உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, June 22, 2010

அழகிய லைலா!

திலகவதி அப்பார்ட்மென்ட்டில் நாங்கள் குடியேறிய வீட்டுக்கு இரண்டு குடித்தனங்கள் தள்ளி ஒரு ஜெர்மன்காரி குடியிருந்தாள். அவளுக்கு வயது 20, 22-தான் இருக்கும். டைட்டாக முக்கால் பேன்ட்டும், இடுப்பு தெரிய பனியன் போன்ற ஒரு டாப்ஸும்தான் அவளது வழக்கமான உடை. தினமும் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்திருந்து, வாசலில் நீர் தெளித்து, குதிகாலில் அமர்ந்தபடி, அவள் அரிசி மாவால் கோலம் போடும் அழகே அழகு! ‘கௌசல்யா சுப்ரஜா ராமா சந்த்யா ப்ரவர்த்ததே...’ என்று அதிகாலையில் மங்களகரமாக அவள் போர்ஷனிலிருந்து எம்.எஸ்ஸின் குரல் இதமான வால்யூமில் கசிந்து வரும். சில நாள் பஜகோவிந்தம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவையும் ஒலிப்பதுண்டு.

காலையில் கோலம் போடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவள் கண்ணிலேயே பட மாட்டாள். காலை ஒன்பது மணி வரையில் வீட்டு வேலை செய்துவிட்டு, பின்பு கதவைப் பூட்டிக்கொண்டு, தன் ஸ்கூட்டியில் வெளியே கிளம்பிச் சென்றுவிடுவாள். இரவு எப்போது வருகிறாள் என்று தெரியாது. அவள் யாரென்று அங்கே குடியிருந்த மற்ற யாருக்குமே தெரியவில்லை. கடந்த ஆறு ஏழு மாதமாகத்தான் அங்கே குடியிருக்கிறாள் என்றார்கள்.

நாங்கள் அங்கே குடி போன புதிதில், அந்த அப்பார்ட்மென்ட்டிலேயே சின்ன வயதுக் குழந்தைகள் எங்களின் குழந்தைகள்தான் என்பதால், துறுதுறுவென்று மற்றவர்களின் ஃப்ளாட்டுகளுக்குள் ஓடிவிடும். அதே போல், அந்த ஜெர்மன்காரியின் ஃப்ளாட்டுக்குள்ளும் சுவாதீனமாகப் போய், அவள் கொடுக்கும் பிஸ்கட்டுகளையும் சாக்லெட்டுகளையும் கை நிறைய வாங்கி வரும். அதைத் தொடர்ந்து என் மனைவி, அந்த ஜெர்மன்காரிக்கு சிநேகிதியாகிவிட்டாள்.

முகத் தோற்றத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், பொன்னிறத் தலைமுடியோடு கூடிய நடிகை லைலா போல இருப்பாள் என்று சொல்லலாம். அதே மாதிரி சிறிய கண்கள், கூரிய மூக்கு, குழி விழும் கன்னங்கள்... ரோஸ் நிறமாக இருந்தாள். அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிந்திருந்தது. தமிழில் நிதானமாகப் பேசினால் ஏறக்குறையப் புரிந்துகொண்டாள். “எதுக்குங்க குழந்தைகளுக்குப் போக வர, நிறைய பிஸ்கட்டும் சாக்லெட்டுமாக தந்துக்கிட்டே இருக்கீங்க?” என்று கேட்டால், பளீரெனப் புன்னகைத்துக்கொண்டே, “பர்வால்ல... கொல்ந்தைங்க... ரொம்ப அய்கு, ரொம்ப க்யூட் பேபீஸ்!” என்பாள்.

தன் மேரேஜ் டே என்று சொல்லி, ஒரு நாள் எங்களைத் தன் போர்ஷனுக்குக் கூப்பிட்டாள். என் மனைவிக்கு ஒரு ரவிக்கைத் துணியும், எனக்கு ஒரு சின்ன டவலும் ஒரு தட்டில் வைத்து, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு, குங்குமச் சிமிழோடு நீட்டினாள். பெற்றுக்கொண்டதும், நாங்கள் சற்றும் எதிர்பார்க்காதவிதமாக எங்கள் கால்களில், நம்ம ஊர்ப் பெண்கள் முழங்காலில் அமர்ந்து நமஸ்கரிப்பது மாதிரி நமஸ்கரித்தாள். அவள் யாராக இருந்தாலும், சந்தோஷமாக இருக்கட்டும் என்று மனதார வாழ்த்தினோம். அவளது கேமராவில் டைமர் செட் பண்ணிவிட்டு எங்களோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டாள். என் இரண்டரை வயது மகனைத் தூக்கிக்கொண்டு, யூ.கே.ஜி. படித்துக்கொண்டு இருந்த என் மகளைத் தன் அருகில் நிறுத்திக்கொண்டு, இடது கையை என் மனைவியின் தோள் மீது அணைத்தவாறு போட்டுக்கொண்டு புன்னகையோடு அவள் போஸ் தந்ததிலேயே அன்புக்காக ஏங்கும் அவளது உள்ளம் புரிந்தது. அவள் தந்த பிஸ்கட்டுகளைத் தின்றுவிட்டு, பூஸ்ட் குடித்துவிட்டு, இனம்புரியாத மகிழ்ச்சியோடு வெளியேறினோம்.

அன்றைக்கு அவள் போர்ஷனில் நாங்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருந்திருப்போம். அவளிடம் பேசியதில் நாங்கள் புரிந்துகொண்டது...

அவளின் கணவன் சுந்தர்ராஜன், அய்யங்கார் சமூகத்தைச் சேர்ந்தவன். காதல் கல்யாணம். சினிமாத் துறையில் ஒரு பெரிய ஒளிப்பதிவாளரிடம் அசிஸ்டென்ட்டாகப் பணியாற்றிக்கொண்டு இருக்கிறான். தனியாகப் படம் ஒளிப்பதிவு செய்வதற்காகப் போராடிக்கொண்டு இருக்கிறான். ஒரு படப்பிடிப்புக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் (அதாவது, 1995 அல்லது 1996-ல்) அவன் ஜெர்மனிக்குச் சென்றிருந்தபோது, அங்கேதான் அவளைச் சந்தித்தான். அவள் பெயர் அலைடா. அவளின் அப்பா அங்கே ஒரு கல்லூரியில் புரொஃபசராக இருக்கிறாராம். ‘அனைடா’ என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பெயரில் ஒரு பிரபல பாப் பாடகி இருக்கிறாள். இதென்ன பெயர் ‘அலைடா’; புதிதாக இருக்கிறதே என்று விசாரித்தேன். ஏன்ஷியன்ட் - புராதனமானவள் என்று அர்த்தம் சொன்னாள்.

இரண்டொரு ஜெர்மன் படங்களில் குரூப் டான்ஸ்களில் இடம்பெற்றிருக்கிறாளாம். தமிழ்ப் படத்தில் குரூப்பில் ஆடுவதற்காக வந்தபோதுதான் சுந்தர்ராஜனைச் சந்தித்ததாகச் சொன்னாள். ஒரு வாரப் பழக்கத்தில் இருவரும் காதல் கொண்டுவிட்டார்கள். படப்பிடிப்பு முடிந்து, குழுவினரோடு சுந்தர்ராஜன் கிளம்பியபோது அழுதேவிட்டாளாம். அதன்பின் ஒரு மாதம் கழித்து, அங்கிருந்து அலைடா மட்டும் தனியாகக் கிளம்பி, ஃப்ளைட் பிடித்து இங்கே வந்துவிட்டாளாம். இருவர் குடும்பமும் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கவில்லை என்பதால், தனியாக ஃப்ளாட் எடுத்துத் தங்கியிருப்பதாகச் சொன்னாள்.

சென்னைக்கு வந்து செட்டிலான பிறகு, ஏழெட்டு தமிழ்ப்படங்களில் தலைகாட்டியிருப்பதாகச் சொன்னாள். “என்னென்ன படங்கள் சொல்லு, போய்ப் பார்க்கிறோம்” என்றேன். “பாத்தா தெர்யாத். கண்பிட்க்க முட்யாத். ஃபோர்த் ரோல, அல்லாட்டி செவன்த் ரோல இர்க்கும். நா இன்னா ஹீரோயினியா..? ஹஸ்பெண்டுக்குக் கொஞ்சம் ஹெல்ப். அவ்ளோதான்!” என்பாள்.

அந்தச் சுந்தர்ராஜனைக் கடைசி வரை நாங்கள் உள்பட, அந்த ஃப்ளாட்டில் இருந்த யாரும் பார்த்ததே இல்லை. அவள் வீட்டிலும் அவனும் அவளும் இருக்கும்படியான போட்டோ எதையும் நாங்கள் பார்க்கவில்லை. அவள் சொன்னதெல்லாம் உண்மைதானா, அல்லது முழுக் கட்டுக்கதையா என்றும் எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.

அவனைப் பற்றிக் கேட்டதற்கு, அவனுக்குச் சொந்த ஊர் கும்பகோணம் என்றும், அங்கேதான் அவனுடைய பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் அனைவரும் இருப்பதாகவும், தான் ஒரே ஒருமுறைதான் அவர்கள் வீட்டுக்குப் போயிருப்பதாகவும் சொன்னாள். “ரொம்ப நல்ல புள்ள. இன்னொசன்ட் பாய்! எப்பியும் வேல வேலன்னே அலஞ்சுட்டிருக்கும். பெருமாள் இவனுக்கு நல்ல ஃப்யூச்சர் கொடுக்கும். எனக்கு ஹோப் இருக்குது!” என்றாள்.

அவள் வீட்டில் பெரிய கிரீடமும், வஸ்திரம், மாலை எனப் பிரமாதமான அலங்காரங்களும் கொண்ட உற்சவ மூர்த்தியான ஸ்ரீனிவாசப் பெருமாளின் புகைப்படம் ஒன்று பிரமாண்டமாக, கனமான ஃப்ரேமிட்டு மாட்டப்பட்டிருந்தது. அவள் வீட்டில் இருந்தால், வைகுண்டவாஸனைப் பற்றிய பாடல் ஏதாவது மெலிதாக ஒலித்துக்கொண்டு இருக்கும்.

நாங்கள் அந்தத் திலகவதி ஃப்ளாட்டில் சுமார் இரண்டு வருட காலம் இருந்தோம். நாங்கள் காலி செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே அலைடாவைக் காணவில்லை. அவள் போர்ஷன் எப்போதும் பூட்டியே இருந்தது. யாரைக் கேட்டாலும் விவரம் தெரியவில்லை. எங்கள் குழந்தைகள் பழக்க தோஷத்தில் அவள் போர்ஷன் முன்னாடி போய்ப் பார்த்து, ஏமாந்து திரும்பி வரும்.

நாங்கள் அந்த வீட்டை காலி செய்து கிளம்புகிற அன்றைக்கும் அவள் வரமாட்டாளா, அவளிடம் விடைபெற்றுக் கிளம்ப மாட்டோமா என்று ஒரு ஏக்கம் என்னுள் எழுந்தது உண்மை. ஆனால், அவளை அதன்பின் நான் பார்க்கவே இல்லை.

என் மனதில் ஆழமாகப் பதிந்த, கண்கள் இடுங்கிய அவளது கள்ளமற்ற சிரிப்பு மட்டும் இன்னும் கலையாமல் இருக்கிறது.

(இந்தப் பதிவில் உள்ள புகைப்படத்தில் இருப்பது அலைடா அல்ல; யாரோ ஒரு மாடல்!)

.

Thursday, June 17, 2010

சந்தனக் குடத்துக்குள்ளே...

கே.கே.நகரில் அய்யங்கார் வீட்டில் குடி போனது பற்றி எழுதிவிட்டு, அங்கு திருடன் வந்த கதையைப் பின்னர் எழுதுவதாகக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதை இப்போது பார்ப்போம்.

நாங்கள் குடிபோன எட்டாவது வீடு இந்த அய்யங்கார் வீடு. மிகக் குறைவான காலமே குடியிருந்த வீடு. அதாவது, நாற்பதே நாட்கள்!

நாள், கோள், நட்சத்திரம், ராசி, நேமாலஜி, நியூமராலஜி போன்றவற்றில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை. ராகு காலம், எம கண்டம், குளிகை, வடக்கே சூலம் போன்றவற்றைப் பார்த்தும் நான் காரியங்கள் செய்வது இல்லை. ஆனாலும், இந்தப் பதிவை இப்போது நான் எழுதிக்கொண்டு இருக்கும்போது, ‘அஷ்டமத்தில் சனி’ என்பார்களே, அதற்குப் பொருத்தமாக நான் குடிபோன எட்டாவது வீடு சனியன் பிடித்த வீடாக அமைந்த பொருத்தத்தை எண்ணி ஆச்சரியப்படுகிறேன்.

முந்தின சி.பி.டபிள்யூ.டி. குவார்ட்டர்ஸ் வீட்டுக்காக நான் அதன் உரிமையாளரிடம் தந்த அட்வான்ஸ் பணம் ரூ.15,000 அம்போ! திருப்பி வாங்க முடியவில்லை. அவரிடமிருந்து அரசாங்கம் வீட்டைப் பறித்துவிட்டது. அவரும் குடும்பத்தோடு வேறு ஊருக்குச் சென்று செட்டிலாகிவிட்டார். புதிய வீட்டுக்காக அட்வான்ஸ் ரூ.20,000 கொடுப்பதற்காக அலுவலகத்தில் கடனாகப் பெற்றது, மாதத் தவணையாக சம்பளத்தில் கழிந்ததில், மாதச் செலவுகளுக்குத் திண்டாட்டமானது. புரோக்கர் கமிஷன் ரூ.2,000 அழுதும், கே.கே.நகர் வீட்டில் தொடர்ந்து குடியிருக்க முடியாமல் காலி செய்யும்படி நேரிட்டது. அது மட்டுமல்ல, “நீங்க இப்படித் திடீர்னு காலி பண்ணுவீங்கன்னு தெரிஞ்சா, உங்களுக்கு நான் வீட்டை வாடகைக்கு விட்டிருக்கவே மாட்டேன்” என்று சத்தம் போட்ட வீட்டு ஓனர், அதிக பட்சமாக நாங்கள் தங்கியிருந்த 10 நாட்களுக்காக ஒரு மாத வாடகை ரூ.2,000-ஐ அட்வான்ஸ் தொகையில் கழித்துக்கொண்டு மீதியைத்தான் கொடுத்தார்.

பணக் கஷ்டம், மனக் கஷ்டம் அதிகம் அனுபவித்த வீடு அது. அங்கேதான் திருடன் புகுந்த சம்பவமும் நடந்தது.

முன்னாலும் பின்னாலும் கிரில் கம்பிக் கதவுகளைப் பூட்டிவிட்டுத்தான் படுத்துக் கொண்டோம். வீட்டின் பின்புறம் கிரில் கதவுக்கு வெளியேதான் டாய்லெட் இருந்தது.

கே.கே.நகர் வீட்டுக்குக் குடிபோன பதினைந்து நாட்களுக்குள்... ராத்திரி 12 மணிக்கு டமாலென்று ஒரு பெரிய சத்தம் கேட்டது. தூக்கிவாரிப் போட்டு, எழுந்தோம். உடனடியாக வீட்டின் எல்லா மின்விளக்குகளையும் போட்டோம். அதற்குள் மாடியிலிருந்து வீட்டு ஓனரும், அவரின் பிள்ளைகளும் இறங்கி வந்தார்கள். “என்ன... என்ன... ஏதோ சத்தம் கேட்டதே?” என்றார்கள். சத்தம் கேட்டுப் பக்கத்து வீடுகளிலிருந்தும்கூட ஆட்கள் திரண்டு வந்தார்கள்.

இந்தப் பகுதியில் திருட்டுப் பயம் அதிகம் என்றும், திருடர்கள் மாடிக்கு மாடி தாவி ஓடுவார்கள் என்றும் அவர்கள் சொன்னார்கள். வீட்டைச் சுற்றி வந்தபோது, டிரெயினேஜின் சதுரமான இரும்புப் பலகை கண்ணில் பட்டது. எந்தத் திருடனோ சுவரேறிக் குதிக்கும்போது, அதன் மீது குதித்திருக்க வேண்டும். அதனால்தான் சத்தம் அத்தனை பெரிதாகக் கேட்டிருக்கிறது. டார்ச் லைட்டுகளுடன் வீட்டைச் சுற்றித் தேடினோம். திருடன் அத்தனைச் சீக்கிரம் எங்கேயும் தப்பிச் சென்றிருக்க முடியாது என்று தோன்றியது. இங்கேதான் எங்கேயோ இருளில் பதுங்கியிருக்கிறான். எங்கே?

விசில் ஊதிக்கொண்டே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரை அழைத்து, விவரம் சொன்னோம். அவரும் இன்னொரு கான்ஸ்டபிளுமாக வந்து, பத்து நிமிடத்துக்கு மேல் வீட்டை அலசினார்கள். யாரையுமே காணோம். “ஓடிட்டிருப்பான் சார்! கில்லாடிங்க. அவ்வளவு சுலபத்துல மாட்டுவானுங்களா அவங்க!” என்று சர்டிஃபிகேட் கொடுத்துவிட்டு, “மறுபடி சத்தம் கேட்டுச்சுன்னா கூப்பிடுங்க” என்று அவர்கள் இருவரும் கிளம்பிச் சென்றார்கள். கூட்டமும் கலைந்தது. வீட்டு ஓனரும், பிள்ளைகளும் மாடியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். மின்விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு நாங்களும் படுத்துக்கொண்டோம்.

தூக்கம் வரவில்லை. எழுந்து உட்கார்ந்தோம். ‘சத்தம் கேட்ட அடுத்த கணம் எழுந்து எல்லா மின்விளக்குகளையும் போட்டுவிட்டோம்; திருடன் வந்திருந்தால் தப்பிச் சென்றிருக்க வாய்ப்பே இல்லை. பின், எங்கே போனான்?’ குழப்பமாக இருந்தது.

தூக்கம் பிடிக்காமல், சற்று நேரம் டி.வி. பார்க்கலாமே என்று டி.வி-யைப் போட்டோம். ஏதோ பழைய படப் பாடல்கள்.

திருடன் பற்றிய யோசனையாகவே பாடல் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு இருந்தபோதுதான், அந்தப் பாடல் காட்சி வந்தது. ‘தங்கச் சுரங்கம்’ படத்தில், சிவாஜியும் பாரதியும் பாடும் பாடல்.

‘சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் இரண்டு துள்ளி விளையாடுது...’

நானும் என் மனைவியும் சட்டென ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். எங்கள் மனசுக்குள் பளீர் என்று ஒரு மின்னல்!

ஒரு ஆழமான கிணற்றுக்குள், கயிற்றில் தொங்கியபடி சிவாஜியும் பாரதியும் ஆடுவது போன்ற காட்சி அது! ‘திருடனை எல்லா இடங்களிலும் தேடினோமே... கிணற்றுக்குள் தேடவே இல்லையே?’ என்று தோன்றியது. மீண்டும் மாடி ஏறிப் போய், வீட்டு ஓனரிடம் என் சந்தேகத்தைச் சொன்னேன்.

அவரும் அவரின் இரண்டு பிள்ளைகளும் இறங்கி வந்தார்கள். வீட்டின் பின்புறம் சென்று, கிணற்றுக்குள் டார்ச் அடித்துப் பார்க்க... கொஞ்சம் ஆழத்தில், மோட்டாருக்காகப் போட்டிருந்த இரும்பு பைப்பைப் பிடித்துக்கொண்டு, கிணற்றின் சுவர் ஓரமாக ஒண்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான் திருடன். அவன் உடம்பு கிடுகிடுவென நடுங்கிக்கொண்டு இருந்தது.

உடனே, வாசலுக்கு ஓடிப் போய், அடுத்த தெருவில் ‘பாரா’ போய்க்கொண்டிருந்த கான்ஸ்டபிளைக் கையோடு அழைத்துக்கொண்டு வந்தேன். கூடவே, இன்னொரு கான்ஸ்டபிளும் வந்தார்.

இருவரும் கிணற்றடிக்கு வந்து, உள்ளே பார்த்தனர். மேலே இருந்தபடியே நீண்ட கழியால் அந்தத் திருடனின் மண்டையில் குத்தி, “வெளியே வாடா!” என்று கத்தினர். அவன் மெதுவாக பைப்பைப் பிடித்துக்கொண்டு ஏறி வந்தான். கைக்கெட்டும் தூரம் வரைக்கும் வந்ததும், இரண்டு கான்ஸ்டபிளுமாக அவனை வெளியே இழுத்துப்போட்டு, அங்கேயே லத்தியால் அடி பின்னி எடுத்தனர்.

வேறு ஒரு வீட்டில் நகைகளைத் திருடிக்கொண்டு, மாடியிலிருந்து மாடிக்குத் தாவி ஓடும்போது, கால் இடறி அத்தனை உயரத்தில் இருந்து கீழே விழுந்திருக்கிறான். அதில் அவன் கால் உடைந்து, எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க வேண்டும். அவனால் நிற்க முடியவில்லை. வலியால் கதறினான். கான்ஸ்டபிள்கள் அவனைத் தரதரவென்று இழுத்துச் சென்றனர். “ஸ்டேஷன்ல வந்து ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக் கொடுத்து, கையெழுத்துப் போட்டுட்டுப் போங்க!” என்று அழைத்தார்கள். வீட்டு ஓனர் அவர்களுடன் கிளம்பிப் போனார்.

அதன்பின், எங்களுக்குத் தூக்கம் சுத்தமாகப் போய்விட்டது.

நாங்கள் அந்த வீட்டில் குடியிருந்த நாற்பது நாட்களுக்குள், டூ-வீலர் திருட்டுப் போனது, ஈ.பி. மீட்டர் ரீடிங் பார்க்க வருவது மாதிரி வந்து, பெண்மணியின் கழுத்து நகையை அறுத்துக்கொண்டு ஓடியது, பீரோ புல்லிங் திருட்டு என அந்த ஏரியாவில் விதம் விதமாக பத்துப் பதினைந்து திருட்டுச் சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுவிட்டோம்.

நாலு வயது, இரண்டு வயதில் சின்ன குழந்தைகளை வைத்துக்கொண்டு, தொடர்ந்து அங்கே குடியிருக்க விரும்பாமல், சீக்கிரமே வேறு ஒரு வீடு பார்த்துக் குடிபோய்விட்டேன்.

நெசப்பாக்கம், திலகவதி அப்பார்ட்மென்ட்டில் குடியேறிய அந்த வீடு, நாங்கள் குடிபோன 9-வது வீடு.

எட்டுக் குடித்தனங்கள் கொண்ட அந்த அப்பார்ட்மென்ட்டில், ஒரு பிளாட்டில் வெள்ளைக்காரி (ஜெர்மன்) ஒருத்தி குடியிருந்தாள். அது ஒரு சுவாரஸ்யமான காதல் கதை!

தொடருவேன்...

.

Friday, June 11, 2010

டி.எம்.எஸ் - 100/100

ன் அபிமான பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் பற்றி ‘டி.எம்.எஸ்-25 என்னும் தலைப்பில் வெளியிட 25 குறிப்புகளை எழுதித் தரச் சொன்னார்கள் ஆனந்தவிகடன் குழுவினர். விகடன் 16.6.10 இதழில் அது வெளியாகியிருக்கிறது. ஆனால், டி.எம்.எஸ் என்ற இமயத்தை 25 குறிப்புகளுக்குள் அடக்கிவிட முடியுமா?

இதோ... ‘டி.எம்.எஸ் - 100/100. மிக நீளமான பதிவுதான். இரண்டாக, மூன்றாகப் பிரித்துப் போட மனசில்லை. எனவே, ஒரே மெகா பதிவாகப் போட்டுவிட்டேன். அவசரமில்லை; நேரம் கிடைக்கும்போது படியுங்கள். ஒரு ராக வேந்தனைப் பற்றிய முழுமையான பார்வை உங்களுக்குக் கிடைக்கும்.

மிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் நான்கு தலைமுறைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்த எழிலிசை வேந்தன்; தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்; ராகத்தோடு உணர்ச்சியையும் குழைத்துப் பாடல் வரிகளுக்கு உயிரூட்டிய இசை பிரம்மா!

1
. டி.எம்.எஸ். என்பதில் உள்ள 'எஸ்' சௌந்தரராஜனையும், 'எம்' என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்காரையும் குறிக்கும். 'டி' என்பது அவரின் குடும்பப் பெயர் 'தொகுளுவா' என்பதைக் குறிக்கும். கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு உடம்பில் பலம் உண்டாக்கக்கூடிய சத்து மாவு தயாரித்துத் தருவதில் அந்தக் குடும்பம் பேர் பெற்றது.

2. பிறந்தது மதுரையில். ஒரு அக்கா, ஒரு அண்ணன் உண்டு. டி.எம்.எஸ். மூன்றாவது குழந்தை. இவருக்கு அடுத்துப் பிறந்த ஒரு தம்பி கிருஷ்ணமூர்த்தி ஐயங்கார் மட்டும் இப்போது மதுரை, ஆனைமலையில் மிருதங்க வித்வானாக இருக்கிறார்.

3. எஸ்.எஸ்.எல்.சி படித்துள்ளார். ஆறாம் வகுப்பு வரை மதுரை செயின்ட் மேரிஸ் ஸ்கூலிலும், மேல்நிலைப் படிப்பை சௌராஷ்டிரா பள்ளியிலும் முடித்தார்.

4. டி.எம்.எஸ்-ஸுக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார் டி.எம்.எஸ்.

5. 1946
-ல் வெளியான 'கிருஷ்ண விஜயம்' படத்தில் நரசிம்ம பாரதிக்குப் பாடிய 'ராதே என்னை விட்டு ஓடாதேடி' பாடல்தான் டி.எம்.எஸ் முதன்முதலாக பின்னணி பாடிய பாடல்.

6. டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, 'இமயத்துடன்' என்னும் தன்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுத் தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக் கிடந்த அந்த இடங்களில், அதே பழைய ஒலிப்பதிவு அறையைக் கண்டுபிடித்து, அங்கே நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்து, பழைய நினைவுகளில் ஊறித் திளைத்த பாக்கியம் அநேகமாக வேறு எந்தப் பாடகருக்குமே கிடைத்திராத ஒன்று!

7.
டி.எம்.எஸ். வறுமையில் வாடிய ஆரம்பக் காலத்தில், கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்த எம்.கே.டி. பாகவதருக்கு உதவியாளராகச் சேரும் வாய்ப்பு ஒன்று வந்தது. அவரைப் போல் தானே ஒரு நாள் பேரும் புகழும் அடைய முடியும் என்ற நம்பிக்கையில், உறுதியோடு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் டி.எம்.எஸ்.

8. மதுரை வரதராஜ பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். நல்ல குரலெடுத்து பஜனைப் பாடல்கள் பாடுவதிலும் அவர் வல்லவர். அந்தத் திறமை இயல்பிலேயே டி.எம்.எஸ்ஸிடமும் இருந்தது.

9. டி.எம்.எஸ்ஸும் மதுரை வரதராஜ பெருமாளுக்குச் சேவை செய்துள்ளார். மேல் வருமானத்துக்காக, அந்தக் கோயில் மண்டபத்திலேயே, 'தெற்குப் பெருமாள் மேஸ்திரி தெரு இந்திப் பிரசார சபா' என்னும் பெயரில் ஒரு இந்திப் பள்ளியையும் தொடங்கி, மாணவர்களுக்கு இந்தி சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.

10. இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்ததில்லை டி.எம்.எஸ். மற்றபடி எல்லாக் கோயில் விசேஷங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை, பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது.

11. டி.எம்.எஸ்ஸுக்குச் சரளமாக இந்தி பேசவும், படிக்கவும், எழுதவும் தெரியும். அவரது அபிமான இந்திப் பாடகர் முகம்மது ரஃபியிடம் அவர் பாடிய பாடல்களை, அவரைப் போலவே அச்சு அசலாகப் பாடிக் காண்பித்து அசத்தியிருக்கிறார்.

12. டி.எம்.எஸ்ஸுக்கு முதன்முதலில் பாடும் வாய்ப்பை அளித்தவர், அந்நாளில் பிரபல திரைப்பட இயக்குநராக இருந்த சுந்தர்லால் நட்கர்னி. அவரிடம் எப்படியும் பின்னணி பாடும் வாய்ப்பு பெற்றுவிடும் உத்தேசத்தில், அவரது வீட்டில் பணியாளராகவே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் டி.எம்.எஸ்.

13. தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். (அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.)

14. டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்..., உள்ளம் உருகுதய்யா முருகா, சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா, மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப் பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியது டி.எம்.எஸ்தான்!

15. டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடலாகத் திகழ்கிறது. இந்தப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்திருப்பார் டி.எம்.எஸ். கர்னாடக இசை மேதை செம்மங்குடியே இதைச் சிலாகித்துப் பாராட்டியிருக்கிறார்.

16. சென்னை, நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சர்வராகப் பணி செய்து வந்தவர் குழந்தைவேலன். நெற்றியில் திருநீறு, குங்குமம், சுத்தமான உடை, நடவடிக்கைகளில் பணிவு என இருந்த அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க, அவர் தங்கியிருந்த அறைக்கே சென்றார் டி.எம்.எஸ். ஒரு நோட்டுப் புத்தகத்தில் தான் எழுதி வைத்திருந்த பக்திப் பாடல்களைக் காட்டினார் அவர். அதில் ஒரு பாட்டு டி.எம்.எஸ்ஸுக்கு மிகவும் பிடித்துப்போக, அதற்குத் தானே இசையமைத்துப் பாடினார். பாட்டு ஹிட்! அந்தப் பாடல்தான்... 'உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை...'

17. 'அடிமைப் பெண்' படத்தின்போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். படத்துக்கான பாடலைப் பாடிக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட, மகள் திருமணத்தைவிட சினிமா பெரிதல்ல என்று கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு, அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிர மணியனுக்குக் கிடைத்து, அவருக்குப் புகழை அள்ளிக் கொடுத்தது. அந்தப் பாடல்தான், 'ஆயிரம் நிலவே வா...'.

18. மகள் திருமணம் முடிந்து வந்த பின்பு, டி.எம்.எஸ்ஸை அழைத்து, மீண்டும் தனக்குப் பின்னணி பாடுமாறு கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். டி.எம்.எஸ்ஸும் கோபத்தையும் வருத்தத்தையும் மறந்து, தொடர்ந்து எம்.ஜி.ஆருக்குப் பாடத் தொடங்கினார்.

19. 'அடிமைப் பெண்' படம் வரையில், ஒரு பாடலுக்கு டி.எம்.எஸ். வாங்கிய தொகை வெறும் 500 ரூபாய்தான். (அதன்பின்பு, குறைந்தது ஆயிரம் ரூபாயாவது தரவேண்டும் என்று கேட்டுப் பெற்றார்.) என்னதான் டி.எம்.எஸ். ஒரே டேக்கில் சரியாகப் பாடினாலும், மற்ற பாடகர்கள் உச்சரிப்பில் செய்கிற தவறு, இசைக் குழுவினரில் யாரோ ஒருவர் செய்கிற தவறு போன்ற பல காரணங்களால், அந்தக் காலத்தில் ஒரே பாட்டை மீண்டும் மீண்டும் பத்துப் பன்னிரண்டு தடவைக்கு மேல் பாடவேண்டியிருக்கும். அத்தனைக்கும் சேர்த்துத்தான் அந்தத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

20. 'சிந்தனை செய் மனமே' பாடலின் இரண்டாவது பகுதியாகத் தொடரும் 'வடிவேலும் மயிலும் துணை' என்கிற பாடலில் மூச்சு விடாமல் தொடர்ந்து பாடிச் சாதனை செய்திருப்பார் டி.எம்.எஸ்.

21. எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மட்டுமல்ல; ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் என ஒவ்வொரு நடிகருக்கேற்பவும் குரல் மாற்றிப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அவரது பாடல்களை உன்னிப்பாகக் கேட்டு ரசிக்கும் நேயர்களுக்கு இது புரியும்.

22. 'உயர்ந்த மனிதன்' பாடல்களை அதன் தயாரிப்பாளர் ஏவி.எம்-முக்குப் போட்டுக் காண்பித்தார்கள். 'வெள்ளிக்கிண்ணம்தான்...', 'என் கேள்விக்கென்ன பதில்...' இரண்டையும் கேட்டுவிட்டு ஏவி.எம். கேட்ட முதல் கேள்வி, "என் கேள்விக்கென்ன பாடல், இளம் நடிகர் சிவகுமாருக்கானது என்று டி.எம்.எஸ்ஸிடம் சொன்னீர்களா?" என்பதுதான். அவர் நினைத்ததுபோல் டி.எம்.எஸ்ஸுக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கவில்லை. சொல்லியிருந்தால், சிவகுமாருக்கேற்ப தன் குரலைக் குழைத்து மென்மையாக்கிக்கொண்டு பாடியிருப்பார் டி.எம்.எஸ். என்பதில் ஏவி.எம்முக்கு அத்தனை நம்பிக்கை. பின்னர், இந்தத் தகவல் டி.எம்.எஸ்ஸுக்குத் தெரிவிக்கப்பட்டு, சிவகுமாருக்கேற்ப மீண்டும் அதே பாடலை குழைவும் நெகிழ்வுமாகப் பாடித் தந்தார் டி.எம்.எஸ்.

23. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். முதன்முதல் பாடிய பாடல், 'மலைக்கள்ளன்' படத்தில் இடம்பெறும் 'எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'.

24. அதற்கு முன்பே எம்.ஜி.ஆரின் 'மந்திரிகுமாரி' படத்தில் 'அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே' என்ற பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். (எம்.ஜி.ஆருக்கு அல்ல!) ஆனால், அந்த சினிமா டைட்டிலில் டி.எம்.எஸ். பெயர் இடம்பெறவில்லை. அதேபோல், 'பல்லாண்டு வாழ்க' படத்திலும் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்கிற பாரதிதாசன் பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். அந்தப் பட டைட்டிலிலும் டி.எம்.எஸ். பெயர் இடம்பெறவில்லை.

25. 'அன்னம் இட்ட வீட்டிலே...' பாடலை முதன்முதலாக ஒலிபரப்பியது இலங்கை வானொலி. டி.எம்.எஸ்ஸுக்கு முதல் பாராட்டுக் கடிதம் வந்தது இலங்கை, மட்டக்கிளப்பிலிருந்து. டி.எம்.எஸ்ஸுக்குக் கடிதம் எழுதிய முதல் ரசிகர் ஓர் இலங்கைத் தமிழர்.

26. மலையாளத் திரைப்படமான 'ராக சங்கமம்' படத்தில், கிஷோர் இசையில், 'படைச்சோன்தன்னை ரட்சிக்கணும்...' என்ற பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ்.

27. சமையல் செய்வதில் நிபுணர் டி.எம்.எஸ். முன்னெல்லாம் ஓய்வு கிடைத்தால், இவரது பொழுதுபோக்கே வீட்டில் சமையல் செய்வதில் ஈடுபடுவதுதான். டி.எம்.எஸ். ரசம் வைத்தால், வீடு முழுக்க அந்த வாசனை கமகமக்கும்.

28. பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள், செயின்களை அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர் டி.எம்.எஸ். "இல்லாட்டா ஒருத்தனும் மதிக்கமாட்டான்யா! 'பாவம், டி.எம்.எஸ்ஸுக்கு என்ன கஷ்டமோ!'ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளிவேஷம் தேவையா இருக்கு" என்பார். வீட்டுக்கு வந்ததும் முதல் காரியமாக அத்தனை நகைகளையும் கழற்றி வைத்துவிடுவார்.

29. சாண்டோ சின்னப்பா தேவருக்கு டி.எம்.எஸ். மீது அளவற்ற அன்பு உண்டு. எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்கள் தயாரித்துள்ளவர் தேவர். 'நல்ல நேரம்' படத்தின்போது, டி.எம்.எஸ். மீது அப்போது எழுந்த ஒரு கோபத்தில், அவரைத் தவிர வேறு யாரையாவது பாட வைக்கும்படி எம்.ஜி.ஆர். சொல்ல, உறுதியாக மறுத்துவிட்டார் தேவர். "அப்படின்னா இந்தப் படத்தை நான் தயாரிக்கவே இல்லே! கேன்ஸல்!" என்று அவர் தீர்மானமாகச் சொன்னதைக் கண்டு, எம்.ஜி.ஆரே வியந்துபோனார். தன் பிடிவாதத்தைக் கைவிட்டார். 'நல்ல நேரம்' படத்தில் டி.எம்.எஸ். பாடிய அத்தனைப் பாடல்களும் சூப்பர்டூப்பர் ஹிட்!

30. ‘ஜெயபேரி’ என்னும் படத்தில் நாகேஸ்வரராவுக்கு ஒரு பாடல். ‘தெய்வம் நீ வேணா... தர்மம் நீ வேணா...’ என்கிற கிளைமாக்ஸ் பாடலான இதை ஹை-பிட்ச்சில் பாடவேண்டும். பாடகர் கண்டசாலா, இசையமைப்பாளர் பென்டியாலா நாகேஸ்வரராவைக் (இவர் நடிகர் நாகேஸ்வரராவ் அல்ல!) கையெடுத்துக் கும்பிட்டு, “இது நம்மால ஆகாதுங்க. டி.எம்.எஸ்ஸைக் கூப்பிட்டுப் பாட வைங்க. அற்புதமா பாடித் தருவார்” என்று சிபாரிசு செய்ய, தமிழைத் தவிர வேறு மொழிகளில் பாட அதிகம் விருப்பம் காட்டாத டி.எம்.எஸ்ஸை வற்புறுத்தி அழைத்துப் போய்ப் பாட வைத்தார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் என யாருக்கும் பாடாத ஒரு புதுக் குரலில், நடிகர் நாகேஸ்வரராவுக்குக் கச்சிதமாகப் பாடித் தந்து அசத்திவிட்டார் டி.எம்.எஸ்.

31. சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர, தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி.எம்.எஸ்ஸுக்கு எதுவும் இல்லை. பாடல்... பாடல்... பாடல்... இதைத் தவிர, வேறு பொழுதுபோக்கோ, அரட்டையோ இல்லாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர் டி.எம்.எஸ்.

32. கவிஞர் வாலியைத் திரையுலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ்தான். அது மட்டுமல்ல, அவரை எம்.ஜி.ஆர். உள்பட பல திரையுலகப் பிரபலங்களிடம் அழைத்துப்போய் அறிமுகப்படுத்தி வைத்து, சான்ஸ் வாங்கித் தந்தவர் டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்றுவரையிலும் மறவாமல், 'இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ். போட்டது' என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்ச்சியுடன் கூறுவார் வாலி.

33. ஜெயலலிதாவுடன் இணைந்து, 'சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்...', 'ஓ... மேரி தில்ரூபா...', 'கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்ஸ்' என மூன்று பாடல்களைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ்.

34. 'மரியாதைராமன் கதா' என்னும் தெலுங்குப் படத்தில் டி.எம்.எஸ். பாடியுள்ளார். இந்தப் படத்தில்தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிமுகமானார்.

35. சிவாஜிகணேசனுக்கு பிரபல பாடகர் சி.எஸ்.ஜெயராமனைத்தான் தனக்குப் பின்னணி பாட வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால், சி.எஸ்.ஜெயராமன் தனக்குக் கொடுக்கும் சம்பளம் போதாது என்று பாட மறுத்துவிட்டதால், அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் பாடும் வாய்ப்பு டி.எம்.எஸ்ஸுக்குக் கிடைத்தது. அவரும் பாடிக்கொடுக்க, அத்தனைப் பாடல்களும் பயங்கர ஹிட்! சிவாஜிகணேசன் மகிழ்ந்துபோய், அன்றிலிருந்து தனக்கு டி.எம்.எஸ்ஸே பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்தப் படம்தான் 'தூக்குத் தூக்கி'.

36. 'தூக்குத் தூக்கி' படத்துக்கு முன்பே சிவாஜிக்கு 'கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக்கிளி ஆக்கிவிட்டு...' என்ற பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக்கிளி'யில் இடம்பெற்ற பாடல் அது. அதைக் கேட்டுவிட்டுத்தான் 'மலைக்கள்ளன்' படத்தில் தனக்கு டி.எம்.எஸ்ஸைப் பின்னணி பாட வைக்கும்படி சிபாரிசு செய்தார் எம்.ஜி.ஆர்.

37. பல காதல் டூயட்டுகளைப் பாடிய டி.எம்.எஸ்ஸுக்கும் காதல் தோல்வி உண்டு. தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், வறுமைக் கோட்டில் இருந்த டி.எம்.எஸ்ஸுக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக்கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்.

38. பெண் கவிஞர் ரோஷனாரா பேகம் எழுதிய ஒரே ஒரு சினிமா பாடல்... 'குங்குமப் பொட்டின் மங்கலம்'. அதைப் பாடியவர் டி.எம்.எஸ்.

39. பாடலை வாங்கிப் படித்து, இசையமைப்பாளர் சொன்ன ராகத்தில் பாடிக் கொடுப்பது மட்டுமே தன் கடமை என்று நினைக்காமல், அதை மேலும் சிறப்பாகச் செய்வதற்கான தனது யோசனைகளையும் சொல்வது டி.எம்.எஸ்ஸின் வழக்கம். இப்படித்தான், 'வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு ‘எக்கோ எஃபெக்ட்’ (எதிரொலி) வைக்கச் சொன்னார். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் டி.எம்.எஸ். அதன்படியே வைக்கப்பட்டது. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு, டி.எம்.எஸ். சொன்ன யோசனை எத்தனை புத்திசாலித்தனமானது என்று உணர்ந்து வியந்தார் தயாரிப்பாளர்.

40. மு.க.முத்து நடித்த பட விழா ஒன்றில், "மந்திரிகுமாரிக்குப் பாடிய டி.எம்.எஸ். இந்த மந்திரி குமாரனுக்கும் பாடியிருக்கிறார்" என்று சிலேடையாகப் புகழ்ந்தார் முதல்வர் மு.கருணாநிதி.

41. 'நாடோ டி மன்னன்' படத்தில் இடம்பெறும் 'தூங்காதே தம்பி தூங்காதே' பாடலுக்குப் பரம ரசிகர் இந்திப் பாடகர் முகம்மது ரஃபி. அந்தப் பாடலில், 'விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்' என்கிற வரியில் 'ஓ...' என்று ராகம் இழுப்பார் டி.எம்.எஸ். இந்தப் படம் இந்தியில் தயாரானபோது, இந்தப் பாடல் வரியைக் கேட்ட முகம்மது ரஃபி, "ஹம் மர் ஜாயேங்கே" (இதைப் பாடினா என் உயிர் போயிடும்" என்றாராம். பின்னர், அவருக்கேற்ப டியூனை மாற்றிக் கொடுத்தார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. அதேபோல், 'ஓராயிரம் பாடலிலே' பாடலைக் கேட்டு உருகிய ரஃபி, டி.எம்.எஸ்ஸின் தொண்டைப் பகுதியை வருடி, "ஆஹா... இங்கிருந்துதானா அந்தக் குரல் வருது" என்று வியந்திருக்கிறார்.

42. வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் 'யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு'. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததைவிட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ். இந்தப் பாடலைக் கேட்டு மயங்கிய சிவாஜி, இந்தக் காட்சியில் தன் பங்களிப்பும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகப் படப்பிடிப்பையே பல நாள் தள்ளிப் போட்டு, வெவ்வேறு விதமாக நடித்து ரிகர்சல் பார்த்தார்.

43. காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாயிபாபா இருவரிடமும் மிகுந்த பக்தி கொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாயிபாபா ஒருமுறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை 'கற்பகவல்லி' பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார் டி.எம்.எஸ்.

44. கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். இதனால் ஒருமுறை அவர், எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்காகக் கண்ணதாசன் எழுதிய 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்; அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்' என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் அந்த வரியை 'வாட வேண்டும்' என்று மாற்றித் தந்த பிறகே பாடித் தந்தார்.

45. பாடல் வரிகளில் உள்ள தமிழ் வார்த்தைகளைச் சரியாக உச்சரித்துப் பாடுவதில் தேர்ந்தவர் டி.எம்.எஸ். இதை டாக்டர் மு.வரதராசனாரே குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்.

46. பாடலின் பொருளை முழுமையாக உணர்ந்து, உள்வாங்கிக்கொண்டால்தான், அதை உயிர்ப்போடு பாடமுடியும் என்பதில் நம்பிக்கை உள்ளவர் டி.எம்.எஸ். அருணகிரிநாதரின் திருப்புகழான 'முத்தைத்தரு பத்தித் திருநகை' பாடலைப் பாட வேண்டி வந்தபோது, அதன் பொருள் அங்கிருந்த ஒருவருக்கும் தெரியவில்லை. எனவே, டி.எம்.எஸ். நேரே கிருபானந்தவாரியாரிடம் சென்று, அந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் தெளிவாக அர்த்தம் தெரிந்துகொண்டு வந்த பின்பே, அதைப் பாடினார்.

47. தான் பாடுகின்ற பாடல், அந்தக் கதைச் சூழ்நிலைக்கேற்பப் பக்காவாகப் பொருந்த வேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கிடுபவர் டி.எம்.எஸ். 'உயர்ந்த மனிதன்' படத்தில் சிவாஜி ஓடிக்கொண்டே பாடுகிற காட்சி என்பதால், தானே ஒலிப்பதிவுக் கூடத்தை மூச்சுவாங்க இரண்டு சுற்று ஓடிவந்து டி.எம்.எஸ். மூச்சு வாங்கிப் பாடிய பாடல்தான் 'அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே...'

48. கவிஞர் வாலி முதன்முதல் எழுதியது, 'கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...' என்ற பக்திப் பாடல். ஒரு தபால் கார்டில் இந்தப் பாடலை எழுதி டி.எம்.எஸ்ஸுக்கு அனுப்பினார் வாலி. அதற்கு இசையமைத்து ஹிட் ஆக்கினார் டி.எம்.எஸ். வாலிக்குத் திரையுலக வாசலைத் திறந்து வைத்த பாடல் இது என்றால் மிகையாகாது.

49. நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும்பொருட்டு கோயமுத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டு, பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார் டி.எம்.எஸ். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போதுதான்.

50. டி.எம்.எஸ். - சுமித்ரா திருமணப் பத்திரிகையில் ஒரு வேடிக்கையான அடிக் குறிப்பு போடப்பட்டது. 'தங்கள் பங்கான ரேஷன் அரிசியை திருமணத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே கிடைக்குமாறு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்பதுதான் அந்தக் குறிப்பு. திருமணத்தில் கலந்துகொள்கிறவர்கள் நிஜமாகவே அரிசி அனுப்பவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அரிசித் தட்டுப்பாடு கடுமையாக நிலவிய காலகட்டம் அது. எனவே, 'இத்தனை பேருக்கு உணவளிக்க எங்கிருந்து உங்களுக்கு அரிசி கிடைத்தது?' என்று அதிகாரிகள் கேட்டால், அவர்களுக்குப் பதில் சொல்வதற்காகப் போடப்பட்ட ஒரு கண்துடைப்பு வாசகம்தான் அது.

51. வசதியிலும் அந்தஸ்திலும் தங்களுக்குக் குறைந்தவர் என்பதால், டி.எம்.எஸ்ஸுக்குத் தன் தங்கை சுமித்ராவைத் திருமணம் செய்து தர மறுத்துவிட்டார் அண்ணன். சுமித்ராவுக்கோ டி.எம்.எஸ்ஸை மணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், அண்ணனோ தங்கையின் விருப்பத்தையும் மீறி, வேறு வசதியான இடத்தில் சம்பந்தம் பேசி முடித்துவிட்டார். ஆனால், திருமணத்துக்கு முந்தைய நாள் அந்தக் குறிப்பிட்ட வரன் எதிர்பாராத விதமாக இறந்துவிட, தான் விரும்பிய டி.எம்.எஸ்ஸையே கரம் பிடித்தார் சுமித்ரா.

52. எம்.ஜி.ஆர்., சிவாஜி, மு.கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர் என்ற பெருமைக்குரியவர் டி.எம்.எஸ்.

53. டி.எம்.எஸ். வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்த ஆரம்ப நாளில், கோவை, சென்ட்ரல் ஸ்டூடியோ முன்னால் பெட்டிக்கடை வைத்திருந்தவர் சாண்டோ சின்னப்பா தேவர். அப்போது உண்டான நட்புதான், பின்னாளில் அவர் தன் படங்கள் அனைத்திலும் டி.எம்.எஸ்ஸைப் பாட வைக்கக் காரணமாக இருந்தது. 'தாயில்லாமல் நானில்லை' படத்தில் கமல்ஹாசனுக்கும், 'தாய் மீது சத்தியம்' படத்தில் ரஜினிகாந்துக்கும் டி.எம்.எஸ்ஸைப் பாட வைத்தார் தேவர்.

54. இசைஞானி இளையராஜாவுக்கு டி.எம்.எஸ். குரலில் ஒரு ஈர்ப்பு உண்டு. 'திரையுலகில் உள்ள ஒரே ஒரு ஆம்பிளைக் குரல்' என்று புகழ்வார். அவர் இசையமைத்த முதல் படமான 'அன்னக்கிளி'யில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு ஆண் குரல் டி.எம்.எஸ்ஸின் குரலே!

55. 'அன்னக்கிளி'க்கு முன்பே 'தீபம்' என்ற படத்துக்காக (பின்னாளில் சிவாஜி நடித்து வெளியான 'தீபம்' இல்லை இது.) கங்கை அமரன் எழுதிய 'சித்தங்கள் தெளிவடைய' என்கிற பாடலை, இளையராஜாவின் இசையமைப்பில் பாடியுள்ளார் டி.எம்.எஸ். அந்தப் படம் வெளியாகவே இல்லை.

56. 'பாகப் பிரிவினை' படத்தின் நூறாவது நாள் விழா, சென்னை, எழும்பூரில் உள்ள ஹோட்டல் 'அசோகா'வில் நடந்தது. அதில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட்டது. பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை என்பது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ்., விழாவில் 'கடவுள் வாழ்த்து' பாட அழைத்தபோது மறுத்துவிட்டார். அவரது கோபத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

57. சென்னைக்கு வந்ததும் முதலில் ஆழ்வார்பேட்டை பிள்ளையார் தெருவில் தனியாக வீடு எடுத்துத் தங்கினார். சொந்த சமையல். பின்பு, திருமணம் ஆனதும் மயிலாப்பூர் புதுத் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். படங்களில் பாடி, கொஞ்சம் வசதி ஏற்பட்ட பின்பு, இப்போது உள்ள மந்தைவெளி வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறினார்.

58. “என் வயிற்றைக் குளிர வைத்தது ஏவி.எம். ஸ்டுடியோ; என் மனத்தைக் குளிர வைத்தது மருதகாசி” என்று, ஆரம்பக் காலத்தில் தனக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இருவரையும் இப்போதும் நன்றியுடன் குறிப்பிடுவார் டி.எம்.எஸ்.

59. டி.எம்.எஸ்ஸின் வாரிசுகள் ஏழு பேரில் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இறந்துவிட, பால்ராஜ், செல்வகுமார் ஆகிய இரண்டு மகன்களும், மல்லிகா என்ற ஒரு மகளும் மட்டுமே இப்போது இருக்கிறார்கள்.

60. ‘அண்ணன் என்னடா, தம்பி என்னடா’ என்ற படத்தில், ஆபாவாணன் இசையில் பாடியுள்ளார் பால்ராஜ். ‘சில நேரங்களில்...’ என்னும் படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் அசோகன் மகன் வின்சென்ட் அசோகனுக்கும் ஒரு பாடல் பாடியுள்ளார். அப்பா டி.எம்.எஸ். நடிகர் அசோகனுக்குப் பாட, மகன் அசோகனின் மகனுக்குப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

61. தன் பிள்ளைகளுக்கு சான்ஸ் கேட்டு இன்று வரை எந்த இசையமைப்பாளரிடமும், தயாரிப்பாளரிடமும், இயக்குநரிடமும், யாரிடமும் போய் நின்றதில்லை டி.எம்.எஸ்.

62. 2006-ல், டி.எம்.எஸ். ரசிகர் மன்றத்தார் டி.எம்.எஸ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ஒரு விழா எடுத்தார்கள். ஒரு சிறிய ஹாலில், 200, 300 பேர் மட்டுமே கலந்துகொண்ட அந்த விழாவுக்கு வந்திருந்த மு.க.அழகிரி, ரொம்பவும் வருத்தப்பட்டு, “என்னய்யா... ஒரு இசை மேதைக்கு இப்படியா சின்னதா விழா எடுக்கிறது! ஐயா! உங்க அடுத்த பிறந்த நாளைக்கு நான் எடுக்கறேன் பாருங்க ஒரு விழா!” என்று சொல்லி, சொன்னபடியே 2007-ல் டி.எம்.எஸ்ஸுக்கு மதுரையில் ஒரு பிரமாண்ட விழா எடுத்து, மதுரையையே அதிர வைத்தார்.

63. செம்மொழி மாநாட்டுக்கான பாடல் வெளியீட்டு விழாவில், முன் வரிசையில் அமர்ந்திருந்தார் டி.எம்.எஸ். மேடை ஏறுவதற்காக வந்த கலைஞர், டி.எம்.எஸ்ஸைப் பார்த்துவிட்டு, அவரைக் கையைப் பிடித்து, தானே மேடைக்கு அழைத்துச் சென்று, அவருக்கு ஒரு நாற்காலி போடச் சொல்லி அமர வைத்துக் கௌரவப்படுத்தினார். ‘மந்திரி குமாரி’ காலத்திலிருந்து தொடர்ந்து வரும் நட்பல்லவா!

64. மதுரைப் பல்கலைக் கழகம் டி.எம்.எஸ்ஸுக்கு 'பேரவைச் செம்மல்' விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. 'கலைமாமணி' பட்டம் பெற்றுள்ளார். பெல்ஜியம் நாட்டுப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ 'டாக்டர்' பட்டம் அளித்துள்ளது. 2000-வது ஆண்டு, ஜனாதிபதி அப்துல்கலாம் இவருக்கு 'பத்மஸ்ரீ' விருது அளித்துக் கௌரவித்தார்.

65. தனக்கு அதிகம் பாடிய டி.எம்.எஸ்ஸை அரசவைக் கவிஞர் ஆக்காமல், சீர்காழி கோவிந்தராஜனை நியமித்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சியில் அவர் டி.எம்.எஸ்ஸை அரசவைக் கவிஞராக ஆக்கினார். இயல், இசை, நாடக மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார் டி.எம்.எஸ்.

66. டி.எம்.எஸ். பாடத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதை முன்னிட்டு, 1972-ல் அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தார் ஏவி.எம். அதில், 'எழிலிசை மன்னர்' என்ற பட்டத்தை டி.எம்.எஸ்ஸுக்கு வழங்கிச் சிறப்பித்தார் கலைஞர் மு.கருணாநிதி.

67. "டி.எம்.எஸ் எனக்குப் பின்னணி பாட வந்தது, எனக்குக் கிடைத்த வரப் பிரசாதம்" என்று தன் நெருங்கிய சிநேகிதியான இந்திப் பாடகி லதாமங்கேஷ்கரிடம் மனம் விட்டுப் பாராட்டியுள்ளார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

68. ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகள் சாப்பிட்டிருக்கிறார் டி.எம்.எஸ். ஆனால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முழுச் சைவம். முன்பெல்லாம் எப்போதும் வெற்றிலை, பாக்கு போட்டுக்கொண்டு இருந்தார். இப்போது இல்லை. மற்றபடி, புகைத்தல் போன்ற கெட்டப் பழக்கம் எப்போதும் இல்லை.

69. டி.எம்.எஸ்ஸுக்கு எம்.கே.டி. பாகவதரின் பாடல்கள் என்றால் உயிர். அவர் அடிக்கடி விரும்பிக் கேட்பது, பாகவதரின் 'ஸத்வ குண போதன்...' என்ற பாடல். "அதை முழுமையாக உள்வாங்கிக்கொண்டுதான், அதே பாணியில் 'எங்கே நிம்மதி...' பாடலைப் பாடினேன்" என்று சொல்வார்.

70. எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ். என்பது ஓர் ஆச்சரியம்! சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடியபின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார் டி.எம்.எஸ்.

71. இவரை "சௌந்தர்" என்று அழைப்பார் எம்.ஜி.ஆர். "வாங்க டி.எம்.எஸ்!" என்பார் சிவாஜி. (டி.எம்.எஸ் இல்லாத நேரங்களில் மற்றவர்களிடம் சிவாஜி, "என்ன, பாகவதர் வந்து பாடிட்டுப் போயிட்டாரா?" என்று டி.எம்.எஸ். பற்றி விசாரிப்பதுண்டு. கேலியாக அல்ல; டி.எம்.எஸ்ஸை பாகவதருக்குச் சமமாக மதித்ததால்!) வெறுமே "சார்" என்று மரியாதையாக அழைப்பார் ரஜினி. கே.வி.மகாதேவனுக்கு டி.எம்.எஸ். "மாப்ளே..!". இயக்குநர் பி.ஆர்.பந்துலு டி.எம்.எஸ்ஸை "வாங்க ஹீரோ!" என்பார்.

72. டி.எம்.எஸ்ஸுக்குப் பிடித்த பாடகர் மலேசியா வாசுதேவன்.

73. ஜேசுதாஸின் 'தெய்வம் தந்த வீடு...', பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்...' ஆகிய பாடல்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார் டி.எம்.எஸ் .

74. மதுரையில் அரச மரத்துப் பிள்ளையார் கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அந்தக் கோயில் விழாவில், ரொம்ப பிஸியாக இருந்த காலத்திலும், தனக்கு எத்தனை நெருக்கடியான வேலைகள் இருந்தாலும் தள்ளி வைத்துவிட்டு, மதுரை சென்று அந்த விழாவில் கலந்துகொண்டு, கச்சேரி செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். டி.எம்.எஸ்.

75. ஆரம்ப காலத்தில் டி.எம்.எஸ்ஸின் வீட்டில் குடியிருந்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். பல நாடுகளுக்கும் அவரை அழைத்துச் சென்று, பல கச்சேரிகளில் தனக்கு வயலின் வாசிக்க வைத்திருக்கிறார் டி.எம்.எஸ்.

76. டி.எம்.எஸ் பாடிய பாடல்களிலேயே, அவரின் துணைவியாருக்கு மிகவும் பிடித்த பாடல்... ‘உள்ளம் உருகுதய்யா முருகா...’

77. டி.எம்.எஸ்ஸின் ஒரு மகன், பதினான்கு வயதில் உடல் நிலை கெட்டு, மரணம் அடைந்ததுதான் டி.எம்.எஸ்ஸின் மனத்தை ரணமாக்கிய நிகழ்ச்சி. மரணத் தறுவாயில் அந்தப் பிள்ளை, தன் தந்தையை முருகன் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டபடியே உயிர் துறந்தான்.

78. டி.எம்.எஸ் கச்சேரிகளில் அவருக்கு கீ-போர்டு வாசித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா; கிட்டார் வாசித்திருக்கிறார் கங்கை அமரன்.

79. ‘நீராரும் கடலுடுத்த...’ என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும், ‘ஜனகண மன’ என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில், டி.எம்.எஸ்ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தி!

80. டி.எம்.எஸ். அருமையாக ஹார்மோனியம் வாசிப்பார். அவரோடு ஒருமுறை யாராவது பேசினால், உடனே அவரைப் போலவே குரலை மாற்றி மிமிக்ரி செய்து பேசிக் காட்டுவதில் வல்லவர்.

81. பெரிய பெரிய வி.ஐ.பி-க்கள் விரும்பி அழைத்தும், அவர்கள் வீட்டுத் திருமணத்துக்குச் செல்லாமல் தவிர்த்த சம்பவங்கள் உண்டு; ஆனால், ரசிகர் என்று சொல்லிக்கொண்டு யாரேனும் வந்து அழைப்பு வைத்தால், அவரது இல்லத் திருமணத்துக்குச் சென்று அவசியம் கலந்துகொள்வார் டி.எம்.எஸ்.

82. இந்தி இசையமைப்பாளர் நௌஷாத், டி.எம்.எஸ்ஸைப் பலமுறை இந்திப் படங்களில் பாடுவதற்கு அழைத்திருக்கிறார். “வேண்டாம். எனக்குத் தமிழ் மட்டுமே போதும்” என்று தீர்மானமாக மறுத்துவிடுவார் டி.எம்.எஸ். ஒருமுறை, சென்னையில் பிரபல பாடகர்கள் பலரும் கலந்துகொண்ட ஒரு விழாவில், ‘நான் ஆணையிட்டால்...’, ‘ஆடு பார்க்கலாம் ஆடு...’ ஆகிய டி.எம்.எஸ்ஸின் பாடல்கள் ஒலிக்கக் கேட்டு அசந்துபோன நௌஷாத், டி.எம்.எஸ்ஸிடம், “எத்தனை முறை உங்களைக் கூப்பிட்டிருப்பேன்! வரவேயில்லையே நீங்க! இந்தி சினிமாவுக்குப் பெரிய நஷ்டம்!” என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

83. 'நவராத்திரி' படத்தில் ஒன்பது வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி கணேசன். அதற்கேற்ப குடிகாரன், விவசாயி, கூத்துக்காரன் என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு ஏற்பவும் தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அதே போல், 'கௌரவம்' படத்தில் அப்பா சிவாஜிக்கு கம்பீரமான குரலிலும் (கண்ணா... நீயும் நானுமா), மகன் சிவாஜிக்கு மென்மையான குரலிலும் (மெழுகுவத்தி எரிகின்றது) பாடியிருப்பார்.

84. பாடல் பதிவாகி, பின்பு அதற்கேற்ப நடிகர் வாயசைத்துப் பாடுவதுதான் வழக்கம். ஆனால், 'கௌரவம்' படத்தில் ஒரு புதுமை நடந்தது. எம்.எஸ்.விஸ்வ நாதனே பாடிப் பதிவு செய்திருந்த ஒரு பாட்டுக்கு சிவாஜிகணேசன் வாயசைத்து நடித்துப் படமாக்கப்பட்டுவிட்டது. எம்.எஸ்.வி-க்கு அதில் திருப்தி இல்லை. எனவே, வெளிநாடு சென்றிருந்த டி.எம்.எஸ். வந்த பின்பு, சிவாஜி நடித்த அந்தப் படக் காட்சியை அவருக்குப் போட்டுக் காண்பித்தார். அதைத் திரையில் பார்த்தபடியே டி.எம்.எஸ். உணர்ச்சிகரமாகப் பாடிப் பதிவானதுதான்... 'பாலூட்டி வளர்த்த கிளி' பாடல்.

85.
பட்டினத்தார், அருணகிரிநாதர், கவிராஜ காளமேகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘அகத்தியர்’ உள்ளிட்ட பல படங்களில் பாடகராகவே தோன்றியுள்ளார். பாடகர் ஏ.எல்.ராகவனுடன் இணைந்து இவர் தயாரித்த ‘கல்லும் கனியாகும்’ படத்தில் இவரும் ராகவனும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

86. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'டாக்டர்' என்கிற சிங்களப் படத்தில், சிங்கள மொழியிலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.

87. 'நள தமயந்தி' என்னும் தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்திருக்கிறார் டி.எம்.எஸ். 1992-ல், மணிகண்டன் இயக்கத்தில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்த நாடகத்தில் 'ராஜகுரு' வேடம் ஏற்றிருந்தார் டி.எம்.எஸ்.

88. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும். டி.எம்.எஸ்ஸுக்காக இவர் எடுத்த பிரமாண்ட விழா மதுரை நகரையே ஒரு கலக்குக் கலக்கியது. “எந்தத் தமுக்கம் மைதானத்தில் முதன்முதலாக நான் எம்.கே.டி. பாகவதரைப் பார்த்து வியந்தேனோ... எனக்கும் ஒருநாள் இவ்வளவு பெரிய கூட்டம் கூடவேண்டும் என்று கனவு கண்டேனோ... அதே மைதானத்தில் எனக்குப் பெரிய விழா எடுத்து என் கனவை நனவாக்கிவிட்டார் அழகிரி” என்று நெகிழ்கிறார் டி.எம்.எஸ்.

89. டி.எம்.எஸ்ஸுக்குப் பிடிக்காத வார்த்தை 'வயசாயிடுச்சு!'. அயர்ச்சி, தளர்ச்சி, சோம்பல் எதுவும் இல்லாமல், இந்த 88 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார் டி.எம்.எஸ். அதற்குக் காரணம், தான் தினமும் தவறாமல் மேற்கொண்டு வரும் யோகாவும், ஆல்ஃபா மெடிட்டேஷனும், உடற்பயிற்சிகளும்தான் என்கிறார்.

90. 'பாமா விஜயம்' படத்தில், 'வரவு எட்டணா, செலவு பத்தணா' பாடலில் பாலையா, மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ் என நால்வருக்கும் இவரே குரலை வித்தியாசப்படுத்திப் பாடியுள்ளார்.

91. இதுவரை எந்தப் பாடகருக்கும் இல்லாத அளவில் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாறு 'இமயத்துடன்' என்னும் தலைப்பில் ஒரு பிரமாண்ட மெகா சீரியலாகத் தயாராகியுள்ளது. விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த சீரியலை இயக்கியிருப்பவர் பிலிம் இன்ஸ்டிட்யூட்டின் முன்னாள் மாணவரான விஜயராஜ்.

92
. ஒரு பாடல் காட்சியில் சிவாஜி எப்படி நடிப்பார் என்று யூகித்து, அதற்கேற்பப் பாடுவதில் கெட்டிக்காரர் டி.எம்.எஸ். 'அவன்தான் மனிதன்' படத்தில் இடம்பெறும் 'மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று' பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது, டி.எம்.எஸ். பாடிய அந்தப் பாடல் கேஸட் கொண்டு வரப்படவில்லை என்பது தெரியவர, "கவலையே வேண்டாம். பாடல் வரிகள் எனக்குத் தெரியும். டி.எம்.எஸ். எந்த உணர்ச்சியில் பாடியிருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். நான் வாயசைத்து நடிக்கிறேன். பிறகு சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிப் பாடலே ஒலிக்காமல் நடித்தார் சிவாஜி. படத்தில் இரண்டும் அத்தனை அற்புதமாகப் பொருந்தின.

93
. இத்தனை வயதிலும் பாடல் பதிவென்றால், உற்சாகமாகத் தயாராகிவிடுவார் டி.எம்.எஸ். ஆரம்ப நாளில் கடைப்பிடித்த அதே அர்ப்பணிப்பு உணர்வோடு, பாடல் வரிகளைத் தினம் தினம் வெவ்வேறு விதமாகப் பாடிப் பாடிப் பழகிக் கொள்வார். சில ஆண்டுகளுக்கு முன், 'வாலிபன் சுற்றும் உலகம்' என்னும் படத்துக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் பி.சுசீலாவோடு இணைந்து டி.எம்.எஸ். ஒரு பாடல் பாடினார். அந்தப் படம் வெளியாகவில்லை.

94. இந்த ஆண்டு, மார்ச் மாதம் 24-ம் தேதி, டி.எம்.எஸ்ஸுக்கு 88-வது பிறந்த நாள். அன்றைய தினம், அவர் மலேசியாவில் தயாராகி வரும் ஒரு தமிழ்ப்படத்தில், மலேசிய இசையமைப்பாளர் லாரன்ஸின் இசையில், கதாநாயகனின் அப்பாவுக்காகப் பின்னணி பாடிவிட்டு வந்திருக்கிறார்.

95. 'எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பெரிய நடிகர்களுக்குப் பாடிய டி.எம்.எஸ் தனக்குப் பாட மாட்டாரா' என்று ஏங்கிய ரஜினிகாந்த், 'பைரவி' படத்தில் 'நண்டூருது, நரியூருது' பாடலைத் தனக்காகத்தான் பாடுகிறார் என்று அறிந்தபோது, மிகவும் மகிழ்ந்து அந்தப் பாடல் பதிவு முழுக்க அங்கேயே இருந்து ரசித்திருக்கிறார்.

96. கோவையில் நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டில் வெளியிடுவதற்காக, ஒரு இசை ஆல்பத்தில் டி.எம்.எஸ்ஸைப் பாட வைத்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

97. முன்பெல்லாம் சஃபாரி சூட் அணிவதில் விருப்பம் உள்ளவராக இருந்தார் டி.எம்.எஸ். இப்போது சந்தன நிற பைஜாமா, ஜிப்பாதான்! ஒருமுறை எம்.ஜி.ஆர். இவருக்கு அளித்த தங்கச் சங்கிலியை பல வருடங்கள் ஆசையோடு அணிந்திருந்தார். இப்போது இல்லை.

98. அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கெல்லாம் பலமுறை சென்று கச்சேரிகள் செய்துள்ளார்.

99. மந்தைவெளி வீட்டின் வாசலில் ஒரு பள்ளிச் சிறுவன் தயங்கி நிற்பதைக் கண்டு, அவனை அழைத்து விசாரித்தார் டி.எம்.எஸ். அவன் கையில் ஒரு துண்டுச் சீட்டு. “ஐயா! நான் உங்கள் ரசிகன். உங்களின் இந்தப் பாடல்களை எனக்கு கேஸட்டில் பதிந்து தர முடியுமா?” என்று கேட்டான் அவன். மாடியில் இருந்த அறைக்கு அவனை அழைத்துச் சென்று, அவன் கேட்ட பாடல்களைப் பதிந்து தந்தார் டி.எம்.எஸ். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... மு.க.அழகிரி.

100. சென்னை- திருவள்ளூரில் ஒரு கச்சேரி. தனக்கு கீ-போர்ட் வாசிக்க வந்திருந்த ஒரு குட்டிப் பையனைப் பார்த்ததும், “என்ன இது, பச்சைக் குழந்தையைப் போய்க் கூட்டிட்டு வந்திருக்கீங்க..? இவன் சரியா வாசிப்பானா?” என்று கேட்டார் டி.எம்.எஸ். “அருமையா வாசிப்பான் சார்! நம்ம சேகருடைய பையன்தான் இவன்!” என்று அறிமுகப்படுத்தினார் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. ‘உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக...’ என டி.எம்.எஸ். பாட, அந்தப் பையன் கீ-போர்டு வாசிக்க, அதில் அசந்துபோன டி.எம்.எஸ். அந்தச் சிறுவனை அருகே அழைத்து, அவன் தலையில் செல்லமாகக் குட்டி, “மோதிரக் கையால் குட்டியிருக்கேன். நீ பெரிய ஆளா வரப்போறே பாரு!” என்று அன்போடு வாழ்த்தினார். அந்தப் பையன்... ஏ.ஆர்.ரஹ்மான்.

.

Sunday, June 06, 2010

வீடு பேறு!

குறுகிய காலத்தில் மிக அதிக வீடுகளில் குடியேறிய சாதனைக்கு கின்னஸ் ரெக்கார்டில் இடம் இருக்குமானால், தாராளமாக நான் அதற்குத் தகுதி உள்ளவன். ஆறு ஆண்டுகளுக்குள் பன்னிரண்டு வீடுகள் மாறிய கதையை வலைப்பூவில் எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான்...

எனது இன்னொரு வலைப்பூவான ‘என் டயரி’யில் ஒரு பதிவை இப்படித் தொடங்கியிருந்தேன். அந்த வீடுகள் மாறிய கதையை இங்கே எழுதுகிறேன்.

‘வீடு பேறு’ என்பது மோட்சத்தை, சொர்க்கத்தைக் குறிக்கும். சென்னையில் வாடகைக்கு வீடு பெறுவதும், வீடு பேறு அடைவதற்குச் சமமானதொன்று! 1984-ல் நானும் என் தம்பியுமாக கையில் மொத்தமே 2000 ரூபாயுடன் சென்னையில் வந்து செட்டிலானபோது, எம்.ஜி.ஆர். நகரில், புகழேந்தி தெருவில், ஒரு தூ........ரத்து உறவினர் வீட்டில், 90 ரூபாய் வாடகையில் குடியேறினோம். கரண்ட் பில்லுக்குத் தனியாக 10 ரூபாய்.

நான் ஆம்ப்ரோ பிஸ்கட் கம்பெனியில் வேலைக்குச் சேர, பிராட்வேயில் இருந்த ஜெமினி இன்ஸ்டிட்யூட்டில் டெலிவிஷன் மெக்கானிசம் பயின்றான் தம்பி.

நாங்கள் இருந்த வீட்டுக்கு எதிரில் தெலுங்குத் திரைப்பட இசையமைப்பாளர் ஒருவர் குடியிருந்தார். தினமும் அவர் வீட்டிலிருந்து ஆர்மோனிய இசையுடன், தெலுங்குப் பாடலை யாராவது பாடிக்கொண்டு இருப்பார்கள். அதே தெருவில், ஒரு சின்ன நர்ஸரி பள்ளிக்கூடம் இருந்தது. அதில் காலை வணக்கமாக, டி.எம்.எஸ் பாடிய ‘சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா’, ‘உள்ளம் உருகுதய்யா முருகா’, ‘அழகென்ற சொல்லுக்கு முருகா’, ‘உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை’ என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முருகன் பாடலைத்தான் பிள்ளைகள் கோரஸாகப் பாடுவார்கள். எனக்கு இது இனிய ஆச்சரியம்!

சில ஆண்டுகளில், சிதம்பரத்திலிருந்து என் தங்கை குடும்பமும் சென்னை வந்து செட்டிலாக, எல்லோருமாக மாம்பலம் கோதண்டராமர் கோவில் தெருவில் ஒரு வீடு பார்த்துக் குடியேறினோம். அதுவும் மிகச் சின்ன வீடுதான். குட்டியான கிச்சன் மற்றும் ஒரே ஒரு அறைதான். பல குடித்தனங்கள் கொண்ட வளாகம் அது. விசாலமான மொட்டை மாடி இருந்ததால், குடித்தனக்காரர்களில் ஆண்கள் அனைவரும் அந்த மொட்டை மாடியில்தான் படுப்பது வழக்கம். அங்கேயும் இன்னாருக்கு இந்த இடம் என்று எழுதப்படாத ஓர் ஒப்பந்தம் இருந்தது. அவரவரும் தங்கள் தங்கள் இடத்தில்தான் படுக்க வேண்டும்; இடம் மாறிப் படுத்தால் தகராறுதான்!

இந்த வீட்டில் இருந்தபோதுதான் நான் சாவி பத்திரிகையில் வேலை கிடைத்துச் சேர்ந்தேன். சுஜாதா, வைரமுத்து, பாலகுமாரன், மாலன் போன்ற பிரபலங்களின் அறிமுகம் கிடைத்தது இங்கே இருந்தபோதுதான். இலக்கிய எழுத்தாளர் பெருமதிப்புக்குரிய அசோகமித்திரன் நேரிலேயே வந்திருந்து, ‘மானஸரோவர்’ அத்தியாயத்தைக் கொடுத்துவிட்டுப் போன வீடு இது. அவர் கிளம்பி வாசலுக்குப் போய் தெருவில் இறங்கிய பின்னர்தான் தம்மை ‘அசோகமித்திரன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். நேரிலேயே அவர் வருவார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை ஆதலால், அவரை யாரோ உதவியாளர் அல்லது உறவினர் என்றுதான் நான் அத்தனை நேரமும் நினைத்திருந்தேன்.

எனக்குத் திருமணம் ஆன சமயத்தில், அதே கோதண்டராமர் கோயில் தெருவில், கொஞ்சம் இட வசதி கூடுதலாக உள்ள வேறு ஒரு வீட்டில் குடியிருந்தோம். அந்த வீட்டு உரிமையாளர்கள் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்களின் பேச்சு பிராமணர்களைப் போலவே இருந்தது. நாங்கள் தண்ணி என்போம்; அவர்கள் தூத்தம் என்பார்கள். நாங்கள் வீட்டுக்கு என்று சொல்வோம்; அவர்கள் ஆத்துக்கு என்பார்கள். முழுச் சைவம். இதனால் நாங்கள் அவர்களை ரொம்பக் காலம் பிராமணர்கள் என்றே நினைத்துக்கொண்டு இருந்தோம். பின்பு, அவர்கள் பிராமணர்கள் அல்ல என்று தெரிந்தபோது ஆச்சரியமான ஆச்சரியம்! சின்ன வயதிலிருந்தே கணவனும் மனைவியும் பிராமணக் குடும்பங்கள் அதிகம் உள்ள பகுதியிலேயே வாழ்ந்ததால் தங்களுக்கு இயல்பாகவே பிராமண பாஷை வந்துவிட்டதாகச் சொன்னார்கள்.

பின்னர் நானும் என் மனைவியும் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு சின்ன வீட்டுக்குத் தனிக்குடித்தனம் போனோம். வி.ஜி.பன்னீர்தாஸ் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த, பல குடித்தனங்கள் அடங்கிய வளாகம் அது. நீளமான ஒரு ஹால், கிச்சன், கிச்சன் ஓரமாகவே ஒரு பெரிய சதுரப் பள்ளம்; அதில்தான் பாத்திரம் தேய்த்துக்கொள்ள வேண்டும்; குளியல் அறையும் அதுதான்! ஆறு குடித்தனங்களுக்கு ஒரே பொதுக் கழிப்பறை. பக்கெட்டில் தண்ணீர் வைத்துக் காத்திருக்க வேண்டும். சில சமயம் ஒன்றிரண்டு பேர் நமக்கு முன்னதாக இடம் பிடித்திருப்பார்கள்; சில சமயம் ஏழெட்டுப் பேருக்குப் பின்னால் நமது முறை வரும். எனவே, டூ பாத்ரூம் வருகிறதோ இல்லையோ, சம்பிரதாயமாக காலை வேளையில் பக்கெட் வைத்து இடம்பிடித்து ஒரு நடை ‘போய்விட்டு’ வந்துவிடுதல் உத்தமம்.

அங்கிருந்து நாங்கள் இடம்பெயர்ந்த இடம் மாம்பலம், கோவிந்தன் ரோடு. இதுவும் பல குடித்தனங்கள் கொண்ட மிகச் சின்ன இடம்தான். உள்ளே நுழைந்ததும் எட்டுக்கு எட்டு உள்ள ஒரு சதுர ஹால், பின்னால் ஒரு வால் மாதிரி கிச்சன். 600 ரூபாய் வாடகை, 6000 ரூபாய் அட்வான்ஸ் என்பது எனக்கு அந்நாளில் மலைப்பாக இருந்தது. சம்பளமே 1,200 ரூபாய்தான். ஆனால், நாங்கள் குடியிருந்த மற்ற இடங்களுக்கும் இந்த இடத்துக்கும் என்ன ஒரு வித்தியாசம் என்றால், மற்ற இடங்கள் எல்லாமே காரை பெயர்ந்த, பொக்கையும் பொத்தலுமான சிமெண்ட் தரை. இங்கே வழவழ மொஸைக் தரை.

இங்கே பக்கத்து போர்ஷனில் குடியிருந்த ஒரு காலேஜ் மாணவன், ரொம்ப நாளாக வாடகை கொடுக்காமல் டபாய்த்திருக்கிறான். ஒரு நாள் ராத்திரி பன்னிரண்டு மணி போல வந்து, தன் போர்ஷனிலிருந்து தனது சாமான்களை (அதிகம் இல்லை; ஒரு பெரிய சூட்கேஸ், டேபிள் ஃபேன் ஒன்று, சைக்கிள் ஆகியவை) எடுத்துக்கொண்டு கம்பி நீட்ட முனைந்தபோது, வீட்டு ஓனரிடம் வசமாக மாட்டிக்கொண்டான். கணவனும் மனைவியுமாக அந்தப் பையனைப் போட்டு அடி அடியென்று அடித்துத் துவைத்துவிட்டார்கள். அந்தப் பையனை ஒரு மூலையில் தள்ளி, அந்தம்மா அவனைக் காலால் எட்டி எட்டி உதைத்ததை இப்போது நினைத்தாலும் நெஞ்சு பக் பக்கென்று அடித்துக் கொள்கிறது.

மறுநாள், அந்தம்மா எங்களிடம் “என்ன... பயந்துட்டீங்களா?” என்று புன்சிரிப்புடன் கேட்டபோது, என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

ஆனால், அவர்கள் எங்களிடம் மிகவும் பிரியமாகத்தான் நடந்துகொண்டார்கள். அடிக்கடி எங்களுக்குத் தங்கள் வீட்டில் செய்த இனிப்புகளையும், தின்பண்டங்களையும் தங்கள் பெண் மூலம் கொடுத்தனுப்புவார்கள். அவர்கள் மகளின் மஞ்சள் நீராட்டுவிழாவில் என் மனைவி போய் கலந்துகொண்டு, வெஜிடபிள் பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிவிட்டு வந்தாள்.

அடுத்து நாங்கள் குடியேறிய இடம் கே.கே.நகர். ராவ்ஜி குடும்பம். இங்கேயும் இரண்டு அறைகள்தான். ஆனால், வீட்டம்மா ரொம்ப நல்ல மாதிரி. கன்ஸீவ் ஆகியிருந்த என் மனைவியைத் தன் மகள் மாதிரி கவனித்துக் கொண்டார். மாம்பலம் ஹெல்த் செண்டரில் என் மகள் ஷைலஜா பிறந்ததும், முதலில் கைகளில் வாங்கியவர் என் மனைவியின் அக்கா என்றால், அடுத்து அதை வாங்கிக் கொஞ்சியவர் இந்த வீட்டம்மாதான். பிரமீளா என்று பெயர். திருச்சியில் தனியே இருந்த என் மாமியாரையும், மனைவியின் தங்கையையும் சென்னைக்கே வரவழைத்துத் தங்க வைத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட நாங்கள் மூன்றரை ஆண்டுக் காலம் தங்கியிருந்த வீடு இது. இதற்கு முன்பெல்லாம் அதிகபட்சமாக ஒரு வீட்டில் ஒரு வருடம்தான் தங்கியிருப்போம்.

சாவி மூடப்பட்டது, நாங்கள் இந்த ராவ்ஜி வீட்டில் குடியிருந்தபோதுதான். வாடகை ரூ.500-தான் என்றாலும், அடுத்த மாத செலவுகளை எப்படிச் சமாளிக்கப் போகிறோம், வாடகையை எப்படிக் கொடுக்கப் போகிறோம் என்று பீதியாகவே இருந்தது எனக்கு.

நல்ல வேளையாக, அன்னையின் அருளால் ஆனந்த விகடனில் வேலை கிடைத்தது. என் மகன் ரஜ்னீஷ் பிறந்ததும் இங்கேதான்!

விகடன் நண்பர் ஒருவர் மூலமாக அசோக் நகர் சி.பி.டபிள்யூ.டி குவார்ட்டர்ஸில் 1,000 ரூபாய் வாடகையில் (ரூ.15,000 அட்வான்ஸ்) ஒரு வீடு வாடகைக்குக் கிடைத்தது. பெரிய பங்களா என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். விஸ்தாரமான பெரிய இரண்டு அறைகள், நீளமான தாழ்வாரம், வசதியான டாய்லெட், தாராளமான கிச்சன் எனக் குடிபோனபோது கொண்டாட்டமாக இருந்தது. ஆனால், முழுதாக ஒரு வருடம்கூட அங்கே குடியிருக்கக் கொடுத்து வைக்கவில்லை எங்களுக்கு.

மத்திய அரசுக்குச் சொந்தமான அந்த வீட்டை எக்ஸ்-சர்வீஸ்மென்னான அவர் இப்படி வெளியாருக்கு வாடகைக்கு விடக்கூடாது என்பதோ, நான் அங்கே குடியேறியது குற்றம் என்பதோ எனக்கு அப்போது தெரியாது. செக்கிங் வந்தபோதுதான் தெரிந்தது. ‘குறிப்பிட்ட தேதிக்குள் வீட்டை காலி செய்யும்படியும், இல்லையென்றால் போலீஸைவிட்டு அப்புறப்படுத்த வேண்டியிருக்கும்’ என்பதாகவும் கோர்ட் நோட்டீஸைக் கொண்டு வந்து என் வீட்டுக் கதவில் ஒட்டிவிட்டுப் போய்விட்டார்கள்.

வயிற்றில் புளியைக் கரைக்க, கோட்டூர்புரத்தில் இருந்த ஓனர் வீட்டுக்கு நடையாய் நடந்தேன், அட்வான்ஸைத் திருப்பிப் பெற! ஆனால், அவர் கண் ஆபரேஷனுக்காக புனேவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அப்போது அட்மிட் ஆகியிருந்தார். வேறு வழியில்லாமல், அவசரமாக கே.கே.நகரில் புரோக்கர் மூலம் வேறு ஒரு இடம் பார்த்துக் குடியேற வேண்டியதாகப் போயிற்று.

கே.கே.நகரில் ஒரு அய்யங்கார் வீட்டில் குடியேறினோம். வாடகை ரூ.2,000. அட்வான்ஸ் ரூ.20,000. முழி பிதுங்கிவிட்டது எனக்கு. என்றாலும், உடனடியாக வேறு இடம் கிடைக்கவில்லை. புரோக்கர் கமிஷனாக ஒரு மாத வாடகையை ரூ.2,000 அழுதேன்.

வீட்டுக்காரம்மா ரொம்பக் கெடுபிடி. வீட்டைச் சுற்றி உள்ள இடங்களைச் சுத்தமாகப் பெருக்க வேண்டும், காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்திருந்து வாசல் தெளித்துக் கோலம் போடவேண்டும் என்றெல்லாம் பல கட்டளைகள். ‘வாசல் கேட்டில் ஒண்ணுக்கு அடிக்கிறான் பாருங்க. பக்கெட் தண்ணி எடுத்து வந்து பினாயில் போட்டுச் சுத்தமா கழுவி விடுங்க’, ‘கேட்டு மேல ஏறி நிக்கறான் பாருங்க. இப்படி ரெண்டு தடவை ஆட்டினா, கேட்டு என்னத்துக்கு ஆகுறது?’ என்றெல்லாம் என் ஒன்றரை வயது மகனை ஏதாவது குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பார்.

திருட்டுப் பயம் அதிகம் உள்ள ஏரியா அது. நாங்கள் குடியிருந்த வீட்டிலும் ஒரு திருடன் வந்தான்.

அந்தக் கதை அடுத்த பதிவில்!

.