் பெரிய குழந்தை!

(நிறைவடைந்தது)


விடைபெறுகிறார்கள் தாமினியும் கிருஷ்ணவேணியும்!

னைவருக்கும் வணக்கம். ‘தாமினி என்ன ஆனாள்? என்ற தொடரை எழுதுவதற்கு முன், தாமினி என்ன ஆனாள் என்று நான் யோசிக்கக்கூட இல்லை. திரு.திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் ‘உடனே ஒரு கதை அனுப்புங்கள்’ என்றார். ‘எத்தனை நாள்களுக்குள் வேண்டும்? என்றெல்லாம் கேட்காமல், அன்றைய தினமே ஒரு கதையை எழுதி, கையோடு அவரின் இமெயிலுக்கு அனுப்பிவைத்தேன். கூடவே, ‘இதை டைப் செய்து முடித்த கையோடு அப்படியே உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். நீங்கள் சொன்ன அளவைவிட அதிக நீளமாகிவிட்டது கதை. இருப்பினும், இந்தக் கதையை நீங்கள் படித்துப் பார்த்து, ஏதேனும் திருத்தங்கள் சொன்னால் செய்து, நீளத்தையும் குறைத்து அனுப்புகிறேன்’ என்று ஒரு கடிதமும் அனுப்பியிருந்தேன். ஆனால், அவர் அந்தக் கதையை ஒரு வரிகூடக் குறைக்காமல் அப்படியே ‘அமுதசுரபி’யில் பிரசுரித்திருந்தார். என் எழுத்துக்கு அவர் அளித்த சான்றிதழ் போன்று அந்த அங்கீகாரம் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அந்தக் கதைதான் ‘ஊரடங்கு’.

‘லாக்டவுன்’ சமயமாக இருப்பதால், அதை மையமாக வைத்துக் கதை எழுத எண்ணினேன். ஒரு பெண் கேரளாவில் ஒரு புதிய இடத்தில் போய் மாட்டிக்கொண்டு, சென்னை திரும்ப வழியில்லாமல் தவிக்கும் அந்தப் போராட்டமே கதைக் களன். கதையின் இறுதியில் ஓர் அதிர்ச்சி மதிப்புக்காக, நெருங்கிப் பழகிய ஒரு சிநேகிதியை அவள் அங்கேயே விட்டு வர நேர்கிறது என்பதாகக் கதையை முடித்திருந்தேன்.  அதைத் தாண்டி அந்தப் பெண்ணைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை.

கதையைப் படித்த வாசகர்கள் பலர் (என் அம்மா, தம்பி உள்பட), ‘தாமினி பாவம்; அவளை விட்டுவிட்டு வந்த கிருஷ்ணவேணி சுயநலக்காரி. அவள் அப்படி வந்திருக்கக்கூடாது’ என்பதாகத்தான் கருத்து சொன்னார்கள். கிருஷ்ணவேணி மீது அவர்களுக்கு ஒரு கோபம் இருந்தது. ஆனால், ஜி..பிரபா அவர்கள் வேறு ஒரு கோணத்தில் கருத்து தெரிவித்திருந்தார். ‘உண்மையில் கிருஷ்ணவேணிதான் பாவம். இந்தக் குற்ற உணர்ச்சி அவளை வாழ்நாளெல்லாம் கொல்லுமே? என்று குறிப்பிட்டிருந்தார். கூடவே, “கிருஷ்ணவேணி மீண்டும் தாமினியைச் சந்திக்கிற மாதிரி ஒரு கதை எழுதுங்களேன்” என்றும் சொன்னார். அந்த யோசனை விறுவிறுவென என்னுள் இறங்கி வேலை செய்தது.

பொதுவாக, கதைக்கு நான் ரொம்பவே மெனக்கிடுகிறவன் கிடையாது. என்ன மனசில் தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதுவதுதான் என் பாணி. அடிப்படையான ஒரு ஒன்லைன் மட்டும் உருவாகியிருக்கும். எழுத எழுதத்தான் அதற்கான சம்பவங்கள் விரியும். இறுதிக்கட்டமும்கூட எழுதிய பின்புதான் எனக்கே தெரியவரும். உதாரணமாக, ‘ஊரடங்கு’ என்பதுதான் அந்தக் கதைக்கு நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட அடிப்படை ஒன்லைன். அந்தக் கதையில் தாமினி என்கிற கேரக்டர்கூட இடையில் வந்து புகுந்துகொண்டதுதான்; அவளை விட்டுவிட்டு கிருஷ்ணவேணி மட்டும் காரில் கிளம்புகிற ஸீனும் கதையை முடிக்கும்போது அதுவாக அமைந்ததுதான்.

ஆனால், ‘தாமினி என்ன ஆனாள்? தொடரைப் பொறுத்தவரை, ‘தாமினி வந்து கிருஷ்ணவேணியைச் சந்திக்கிறாள்’ என்பதுதான் நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஒன்லைன். மற்றபடி சம்பவங்கள் யாவும் அதன்போக்கிலேயே நிகழ்ந்தன. முதல் நாள் மாலை 3:30 மணிக்கு கிருஷ்ணவேணி தாமினியை விட்டுவிட்டுக் கிளம்புகிறாள். மறுநாள் மாலை 7:30 மணிக்கு மீண்டும் இருவரும் சந்திக்கிறார்கள். ஆக, இடையில் 28 மணி நேரமே இடைவெளி. தொடர்புக்கு செல்போன் மட்டுமே!

தாமினி கிளம்பி வந்து கிருஷ்ணவேணியைப் பார்ப்பதற்குள் என்னவெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதாக, அந்த நிகழ்வு நிஜமாகவே கண்ணெதிரே நடக்கிற மாதிரி அனுபவித்து எழுதினேன். தாமினியைப் பிரிந்து கிருஷ்ணவேணி புலம்பும் இடங்களில் எல்லாம் நானும் புலம்பினேன்; அவள் அழுதபோதெல்லாம் நானும் அழுதேன். அதேபோல், அவந்திகா மேடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் தாமினி தவித்தபோது நானும் தவித்தேன். இந்த உணர்வுகளை  அப்படியப்படியே எழுதிக்கொண்டு போனதில்… ஆச்சரியம், காலையில் தொடங்கி இரவு எட்டு மணிக்குள்  ‘தாமினி என்ன ஆனாள்? மொத்தக் கதையையுமே டைப் செய்து முடித்துவிட்டேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயமாக ‘சங்கப்பலகையில்’ பதிவேற்றும்போது மட்டும் அந்தப் பகுதியைப் படித்துப் பார்த்து, எழுத்துப்பிழை இருந்தால் திருத்தினேன்; ஒரு சொல்லுக்குப் பதில் இன்னும் வீர்யமான சொல் தோன்றினால் மாற்றினேன்.

என்னுடைய சிறுகதைத் தொகுதியில் குறிப்பிட்டுள்ளதைத்தான் நான் இங்கேயும் குறிப்பிட விரும்புகிறேன். அசோகமித்திரன், ஜெயகாந்தன், சுஜாதா போன்ற எழுத்துலக ஜாம்பவான்களுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கெல்லாம் நான் சிறப்பான கதைகள் எதுவும் இதுவரை எழுதிவிடவில்லை. ‘மெசேஜ்’ என்று எதையும் என் கதையில் வைத்ததில்லை. எல்லாமே நான் அனுபவித்த நிகழ்வுகளை எனக்குத் தெரிந்த மொழிநடையில், இயல்பாக, எளிமையாக எழுதிக்கொண்டுபோன கதைகள்தாம். இந்த ‘தாமினி என்ன ஆனாள்? தொடரும் அப்படிப்பட்டதுதான்.

இதை எத்தனை பேர் படித்தீர்கள் என்று தெரியவில்லை; படித்தவர்களில் எத்தனை பேர் ரசித்தீர்கள் என்று தெரியவில்லை. ‘இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குகிற கதை’யாக, நாலைந்து அத்தியாயங்கள் என்பது போக, முழுசாகப் பன்னிரண்டு அத்தியாயங்களை இந்தக் கதை எடுத்துக்கொண்டது. இது என் குற்றமில்லை.

மற்றபடி, இதை எழுதத் தூண்டிய ஜி..பிரபாவுக்கும்,  ஒவ்வொரு அத்தியாயத்தையும் உடனுக்குடன் படித்து லைக்கும் கமென்ட்டும் போட்டு ஊக்குவித்த ‘சங்கப்பலகை’ நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

மிக்க அன்புடன்,  

ரவிபிரகாஷ்.

 

 

0 comments: