உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, December 28, 2010

பொக்கிஷம் வேணுமா?

“எனது ‘உங்கள் ரசிகன்’ மற்றும் ‘என் டயரி’ வலைப்பூக்களைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கு இந்த ஆண்டு முடிய அவ்வப்போது ஏதேனும் போட்டிகள் அறிவித்துப் புத்தகப் பரிசுகள் தர எண்ணியுள்ளேன். குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒன்று என்ற அளவிலாவது பதினைந்து புத்தகங்கள் வரை அன்பளிக்க ஆசை. பார்க்கலாம்!” என இந்த ஆண்டு ஜனவரியில், எனது ‘என் டயரி’ வலைப்பூவில் குறிப்பிட்டிருந்தேன்.

எனது பொன்மொழிகள் புத்தகத்துக்கு ஒரு பெயர் வைக்கச் சொல்லி நான் வைத்த முதல் போட்டியின் முடிவுக்கான பதிவில்தான் அதுபோல் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், 15 என்ற எண்ணிக்கையையெல்லாம் தாண்டி, 300 புத்தகங்களாவது பரிசளித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

சமீபத்தில், என் வலைப்பூ வாசகர் திரு.கணேஷ்ராஜா, நான் போட்டி வைத்துப் புத்தகம் பரிசளித்து வெகு காலமாகிவிட்டது என்று ஞாபகமூட்டியிருந்தார். அவரது பின்னூட்டத்திற்கான என் பதிலில், “இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக ஒரு போட்டி வைத்துப் புத்தகப் பரிசளிக்கிறேன். நான் பரிசளிக்கப்போகிற அந்தப் புத்தகம் மிக அற்புதமான புத்தகம். விலை மதிப்பற்றது. விறுவிறுவெனத் தயாராகி வருகிறது. ஜனவரியில் விற்பனைக்கு வரும். மற்ற விவரங்களைப் பின்னர் தெரிவிக்கிறேன். முடிந்தால், நான் பரிசளிக்க எண்ணியுள்ள அந்தப் புத்தகம் என்னவாக இருக்கும் என்று யூகித்து, என் வலைப்பூ நேயர்கள் எனக்குப் பின்னூட்டங்கள் அனுப்பலாம். சரியாக யூகித்து எழுதும் முதல் ஐந்து பேருக்கு வேறு ஒரு குட்டிப் புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்” என்று கிளைப் போட்டி ஒன்றையும் அறிவித்திருந்தேன்.

அதற்கு சொக்கன், கிருஷ்குமார், எஸ்.ராஜேஸ்வரி, கணேஷ்ராஜா ஆகிய நாலு பேர் மட்டுமே சரியான விடை அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு தலா ஒரு பாக்கெட் சைஸ் விகடன் பிரசுர புத்தகம் (குறைந்தபட்சம் ரூ.50 விலையுள்ளது) விரைவில் பரிசாக அனுப்பி வைக்கப்படும். நால்வரும் தயவுசெய்து தங்கள் முகவரிகளை எனக்கு ஈ-மெயிலில் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

விறுவிறுவெனத் தயாராகி வரும் ஆனந்த விகடன் காலப் பெட்டகம் (1926 முதல் 2000 வரையிலான விகடன் சரித்திரம்) புத்தகம்தான் நான் பரிசளிக்க எண்ணியுள்ள அந்தப் புத்தகம் என்பதே சரியான விடை.

தொகுப்பாசிரியர் என்கிற முறையில் அந்தப் புத்தகத்திற்கான முன்னுரையை இன்று எழுதிக் கொடுத்தேன். விகடன் பிரசுரத்தாரால் அதில் ஒருக்கால் சின்னச் சின்ன வாக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம். மற்றபடி, நான் எழுதிய அந்த முன்னுரையை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

“அதெல்லாம் சரி, போட்டி என்ன ஆயிற்று?” என்று கேட்கிறீர்களா? அது இந்தப் பதிவின் கடைசியில்.

படித்தேன்... சிலிர்த்தேன்... மலைத்தேன்... தொகுத்தேன்..!

டந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நான் நானாகவே இல்லை. காந்திஜியுடன் யாத்திரை போனேன்; காமராஜருடன் அளவளாவினேன்; இந்திரா காந்தியின் இல்லத்தில் தங்கினேன்; காஞ்சிப் பெரியவரின் அருளாசி பெற்றேன்; தந்தை பெரியாரின் அன்புக்குப் பாத்திரமானேன்; பழம்பெரும் இலக்கியவாதிகளைச் சந்தித்தேன்; தியாகராஜ பாகவதருடனும், கே.பி.சுந்தராம்பாளுடனும் உரையாடினேன்; எம்.ஜி.ஆருடன் உணவருந்தினேன்; சிவாஜியின் கை பிடித்து நடந்தேன்; டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி, சாவித்திரி, சரோஜாதேவி எனத் திறமை மிக்க சினிமா தாரகைகள் அத்தனை பேருடனும் கலந்துரையாடினேன்...

''இரு, இரு... ஏதாவது கனவு கினவு கண்டாயா?'' என்கிறீர்களா? இல்லை சுவாமி! அத்தனையும் உண்மை!

கால யந்திரம், கால யந்திரம் என்கிறார்களே, அதெல்லாம் அதீத விஞ்ஞானக் கற்பனை என்றுதான் நான் இத்தனை நாள் நினைத்துக்கொண்டு இருந்தேன். என் நினைப்பைப் பொய்யாக்கிவிட்டது ஆனந்த விகடன்.

'பழைய விகடன் இதழ்களைப் படித்து, அவற்றிலிருந்து இன்றைய இளைய தலைமுறைக்கும் பயன்படக்கூடிய, சுவாரஸ்யமான விஷயங்களை வாராவாரம் தொகுத்துத் தரவேண்டும்' என்கிற, கரும்பு தின்னும் பணி என்னைத் தேடி வந்தது, நான் செய்த பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும்.

2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆனந்த(விகட)ப் பெருங்கடலுக்குள் என் பயணத்தைத் துவக்கினேன். உள்ளே செல்லச் செல்ல, நான் என்னை மறந்தேன்; தன்னை இழந்தேன். எந்த ஆண்டுப் புத்தகங்களைப் புரட்டுகிறேனோ, அந்த ஆண்டில் வாழும் நபராகவே மாறிப்போனேன். மெய்யாகவே கால யந்திரத்தில் பயணம் செய்தேன். ஆரம்பப் பாராவில் சொன்ன அத்தனையும் நான் அனுபவித்த உண்மை!

ஆனந்த விகடன் எனும் அமுதக் கடலுக்குள்தான் எத்தனையெத்தனை ஆச்சரியங்கள்... அற்புதங்கள்..! அங்கே கொட்டிக் கிடக்கும் முத்துப் பரல்களையும், வைரக் கற்களையும், நவரத்தின மாலைகளையும் கண்டு விக்கித்துப் போனேன்; பிரமித்து நின்றேன். இத்தனை வைர வைடூரியங்களில் எதையென்று வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது என்று குழம்பினேன். ஒன்றைப் புரட்டும்போது, 'அடடா! இதை இந்த வாரமே கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்' என்று தோன்றும். இன்னொன்றைப் புரட்டும்போது, 'இதையும் இப்போதே கொடுத்துவிடலாம்' என்று நினைப்பேன்.

தருமர், கர்ணன் இருவரில் யார் பெரிய வள்ளல் என்று ஒரு கேள்வி வந்ததாம். இருவரிடமும் தங்கக் காசுகள் அடங்கிய ஒரு குடத்தைக் கொடுத்து, 'இதை யார் சீக்கிரம் தானம் செய்கிறீர்கள், பார்ப்போம்' என்று ஒரு போட்டி வைத்தாராம் கிருஷ்ண பகவான். தருமர் அந்தக் குடத்தை எடுத்துக்கொண்டு போய், ஆளுக்கொரு தங்கக் காசாக விநியோகம் செய்தார். கர்ணனோ வறியவர் ஒருவரை அழைத்து, 'இந்தா, வைத்துக் கொள்!' என்று அந்தக் குடத்தையே தூக்கிக் கொடுத்துவிட்டாராம்.

ஆனந்த விகடன் இதழ்களைப் படிக்கப் படிக்க, அந்தக் கர்ணனாக நான் ஆகிவிடக் கூடாதா என்கிற பேராசை எழுந்தது.

அதன் விளைவாக... 30-களில், 80-களில், 50-களில், 90-களில் என அங்கொன்றும் இங்கொன்றுமாக விகடனின் வைர மணிகளைப் பொறுக்கியெடுத்து, ‘ஆனந்த விகடன் பொக்கிஷம்’ என்கிற மாலையாகத் தொடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்த நான், பிறகு ஆனந்த விகடனின் முதல் இதழில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டு இதழ்களிலும் உள்ள ரத்தினக் குவியலிலிருந்து கொஞ்சத்தை எடுத்து, 'பொக்கிஷம்' பகுதிக்குள்ளேயே 'காலப் பெட்டகம்' என்னும் தனிப் பகுதியாகத் தொகுத்துக் கொடுத்தேன்.

ஆறு குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் ஒன்று சேர்த்து ஆறுமுகப் பெருமானாக அவதரிக்கச் செய்ததுபோல், தனித் தனித் தொகுப்புகளாகப் பிரிந்து கிடந்த விகடன் காலப் பெட்டகத்தை ஒன்று சேர்த்து 'ஆனந்த விகடன் காலப் பெட்டகம்' என்னும் முழுப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள் விகடன் பிரசுரத்தார்.

1926 முதல் 2000 வரையிலான ஆனந்த விகடனின் பரிணாம வளர்ச்சியை மட்டும் காட்டுகிற தொகுப்பல்ல இது. நாட்டின் அரசியல் மாற்றங்கள், சமூகச் சூழல்கள், மக்களின் மனோபாவங்கள், கலை- இலக்கிய வளர்ச்சிகள் என 75 ஆண்டுக் கால சமுதாயத்தைப் பிரதிபலிக்கிற கண்ணாடியும்கூட!

நான் பயணித்த விகடன் கால யந்திரத்தில் ஏறி, நீங்களும் ஒரு சுற்று வாருங்கள்; அதன் த்ரில்லை உணர்வீர்கள்!

மிக்க அன்புடன்,

ரவிபிரகாஷ்.

*****

இனி, போட்டி!

ரிசையாக ஐந்து வீடுகள் உங்களுக்கு நேர் எதிரே இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு நிறம். அந்த ஐந்து வீடுகளிலும், ஒவ்வொரு வீட்டில் ஒவ்வொரு மாநிலத்தார் வசிக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இசைக் கருவியை வாசிப்பதில் நிபுணர்கள். ஒவ்வொருவரும் காலையில் அருந்தும் பானம் வெவ்வேறு. அவர்கள் அனைவரும் ஆளுக்கொரு பிராணியை வளர்க்கிறார்கள்.

இனி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கவனமாகப் பாருங்கள்.

1. தமிழர் சிவப்பு நிற வீட்டில் வசிக்கிறார்.

2. வட இந்தியர் நாய் வளர்க்கிறார்.

3. பச்சை நிற வீட்டில் வசிப்பவர் காலையில் அருந்துவது காபி.

4. கேரளத்துக்காரர் காலையில் டீ அருந்துவார்.

5. வெள்ளை நிற வீட்டுக்கு அருகில் வலப் பக்கத்தில் (அதாவது, உங்கள் பார்வையில் வலப் பக்கம்) உள்ள வீட்டின் நிறம் பச்சை.

6. வயலின் வாசிப்பவர் ஆடு வளர்க்கிறார்.

7. வீணை வாசிப்பவரின் வீட்டு நிறம் மஞ்சள்.

8. நடு வீட்டில் வசிப்பவர் பால் அருந்துகிறார்.

9. பூனை வளர்க்கப்படும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் மிருதங்கம் வாசிப்பார்.

10. உங்கள் பார்வையில், இடப்பக்கம் உள்ள முதல் வீட்டில் வசிப்பவர் ஆந்திரர்.

11. குதிரை வளர்க்கப்படும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் வீணை வாசிப்பார்.

12. கடம் வாசிப்பவர் பழரசம் அருந்துவார்.

13. கன்னடக்காரருக்கு கஞ்சிரா வாசிக்கத் தெரியும்.

14. ஆந்திரர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டின் நிறம் நீலம்.

எனில், இளநீர் அருந்துபவர் யார்? மாடு வளர்ப்பவர் யார்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில் எழுதும் முதல் நபருக்கு, ஆனந்த விகடன் காலப் பெட்டகம் புத்தகம் தயாரானதும் (சுமார் 350 பக்கம் வரையில் வரக்கூடிய அந்தப் புத்தகத்தின் விலை ஏறத்தாழ ரூ.150 இருக்கலாம்), அதில் ஒரு பிரதியை என் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

ஜனவரி புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பொருட்டு, மேற்படி புத்தகம் அதி விரைவாகத் தயாராகி வருகிறது.

எனவே, ஜனவரி 15-க்குள் வந்து சேரும் விடைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

வாழ்த்துக்கள்!

.


Tuesday, December 21, 2010

வயிற்று வலியால் வந்த விபரீதம்!

யிற்று வலி தொடர்கிறது.

நீண்ட காலமாக எனக்கு இருந்த வயிற்று வலி காரணமாக, என்னுள் ஒரு முன் ஜாக்கிரதைத்தனம் ஏற்பட்டு இருந்தது. ஏதேனும் கல்யாணங்களுக்குச் சென்றால், அந்தக் கல்யாண மண்டபத்தில் டைனிங் ஹால் எங்கே இருக்கிறது என்று பார்ப்பதை விட, டாய்லெட் எங்கே இருக்கிறது, தண்ணீர் வசதி இருக்கிறதா என்று முதல் காரியமாக தேடி வைத்துக் கொள்வேன். அதே போல் சுற்றுலாக்களுக்குச் செல்லும்போது பொட்டானிக்கல் கார்டன், சிம்ஸ் பார்க் போன்ற இடங்களில் கக்கூஸ் வசதி எங்கே இருக்கிறது என்றுதான் முதலில் என் கண்கள் தேடும். இயற்கை உபாதையை அகற்ற இடம் இருக்கிறது என்று தெரிந்த பிறகுதான் இயற்கைக் காட்சிகளில் என் மனம் லயிக்கும். பஸ் பிரயாணம், ரயில் பிரயாணம் மேற்கொள்ளவேண்டியிருந்தால், அதற்குச் சற்று முன்னதாக, வருகிறதோ இல்லையோ, முக்கி முக்கியாவது வயிற்றைக் காலி செய்துவிட்டுத்தான் புறப்படுவேன். இது இன்றைக்கும் என் வழக்கமாகியிருக்கிறது.

நான் சாவி பத்திரிகையில் பணியாற்றிய காலத்திலும் சரி, விகடனில் சேர்ந்து சில வருடங்கள் வரையிலும் சரி... ஓயாத வயிற்று வலி என்னை உபத்திரவம் செய்துகொண்டு இருந்தது. ஒருமுறை பஸ்ஸில் சென்றுகொண்டு இருந்தேன். கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகில் என் வயிறு கடாமுடா செய்யத் தொடங்கிவிட்டது. பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டு இருந்தேன். அவசரமாக டூ பாத்ரூம் போகவேண்டும் என்று வயிறு தகராறு செய்தது. அடக்க அடக்க, எனக்கு மயக்கம் வருகிற மாதிரி ஆகிவிட்டது. மீனாட்சி காலேஜ் வருவதற்கு முன்னதாக ஒரு சிக்னலில் பஸ் நிற்க, சட்டென்று இறங்கிவிட்டேன். அவசரமாக அருகில் இருந்த ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து, நேரே டாய்லெட்டைத் தேடிப் போய் சிரம பரிகாரம் செய்துகொண்டு, ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். இது போல் பல முறை நடந்திருக்கிறது. ஹோட்டல்காரர்களுக்கு, அவர்கள் சுவையாகச் செய்து தரும் டிபன், சாப்பாடு வகையறாக்களுக்கு நன்றி சொல்வதைவிட, இது போன்று டாய்லெட் வசதி ஏற்படுத்தி வைத்து, என் சங்கடம் போக்கியதற்குத்தான் நான் அதிகம் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

1996-ல், ஒரு வயது நிரம்பிய என் மகனுக்குச் சமயபுரத்தில் முடி இறக்குவதற்காக நான் என் மனைவியையும் மூன்று வயதான என் மகளையும் அழைத்துக்கொண்டு, விழுப்புரத்தில் பஸ் ஏறினேன். சமயபுரத்துக்கு டிக்கெட் எடுத்திருந்தேன். பஸ் கிளம்பிச் சென்றுகொண்டு இருக்கும்போது, எது நடக்கக்கூடாது என்று பயந்தேனோ, அது நடந்துவிட்டது.

வயிறு புரட்டத் தொடங்கிவிட்டது. வலி தாங்க முடியவில்லை. கட்டுப்பாடின்றி வெளியே வரத் துடிக்கும் டூ பாத்ரூமை அடக்க அடக்க, என் கண்கள் இருட்டத் தொடங்கின. மயக்கம் வந்தது. வாமிட் வருகிற மாதிரி இருந்தது. கால்கள் பலம் இழந்தன. மூச்சடைக்கிற மாதிரி இருந்தது.

ஊர்களே தென்படாத தேசிய நெடுஞ்சாலையில், பஸ் வேகமாக விரைந்துகொண்டு இருந்தது. என்ன ஊர் கடந்திருக்கிறது, என்ன ஊர் வரப் போகிறது, சமயபுரத்துக்கு இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்று எந்த விவரமும் தெரியவில்லை. யாரையும் கேட்டுத் தெரிந்துகொள்கிற நிலையில்கூட இல்லை நான்.

கொண்டு போயிருந்த என் பையிலிருந்து பர்ஸை எடுத்து, அதிலிருந்து பத்து ரூபாய், ஐம்பது ரூபாய்த் தாள்களை மட்டும் எடுத்துக்கொண்டு, என் சட்டைப் பையில் வைத்துக்கொண்டேன். பர்ஸை மீண்டும் பையிலேயே வைத்தேன். மனைவியிடம், “என்னால தாங்க முடியலை. மயக்கம் வர மாதிரி இருக்கு. நீ குழந்தைகளோடு நேரே சமயபுரம் போய் இறங்கிக் கோயிலுக்குப் போயிடு. நான் அப்புறமா வரேன்” என்றேன். மனைவிக்குக் கொஞ்சம் உதறலாக இருந்தது. தனியாகப் பயணம் செய்து பழக்கப்படாதவள் அவள். ஆனாலும், வேறு வழியில்லை.

நடுவில் ஏதேனும் சின்ன ஊர் வந்தாலும் பரவாயில்லை, இறங்கிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், சோதனையாக பஸ் நிற்காமல் ஓடிக்கொண்டு இருந்ததே தவிர, ஒரு சிற்றூர் கூட வழியில் வரவில்லை. என் பொறுமை எல்லை கடந்தது.

இனி ஒரு கணம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது என்கிற நிலை. அப்போது, வழியில் ஒரு ரயில்வே டிராக் குறுக்கிட்டது. கேட் மூடியிருக்க, பஸ் நின்றது. அவ்வளவுதான்... மனைவியிடம் சொல்லிக்கொண்டு, சட்டென்று பஸ்ஸை விட்டு இறங்கினேன். ஒதுங்க இடம் தேடி நகர்வதற்குள் கேட் திறந்து, பஸ் புறப்பட்டுவிட்டது. என் மனசுக்குள் இனம் புரியாத பதற்றம், படபடப்பு! சிறு குழந்தைகளோடு முதன்முறையாகத் தனியாகப் பயணப்படும் என் மனைவிக்கும் அதைவிட அதிகமான பதற்றமும் படபடப்பும் இருந்திருக்கும் என்பது நிச்சயம். கூடுதலாக என்னைப் பற்றிய கவலை வேறு!

நான் தார்ச் சாலையை விட்டு இறங்கி, வேலிக்காத்தான் செடிகள் நிறைந்திருந்த பகுதியை நோக்கி ஓடினேன். கக்கூஸ் போனால், கழுவத் தண்ணீர் இருக்கிறதா? அப்போது கோடை; வயல்வெளிகள் எல்லாம் வெடித்துக் காணப்பட்டன. தண்ணீர் என்பது பொட்டு கூடக் கண்ணில் தட்டுப்படவே இல்லை. ஆனால், அது இப்போது முக்கியம் இல்லை. முதலில் வயிற்றுச் சுமையை இறக்கியாக வேண்டும்.

செடி, கொடி, புதர்களுக்குள் நடந்து சென்று தோதான இடம் பார்த்து அமர்ந்து, ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். சில நிமிடங்களுக்குப் பிறகு, எழுந்து தண்ணீர் தேடலாம் என்று நினைப்பதற்குள் மீண்டும் வயிற்றைச் சுருட்டி வலி! எழுந்து சற்றுத் தள்ளி நகர்ந்து இன்னொரு இடத்தில் அமர்ந்தேன். இப்படியாக நகர்ந்து நகர்ந்து புதர்களுக்குள்ளே எத்தனை தூரம் சென்றிருப்பேன், எவ்வளவு நேரமாகிறது பஸ்ஸிலிருந்து இறங்கி என்று தெரியவில்லை. எங்கும் ஒரே காடாக, முள்செடிகளாக இருந்தது. நாயோ, பூனையோ செத்த நாற்றம் குப்பென்று எங்கிருந்தோ வீசியது.

வாட்ச் கட்டுகிற பழக்கம் எனக்கு எப்போதும் இல்லை. இன்றைக்குப் போல் கையில் செல்போனும் இல்லை. நடுக்காட்டில் அநாதையாக நின்றேன்.

ஒரு வழியாக வயிறு சமாதானம் ஆனவுடன், தண்ணீர் தேடிக் கிளம்பினேன். முதலில் தார் ரோடு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். ரொம்ப தூரம் உள்ளே வந்துவிட்டேன் போலிருக்கிறது. வழியே புரியவில்லை. கிழக்கு எது, மேற்கு எது என்று தெரியவில்லை. குத்து மதிப்பாக நான் வந்த வழியை மனதில் இருத்தி, கால்களை எட்டிப் போட்டு நடந்தேன். வழியில்...

சற்றுத் தொலைவில், ரத்தக் கறையோடு எதுவோ விழுந்து கிடப்பது போல் இருந்தது. அதை ஒரு சொறி நாய் முகர்ந்துகொண்டு இருந்தது. மனசுக்குள் பயம் வந்தது. மெதுவே அதன் அருகில் நெருங்கினேன். நாய் என்னைப் பார்த்து ஈறு தெரியச் சீறியது. அதைக் கடந்துதான் நான் போக வேண்டும். எப்படி? புரியவில்லை. மனதை திடப்படுத்திக்கொண்டு, அதை இன்னும் சற்று நெருங்கினேன். நாய் கர்ர்... என்று என்னைப் பார்த்து உறுமியது. கீழே கிடந்த காய்ந்த குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டேன். நாய் மெல்ல பின்வாங்கியது.

நான் மெதுவே நடந்தேன். அந்தத் துணிப் பொட்டலத்திலிருந்து ஒரு மனிதக் கால் வெளியே தெரிந்தது. படபடக்கும் நெஞ்சை அடக்கிக்கொண்டு, அதைத் தாண்டி அப்பால் சென்று திரும்பிப் பார்த்தேன். ஐயோ... அந்த பயங்கரத்தை இப்போதும் என்னால் வர்ணிக்க இயலவில்லை. உடம்பெல்லாம் நடுங்குகிறது. அது ஒரு பச்சிளம் குழந்தையின் சடலம். கண்கள் திறந்தபடி இறந்து கிடந்தது அந்தக் குழந்தை. உடம்பெல்லாம் கிழிந்திருந்தது. வயிற்றுக்குள்ளிருந்து குடல், கறுப்பு நாடா போன்று வெளியே வழிந்திருந்தது.

அது இறந்து இரண்டு மூன்று நாட்களாவது ஆகியிருக்கும் என்று தோன்றியது. தப்பான வழியில் தனக்குப் பிறந்த குழந்தையை யாரோ ஒரு ராட்சசி கழுத்தை நெரித்துக் கொன்று, துணியில் சுற்றி, இந்தப் புதரில் வீசிவிட்டுப் போயிருக்க வேண்டும் என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றியது.

விறுவிறுவென்று நடந்து, ஒருவழியாகச் சாலையை அடைந்தேன். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, தார்ச் சாலையிலேயே நடந்தேன். தண்ணீர்... தண்ணீர்... ஊஹூம்! ஒரு பொட்டுத் தண்ணீரைக்கூடக் கண்ணில் காணோம்!

ரொம்ப தூரம் நடந்ததும், சாலையோரம் ஒரு பம்ப் செட் தென்பட்டது. அங்கே போனேன். பம்ப் செட்டுக்கு வெளியில் இருந்த சிமெண்ட் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தேன், தண்ணீர் இருக்கிறதா என்று. இல்லை. காய்ந்து கிடந்தது. சுற்று முற்றும் பார்த்தேன். வயல் வரப்பில் நடந்து கொஞ்ச தூரம் உள்ளே போனேன். நாலு வயல்கள் ஒன்று சேருமிடத்தில் ஒரு சிறு குட்டை போல் தண்ணீர் தேங்கியிருந்தது. அவசரத்துக்கு வேறு வழியில்லை என்று கழுவிக்கொண்டு, மீண்டும் தார்ச் சாலையை அடைந்தேன்.

இனி, சமயபுரம் செல்ல வேண்டும். வழியில் செல்லும் எந்த பஸ்ஸைக் கை காட்டினாலும் நிற்கவில்லை. லாரிகளும்கூட நிற்கவில்லை. விர் விர்ரென்று வேகமாகப் பறந்தன. திருச்சி திக்கில் கால்களை எட்டிப் போட்டு நடந்தேன்.

விழுப்புரத்தில் பஸ் ஏறும்போது, உத்தேசமாக காலை 11 மணி வாக்கில் சமயபுரத்தை அடையலாம் என்று ஒரு கணக்கு வைத்திருந்தேன். குழந்தைகளுடன் என் மனைவி அதே போல் 11 மணிக்கெல்லாம் சமயபுரம் கோயிலை அடைந்திருப்பாள். இப்போது சூரியன் இருக்கும் நிலையைப் பார்த்தால், அநேகமாக மாலை 3 மணியாவது இருக்கும் என்று தோன்றியது. மனைவியும் குழந்தைகளும் ஓட்டலில் ஏதேனும் வாங்கிச் சாப்பிட்டார்களா என்று கவலை வந்தது. என் தீராத வயிற்று வலியை நினைத்து ஆத்திரமாக வந்தது.

கார், லாரி, பஸ் என எந்த வாகனமும் நிற்காத நிலையில், நான் இன்னும் எவ்வளவு தூரம்தான் நடக்க வேண்டியிருக்கும் என்று புரியவில்லை. நடந்துகொண்டே.....ஏஏஏஏஏ.... இருந்தேன். ஒருவர் இருவர் என தூரத்தில் ஒரு சிலர் தட்டுப்பட ஆரம்பித்தார்கள். அருகே நெருங்கியதும், அவர்களிடம் அருகில் என்ன ஊர் இருக்கிறது, அங்கே பஸ் நிற்குமா என்று கேட்டேன். அருகில் உள்ள ஊர் எரையூர் என்று சொன்னதாக ஞாபகம். அங்கே டவுன் பஸ்கள் மட்டும் நிற்கும் என்றார்கள். ‘இங்கிருந்து எரையூர் மூன்று மைல் தூரமாவது இருக்குமே’ என்றார்கள்.

மீண்டும் நடந்தேன். கால்கள் சோர்ந்து போகும் வரையில் நடந்தேன். ஒருவழியாக எரையூர் வந்தது. ஊர் என்றால், உள்ளே திரும்பும் சாலையில் நடக்க வேண்டும். மெயின் ரோட்டில் ஒரு குடிசை மட்டும் இருந்தது. அது ஒரு டீக்கடை. ஓரிருவர் மட்டுமே இருந்தார்கள்.

பஸ்ஸுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன். கண்கள் பூக்க வெகு நேரம் காத்திருந்த பிறகு, ஒரு பஸ் வந்தது. அது பெரம்பலூர் வரையில் மட்டுமே செல்லுகின்ற பஸ். ஏறிக்கொண்டேன். ஏழு ரூபாயோ என்னவோ டிக்கெட் சார்ஜ். அங்கே இறங்கி, மீண்டும் பஸ் பிடித்துச் சமயபுரம் போகவேண்டும். அதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியவில்லையே! அங்கே இவ்வளவு நேரமாக என்னைக் காணாமல் மனைவி தவியாய்த் தவிப்பாளே, பதறுவாளே என்று கவலையாக இருந்தது.

சோதனையாக பஸ் அசைந்து அசைந்து ஆமை போல் நகர்ந்தது. அல்லது, எனக்கிருந்த பதற்றத்தில் அப்படித் தோன்றியதா என்றும் தெரியவில்லை. ஒருவழியாக பெரம்பலூர் வந்தது. நல்லவேளையாக, அங்கிருந்து அப்போதுதான் சமயபுரத்துக்கு ஒரு பஸ் கிளம்பிக்கொண்டே இருந்தது. இறங்கி ஓடிப் போய் அதில் தொற்றிக்கொண்டேன்.

சமயபுரம் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்து, என் மனைவி, குழந்தைகளைத் தேடத் தொடங்கினேன். எங்கேயும் காணோம். ரொம்ப பயமாகிவிட்டது. அங்கிருந்த கோயில் குருக்களிடமும், பூக்கடை, படக் கடை எனக் கோயில் அருகில் இருந்த அனைவரிடமும் அடையாளம் சொல்லி விசாரித்தேன். சிலர் ‘தெரியலையே கண்ணு’ என்றார்கள்; வேறு சிலர், ‘ஆமா! பாத்தாப்லதான் இருக்குது. ஆனா, எங்கே போனாங்கன்னு தெரியலையே!’ என்றார்கள். மணி அப்போது ஆறரை. இருட்டத் தொடங்கியிருந்தது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கால் சலிக்க, கண் சலிக்கத் தேடிவிட்டு, மனைவியும் குழந்தைகளும் கிடைக்காமல், அழுகையும் வேதனையுமாக, பாண்டிச்சேரி அன்னையிடம் அவர்கள் எந்த ஆபத்தும் இல்லாமல் பத்திரமாக இருக்கப் பிரார்த்தித்துக்கொண்டுவிட்டு, ஒரு தீர்மானத்தோடு மீண்டும் பஸ் ஸ்டேண்ட் வந்தேன். திருச்சி பஸ்ஸைப் பிடித்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் சத்திரம் பஸ் ஸ்டேண்டில் போய் இறங்கி, ஓட்டமும் நடையுமாக, திருச்சி மலைக்கோட்டைக்கு எதிரே இருக்கும் பத்தாய்க்கடைத் தெருவுக்குச் சென்றேன்.

அங்கேதான் திருமணத்துக்கு முன்பு, இருபது வருடங்களுக்கு மேலாக என் மனைவியின் குடும்பம் (அப்பா, அம்மா, மூன்று மகள்கள்) வசித்தது. இப்போது அங்கே யாரும் இல்லை என்றாலும், பக்கத்து வீட்டில் அவர்களுக்கு வேண்டப்பட்ட சிநேகிதக் குடும்பத்தார் வசித்தார்கள். தந்தை இல்லாத என் மனைவியின் திருமணத்தை அவர்கள்தான் முன்னின்று நடத்தி வைத்தார்கள்.

அந்த வீட்டை நெருங்கியதுமே, மனைவியின் குரல் என் காதுகளில் தேனாக விழுந்து, வயிற்றில் பாலை வார்த்தது. ஓடிச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அடக்க மாட்டாமல் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்துவிட்டாள் என் மனைவி. குழந்தைகள் எதுவும் புரியாமல் தேமே என்று விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.

“ரொம்ப நேரமா உங்களைக் காணலை. என்ன பண்றதுன்னே எனக்குத் தெரியலை. இங்கே திருச்சி எனக்கு நல்ல பழக்கம். இங்கே வந்துட்டா மனசுக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும்போல இருந்தது. இருட்டின பிறகு தட்டுத் தடுமாறி வரவேண்டாமேன்னு நாலு மணிக்கெல்லாம் கிளம்பி இங்கே வந்துட்டேன். நீங்க எப்படியும் இங்கேதான் தேடிக்கிட்டு வருவீங்கன்னு நினைச்சேன்” என்றாள் மனைவி.

அன்றைய இரவு, அவர்கள் வீட்டிலேயே தங்கிவிட்டு, மறுநாள் காலையில் எழுந்து, சமயபுரம் வந்து, குழந்தைக்கு முடி இறக்கி, பிரார்த்தனையை நல்லபடியாக நிறைவேற்றிவிட்டு, நேரே விழுப்புரம் வந்தோம்.

எங்கள் குடும்பத்தைக் காத்தருளிய சமயபுரம் மாரியம்மனுக்கும், பாண்டிச்சேரி அரவிந்த அன்னைக்கும் கண்ணீரால் நன்றி சொன்னேன்.
.

Friday, December 17, 2010

நடுத் தெருவில் நிர்வாணமாக...

“என்னிடம் பென்ஸ் கார் இருக்கிறது; என் வீட்டில் குக்கூ கடிகாரம் இருக்கிறது; என் வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்டு, பாமரேனியன்னு ரெண்டு மூணு நாய்கள் இருக்கு” என்றெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொள்வது போல சிலர், “எனக்கு பி.பி., இருக்கு; கொலஸ்ட்ரால் இருக்கு; ஷுகர் இருக்கு” என்றெல்லாம் நோய்களைக் கூடப் பெருமையாகச் சொல்லிக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். “போன வாரம்தான் பைபாஸ் ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன்” என்பார்கள் சிலர். ஏதோ விலை உயர்ந்த பட்டுப்புடவை வாங்கியது போன்ற பெருமிதம் அவர்கள் குரலில் தொனிக்கும்.

எனக்கு அப்படியெல்லாம் ‘பெருமை’யாகச் சொல்லிக் கொள்ள எந்த நோயும் இல்லை. சின்ன வயதிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் தீராத வயிற்று வலி இருந்தது. பிறரிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளும்படியான வியாதி இல்லை அது.

நான் பள்ளி மாணவனாக இருந்த சமயம்... வாரத்துக்கு இரண்டு நாளாவது வயிற்று வலியால் துடிக்காமல் இருந்ததில்லை. பாடத்தை ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால், கணக்கைச் சரியாகப் போடவில்லை என்றால், என் வகுப்பு ஆசிரியர் பிரம்பால் என்னை வெளு வெளு என்று வெளுத்துவிடுவார். முழங்காலுக்குக் கீழே ரத்தக் கோடுகள் தென்படும். வாத்தியார் அடித்துவிட்டார் என்று என் அப்பாவிடம் போய்ப் புகார் செய்ய முடியாது. காரணம், வகுப்பு ஆசிரியரே என் அப்பாதான்!

அப்பா அடிக்கப் போகிறார் என்று தெரிந்தால், ஒரு பயம் வந்து அடி வயிற்றைச் சுருட்டி இழுக்கும். உடனே வயிற்று வலி வரும். கட்டுப்பாட்டை மீறி நம்பர் டூ வெளியேறும். பேதியாகும். இதையெல்லாம் கட்டுப்படுத்திக் கொள்ள நான் படாத பாடு படவேண்டியிருக்கும்.

பொதுவாகவே எனக்குச் செரிமானத் திறன் குறைவு. எது சாப்பிட்டாலும் செரிக்காது. ஏப்பம் வரும். வாழைக்காய் பஜ்ஜி தின்றால், அன்று இரவு காஸ் டிரபிள் ஏற்பட்டு, படுக்கையில் படுக்கவே முடியாமல், தூக்கம் கெட்டு, விடிய விடிய திக்கித் திணறுவேன். சீரகத் தண்ணி, இஞ்சி மொரப்பா, பிஸ்லேரி சோடா என்று சகல ஆயுதங்களையும் பிரயோகித்தும், ஒன்றும் நடக்காது. ஈனோ குடித்தாலும், நோ நோ என்று போக மறுத்துவிடும் என் வயிற்று வலி.

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகத்தான் என் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டு, வயிற்று வலி வராமல் சமாளித்துக்கொண்டு இருக்கிறேன். வெறும் ரசம் சாதம், தயிர் சாதம், இட்டிலி, ஆசையாக இருந்தால் அதிகம் எண்ணெய் விடாமல் ஒன்றிரண்டு தோசை, ரஸ்க்... அவ்வளவே என் உணவு. மற்றபடி வீட்டிலோ, கடையிலோ பஜ்ஜி, போண்டா, சமோசா, பூரி என எதையாவது உள்ளே தள்ளினால், அன்றைக்கு ராத்திரி என் வயிறு தன் வேலையைக் காட்டிவிடும். இதைப் பரீட்சார்த்தமாகவே சோதித்துப் பார்த்துவிட்டேன். அவ்வளவு ஏன்... எண்ணெயில் பொரித்த அப்பளம்கூட எனக்கு ஆகாது!

சின்ன வயதில் நான் வசித்ததெல்லாம் கிராமப்புறங்களில்தான்! நடு இரவில் வயிற்றைச் சுருட்டி வலிக்கும். அட்டேச்டு பாத்ரூம், டாய்லெட், ஃப்ளஷ் அவுட்டெல்லாம் கிடையாது. ஒவ்வொரு வீட்டுக்கென்றும் தனி கக்கூஸ் கூடக் கிடையாது. வீட்டுக்கு வெளியே வந்து தெருக்கோடிக்குப் போய், வீடுகள் இல்லாத பகுதியில் ஒரு ஓரமாக, குப்பை மேட்டில் போய் மல ஜலம் கழித்துவிட்டு வரவேண்டியதுதான். புழு, பூச்சி, மரவட்டை... சமயங்களில் நட்டுவாக்கிலி கூடக் காலில் ஊரும்.

ஏதோ ஒரு தடவை, இரண்டு தடவை என்றால் பரவாயில்லை... வயிற்று வலி வந்தால், அன்றைய இரவு எனக்குச் சிவராத்திரிதான். விடிய விடிய சுமார் இருபது முப்பது தடவைக்கு மேல் எழுந்து எழுந்து ஓடிக்கொண்டு இருப்பேன். சில சமயம் வயிற்றைச் சுருட்டி வலிக்கும். போய் உட்கார்ந்தால், வருகிற மாதிரி இருக்குமே தவிர, வரவே வராது. இந்த அவஸ்தையில் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகக்கூட அந்த இருட்டில் உட்கார்ந்திருந்ததுண்டு.

1967-ம் ஆண்டு - நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம்... பள்ளியில் ஆசிரியர் மும்முரமாகச் சரித்திரப் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். என் வயிற்றில் ஒரு பிரளயம் கொஞ்சம் கொஞ்சமாக உருவாவதை உணர்ந்தேன். சடுதியில், வயிற்றில் ஒரு கலவரம் வெடித்தது. வயிற்றுக்குள் ஏற்பட்ட அந்த யுத்தத்தில், ஆசிரியர் நடத்திய பானிப்பட் யுத்தம் என் மண்டைக்குள் ஏறவே இல்லை. ஒரு கட்டத்தில் தாங்கவே முடியாமல் எழுந்து, வலது கையால் இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டியபடி, இடது கையை வயிற்றோடு மடித்துக் கட்டிக்கொண்டு பவ்வியமாக நின்று, வெளியே செல்ல அனுமதி கோரினேன். குரல் கொடுக்கக் கூடாது. ஆசிரியராக எப்போது திரும்பி நம்மைப் பார்க்கிறாரோ, அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும். அன்றைக்குப் பள்ளிகளில் இதுதான் எழுதப்படாத ஒழுங்குமுறை.

கரும்பலகையில் ஏதோ எழுதிக்கொண்டு இருந்த சரித்திர ஆசிரியர் திரும்பியதும், என்னைப் பார்த்துக் கடுப்பானார். “என்ன, வயித்து வலியா? வெளியே போகணுமா? ஹூம்... உங்களுக்கெல்லாம் இது ஒரு சாக்குடா! சரி, பானிப்பட் யுத்தம் எந்த ஆண்டு நடந்தது?” என்றார். என்னவோ ஒரு வருடத்தைக் குத்துமதிப்பாகச் சொன்னேன். தன் கையில், சீடை போன்று சின்ன உருண்டையாக மாறியிருந்த சாக்பீஸ் துண்டால் என்னைக் குறிபார்த்து அடித்தார். “ஒழி! போய்த் தொலை! ஹூம்... இதெல்லாம் எங்கே உருப்படப் போகுது!” என்று எனக்கு அனுமதி வழங்கியவர், மீண்டும் கரும்பலகைக்குத் திரும்பி எழுதத் தொடங்கிவிட்டார்.

நான் வகுப்பறையை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடத்தின் பிரதான வாயில் கதவைக் கடந்து, சாலையில் ஓடினேன். (பள்ளியிலும் கக்கூஸ் கிடையாது.) சுமார் ஒரு பர்லாங் தூரம் ஓடினால், சாலையோரம் ஒரு குட்டை வரும். அங்கேயே எங்காவது மறைவிடம் பார்த்து மல ஜலம் கழித்துவிட்டு, அந்தக் குட்டைத் தண்ணீரில் கழுவிக்கொண்டு வருவதுதான் பள்ளிச் சிறுவர்களின் வழக்கம். நானும் அந்த உத்தேசத்தில் குட்டையை நோக்கி ஓடும்போதே, என் கட்டுப்பாட்டையும் மீறி, நம்பர் டூ வெளியேறிவிட்டது. தொடைகளில், கால்களில் வழியத் தொடங்கியது.

எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இன்னும் வேகமாக ஓடினேன். ஒருவாறு குட்டையை நெருங்கி, நிஜாரைக் கழற்றி, ஓரமாக அமர்ந்து, வயிற்றுச் சுமையை முழுமையாக இறக்கி முடித்து, குட்டைத் தண்ணீரில் இறங்கி, சுத்தம் செய்துகொண்டேன். கால்களை நன்கு கழுவிக்கொண்டேன். அசிங்கமாகி இருந்த நிஜாரைத் தண்ணீரில் அலசிக் கழுவுவது எனக்கு அருவருப்பாக இருந்தது. என் நிலமையை நினைக்க நினைக்க அழுகையாக வந்தது. எப்படியோ, நிஜாரைத் குட்டைத் தண்ணீரில் முக்கி அப்படியும் இப்படியுமாக ஆட்டி அலசி, அசிங்கத்தைக் கழுவ முயன்றேன். முழுவதுமாக அகல மறுத்தது.

இதற்குள், நான் வயிற்று வலியால் துடித்து வகுப்பிலிருந்து வெளியேறியிருக்கிறேன் என்பதைச் சரித்திர ஆசிரியர் மூலம் தெரிந்துகொண்ட என் அப்பா, உடனே கிளம்பி குட்டைப் பக்கம் வந்துவிட்டார். அது சேறும் சகதியும் நிறைந்த ஆழமான குட்டை. அப்போது எனக்கு நீச்சலும் தெரியாது என்பதால், எனக்கு ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிடப்போகிறதே என்கிற கவலையில் அப்பா என்னைத் தேடிக்கொண்டு வந்தார். அவரே என் நிஜாரை வாங்கித் தண்ணீரில் நன்கு அலசிக் கசக்கிக் கழுவினார். பின்னர், என் கைப்பிடித்து “வா” என்று அழைத்தார்.

நிஜாருக்காகக் கை நீட்டினேன். “ஈரமா இருக்குடா. சின்னப் பையன்தானே... தப்பில்ல. அப்படியே வா!” என்றார். எனக்கு ரொம்பக் கூச்சமாக இருந்தது. “அப்பா...” என்று சிணுங்கினேன். “ம்... ஒழுங்கா என்கூட வா. நிஜாரை ஈரத்தோட போட்டுக்கிட்டா சளி பிடிக்கும். சொன்னாக் கேளு!” என்று அதட்டி, அதே அரை நிர்வாணக் கோலத்தோடு சாலையில் என்னை ஊர்வலமாக அழைத்து - இல்லையில்லை, கிட்டத்தட்ட இழுத்துச் சென்றார். தெருவில் போகிற வருகிறவர்கள் எல்லாரும் என்னையே கேலியாகப் பார்ப்பது போல் உணர்ந்து, மனசுக்குள் கூனிக் குறுகினேன். மற்றவர்கள்கூடப் பரவாயில்லை; என் வகுப்புப் பிள்ளைகள் சிலரின் கண்களிலும் பட்டேன் என்பதுதான் எனக்கு மிகுந்த மானப் பிரச்னையாகிவிட்டது.

குட்டைத் தண்ணீரில் எத்தனை அலசியும் போக மறுத்த, என் நிஜாரில் பட்ட அசிங்கம் போன்று இந்தச் சம்பவம் வெகு காலத்துக்கு என் மனதிலிருந்து அகல மறுத்து, அருவருப்பாக உறுத்திக்கொண்டே இருந்தது.

அதன்பின்னரும், வயிற்று வலியால் நான் பட்ட வேதனைச் சம்பவங்கள் ஏராளம். குறிப்பாக, 1996-ம் ஆண்டு குடும்பத்தோடு பஸ்ஸில் சென்றுகொண்டு இருந்தபோது, எனக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக மிகப் பெரிய சங்கடத்தில் மாட்டிக்கொண்டேன்.

அதையும் எழுதலாம் என்று நினைக்கிறேன். ஆனால், இந்தப் பதிவைப் படித்துவிட்டுச் சிலர், “இதென்ன கண்றாவி! பிளாகில் எதை வேண்டுமானாலும் எழுதச் சுதந்திரம் உண்டு என்பதற்காக, இதையெல்லாமா எழுதுவது!” என்று முகம் சுளிப்பார்களோ என்று யோசிக்கிறேன்.

ஆனால், இந்தப் பதிவைவிட அடுத்து எழுதப்போவது ஒன்றும் அதிக முகச் சுளிப்பை ஏற்படுத்தாது என்பது நிச்சயம்!
.

Sunday, December 05, 2010

கண்டேன் கன்னடத்துப் பைங்கிளியை!

மிழ்ப் பட ஹீரோயின்களில் என்னை அதிகம் கவர்ந்தவர் சரோஜாதேவிதான். பத்மினி, வைஜயந்திமாலா அளவுக்கு டான்ஸ் ஆடத் தெரியாது; பானுமதி, சாவித்திரி அளவுக்கு நடிக்கத் தெரியாது; தமிழ் உச்சரிப்பும் கொச்சையாக, கொஞ்சலாக இருக்கும்; என்றாலும், என்னை அதிகம் கவர்ந்தவர் சரோஜாதேவிதான். அடுத்து, தேவிகா.

நான் தீவிர சிவாஜி ரசிகனாக இருந்தும், எம்.ஜி.ஆர். படங்களையும் அதிகம் பார்த்ததற்குக் காரணம் இரண்டு பேர். ஒருவர் டி.எம்.எஸ்.; மற்றவர் சரோஜாதேவி. நான் சாவி பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, என்னுடன் பணியாற்றிய திருமதி லோகநாயகிக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்கச் சென்றிருந்த நான், அந்தக் குழந்தைக்கு ‘அபிநயா’ என்று பெயர் வைக்கச் சொன்னேன். சரோஜாதேவியின் பட்டப் பெயர் ‘அபிநய சரஸ்வதி’ அல்லவா... அதை மனதில் கொண்டுதான் அந்தப் பெயரை சிபாரிசு செய்தேன். அவரும் அப்படியே வைத்தார். திருமதி லோகநாயகி தற்போது குமுதம் சிநேகிதியின் ஆசிரியையாக உள்ளார்.

எண்பதுகளின் துவக்கத்தில், வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப் போய், பாண்டிச்சேரியில் ஒரு பழைய பேப்பர் கடையில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில், வாரத்துக்கு மூன்று சினிமாக்கள் பார்த்தேன். சரோஜாதேவி நடித்த படம் என்றால், கண்டிப்பாகப் பார்த்துவிடுவேன். தீவிர சரோஜாதேவி ரசிகனாக நான் ஆனது அப்போதுதான். ஜெமினி சினிமா, பேசும்படம், பொம்மை, சினிமா எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளில் வரும் சரோஜாதேவி படம் எதையும் விடமாட்டேன். கத்தரித்து ஆல்பம் போல் தயார் செய்வேன்.

நான் வேலை செய்த கடைக்குப் பக்கத்திலேயே தெருத் திருப்பத்தில் இருந்த ஒரு வீட்டிலிருந்து அடிக்கடி பழைய பேப்பர்களைக் கொண்டு வந்து என் கடையில் எடைக்குப் போட்டுவிட்டுக் காசு வாங்கிப் போவார்கள். அவர்கள் வீட்டில் ப்ளஸ் டூ படிக்கும் ஒரு பெண் இருந்தது. அதுவும் சில நாள் பேப்பர் கொண்டு வந்து எடைக்குப் போடும். அந்தப் பெண் பாக்யராஜ் ரசிகை என்று தெரிந்து, சினிமாப் புத்தகங்களில் இருந்து பாக்யராஜ் படங்களைக் கத்தரித்து வைத்திருந்து, அதற்குக் கொடுப்பேன்.

அந்தப் பெண் இரட்டைச் சடை போட்டு, முக ஜாடை அப்படியே சரோஜாதேவி மாதிரியே இருக்கும். அது புன்னகைக்கும்போது சரோஜாதேவி சிரிக்கிற மாதிரியே இருக்கும். இதனால் மெள்ள மெள்ள அந்தப் பெண் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டாகி, ஒரு நாள் அதைப் பார்க்கவில்லையென்றால்கூட தலை வெடித்துப் போகிற மாதிரி ஆகிவிட்டது.

சரி, அந்தக் கதை அப்புறம். கன்னடத்துப் பைங்கிளிக்கு வருவோம்.

எங்கள் பழைய பேப்பர் கடைக்குச் சேர வேண்டிய தொகையை பெங்களூர் மில்களில் இருந்து வாங்கி வர வேண்டியிருந்தது. என் முதலாளிக்கு (காந்தி என்கிற நடராஜன். இவரைப் பற்றி ஏற்கெனவே தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன்.) அப்போது பம்பாய் செல்லும் வேலை இருந்ததால், யாரை அனுப்புவது என்று யோசித்துக்கொண்டு இருந்தார். நான் விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர் என்று குறுகிய வட்டத்தைத் தாண்டி அதிகம் வெளியே போகாதவன். இருந்தும், “நான் வேணா போய் வாங்கி வருகிறேனே... அட்ரஸ் கொடுங்களேன்” என்று துணிச்சலாகச் சொன்னேன். காரணம், சரோஜாதேவி பெங்களூர்வாசி என்பதுதான். பில் கலெக்ட் பண்ணுகிற சாக்கில் அப்படியே சரோஜாதேவி வீட்டுக்கும் போய் ‘ஹாய்’ சொல்லிவிட்டு வரலாமே என்கிற நப்பாசைதான்!

“நெஜம்மாவா? தைரியமா போய் வருவியா? விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு அந்த ரெண்டு மூணு மில்களுக்கும் போய்ப் பார்த்து, சம்பந்தப்பட்டவங்களோடு பேசி, காரியத்தை சக்ஸஸா முடிச்சுக்கிட்டு வருவியா?” என்று கேட்டார் முதலாளி. “கண்டிப்பா!” என்றேன். ‘சரி, இவனுக்கும்தான் ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போமே!’ என்று நினைத்தவர் போல, நான் செய்ய வேண்டியது என்ன என்பதை விலாவாரியாக விளக்கி, அட்ரஸ்களைக் கொடுத்து, என்னை பெங்களூருக்கு பஸ் ஏற்றி அனுப்பினார் முதலாளி.

பெங்களூரில் போய் இறங்கியதுமே, அந்தப் புதிய சூழல் என்னை ரொம்ப மிரட்டியது. என்னவோ கண்காணாத அமெரிக்காவிலேயே போய் இறங்கிவிட்டது மாதிரி மிரட்சியாகவும், சற்றுப் பயமாகவும் உணர்ந்தேன்.

நல்லவேளையாக, அங்கிருந்த ஆட்டோக்காரர்களுக்குத் தமிழ் தெரிந்திருந்தது. ஒவ்வொரு இடமாகச் சொல்லி, அந்தந்த மில்களுக்கும், கம்பெனிகளுக்கும் போய் அவர்கள் தந்த செக்குகளைப் பெற்றுக்கொண்டேன். முதலாளி சொல்லியிருந்தபடி, அவருக்குத் தெரிந்த ஒரு கடையில், அந்த ஊழியர்களோடு இரவு தங்கினேன்.

விடிந்ததும், நேரே கிளம்பி பாண்டிச்சேரி வரவேண்டும் என்று முதலாளி உத்தரவு. ஆனால், என் அபிமான நடிகை சரோஜாதேவியைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் எனக்குள் மிகுந்திருந்ததால் (சொல்லப்போனால், முக்கியமாய் அதற்காகத்தானே வேலைமெனக்கெட்டு வந்திருக்கிறேன்!) ஒரு ஆட்டோ பிடித்து, சிவாஜி நகர் போகச் சொன்னேன். பேசும்படம் புத்தகத்தில் வெளியான சரோஜாதேவி அட்ரஸைக் கிழித்து வைத்துக்கொண்டிருந்தேன். அந்த அட்ரஸுக்கு ஆட்டோவில் போய் இறங்கினேன்.

வெளியே வாட்ச்மேனிடம், “அம்மா இருக்காங்களா?” என்று விசாரித்தேன். “நீ யாரு தம்பி?” என்று கேட்டார் அவர். “அம்மாவோட ரசிகன் நான். சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு...” என்று தயங்கினேன். சரோஜாதேவி அப்போது நடிப்பதை நிறுத்திப் பல காலம் ஆகியிருந்தது. எனவே, அந்த பங்களாவில் ஈ, காக்காய் இல்லை. ரசிகன் என்று சொல்லிக்கொண்டு வந்த என்னை அந்த வாட்ச்மேன் ஆச்சரியமாகத்தான் பார்த்தார். யாரிடமும் எந்த அனுமதியும் பெறாமல், ‘உள்ளே போ’ என்று என்னைச் சுலபமாக அனுமதித்துவிட்டார்.

உள்ளே போனேன். முன்னால் வரவேற்பறை மாதிரி இருந்த சிறு அறை ஒன்றில் நுழைந்தேன். யாரோ ஒரு பணிப்பெண், “யாரு?” என்று என்னை விசாரித்தார். “அம்மாவைப் பார்க்கணும். நான் பாண்டிச்சேரிலேர்ந்து வந்திருக்கேன். அவங்களோட ரசிகன்” என்றேன். “உக்காரு” என்று சொல்லிவிட்டு உள்ளே போனார் அந்தப் பணிப்பெண்.

எவ்வளவு நேரம் காத்திருந்திருப்பேன் என்று தெரியாது... ஒரு மணி நேரமாவது இருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த அறைக்குள் நுழைந்தார் சரோஜாதேவி. சட்டென்று எழுந்து நின்றேன். “உக்காருப்பா! என்னைப் பார்க்கணும்னா வந்திருக்கே?” என்றார். தோற்றத்தில்தான், படத்தில் பார்த்ததைவிட முதுமையாகத் தெரிந்தாரே தவிர, குரல் பழைய அதே கொஞ்சும் குரல்தான்!

வாங்கிக்கொண்டு போயிருந்த ஆப்பிள் பழங்களை அவரிடம் கொடுத்துவிட்டு, நாற்காலியின் நுனியில் தயக்கத்தோடு உட்கார்ந்தேன். அவருடைய படங்களை சிலாகித்துச் சொன்னேன். புன்னகை மாறாமல் கேட்டுக்கொண்டு இருந்தார். “எனக்கு சிவாஜிதான் பிடிக்கும். ஆனா, நீங்க பொதுவா சிவாஜி படத்துல சோகமான கேரக்டர்ல வர்றீங்க. எம்.ஜி.ஆர். படத்துலதான் உற்சாகமா, சிரிச்ச முகத்தோட அழகா தெரியறீங்க” என்றதும், “அப்படியா..!” என்று சிரித்தார்.

பணிப்பெண்ணை அழைத்து பிஸ்கட் கொண்டு வந்து கொடுக்கச் சொன்னார். மிகுந்த தயக்கத்தோடு ஒன்றை எடுத்துத் தின்றேன். பின்னாலேயே சூடான டீ வந்தது. குடித்தேன். அதுக்கப்புறம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. “உங்களைப் பார்த்ததுல ரொம்பச் சந்தோஷம்மா! நான் வரேன்” என்று விடைபெற்றுக் கிளம்பினேன். அவர் போட்டோவில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கச் சொல்லிக் கேட்க வேண்டும் என்று எனக்கு அப்போது தோன்றவே இல்லை. என் அபிமான நடிகையை நேரில் பார்த்துச் சில நிமிஷ நேரம் பார்த்துக் கொண்டு இருந்ததே பெரிய சந்தோஷமாக இருந்தது எனக்கு.

அதன்பின், 1988-ல் நான் ‘சாவி’யில் பணியாற்றிக்கொண்டு இருந்த சமயத்தில், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.- ஜெயலலிதா அணி, வி.என்.ஜானகி அணி என இரண்டாகப் பிரிந்திருந்த நேரம்...

சரோஜாதேவி சென்னை, நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் வந்து தங்கியிருந்தார் என்று கேள்விப்பட்டு, சாவி பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் ராதாகிருஷ்ணனுடன் கிளம்பிப் போனேன். சரோஜாதேவியை இரண்டாவது முறையாக, இந்த முறை ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் சந்தித்தேன். அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது பற்றியும், எம்.ஜி.ஆரின் வாரிசாக ஜெயலலிதா வந்திருப்பதுபோல், எம்.ஜி.ஆருடன் அதிகம் நடித்தவர் என்கிற முறையில் அவரும் அரசியலில் எம்.ஜி.ஆரின் வாரிசாக வந்திருக்கலாமே, ஏன் வரவில்லை என்றும் கேட்டேன். “அச்சச்சோ! பேட்டியே வேணாம். எனக்கு அரசியலே தெரியாது. பிடிக்காது. ஜெயலலிதா நல்ல டேலண்ட்டட் வுமன். அவங்களுக்கு என் வாழ்த்துக்கள்!” என்று சிரித்தபடி கையெடுத்துக் கும்பிட்டு, பேட்டி கொடுக்கக் கண்டிப்பாக மறுத்துவிட்டார்.

“ஒரு ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னால், உங்களின் ரசிகன் என்கிற முறையில், பெங்களூரில் உங்களை உங்க வீட்டுக்கே வந்து சந்தித்துப் பேசிவிட்டுப் போனேன்” என்றேன். “அப்படியா..!” என்று அதற்கும் ஒரு சிரிப்பு.

பின்னர், சரோஜாதேவியிடம் நான் எடுக்க நினைத்திருந்த அதே பேட்டியை, ஃப்ரீலான்ஸ் ரைட்டராக இருந்த வரதராஜன் என்பவரை அனுப்பி, பழம்பெரும் நடிகை பி.பானுமதியிடம் பேட்டி எடுத்து வரச் சொன்னேன். ‘கலைஞர் ஆட்சி வந்தால்தான் தமிழகத்துக்கு நல்லது’ என்பது போல் அந்த பேட்டியை எழுதிக் கொடுத்திருந்தார் வரதராஜன். சாவியில் அதை வெளியிட்டேன். அது அப்படியே மாலை முரசு பேப்பரில் முழுப்பக்கம் வெளியானது.

அடுத்த வாரம், சாவி பத்திரிகை அலுவலகத்துக்கு ஒரு போன்கால். நான்தான் எடுத்துப் பேசினேன். “நான் பானுமதி பேசறேன்...” என்று கணீர்க் குரல் கேட்டது. “சொல்லுங்கம்மா” என்றேன்.

“நீங்க அனுப்பின நிருபர் சுத்த ஃப்ராட்! அவருக்குக் கற்பனை வளம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. நான் சொல்லாததையெல்லாம் சொன்னது மாதிரி திரிச்சுத் திரிச்சு எழுதியிருக்கார். எல்லாமே தப்பு. என் ஆல்பத்துலேர்ந்து நிறைய போட்டோஸ் வாங்கிட்டுப் போனார். அதையெல்லாம் உடனடியா கொண்டு வந்து கொடுக்கச் சொல்லுங்க. அவரை லெஃப்ட் அண்ட் ரைட் விட்டாத்தான் சரிப்படும்” என்றார்.

பின்னர், வரதராஜனைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னபோது, “அவங்க பரம்பரையாவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவங்க. கலைஞரைப் புகழ்ந்து பேட்டி கொடுத்ததைப் பார்த்து யாராவது ஏதாவது சொல்லியிருப்பாங்க. அதான், அப்படி மாத்திச் சொல்றாங்க” என்றார் கூலாக. “இருக்கட்டும்... அவங்க கிட்டேர்ந்து வாங்கிட்டு வந்த போட்டோக்களையெல்லாம் கொண்டு போய்க் கொடுத்துடுங்க” என்றேன். ‘ஆகட்டும்’ என்றார்.

ஆனால், பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் பானுமதியம்மாவிடமிருந்து போன். “உங்க ஆசாமி வரவே இல்லை. போட்டோக்களைக் கொண்டு தரவே இல்லை. பண்ற தப்பையும் பண்ணிட்டு, இங்கே வந்து என் எதிர்ல எப்படித் தைரியமா நிக்க முடியும் அந்த ஆளால?” என்றார் கேலிச் சிரிப்போடு. “அவர் எங்க பத்திரிகையைச் சேர்ந்தவர் இல்லைம்மா. பிரமுகர்களைப் பேட்டி எடுத்து, எந்தப் பத்திரிகைக்குப் பொருத்தமோ, அதுக்குக் கொடுப்பாரு. உங்க கிட்டேர்ந்து வாங்கிட்டு வந்த போட்டோக்கள்ல, நாங்க பிரசுரம் பண்ணியிருக்கிற அந்த ஒரு போட்டோவைத் தவிர, வேறு எதையும் என் கிட்டே கொடுக்கலை. நான் வேணா, அந்தப் போட்டோவை நானே கொண்டு வந்து உங்க கிட்டே கொடுக்கவா?” என்று கேட்டேன்.

கலகலவென்று சிரித்தார். “வேணாம், வேணாம்... போட்டோஸ் எனக்கு முக்கியமில்லை. அதைக் கொண்டு வர்ற சாக்குல, அந்த ஆளைப் பிடிச்சு லெஃப்ட் அண்ட் ரைட் விடலாம்னு பார்த்தேன். அவ்வளவுதான்! மத்தபடி, நீங்க என்னைச் சந்திக்கணும்னா எப்ப வேணா என் வீட்டுக்கு வரலாம்” என்றார் கனிவான குரலில்.

ஆனால், நடிப்புக்கு இலக்கணமாம் பி.பானுமதியைப் போய்ச் சந்திக்கவில்லை நான்.

அவர் என் அபிமான நடிகை இல்லை (ஆனால், அவரது நடிப்பு எனக்குப் பிடிக்கும்) என்பது மட்டுமில்லை அதற்குக் காரணம்; பத்திரிகைத் துறைக்கு வந்த பின், சினிமா நட்சத்திரங்களைச் சந்திக்கும் ஆர்வம் எனக்கு அடியோடு போய்விட்டிருந்தது என்பதுதான்!

குறிப்பு: “உங்கள் வலைப்பூக்களைத் தொடர்ந்து படிக்கிறேன். ரொம்பச் சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் அனுபவங்களை அடிக்கடி பதிவிடுங்கள்” என்றார் என் பெருமதிப்புக்குரிய நகைச்சுவை எழுத்துலக ஜாம்பவான் திரு.ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி), சமீபத்தில். ஏதோ டயரி எழுதுவது போல்தான் எழுதுகிறேனே தவிர, பிறருக்கு இது சுவாரஸ்யமாக இருக்குமா என்று எனக்கு ஒவ்வொரு முறையுமே பதிவிட்டு முடித்ததும் சந்தேகம்தான். திரு.பாக்கியம் ராமசாமி அவர்கள் கொடுத்த ஊக்கத்தின் பேரில் இந்தப் பதிவை எழுதியுள்ளேன். இது உங்களுக்குச் சுவைக்கவில்லை என்றால், அந்தப் பழி அவரைத்தான் சாரும்! :)
.

Tuesday, November 16, 2010

வாழ்க்கையல்ல... வேதம்!

னோஹர் தேவதாஸ் - மஹிமா... இந்த ஆதர்ச தம்பதியின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம்!

மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற அவர்கள் அங்கேயே தங்குவதற்கு வசதியும், வற்புறுத்தலும், நல்ல வேலை வாய்ப்பும் இருந்தன. என்றாலும், ‘எங்கள் தேசம் இந்தியாதான்’ என்று, படிப்பு முடிந்த கையோடு இந்தியா திரும்பிவிட்டனர். சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊரான மதுரைக்குக் காரில் போய்க்கொண்டு இருந்தபோதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது.

மஹிமாதான் காரைச் செலுத்திக்கொண்டு இருந்தார். அமெரிக்காவில் அந்த நாட்டுச் சாலைகளில் குறைந்தபட்சம் 80 கி.மீ. வேகத்தில் லாகவமாகக் கார் ஓட்டக்கூடியவர் அவர். அங்கே அவர் இருந்த காலத்தில் ஒரு சின்ன விபத்து கூட ஏற்பட்டதில்லை. இங்கேயுள்ள சாலைகளுக்கேற்ப அன்றைக்கு மிக மிக மெதுவாகத்தான் அவர் காரைச் செலுத்தினார். என்றாலும், நேஷனல் ஹைவேஸில் படுவேகமாக வந்த லாரி ஒன்று ஓவர் டேக் செய்யும்போது, இவர்கள் காரை பக்கவாட்டில் உரசிச் செல்ல, கார் பக்கத்திலிருந்த பள்ளத்தில் உருண்டது. காரில் இருந்த மனோஹர், அவரது தாயார், ஆறு வயது மகள் சுஜாதா மூவரும் அதிர்ஷ்டவசமாக சிறு காயமும் இன்றித் தப்பிக்க, பாவம்... மஹிமாவுக்குதான் பலத்த அடி. முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு, கை கால்கள் செயல் இழந்தன.

பின்னர், மருத்துவமனையில் சேர்த்துத் தீவிர சிகிச்சை அளித்தும், பூரண குணம் என்பது ஏற்படவே இல்லை. கொஞ்சம்கூட நகர முடியாத அளவுக்கு ஆளானார் மஹிமா. படுக்கையில் புரண்டு படுக்க வேண்டும் என்றாலும், பிறர் உதவியின்றி முடியாது. தோளுக்குக் கீழே உணர்ச்சியே இல்லை. சக்கர நாற்காலியே மஹிமாவின் உலகம் என்றாகிவிட்டது.

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு விபரீதமும் சேர்ந்துகொண்டது. மனோஹர் தேவதாஸின் கண் பார்வை மங்க ஆரம்பித்தது. மருத்துவர்களை அணுகியபோது, அவருக்கு ‘ரெடினிடிஸ் பிக்மெண்டோஸா’ என்னும் கண் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். இந்தக் குறைபாடு மனோஹருக்குச் சின்ன வயது முதலே இருந்திருக்கிறது. என்றாலும், அந்த விபத்துக்குப் பிறகு, பார்வை மங்குவது துரிதமாகியது. அவரால் ஒரு குறிப்பிட்ட வெளிச்சத்துக்கு அதிகமான வெளிச்சம் இருந்தாலும் பார்க்க முடியாது; குறைவான வெளிச்சம் இருந்தாலும் பார்க்க முடியாது. தவிர, ஒரு குறுகிய வட்டத்தின் வழியாகப் பார்க்கிற மாதிரிதான் அவரால் பார்க்க முடிந்தது. இதை ஆங்கிலத்தில் tunnel vision என்று சொல்வார்கள். அதாவது, ஒரு சுரங்கப்பாதையின் உள்ளிருந்து பார்த்தால், வெளியே இருக்கும் பகுதி வட்டமாகத் தெரியும்; மற்ற இடங்கள் இருட்டில் கறுப்பாகத் தெரியும் அல்லவா? அது போல, இவரது பார்வை ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கே இருந்தது. மற்ற இடங்கள் கறுப்பாக இருக்கும். அவர் ஒருவரின் முகத்தைக் கூட முழுதாகப் பார்க்க முடியாது. இடது கண், வலது கண், மூக்கு என்று ஒவ்வொரு அங்கமாகத்தான் பார்க்க முடியும்.

ஆனால், மனோஹர் தேவதாஸ் மன உறுதி மிக்கவர். முழுமையாகப் பார்வை பறிபோகும் முன் தன்னால் எத்தனைப் படங்கள் வரைய முடியுமோ வரைந்துவிட வேண்டும் என்று படங்கள் வரைவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தவிர, அவரால் நிறங்களைப் பிரித்தறியவும் முடியாது என்பதால், வெறுமே கோட்டுச் சித்திரங்களை மட்டுமே வரையத் தொடங்கினார். படத்துக்கான நீள, அகல அளவுகளை மனதிலேயே வகுத்துக்கொண்டு, ஒரு தாளில் கொஞ்சம் கொஞ்சமாக வரைந்து, அதை முழுப் படமாக்குகிற அவரது திறன் எத்தகையது என்பதை நான் இங்கே முழுமையாக விளக்கியிருக்கிறேனா, அவரது நிலையை உங்களால் 100 சதவிகிதம் உணர முடிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. சுருக்கமாகச் சொன்னால், அவர் வரைந்த படத்தை அவராலேயே முழுதாகப் பார்த்து சரியாகத்தான் வரைந்திருக்கிறோமா, இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியாது. மனைவியிடம் காண்பித்து அபிப்ராயம் கேட்பார்.

அவரின் மனைவி மஹிமாவும் சிறந்த ஓவியர். அந்த விபத்துக்குப் பிறகு அவரால் கைகளைக் கொஞ்சம்கூட அசைக்க முடியாமல் போனதால், வரைய முடியவில்லை. ஆனால், அதற்காகத் தளர்ந்துவிடவில்லை மஹிமா. மனோஹர் தேவதாஸ் படம் வரையும்போது அருகில் இருந்து நல்ல புத்தகங்களை ஏற்ற இறக்கத்துடன் வாசித்துக் காட்டுவார். அதைக் கேட்டு ரசித்தபடியே படம் வரைவார் மனோஹர். “உண்மையில், முன்பு நான் வரைந்த படங்களின் எண்ணிக்கையைவிட, படித்த புத்தகங்களின் எண்ணிக்கையைவிட, அந்த விபத்துக்குப் பிறகு வரைந்த படங்கள், படித்த புத்தகங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்” என்று கேணி கூட்டத்தில் சொன்னார் மனோஹர் தேவதாஸ்.

மனைவியை அந்த அளவு மிக அதிகம் நேசித்தவர் மனோஹர். “உங்களுக்குள் சின்ன மனஸ்தாபம்கூட வந்ததில்லையா?” என்று கேட்டதற்கு மனோஹர் சொன்னார்... “எப்படி வரும்? அவ தங்கம்னா தங்கம், அப்படித் தங்கம்! ஒரு உதாரணம் சொல்றேன். ஒருமுறை எனக்கும் என் அண்ணனுக்கும் மனஸ்தாபம் வந்துடுச்சு. அவனிடம் பண உதவி கேட்டபோது, காலி உறையை எனக்கு அனுப்பியிருந்தான். வெறுப்பு வந்தது. ‘இவனெல்லாம் ஒரு அண்ணனா!’ன்னு என் மனைவியிடம் கன்னாபின்னானு திட்டினேன். ‘நான் வேலைக்குப் போய், அந்த வருமானத்துலதானே இவனைப் படிக்க வெச்சேன். அந்த நன்றிகூட இல்லாம இப்படி வெறும் கவரை அனுப்பியிருக்கானே!’ன்னு புழுங்கினேன். ‘இத்தனைக்கும் அம்மாவை நான்தான் பார்த்துக்கறேன்’ன்னு பேச்சுவாக்குல சொன்னேன். உடனே மஹிமா குறுக்கிட்டு, ‘தப்பாச் சொல்றீங்க. நாம அவங்களைப் பார்த்துக்கலை. அவங்கதான் நம்மளைப் பார்த்துக்கறாங்க. நாம ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். அவங்கதான் வீட்டையும் நம்ம குழந்தையையும் பார்த்துக்கறாங்க. இனியொரு தடவை அவங்களை நாம பார்த்துக்கறோம்னு சொல்லாதீங்க. அவங்கதான் நம்மளைப் பார்த்துக்கறாங்க’ன்னு அழுத்தமா சொன்னா.

ரெண்டொரு வருஷம் கழிச்சு, ஒரு திருமண நாளின்போது, மஹிமாவுக்கு ஏதாவது பரிசு தர விரும்பினேன். ‘என்ன பரிசு வேண்டுமோ, கேள்’னு சொன்னேன். உடனே அவ சொன்னா... ‘எனக்கு வேண்டிய புடவைங்க, நகைங்கன்னு எல்லாம் இருக்குது. அதனால எனக்கான தேவைன்னு எதுவுமே இல்லே. ஆனா, பரிசா ஒண்ணு கேக்கறேன். நிறைவேத்துவீங்களா?’ன்னா. ‘சொல்லு. கண்டிப்பா நிறைவேத்தறேன்’ன்னு சொன்னேன். ‘உங்க அண்ணன் மேல இருக்கிற கோபத்துல அவர் அன்னிக்கு அனுப்பின காலி கவரை இன்னும் பத்திரமா வெச்சுக்கிட்டு, மனசுல அந்த வெறுப்பை இன்னமும் சுமந்துக்கிட்டிருக்கீங்களே... முதல்ல அந்த கவரைக் கிழிச்சுப் போடுங்க. வெறுப்பை உதறுங்க. அதுதான் நீங்க எனக்குத் தர்ற பரிசு!’ன்னா. இப்படியொரு அருமையான மனைவியோடு எப்படிங்க மனஸ்தாபம் வரும், சொல்லுங்க?”

மனோஹர் தேவதாஸ் சிறந்த ஓவியர் மட்டுமல்ல; நல்ல எழுத்தாளரும்கூட! மதுரையைப் பற்றி ஓவியங்களோடு கூடிய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். மனைவி மஹிமாவின் மறைவுக்குப் பின், அவரைப் பற்றிய புத்தகம் ஒன்றும் எழுதியிருக்கிறார். மனோஹர் வேதியியல் நிபுணரும்கூட. ஆரம்ப காலத்தில் அவர் வரைந்த ஆயில் பெயிண்டிங்குகளை வைத்து ஒரு கண்காட்சி நடத்தி, அதன் மூலம் கிடைத்த 53,000 ரூபாயையும் சங்கர நேத்ராலயாவுக்கு வழங்கிவிட்டார். அன்றைக்கு மட்டுமல்ல, இன்று வரையில் அவர் வரைகிற படங்களை விற்பனை செய்து கிடைக்கிற வருமானம் மொத்தத்தையும் சங்கர நேத்ராலயாவுக்கும், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்குமே கொடுத்து வருகிறார் மனோஹர்.

மஹிமாவும்கூட புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார். ஹாரிபாட்டர் எழுதிய ஜே.கே.ரௌலிங் போல, மஹிமா தன் குழந்தை சுஜாதாவுக்காகக் கற்பனை செய்து தினம் தினம் ராத்திரி விளையாட்டாகச் சொன்ன கதைகளைத் தொகுத்துக் கொடுக்க, அதை ‘தி மேஜிக் கார்டன் அண்ட் அதர் ஸ்டோரீஸ்’ என்னும் தலைப்பில் அதைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறது ‘ஓரியண்ட் லாங்மேன்’ நிறுவனம்.

விவாகரத்துகள் பெருகி வரும் இந்நாளில், மனோஹர்- மஹிமா தம்பதியின் வாழ்க்கை ஆச்சரியமானது மட்டுமல்ல; பலருக்கும் ஒரு வேதப் புத்தகம் போன்றது என்பதில் சந்தேகமில்லை.
.

Friday, September 24, 2010

குதிரைக்குக் குரல் கொடுத்தவர்!

சை மேதைகள் சுதர்ஸனம், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் எனப் பலரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இசை மேதை சங்கீத பூஷணம் எம்.டி.பார்த்தசாரதி பற்றி யாராவது கேள்விப்பட்டிருக்கிறோமா?

அபார திறமை இருந்தும், குடத்தில் இட்ட விளக்காக இருந்து, மறைந்துவிடுகிறார்கள் பல மேதைகள். அவர்களில் ஒருவர்தான் திரு.எம்.டி.பார்த்தசாரதி.

ஜெமினி பிக்சர்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளராகப் பணியாற்றியவர் இவர். ஜெமினியின் தயாரிப்புகளான மதன காமராஜன், பக்த நாரதா, ஞான சௌந்தரி, மங்கம்மா சபதம், தாசி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி, பாதுகா பட்டாபிஷேகம், சக்ரதாரி, அபூர்வ சகோதரர்கள் போன்ற பல படங்களுக்கு இசையமைத்தவர் இவர்தான்.

‘நந்தனார்’ படத்தில் நந்தனாராகவே வாழ்ந்திருந்தார் எம்.எம்.தண்டபாணி தேசிகர்; ‘ஔவையார்’ படத்தில் ஔவையாராகவே மாறிவிட்டார் கே.பி.சுந்தராம்பாள். இருவரையும் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த இந்த இரண்டு படங்களுக்கும் இசை அமைத்திருந்தவர் பார்த்தசாரதிதான். இந்தப் படங்களின் இசை அந்தக் காலத்தில் பலராலும் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றது. ‘சந்திரலேகா’வில் கர்னாடக முறையிலான இசையை பார்த்தசாரதியும், மேற்கத்திய பாணியிலான இசையை எஸ்.ராஜேஸ்வரராவும் அமைத்திருந்தனர். அந்தப் படத்தில் ‘நாட்டியக் குதிரை’ பாட்டு செம ஹிட்! பார்த்தசாரதி இசைமைத்த அந்தப் பாட்டில் குதிரை பாடுவது போல் குரலை மாற்றிக் கட்டைக் குரலில் பாடியுள்ளவர் அவரேதான்.

இசை மேதைகள் சபேசய்யரிடமும், பொன்னையாபிள்ளையிடமும் சங்கீதம் கற்றுத் தேர்ந்து ‘சங்கீத பூஷணம்’ என்ற பட்டத்தைப் பெற்றிருந்தாலும், பார்த்தசாரதி ஆரம்ப காலத்தில் ஒரு நடிகராகத்தான் திரையுலகுக்கு வந்தார். ‘சக்குபாய்’ படத்தில் விஷ்ணுசித்தராக நடித்தார். தொடர்ந்து ஸ்ரீனிவாச கல்யாணம், திரௌபதி வஸ்திராபரணம், சேது பந்தனம், தியாக பூமி எனப் பல படங்களில் நடித்தார். கருட கர்வ பங்கம் படத்தில் ஹனுமானாக இவர் நடித்தது, இவருக்குப் பெரிய புகழைத் தேடித் தந்ததோடு, சிறந்த நடிகர் விருதையும் பெற்றுத் தந்தது. ராஜபக்தி படத்தில் வில்லனாக நடித்தார் பார்த்தசாரதி. தமிழில் முதலில் தயாரான வண்ணப்படம் ‘தர்மபுரி ரகசியம்’. இதில் நடிக்கும் வாய்ப்பு பெற்றவர் பார்த்தசாரதி. அதில் அவர் இரண்டு வேடங்களில் நடித்தார்.

அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த சுகுண விலாஸ் சபாவின் மேடை நாடகங்களில் ஏற்கெனவே நடித்திருந்தார் பார்த்தசாரதி. இவரது நடிப்பாற்றலைக் கண்டு வியந்து, இவரைத் திரையுலகுக்கு அழைத்து வந்தவர் அந்தக் காலத்தில் மிகப் பிரபல நடிகராகவும் வசனகர்த்தாவாகவும் இருந்த திரு.வடிவேலு நாயக்கர். அந்நாளில் பாடத் தெரிந்தவர்கள்தான் நடிக்கவும் முடியும். பார்த்தசாரதிக்கு இயல்பிலேயே கணீர் குரலும், சங்கீத ஞானமும் அமைந்திருந்ததால், அவரால் சுலபமாகத் திரையில் பரிமளிக்க முடிந்தது.

நடிகராகப் புகழ் பெற்றதும் சொந்தமாகத் திரைப்படம் எடுக்க முயன்றார் பார்த்தசாரதி. ஆனால், அது தோல்வியில் முடிந்தது. 1940-ல் ‘அபலா’ என்னும் திரைப்படத்துக்கு முதன்முதலாக இசையமைத்தார். இசை என்னவோ பரவலாகப் பெரிதும் பாராட்டப்பட்டாலும், படம் ஃப்ளாப் ஆனதால், இவர் பெயரும் சேர்ந்து அடிபட்டது. பின்னர் இவர் திருச்சி சென்று ‘ஆல் இண்டியா ரேடியோ’வில் (அந்நாளில் இது திருச்சி ரேடியோ கார்ப்பொரேஷன் என்று அழைக்கப்பட்டது) நிலைய வித்வானாகச் சேர்ந்து பணியாற்றினார். பின்பு, ஜெமினி நிறுவனத்தில் வேலை கிடைக்க, அந்த வேலையை உதறிவிட்டுச் சென்னை வந்தார்.
இவரது இசையாற்றலுக்கு ஓர் உதாரணம்... சக்ரதாரி படத்தில் கோராகும்பராக நடிப்பார் பழம்பெரும் நடிகர் நாகையா. பானை வனையும் தொழில் செய்பவர் பக்த கோராகும்பர். நாராயண பக்தியில் திளைத்து, பாண்டுரங்கனை நினைத்துப் பரவசத்தில் பாடியபடியே மண்ணை மிதித்துக் குழைத்துக்கொண்டு இருப்பார் நாகையா. அப்போது அவரது குழந்தை தவழ்ந்து, அவரது காலின் கீழ் வரும். பக்தியில் மெய்ம்மறந்திருந்த கோராகும்பர், குழந்தை வந்தது தெரியாமல், அதையும் சேர்த்து மிதித்துக் குழைத்து மண்ணோடு மண்ணாக்கிவிடுவார். குழந்தையின் தாய் பதறி ஓடி வந்து, இந்தக் காட்சியைக் கண்டு, மயக்கமுற்று விழுவதாக ஸீன்.

குழந்தையின் தாயாக நடித்தவர் புஷ்பவல்லி. குறிப்பிட்ட அந்தக் காட்சியில், அவர் நிஜமாகவே மயங்கி விழுந்துவிட்டார். அதை முதலில் நடிப்பு என்று நினைத்த படப்பிடிப்புக் குழுவினர், நீண்ட நேரம் அவர் எழுந்திருக்காததால், பின்னர் அவரை அவசரமாகத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சையளித்து, மயக்கம் தெளிவித்தனர்.

எழுந்ததும் புஷ்பவல்லி சொன்னார்... “இந்தக் காட்சியின்போது ஒலித்த உருக்கமான இசையும் பாடலும் என்னை என்னவோ செய்தது. காட்சியின் தீவிரமும் அபூர்வமான இசையும் சேர்ந்துகொண்டதில், உண்மையாகவே எனக்கு மயக்கம் வந்துவிட்டது!”

தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் புலமை மிக்கவர் பார்த்தசாரதி. இவர் இசையமைப்பில் வெளியான கடைசி படம் ‘நம் குழந்தை’. இதில் பணியாற்றிய இசைக்குழுவினருக்குப் படத் தயாரிப்பாளரால் சம்பளம் கொடுக்க முடியாமல் போக, பார்த்தசாரதி தமது சொந்தப் பணத்திலிருந்து எடுத்து அவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத் தந்தார்.

1958-ல் திரைத் துறையை விட்டு விலகி, பெங்களூர் ஆல் இண்டியா ரேடியோவில் மெல்லிசை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகச் சேர்ந்து பணியாற்றினார் பார்த்தசாரதி. அங்கே பற்பல குறிப்பிடத்தக்க இசை நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்து, 1963-ல் அமரர் ஆனார்.

மிகுந்த தெய்வ பக்தி உள்ளவர் பார்த்தசாரதி. குறிப்பாக, திருப்பதி வெங்கடாசலபதி மீதும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மீதும் அளவற்ற பக்தி கொண்டவர். சின்ன வயதிலிருந்தே கோயில் பஜனைகளிலும், ஏகாந்த சேவைகளிலும் கலந்துகொண்டு பாடுவதில் விருப்பம் கொண்டவர். சாகும் தறுவாயிலும்கூட அவரது வாய் காயத்ரி மந்திரத்தைதான் முணுமுணுத்துக்கொண்டு இருந்தது; அவரது கை விரல்கள் அதன் எண்ணிக்கையைக் கணக்கிட்டபடி இருந்தன.

1910-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி பிறந்தவர் எம்.டி.பார்த்தசாரதி. நாளைய 25-ஆம் தேதி (நட்சத்திரப்படி), மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் இவரது நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.

‘சந்திரலேகா’ படத்தின் ‘நாட்டியக் குதிரை’ பாடல் காட்சியைக் காண விரும்புகிறவர்கள் இதை க்ளிக் செய்யவும்.
.