உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, January 18, 2018

ஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா! - 14

செந்தோஸா சந்தோஷம்!

சாலைப் போக்குவரத்து சீராக இருக்க வேண்டியது முக்கியம்; அதற்கு சாலைகள் ஒழுங்காக இருக்க வேண்டியதும் முக்கியம். எனவேதான், நம் அரசாங்கம் சாலையில் ரோடு போடுகிற வேலையைச் செய்தால்,நாளைக்கு நாம் சுகமாகப் பயணிப்பதற்குத்தானே இத்தனைப் பாடு என்று, எத்தனை சிரமங்களை நாம் எதிர்கொண்டாலும், சாலையில் கல்லையும் மண்ணையும் கொட்டிவைத்தாலும், நாம்பாட்டுக்குக் கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டே இருக்கிறோம். சாலையில் விரிசல் ஏற்பட்டுப் பெரும்பள்ளமே உண்டாகி கார் உள்ளே விழுந்தாலும், அதைப் போட்டோ எடுத்து வாட்ஸப்பில் வைரல் ஆக்குவதிலும், மீம்ஸ் போட்டுக் கலாய்ப்பதிலும்தான் நம் புத்தி போகிறதே தவிர, அரசு இத்தனை அலட்சியமாக வேலை செய்கிறதே என்று நமக்குக் கோபமே வருவதில்லை; வராது. ஏனென்றால், அது நம் எதிர்காலத்துக்கான நற்பணி ஆயிற்றே!

ஆனால், சிங்கப்பூர் அரசு அப்படியல்ல. எந்தப் பொது வேலையாக இருந்தாலும், தன் மக்களுக்கு ஒரு துளி சிரமம்கூடத் தரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

இங்கெல்லாம் புதுசாக ரோடு போடுகிற வேலைகள், சாலைப் பராமரிப்பு வேலைகள் எதுவும் நடைபெறுவதில்லையா? என்று டிரைவரைக் கேட்டதும், அவர் சொன்ன பதில் என்னை வியக்க வைத்தது.

பக்கத்துல பாருங்க. ஒரு நீல ரெக்ஸின் துணியால் ஆன சுவர் தெரியுதா... அதும்பின்னால புதுசா ரோடு போட்டுக்கிட்டிருக்காங்க. ஆனா, இங்கே எதுவும் தெரியலையேன்னு பார்க்கறீங்க. ரோடுல கல்லு மண்ணு எதுவும் சிதறிக்கிடக்கலையே, புழுதி எதுவும் பறக்கலையேன்னு நினைக்கறீங்க. சாலையில புழுதி வரக்கூடாதுங்கிறதுக்காக எக்ஸாஸ்ட் ஃபேன் மாதிரி ஒரு டெக்னாலஜி வெச்சிருக்காங்க. அதேபோல, அங்கே சிமென்ட், கருங்கல் ஜல்லியைக் கொண்டு போற லாரிகள் வெளியே வரும்போது அப்படியே தூசு தும்போட வெளியே வராது; டயர்கள்ல ஒட்டியிருக்கிற மண் போக நல்லா கழுவி, சுத்தமா குளிச்சிட்டுதான் வெளியே வரும்என்றார் சைனீஸ் கலந்த ஆங்கிலத்தில்.

காற்று மாசு, தண்ணீர் மாசு இவை ஏற்படக்கூடாதென்பதில் கெடுபிடியாக இருக்கிறது சிங்கப்பூர் அரசாங்கம். இங்கே கழிப்பறைகளில் வருகிற தண்ணீரைக் கூடப் பிடித்துக் குடிக்கலாம்; அத்தனை சுத்தமாக இருக்கும் என்றார் அவர் பெருமையாக. குடிதண்ணீரை நன்கு சுத்திகரித்துத்தான் வெளியே பயன்பாட்டுக்கு அனுப்புகிறார்கள் என்றார்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை நீர் மாசு, காற்று மாசு இவற்றில் எனக்கு வேறொரு அனுபவம் கிடைத்தது. குடிதண்ணீரைச் சுத்திகரித்துதான் அனுப்புகிறார்கள்; சரி. ஆனால், அந்தத் தண்ணீரைத் தொடர்ந்து குடிப்பதால் அங்குள்ளவர்களுக்குச் சிறுநீரகப் பிரச்னைகள் வருவதாக அறிகிறேன். அது சுத்திகரிப்பால் உண்டாகும் விளைவு. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால், அங்கிருக்கும் பலர் சொல்லக் கேள்வி. அதேபோல், எவ்வளவுதான் பணக்காரர்களாக இருந்தாலும், அவர்கள் சொந்தமாக ஒரு கார் வாங்கிச் சந்தோஷிக்க முடியாதவாறு ஏகப்பட்ட நிபந்தனைகளைப் போட்டு முடக்கி வைத்து, மாசற்ற காற்றுக்காக மெனக்கெடும் சிங்கப்பூர் அரசு, பொது இடங்களில் சிகரெட் புகைப்பவர்களைக் கண்டுகொள்வதே இல்லை. இங்கே நம் சென்னையில், பொது இடங்களில் சிகரெட் புகைப்பவர்களை மிக மிக அரிதாகத்தான் பார்க்கிறேன். ஆனால், சிங்கப்பூரிலோ பஸ் ஸ்டாப்பில், பூங்காக்களில், சாலைகளில் எனப் பொது இடங்களில் பலரும் சிகரெட்டும் கையுமாகத்தான் வாயிலிருந்து புகை வழிய வழியச் செல்கிறார்கள். எங்கு திரும்பினாலும் தேவலோகத்தில் இருப்பதுபோலவே இருக்கிறது. எந்த கால் டாக்ஸியைக் கூப்பிட்டு ஏறினாலும், உள்ளே குப்பென்று சிகரெட் வாடை! வண்டி ஓட்டும்போது டிரைவர் சிகரெட் பிடிப்பதில்லை; ஆனால், சற்று முன் அவர் பிடித்த அந்த சிகரெட்டின் நெடி மூச்சை முட்டுகிறது.

சரி, போகட்டும்... வாருங்கள், நாம் செந்தோஸா தீவுக்குச் செல்வோம்.

செப்டம்பர் 7-ம் தேதி காலையில் சாப்பிட்டுவிட்டு, ஜெயஸ்ரீ சுரேஷ் பக்குவமாகப் பேக் செய்துகொடுத்த பிரெட் ப்ளஸ் வேர்க்கடலைச் சட்னி பார்சல்களுடன் கிளம்பிவிட்டோம். பஸ் பிடித்துமவுன்ட் ஃபேபர் என்னும் இட்த்துக்கு வந்தோம். அங்கிருந்து செந்தோஸாவுக்கு கேபிள் கார் செல்கிறது. ஒரு டிக்கெட் வாங்கினால், அதிலேயே திரும்பவும் ஏறி இங்கே வந்து இறங்கிவிடலாம். நாங்கள் நால்வரும் அதில் பயணித்து செந்தோஸா தீவில் சென்று இறங்கினோம்.

சந்தோஷம்என்னும் சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவான சொல்செந்தோஸா. மலாய் மொழியில் இதற்கு அமைதி, மகிழ்ச்சி என்றெல்லாம் பொருள். இதன் பூர்வாசிரமப் பெயர்சாவுத் தீவு. டெட் ஐலேண்டு. ஆமாம்,புலாவ் பிளேக்காங் மாட்டிஎன்னும் மலாய்ச் சொல்லின் பொருள் அதுதான். அப்புறம், 1972-ம் ஆண்டில்தான், மக்கள் விருப்பத்தின்பேரில் இதற்குசெந்தோஸா தீவுஎன்று அதிகாரபூர்வமாகப் பெயரிடப்பட்டதாகச் சொல்கிறார்கள். மக்கள் விருப்பத்தை எப்படிக் கேட்டறிந்தார்கள் என்று தெரியவில்லை. இங்கெல்லாம், அதிர்ச்சியுடன் கேட்கிறார்கள் மக்கள்என்று தனியார் தொலைக்காட்சிகளில் அடிக்கடி சொல்கிறார்களே, அந்த மாதிரி இருக்கலாமோ, என்னவோ!

உள்ளே பார்க்க ஏராளமான சுவாரஸ்யமான இடங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் டிக்கெட். ஏதேனும் மூன்று, ஏதேனும் ஐந்து, ஏதேனும் எட்டு என பேக்கேஜ்களாகவும் வாங்கிக் கொள்ளலாம். எது பார்த்தாலும் பார்க்கவில்லை என்றாலும்,ஸீ அக்வேரியம்அதாவதுஅண்டர்வாட்டர் வேர்ல்டுகட்டாயம் போய்ப் பாருங்கள்என்று சொல்லி அனுப்பியிருந்தார் சுரேஷ். ஐந்து அயிட்டங்கள் கொண்ட பேக்கேஜ் டிக்கெட் வாங்கினோம்.

அண்டர்வாட்டர் வேர்ல்டுவாங்கினாலே, கூடவே கொசுறாக ஹோலோகிராம் நடன நிகழ்ச்சி என்ற ஒன்றையும் தலையில் கட்டிவிடுகிறார்கள். அதற்கான காரணம், அந்த நாளின் இறுதியில்தான் தெரிந்த்து. இந்த இரண்டும் போக, ஸ்கைலைன் லூஜ், இரண்டு த்ரீ-டி படங்கள் ஆகியவை கொண்ட பேக்கேஜ் டிக்கெட்டை வாங்கிக்கொண்டோம். பட்டர்ஃப்ளை பார்க் ஃப்ரீ. மெழுகுப் பொம்மை மியூஸியம் பார்ப்பதில் எங்களுக்கு அத்தனை சுவாரஸ்யமில்லை.

செந்தோஸா தீவில் உள்ளேயே அழகான மினி பஸ்கள் ஓடுகின்றன. எதில் வேண்டுமானாலும் ஏறி இறங்கலாம். ஃப்ரீ!

மெகா ஸிப்என்னும் சாதனை விளையாட்டுக்கு மகனும் மகளும் டிக்கெட் வாங்கியிருந்தார்கள். முதலில் அங்கே போனோம்.

நாலு மாடி கொண்ட ஒரு கட்டடத்தின் உச்சிக்கு ஏற வேண்டும்; அங்கே நம் வெயிட்டைச் சோதித்து, அதற்கேற்ப இடுப்பில் ஒரு பெல்ட் கட்டி, கொக்கி ஒன்றை இணைத்துவிடுவார்கள். அவர்கள் ரெடி சொன்னதும், அங்கிருந்து கீழே குதிக்க வேண்டும். தரையை நெருங்குகையில் கயிறு இழுவிசை மூலமாக வேகம் குறைந்து, பத்திரமாகத் தரை இறங்கலாம். கிட்டத்தட்ட பஞ்சி ஜம்ப்பிங் போலத்தான்.

கீழே குதித்தவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். பலரும்வென்று அலறிக்கொண்டே குதித்தார்கள். அவர்களில் யாரும் தரையில் காலூன்றி நிற்கவில்லை. தடுமாறிக் கீழே விழுந்தார்கள். என்னதான் பாதுகாப்பாக பாராசூட்டில் குதித்தாலும், கீழே காலூன்றும்போது பிடிப்பில்லாமல் விழுவார்கள் அல்லவா, அதுபோலத்தான்! என் மகளும் மகனும் அடுத்தடுத்துக் குதித்தார்கள். விழுந்து எழுந்தார்கள்.

மெகா ஸிப்பில் அடுத்தது இன்னும் சுவாரஸ்யம், த்ரில் நிறைந்தது. மேலே நீண்டு செல்லும் கம்பியிலிருந்து தொங்கும் கொக்கியை இடுப்பில் மாட்டித் தள்ளிவிடுவார்கள். மிக உயரத்தில், அந்தரத்தில் சர்ரென்று கம்பியில் விஞ்ச் போல சறுக்கிக்கொண்டே ஒரு கி.மீ. தூரம் செல்ல வேண்டியதுதான். மகன், மகள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து கம்பியில் கேபிள் கார் போலச் சறுக்கிச் சென்றார்கள்.

இப்படி மெகா ஸிப் ரைடு செல்பவர்களைக் கீழே இருந்து ஒரு ஜீப்பில் அழைத்துக்கொண்டு வந்து ஆரம்ப இடத்துக்கு விடுகிறார்கள். நாங்கள் காத்திருந்தோம். மகன், மகள் இருவரும் வந்ததும், செந்தோஸாவின் மினி பஸ் பிடித்து, அடுத்த இடத்துக்குச் சென்றோம்.

அண்டர்வாட்டர் வேர்ல்டு! மிகப் பிரமாண்ட அக்வேரியமான இதைஓஷனேரியம்என்று அழைக்கிறார்கள். நாம் வெளியே நின்று, தொட்டிகளில் நீந்தும் மீன்களைப் பார்த்ததுபோக, நாம் உள்ளே இறங்க, பெரிய பெரிய சுறா மீன்கள் எல்லாம் நம்மைக் கிட்டே வந்து வேடிக்கை பார்த்துவிட்டுச் செல்லும் இடம்தான் இந்த அண்டர்வாட்டர் வேர்ல்டு. 1991-ல் தொடங்கப்பட்டதாம் இது.

உள்ளே இறங்கி கண்ணாடி குகைப் பாதைகள் வழியாக நடந்தோம். மிகப் பெரிய கண்ணாடிச் சுவருக்கப்பால் ராட்சத சுறா மீன்கள், நீள நீளமான பாம்புகள் போன்ற மீன்கள், கலர்ஃபுல்லான பற்பல மீன் வகைகள், நட்சத்திர மீன்கள், பூக்கள் உதிர்ந்த மாதிரியான மீன்கள், ஜெல்லி மீன்கள், ராட்சத நண்டுகள், கடல் ஆமைகள், தண்ணீர்ப் பாம்புகள் என என்னென்னவோ காணக் கிடைத்தன. நிஜமாகவே பரவசமான அனுபவம்தான்.

உள்ளே, அடுத்தடுத்து வெவ்வேறு கூடங்களுக்குப் போய்க்கொண்டே இருந்தோம். ஓரிடத்தில் பெரிய கப்பல் ஒன்று உடைந்து கிடந்ததைப் பார்த்தோம். டைட்டானிக் படத்தின் ஆரம்பக் காட்சி போன்று இருந்தது. மற்றொரு இடத்தில், ஸ்டார் ஃபிஷ் ஒன்றைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார்கள். பார்த்தேன். மிருதுவாக, மெத்து மெத்தென்று இருக்கும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, செங்கல் ஓட்டைத் தொட்டதுபோன்று கடினமாக இருந்தது. அதை எடுத்து என் கையில் கொடுத்தார்கள். உயிர் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாமல், கட்டையாக இருந்தது. 

இப்படியாக, அண்டர்வாட்டர் வேர்ல்டில் இரண்டு மணி நேரம் ஓடிப்போனது. அதன்பின், தியேட்டருக்குச் சென்றோம்.

அடுத்தடுத்து இரண்டு தியேட்டர்களில் 3D, 4D படங்கள். ஒன்று, ‘Journey 2 – The Mysterious Island’ என்னும் படம். 3D கண்ணாடி கொடுத்து, உள்ளே அனுப்பினார்கள். கதை புரியவில்லை. தேவையுமில்லை. அந்தப் படம் அதன் கதைக்காக இல்லை; எஃபெக்ட்ஸுக்காக. ஐந்து பேர் எதையோ தேடி, ஒரு தீவுக்குச் செல்கிறார்கள். வழியில் அவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள், அவற்றிலிருந்து அவர்கள் தப்பிப்பது ஆகியவை தத்ரூபமாக 3D முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. காட்சிகளுக்கேற்றவாறு நம் மீது மழைச்சாரல் நிஜமாகவே தெளித்தது. ஜீப் கரடுமுரடான பாதையில் தடதடத்து ஓடும்போது, நமது நாற்காலியும் ஆடியது. அங்கே அவர்கள் காலைச் சுற்றிப் பாம்பு ஊர்ந்தால், இங்கே அமர்ந்திருக்கும் நம் காலைச் சுற்றியும் ஏதோ ஊர்ந்தது. தூக்கிவாரிப் போட்ட்து. கிட்டத்தட்ட 20 நிமிடப் படம். நல்ல அனுபவம்!

அடுத்ததும் படம்தான். ஆனால், இது சற்றுத் திகிலான, த்ரில்லான, ரோலர்கோஸ்டரில் தலைசுற்றிப் போவது போன்ற ஜாலிரைடு படம். Log rider என்று பெயர். 3D கண்ணாடி போட்டுக்கொண்டு, ஐந்து ஐந்து பேர் உட்காரும்படியான கூண்டுகளில் உள்ள நாற்காலிகளில் உட்கார்ந்தோம். படம் தொடங்கியது. நாமே எங்கோ ஆகாயத்தில், பல மைல் உயரத்தில், கம்பி மீது சறுக்கியும் தொங்கியும் செல்வது போல வேகமாகக் காட்சிகள் நகர்ந்தன. உயரேயிருந்து தடாலென்று கீழே... கீழே... கீழே... விழுந்தோம். மரத்தில் படர்ந்திருந்த ஒரு கொடியில் தொற்றினோம். தரையில் இழுத்துச் செல்லப்பட்டோம். பெரிய பெரிய மரக்கட்டைகளில் மோதினோம். எங்கள் மீது பாறைகள் உருண்டு விழுந்தன. நெருப்புக் கங்குகள் வீசியடித்தன. எங்கள் கலம் கடலுக்குள் விழுந்து, களக் புளக்கென்று உள்ளே... உள்ளே... உள்ளே... மூழ்கியது. சட்டென்று ஒரு திமிங்கிலம் எங்கள் கலத்தைத் தாக்கித் தூக்கி எறிந்தது. எல்லாம் எஃபெக்ட்ஸ்! கொஞ்ச நேரத்தில் வயிற்றைக் கலக்கிவிட்டார்கள் கலக்கி!

மூன்று அயிட்டங்கள் முடிந்தன. அடுத்து, லூஜ் எனும் ஜாலி ரேஸ் போகலாம் என்று முடிவு செய்தோம். மினி பஸ் பிடித்து, அந்த இடத்துக்குச் சென்றோம். குழந்தைகள் விளையாடும் ஆட்டம்போல் இருக்கிறது. ஆனால், பெரியவர்களும் உற்சாகமாகக் கலந்துகொண்டு, ரேஸில் தூள் கிளப்பினார்கள். சிறு சிறு சக்கரங்கள் கொண்ட, தரையோடு தரையாக இருக்கும் சிறு வண்டியில் அமர்ந்துகொண்டு, காலை முன்னே உள்ள பெடலில் வைத்துக்கொள்ள வேண்டும். பெடலை அழுத்த அழுத்த வண்டி வேகமெடுக்கும். காலைப் பின்னுக்கிழுத்துக்கொண்டால் வேகம் குறையும். சிம்பிளான மெக்கானிஸம்தான். ஆரம்பத்தில் சொல்லிக்கொடுத்து, சின்ன டெஸ்ட் வைக்கிறார்கள். ஓகே ஆனதும், சரிவுப் பாதையில் நாம் வண்டியைச் செலுத்திக்கொண்டு பறக்க வேண்டியதுதான். அந்த சிமென்ட் சாலைகள் வளைந்தும் நெளிந்தும் சாய்ந்தும் செல்கின்றன. சின்னச் சின்னக் குழந்தைகள்கூட இந்த ஜாலி விளையாட்டில் பட்டையக் கிளப்புகின்றன. சுமார் ஒரு கி.மீ. தூரம் உள்ள இந்த ஓட்டத்தில் கலந்துகொண்டோம்.

மாலை 5 மணி ஆனது. இன்னும் ஒரே ஒரு அயிட்டம். பேக்கேஜ் ரூபத்தில் எங்கள் தலையில் கட்டப்பட்ட அயிட்டம். ஹோலோகிராம் நடன நிகழ்ச்சி.

கே-லைவ் தியேட்டர் என்னும் ஹோலோகிராம் தியேட்டருக்குள் நுழைந்தோம். கும்மிருட்டாக இருந்தது. சோதனையாக நாங்கள் நால்வர் மட்டுமே இருந்தோம். எங்களைத் தவிர வேறு ஈ, காக்காய் இல்லை. எங்களுக்காக மட்டுமே ஷோ தொடங்கப்பட்டது.
எதிரே மேடையில் வண்ண ஒளிகளால் உருவங்கள் தோன்றின. நிஜமாகவே மேடையில் நடனக் கலைஞர்கள் இருப்பது போன்ற மாயத் தோற்றம். பிரபலமான கே-பாப் ஸ்டார்களை இப்படி ஹோலோகிராமாகச் செய்து மேடையில் நடனமாட விடுகிறார்கள். நடனமணிகள் ஒவ்வொருவரும் தங்கள் பெயரையும் பிரதாபங்களையும் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். பின்பு பாடியபடியே நடனமாடுகிறார்கள். ஒருவரோடு ஒருவர் மோதி, புகையாய்க் கரைந்து காணாமல் போகிறார்கள். பின்பு வேறு இடத்தில் தேவர்கள் மாதிரி தோன்றுகிறார்கள். ஜீன்ஸ் படத்தில்,கண்ணோடு காண்பதெல்லாம்...பாடலில் இரண்டு ஐஸ்வர்யா ராய்களில் ஒருவர் ஹோலோகிராம் உருவம் என்று கதைப்படி சொல்லப்பட்டதல்லவா, அது போன்ற காட்சிதான் இதுவும். எல்லாம் சரி! ஆனால், அந்த நடனக் கலைஞர்கள் யாரையும் எங்களுக்குத் தெரியவில்லை. பாடல்களும் கேள்விப்பட்டவையாக இல்லை. தவிர, அந்த உருவங்கள் ஏதோ டிசம்பர் சீஸன் மாதிரி மேடையிலேயே எல்லாக் கூத்தையும் பண்ணிக்கொண்டிருந்தன. முதலீட்டார்கள் மாநாட்டில் ஹோலோகிராம் குதிரை பறந்து வந்து, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு வணக்கம் வைத்ததே... அதுபோல இவர்கள் கீழே இறங்கி வந்து எங்களிடையே புகுந்து நடந்து சென்றிருந்தாலாவது கொஞ்சம் பிரமிப்பு ஏற்பட்டிருக்கும். அப்படி எதுவும் இல்லாமல் மேடையிலேயே நடனம் ஆடிக்கொண்டிருந்தால், அது ஹோலோகிராமாக இருந்தால் என்ன, நிஜமாகவே யாராவது ஆடினால்தான் என்ன... போர் போர்தான்!

அதுவும் பத்து, இருபது நிமிடங்கள் என்றால், தொலைகிறது என்று விடலாம். முக்கால் மணி நேரம் வெச்சு அறு அறுவென்று அறுத்தார்கள். சரியான மொக்கை புரொகிராம்!

இந்த அறுவைக்குப் பயந்துதான் யாரும் வரவில்லை என்பது நிதர்சனம். நாங்கள் அப்பிராணிகளாக மாட்டிக்கொண்டோம். பேக்கேஜ் டிக்கெட்டில் சாமர்த்தியமாக இதைஅண்டர்வாட்டர் வேர்ல்டுடன் சேர்த்துக்கொடுத்ததன் காரணம் இப்போது புரிகிறதா?! அப்படியே கொடுத்திருந்தாலும், உள்ளே நுழைந்து இதன் லட்சணம் தெரிந்தவுடனேயேபோதுமடா சாமிஎன்று வெளியேறியிருந்தால், இன்னும் வேறு சில சுவாரஸ்யமான இடங்களையாவது பார்த்திருக்கலாம். நாங்கள் தப்பு பண்ணிவிட்டோம். அந்த நடனமணிகள் இறங்கி வந்து எங்கள் எதிரில் நிற்கத்தான் போகிறார்கள் என்று கற்பனை கண்டுகொண்டிருந்தோம். அப்படி எந்த மாயாஜாலமும் நடக்கவில்லை. தவிர, எங்கள் நால்வருக்காக மட்டுமே ஒரு ஷோ மெனக்கெட்டுப் போடுகிறபோது,சகிக்கவில்லைஎன்று வெளியேறுவதும் சங்கடமாக இருந்தது. அது அவர்களை இன்சல்ட் செய்கிற மாதிரி ஆகும் என்று மகனும் மகளும் கருதியதால், கடனே என்று அந்த ஷோவைப் பார்த்தோம். ஆக, முக்கால் மணி நேரம் தண்டம்.

விட்டால் போதும் என்று வெளியேறியபோது மணி மாலை 7.நாளை ஒருநாள்தான் இருக்கிறது நமது சிங்கப்பூர் டூரின் மிச்சம்என்கிற எண்ணம் ஏக்கமாக உருவெடுக்க, மீண்டும் கேபிள் கார் பிடித்து, எம்.டி.ஆர். டிரெயின் பிடித்து, பஸ் பிடித்து, வீடு வந்து சேர்ந்தோம்.

(பயணம் தொடரும்) 

Tuesday, January 09, 2018

சுபா - நட்புக்கு மரியாதை!

ராஜேஷ்குமாரின் எழுத்தில் உள்ள விறுவிறுப்பு, பட்டுக்கோட்டை பிரபாகரின் எழுத்தில் உள்ள ஜிலுஜிலுப்பு இரண்டும் கலந்தாற்போன்ற ஒரு தனித்துவ நடை இரட்டை எழுத்தாளர்கள்சுபாவினுடையது. விறுவிறுப்பு, ஜிலுஜிலுப்பு இரண்டில் சு எதற்குச் சொந்தக்காரர்,பா எதற்குச் சொந்தக்காரர் என்பது எனக்கு மட்டுமல்ல, வேறு யாருக்குமேகூடத் தெரியாத ஒரு சுவாரஸ்ய ரகசியம்.

ஒரு பேச்சுக்காகத்தான் இதைச் சொன்னேனே தவிர,சுபாவைப் பொறுத்தவரை அவர்கள் ஒருவரே! அதுமட்டுமல்ல, தங்களைசுவாகவும்பாவாகவும் மற்றவர்கள் பிரித்துப் பார்ப்பதைக்கூட விரும்பாத இறுகிய நட்பு அவர்களுடையது என்பதும் எனக்குத் தெரியும்.

இசையுலகில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ் போன்று இந்தித் திரையுலகிலும் பல இசை ஜோடிகள் இருக்கிறார்கள். கர்னாடக சங்கீதத்திலோ கேட்கவேண்டாம், சகோதரர்கள், சகோதரிகள் என சங்கீத ஜோடிகள் பலர் உண்டு. ஆனால், எழுத்துலகில்சுபாவைத் தவிர, எனக்குத் தெரிந்து வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. இருவரின் முதலெழுத்தும் இணைந்துசுபாஎன்னும் அழகான ஒரு பெயர் இசைவாக அமைந்தது எனக்கு ஓர் ஆச்சர்யம்! கல்லூரிக் காலத்திலிருந்து தொடரும் இவர்களின் நாற்பதாண்டுகளுக்கும் மேலான நட்பு, நட்பை போஷிக்கத் தெரியாத எனக்கு மற்றுமொரு ஆச்சர்யம்!

இருவரும் இணைந்து குறைந்தபட்சம் 300 சிறுகதைகளாவது எழுதியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். கருணை, தீர்ப்பு, நிழல் நர்த்தனம், சிம்மாசனம், கல்வெட்டுகள் கரையும்... எனப் பலப்பல சிறுகதைகளை நான் படித்திருக்கிறேன்.கோழிக்குஞ்சு என்று ஒரு சிறுகதை. சுஜாதாவின்காகிதச் சங்கிலிகள் கதையைப் படித்திருக்கிறீர்களா? கதையின் முடிவில் உறவினர்கள் யாருமே கிட்னி தராமல் ஒருவர் சாக நேரிடுவதைப் படிக்க நேர்கிறபோது, நம் மனசு பாரமாய் வலிக்குமல்லவா, அத்தகைய ஒரு வலியை சுபாவின்கோழிக்குஞ்சு சிறுகதை ஏற்படுத்தியது. 

ஊனமுற்ற குழந்தையாகப் பிறப்பதன் வலிகளை இந்தக் கதை நெடுக விவரித்திருப்பார்கள். தம்பி, தங்கைகள் இந்த மூத்த குழந்தையைப் படுத்துகிற பாடு, படிக்கிற நமக்கே கஷ்டமாக இருக்கும். குழந்தைகள் பெரியவர்களாக வளர, அப்பாவும் அம்மாவும் இறந்துபோக, ஊனமுற்ற தன் அண்ணனைக் கொண்டுபோய் விடுதியில் சேர்த்துவிடுவார்கள். கடைசியில், ஒருநாள் தம்பி தேடி வருவான். பாச மழை பொழிவான். விடுதியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வான். அண்ணனின் வாயில் ஒழுகும் எச்சிலைக்கூடத் துடைத்துவிடுவான்.ஆஹா, என் தம்பி எவ்வளவு நல்லவன்!என்று அண்ணனின் மனசு நெகிழும். டாக்டர் வருவார். அண்ணனின் உடம்பைச் சோதனை செய்வார்.மருந்து, மாத்திரை கொடுத்து நம்மை குணப்படுத்திவிடப் போகிறார்கள்என்று அண்ணனின் மனம் சந்தோஷத்தில் குதிக்கும். ஆனால்... தன் மனைவியின் தம்பிக்கு அண்ணனின் கிட்னியை எடுத்துப் பொருத்தும் உத்தேசத்தில்தான் அவன் தன் அண்ணனை விடுதியில் இருந்து அழைத்து வந்து, டாக்டரிடம் காண்பித்திருக்கிறான் என்று க்ளைமாக்ஸில் கதை முடியும்போது, நம் நெஞ்சம் இரும்பாய்க் கனத்துப் போய்விடும். அத்தகைய வலுவான எழுத்து சுபாவினுடையது. இந்தக் கதை ஓர் உதாரணம்தான். சுபாவின் பல கதைகள் இத்தகைய ஆழம் மிக்கவை.

சிறுகதையில் தொடர்கதைக்கே உரிய திருப்பங்களைப் புகுத்துவதும், தொடர்கதையில் சிறுகதையில் மட்டுமே சாத்தியப்படக்கூடிய மெசேஜை நுழைப்பதும் இவர்களுக்கே உரிய பாணி. கணேஷ்-வசந்த், விவேக்-ரூபலா, பரத்-சுசீலா ஜோடிகள் போன்றுசுபாவின் நரேன்-வைஜெயந்தி ஜோடியும் கதை ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமான, பரிச்சயமான துப்பறியும் ஜோடி.

சுபா எழுதிய மாத நாவல் ஒன்றின் தலைப்பு இப்போது என் நினைவில் இல்லை. பல வருடங்களுக்கு முன்னால் படித்த கதை அது. அது ஒரு சரித்திரக் கதை. ஆனால், முழுக்க முழுக்கக் கற்பனைக் கதாபாத்திரங்களாலும், கற்பனைச் சம்பவங்களாலும் சரித்திர நடையில் எழுதப்பட்ட கதை. முன்குறிப்பு கொடுத்திருக்கவில்லையென்றால், நிஜமாகவே சரித்திரத்தில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக்கும் என்று நம்ம்ம்ம்ம்பி ஏமாந்து போயிருப்பேன். ஏற்கெனவே, பள்ளியில் சரித்திரப் பாடத்தில் நான் ரொம்ப வீக். இத்தனை சுவாரஸ்யமாக யாராவது அன்றைக்குச் சரித்திரப் புத்தகப் பாடங்களைத் தொகுத்திருந்தால், நான் நிச்சயம் சரித்திரத்தில் நல்ல மார்க் எடுத்திருப்பேன்.

இன்றைக்குச் சுபாவுடன் நெருங்கிய நட்பில் இருக்கிறேன். நான் ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்ததற்குப் பிறகுதான் என்னை அவர்களுக்குத் தெரியும். ஆனால், நான் சாவியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே அவர்களை அறிவேன்.

அவர்களை அறிவேன் என்றால், வெறுமே அவர்களின் சிறுகதைகள் மூலமாக மட்டுமே அல்ல; நேரிலேயும் சந்தித்திருக்கிறேன்.
சாவி இதழுக்கு ஒரு சிறுகதை கொடுப்பதற்காகவோ அல்லது தொடர்கதை எழுதுவது தொடர்பாகப் பேசுவதற்காகவோ அவர்கள் சாவி சாரை சந்திக்க வந்திருந்தார்கள். அப்போது சாவி சார் தமது அண்ணா நகர் வீட்டில் மாடிப் போர்ஷன் கட்டியிருந்த புதிது. மாடியில் நுழைந்ததுமே, வலது பக்கம் ஒரு பத்துக்குப் பத்து சதுர அறை இருக்கும். அங்கே நான் ஒரு கோணி மூட்டையைக் கவிழ்த்துப் போட்டு, அதன் பக்கத்திலேயே தரையில் சப்பணம் போட்டு அமர்ந்து, போட்டோவோ அல்லது ஏதும் லைன் டிராயிங்கோ தேடிக்கொண்டிருந்தேன். ஆர்ட்டிஸ்ட் வரவில்லை என்றால், அவர் எழுதிய பழைய எழுத்துக்களை எடுத்து வெட்டி ஒட்டித் தேவையான புதிய தலைப்பு உண்டாக்கி அவசரத்துக்கு அனுப்புவதும் என் வழக்கம். அப்படி ஏதோ ஒரு காரணத்துக்காக நான் மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தபோது, சுபா அங்கே வந்தார்கள். சாவி சாரைப் பார்க்கணும் என்றார்கள். இருங்க, கூப்பிடுறேன் என்று சொல்லிவிட்டு, அவர்களை அங்கேயே நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு, உள்ளே போய் சாவி சாருக்குத் தகவல் சொன்னேன். பின்பு மீண்டும் வந்து, பழையபடியே தரையில் கால் பரப்பி அமர்ந்து, என் வேலையைத் தொடர்ந்தேன்.

சுபாவுக்கு நான் ஒரு சப்-எடிட்டர் என்றே தோன்றியிருக்காது. யாரோ ஒரு எடுபிடிப் பையன் என்றுதான் நினைத்திருப்பார்கள். காரணம், என் கோலமும் தோற்றமும் அப்படி.

நீங்க இங்கே என்ன பண்றீங்க? என்று கேட்டார் (சு)பா. சப்-எடிட்டரா இருக்கேன் என்றேன்.

அப்புறம் எதுக்கு நீங்க இந்த வேலையைச் செய்யறீங்க? யாராவது அட்டெண்டரைச் செய்யச் சொல்ல வேண்டியதுதானே? என்றார் (சு)பா.

இங்கே இடைச்செருகலாக ஒரு முக்கியக் குறிப்பைச் சொல்ல விரும்புகிறேன். நான் சாவியில் உதவிஆசிரியனாகச் சேர்ந்திருந்த புதிது. அங்கு ஏற்கெனவே எனக்கு சீனியர்களாக இருந்த திரு.கண்ணன் என்கிற அபர்ணாநாயுடு, ரமணீயன், கே.வைத்தியநாதன் மூவரும் விலகி, நான் ஒருவன் மட்டுமே சாவி ஆசிரியரின் கீழ் உதவி ஆசிரியனாகப் பணியாற்றத் தொடங்கியிருந்த நேரம். அட்டெண்டர் வேலை முதற்கொண்டு எல்லா வேலைகளையும் ஆர்வத்தோடு இழுத்துப் போட்டுப் பரபரவென்று உழைத்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. தவிர, இளைஞனுக்கே உரிய திமிரும் தெனாவெட்டும்கூட அப்போது என்னிடத்தில் இருந்தன. கூடவே, எதிலும் குதர்க்கம் கண்டுபிடிக்கும் குறுக்குப் புத்தி. பக்குவமடையாத பருவம். அதனால்தானே மூன்று முறை பெருந்தகையாளர் சாவியிடம் கோபித்துக்கொண்டு வெளியேறினேன்.

திரு.பாலா தப்பாக ஒன்றும் கேட்டுவிடவில்லை. சப்-எடிட்டராக இருந்துகொண்டு அதற்கேற்ற வேலையைச் செய்யாமல், வெட்டியாக ஏதோ செய்துகொண்டிருக்கிறேனே என்கிற அக்கறையில்தான் கேட்டார். அதைப் பின்னாளில்தான் நான் உணர்ந்தேன். ஆனால், அந்தக் காலத்தில், அந்த நேரத்தில் அவர் யதார்த்தமாக அப்படிக் கேட்டதும், பக்குவமடையாத என் மனசு பரபரவென்று பற்றிக்கொண்டது. சுறுசுறுவென்று ரோஷம் பொங்கியது.

எனக்குச் சம்பளம் கொடுப்பவர் சாவி சார். நான் என்ன வேலை செய்யலாம், என்ன செய்யக் கூடாதுன்னு அவருக்குத் தெரியும். ஓகே?என்றேன், மனசிலிருந்த கோபத்தைக் கூடுமானவரை குரலில் காட்டாமல்.

அதற்குள் சாவி சார் வந்துவிட்டார். சுபா அவரோடு பேசப் போய்விட்டார்கள். நான் என் வேலையை முடித்துக்கொண்டு, கீழே வந்துவிட்டேன்.

அதன்பின்பு, ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்ததற்குப் பிறகுதான், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 2000-வது ஆண்டிலிருந்துதான் அவர்களுடனான பழக்கம் ஏற்பட்டு, இன்றைக்கு இறுகிய நட்பாக முகிழ்த்திருக்கிறது. சாவி காலத்துச் சம்பவத்தை அவர்கள் அன்றே மறந்து போயிருக்கலாம்; நினைவிலேயே பதியாமலும் இருந்திருக்கலாம். நானும் இதுவரை அதுபற்றி அவர்களிடம் சொல்லியதில்லை. இதோ, இந்தப் பதிவின்மூலம் அவர்கள் அறிந்தால்தான் உண்டு. அன்றைய இளம்பிராயத்து ரவியின் அதிகப்பிரசங்கித்தனமான பதிலுக்கு இன்றைய பக்குவப்பட்ட ரவியாக திரு.பாலாவிடம் மானசிகமாகஸாரி கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்ரீவேணுகோபாலன் என்னும் ஆன்மிக எழுத்தாளர் புஷ்பாதங்கதுரையாக அவதாரம் எடுத்து, ஜிலுஜிலு கதைகள் எழுதிக் கலக்கியது சீனியர் வாசகர்களுக்குத் தெரியும். சுபா அப்படியே உல்டா. க்ரைம் கதைகள் எழுதி அசத்திக் கொண்டிருந்தவர்கள் காஷ்யபன் அவதாரம் எடுத்து, ஆன்மிக குருமார்களைப் பற்றியும், திருத்தல மகிமைகள் பற்றியும் கட்டுரைகளும் தொடர்கட்டுரைகளும் எழுதிக் கலக்கினார்கள். சத்குரு ஜக்கி வாசுதேவிடம் பேட்டி கண்டுஅத்தனைக்கும் ஆசைப்படுஎன்று இவர்கள் எழுதிய தொடருக்கு வாசகர்களிடம் அத்தனை வரவேற்பு.

பொதுவாக, ஆனந்த விகடன் தீபாவளி மலரை ஆசிரியர் குழுவில் உள்ளவர்களேதான் தயாரிப்பது வழக்கம். ஒரே ஒருமுறை,வேறு ஒரு பிரபல எழுத்தாளரை வைத்துத் தயாரித்தால் என்ன என்று ஆசிரியர் குழுவில் முடிவெடுத்தோம். எழுத்தாளர்கள் சுபாவைக் கேட்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. சுபாவைத் தொடர்புகொண்டு நான் இந்தத் தகவலைச் சொன்னேன். உடனே ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டார்கள்.

அந்தக் கணத்திலிருந்து பரபரவென்று இயங்கினார்கள். ஐடியாக்களைக் கொட்டினார்கள். அசைன்மென்ட்டுகளைப் பிரித்து வழங்கினார்கள். கட்டுரைகளைத் தேடித் தேடிப் பெற்றார்கள். எழுத்தாளர் சுஜாதாவையும் பட்டுக்கோட்டை பிரபாகரையும்சினிமாவுக்கான ஒரு திரைக்கதையை எழுதுவது எப்படி?என்று கட்டுரை எழுத வைத்தார்கள். பட்டுக்கோட்டை பிரபாகர் அதை காட்சி, பிராப்பர்ட்டீஸ், டயலாக் என்று விவரித்து எழுத, சுஜாதா படக் கதையாகவே தன் கட்டுரையை வழங்கினார். முன்பு ஒருமுறை ஓவியர் ஸ்யாமை அழைத்துக்கொண்டு சுஜாதா வீட்டுக்குச் சென்றேன் என்று என் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேனல்லவா, அது இந்தப் படக் கதைக்காகத்தான்.

மேலும், மலரை அழகுபடுத்த சின்னச் சின்ன நகாசு வேலைகளுக்கும் ஐடியா கொடுத்தார்கள் சுபா. மொத்தத்தில், ஒரு முழுமையான மலருக்குண்டான அத்தனை விஷயங்களையும் அட்டை டு அட்டை அவர்களே திட்டமிட்டார்கள். அட்டைப்படத்திலும் ஒரு வித்தியாசத்தைப் புகுத்தினார்கள். வழக்கமாக சினிமா நடிகர் அல்லது நடிகையின் படத்தை வெளியிடாமல், விகடன் தாத்தா ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்து,கோபியர் கொஞ்சும் ரமணாபோன்று இரண்டு அழகிகளோடு ஜாலியாக ஆடிப்பாடுகிற மாதிரி இளமைத் துள்ளலோடு ஓவியர் ஸ்யாமிடம் படம் வரைந்து வாங்கி, வெளியிட்டார்கள்.

சிறுவர்களிடம் அவர்களின் கற்பனைக்கேற்ப ஏதேனும் படம் வரையச் சொல்லி வாங்கி, அவற்றுக்கேற்ப பிரபல கதாசிரியர்களிடம் சிறுகதை கேட்டு வாங்கி வெளியிட்ட சுபாவின் யோசனை மிகப் புதுமையானதாக அந்நாளில் வாசகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் வரைந்த சிறுவர்களில் என் மகன் ரஜ்னீஷும் ஒருவன். அவனுக்கு அப்போது நான்கு வயது. அவனுடைய ஓவியத்துக்குப் பொருத்தமாகச் சிறுகதை எழுதியவர் ரா.கி.ரங்கராஜன்.

இந்த மலர் தயாரிப்புப் பணி மொத்தத்தையும் சுபா தூக்கிச் சுமக்க, நான் ஓர் ஒருங்கிணைப்பாளராக மட்டுமே இருந்து அவர்களுக்கு உதவினேன். மலர் பணிகள் முடிக்கும் க்ளைமாக்ஸ் நாட்களில் தொடர்ந்து இரண்டு இரவுகள், மூன்று பகல்கள் அவர்கள் விகடன் அலுவலகத்திலேயே இருந்து, பசி நோக்கார், கண் துஞ்சாராகி, கருமமே கண்ணாயினராக இருந்து முடித்துக்கொடுத்த அவர்களின் ஆழ்ந்த ஈடுபாடும் அக்கறையும் செய்நேர்த்தியும் இன்றைக்கும் என் மனதில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

சுபா தயாரித்த ஆனந்த விகடன் தீபாவளி மலர் வெளியான ஆண்டு 2005. சிறுகதை மன்னர்களான சுபா தயாரித்த இந்த மலரில் அவர்களின் சிறுகதை எதுவும் இடம்பெறவில்லை என்பது ஒரு முரண். ஆமாம், தாங்கள் இதில் சிறுகதை எழுதுவதில்லை என்பதில் அவர்கள் அத்தனை உறுதியாக இருந்தார்கள். இருப்பினும், கதை எழுதாவிட்டால் போகிறது. ஒரு கட்டுரையாவது எழுதுங்கள்என்று நான் வற்புறுத்தியதன்பேரில்என் நாடு, என் மக்கள் என்னும் தலைப்பில் இந்திய ராணுவ வீரர்களைப் பற்றிய அருமையான கட்டுரை ஒன்றை எழுதினார்கள்.

அது சரி, அவர்கள் ஏன் இந்த மலரில் கதை எழுதத் தயங்கினார்கள்?

அதற்கு அவர்கள் சொன்ன பதில்...

நாங்களே ஒரு மலரைத் தயாரித்து, அதில் நாங்களே ஒரு சிறுகதை எழுதி வெளியிட்டுக்கொள்வது கொஞ்சம்கூட நியாயமே இல்லை, ரவிபிரகாஷ்!

அவர்களுக்குள் ஊறியிருந்தபத்திரிகை அறம்தான் அவர்களை அப்படிச் சொல்ல வைத்தது.

ஹேட்ஸ் ஆஃப் சுபா!


Sunday, January 07, 2018

ஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா! - 13

சிங்கப்பூர் யுனிவர்சல் ஸ்டுடியோவில் ஒருநாள்..!
ன்னின்னிக்கு இந்த இந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்று சென்னையிலிருந்து கிளம்பும்போதே பக்காவாக பிளான் பண்ணியிருந்தோம். அந்த வகையில் கடைசி மூன்று நாட்களும் சிங்கப்பூரில் சுரேஷ் தம்பதியின் இல்லத்தில் தங்கி, யுனிவர்சல் ஸ்டூடியோஸ் ஒருநாள், செண்டோஸா பார்க் ஒருநாள், கடைசி நாளன்று மெரினா பே ஸ்கைபார்க் ஹோட்டல், மெர்லியன் பார்க், ஃப்ளையர் போன்றவற்றைப் பார்க்கலாம் என்று தீர்மானித்திருந்தோம்.

மலேசியாவில் சரியாக 9 மணிக்கு எங்கள் பஸ் கிளம்பியது. களைத்திருந்ததால், பஸ் கிளம்பிய ஒரு மணி நேரத்துக்குள் அனைவருக்கும் நல்ல தூக்கம். விடியற்காலை இரண்டரை மணி சுமாருக்கு எழுப்பப்பட்டோம். சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான விசா செக்கிங். மீண்டும் எங்கள் பெட்டி படுக்கைகளை இறக்கி, வரிசையில் நின்று, பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை அதிகாரிகளிடம் காண்பித்து, தூக்கக் கலக்கத்தோடு செக்கிங் முடித்து, மீண்டும் பஸ்ஸில் ஏறி, சிங்கப்பூரில் ஏறிய இடத்துக்கே வந்து இறங்கியபோது மணி 3. அங்கிருந்து ஒரு கேப் பிடித்து, திரு.சுரேஷ் அப்பார்ட்மென்ட்டுக்கு விடியற்காலை 3:30 மணிக்கு வந்து, அன் டயத்தில் சிரமப்படுத்துகிறோமே என்கிற குற்ற உணர்ச்சியோடு காலிங்பெல் அடித்தோம். கொஞ்சம்கூட அலுப்பில்லாமல் புன்சிரிப்போடு கதவைத் திறந்தார் ஜெயஸ்ரீ. எல்லா இடங்களும் நல்லா சுத்திப் பார்த்தீங்களா? பத்துமலை முருகன் கோயிலுக்கு ஏறிப் போனீங்களா? என்று அந்த நேரத்திலும் ஆர்வத்தோடு விசாரித்தவர், எங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையைக் காண்பித்தார். போய்ப் படுத்து, மீண்டும் எங்கள் உறக்கத்தைத் தொடர்ந்தோம்.

காலையில் 10 மணி சுமாருக்கு எங்களை எழுப்பினார் ஜெயஸ்ரீ. ஒவ்வொருவராக எழுந்து பல் விளக்கி, சுடச்சுடக் காபி குடித்தோம். குளித்து முடித்து, உடை மாற்றித் தயாராகி வருவதற்குள் டைனிங் டேபிளில் சாப்பாடு ரெடியாக இருந்தது. அது மட்டுமல்ல, வெளியே நாங்கள் சாப்பிடுவதற்கு அலுமினிய ஃபாயிலில் ஸ்னாக்ஸும் பாக்கெட் பாதாம் மில்க்கும்கூடத் தயாராக இருந்தது. அவர்கள் இல்லத்தில் இருந்த மூன்று நாள்களும் எங்களுக்கு ராஜயோகம்தான். உணவுக்கும் உறைவிடத்துக்கும் வேண்டுமானால் பணம் கொடுத்துவிடலாம்; ஆனால், சுரேஷ் தம்பதி எங்கள்மீது காட்டிய அக்கறைக்கும் அன்புக்கும் பிரதிபலன் செய்யவே முடியாது. சென்னை திரும்பியதும் என் மகனும் மகளும் சொன்னதுதான் இங்கே ஞாபகத்துக்கு வருகிறது.

சிங்கப்பூர் டூர் முடிஞ்சு வந்தது வருத்தமாதான் இருக்கு. ஒன்பது நாள் போனதே தெரியலே. ஆனா, அதைவிட அவங்களைவிட்டு (சுரேஷ் தம்பதி) வந்ததுதான் ரொம்ப வருத்தமா இருக்குஎன்றான் மகன். ஆரஞ்சு ரசம், அது இதுன்னு ஒவ்வொரு நாளைக்கும் விதம்விதமா சாப்பாடு பண்ணிப் போட்டாங்க. ஒவ்வொண்ணும் அத்தனை டேஸ்ட்! சாப்பாட்டின் சுவைக்காக ஒரு பிடி கூடுதலா சாப்பிடத் தோணுச்சுன்னா,பொரியல் இன்னும் கொஞ்சம் போடட்டுமாம்மா?ன்னு’அவங்க கேட்கிற அன்புக்காகவே இன்னொரு பிடி சாப்பிடலாம்போல இருந்தது என்றாள் மகள். சமீபத்தில் ஜெயஸ்ரீ சென்னை வந்திருந்தபோது, என் மகனும் மகளும் அவர் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்துப் பேசிவிட்டு வர மிகவும் ஆசைப்பட்டார்கள். அவருடைய புரொகிராம்களும் எங்களுடைய புரொகிராம்களும் வெவ்வேறு திசையில் இருந்ததால், ஜெயஸ்ரீயைச் சந்திக்க முடியாமல் போனதில் இருவருக்கும் ரொம்பவே வருத்தம்.

சரி, விஷயத்துக்கு வருவோம். அன்றைய தினம் நாங்கள் திட்டமிட்டிருந்தது யுனிவர்சல் ஸ்டுடியோ விஜயம். மிகச் சமீபத்தில்தான், அதாவது 2010-ம் ஆண்டுதான் யுனிவர்சல் ஸ்டுடியோ திறக்கப்பட்டிருக்கிறது என்பது எங்களுக்குச் சற்று வியப்பாக இருந்தது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய தீம் பார்க் இது என்கிறார்கள். (முதலாவது ஜப்பானில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோ.) டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்துவிட்டால், ஜாலியாக ஒவ்வொரு ரைடாக ஏறி இறங்கிக் கொண்டாடலாம். உள்ளே தனித்தனியாக டிக்கெட் வாங்கத் தேவையில்லை.

முன்பே தெரிந்ததுதான்... இது பிள்ளைகளுக்கான இடம். எங்களுக்கு இங்கே வேலையில்லை. சும்மா பராக்குப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான் என்று முடிவு செய்துவிட்டோம்.

என்றாலும், தலைசுற்ற வைக்காமல் சிம்பிளாக ஏதேனும் இருந்தால் நாங்களும் செல்லலாம் என்று நினைத்தோம். முதலில், மடகாஸ்கர் ரைடு என்ற ஒன்றில் ஏறினோம். சின்னச் சின்ன போட்டுகள். நாங்கள் நால்வரும் ஒரு போட்டில் ஏறிக்கொண்டோம். வளைந்து வளைந்து செல்லும் கால்வாய் வழியாக அது மிதந்து செல்கிறது. இரண்டு புறமும் சுவர்களில் இடித்து இடித்துச் செல்கிறது. வழியெல்லாம் பிரமாண்டமான கார்ட்டூன் உருவங்கள். அத்தனையும் மடகாஸ்கர் என்கிற அனிமேஷன் படத்தில் வரும் கார்ட்டூன்கள். வெறுமே கட் அவுட்டுகளாக இல்லாமல், அனைத்தும் நகர்கின்றன; தலையைத் திருப்புகின்றன; உயரமான ஒட்டைச்சிவிங்கி எங்கள் போட் வரை குனிந்து எங்களை உற்றுப் பார்த்தது. இந்தக் கரையிலிருந்து ஒரு குட்டிக் குரங்கு (கார்ட்டூன்தான்) விழுதைப் பிடித்துக்கொண்டு அந்தக் கரைக்குத் தாவுகிறது. ஓரத்திலிருந்து ஒரு சிம்பன்ஸி எங்கள்மீது தண்ணீரைத் துப்பியது. சவுண்டு எஃபெக்ட்ஸ் த்ரில் கூட்டுகிறது.

கரைகளில் கள்ளிப்பெட்டிகள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் போட் அந்த இடத்தைக் கடக்கும்போது அத்தனை பெரிய பெட்டிகள் தடாலென்று சரிந்து எங்கள்மீது விழுந்துவிடும்போல் பயமுறுத்துகிறது. கொஞ்சம் தூக்கிவாரித்தான் போடுகிறது. இதன் யூ-டியூப் லின்க்கைக் கீழே கொடுத்துள்ளேன்.

அடுத்து, நாங்கள் சென்றது ஜுராசிக் பார்க் ரேப்பிட் ரைடு. நீளமான க்யூ. எல்லோரும் கையில் கண்ணாடித் தாளிலான ரெயின்கோட் போல் வைத்திருந்தார்கள். அதைத் தனியாக ஓரிடத்தில் வாடகைக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வாடகை ஒரு டாலரோ, இரண்டு டாலரோ... ஞாபகமில்லை. இந்த ஜாலி ரைடு போகிறவர்கள் தெப்பமாக நனைந்துபோவார்கள் என்பதால், தற்காப்புக்காக இந்த ரெயின்கோட்.

நனைந்துதான் பார்ப்போமே என்று நாங்கள் ரெயின்கோட் வாங்காமலே சென்றோம். எங்களுக்கான போட்டில் ஏறி அமர்ந்தோம். ஒன்றன்பின் ஒன்றாக நகர ஆரம்பித்தன. வளைந்து நெளிந்து கால்வாய் வழியே வேகமாக மிதந்து ஓடியது போட். வழியெல்லாம் மெகா சைஸ் டினோசர்கள்... காரே பூரே என்று உறுமிக்கொண்டிருந்தன. ஓரங்களில் செயற்கை நீர்வீழ்ச்சிகள், சில்லென்று தெறிக்கும் தண்ணீர்த் திவாலைகள், திடும் திடுமெனப் பீறிட்டு அடிக்கும் ஃபவுண்டெய்ன்கள், கரையோரங்களில் கவிழ்ந்து கிடக்கும் பழைய கால ஜீப், வேரோடு சாய்ந்த மரம் என செட்டப்புகள் அபாரம்!

ப்பூ... இவ்வளவுதானா... இதற்கா ரெயின்கோட் போட்டுக்கொள்ளச் சொன்னார்கள்என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, எங்கள் ரைடு க்ளைமாக்ஸை நெருங்கியது. தடதடவென்று வழியை மறித்தாற்போல் நீர்வீழ்ச்சி ஒரு திரைபோல் கொட்டிக்கொண்டிருந்தது. ஆஹா, தொப்பலாக நனையப்போகிறோம்என்று நினைத்து உடம்பைக் குறுக்கிக்கொள்ள, நீர்த்திரையை எங்கள் போட் நெருங்கியதுமே சட்டென அந்த நீர்த்தாரை நின்றுபோனது. அந்த இடத்தை எங்கள் போட் கடந்ததும், மீண்டும்சோவெனக் கொட்டத் தொடங்கியது.

தொடர்ந்து, எங்கள் போட் ஓர் இருண்ட குகை வழியே பயணிக்கத் தொடங்கியது. காரே பூரே சத்தங்கள் திகில் கூட்டின. ஓரங்களிலிருந்து குபீர் குபீரென தீ ஜுவாலைகள் வீசின. சென்றுகொண்டிருந்த ஒரு போட் எங்கோ கதவு மீது முட்டி நின்றது. கும்மிருட்டில், பெரிய உயரமான கோட்டைக் கதவுகள் போன்ற கதவுகள் திறக்க, எங்கள் போட்டு மெதுவாக உள்ளே நுழைந்து நின்றது. திறந்த கதவுகள் மூடிக்கொண்டன. யோசிப்பதற்குள் எங்கள் போட் விறுவிறுவென உயரே ஒரு முப்பதடி உயரத்துக்குத் தூக்கப்பட்டது. அப்போதே வயிற்றில் புளி கரைந்தது. அடுத்த எதிர் கதவு திறக்க, உயரே இருந்து எங்கள் போட் நீர்வீழ்ச்சியில் சரிந்து தடாலென்று கீழே விழுந்தது.என்ற அலறல், எங்கும் எதிரொலித்தது. தண்ணீர் வாரியடித்து எங்கள் அனைவரையும் முற்றாகக் குளிப்பாட்டியது.

ஈரம் சொட்டச் சொட்ட வெளியேறினோம். வெளியே, ஈரத்தை உலர்த்திக் கொள்வதற்காகடிரையர் பாக்ஸ்கள் இரண்டு இருந்தன. 2 டாலர் கட்டணம் கொடுத்தால், பழைய கால பொதுத் தொலைபேசி பூத் போன்ற அதில் இருவர் உள்ளே ஏறி நின்று, அனல்காற்று வாங்கலாம். நானும் என் மகனும் மட்டும் அப்படி எங்கள் உடைகளை உடம்போடு காய வைத்துக்கொண்டோம்.

அதன்பின்பு, என் மகனும் மகளும் ரோலர் கோஸ்டர்களில் ஏறிச் செல்ல விரும்பினார்கள். நாங்கள் அருகில் இருந்த வசதியான ஒரு மண்டபத்தில் அமர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தோம்.

பேட்டில்ஸ்டார் கலாக்டிகா என்னும் இந்த ரைடில் இரண்டு வகை இருக்கிறது.ஹ்யூமன்என்கிற ரைடில் ரேஸ் கார் மாதிரி உட்கார்ந்து செல்லலாம்.சைலோன்என்பது கூடுதல் த்ரில் தருவது. கொக்கியில் தொங்கியபடி செல்ல வேண்டும்.

பார்க்கும்போதே தலைசுற்றுகிறது. ராட்சதத் தண்டவாளங்களில் படுவேகமாக ஓடும் இவை வளைந்து, நெளிந்து, சரேலென்று மேலேறி, தடாலென்று சரிந்து கீழிறங்கி, முறுக்கிக்கொண்டு திரும்பி... என ஒரு நிமிட நேரத்துக்குள் உச்சபட்ச த்ரில்லைக் கூட்டுகின்றன. மகனும் மகளும் அடுத்தடுத்து இரண்டிலும் ஏறி இறங்கி, பரவசம் குறையாமல் வந்தார்கள்.

பின்னர், அங்கிருந்த ஓர் அழகான குடையின்கீழ் அமர்ந்து, கொண்டுவந்திருந்த ஸ்னாக்ஸை உண்டு முடித்து, சற்று ரெஸ்ட் எடுத்தோம். அருகிலேயே ஏன்ஷியன் ஈஜிப்ட் உலகம் இருந்தது. ஒரு ஜீப்பில் ஏறிக்கொண்டோம். ஒற்றைத் தண்டவாளத்தின் வழிகாட்டலோடு அந்த ஜீப் இயந்திர இயக்கத்தில் ஓடுகிறது. இருபக்கமும் சுவர்களில் பழைய எகிப்திய நகரம் போன்ற கட்டட அமைப்புகள், பழைய கால வாகனங்கள், காட்டெருமைகள், ராட்சத வண்டுகள்... எங்கோ எதுவோ எரிந்து, புகைந்துகொண்டிருந்தது. பழைமையை நினைவூட்டும் ஒரு ஜாலி ரைடு அது!

அதன்பின்பு, மகனும் மகளும் மட்டும் வேறு பல ரைடுகளில் புகுந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தார்கள். நானும் என் மனைவியும் மட்டும் தனியாக உள்ளே சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். ரோம் மற்றும் நியூயார்க் நகரத் தெருக்கள் போன்று வீடுகள், கடைகளை எல்லாம் ஒவ்வோர் இடத்தில் வடிவமைத்திருந்தார்கள். அங்கெல்லாம் சென்று சுற்றிப் பார்த்தோம்.

மாலை 6 மணி. ஸ்டுடியோ நேரம் முடிந்தது. அனைவரையும் வெளியேறச் சொல்லி அறிவித்தார்கள். ஒரு நீண்ட பாதை வழியாக வெளியேறினோம். படி ஏறுவதற்கு எஸ்கலேட்டர் போன்று நீண்ட தூரம் நடப்பதற்கு டிராவலேட்டர் (நகரும் நடைபாதை) அமைத்திருந்தார்கள். சென்னையிலும் அப்படி டிராவலேட்டர்கள் எங்கேனும் இருக்கக்கூடும். ஆனால், அங்கேதான் முதன்முதலில் பார்த்தோம் என்பதால், புதுமையாக இருந்தது. எஸ்கலேட்டரில் ஏறப் பயந்த என் மனைவி, டிராவலேட்டரில் அதையே ஒரு ஜாலி ரைடு போல உற்சாகமாக அனுபவித்தார்.

யுனிவர்சல் ஸ்டுடியோவைவிட்டு வெளியேறி, கடலோரம் நடைபாதை நீண்டது. கப்பல்கள் நின்றிருந்தன. வேடிக்கை பார்த்துக்கொண்டே சாலைக்கு வந்தோம். கால்டாக்ஸி வரவழைத்தோம். வீடு திரும்பினோம்.

சினிமாக்களில் பார்த்ததுபோல், அகலமும் நீளமுமான சுரங்கப் பாதையில் வழுக்கிக்கொண்டு காரில் பயணித்தது இனிமையான அனுபவம்.

இங்கெல்லாம் புதுசாக ரோடு போடுகிற வேலைகள், சாலைப் பராமரிப்பு வேலைகள் எதுவும் நடைபெறுவதில்லையா? என்று டிரைவரைக் கேட்டேன்.

அவர் சொன்ன பதில் என்னை வியக்கவைத்தது.

(பயணம் தொடரும்)

மடகாஸ்கர் ரைடு: https://www.youtube.com/watch?v=jobIi5EQ3zc


Wednesday, January 03, 2018

ஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா! - 12


பத்துமலைத் திருமுத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திட்டேன்!

காலையில் குளித்து முடித்து, நாங்கள் தங்கியிருந்த ஸ்டார்பாயின்ட் ஹோட்டலிலேயே பன்னிரண்டாம் தளத்தில் இருந்த ரெஸ்ட்டாரண்ட்டில் டிபன் சாப்பிட்டுவிட்டு, உடை மாற்றி ரெடியாகி, கீழே ரிசப்ஷனுக்கு வந்தபோது, முனியசாமி காத்திருந்தார். கிளம்புவோமா? என்றார் உற்சாகமாக.

அன்றைக்குச் சுற்றிப் பார்த்துவிட்டு, அப்படியே சிங்கப்பூர் கிளம்புவதால், எங்கள் பைகள், ட்ராலி பேகுகள் போன்றவற்றையும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.

முதலில் அவர் எங்களை ஒரு சாக்லேட் ஃபேக்டரிக்கு அழைத்துப் போனார். வழக்கமான பழுப்பு நிறத்தில் மட்டுமல்லாது, வெள்ளை நிறத்தில், கன்னங்கரேலென்ற கறுப்பு நிறத்திலெல்லாம்கூட அங்கே வகைவகையான சாக்லேட்டுகள் இருந்தன. சுவைத்துப் பார்ப்பதற்கு ஒவ்வொரு வகையிலும் ஒன்றிரண்டு தந்தார்கள். ஆனால், இங்கே நம் சென்னையில் வாங்கிச் சாப்பிடும் சாக்லேட்டின் சுவை அவற்றுக்கு இல்லை. சில சப்பென்று இருந்தன; சில காட்டமான சுவையுடன் இருந்தன; சில ஒருவித நெடியுடன் இருந்தன. மொத்தத்தில், எதுவும் வாங்கித் தின்ன வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டும்விதமாக இல்லை. தவிர, விலையும் மிக மிக அதிகம். எனவே, எதையுமே வாங்காமல், வெறுமே வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

அடுத்து நாங்கள் சென்ற இடம்… மலேசியா என்றதுமே நம் நினைவுக்கு வரும் இடம், கிட்டத்தட்ட மலேசியாவின் லேண்ட்மார்க்காகவே ஆகிவிட்ட இடம்… ஆம், அதேதான், பத்துமலை முருகன் கோயில்.

பட்டு கேவ்ஸ்என்று அழைக்கிறார்கள் இந்த இடத்தை. மலாய் மொழியில் ‘பட்டு என்றால்பத்துஎன்று அர்த்தமாம்.பத்துமலை முருகன் கோயில்என்று இதற்குப் பெயர் வந்ததற்குச் சுவையான ஒரு காரணத்தைச் சொன்னார் முனியசாமி.

முருகனுக்கு உகந்த தலங்கள் ஆறும் ஆறுபடை வீடுகளாகத் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இவற்றைத் தவிர, இன்னும் நான்கு தலங்கள் மலேசியாவில் உள்ளன. ஏழாவது தலம்ஈபோவில் உள்ள கல்லுமலை முருகன் கோயில்; எட்டாவது, பினாங்கிலுள்ள தண்ணீர்மலைக் கோயில்; ஒன்பதாவது தலம், மலாக்காவிலுள்ள சன்னாசிமலை. பத்தாவது தலம் இந்த பத்துமலைக் கோயில். இதை ஸ்தாபித்தவர் தம்புசாமிப் பிள்ளை ஆவார். சுமார் நூறு, நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்த அவர், கூர் கூராக நிற்கும் இந்த மலைப்பகுதிகளையும், வேலாயுதம் போன்று காட்சியளித்த இந்தக் குகை வாயிலையும் பார்த்துவிட்டு, இதை முருகனின் திருத்தலமாக்க வேண்டும் என்று முடிவுசெய்தாராம். அதன்படி, ஒரு முருகன் சிலையைத் தயார்செய்து எடுத்துக்கொண்டு வந்து, இந்தக் குகைக்குள் ஏறி, அங்கே அதைப் பிரதிஷ்டை செய்தாராம். கிட்டத்தட்ட அப்போதிலிருந்தே இங்கே முருகனுக்குத் தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறதாம்.

இந்தத் தகவலைச் சொன்ன முனியசாமி, இதே கோலாலம்பூரில் உள்ள மாரியம்மன் கோயிலையும் தம்புசாமிப் பிள்ளைதான் எழுப்பினார் என்றார்.

என் மனைவியால் அவ்வளவு உயரம் படிகளில் ஏறிச் செல்ல முடியாது என்பதால், நானும் என் மகனும் மகளும் மட்டும் படிகளில் ஏறத் தொடங்கினோம். பிள்ளைகள் கிடுகிடுவென்று ஏறிப் போய்விட்டார்கள். என்னால் அப்படி முடியவில்லை. மூச்சு வாங்கியது. ஆங்காங்கே உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துதான் ஏறினேன். மலைக்கோயிலில் மண்டபக் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அதற்கு, உடைத்த செங்கல் ஜல்லிகளைக் கீழே இருந்து பக்கெட் பக்கெட்டாக எடுத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். எங்களிடமும் ஆளுக்கொரு பக்கெட்டைக் கொடுத்து,முருகனுக்கான உங்கள் சேவையாக இருக்கட்டும்; நீங்களும் ஒரு பக்கெட் எடுத்துச் செல்லுங்கள்என்றார்கள். சந்தோஷமாக வாங்கிக்கொண்டு படியேறினோம்.

உயரே மலைக்குகை பிரமாண்டமாக இருந்தது. அங்கே கட்டட வேலைகள் நடந்துகொண்டிருந்ததால் தரையெல்லாம் நசநசவென்று ஈரமாக இருந்தது. பாறைச் சுவர்கள் எல்லாம் ஈரக்கசிவுடன் இருந்தன. மேலேயிருந்து பொட்டுப்பொட்டாய் தண்ணீர்த் துளிகள் விழுந்துகொண்டிருந்தன. இடமே குளிர்ந்து, சில்லென்றிருந்தது. மனசுக்கு ரம்மியமான சூழல்.

அங்கிருந்து இன்னும் சில படிகள் ஏறிச் சென்றால், பத்துமலை முருகன் கோயிலில் முருகப்பெருமானின் திவ்விய தரிசனம். கூடவே,அழகென்ற சொல்லுக்கு முருகா… உன்னை அண்டினோர் வாழ்விலே குறையேது முருகா…என்று உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தார் என் அபிமான பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன். நான் அடைந்த சிலிர்ப்பைச் சொல்ல வேண்டுமா?!

தரிசனம் முடிந்து, மீண்டும் கீழே இறங்கி வந்தோம்.
அங்கேயே பக்கத்தில் விசுவரூப ஆஞ்சநேயர் சிலை. அதன் பின்னால் இன்னும் பிரமாண்டமாக கிருஷ்ணர் சிலை. கீதோபதேசக் காட்சி. அங்கேயும் ஒரு குகை உள்ளது. அதன் உள்ளே சென்று பார்த்தோம். ஆஹா… ராமாயணக் காட்சிகள் முழுவதையும் அழகழகான பொம்மைகளாகச் செய்து வரிசையாக வைத்திருந்தார்கள். அத்தனையையும் கண்குளிரப் பார்த்து ரசித்தோம். அங்கேயும் பாறைச் சுவர் ஓரமாக செங்குத்தாகப் படிகள் ஏறிச் சென்றன. அதில் ஏறிப் போய்ப் பார்த்தால் சுயம்பு லிங்கத்தை தரிசிக்கலாம் என்றார்கள். பத்துமலை ஏறி இறங்கியதில் ரொம்பவும் டயர்டாகியிருந்தோம். நிச்சயம் இப்போது அதில் ஏறிச் செல்வதற்கான தெம்பு எங்களுக்கு இல்லை என்று புரிந்ததில், மனசை சமாதானப்படுத்திக்கொண்டு, ராமாயணக் காட்சிகளை மட்டும் கண்டுகளித்துவிட்டு வெளியேறினோம்.

இந்த கீதோபதேச கிருஷ்ணன் சிலை, கடந்த 2014-ல்தான் திறந்துவைக்கப்பட்டது. அந்த விழாவில் புராணச் சொற்பொழிவு நிகழ்த்த என் இனிய நண்பர், மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியசொல்லின் செல்வர்பி.என்.பரசுராமன் அவர்கள் சென்றிருந்தார். அவர் அந்த விழா பற்றியும், சிலை மற்றும் ராமாயண குகை பற்றியும் சக்தி விகடன் இதழில் கட்டுரை எழுதியுள்ளார். (அந்த லின்க்கையும் இங்கே கொடுத்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் படித்துச் சுவைக்கலாம்.) அன்றிலிருந்தே அந்தச் சிலையையும், அந்த குகையையும் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். என் கனவு இதோ நனவாகிக்கொண்டிருப்பதை எண்ணி, கிருஷ்ண பரமாத்மாவுக்கு மானசிகமாக என் நன்றியைச் சொல்லி, அங்கிருந்து கிளம்பினேன்.

முனியசாமி எங்களை ஜெண்ட்டிங் ஸ்கைவேஎன்னும் கேபிள்கார் சர்வீஸுக்கு அழைத்துச் சென்று, டிக்கெட் வாங்கிக் கொடுத்து, எங்களை வழியனுப்பி வைத்தார். தங்கிய ஹோட்டல் மற்றும் இந்த கேபிள்கார் செலவு இரண்டும் டிராவல்ஸ் பேக்கேஜிலேயே வருகின்றன.

நீங்கள் இப்போது போகப்போகிற இடம்ஜெண்ட்டிங் ஹைலேண்ட்ஸ் என்னும் பகுதியாகும். நல்ல பனிமூட்டம் உள்ள இடம் அது. ரம்மியமாக இருக்கும். அங்கே பெரிய கேஸினோ ஒன்று இருக்கிறது. அப்புறம் ஒரு பெரிய மால் இருக்கிறது. அவற்றைப் பாருங்கள். கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணி நேரம் அங்கே உங்களுக்குப் பொழுது போய்விடும். அப்புறம் அதே கேபிளில் கிளம்பி, கீழே வாருங்கள். கீழே என்றால், கோலாலம்பூருக்கு வர வேண்டாம். மேலிருந்து இறங்கும்போது, இரண்டாவது ஸ்டாப்பிங்கில் இறங்கிக்கொள்ளுங்கள். அங்கே ஃபர்ஸ்ட்வேர்ல்டுஎன்றொரு ஹோட்டல் இருக்கிறது. அதன் ரிசப்ஷனில் வந்து காத்திருங்கள். நான் அங்கே வந்து உங்களைப் பிக்கப் பண்ணிக்கொள்கிறேன்என்று விளக்கமாகச் சொல்லி அனுப்பிவைத்தார் முனியசாமி.

ஜெண்ட்டிங் ஹைலேண்ட்ஸ் என்பது கோலாலம்பூரிலிருந்து 5,700 அடி உயரத்தில் இருக்கிறது. இங்கே செல்லும் கேபிள்கார்தான் உலகிலேயே அதிவேகமான கேபிள்கார் சர்வீஸ் என்றார் முனியசாமி. மணிக்கு 21 கி.மீ. வேகம். அதேபோல், ஆசியாவிலேயே மிக அதிக தூரம் உயரே செல்லக்கூடிய கேபிள்காரும் இந்த ஜெண்ட்டிங் ஸ்கைவேதானாம். சுமார் மூன்றரை கி.மீ. எனவே, கேபிளில் ஏறி அமர்வது முதல் அங்கே இறங்குவது வரை, மொத்தப் பிரயாண நேரம் சுமார் 20 நிமிடங்கள்தான்.

முனியசாமி சொன்னபடியே அங்கேயுள்ள கேஸினோவைப் பார்த்துவிட்டு, மாலுக்கு வந்தோம். பிரமாண்டமான மால். உயர உயரமான சுவர்கள் மொத்தமுமே எல்.இ.டி டிவி-க்களாக மாறி, 30 அடி உயர விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அந்த மாலைச் சுற்றிப் பார்க்க நிச்சயமாக ஒரு மணி நேரம் போதாதுதான். ஆனால், அப்போதே மணி கிட்டத்தட்ட மாலை மணி நாலு, நாலரை ஆகிவிட்டிருந்தது. எனவே, பார்த்தவரை போதும் என முடித்துக்கொண்டு, கேபிள்காருக்கு வந்தோம்.

அங்கிருந்து இரண்டாவது நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம். அந்த இடமே ஃபர்ஸ்ட்வேர்ல்டு ஹோட்டல்தான். பருமனான மரங்களில், தூண்களில் என எங்கெங்கு காணினும் ஒளிரும் பல்புகள் நெருக்கமாகச் சுற்றிப் படர்ந்து, ஒளிவீசிக்கொண்டிருந்தன. இந்திரலோகம்போல் இருந்தது. அங்கே சும்மா பராக்குப் பார்த்துவிட்டு, ரிசப்ஷன் ஹாலுக்கு வந்தோம். அடுத்த ஐந்தாவது நிமிடம் தேடிக்கொண்டு வந்துவிட்டார் முனியசாமி.

எங்களைக் காருக்கு அழைத்துச் சென்றார். அவர் அடுத்து எங்களை அழைத்துச் சென்றது ஒரு புத்தர் கோயிலுக்கு. சின் ஸ்வீ குகைக் கோயில் (Chin Swee Caves temple. இந்தப் பெயரை யூ-டியூபில் தேடிப் பாருங்கள்; பாகம்-1, 2 என வரிசையாக நிறைய வீடியோப் பதிவுகள் காணக் கிடைக்கும்.) என்று அழைக்கப்படுகிறது அந்தக் கோயில். மிக ரம்மியமான, அழகான இடம். எட்டடுக்கு கோபுரம் ஒன்றும் அங்கே உள்ளது. அங்கே உச்சி வரைக்கும் ஏறலாம். ஆனால், ஒவ்வொரு தளத்திலும் ஏராளமான புத்தர் சிலைகள், பொம்மைகள் மட்டுமே இருந்தன. வெளியே ஒரே பனிமூட்டம். எதுவுமே தெரியவில்லை. எனவே, நான்கு தளம் வரைக்கும் ஏறி, பிறகு கீழே இறங்கிவிட்டோம். புத்தர் கோயில், மகா பெரிய புத்தர் சிலை எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்தோம்.

அங்கே பாறைச் சுவரை ஒட்டியவாறு ஓர் உயரமான, நீளமான நடைபாதை இருக்கிறது. அதன்மீது ஏறிச் சென்றால், பாறைகளை ஆங்காங்கே ரூம் போலக் குடைந்து, ஏராளமான பொம்மைகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லாம் நம்மைக் கலவரப்படுத்தும் பொம்மைகள். பாவம் செய்த மனிதனுக்கு நரகத்தில் என்னென்ன தண்டனைகள் உண்டோ, அத்தனையையும் தத்ரூபமாக பொம்மைகளாக வடித்து வைத்திருக்கிறார்கள். ஓர் அரக்கன் ஒரு மனிதனின் மார்பை வாளால் பிளக்கிறான்; மற்றொருவனை கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் கொதிக்க வைக்கிறான்; ராட்சதர்கள் சிலர் ஒருவனை நாலாப்புறமிருந்தும் ஈட்டியால் துளைக்கிறார்கள். ஒருவனைக் கூர் ஈட்டியால் குத்தி உயரே தூக்குகிறார்கள். கழுவேற்றப்படுகிறான் ஒருவன். ஒருவன் தலையை வாளால் அறுக்கிறான் ஓர் அசுரன். மற்றொருவன் தலையை பாறாங்கல்லால் நசுக்குகிறான் ஒருவன். எங்கும் ஒரே ரத்தக்களறி! இப்படி விதம்விதமான, கொடூரமான தண்டனைகளைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. கருணையே உருவான புத்தர் கோயிலில் இம்மாதிரியான கொடூரக் காட்சிகளை பொம்மைகளாகச் செய்துவைக்க வேண்டிய அவசியம் என்ன? யாருடைய ஐடியா இது? தெரியவில்லை.

அங்கே ஒரு மணி நேரம்போல் இருந்திருப்போம். முனியசாமியும் எங்களோடு இருந்தார்.

திருப்தியாக எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, வேண்டிய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். காரில் கோலாலம்பூர் நோக்கிப் பயணம். ஏழரை மணி போல் தரையிறங்கினோம்.

எங்களை ஒரு ஹோட்டலில் இறக்கிவிட்டு,டிபன் சாப்பிட்டுக்கொள்ளுங்கள். நான் காத்திருக்கிறேன். இரவு 9 மணிக்கு உங்கள் பஸ் ரெடியாக இருக்கும். இப்போது போனால் சரியாக இருக்கும். அவசரமில்லை. நிதானமாகச் சாப்பிட்டுவிட்டு வாருங்கள். நான் உங்களை பஸ் ஏற்றிவிட்டுச் செல்கிறேன்என்று அன்புடன் சொன்னார் முனியசாமி.

அதன்படியே டிபனை முடித்துக்கொண்டு கிளம்பினோம். சிங்கப்பூர் மாதிரி இல்லை… இங்கே மலேசியாவில் நம்ம ஊர் இட்டிலி, தோசை, பூரி எல்லாம் பரவலாகக் கிடைக்கின்றன. டேஸ்ட் கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும், மோசம் என்று சொல்ல முடியாது.

சரியாக எட்டரை மணிக்கு முனியசாமி எங்களை அழைத்துக்கொண்டு போய், ஒரு கட்டடத்தின் வாசலில் இறக்கிவிட்டார். கொஞ்சம் இருங்கள், போய் டிக்கெட் வாங்கிக்கொண்டு (ஏற்கெனவே புக் செய்த டிக்கெட்தான்), உங்கள் பஸ் எண் என்ன என்று கேட்டுக்கொண்டு வருகிறேன்என்று சொல்லிவிட்டுப் போனார். சில நிமிடங்களில் வந்து டிக்கெட்டை எங்களிடம் தந்தார். அவருடைய அன்புக்கும், எங்கள்மீதான அக்கறைக்கும், நின்று நிதானமாக ஒவ்வொரு இடமாக சுற்றிக்காண்பித்ததற்கும் என்னுடைய நன்றியின் வெளிப்பாடாக நம்ம ஊர் மதிப்பில் ரூ.500 (சுமார் 32 ரிங்கெட்ஸ்) அவருக்குக் கொடுத்தேன். ஆனால், அதைப் பெற்றுக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்.

மன்னிக்கணும் சார், உங்கள் அன்பு ஒன்றே போதும். நீங்கள் திருப்தியாகத் திரும்பிச் சென்றால், அதுவே எனக்கு மகிழ்ச்சி. எங்கள் டிராவல்ஸிலிருந்து என்னுடைய செயல்பாடு எப்படி இருந்தது என்று கேட்பார்கள். அப்போது எனக்கு நல்ல ரேட்டிங் கொடுத்தால், அதுவே எனக்கு நீங்கள் தருகிற பெரிய டிப்ஸ்என்றவர், இங்கேயாவது பரவாயில்லை சார்; ஆனால், சிங்கப்பூரில் போய் எந்த டிரைவருக்காவது இப்படி டிப்ஸ் கொடுத்துவிடாதீர்கள். அப்புறம் உங்களை லஞ்சம் கொடுக்க முயன்றதாகச் சொல்லி உள்ளே தள்ளிவிடுவார்கள் என்று சொல்லிச் சிரித்தார்.

பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கள் பஸ் வந்தது. திரு.முனியசாமியிடம் பிரியாவிடை பெற்று, எங்கள் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம்.

பஸ் சிங்கப்பூரை நோக்கிப் புறப்பட்டது.

(பயணம் தொடரும்)