உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, August 03, 2020

தாமினி என்ன ஆனாள்? - 10

 “சங்கரா… இங்க வாடா! இவளுக்கு என்னவோ பண்றது பார், சீக்கிரம் ஓடி வா! என்று அலறினாள், கிருஷ்ணவேணியின் அருகில் அமர்ந்திருந்த சங்கரநாராயணனின் அம்மா.

வாசலில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த சங்கரநாராயணன் அதைப் போட்டுவிட்டு, ஈஸிசேரிலிருந்து எழுந்து ஓடி வந்தார். கிச்சனிலிருந்து கௌரியும் முந்தானையில் கையைத் துடைத்துக்கொண்டு பரபரப்பாக உள்ளே வந்தாள். கிருஷ்ணவேணியின் உடம்பு விலுக் விலுக்கென்று சீராக இழுத்துக்கொண்டிருந்தது.

“என்னடி… என்ன பண்றது உடம்புக்கு? என்று மகளின் கை கால்களைப் பிடித்து  விட்டாள் கௌரி.

“கொஞ்சம் முன்னே பார்க்கணுமே… அப்படி வெட்டி வெட்டி இழுத்தது. மசமசன்னு நிக்காம உடனே டாக்டருக்கு போன் பண்ணி வரவழைடா” என்றாள் சங்கரநாராயணனின் அம்மா. அவர் செல்போனைத் தேடிப் போக, அவள் பூஜை அலமாரியிலிருந்து சம்புடத்தில் விபூதி கொண்டு வந்து கிருஷ்ணவேணியின் நெற்றியில் பூசிவிட்டாள். “ஒண்ணும் ஆகாதுடா குழந்தை, ஒண்ணும் ஆகாது” என்று தலையை வருடினாள்.

சங்கரநாராயணன் தன் மொபைலில் கான்ட்டாக்ட் லிஸ்ட்டில் டாக்டர் ஸ்ரீவத்ஸன் பெயரைத் தேடிக்கொண்டிருக்கும்போது, ஓர் அழைப்பு வந்தது. ஏதோ புது நம்பர். ‘அட சட்… யார் இது, இந்த நேரத்துல…’ என்று சலிப்புடன் கட் செய்துவிட்டு, ஸ்ரீவத்ஸனின் எண்ணைத் தேடி ‘கால்’ செய்தார்.

“ஹலோ… என்ன ஷங்கர், உம் பொண்ணு ஸேஃபா வந்துட்டாளா? நானே போன் பண்ணிக் கேக்கணும்னு நினைச்சேன்…” என்றார் எதிர்முனையில் ஸ்ரீவத்ஸன்.

“வந்துட்டா சார், ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னே ஃபிட் மாதிரி வந்து ரொம்பத் துடிச்சுப் போயிட்டா. எனக்கு பயம்மாயிருக்கு. நீங்க கொஞ்சம் உடனே வந்தா தேவலை!

“பயப்படாதே, ஒண்ணும் ஆகாது! நான் இதோ கிளம்பிப் பத்து நிமிஷத்துல வரேன்” என்று போனைக் கட் செய்தார் ஸ்ரீவத்ஸன்.

அடுத்த விநாடி, சங்கரநாராயணனின் மொபைல் மீண்டும் ஒலித்தது. மீண்டும் அதே புது நம்பர். அந்த மொபைல் எண்ணின் இறுதியில் ‘ட்ரிபிள் டூ’ இருந்தது மட்டும் பளிச்சென மனசில் பதிந்தது.

“ஏங்க, டாக்டருக்குப் போன் பண்ணிட்டீங்களா? வரேன்னாரா? சீக்கிரம் வரச் சொல்லுங்க” என்று அறையிலிருந்து குரல் கொடுத்தாள் கௌரி.

சங்கரநாராயணன் மொபைல் அழைப்பைக் கட் செய்துவிட்டு, உள்ளே போனார். கிருஷ்ணவேணி மயங்கிய நிலையில் இருக்க, சுற்றிலும் அம்மா, கௌரி, கிருஷ்ணவேணியின் தம்பி பாபு மூவரும் அமர்ந்திருந்தார்கள்.

“என்ன இது, இப்படிக் கூட்டம் போட்டுக்கிட்டு…  அவளுக்குக் காத்து வரட்டும். தள்ளி உட்காருங்க. டேய் பாபு, ஜன்னல் கதவையெல்லாம் நல்லா அகலமா திறந்து வைடா! என்றபடி, ஏர்கூலரை ஆன் செய்து, கிருஷ்ணவேணி பக்கம் திருப்பி வைத்தார் சங்கரநாராயணன். “நைட் ஏதாவது சாப்பிட்டாளா… வயித்துல ஒண்ணும் இல்லேன்னாலும் இப்படி ஆகும்” என்றார் தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்கிறவர் போல்!

பெட்ரோலுக்குக் காசு கொடுத்துவிட்டு வந்து, டிரைவர் ஸீட்டில் அமர்ந்து, பெல்ட்டைப் போட்டுக்கொண்டான் திலீப்.

“அண்ணா, இப்ப நீங்க சென்னைக்கா போறீங்க? என்று கேட்டாள் தாமினி.

“ஆமாம்மா… உன்னை திருச்சூர்ல விட்டுட்டு அப்படியே போவேன். கொஞ்சம் சுத்துதான். இருந்தாலும் மேடம் என் ரெகுலர் கஸ்டமர்ங்கிறதால மறுக்க முடியல” என்றான் திலீப்.

“வேண்டாண்ணா… நானும் உங்களோட சென்னைக்கே வரேன்!

திடுக்கிட்டான் திலீப். “என்னம்மா சொல்றே… உன்னை மேடம் திருச்சூர்ல இல்லே விடச் சொல்லியிருக்காங்க?

“ஆமாண்ணா… சென்னைக்கு பாஸ், மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் வாங்கிப் போகணுமாம். எனக்கு அது எப்படின்னு தெரியலே. அதனாலதான் என்னைத் திருச்சூர்ல கொண்டு விடச் சொன்னாங்க. ஆனா, நான் சென்னைக்குதான் போகணும்.  அங்கே என் அக்கா வீடு இருக்கு. ப்ளீஸ்ண்ணா… என்னையும் உங்களோட அழைச்சிட்டுப் போயிடுங்க” என்றாள் தாமினி, கரகரத்த குரலில்.

“அது எப்படிம்மா, மேடம் ஒரு இடம் சொல்லியிருக்கிறப்போ அதை மீறி உன்னை நான் வேற எங்கேயாவது அழைச்சிட்டுப் போனா, அது தப்பாயிடும்மா! சரி, நீ மேடத்துக்கிட்ட பேசு! என்றான் திலீப்.

தாமினி அவந்திகா சோப்ராவுக்கு ‘கால்’ செய்தாள். உடனேயே எடுத்து, “என்ன தாமினி…” என்றாள் அவந்திகா. ‘ட்ரிபிள் டூ’வில் முடிகிற எண்ணைப் பார்த்ததுமே, அது காலையில், தான் தாமினிக்குக் கொடுத்த மொபைல் எண் என்று அவந்திகா தெரிந்துகொண்டதில் ஆச்சரியம் இல்லைதான்! ‘இந்த எண்ணை தாமினி என்று ஸேவ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டாள்.

“இப்ப இவர் சென்னைக்குதான் போயிட்டிருக்காராம், மேடம்! இவரோட நானும் சென்னைக்குப் போயிடறேனே… நீங்க கொஞ்சம் இவர்கிட்ட சொல்லுங்களேன்! என்று கெஞ்சினாள் தாமினி.

“அப்படியா… அடடா, அதை நான் கேட்டுக்காம போயிட்டேனே? என்ற அவந்திகா, “சரிம்மா… ஆனா, அவங்களுக்கு நான் போன் பண்ணிச் சொல்லிட்டேனே, நீ கிளம்பி அங்க வந்துட்டிருக்கிறதா…” என்றாள்.

“பரவாயில்லை மேடம், மறுபடி போன் பண்ணி ஏதாவது சமாளிச்சுடுங்க. இப்ப இவர்கிட்ட என்னை சென்னைக்குக் கூட்டிட்டுப் போய் விடச் சொல்லுங்க. நீங்க சொன்னாதான் கேட்பாராம்…”

“சரி, போனை திலீப் கிட்ட கொடு! என்றாள் அவந்திகா.

திலீப் போனை வாங்கி, “சரிங்க மேடம்… சரிங்க மேடம்… அது ஒண்ணும் பிரச்னை இல்லை மேடம்! டெத்துக்குப் போறதுனால யாரும் அதிகம் செக் பண்ண மாட்டாங்க. என் -பாஸைக் காண்பிச்சா போதும். ஓகே மேடம்…” என்றபடி, “மேடம் உங்களோட பேசணும்கிறாங்க” என்று கொடுத்தான்.

“தாமினி, உன்  அப்பா கிட்டே நீ உடனே இதுபத்திப் பேசிடு. அவர் சொன்னது ஒண்ணு, நாம செய்யறது ஒண்ணு. அவர் நம்ம மேல கோபப்படக் கூடாது. சரியா..? அப்புறம், கிருஷ்ணவேணிக்கோ அவங்கப்பாவுக்கோ போன் பண்ணி, அவங்க வீட்டு அட்ரஸை உன் நம்பருக்கு எஸ்.எம்.எஸ். பண்ணச் சொல்லு. எனக்கு அது தெரியாது. சென்னைக்குப் போனதும் எனக்குக் ‘கால்’ பண்ணிப் பேசு. அப்படியே உங்கக்காவையும் பேசச் சொல்லு. ‘அப்படி என்னதாண்டி மயக்கி வெச்சிருக்கிற இந்தப் பொண்ணை?’ன்னு அவ கிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன்” என்று சிரித்தாள் அவந்திகா. ‘உங்கக்காவையும்’ என்பதில் கிண்டலும் குறும்பும்கூடிய ஒரு செல்ல அழுத்தம்!

கார் திருச்சூர் பக்கம் திரும்பாமல் திருவல்லா பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

“அண்ணா… எனக்கு மெடிக்கல் ரிப்போர்ட், பாஸ் ஏதாவது தேவைப்படுமாண்ணா? என்று கேட்டாள் தாமினி.

“எதுவும் தேவையிருக்காது. என்னோட பாஸ்லயே மூணு பேர் போகலாம். நீ உடனே அவங்களுக்கு போன் பண்ணி, அட்ரஸை மட்டும் அனுப்பச் சொல்லிடு! என்றான் திலீப்.

அவந்திகா கொடுத்த டயரியில் நம்பர் பார்த்து, முதலில் கிருஷ்ணவேணிக்குதான் போன் செய்தாள் தாமினி. ஸ்விச்டு ஆஃப்! அடுத்து அவளின் அப்பாவுக்கு போன் செய்தாள்.

ரிங் போன விநாடியில் கட் செய்யப்பட்டது, இரண்டு முறையும்!

(தொடரும்)

0 comments: