உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, March 20, 2009

நன்றி... நன்றி... நன்றி..!

பிளாக் எழுதத் தொடங்கியது முதலே, எனது ஜிமெயில் இன்பாக்ஸில் தினசரி இரண்டு மூன்று புதியவர்களின் இ-மெயில் களாவது வந்து விழுகின்றன. புதிய புதிய முகம் தெரியாத நண்பர்கள் தினம் தினம் கிடைப்பது மனதுக்கு மிகவும் சந்தோஷம் தருவதாக இருக்கிறது. என் பிளாக் குறித்து எனது ஜிமெயிலுக்கு வந்த ஒரு சிலரின் கடிதங்களை இங்கே கொடுத்துள்ளேன். தவிர, என் பிளாகிலேயே காமென்ட்ஸ் பகுதியில் சிலர் தங்கள் அபிப்ராயங்களைத் தெரிவித்து இருக்கிறார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

பிளாக் எழுதுவது பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டிருந்தேனே தவிர, அது எப்படி என்ன என்று தெரியாது. சமீபகாலமாகத்தான் அது பற்றிய ஆர்வம் வந்து, விகடனில் என்னுடன் பணியாற்றிய நண்பர் தளவாய் சுந்தரத்திடம் கேட்டேன். 'அது ஒன்றும் பெரிய வித்தை இல்லை' என்று, பிளாக் அமைப்பது பற்றிக் குறிப்புகள் தந்தார்.

வீட்டுக்குச் சென்றதும் என் குழந்தைகளிடம் (ஷைலஜா - 10-ஆம் வகுப்பு; ரஜ்னீஷ் - 8-ஆம் வகுப்பு) பிளாக் எழுதவிருப்பது பற்றிச் சொன்னேன்.
"ஐயே! அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லேப்பா! உனக்கு பிளாக்தானே பண்ணித் தரணும். நான் பண்ணித் தரேன்" என்றான் மகன் ரஜ்னீஷ்.

"எப்படிடா உனக்குத் தெரியும்?" என்றேன் நம்பமுடியாமல்.

"ஏற்கெனவே நானே எனக்கு ஒரு பிளாக் பண்ணி வெச்சிருக்கேனே!" என்று தன் பிளாகைக் காண்பித்தான். கம்ப்யூட்டரில் தான் வரைந்த படங்கள், ஏதேதோ போட்டோக்கள் என்று நிஜமாகவே, சுமாராக ஒரு பிளாக் வைத்திருந்தான்.

"சரி, எனக்கு ஒரு பிளாக் பண்ணிக் கொடுடா!" என்றேன்.

அதன்பின் என் மகள், மகன் இருவருமாக டிஸ்கஸ் செய்து எனக்கான பிளாகை வடிவமைத்துக் கொடுத்தார்கள். "பிளாகுக்குத் தலைப்பு என்ன வைக்கட்டும்?" என்று கேட்டார்கள். 'ஏடாகூடம்' என்று வைக்கச் சொன்னேன். முதலில் அப்படித்தான் வைத்தார்கள். பிறகு, "பிளாக் டிஸ்ப்ளேவில் அப்படி வந்தால் நன்றாக இல்லை. பெயர் மட்டும் அப்படி இருக்கட்டும். மற்றபடி, ரவிபிரகாஷ் என்ற உன் பெயர் பெரிதாக வருகிற மாதிரி பிளாகை டிஸைன் செய்கிறோம்" என்று சொல்லி, அப்படியே மாற்றிவிட்டார்கள். தவிர, ஆனந்தவிகடன் சம்பந்தப்பட்ட செய்திகள் பக்கவாட்டில் வருகிற மாதிரி, ஏதோ காமெடி படங்கள் ஓடுகிற மாதிரி, இயற்கைக் காட்சிகள் ஸ்லைடு ஷோவாக மாறுகிற மாதிரி, மேட்டருக்குக் கீழே நியூஸ் ரீல் ஓடுகிற மாதிரி என்று என்னென்னவோ விஷயங்கள் சேர்த்து, மேட்டரை போஸ்ட் பண்ணுவது எப்படி என்றும் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்களால் ஆங்கில மேட்டர்கள்தான் போஸ்ட் செய்ய முடிந்தது.

மீண்டும் நண்பர் தளவாயிடம், தமிழில் எழுதி போஸ்ட் செய்வது எப்படி என்று கேட்டேன். "முதலில், நெட்டிலிருந்து முரசு அஞ்சல் டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். பிறகு..." என்று அவர் சொன்னது எனக்குப் புரியவில்லை. "கொஞ்சம் இருங்கள்" என்று சொல்லிவிட்டு, செல்லில் மகனை அழைத்து, அவனையே அவரிடம் விளக்கமாகக் கேட்டுக்கொள்ளச் சொன்னேன். அவர் அவனிடம் விளக்கினார். புரிந்துகொண்டு, அதன்படியே கச்சிதமாகப் பண்ணி முடித்துவிட்டான்.

இரவு நான் வீட்டுக்குப் போனதும், கம்போஸ் செய்யும் மேட்டரை எப்படி முரசு அஞ்சல் மூலம் யூனிகோடாக மாற்றி, பிளாகில் போஸ்ட் செய்யவேண்டும் என்று எனக்குக் கற்றுக்கொடுத்தான்.

இன்றுவரையிலும், நான் என் கட்டுரைகளைக் கம்போஸ் செய்து, பிளாகில் போஸ்ட் செய்வது தவிர, மற்ற செட்டிங்ஸ்களை எப்படி மாற்றுவது என்று எனக்குத் தெரியாது. பிளாகை வடிவமைத்தது என் மகன் என்றால், 'அதை இப்படி இப்படிச் செய், இயற்கைக் காட்சிகள் படத்தை ஸ்லைடு ஷோவாகப் போட்டு இயற்கையை நேசிப்போம் என்று தலைப்பு வை, அரவிந்த அன்னை படத்தைப் பக்கவாட்டில் போட்டு அதன் கீழே 'எங்களை வாழவைக்கும் தெய்வம்' என்று கேப்ஷன் கொடு, ஆனந்த விகடன் நியூஸ் வருகிற மாதிரி வை' என அவனை வழிநடத்தி, அழகுபடுத்தியது பூரா என் மகள். மேட்டருக்குள்ளும் படங்கள் போடலாம் என்று சொல்லி, அந்த டெக்னிக்கைக் கற்றுக்கொடுத்தது என் மகள்தான். முதல்முறையாகப் பதிந்த சிறுகதைக்கு நெட்டிலிருந்தே ஒரு படத்தை வைத்ததோடு மட்டுமின்றி, அதை எப்படியோ ஓடவும் விட்டிருக்கிறாள் என் மகள்.

இன்றைக்கு நிறையப் பேர் என் பிளாகைப் பார்த்துப் படித்துப் பாராட்டுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் என் மகனும் மகளும்தான் என்பதை மகிழ்ச்சியோடு இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

முதலில் என் பிளாகைப் பார்த்து, சுஜாதா கட்டுரையை தமது பிளாகில் போட்டுக்கொள்ளலாமா என்று கேட்டவர் திரு.தேசிகன். எழுத்தாளர் சுஜாதாவின் நண்பர். மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். இன்று என் பிளாகைப் பார்த்துவிட்டுக் கடிதம் எழுதும் பல பேர், அவர் பிளாக் மூலமாகத் தெரிந்துகொண்டவர்கள்தான். அவருக்கு என் நன்றி!

இனி...

Dear Sir,
My Name is desikan, fan of sujatha.
I read your article in your blog. I would like to consolidate the same in my website.
Can I reproduce it ?
- Desikan

** **

Hi,
I am not sure if you remember me, but I am Sakunthala Athai's daughter. I came across you blog (and your mail id) from Deskian's blog (Desikan pakkam), which I read on and off. I was filled with old memories and nostalgia, when I came across your name.
Amma used to think of you fondly and I always associate the magazine (and the editor himself) Saavi with you. Just wanted to send you a note, I am sure it is a long shot and won't blame you if you don't remember me :)
Hope your parents, wife and kid (or is kids?) are doing well.
Cheers,
Akila

**
அன்புள்ள திரு. ரவிபிரகாஷ்,

நலம். நாடலும் அதுவே!

தங்கள் ப்ளாக் கண்டேன், திரு. சுஜாதாபற்றிய உங்கள் அனுபவங்கள் மிகவும்நெகிழ்வூட்டும்வகையில் எழுதப்பட்டிருந்தன, சுஜாதா அவர்களின் எண்ணற்ற வாசகர்கள், அவரைப் பார்த்து எழுத வந்தவர்களில் ஒருவனாக, அதனை மிகவும் உணர்ச்சியுடன் வாசித்தேன், மனம் கனத்துப்போனது!

இந்தப் பதிவுகளுக்காக, உங்களுக்குத் தனிப்பட்டமுறையில் நன்றி
சொல்லவேண்டும் என விரும்புகிறேன், அதற்காகவே இந்த மின்னஞ்சல்.

என் பெயர் நாகசுப்ரமணியன், 'என் சொக்கன்' என்ற பெயரில் எழுதிவருகிறேன்,பல மாதங்கள்முன் விகடனில் எழுதிக்கொண்டிருந்தபோது உங்களுடன் சிலமுறை
தொலைபேசியில் பேசியிருக்கிறேன், உங்களுக்கு நினைவிருக்கிறதா தெரியவில்லை!

நேரம் இருக்கும்போது, முடிந்தால் பதில் எழுதுங்கள், நன்றிகள்!

என்றும் அன்புடன்,

என். சொக்கன்,
பெங்களூர்.

** **
அன்பின் ரவிபிரகாஷ் அவர்களுக்கு!

சுஜாதா குறித்த தங்கள் நினைவலைகளை தங்களது வலைப்பூவில் கண்டேன். ஒப்பாரியாக இல்லாமல் மிக இயல்பாக எழுதியிருந்தது என்னை மிகவும் கவர்ந்தது. கட்டுரைக்கு நன்றி!

அன்புடன்

லக்கிலுக்.

** **
அன்புள்ள ரவிபிரகாஷ்,

வணக்கம். தற்செயலாக இன்றைக்கு உங்கள் Blog பார்த்தேன். மிகவும் சந்தோஷமாகப் போய்விட்டது. நீங்கள் வலைப்பதிவில் எழுதுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. கூகுள் தேடலில் சுஜாதாவைக் குறிச்சொல்லாக இட்டு யார் யார் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்தபோது உங்களுடையது அகப்பட்டது.

இது ஒரு சிறந்த மனப்பயிற்சி. நமக்குத்தோன்றுவதை எழுதிப் பார்த்துக்கொண்டே இருப்பதன்மூலம் எண்ணத்தையும் எழுத்தையும் சுத்திகரித்துக்கொண்டே இருக்கலாம்.

பத்திரிகைப் பணி அவசர நெருக்கடிகளிலிருந்து நம்மை மீட்டுக்கொள்ளவும் இந்தப் பயிற்சி கைகொடுக்கும்.
தொடர்ந்து எழுதுங்கள். நான்கு வருடங்களுக்கு முன்னர் நானும் எழுதிக்கொண்டிருந்தேன். இடையில் பல்வேறு காரணங்களால் நிறுத்திவிட்டு இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறேன்.

சொந்தமாக ஓர் இணையத்தளம் கட்டி, வேர்ட் ப்ரஸ் நிறுவி எழுதத் தொடங்கியுள்ளேன். (http://www.writerpara.net/) என்னைப் பொறுத்தவரை தொடர்கள் எழுதும் பணிக்கு இடையில் என் எழுத்தை நானே உரசிப் பார்த்து மதிப்பிட்டுக்கொள்ள வலையில் எழுதுவது பேருதவியாக இருக்கிறது.

ரிப்போர்ட்டரில் மாயவலை 200 அத்தியாயங்களைத் தொடுகிறது. போதும் என்று நினைக்கிறேன். ஏப்ரலுடன் நிறுத்திக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன். வேறு ஏதாவது எழுதலாம் என்கிற எண்ணம்.
நீங்கள் கேட்ட இலங்கை குறித்த கட்டுரைக்காகப் படித்துக்கொண்டிருக்கிறேன். கெடு தேதி மீறாமல் திங்களன்று தந்துவிடுகிறேன்.

மிக்க அன்புடன்

பா. ராகவன்

** **
அன்புள்ள ரவிபிரகாஷ்,

இன்றுதான் முதல்முறையாக உங்கள் வலைப்பதிவைப் பார்த்தேன். மகிழ்ச்சியோடு உங்களை வலைப்பதிவுலகிற்கு வரவேற்கிறேன்.

உங்களது 'சாவி' நாட்கள் பற்றிய பதிவு பல நினைவுகளைக் கிளறிவிட்டது.சாவியின் இயல்புகள் பலவற்றை மிகையின்றியும் காழ்ப்பின்றியும் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கண்ணன் மகேஷ் - சங்கரநாராயணன் 'சர்ச்சை'யைப் படித்து முறுவலித்தேன். அறிவு ஜீவி எழுத்தாளர்களிலிருந்து அற்ப ஜீவி எழுத்தாளர்கள் வரை நம் எழுத்தாளர்களை அவர்களது ஈகோ தின்று கொண்டிருக்கிறது. தங்களைத் தாண்டி உலகைப் பார்க்க அறியாத சிறுபிள்ளைகள் அவர்கள்.Subjectiveஆக சிந்திப்பத்னாலேயே அவர்கள் எழுத்தாளனாக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நாமெல்லாம் பத்திரிகையாளனாக மலரக் கிடைத்தது நம்முடைய நல்ல விதி. பததிரிகையாளன் எப்போதும் முழுச் சித்திரத்தையும் பார்க்க வேண்டியவனாக இருக்கிறான். தன்னுடைய கதைப் பக்கங்களை மட்டுமல்ல, இதழின் 96 பக்கத்தையும் ஒருமையுடன் பார்க்க வேண்டிய கடமை அவன் முன் நிற்கிறது. இது அவனுக்குத் தன்னைத் தாண்டிச் செல்லும் மனவிரிவையும், துணிச்சலையும் தருகிறது. சாவி சார் தன் பதில்களைக் கிழித்துப் போட்டது இதனால்தான்.

ஒரு எழுத்தாளன் பத்திரிகையாளனாக மலர்வது ஒரு பரிணாம வளர்ச்சி என்று நான் பல முறை சொல்லியிருக்கிறேன். அதை உங்கள் பதிவைப் படித்து மீண்டும் நினைவிற் கொண்டேன்.

அன்புடன்

மாலன்.

** **

அன்புள்ள ரவிபிரகாஷ் ஸார்,

வணக்கம், நலமா?
உங்கள் பிளாக் பார்த்தேன். ஒன்றிரண்டு பதிவுகளிலேயே பேசப்படும் பிளாக்குகளில் ஒன்றாகிவிட்டது.

'சுஜாதாவும் நானும்' ஒரு வாசகர் குறிப்பிட்டுள்ளது போல், முக்கியமானது. ஆங்காங்கே, இதுபற்றி பின்னால் விரிவாக எழுதுவேன் என நீங்கள் குறிப்பிட்டு செல்பவை படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன.
தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் அனுபவங்கள், புதிய பத்திரிகையாளர்களுக்கு பாடமாக இருக்கும்.

அன்புடன்

தளவாய் சுந்தரம்.

** **
அன்புள்ள ரவிப்ரகாஷ்,

வணக்கம்.

உங்கள் வலைப்பூ பார்க்க நேர்ந்தது. உங்களுடன் பரிச்சயமிருந்த நாட்களில் அறிந்ததை விடவும் இப்போது உங்களைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ள முடிந்தது. உங்களை நேரில் சந்தித்திருக்கா விட்டாலும் [ஒரு முறை முயன்றும் முடியாமல் போனது :-) ],
நான் நிறைய எழுதி வந்த சமயத்தில் நீங்கள் நிறைய ஊக்குவித்ததால் ஒரு நெருக்கமான நண்பராகவே என் மனதில் உருவகமாகியிருக்கிறீர்கள் (என்னை எழுதியவர்கள் - பாகம் 8).அதனாலேயே உங்கள் மின்னஞ்சல் முகவரியை வலைப்பூவில் பார்த்தவுடன் எழுதிவிடும் ஆவல் எழுந்தது.

அப்போதெல்லாம் எழுத்தை நம்பி வாழ்ந்து விடலாமோ என்ற நப்பாசை கூட இருந்தது. முடியாது என்று உள்மனம் உறுத்திக் கொண்டே இருந்ததால், பணிக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்து எழுத்தை மிகவும் குறைத்துக் கொண்டேன். இப்போது கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் வசிக்கிறேன்.

என் இணையத் தளத்தில் (http://www.sathyarajkumar.com) அமெரிக்க குட்டிக் கதைகள் பத்துப் பதினைந்தும், தமிழோவியம் மின்னிதழில் படைத்த வித்தியாசமான 3D கதைகளும் தவிர பெரிதாய் எதுவும் எழுதவில்லை. முக்கியமாய் இங்கிருந்து தபாலில் கதை எழுதி அனுப்பிக் கொண்டிருக்க சோம்பல்தான் காரணம்.

மூன்று வருடங்களுக்கு முன் விகடனுக்கும் குமுதத்திற்கும் மின்னஞ்சலில் அனுப்பிப் பார்த்தேன், அது என்னானதென்றே தெரியாததால் விட்டு விட்டேன். இப்போது பத்திரிகைகளின் இணைய வசதியைப் பார்க்கிற போது மீண்டும் எழுதலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டு சோதனைக்காக அமெரிக்க பின்னணியிலான ஒரு சிறுகதையை விகடனுக்கு இரண்டொரு வாரங்களுக்கு முன் மின்னஞ்சலில் அனுப்பினேன். அக்கதையை உங்கள் பார்வைக்காகவும் இத்துடன் இணைத்துள்ளேன்.

நேரமிருப்பின் இரண்டொரு வரிகள் எழுதுங்கள்.

மிக்க அன்புடன்,

சத்யராஜ்குமார்.

சத்யராஜ்குமாரின் 'என்னை எழுதியவர்கள்' தொடரிலிருந்து ஒரு பகுதி...

‘...நான் கதை எழுதி மிகப் பெரிய ஆள் ஆகப் போகிறேன் என்று நம்பியவர்களில் ராஜேஷ்குமாருக்கு அடுத்தபடியாக சாவி பொறுப்பாசிரியர் ரவிபிரகாஷைச் சொல்லலாம். இப்போது விகடனில் இருக்கிறார்.

குமுதத்திற்கு மாலைமதி போல சாவி பத்திரிகைக்கு மோனா.
அதில் கார் ரேஸை வைத்து நான் எழுதிய 60 கிலோ மீட்டர் அதிர்ச்சி என்ற குட்டி நாவலை நான் ஆரம்பத்தில் ஆசைப்பட்ட மாதிரியே அட்டையில் கொட்டை கொட்டையாய் என் பெயரைப் போட்டு வெளியிட்டிருந்தார்.

Indy 500 எனப்படும் சர்வதேச கார் பந்தயத்துக்குப் புகழ் பெற்ற இண்டியானாபொலிசில் இப்போது குடியிருக்கிறேன். அந்தக் கதையை இன்னும் விஷயச் செறிவோடு இப்போது எழுதியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. ஆனால் அடிப்படையில் நான் ஆட்டோமொபைல் என்ஜினீயர் என்பதால் ஒரு க்ரைம் கதையின் நடுவே கார் சங்கதிகள் இழையோட விட்டு, முடிந்த மட்டும் நன்றாகவே எழுதியிருந்தேன்.

அதற்கப்புறம் ‘நகராதே நட்சத்திரா’ என்ற சயன்ஸ் ·பிக்க்ஷன். இரண்டு பாகங்கள் கொண்ட கதை. அறிவிப்பு வெளியிட்டு விட்டேன் சீக்கிரம் இரண்டாவது பாகம் அனுப்புங்கள் என்று அவர் வெள்ளிக் கிழமை கேட்டு, சனிக் கிழமை எழுதி முடித்து, திங்கட்கிழமை அனுப்பி, செவ்வாய்க் கிழமை அவர் கைக்குக் கிடைத்து விட்டது.

அந்தக் கதைகளை நான் எழுதி அனுப்பிய வேகத்தைப் பார்த்து, பத்திரிகையுலகில் ஒரு பெரிய ஆலமரம் மாதிரி வளர்ந்து நிற்கப் போகிறீர்கள் என்று வியப்புடன் வாழ்த்தினார் ரவிபிரகாஷ்.’

** **

அனைவருக்கும் மீண்டும் என் இதயபூர்வமான நன்றிகள்!

கரிநாக்கு

"சங்கர்... ரோட்டுல நீ ரொம்ப வேகமாப் போறே! இவ்வளவு வேகம் கூடாது. என்னிக்கோ தெரியலே, நீ லாரியிலோ பஸ்ஸிலோ மாட்டிண்டு சாகப்போறே!"
அப்பா அந்தக் காலத்து மனுஷர் இல்லியா! பாவம்... வீணாகப் பயந்து நடுங்கறார். இன்றைய இளம் தலைமுறையினரின் தனி 'கெபாசிட்டி' பற்றி அப்பாவுக்கு என்ன தெரியும்?'
சங்கரின் கால்கள் சைக்கிள் பெடலை மிதித்துக்கொண்டு இருக்க... சக்கரங்கள் 'சரசர'வெனச் சுழன்றுகொண்டு இருக்க... அப்பாவின் அர்த்தமற்ற உபதேசங்கள் காதுகளில் ரீங்காரமிட...

எதிரே ஒரு கார்!


இறங்குவானா சங்கர்! அருகில் சென்று சரேலென்று ஹேண்டில்பாரை ஒடித்து வளைக்க... காரின் பிரேக் கட்டை, படுவேகமாகச் சுழன்றுகொண்டு இருக்கும் சக்கரங்களை இழுத்துப் பிடிக்க... 'க்ரீச்...' என்ற சப்தத்துடன் காரின் டயர்கள் இரண்டடி தூரம் தேய... டிரைவர் தலையை நீட்டி வசைபுராணம் பாட...


கனகுஷியாக, விறுவிறுவென்று வாயுவேக மனோவேகத்தோடு சைக்கிளில் செல்வதுதான் எவ்வளவு த்ரில்லிங்காக இருக்கிறது!


எத்தனை நாள் எத்தனை சைக்கிளை முந்தியிருப்பேன்! எத்தனை டவுன் பஸ்ஸை 'ஓவர்டேக்' பண்ணியிருப்பேன்! எத்தனை லாரிகளுக்கு 'சைடு' கேட்டிருப்பேன்..!


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
புத்தகத்துல இந்தப் பாட்டு வந்திருக்குது. படிச்சா மட்டும் போதுமா? அதன்படி நடக்க வேணாமாக்கும்?

அன்னிக்குக்கூட, ரமேஷ்னு என்கூடப் படிக்கிறவன்... ரெண்டு கையையும் விட்டுட்டுச் சைக்கிளை ஓட்டிக் காண்பிச்சான்!ஹ... இதென்னடா பிரமாதம் மைதானத்துல..! நீ மெயின் ரோடுக்கு வா, அங்கே விட்டுக் காமிக்கிறேன்; பார்த்துட்டுச் சொல்லுன்னேன்! என்னா கூட்டம், மெயின் ரோடுல... ரெண்டு கையையும் விட்டுட்டுச் சும்மா ஜில்லுனு விட்டுக் காண்பிச்சேன்! பய அசந்துட்டான்! சும்மா சரசரன்னு அநாயாசமா வளைச்சு... கால் பேசும் மேன் கால்!

சே! ஆனாலும் அப்பாவுக்கு ரொம்பத்தான் பயம்! இப்போ கிளம்பும்போதுகூடத் திருப்பித் திருப்பிப் பாடம் படிச்சாரே!

"தரித்திரம்... பீடை..! சொன்னால் கேட்கிறதில்லை, ராஸ்கல்! நீ லாரியிலே மாட்டிண்டு சாகப்போறே!"


அதோ பாரேன், எதிரே போற லாரியை..! லாரியா அது? சரியான எருமைக்கடா..! மாடு மாதிரி நகருதே! இப்பப் பாரேன், அதை 'பீட்' அடிக்கிறேனா இல்லியானு!


சரசரவெனச் சக்கரங்கள் சுழல, கைகள் ஹேண்டில்பாரை ஒடித்து வளைத்து, மூச்சைப் பிடித்துக்கொண்டு மிதிமிதின்னு மிதித்து...


சங்கரின் சைக்கிள் அதோ அந்த லாரியை 'ஓவர்டேக்' செய்துகொண்டு இருக்கிறது. அடடே..! சங்கர் அதை முந்தவும் செய்துவிட்டானே!


இதிலென்ன ஆச்சரியம்? இது ஓட்டை! புத்தம்புது செவர்லே கூட சவாலுக்குப் போவானே சங்கர்!


சங்கரா, கொக்கான்னேன்!


சங்கர் பெடலை விறுவிறுவென்று மிதிக்க... பின்னால் அந்த லாரி தடதடவென்று வர...


அடச்சே! நந்தி மாதிரி இந்த மனுஷன் குறுக்கே வந்து...
ஏய்யா அறிவுகெட்ட முண்டம்!

சங்கர் சரேலென்று ஹேண்டில்பாரை ஒடிக்க... 'மளுக்'கென்று அது மக்களித்துக்கொண்டு குப்புற விழ... மடேல் என்று சங்கர் கீழே உருள...


பின்னால் வந்த லாரி டிரைவர் மிக சாமர்த்தியமாக... மிக மிக சாமர்த்தியமாக பிரேக் போட்டும்...


லாரியின் முன் சக்கரங்களில் ஒன்று சங்கரின் கழுத்தில் ஏறி... இன்னொரு சக்கரம் ஹேண்டில்பாரில் ஏறி...


ஹா..! ஐயோ! கோரம்... கோரம்... படுகோரம்!


தாயார் சாவித்திரி அம்மாள் அலறினாள். அக்காக்காரி கமலம் அழுதாள். தந்தை சிவராமன் இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டார்.


"ஐயோ, மவனே! பூட்டியாடா... கிளம்பறச்சயே அபசகுனம் மாதிரி, நீ லாரியிலே மாட்டிண்டு சாகப்போறேன்னாரே! பாழப்போன அந்தக் கரிநாக்கு பலிச்சுடுச்சே! அந்த மாதிரியே லாரியிலே மாட்டிக்கினியே என் மகராசா..!"


சாவித்திரி அம்மாள் உரத்த குரலில் பிலாக்கணம் வைத்து அலற ஆரம்பித்துவிட்டாள். இடையிடையே அவளது கணவர் சிவராமனுக்குத் தரித்திரம் என்றும், அபசகுனம், கரிநாக்கு என்றும், பாழாய்ப்போன மனுஷன் என்று வசவுபுராணம் வேறு!


இது நடந்த பிறகு, இரண்டு மூன்று மாதங்கள் வாய் ஓயாமல், அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்காரரிடமும் மற்றும் போவோர் வருவோர் எல்லாரிடமும், 'போகும்போதே வாயை வெச்சார்... பூட்டான் என் மவராசன்... பாழாய்ப்போன கரிநாக்கு...' இப்படியே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தாள் சாவித்திரி அம்மாள்.


கேட்டவர்கள் எல்லாம் ஆமாம் சாமி போட்டார்கள்.


"ஏய் கமலா..! படிச்சுத் தொலையேண்டி சனியனே! தரித்திரம்... தரித்திரம்... நம்ம எழவு எடுக்கறதுக்குன்னு வந்திருக்குதே பீடை!"


"ஏங்க வீணா சனியன், தரித்திரம்னு குழந்தையைத் திட்டறீங்க! பாவம், அதுக்குப் படிப்பு வரலேன்னா, அது என்னங்க செய்யும்? பொம்பிளை படிச்சுதான் சம்பாரிக்கப்போகுதாக்கும்! கல்யாணம் முடிஞ்சு புருஷனோடு போகப்போறவதானே?"


"ஏண்டி இவளே! உனக்கு அறிவு கிறிவு ஏதாவது இருக்கா? இல்லே, இருக்கான்னு கேக்கறேன்? புருஷன்காரன் எல்லாக் காலத்துக்குமா சம்பாரிச்சுப் போட்டுண்டு இருக்க முடியும்? திடீர்னு அவனுக்குக் கால், கை பூட்டுதுன்னு வெச்சுக்க... அவன் சம்பாரிச்சுப் போட முடியுமா? அப்போ இவதானே அவனுக்கும் சோறு போட்டுக் காப்பாத்த வேண்டியதாயிருக்கும்..?"


"ஆண்டவனே, மாரியாத்தா..!" என்று அலறிய சாவித்திரி, தன் காதுகளைப் பொத்திக்கொண்டாள்.


"ஐயோ..! ஏங்க இப்படிக் கன்னாபின்னானு ஏதாவது சொல்லி வைக்கறீங்க? நீங்களும் பாழாய்ப்போன உங்க கரிநாக்கும்! யாருங்க அது... அண்டையா, அசலா? நம்ம பொண்ணுங்க. நாளைக்கே நல்லபடியா வாழப்போற பொண்ணுங்க. சீரும் செனத்தியுமா புருஷனோட வாழுடீயம்மானு வாழ்த்தாம, எடுத்த எடுப்பிலேயே மொட்ட மரமா நில்லுடி மகராசிங்கறீங்களே! ஐயோ... எம் மவளே!" - சாவித்திரி கேவ ஆரம்பித்துவிட்டாள்.


இது நடந்து ஆறு மாதம் இருக்கும். கமலாவின் திருமணம் வெகு சிறப்பாக நடந்தேறி, அடுத்த ஓரிரு மாதங்களுக்குள்ளாக அவள் கணவன் தான் வேலை செய்யும் தொழிற்சாலை பாய்லரின் விழுந்து உயிரை விட்டான்.


படிப்பில்லாத காரணத்தால், இதோ இன்று பல வீடுகளில் பத்துப் பாத்திரங்களைக் கழுவி வரும் பணத்தில் தன் வயிற்றைக் கழுவிக்கொண்டு இருக்கிறாள் கமலா.


"சார், உங்க பொண்ணு மேஜராயிட்டாளா?" - சிவராமன் கேட்டார்.

அவரது மனைவி பாஷையில்... அவரது மகள் கமலாவின் பாஷையின் பாஷையில்... இன்னும் அவர் குடியிருக்கும் வீட்டுக்காரரின் பாஷையில் சொல்ல வேண்டுமானால்...

தரித்திரம் பிடித்த கரிநாக்குப் பீடை கேட்டது!


வீட்டுக்காரர் தயக்கத்துடன் 'உம்' என்றார்.
கமலாவின் கணவன் இறந்ததிலிருந்து வீட்டுக்காரருக்கு மிகவும் நடுக்கம், சிவராமனைக் கண்டாலே! எந்த நேரத்துல வாயைத் தொறப்பாரோ, என்ன நடக்குமோ... யாரு கண்டது! அந்த வீட்டுக்காரர் தம் பெரிய வீட்டில் பாதி போர்ஷனைச் சிவராமனுக்கு வாடகைக்கு விட்டு, மீதிப் பகுதியில் தன் குடும்பத்தோடு இருந்தார். இருவரும் பேசிக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம்!

ஆனாலும், மாதம் பிறந்தால் கணக்காக வாடகைப் பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு மறுபேச்சில்லாமல் வந்துவிடுவார். தம் வீட்டிலும் உத்தரவு போட்டுவிட்டார், சிவராமனைக் கண்டாலே காணாததுபோல் போய்விட வேண்டுமென்று!


கஷ்டகாலம்... இன்னிக்குக் காலையில யார் முகத்துல முழிச்சோமோ, இதுங்கிட்ட மாட்டிக்கிட்டோ ம்! தரித்திரம் புடிச்சது என்ன வாய் வைக்கப்போறதோ?


"மேஜராயிட்டாளா? மூணு வருஷம் இருக்குமா! சந்தோஷம். எதுக்குக் கேட்டேன்னா, உம்ம பொண்ணு ராத்திரியிலே தனியா சினிமாவுக்குப் போறதும் வர்றதும்... மத்த பொண்ணுங்களோடதான் போறா, இல்லேன்னு சொல்லலே! இருந்தாலும், இந்த வயசுல ஆம்பிளைத் துணை இல்லாம அவளைத் தனியா அனுப்பறது தப்புன்னு என் மனசுக்குத் தோணுது. காலம் கெட்டுக் கிடக்கு பாருங்க. தனியா போகறச்சே நாலஞ்சு ரௌடிகளா வழிமறிச்சான்னா, உம்ம பொண்ணால பாவம், என்ன செய்ய முடியும்? இல்லே, மத்த பொண்ணுங்கதான் என்ன செய்வாங்க? இழக்கக்கூடாததை இழந்துட்டு வந்துட்டாள்னா அப்புறம் என்ன செய்யமுடியும்? வாழ்நாள் முழுதும் ஊரார் பழி சுமந்துக்கிட்டில்ல நிக்கணும்..!"


"யோவ், நிறுத்துய்யா!" - சீறினார் வீட்டுக்காரர். "ஊரார் பேச்சாம் ஊரார் பேச்சு! ஊரார் பழி என்னய்யா சுமக்கறது... உம்ம பழியில்ல சுமக்கணும்! தரித்திர நாக்கை வெச்சுக்கிட்டு எங்காவது அடைஞ்சு கிடக்காமல், வீடு ஏறி வந்து சாபம்! சே..! இந்த வீட்டுல இனி உம்மை இருக்க விடமுடியாது போலிருக்கே! நாளை விடிஞ்சதும் வீட்டைக் காலி பண்ணிட்டு மறு வேலை பாருய்யா!"


சுள்ளென்று விழுந்தார் அந்த வீட்டுக்கார மகராசன்.


பிறகு உள்ளே திரும்பிக் குரல் கொடுத்தார்... "டீ மாலு! இனிமே தனியா வெளியே போகாதம்மா! இன்னிக்கு ராத்திரி கூட ஃப்ரெண்ட்ஸ்களோடு சினிமாவுக்குப் போகணும்னியே... போகவேண்டாம்! சனியன்... நாக்கைப் போட்டுண்டு வந்துடுத்து நம்ம எழவு எடுக்க! மவனையும் மருமவனையும் சேர்த்து முழுங்கிட்டு நிக்கறதே, அப்பவாவது புத்தி வரவேண்டாம்?" என்று வார்த்தைகளால் எரித்தவர் சிவராமன் பக்கம் திரும்பினார்.


"இன்னும் ஏனய்யா இங்க இருந்துக்கிட்டு எங்க பிராணனை வாங்கறே? போய்யா!"


கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறை! சிவராமன் எரியிலிட்ட புழுவாகத் துடித்தார். அவரது இதயம் நார் நாராகக் கிழிக்கப்பட்டது.


ஓ மை காட்! இரக்கமே இல்லாத பாவிகளா? உபதேசம் செய்தவனுக்கு... தீர்க்கதரிசிக்கு நீங்கள் காட்டும் மரியாதை இதுதானா?
இதுவா சமுதாயம் கற்பிக்கும் பாடம்!

அழுதார்... இதயம் நொறுங்கிச் சுக்கல் சுக்கலாக ஆகும் அளவு அழுதார்.

மௌனமாகத் தம் இருப்பிடம் சென்று மூலையில் துக்கத்தோடு விழுந்தார் சிவராமன்.

சீனுவாசா தியேட்டருக்கும் தெற்கால சந்துல... எண்ணி நாலு பேர்... ரௌடிகள்! பல நாளாக மாலாவின் போக்குவரத்தைக் கவனித்துக்கொண்டு இருந்து... எப்படியும் இன்று அவள் சினிமா முடிந்து திரும்பி வருகையில் அவளைச் சுவைத்துவிடவேண்டும் என்று அந்த நரிக்கூட்டம் தயாராக நின்றுகொண்டு இருந்ததோ... அவர் மட்டும் அன்று காலை புத்திமதி சொல்லாமல் இருந்திருந்தால்... ஓ காட்..! அவள்... அந்த வீட்டுக்காரரின் மகள் மாலா அந்தக் காமவெறி பிடித்த நரிக்கூட்டங்களின் பருவ வெறிக்கு இரையாகியிருப்பாள் என்பதோ...


யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை!


அப்படியே அந்த வீட்டுக்காரர், சிவராமனின் நல்லதொரு புத்திமதியினை ஏற்காமல் தமது மகளை அனுப்பி, அந்தத் துக்ககரமான அனுபவத்தை அவள் அடைந்திருந்தாலும் என்ன நினைப்பார்..?


"ஐயோ! மனுஷன் சொன்னாரே! கேக்காம அறிவுகெட்டத்தனமா அனுப்பி, இப்போ இல்லாத வேதனையெல்லாம் அனுபவிக்கிறோமே?" என்றா நினைப்பார். ஊம்ஹூம்..!


"பாழாய்ப்போன கரிநாக்கு..."
- வழக்கமான பல்லவிதான்!

(கல்கி - 17.9.1978)


சுய விமர்சனம்:

ந்தக் கதையை இப்போது படிக்கும்போது, கதைக்கான கரு ஓ.கே-வாகத் தோன்றினாலும், எழுத்து நடை மிகவும் குழந்தைத்தனமாக இருப்பதாகத் தோன்றுகிறது.

நான் கண்ணெதிரே பார்த்த ஒரு சம்பவத்தின் விளைவே இந்தக் கதை.

பெரும்பாக்கம் கிராமத்தில் நாங்கள் வசித்தபோது, ஒரு தீபாவளி நேரம். எங்கள் வீட்டு வாசலில் வெயிலில் மத்தாப்பூக்கள் காய வைத்திருந்தோம். நாங்கள் குழந்தைகள் ஆதலால், ஊசி வெடி, லட்சுமி வெடி போன்ற வெடிகள் எதுவும் வாங்கமாட்டார் அப்பா. வெடிக்கக்கூடிய அதிகபட்ச வெடிபொருள் கேப்தான். அதையும் பாதுகாப்பாக நட்&போல்ட்டுக்குள் வைத்து, தரையில் எறிந்து வெடிப்போம்.


அச்சமயம், எங்கள் பக்கத்து வீட்டுப் பையன் ஒரு பாட்டிலைத் தெருவில் வைத்து, அதனுள் ராக்கெட்டை நிறுத்தி, திரியைப் பற்ற வைத்தான். ராக்கெட் சீறிக்கொண்டு புறப்பட்டது.


அதைப் பார்த்துக்கொண்டே இருந்த என் அப்பா, "இது யார் வீட்டைப் பத்த வைக்கப்போகுதோ!" என்று கவலைப்பட்டுச் சொன்னார்.


அவர் சொன்ன மாதிரியே, வளைந்து நெளிந்து உயரே சீறிச் சென்ற அந்த ராக்கெட், சர்ரென்று கீழே திரும்பி வேகமாக வந்து ஒரு கூரை வீட்டின் உச்சியில் சொருகிக்கொண்டது.


சிறிது நேரத்தில் கூரையிலிருந்து புகை வர, வீடு பற்றிக்கொண்டது. வீட்டுக்குள்ளிருந்து ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக கிராமத்துக் குடும்பம் ஒன்று பதறியபடியே வெளியேறியது. தெருவில் கும்பல் சேர்ந்து,
தீயணைப்பு வேலைகள் மளமளவென்று நடந்தன.


"ரவி, பட்டாசு காய வெச்சது போதும். உள்ளே கொண்டு வை!" என்றார் அப்பா. ஒரு காரணமாகத்தான் அப்படிச் சொன்னார். ஆனால், அதற்குள் விஷயம் முத்திவிட்டது.


அந்தக் கிராமத்துக் குடும்பம் எங்கள் வீட்டின் முன் வந்து நின்று, குய்யோ முறையோ என்று கூக்குரலிட ஆரம்பித்துவிட்டது. நாங்கள் பட்டாசு காய வைத்திருப்பதால், ராக்கெட் விட்டுத் தங்கள் வீட்டைக் கொளுத்தியது நாங்கள்தான் என்று தவறாகப் புரிந்துகொண்டு சண்டைக்கு வந்துவிட்டார்கள்.

அவர்களிடம் அப்பா நிதானமாகப் பேசி, "பாருங்க, ஒரு சின்ன வெடியாவது இருக்கான்னு! நாங்க விட்ட ராக்கெட் இல்லை அது!" என்று புரியவைக்க முயன்றார்.

அதற்குள் ராக்கெட்டை விட்ட பையனின் அப்பாவே எங்களுக்காகப் பரிந்து பேசி, அதே சமயம் தன் மகனையும் காட்டிக்கொடுக்காமல், "நான் பார்த்துட்டிருக்கும்போதே பக்கத்துத் தெருவிலேர்ந்து வந்ததுங்க அந்த ராக்கெட். இவங்க விடலை!" என்று சமாதானம் செய்து அனுப்பினார்.


அப்பா இப்படி ஒரு தடவை, ரெண்டு தடவை இல்லை... பல முறை சொல்லி அப்படி அப்படியே நடந்திருக்கிறது.


இந்தச் சம்பவம் என் மனதில் ரொம்ப நாள் பதிந்திருந்தது. அப்புறம் பல வருடங்கள் கழித்து, படிப்பெல்லாம் முடிந்து வெட்டியாகத் திரிந்துகொண்டு இருந்த காலத்தில், என் 19 வயதில், இதையே கரிநாக்கு' என்கிற தலைப்பில் கதையாக எழுதினேன்.

என் முதல் முயற்சி இது. இப்போது படிக்கும்போது ரொம்பவும் அமெச்சூர்தனமாக இருக்கிறது. கதையில் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன். தப்புகளும் இருக்கிறது. காரின் பிரேக் கட்டை கார் சக்கரங்களை இழுத்துப் பிடித்து நிறுத்துவதாக எழுதியிருக்கிறேன். அபத்தம்!

அதுவரை நான் விழுப்புரத்தைத் தாண்டிப் போனதில்லை. உலக அனுபவமே சுத்தமாக இல்லை. பள்ளி வயதில் காமிக்ஸ் புக்ஸ் படிப்பேன். ஆனந்த விகடன், குமுதம் இதழ்களில் ஜோக்ஸ் படிப்பேன். பலது புரியாது. பெரிய கதை என்றால், கல்கண்டு வார இதழில் தமிழ்வாணன் எழுதிய துப்பறியும் சங்கர்லால் கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். மற்றபடி சிறுகதைகள் என எதுவும் படித்தது இல்லை. எப்படி எழுதவேண்டும் என்றும் தெரியாது.


கதைப்படி சிவராமன் குடும்பம், பிராமணரல்லாத குடும்பம்தான். ஆனால், பிராமண சமூகத்தில் பிறந்தவன் என்பதால், அந்தப் பேச்சுப் பழக்கத்திலேயே இந்தக் கதையை எழுதியிருக்கிறேன். மொழி ஆளுமை இல்லாமல் போனதுதான் காரணம்.


"ஐயோ, மவனே! பூட்டியாடா..." என்று பிராமணரல்லாதார் பாணியில் அலறத் தொடங்கும் சாவித்திரி அம்மாள், "கிளம்பறச்சயே அபசகுனம் மாதிரி, நீ லாரியிலே மாட்டிண்டு சாகப்போறேன்னாரே!" என்று பிராமண பாஷையில் அழுவதாக எழுதியிருக்கிறேன். இந்தத் தப்பு கதை நெடுக இருக்கிறது.


இருந்தாலும், இது என் கன்னி முயற்சி. எந்தத் திருத்தமும் செய்யாமல், அந்தக் கதையை அப்படியே இங்கு கொடுத்துள்ளேன்.


ஆயிரம் தப்புகள், அபத்தங்கள் கதையில் இருந்தாலும்... குழந்தையாக இருந்தபோது நான் எழுதிய என் கிறுக்கல் கையெழுத்தை இப்போது எடுத்துப் பார்த்தால், மனசுக்குள் ஒரு சந்தோஷம் வருமே... அப்படி ஒரு சந்தோஷம் இந்தக் கதை படிக்கும்போது எனக்கு ஏற்படுகிறது.

இன்னிசை சகாப்தம் டி.எம்.எஸ்.!


ரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் என்றால், எனக்கு அலர்ஜி! பத்திரிகைத் துறைக்கு நான் வந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், பத்திரிகை தொடர்பாகக் கூட அவர்களைச் சந்திப்பதை நான் தவிர்த்தே வந்திருக்கிறேன்.

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் நான் பி.யு.சி. படித்துக்கொண்டு இருந்தபோது, ஆண்டு விழாவில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். நான் மிகத் தீவிர சிவாஜி ரசிகன் என்பது என் தோழர்கள் அனைவருக்குமே தெரியும். (இன்றைக்கும் கூட நான் சிவாஜியின் ரசிகன்தான்.) விழா முடிவில், மாணவர்கள் கும்பல் கும்பலாகச் சென்று சிவாஜியிடம் ஆட்டோ கிராஃப் வாங்கினார்கள். நான் வாங்கவில்லை. என் நண்பர்கள் எல்லோருக்கும் ஆச்சர்யம்!

ஆனால், இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. நான் சிவாஜியின் நடிப்புக்கு ரசிகன். அவரின் 'கௌரவம்' படத்தை 30 முறைகளுக்கு மேலும், 'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தை 25 முறைகளுக்கு மேலும் அலுக்காமல் சலிக்காமல் பார்த்து ரசித்திருக்கிறேன். மற்றபடி அவரை நேரில் சந்தித்துக் கைகுலுக்குவதிலோ, கையெழுத்து வாங்குவதிலோ எனக்குப் பெரிய ஆர்வமோ, அப்படி ஒரு எண்ணமோ ஏற்பட்டது இல்லை. தவிர, ஆரம்பத்தில் சொன்னது போல், பொதுவாகவே எனக்கு சினிமா பிரபலம் என்றால் அலர்ஜி! திரையில் பார்த்து ரசிப்பதோடு சரி; நெருங்கிப் பேச, பழக விரும்புவதில்லை.

ஆனால்... பார்க்கவேண்டும், பேசவேண்டும் என்று நான் தணியாத தாகம் கொண்டு இருந்த திரைப் பிரபலங்கள் இருவர். ஒருவர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். மற்றவர், பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்.

நினைவு தெரிந்த நாள் முதலாக, அதாவது சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக டி.எம்.எஸ்ஸின் பாடல்களைக் காது குளிரக் கேட்டு, சுவாசித்து வளர்ந்தவன் நான். அவரின் அபிமானி, ரசிகன், தீவிர ரசிகன் என்பதையெல்லாம் தாண்டி, வெறிபிடித்த ரசிகன் என்றே சொல்லலாம்.

இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது... 'சரஸ்வதி சபதம்' படம் வெளியானபோது, நான் ஏழு வயதுச் சிறுவன். அன்று, 'அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி' என்று என் காதுகளில் விழுந்த அவரது கம்பீரக் குரல், என்னை அந்த இளம் வயதிலேயே சிலிர்க்க வைத்தது. 'தெய்வம் இருப்பது எங்கே... அது இங்கே...' என்று அவர் பாடியதைக் கேட்டபோது, தெய்வத்தையே எதிரில் கண்ட பரவசத்தை அடைந்தேன். 'ராணி மகாராணி, ராஜ்ஜியத்தின் ராணி' என்ற பாடலில் டி.எம்.எஸ்ஸின் குரலில் தெறித்த குழைவும் நெளிவும் நையாண்டியும் என்னை மிகவும் சொக்கவைத்தன. 'கல்வியா, செல்வமா, வீரமா... அன்னையா, தந்தையா, தெய்வமா...' என்ற பாடலில் மயங்கி, அதை நான் திரும்பத் திரும்ப எத்தனை ஆண்டுகளாகப் பாடிக்கொண்டு இருந்தேன் என்பதற்குக் கணக்கே இல்லை. (எட்டாம் வகுப்பு படிக்கும்போது, மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான போட்டிகளில், வழக்கமான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் தவிர, பாட்டுப் போட்டியிலும் தைரியமாகக் கலந்துகொண்டு, நான் அந்தப் பாடலைத்தான் பாடி முதல் பரிசு பெற்றேன்!)

அத்தனை சின்ன வயதிலேயே பள்ளிப் பிள்ளைகளான நாங்கள் சிவாஜி ரசிகர்களாகவும், எம்.ஜி.ஆர். ரசிகர்களாகவும் பிரிந்திருந்தோம். நான் சிவாஜி ரசிகன். எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்பது அப்போதைய என் எண்ணம். அதனால் அவர்களிடமிருந்து கொஞ்சம் விலகியே இருப்பேன். ஆனாலும், எம்.ஜி.ஆர். படப் பாடல்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். 'கடவுள் எனும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி...' என கிராம பஞ்சாயத்து போர்டு உச்சியில் கட்டியிருக்கும் புனல் வடிவ ஸ்பீக்கர் அலறுகிறபோது, என் நாடி நரம்புகளெல்லாம் சிலிர்க்கும். 'நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை விதைக்கணும்...' என்ற டி.எம்.எஸ்ஸின் ஓங்கி உயர்ந்த மிடுக்கான குரல், அந்தப் பாடல்களை சிடி-யில் பதிவு செய்வது போல் என் இதயத்தில் எழுதி வைத்துவிட்டது.

படத்தில் யார் நடிக்கிறார்களோ அவரேதான் பாடுகிறார் என்றுதான் நான் அந்தச் சிறு வயதில் நம்பிக்கொண்டு இருந்தேன். சிவாஜி பாடல்களை ஒரு சிவாஜி ரசிகனாக நான் லயித்துக் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே, அடுத்து வெளியாகும் எம்.ஜி.ஆர். படப் பாடல்கள் கலக்கலாக ஒலிபரப்பாகும். 'அட, நம்ம ஆளுக்கு இணையாக இவரும் பாடிக் கலக்கறாரே!' என்று எம்.ஜி.ஆர். மீது உள்ளூரக் கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கும். போகப் போகத்தான், இருவருக்குமே டி.எம்.எஸ். என்கிற ஒருவர்தான் பின்னணி பாடுகிறார் என்கிற விவரம் தெரிந்தது.

அந்தக் காலத்தில், ஒரு சாக்லெட் டப்பாவின் மூடியில் டி.எம்.எஸ்ஸின் கம்பீரமான உருவம், பட்டையாக விபூதி பூசிய நெற்றியோடு தெய்வீக உணர்வைத் தரும் விதமாக அச்சிடப்பட்டிருக்கும். அப்படி ஒரு பெட்டியை எங்கள் கிராமத்துப் பெரியவர் ஒருவரிடம் நான் பார்த்தேன். டி.எம்.எஸ். படம் பதிந்திருந்த பெட்டி என்பதற்காகவே, அதை எனக்குத் தரச் சொல்லி அந்தப் பெரியவரிடம் தினம் தினம் கெஞ்சிக் கூத்தாடி, நச்சரித்து ஒரு நாள் வாங்கிக்கொண்டுவிட்டேன். அதில்தான் என் பேனா, பென்சில்களைப் போட்டுக்கொண்டு, பெருமையோடு ஸ்கூலுக்குப் போய் வருவேன்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான், கிராமத்தை விட்டு விழுப்புரம் வந்தேன். விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் பிள்ளையார் கோயில் விழாவில் கச்சேரி செய்ய, ஆண்டுக்கு ஒருமுறை டி.எம்.எஸ். வருவார். கூட்டமென்றால் பயந்து நடுங்கும் நான் (இன்றைக்கும் கூட கும்பல் என்றால், எனக்குக் கொஞ்சம் உதறல்தான்!Enochlophobia!) டி.எம்.எஸ்ஸைக் காண வேண்டும் என்பதற்காக, அத்தனைக் கூட்டத்துக்கு மத்தியிலும் அடித்துப் பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்து போய் முன் வரிசையில் காத்திருந்து, அவர் பாடுவதைப் பரவசத்தோடு மெய் சிலிர்க்கப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறேன்.

என் தாத்தா டி.எம்.எஸ்ஸின் ரசிகராக இருந்தவர். 'தூக்குத் தூக்கி' படப் பாடல்களையெல்லாம் அவர் சிலாகித்துச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவருக்குப் பின், என் அப்பா டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். ஆனால், அவரின் அபிமான பாடகர் டி.ஆர்.மகாலிங்கம்தான். இருப்பினும், 'கௌரவம்' படத்தில், 'கண்ணா... நீயும் நானுமா...', 'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தில், 'இன்குலாப் ஜிந்தாபாத்... இந்துஸ்தான் ஜிந்தாபாத்' போன்ற பாடல்களை டி.ஆர்.மகாலிங்கம் என்ன, வேறு யாராலுமே பாடமுடியாது என்று அடித்துச் சொல்லுவார். சத்தியமான வார்த்தை! டி.எம்.எஸ்ஸின் பக்தி ரசம் இழைந்தோடும் 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன், நற்கதி அருள்வாய் அம்மா...' என்ற பாடலை உருகி உருகிப் பாடுவார் அப்பா. இன்றைக்கு அப்பாவின் வயது 77.

'அழகென்ற சொல்லுக்கு முருகா', 'சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா...', 'உள்ளம் உருகுதையா முருகா உன்னடி காண்கையிலே...' 'மெல்லச் சிரிக்கும் கந்தன் புன்னகையில்...' என டி.எம்.எஸ்ஸின் எந்தவொரு பக்திப் பாடலைக் கேட்டாலும், அந்த முருகப் பெருமானே எங்கிருந்தாலும் இறங்கி ஓடிவந்துவிடுவான் என்று தோன்றும். 'மனம் கனிந்தே நீ அருள் புரிவாய்...' என்று நெகிழ வைக்கும் அவரது குரலைக் கேட்டால், அந்த முருகன் அருள் புரியாமலும் போய்விடுவானா என்ன?

நாற்பது ஆண்டுகளுக்கு முன் பொதுக்கூட்டங்களிலும், டீக்கடைகளிலும் கேட்டு மயங்கிய டி.எம்.எஸ்ஸின் குரலை, விஞ்ஞான வளர்ச்சியின் உதவியால், வசதியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்துகொண்டு இன்றைக்கும் தினம் தினம் கேட்டு ரசித்துக்கொண்டு இருக்கிறேன்.

'பொன்மகள் வந்தாள், பொருள்கோடி தந்தாள்...',

'நினைத்தேன் வந்தாய் நூறு வயது...',

'நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவள் மாம்பழம் வேண்டும் என்றாள்...',

'இனியவளே, என்று பாடி வந்தேன்...',

'ஒருவர் மீது ஒருவர் சாய்-ந்து...',

'பச்சைக் கிளி முத்துச் சரம்...',

'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...',

'ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா...',

'வேலாலே விழிகள்...',

'நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்...',

'மல்லிகை முல்லை, பொன்மொழிக் கிள்ளை...',

'உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று...',

'நான்கு குணம் சேர்ந்ததும் ஓர் பெண்ணிடமோ...',

'பொன்னை விரும்பும் பூமியிலே...',

'ஆறு மனமே ஆறு...',

'பூமாலையில் ஓர் மல்லிகை...',

'பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த, ஊர்வலம் நடக்கின்றது...',

'முத்துக்களோ கண்கள்... தித்திப்பதே கன்னம்...',

'பொன்னுக்கென்ன அழகு, பூவுக்கென்ன பெருமை...',

'அமைதியான நதியினிலே ஓடம்...',

'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை...',

'இன்பமே... உந்தன் பேர் பெண்மையோ...',

'மயக்கம் எனது தாயகம்...',

'காகிதத்தில் கப்பல் செய்து...',

'ஒரு காலத்திலே என்னைக் கட்டிப்போட ஒரு ராஜ்ஜியம் இருந்தது...',

'எந்தன் பொன்வண்ணமே...',

'மயக்கமென்ன இந்த மௌனமென்ன...',

'ஆடலுடன் பாடலைக் கேட்டேன்...',

'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...',

'முத்தைத்தரு பத்தித் திருநகை...',

'எங்கே நிம்மதி...',

'ஓ... ராஜா! நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்...',

'அன்பு நடமாடும் கலைக்கூடமே...',

'பாட்டும் நானே, பாவமும் நானே...',

'தம்பீ... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று...',

'உன் கண்ணில் நீர் வழிந்தால்...',

'முத்து நகையே உன்னை நானறிவேன்...',

'அம்மம்மா... தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்...',

'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்...'

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நான் திரும்பத் திரும்பக் கேட்டு ரசித்த, இன்றைக்கும் கேட்டுக் கேட்டு ரசித்துக்கொண்டு இருக்கும் டி.எம்.எஸ்ஸின் வசீகரக் குரலில் ஒலித்த பாடல்களையெல்லாம் பட்டியல் போடுவதென்றால் இன்றைக்குள் முடியாது. 'ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...' பாடலில், 'சொட்டுத் தேனைப் போல்...' என்று அவர் பாடினால், ஜிலீரென்று ஒரு சொட்டுத் தேன் நாவில் விழுந்தது போன்ற உற்சாகம். 'இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்று வெறும் உவமை நயமாக இருந்த பாரதியாரின் வரியை உண்மையாக்கியவர் டி.எம்.எஸ். பாட்டுக்கொரு தலைவன் என்றால், சத்தியமாக அது அவர்தான்!

'காது கொடுத்துக் கேட்டேன், ஆஹா குவா குவா சத்தம்...' என்று பிறக்கப்போகிற குழந்தைக்கும் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்., 'போனால் போகட்டும் போடா!' என்று போன உயிருக்காகவும் பாடியிருக்கிறார். ஜனனத்துக்கும் பாடியிருக்கிறார், மரணத்துக்கும் பாடியிருக்கிறார்; கல்யாணத்துக்கும் பாடியிருக்கிறார், காரியத்துக்கும் பாடியிருக்கிறார்; காதலுக்கும் பாடியிருக்கிறார், காதல் தோல்விக்கும் பாடியிருக்கிறார், காதல் துரோகத்துக்கும் பாடியிருக்கிறார்; நட்புக்கும் பாடியிருக்கிறார், பிரிவுக்கும் பாடியிருக்கிறார்; சந்தோஷத்துக்கும் பாடியிருக்கிறார், துக்கத்துக்கும் பாடியிருக்கிறார்; அம்மாவுக்கும் பாடியிருக்கிறார், மகளுக்கும் பாடியிருக்கிறார்; தந்தைக்கும் பாடியிருக்கிறார், தனயனுக்கும் பாடியிருக்கிறார்; வீரத்துக்கும் பாடியிருக்கிறார், விவேகத்துக்கும் பாடியிருக்கிறார்; ஆத்திகத்துக்கும் பாடியிருக்கிறார், நாத்திகத்துக்கும் பாடியிருக்கிறார்; பெரியவரைப் பற்றியும் பாடியிருக்கிறார், பெரியாரைப் பற்றியும் பாடியிருக்கிறார்; 'உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்' என்ற அவரின் கம்பீரக் குரல், சோர்ந்து கிடந்த எத்தனை எத்தனை உள்ளங்களை உசுப்பி எழுப்பிச் சுறுசுறுப்பாக இயங்க வைத்திருக்கிறது!

எம்.ஜி.ஆருக்குப் பாடுகிறாரா, சிவாஜிக்குப் பாடுகிறாரா என்று மட்டும் அல்ல, அது எந்த வயது சிவாஜி, 60-களில் இருந்த சிவாஜியா, 70-களில் இருந்த சிவாஜியா, 80-களில் இருந்த சிவாஜியா என வித்தியாசப்படுத்திக் காட்டி, டி.எம்.எஸ்ஸின் குரல் அந்தந்தக் கால கட்ட சிவாஜியைக் கண் முன் நிறுத்தியதே... இப்படி ஓர் அபூர்வ பாடகரை நான் பார்த்தது இல்லை. நேற்றைக்கும் இன்றைக்கும் நாளைக்கும் கூட இவரைப் போன்ற பிறவிப் பாடகரை இந்த உலகம் காணப் போவது இல்லை.

சிவாஜியின் குறிப்பிட்ட படத்தை நான் பார்த்திருக்க மாட்டேன் என்றாலும், டி.எம்.எஸ். பாடுகிற விதத்தை வைத்தே, அதற்கு சிவாஜி எப்படி நடித்திருப்பார் என்று என் மனசுக்குள் ஒரு திரைப்படம் ஓடும். பின்னர் என்றைக்காவது நான் அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தால், நான் ஏற்கெனவே கற்பனை செய்து வைத்திருந்தது போலவேதான், சிவாஜியின் நடிப்பு இருக்கும். இப்படி ஒரு பாடலின் மூலமாகவே ஒருவரின் நடிப்பை அந்த ரசிகரின் மனக் கண் முன் கொண்டு வந்தது டி.எம்.எஸ். மட்டும்தான்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கு மட்டும் அவர் தனித்தனிக் குரலில் பாடவில்லை; ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், எஸ்.எஸ்.ஆர் இவர்களுக்கும்கூடத் தோதாக அவர் தனது குரலை மாற்றிப் பாடி, மாய வித்தை புரிந்திருக்கிறார்.

'செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்' பாடலில், 'நாடகம் என்றே நான் நினைக்க, நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க...', என்று டி.எம்.எஸ். பாடும்போது, ஜெய்சங்கர்தான் தெரிகிறார். 'என் கேள்விக்கென்ன பதில்...' பாடலில், சிவகுமாருக்காக டி.எம்.எஸ். தன் குரலை எத்தனை மென்மையாகக் குழைத்துக் கொடுத்தார்! அதுவே பின்னாளில், 'பருத்தி எடுக்கையிலே...' பாடலில், 'ஓடித்தான் வந்திருப்பேன்...' என்று பாடும்போது, அது சிவகுமாருக்கு எவ்வளவு கச்சிதமாகப் பொருந்தியது!

'வாராதிருப்பாரோ வண்ண மலர்க் கன்னியவள்...' என்ற பாடலின் ஒவ்வொரு வரியுமே எஸ்.எஸ்.ஆரே பாடுகிற மாதிரியல்லவா இருந்தது! குறிப்பாக, 'கண்ணழகு பார்த்திருந்து... காலமெல்லாம் காத்திருந்து...' என்று அந்த வரிகளை டி.எம்.எஸ். நீட்டிய அழகு எஸ்.எஸ்.ஆருக்கு அத்தனைக் கச்சிதம்!

மற்ற பாடகர்கள், பாடகிகள் பாடிய தனிப் பாடல்களை, அவை எத்தனை அற்புதமான பாடலாக இருந்தாலும், தொடர்ச்சியாக ஐந்து அல்லது ஆறு பாடல்களுக்கு மேல் என்னால் கேட்கமுடியவில்லை. இடையில் மாறுதலுக்கு வேறு ஒரு குரல் கேட்கவேண்டும் என்று தோன்றிவிடும். ஆனால், டி.எம்.எஸ்ஸின் பாடல்களை எம்.பி-3 வடிவில் போட்டுத் தொடர்ந்து 180 பாடல்கள், 200 பாடல்கள் எனக் கேட்டாலும் எனக்கு அலுக்கவில்லை; சலிக்கவில்லை!

முக்கியக் காரணம், மற்றவர்கள் வெறுமனே அந்தப் பாடல் வரிகளைப் பாட்டாகப் பாடிவிட்டுப் போய்விடுகிறார்கள். ராகம், தாளத்துக்குச் சரியாகப் பாடுகிறோமா என்பதில் மட்டுமே அவர்களின் கவனம் இருக்கிறது. மாறாக டி.எம்.எஸ்ஸோ, அந்தப் பாடல் வரிகளை உள்வாங்கிக்கொண்டு, அதற்கு வாயசைத்து நடிக்க இருப்பவர் யார் என்பதையும் தெரிந்துகொண்டு, அந்தக் கதாபாத்திரமாகவே மாறி, ராகத்தோடு உணர்ச்சியையும் இழைத்து, அந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்துவிடுகிறார். 'ஆகட்டும்டா தம்பி ராஜா...' பாடலில், 'பள்ளம் மேடு பார்த்துப் போகணும்...' என்று பாடும்போது பள்ளத்தையும் மேட்டையும் தன் குரலில் இறக்கி, ஏற்றிக் காட்டுவார் டி.எம்.எஸ். அதே போல, 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா...' பாடலில், 'அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி...' என்று அவர் பாடும்போது 'அண்ணா....ந்து' என்கிற உச்சரிப்பிலேயே அண்ணாந்து பார்க்கின்ற உணர்வைக் கொடுப்பார். 'வாழ நினைத்தால் வாழலாம்' பாடலில், 'கன்னி இளமை என்னை அணைத்தால்...' என்று பாடும்போது உண்மையாகவே ஒரு பெண் தன் மென்மையான கரங்களால் அணைப்பது போலிருக்கும். குரலில் இத்தனை மாய ஜாலங்களை வேறு எந்தப் பாடகரும் செய்து நான் கேட்டதில்லை.

ஓர் அழகான பெண் பொம்மைக்குப் பளபளவென்று புடவை உடுத்தி, நகை அலங்காரம் செய்து வைத்தால் கூட, அது உயிரற்ற பொம்மைதான்! அப்படித்தான் மற்றவர்களின் குரல் எனக்குத் தோன்றுகிறது. ஓகே., அழகான பொம்மை. அவ்வளவுதான்! அதற்கு மேல் ஒன்றும் இல்லை. ஆனால், டி.எம்.எஸ்ஸின் குரலோ கன்னம் குழிய, பொக்கை வாய் திறந்து சிரித்தபடி கண்ணெதிரே உயிரோட்டமாகத் தவழ்ந்து வரும் அழகுக் குழந்தை போன்றது. எடுத்துக் கொஞ்சத் தொடங்கினால், கீழே இறக்கிவிட மனசே வருவதில்லை.

ஐயா... உங்கள் பாடல்களால் என்னைப் போன்ற லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரசிகர்கள் புத்துணர்ச்சி பெற்றோம்; கவலைகள் மறந்தோம்; சோகங்களை உதறினோம்; இன்றைக்கும் உங்களின் குரல் எங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்து வருகிறது. ஆனால், இதற்கெல்லாம் கைம்மாறாக நாங்கள் உங்களுக்கு என்ன செய்திருக்கிறோம்! ஒன்றுமில்லை. ஆனால், எங்கள் இதயத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு, உங்களை அதில் கம்பீரமாக உட்கார வைத்து, மானசீகமாக அழகு பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதைத் தவிர, எங்களால் செய்யக்கூடியது என்ன இருக்கிறது!

தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் மனமகிழ்வோடும், உடல் நலத்தோடும் வாழ அருள்பாலிக்குமாறு அந்த முருகப் பெருமானையும், நான் வணங்கும் மகாஸ்ரீ அரவிந்த அன்னையையும் வணங்கி, வேண்டுகிறேன்.

- ரவிபிரகாஷ்

பின்குறிப்பு:

மார்ச் 24 அன்று டி.எம்.எஸ்ஸின் பிறந்த நாள். அன்றைக்கு என் பிளாகில் ஏற்றுவதற்காக மளமளவென்று கம்போஸ் செய்த கட்டுரை இது.

எதிர்பாராதவிதமாக, விரைவிலேயே என் அபிமான பாடகர் டி.எம்.எஸ். ஐயா அவர்களை நேரிலேயே சந்தித்து, உரையாடி மகிழ்வேன் என்று நான் நினைக்கவே இல்லை.

அவரைச் சந்தித்து அளவளாவி மகிழ்ந்த அந்த அனுபவத்தைத் தனிக் கட்டுரையாகக் கொடுத்துள்ளேன்.

சந்தித்தேன் பாட்டுத் தலைவனை!

டி.எம்.எஸ்.! தமிழக மக்களைத் தனது கம்பீரக் குரலால் நாலு தலைமுறைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்த ஏழிசை வேந்தன். தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு, தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன். பாடல் வரிகளில் உணர்ச்சியைக் குழைத்து, உயிரூட்டிய இசை பிரம்மா. தமிழ் மக்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், சிவாஜி ரசிகர்கள் என இரண்டாகப் பிரிந்திருந்த காலத்தில், இரு தரப்பினரின் மனதிலும் தன் கந்தர்வக் குரலால் எம்.ஜி.ஆராகவும் சிவாஜியாகவும் அழுத்தமாகத் தன் முத்திரையைப் பதித்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் சங்கீத சாம்ராஜ்யத்தை நிலைநாட்டிய திரை இசைச் சக்கரவர்த்தி.

மார்ச் 25-ஆம் தேதியன்று அவரின் பிறந்த நாள். அதற்காக, முதல் நாள் இரவே ஒரு கட்டுரையை கம்போஸ் செய்து முடித்தேன். முடிக்கும்போது விடியற்காலை மணி 3. எனவே, பிளாகில் ஏற்றவில்லை. மறுநாள் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

மறுநாள், காலை 8 மணிக்கு மேல்தான் விழிப்பு வந்தது. அவசர அவசரமாகக் குளித்து ஆபீஸ் செல்லவே நேரம் சரியாக இருந்தது.

அலுவலகம் சென்றதும், அங்கே என் அருமை நண்பர் பி.என்.பரசுராமன் இருந்தார். சிறந்த ஆன்மிக மற்றும் இலக்கியவாதி. விகடன் டெலிவிஸ்டாஸுக்காக, சன் தொலைக்காட்சியில் 'சக்தி கொடு' நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குபவர். அவரும் நானும் சந்திக்கும்போதெல்லாம் டி.எம்.எஸ். புகழ் பாடிக்கொண்டு இருப்போம்.

அவர் என்னைப் பார்த்ததும், "தெரியுமில்லையா, இன்றைக்கு டி.எம்.எஸ். பிறந்த நாள். வழக்கமாக அவர் பிறந்த நாளன்று அவரைப் போய்ப் பார்த்து, ஆசி வாங்கி வருவது என் வழக்கம். இன்றைக்கும் செல்லவிருக்கிறேன். வருகிறீர்களா?" என்றார். 'ஐயோ!' என்றிருந்தது. அங்கே இங்கே நகர முடியாதபடி, அலுவலக வேலைகள் குவிந்திருந்தன. என் நிலைமையைச் சொன்னேன். கூடவே, டி.எம்.எஸ்ஸைப் பார்த்துப் பேசவேண்டும் என்ற என் 40 ஆண்டுக் கால தவிப்பையும் சொன்னேன்.

புன்சிரித்துவிட்டு, "சரி, இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்" என்று கிளம்பிவிட்டார் பரசுராமன்.

அவர் கிளம்பிப் போய் இரண்டு மணி நேரத்தில் அவரிடமிருந்து போன். "ரவிபிரகாஷ்! இப்போ டி.எம்.எஸ். வீட்டுலதான் இருக்கேன். பேச்சுக்கு நடுவுல உங்களைப் பத்திச் சொன்னேன். உடனே உங்களோடு பேசணும்கிறாரு! பேசறீங்களா?" என்றார்.

ஜிலீரென்றது. என்னது..! நான் பார்க்கவேண்டும், பேசவேண்டும் என்று தவம் கிடந்த என் பாட்டுத் தலைவன் என்னோடு பேச வேண்டும் என்கிறாரா!

"ஐயா! உடனே போனை அவர்கிட்டே கொடுங்கய்யா!" என்றேன்.

"ரவிபிரகாஷ்! நான் டி.எம்.எஸ். பேசறேன்" என்ற அவரது கம்பீரக் குரல் என் காதில் விழுந்ததுதான் தெரியும்... நெகிழ்ந்து, நெக்குருகி, உணர்ச்சிவசப்பட்டு என்னென்னவோ பேச ஆரம்பித்துவிட்டேன். முந்தின நாள் ஒரு கட்டுரையை ரெடி செய்தேன் என்று சொன்னேனே, அதில் உள்ளது அத்தனையும் அவரிடம் கொட்டிவிட்டிருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். அவரும் தன் மகிழ்ச்சிகளை என்னோடு பகிர்ந்துகொண்டார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசியிருப்போம்.

முடிவில், "வாங்கய்யா ஒரு நாள் நம்ம வீட்டுக்கு, நிதானமா பேசலாம்!" என்று அழைப்பு விடுத்தார்.

அந்த இனிய நாள் ஏப்ரல் 9-ம் தேதியன்று எனக்கு வாய்த்தது.

** ** **

'இமயத்துடன்...' என்கிற தலைப்பில் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாற்றை டி.வி. சீரியலாகத் தயாரித்துக்கொண்டு இருக்கிறார் இயக்குநர் விஜய்ராஜ். அதற்காக, டி.எம்.எஸ். பழைய நடிகர் ஸ்ரீகாந்த்தைச் சந்தித்துப் பேசப் போயிருந்தார். அதை முடித்துக்கொண்டு மதியம் 12 மணிக்கு டி.எம்.எஸ். வீட்டுக்கு வருவார், அப்போது சந்திக்கலாம் என்று ஏற்பாடானது.

அதன்படியே, ஸ்ரீகாந்த் வீட்டில் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய்ராஜ் பரசுராமனுக்குப் போன் செய்ய, உடனே நாங்கள் கிளம்பினோம். பரசுராமனுக்குப் பழக்கமான ஒரு ஆட்டோவில் மயிலாப்பூர் போய், டி.எம்.எஸ். வீட்டு வாசலில் இறங்கினோம். வெளியே வரவேற்பறையிலேயே காத்திருந்தார். (அது அவரின் மகன் பால்ராஜ் வீடு. பக்கத்து வீடுதான் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் வீடு! நேர் எதிரே நாலு மாடிக் கட்டடம் ஒன்று உள்ளது. டி.எம்.எஸ்ஸுக்குச் சொந்தமான அதில், முதல் மாடியில் குடியிருக்கிறார் டி.எம்.எஸ். மற்ற மூன்றையும் வாடகைக்கு விட்டிருக்கிறார்.)

எங்களைக் கண்டதும், "வாங்கய்யா..! நல்லா இருக்கீங்களா?" எனக் கனிவோடு, மாறாத அதே பழைய கம்பீரக் குரலில் வரவேற்று உபசரித்தார். இவருக்கு வயது எண்பத்தாறா? நம்பவே முடியவில்லை.

அவருக்காக நான் வாங்கிக்கொண்டு போயிருந்த போர்ன்விடா பாட்டிலை அவரிடம் கொடுத்துவிட்டு, இன்னொரு சிறிய பார்சலையும் கொடுத்தேன்.

"என்னது இது... அல்வாவா?" என்று ஒரு சிரிப்புடன் கேட்டார். (டி.எம்.எஸ்ஸுக்கு டயபடீஸ் பிராப்ளம் உண்டு!)

"இல்லை சார்! ஓர் அழகான முருகன் சிலை!" என்றேன். அப்புறம், பிளாகில் ஏற்றுவதற்காக நான் ரெடி செய்து வைத்திருந்த கட்டுரையைச் சற்றே வாக்கிய மாற்றங்கள் செய்து, அவருக்கான கடிதமாக மாற்றி ஒரு பிரின்ட்-அவுட் எடுத்து வைத்திருந்தேன். அதை ஒரு கவரில் போட்டு அவர் கையில் கொடுத்தேன்.

அதற்குப் பிறகு பேசத் தொடங்கினோம். இல்லையில்லை... சரளமாகப் பேசத் தொடங்கினார் டி.எம்.எஸ். நான் வியப்புடன், பிரமிப்புடன் கேட்டுக்கொண்டு இருந்தேன். எண்பத்து ஆறு ஆண்டுச் சரித்திரத்தையே புரட்டிப் பார்க்கிற உணர்வு எழுந்தது அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தபோது! பலப்பல விஷயங்கள் பற்றிப் பேசினார். எம்.ஜி.ஆர்., பற்றி, சிவாஜி பற்றி, அன்றைய கால கட்டத்தில் பாடகர்களின் நிலை பற்றி, தான் கஷ்டப்பட்டு முன்னேறி வந்தது பற்றி என மடை திறந்த வெள்ளம் போல் பேசிக்கொண்டே இருந்தார்.

இடையிடையே அவர் மகன் பால்ராஜ் மெதுவாகக் குறுக்கிட்டு, "அப்பா! டயமாச்சு. சாப்பிட வரீங்களா?" என்று கேட்டுக்கொண்டு இருந்தார். "ம்... இதோ வரேன்!" என்று சொல்லிவிட்டு, மறுபடியும் எங்களோடு உற்சாகமாகப் பேசத் தொடங்கிவிடுவார் டி.எம்.எஸ்.

லண்டனில் பாராட்டு விழா, மலேசியாவில் பாராட்டு விழா, கோவையில் பாராட்டு விழா, நடுவில் கலைஞர் தொலைக்காட்சிக்காகத் தயாராகி வரும் அவரது இசைப் பயணத் தொடருக்கான ஒலி-ஒளிப்பதிவு என இத்தனை வயதிலும் ஓர் இளைஞனுக்கே உரிய துடிப்போடு பரபரப்பாக, பம்பரமாகச் சுழன்றுகொண்டு இருக்கிற டி.எம்.எஸ்., அந்த அனுபவங்களையெல்லாம் எங்களோடு பகிர்ந்து கொண்டார்.

"சமீபத்துல மலேசியாவுல எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினாங்க. கூட்டமான கூட்டம். நான் மேடை ஏறினப்போ, பூக்களை மழையாகத் தூவி, 'மாபெரும் சபைதனில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழவேண்டும்'னு என் பாட்டை ஒலிக்கவிட்டு, எனக்கு ஆளுயர மாலை போட்டு, ரொம்பப் பெருமைப்படுத்தினாங்க. அங்கே உள்ள இளைஞர்கள் இன்னமும் என் பாட்டை ரசிச்சுக் கேக்கறாங்கய்யா!" என்று ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு சொல்லிப் பெருமைப்பட்டார்.

"கிருஷ்ண விஜயம் என்கிற படத்துலதான் நான் முதன்முதல்ல பாடினேன். 'ராதே நீ என்னை விட்டு ஓடாதேடி...' என்கிற அந்தப் பாடலுக்கு இப்போ வயசு 62" என்று கண்கள் சுருக்கிச் சிரித்தார்.

"மதுரையிலதான் நான் பிறந்தேன். அங்கே உள்ள சௌந்தரராஜப் பெருமாளுக்கு எங்க அப்பா முப்பது வருஷம் சேவை பண்ணியிருக்கார். அவர் மேல உள்ள பக்தியினாலதான் எனக்கு சௌந்தரராஜன்னு பேர் வெச்சார். அந்தக் கோயில்லயே ஒரு ஓரமா பெஞ்ச்சுகள் போட்டுப் பசங்களுக்கு இந்திப் பாடம் நடத்துவேன். மத்த நேரங்கள்ல சாதகம் பண்ணுவேன். மேஜை மேல கவிழ்ந்து படுத்துக்கிட்டுப் பாடுவேன். என் குரல் மேஜையில பட்டுத் திரும்பி எனக்கே கேட்கும். அதை வெச்சு என் குரலை ட்யூன் பண்ணிப் பாடப் பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

ஆரம்பத்துல எம்.கே.டி. பாகவதர் மாதிரி பாடிக்கிட்டிருந்தேன். ஆனா சீக்கிரமே, 'இப்படியே பாடிட்டிருந்தா வேலைக்காகாது. நமக்குன்னு ஒரு ஸ்டைலைப் பிடிக்கணும்'னு முடிவு பண்ணி குரலை ஏத்தி இறக்கி சில மேஜிக்குகள் பண்ணினேன். எம்.ஜி.ஆர்., சிவாஜின்னு அந்தந்த நடிகர்களுக்கு ஏத்த மாதிரி பாடி, மக்கள் மனசுல இடம் பிடிச்சேன்" என்று சொன்னவர், சற்று இடைவெளி விட்டு,

"இன்னிக்கும் நான் எங்கே போனாலும் எம்.ஜி.ஆர்., சிவாஜி இவங்க ரெண்டு பேருக்கும் பாடினதால்தான்யா இவ்வளவு பேரும் புகழுமா இருக்கேன்னு அவங்களை ரொம்பப் பெருமைப்படுத்திதான் சொல்லுவேன். ஆனா அன்னிக்கு, சினிமாத் துறையில பாடகன் ஒரு பொருட்டே இல்லீங்க. கிள்ளுக்கீரைதான். 'பாவ மன்னிப்பு' படத்தின் வெற்றி விழா. மேடையில அதுல நடிச்ச நடிகர்கள், நடிகைகள்னு ஒவ்வொருவரையா கூப்பிட்டு கௌரவிச்சுக்கிட்டு இருக்காங்க. நானும் மேடையில ஒரு மூலையில உட்கார்ந்திருக்கேன். என் பேரைக் கூப்பிடுவாங்களான்னு என் காதுகள் ஆவலா காத்துக்கிட்டு இருக்கு. யார் யாரையோ கூப்பிடறாங்க. பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறாங்க. என் பேரை ம்ஹூம்... கடைசி வரைக்கும் கூப்பிடவே இல்லியே? ஏன்யா, தெரியாமதான் கேக்கறேன்... மத்தவங்களுக்கு எல்லாம் பத்து ரூபா விருது கொடுத்து கௌரவிச்சீங்களே... அந்தப் படத்துல அஞ்சு பாட்டு பாடியிருக்கேனே, அதுக்காகவாவது எனக்கு ஒரு ஒண்ணரையணா விருது கொடுக்கக்கூடாதா? கொடுக்கலையே சார்! நானும் அடிபட்டு அடிபட்டு, 'போங்கடா, நீங்களும் உங்க விருதும்'னு விட்டுட்டேன். மக்கள் தங்கள் மனசுல எனக்கு ஒரு இடம் கொடுத்திருக்காங்கய்யா... அதுதான் எனக்குப் பெரிய விருது!" என்றார்.

அவரது ஆதங்கம் எனக்குப் புரிந்தது. உண்மைதான்! உண்மையான கலைஞர்களை அவர்கள் வாழும் காலத்தில் நாம் எங்கே மதித்திருக்கிறோம்... கௌரவப்படுத்தியிருக்கிறோம்?!

ஆனால், தமிழ் மக்கள் மிக மேன்மையானவர்கள். இன்னார் நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறார், இவர் வாங்கவில்லை என்றெல்லாம் பார்த்து அவர்கள் ஒருவருக்குத் தங்கள் மனதில் இடம் கொடுப்பதில்லை. ஒருவரின் உண்மையான திறமைக்குத் தலைவணங்குகிறார்கள்; போற்றுகிறார்கள்; கொண்டாடுகிறார்கள்.

கலைஞர்களுக்கு விருது கொடுப்பதில்தான் வடக்கா, தெற்கா, கிழக்கா, மேற்கா என்று பாலிடிக்ஸ் நடக்கிறது. அப்படியே நம் ஊர் ஆளுக்குத் தப்பித் தவறி ஒரு விருது கிடைக்கும்போலிருந்தாலும், பொறாமைக் காய்ச்சலில் அதை நம்மவர்களே புகுந்து கெடுத்துவிடுவார்களே!

போதாக்குறைக்கு ஜேசுதாஸ் பற்றி, இளையராஜா பற்றி, எஸ்.பி.பி., டி.ராஜேந்தர் பற்றியெல்லாம் டி.எம்.எஸ். அடிக்கடி ஏதாவது விமர்சனம் செய்து, அவை பத்திரிகைகளில் பிரசுரமாகி அவருக்குக் கெட்ட பெயரைச் சம்பாதித்துத் தந்திருக்கின்றன. நானும் அப்படியான செய்திகளைப் படித்திருக்கிறேன். நேரில் பார்த்துப் பேசும்போதும் டி.எம்.எஸ். அதே போலத்தான் விமர்சனம் செய்து பேசினார். ஆனால், பத்திரிகைகளில் அவற்றைப் படித்ததற்கும், நேரில் பேசிக் கேட்டதற்கும் ஒரே ஒரு வித்தியாசம்... பத்திரிகைகளில் டி.எம்.எஸ்ஸின் மற்றவர் மீதான விமர்சனங்களைப் படித்தபோது (அவற்றில் எனக்கும் உடன்பாடு என்றாலும்), 'இவர் ஏன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேனென்கிறார்! ஏதாவது சொல்லிக் கெட்ட பெயர் வாங்கிக் கொள்கிறாரே!' என்று நினைத்து வருந்தியிருக்கிறேன். ஆனால், நேரில் அவர் அதையே பேசிக் கேட்டபோது, 'இவ்வளவு குழந்தையாக இருக்கிறாரே! ஒரு பத்திரிகைக்காரன் வந்திருக்கிறேன். (ஆனால், நான் என்னவோ அவரின் ரசிகனாகத்தான் போயிருந்தேன். பத்திரிகைக்காரனாக அல்ல!) என்னிடம் என்ன பேசலாம், என்ன பேசக்கூடாது என்று தெரியாமல் எதை எதையோ பேசுகிறாரே! இதையெல்லாம் அப்படியே பத்திரிகையில் போட்டால் என்னத்துக்காகிறது!' என்று தோன்றியது.

உண்மையில் டி.எம்.எஸ். ஒரு கர்வியாகவோ, அகந்தை பிடித்தவராகவோ, மண்டைக்கனம் கொண்டவராகவோ எனக்குத் தோன்றவில்லை. கள்ளங்கபடு இல்லாத ஒரு குழந்தை போலத்தான் தோன்றினார். ஒரு குழந்தை, பெரிய மீசை வைத்துக்கொண்டு இருக்கும் ஒருவரைப் பார்த்து, 'ஐயே! நீ நல்லாவே இல்லே. பூச்சாண்டி!' என்று சொன்னாலோ, 'உன் படம் ஆய்! என் படம்தான் பட்டு!' என்று சொன்னாலோ, நமக்கு அந்தக் குழந்தை மீது கோபம் வருமா? அப்படித்தான் டி.எம்.எஸ்ஸும்! யாரிடம் என்ன பேசவேண்டும் என்று தெரியாமல், தன் மனதில் படுவதை மறைக்கத் தெரியாமல் எல்லாரிடமும் பளிச் பளிச்சென்று கொட்டிவிடுகிறார். உண்மையில் அவருக்கு தான் என்கிற அகம்பாவமோ, மற்றவர்களை மட்டம் தட்டும் புத்தியோ நிச்சயமாக இல்லை. பரபரப்பாகச் செய்தி போடவேண்டும் என்கிற ஆசையில், அவர் சொல்வதைப் பத்திரிகைகள் அப்படியப்படியே வெளியிட்டுவிட்டதில், மற்றவர்களின் கண்களுக்கு அவர் கர்வியாகிவிட்டார்.

அவரே பேச்சின் நடுவே சொன்னார்... "நான் ஒரு குழந்தைய்யா! யாருகிட்டே என்ன பேசணும்னு எனக்குத் தெரியமாட்டேங்குது. எதையாவது சொல்லிடறேன். அவங்களும் அதை அப்படியே டி.எம்.எஸ். இப்படிச் சொன்னார், அப்படிச் சொன்னார்னு கொட்டை எழுத்துல போட்டுடறாங்க. ரெண்டு பக்கத்துலயும் மனக் கசப்பு வளர்ந்துடுது!"

உண்மைதான். டி..எம்.எஸ். 86 வயதுக் குழந்தை!

"நான் பாட வந்த காலத்துல எனக்கு மாச சம்பளம் அம்பது ரூபா! 'அடிமைப் பெண்' படம் வரைக்கும் நான் ஒரு பாட்டுக்கு வாங்கின தொகை 500 ரூபாய்தான்னா நம்புவீங்களா? அப்பெல்லாம் பின்னணிக் குரல், இசைக் கருவிகள்னு எல்லாம் ஒரே டிராக்குல பதிவாகும். இப்போ மாதிரி தனித்தனியா எடுத்துக் கோத்துக்க முடியாது. மூச்சைப் புடிச்சுக்கிட்டுப் பாடுவேன். பாட்டு முடியிற சமயத்துல, கூடப் பாடுறவங்களோ, இசைக்கருவி வாசிக்கிறவங்கள்ல யாராவதோ தப்பு பண்ணிட்டா போச்சு..! மறுபடியும் முதல்லேர்ந்து பாடியாகணும். இது மாதிரி ஏழெட்டு தடவை பாட வேண்டியிருக்கும். ஒரு பாட்டுப் பாடத்தானே 500 ரூபா? நான் ஒழுங்காத்தானே பாடினேன்? நீங்க பண்ணின தப்புனாலதானே ஏழு தடவை பாடினேன்? அப்ப எனக்கு ஏழு 500 ரூபாய் தரணுமா, இல்லையா? கேக்கத் தெரியலேய்யா அப்ப எனக்கு. கொடுத்ததை வாங்கிட்டுப் போய்ப் பாடிக் கொடுப்பேன்!" என்கிற உதடு பிதுக்கிக் குழந்தை போல் முறையிடும் டி.எம்.எஸ்ஸுக்கு அடிமனதில் உள்ளூர இன்னமும் அந்த ஆதங்கம் இருப்பதில் வியப்பில்லை... 'என்னதான் உயிரைக் கொடுத்துப் பாடினாலும், கதாநாயக நடிகர்களோ திரையுலகமோ தன்னைச் சரியாகக் கௌரவிக்கவில்லையே!'

அதற்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இதுவரை எந்தப் பாடகருக்கும் இப்படி ஒரு கௌரவம் கிடைத்ததில்லை என்கிற விதமாக, டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கைச் சரிதத்தை 'இமயத்துடன்...' என்கிற தலைப்பில் டி.வி. சீரியலாக எடுத்துக்கொண்டு இருக்கிறார் டைரக்டர் விஜய்ராஜ். டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகரான இவர் தனக்கு வந்த சினிமா வாய்ப்புகளையெல்லாம் உதறிவிட்டு, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இதில் முழு மூச்சாக இறங்கியிருக்கிறார்.

"டி.எம்.எஸ். ஐயா 'பெண்ணரசி'ங்கிற படத்துல முதன்முறையா ஒரு சின்ன வேஷத்துல தலைகாட்டியிருக்கார்னு கேள்விப்பட்டேன். தாடியும் மீசையுமா பிச்சைக்காரன் போல பாட்டுப் பாடிட்டு நடந்து வருவார். அந்த நெகடிவ் இங்கே எங்கே தேடியும் கிடைக்கவே இல்லே. ரொம்ப முயற்சி பண்ணினதுல மலேசியாவுல ஒரு இடத்துல இருக்குன்னு தெரிஞ்சுது. உடனே ஓடினேன். அரும்பாடுபாட்டு அந்த க்ளிப்பிங்ஸைக் கொண்டு வந்தேன்.

வெறுமே ஐயாவைப் பேச வெச்சு, 'அன்னிக்கு இன்னாருக்காக இப்படிப் பாடினேன், இப்படி ஒரு கேரக்டர்ல நடிச்சேன்'னு சொல்ல வெச்சு எடுத்துடலாம்தான். ஆனா, அது சுவாரஸ்யமா இருக்குமா? 'பெண்ணரசி'யில நடிச்சிருக்கார்னு சொன்னா, அந்தப் படத்தை ஜனங்களுக்குக் காண்பிச்சாதானே வெயிட்டா இருக்கும்! இப்படி ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மூலையிலே இருக்க, ஓடி ஓடிச் சேகரிச்சதுல வருஷங்கள் ஓடிப்போச்சு! மாடர்ன் தியேட்டர்ஸ், பட்சிராஜா பிலிம்ஸ்னு அந்தந்த இடங்களுக்கே ஐயாவை அழைச்சுச்கிட்டுப் போய்ப் படமாக்கியிருக்கோம். பட்சிராஜா பிலிம்ஸ் இருந்த இடமெல்லாம் அப்போ லீஸுக்கு எடுத்திருந்த இடங்கள்தான். இப்போ அதன் உள்ளே யாருமே போகமுடியாது. வெறுமே வெளியே இருக்கிற போர்டைத்தான் பார்க்கமுடியும். அப்படியான இடங்கள்ல கூடக் கஷ்டப்பட்டுப் போராடி அனுமதி வாங்கிப் படப்பிடிப்பு நடத்தியிருக்கோம். என் மனசுக்குத் தொண்ணூறு சதவிகிதம் திருப்தியா வந்திருக்கு" என்றார் விஜய்ராஜ்.

"ஒரு சரித்திரத்தைப் பதிவு செய்கிற அருமையான காரியம் இது! ஒரு சகாப்தத்தைப் பதிவு செய்கிற பெரிய வேலை! பெரிய விஷயம். கோடிக்கணக்கான டி.எம்.எஸ். ரசிகர்கள் சார்பில், உங்கள் முயற்சி பெரு வெற்றி அடையணும்னு வாழ்த்தறேன்" என்றேன்.

கலைஞர் மு.கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி டி.எம்.எஸ்ஸின் தீவிர ரசிகர். விஜய்ராஜ் இப்படி ஒரு முயற்சியில் இருப்பதை அறிந்ததும் உடனே கூப்பிட்டு, 'நல்ல காரியம்! பிரமாதமா எடுங்க. கலைஞர் டி.வி-யில் போட ஏற்பாடு பண்றேன்'னு உற்சாகம் கொடுத்திருக்கிறாராம். டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகன் என்கிற முறையில் அழகிரிக்கு என் நன்றிகளை மானசிகமாகத் தெரிவித்துக் கொண்டேன்.

'சாப்பாட்டு நேரமாக இருக்கிறது. பார்த்துவிட்டு, மரியாதைக்குச் சில நிமிடங்கள் பேசிவிட்டுக் கிளம்பிவிடலாம்' என்றுதான் நினைத்துக்கொண்டு வந்தேன். ஆனால், 12 மணிக்கு ஆரம்பித்த உரையாடல், இரண்டரை மணிக்குதான் முடிந்தது. சற்றும் சளைக்கவில்லை டி.எம்.எஸ்.! விட்டால் இன்னும் இரண்டுமணி நேரம் கூட உற்சாகமாகப் பேசுவார் போல இருந்தது. எனக்குமே ஆசைதான்! ஆனால், ஒரு பெரியவரை பசி வேளையில் சாப்பிட விடாமல் பேசிக்கொண்டு இருக்க, மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.

"மதுரையில எனக்குப் பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்போறதா சொல்லியிருக்கார் அழகிரி. அதுக்கப்புறம் இந்த சீரியல், கலைஞர் டி.வி-யில் ஒளிபரப்பாகும். ஆண்டவன் என் சவுண்ட் பாக்ஸை இப்பவும் ஆரோக்கியமா வெச்சிருக்கான். அதான், இன்னும் பாடிக்கிட்டிருக்கேன். அதைக் கேட்டு என் ரசிகர்கள் சந்தோஷமா வாழ்த்துறாங்க. அந்த வாழ்த்துதான்யா என்னை நோய் நொடியில்லாம காப்பாத்திக்கிட்டு வருது!" என்று நெகிழ்ச்சியாகச் சொல்லி வழியனுப்பி வைத்தார் டி.எம்.எஸ்.

பிரியாவிடை பெற்றுக் கிளம்பினோம்.

- ரவிபிரகாஷ்.
பின்குறிப்பு:

டி.எம்.எஸ் அவர்களைப் பார்த்துப் பேசிவிட்டு வந்ததற்கு (அது ஒரு புதன்கிழமை) மறுநாளிலிருந்து, ஒரு அவசர வேலை காரணமாக ஒரு வார காலத்துக்கு நான் விடுமுறையில் இருந்தேன்.

இரண்டாம் நாள், வெள்ளிக்கிழமை காலையிலிருந்து என் மொபைல் அடித்துக்கொண்டே இருந்தது. காலையில் இரண்டு மூன்று தடவை, பிற்பகலில் இரண்டு மூன்று தடவை, மாலையில் இரண்டு மூன்று தடவை என ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து போன் ஒலித்துக்கொண்டே இருந்தது.

பொதுவாக, என்னோடு அவசர அவசியமாகத் தொடர்புகொள்ள வேண்டியவர்கள் அனைவரின் எண்களையும் என் மொபைலில் ஸ்டோர் பண்ணி வைத்திருப்பேன். அப்படியான எண்கள் ஒலித்தால் மட்டுமே மொபைலை எடுத்துப் பேசுவேன். இதர எண்கள் வந்தால், பேசமாட்டேன். விடுமுறையில் இருந்தால், இதுதான் என் வழக்கம்.

அன்றும் அப்படித்தான், எடுக்காமல் இருந்துவிட்டேன்.

சாயந்திரம் ஆறு மணி வாக்கில் டைரக்டர் விஜய்ராஜ் பேசினார். "சார், டி.எம்.எஸ். ஐயா அவங்க காலைலேர்ந்து உங்களோடு பேசணும்னு உங்க மொபைலுக்குத் தொடர்பு கொண்டாராம். 'ரிங் போகுது, எடுக்கவே இல்லையே?'னு இப்போ என் கிட்டே கேட்டார். அவரோட நம்பர் தரேன், பேசறீங்களா?" என்று டி.எம்.எஸ். அவர்களின் மொபைல் எண்ணைக் கொடுத்தார்.

அவசரமாக வாங்கி, கால் ரெஜிஸ்டரில் பதிவாகியிருந்த மிஸ்டு கால் எண்ணோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். இரண்டும் ஒன்று!

எனக்குச் சொரேல் என்றது. 'ஐயோ! என் அபிமான டி.எம்.எஸ். அவர்கள் என்னோடு பேச விரும்பி, நான் எடுக்காமல் இருந்துவிட்டேனே!' என்று என் புத்தியை நானே நொந்துகொண்டு, உடனடியாக டி.எம்.எஸ்ஸுக்குப் போன் போட்டேன்... எதற்காக என்னோடு பேச விரும்பியிருப்பார் என்று யோசித்தபடியே! ஒருவேளை, 'வழக்கம்போல மனம் திறந்து எல்லாவற்றையும் கொட்டிவிட்டேன். எக்குத்தப்பாக பத்திரிகையில் எதுவும் போட்டுடாதேய்யா!' என்று கேட்பதற்காக இருக்குமோ?

எதிர்முனையில் ரிங் போய் எடுக்கப்பட்ட மறுகணம், நான் பேசத் தொடங்குவதற்கு முன்பாகவே, "ரவிபிரகாஷய்யா... வணக்கமய்யா!" என்று டி.எம்.எஸ். முந்திக்கொண்டார்.

"ஐயா! எப்படி நான்தான் பேசறேன்னு..." என்றேன்.

"உங்க நம்பரைத்தான் என் மொபைல்ல ஸேவ் பண்ணி வெச்சிருக்கேன்ல! நீங்களும் இப்போ நமக்கு வேண்டியவராயிட்டீங்கள்ல?" என்றார். தொடர்ந்து...

"ஒண்ணுமில்லே! நீங்க எழுதுன லெட்டரைப் படிச்சேன். என் பாடல்களைப் பத்தி சிலாகிச்சு, என்னமா எழுதியிருக்கீங்க! என் பாடல்களை எவ்வளவு அனுபவிச்சுக் கேட்டிருந்தா, இவ்வளவு பெரிய லெட்டரை எழுதியிருப்பீங்க! நீங்க போட்டிருக்கிற லிஸ்ட்ல இருக்கிற அதே பாடல்கள்தான் எனக்கும் பிடிக்கும். அதைச் சரியா வரிசைப்படுத்தி எழுதியிருக்கீங்க. என் மேல எவ்வளவு அன்பும் அபிமானமும் வெச்சிருக்கீங்க! உங்களை மாதிரியான ரசிகர்களை அடைஞ்சதுதான்யா இந்தப் பிறவியிலே நான் செஞ்ச பாக்கியம்! அதுக்கு நன்றி சொல்லத்தான்யா போன் பண்ணினேன்!" என்றார் நெகிழ்ச்சியான குரலில்.

இவரா கர்வி? இவரா அகம்பாவி? மதுரை சௌந்தரராஜப் பெருமாள் மீது சத்தியமாகச் சொல்லுவேன், 'நிச்சயமாக இல்லை!'

சுஜாதாவும் நானும்

ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசையில் சுஜாதா பற்றியும் எழுதுவதாக இருந்தேன். ஆனால், அந்த நிகழ்வு சந்தோஷமான ஒன்றாக அமையாமல், திடுதிப்பென ஒரு துக்ககரமான சம்பவத்தில் தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

கடந்த 27-02-2008 புதன்கிழமை அன்று காலையில், விகடன் ஆசிரியர் திரு.அசோகன் எனக்குப் போன் செய்து, "எழுத்தாளர் சுஜாதா உடல்நிலை சரியில்லாமல், அப்போலோவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். முடிந்தால் ஒரு நடை போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்" என்றார்.

அலுவலகம் போனதும், அன்றைக்கு முடிக்க வேண்டிய இதழுக்கான ஃபாரம் லிஸ்ட் போட்டுக் கொடுத்துவிட்டு, நான் சுஜாதாவைப் பார்க்கக் கிளம்பினேன். வெறுங்கையாகப் போகவேண்டாம் என்பதற்காக ஒரு பெரிய ஹார்லிக்ஸ் பாட்டிலை வாங்கிக்கொண்டு போனேன். விகடன் எடிட்டோ ரியல் அலுவலகத்திலிருந்து பொடிநடை தூரத்தில் அப்போலோ.

ஆஸ்பத்திரியின் மெயின் பில்டிங்குக்குப் போனேன். சுஜாதாவின் இயற்பெயரான ரங்கராஜன் என்ற பெயரைச் சொல்லி, விசாரித்தேன். பக்கத்துக் கட்டடத்தில் முதல் மாடி, 48-ம் எண்ணுள்ள ஐ.சி.யு அறையில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே போனதும், ஒரு நர்ஸ் மறித்து, "வெயிட்டிங் ஹாலில் டோ க்கன் வாங்கிக்கொண்டு வாருங்கள். அப்போதுதான் அனுமதிக்க முடியும்" என்றாள். அதே பில்டிங்கில் சுற்றிச் சுற்றித் தேடியும் வெயிட்டிங் ஹால் கிடைக்காமல், மீண்டும் ஒரு ஊழியரிடம் கேட்க, அவர் திரும்பவும் என்னை மெயின் பில்டிங்குக்குப் போகச் சொன்னார். அங்கே போய் விசாரிக்க, "நேரா போய் லெஃப்ட்டு!" நேரா போய் லெஃப்டை அடைந்து விசாரிக்க, "உள்ளே போய் ஃபர்ஸ்ட் ரைட்டு!" என அங்கங்கே என்னை மடைமாற்றி, குறிப்பிட்ட வெயிட்டிங் ஹாலுக்குக் கொண்டு சேர்த்தார்கள்.

அங்குள்ள வரவேற்பாளரிடம் என் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, விஷயம் சொல்லி டோ க்கன் கேட்டேன். "சார், டாக்டர்ஸ் ரவுண்ட்ஸ் வந்துட்டிருக்காங்க. அவங்க கீழே இறங்கினப்புறம் நீங்க போகலாம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!" என்றார். டீலக்ஸ் பஸ்ஸின் சொகுசு நாற்காலிகள் போல் போடப்பட்டிருந்த அந்த ஹாலில், ஒன்றில் வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, மூலையாக வைக்கப்பட்டு இருந்த டி.வி-யில் ஓடிக்கொண்டு இருந்த 'சூர்யவம்சம்' தொடரைப் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். என் பெயர் அழைக்கப்படுமா என என் காதுகள் காத்திருந்தன.

முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, அழைக்கப்பட்டேன். வரவேற்பாளர் இன்டர்காமில், "தேவகி! ரவிபிரகாஷ்னு ஒருத்தரை அனுப்பறேன். அவரை ஃபர்ஸ்ட் ஃப்ளோர் 48-ம் ரூமுக்கு அனுப்புங்க" என்றுவிட்டு, "போங்க சார்!" என்றார். "டோ க்கன் சார்?" "தேவையில்லை. அதான், போன்ல சொல்லிட்டேனே!"

போனேன். மறுபடி டோ க்கன் கேட்டாள் அந்த நர்ஸ். "நீங்கதானே தேவகி?" என்றதும், சிரித்துக்கொண்டே, "நீங்களா? போங்க" என்று அனுமதித்தாள்.

ஒரே மாடிக்கு லிப்டில் சென்றிருக்க வேண்டியதில்லைதான். அப்போது இருந்த குழப்பத்தில் ஒன்றும் புரியவில்லை. காத்திருந்து, லிப்ட் வந்ததும் ஏறிச் சென்றேன். முதல் மாடியில் வெளிப்பட்டு, தேடித் தேடி, ஐ.சி.யு-வை அடைந்து, 28, 36, 42, 34, 17 என மாறி மாறி இருந்த அறைகளில் குழம்பி, அங்கிருந்த ஒருவரை விசாரிக்க, "இதோ!"
உள்ளே நுழைந்தேன். இருவர் அட்மிட் ஆகும் அறை. முதல் பிளாக் காலியாக இருந்தது. கடந்து உள்ளே போனேன். ஹா... சுஜாதா!

சின்ன வயதில் என்னைத் தன் எழுத்தால் அசர வைத்த சுஜாதா. "இவன் உங்க பரம ரசிகன். உங்க எழுத்துன்னா இவனுக்கு உசுரு!" என்று சாவி அவர்களால் நான் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட சுஜாதா. "எப்படிக் கூட்டினாலும் விடை ஒரே மதிப்பில் வர்றதுக்கு இப்படி ஒரு சுலபமான வழி இருக்கா? கிரேட்!" என்று வியந்து, தனது 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதிய சுஜாதா.

சலனமற்றுத் தலைசாய்த்துப் படுத்திருந்தார். தலை மட்டும்தான் வெளியே தெரிந்தது. உடம்பு எங்கே இருக்கிறது என்று புரியாமல் மேலே துணிகளும் போர்வையும் மூடியிருந்தன. லாலி லாலியாகத் தொங்கும் வயர்களின் நடுவே படுத்திருக்கும் அவரைப் பார்க்க மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அருகில் இருந்த இரண்டு நர்ஸ்களிடம், அவரது நிலை பற்றிக் கேட்டேன். "ப்ச்... நோ ஹோப்! டயலிசிஸ் நடந்துட்டிருக்கு. ஹார்ட் பீட் டவுன் ஆயிருச்சு. வென்டிலேட்டர் வெச்சிருக்கு. தெரியலே... இன்னிக்கோ நாளைக்கோ, ஒரு வாரமோ!'"

"சார் யாரு தெரியுமில்லே... வேர்ல்ட் ஃபேமஸ் ரைட்டர்!" என்றேன்.

"தெரியும். நாங்களும் இவரோட ஃபேன்ஸ்தான்!" - இருவரின் முகங்களிலும் ஒரு வறட்சிப் புன்னகை.

இதே கோலத்தில், இதே அப்போலோவில் என் குரு சாவி அவர்களைப் பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது.

நர்ஸிடம் சுஜாதாவின் மனைவி தங்கியிருக்கும் அறை எண்ணைக் கேட்டுக்கொண்டு வெளியே வந்தேன். கண்டுபிடித்து, உள்ளே போனேன். ஐந்தாறு பெண்மணிகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார். கூடவே, உயரமாக ஒரே ஒரு ஆண். அவர் சுஜாதாவின் மகனாக இருக்க வேண்டும் என யூகித்தேன்.

சுஜாதாவுக்காக வாங்கி, அவரிடமே கொடுத்து, உடல்நிலை விசாரிக்கலாம் என்ற எண்ணத்தில் வாங்கி வந்திருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை, சுஜாதாவின் மனைவி சுஜாதாவிடம் கொடுத்து, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். "தெரியுமே! ரெண்டு மூணு தரம் வீட்டுக்கு வந்திருக்கீங்களே!" என்றார். அதன்பின் சம்பிரதாய விசாரிப்புகள்.

போன வியாழக்கிழமையே, நிமோனியா என அப்போலோவில் கொண்டு வந்து சேர்த்தார்களாம். இரண்டு மூன்று நாளில் குணமாகி, வீட்டுக்குப் போய்விடலாம் என்றிருந்த நிலையில், மீண்டும் உடல்நிலை மோசமாகி, டயலிசிஸ் செய்யவேண்டி வந்து, நேற்று (செவ்வாய்) மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வென்டிலேட்டர் வைத்து, உசிர் ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்றார். "யாருக்குமே இன்னும் சொல்லலை. சங்கருக்குக்கூடத் தெரியாது. (டைரக்டர் ஷங்கரைச் சொல்கிறார் என்பது லேட்டாகத்தான் புரிந்தது.) யாருக்கும் சொல்லவேண்டாம்னுட்டார். 'உடம்பு சரியாகி வீட்டுக்கு வந்துடுவேன். நான் அப்போலோல சேர்றதும், வீடு திரும்பறதும் என்ன புதுசா? வீணா பிரஸ்ஸுக்கெல்லாம் சொல்லி காப்ரா பண்ணவேண்டாம்'னார். அதான் சொல்லலை. நாங்களே அதான் நினைச்சுண்டிருந்தோம். திடும்னு நேத்துலேர்ந்து இப்படி ஆயிடுத்து. ரொம்ப நெருங்கிய சொந்தக்காராளுக்கு மட்டும் சொன்னேன். இனிமேதான் ஒவ்வொருத்தருக்கா சொல்லணும்" என்றார். மாமிக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. ஆறுதல் சொல்லவேண்டியது மாமிக்கு மட்டும்தானா? என்னைப் போன்ற லட்சக்கணக்கான சுஜாதாவின் வாசகர்களுக்கும் அல்லவா?

பின்பு, சுஜாதாவின் மகனிடம் கைகுலுக்கிப் பேசினேன். இவரிடம் போனில் இரண்டொரு முறை பேசியிருக்கிறேன். அப்படியே சுஜாதாவின் குரல். சுஜாதாவிடமே இந்தக் குரல் ஒற்றுமை பற்றி வியந்து பேசியிருக்கிறேன்.

பின் அனைவரிடமும் விடைபெற்று, வெளியே வந்து, சுஜாதாவின் நிலைமை சீரியஸாக இருப்பது பற்றி அசோகனுக்குப் போன் மூலம் தெரிவித்துவிட்டு, வெளியேற வழி தெரியாமல் தடுமாறி, படிகளில் இறங்கி, அலுவலகம் வந்தேன். எம்.டி-யின் நம்பர் கொடுத்து, அவரிடம் பேசி விஷயத்தைச் சொல்லுங்கள் என்றார் அசோகன்.

பேசினேன். சுஜாதா கிடந்த இருப்பைச் சொன்னேன். போனிலேயே விசும்பி, விசும்பி அழத் தொடங்கிவிட்டார் எங்கள் சேர்மன் பாலசுப்ரமணியன். "நானும் அவரும் ஒரே வயசு. என்னை விட சில மாசங்கள்தான் மூத்தவராக இருப்பார். நாற்பது வருஷத்துக்கும் மேலான நட்பு" என்று மேலே பேசமுடியாமல் நா தழுதழுத்தார். பின்பு, "என் உடம்பு இருக்கிற இருப்புல எங்கேயும் போக முடியலியே! எனக்காக நாளைக்கு மறுபடியும் ஒரு தரம் போய், மாமி கிட்டே நான் ரொம்ப வருத்தப்பட்டேன்னு சொல்லுங்கோ!" என்றார். அதைச் சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் எதிர்முனையில் அடக்கமாட்டாத அழுகை.

அன்று இரவு, பத்து மணிக்கு அசோகனிடமிருந்து போன்... "சுஜாதா எக்ஸ்பயர்ட்!"

எழுத்துலக சகாப்தம் ஒன்று முடிந்துவிட்டது!

***

சுஜாதாவுடனான தொடர்பு எனக்குப் பெருமதிப்புக்குரிய சாவி அவர்களின் மூலம் கிடைத்தது. 'சாவி' வார இதழின் பொறுப்பாசிரியராக நான் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, அடிக்கடி போன் மூலம் தொடர்பு கொண்டு சுஜாதாவிடம் பேசியிருக்கிறேன். கதைகள் கேட்டு வாங்கிப் போட்டிருக்கிறேன்.

ஒரு முறை சிறுகதை எழுதித் தந்தவர், அதற்குத் தலைப்பு எழுத மறந்துவிட்டார். ஃபாரம் முடித்து அனுப்பவேண்டிய கடைசி கட்ட நிலையில், சட்டென அந்தக் கதைக்குத் தலைப்பு வைப்பதையே வாசகர்களுக்கு ஒரு போட்டியாக அறிவித்துவிட்டேன். சிறந்த தலைப்பை சுஜாதாவே தேர்ந்தெடுப்பார் என்று குறிப்பிட்டேன். மறுநாள் காலை, லே-அவுட் செய்த அட்டைகளைப் பார்வையிட்ட சாவி அவர்கள், என் சமயோசித புத்தியைப் பாராட்டினார்.

அன்று காலையே
சுஜாதாவுக்கு போன் செய்து, "கதைக்குத் தலைப்பு எழுத மறந்துட்டீங்க. அதுக்குத் தண்டனையா ரவி உங்களுக்கு ஒரு வேலை வெச்சுட்டான். கதைக்கான தலைப்பை எழுதச் சொல்லி வாசகர்களுக்குப் போட்டி அறிவிச்சிருக்கான். பரிசுக்குரிய சிறந்த தலைப்பை நீங்கதான் செலக்ட் பண்ணித் தரீங்க!" என்றார் சாவி.

"ஆகட்டும்" என்றார் சுஜாதா. "ஆனா, ஆயிரக்கணக்குல விடைகள் வந்தா அத்தனையையும் எனக்கு அனுப்ப வேணாம். ரவியையே தேர்ந்தெடுத்து, அதிகபட்சமா எனக்கு 20, 25 தலைப்புகள் அனுப்பி வெச்சா போறும்!" என்றார். அதன்படியே செய்தேன். அதிலிருந்து ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். கூடவே, சிறுகதைக்குத் தலைப்பு வைக்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு குறிப்பையும் எழுதி அனுப்பியிருந்தார். தலைப்பு மிகச் சுருக்கமாக ஒரு வார்த்தையில் இருந்தால் உத்தமம்; அல்லது, ஓரிரண்டு வார்த்தைகளில் இருக்கலாம். கதையின் தலைப்பு எக்காரணம் கொண்டும் கதையின் சஸ்பென்ஸை வெளிப்படுத்துவதாக இருக்கக்கூடாது என அவர் கொடுத்திருந்த குறிப்புகள் வளரும் எழுத்தாளர்களுக்கு மிகப் பயனுள்ளவை.

அதன்பின், சுஜாதா ஒருமுறை சாவியைப் பார்க்க வந்திருந்தபோது, அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி, "இவன் உங்க தீவிர வாசகன். உங்க எழுத்துன்னா இவனுக்கு உசுரு" என்று சொல்லி, போட்டோ வுக்குப் போஸ் கொடுக்கையில், "ரவி, உனக்குப் பிடிச்ச எழுத்தாளர் சுஜாதா பக்கத்துல வந்து நின்னு போட்டோ எடுத்துக்கோ" என்றார். அந்தப் போட்டோ இன்னும் என்னிடம் மிகப் பத்திரமாக இருக்கிறது.

சாவி பத்திரிகையின் சர்க்குலேஷன் குறைந்துகொண்டே வந்த ஒரு கட்டத்தில், என் எதிர்கால நிலைமை குறித்து பயந்து, குமுதம் வார இதழில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்குமா என்று யோசித்தேன். அப்போது குமுதம் பொறுப்பாசிரியராகச் சேர்ந்து பணியாற்றிக்கொண்டு இருந்தார் சுஜாதா. 'தங்களைப் பார்த்துப் பேசவேண்டும்' என்று அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு அவர் வீட்டுக்குப் போனேன். அவர் அப்போது நுங்கம்பாக்கத்தில் இருந்தார் என்று ஞாபகம்.

"என்ன விஷயம்?" என்று கேட்டார்.

"சொன்னேன். 'சாவி சாரை விட்டு வர மனசில்லை சார் எனக்கு. ஆனாலும், என் எதிர்காலத்தைப் பத்தியும் யோசிக்கணுமே! அவருக்குப் பிறகு நான் எங்கே போவேன்? பத்திரிகை ரொம்பத் தள்ளாடிக்கிட்டிருக்கு. அவரால நடத்த முடியலை. ஏஜென்ட்டுகள் கிட்ட ரொட்டீனா போய் பணம் வசூலிக்கச் சரியான ஆட்கள் இல்லே. சரியா எடுத்து நிர்வாகம் செய்ய ஆள் இல்லை. மிஞ்சிப் போனா இன்னும் ஆறு மாசம், இல்லே ஒரு வருஷம்... அத்தோட பத்திரிகையை இழுத்து மூடிடுவார். அதுக்கப்புறம் நான் எங்கே போய் நிப்பேன்? அதான், உங்க கிட்டே வந்தேன்" என்றேன்.

"சரி, நாளைக்கு குமுதம் ஆபீஸ் வாங்க! எடிட்டரும் (எஸ்.ஏ.பி.) இருப்பார். பேசி முடிவு பண்ணலாம்" என்றார்.

அதன்படியே மறுநாள் காலையில், குமுதம் ஆபீஸ் போனேன். எஸ்.ஏ.பி. அவர்களைச் சந்தித்தேன். உடன் சுஜாதாவும் இருந்தார்.

எஸ்.ஏ.பி. எடுத்த எடுப்பில் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். அவரது குரலும் சுஜாதாவின் குரலைப் போலவே மிக மென்மையாக இருந்தது.

"சுஜாதா சொன்னார் உங்களைப் பத்தி. நீங்கதான் சாவி பத்திரிகையைப் பாத்துக்கறீங்களா?" என்றார்.

"ஆமா சார்!" என்றேன்.

"உங்களோட வேற யார் யாரு வொர்க் பண்றாங்க?"

"ஆசிரியர் குழுனு யாரும் கிடையாது. நான் மட்டும்தான். நான்தான் அங்கே பொறுப்பாசிரியர், உதவி ஆசிரியர் எல்லாமே! லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் ஒருத்தர் இருக்கார். ராணிமைந்தன் முக்கிய நிருபரா மேட்டர்கள் கொண்டு வந்து தருவார். மத்தபடி கதை, கட்டுரை, ஜோக்ஸ் செலக்ஷன் எல்லாமே நான்தான்."

"இப்ப நீங்க அந்த வேலையை விட்டுட்டு இங்கே வந்து சேர்ந்துட்டீங்கன்னா, சாவி யாரை வெச்சு நடத்துவார்?"

"ஒரு வாரம் ராணிமைந்தனை வெச்சு நடத்தலாம். தொடர்ந்து பார்த்துக்க ஆள் வேணும். சாவிக்கும் வயசாச்சு. முடியாது. அதனால..."

"அதனால..?"

"அதிகபட்சம் அடுத்து ரெண்டு வாரம் நடத்துவார். அப்புறம் மூடிடுவார்."

"அப்படியா சொல்றீங்க?" என்றார் எஸ்.ஏ.பி.

"ஆமாம். ஏற்கெனவே பத்திரிகை தள்ளாடிட்டிருக்கு. அதை நிறுத்திட என் விலகல் ஒரு காரணமா இருக்கும்!" என்றேன்.

எஸ்.ஏ.பி. சற்று யோசனையில் மூழ்கினார். பின்பு, "சமீபத்துல ஒரு ஃபங்ஷன்ல சாவி சாரைப் பார்த்தேன். பத்திரிகை நஷ்டத்துல ஓடறது பத்தி சொல்லிட்டிருந்தார். 'நிறுத்திடலாம்னு நினைக்கிறேன்'னு சொன்னார். எனக்குக் கஷ்டமா போச்சு! 'இல்ல சார், பத்திரிகை ரொம்ப நல்லா வந்துட்டிருக்கு. லே-அவுட், எடிட்டிங் எல்லாம் பிரமாதம். வேற சில காரணங்களால அதை உங்களால கொண்டு வர முடியாம இருக்கலாம். அதுக்கெல்லாம் தகுந்த ஆளுங்களைப் போட்டுச் சரி பண்ணிக்குங்க. ஒரு நல்ல பத்திரிகை இப்படி திடும்னு நிக்கிறது எனக்கு வருத்தமா இருக்கு. எனக்காக பல்லைக் கடிச்சுக்கிட்டு 2000-வது ஆண்டு வரைக்குமாவது நீங்க 'சாவி'யைத் தொடர்ந்து நடத்தணும்'னு கேட்டுக்கிட்டேன். 'சரி, முயற்சி பண்றேன்'னார்" என்றவர் சற்று இடைவெளி விட்டு,

"இது நடந்து ஒரு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே நீங்க குமுதத்துல சேர்ந்து, அதனால சாவி சார் வேற வழியில்லாம சாவி பத்திரிகையை நிறுத்தும்படி ஆகுதுனு வெச்சுக்குங்க. அவர் என்னைப் பத்தி என்ன நினைப்பார்? நாளைப் பின்ன என்னை எங்கேயாவது பார்க்கும்போது, 'என்ன சார், 2000 வரைக்கும் நடத்தணும்னு கேட்டுக்கிட்ட நீங்க அடுத்த கொஞ்ச நாள்லயே, பத்திரிகையின் விலா எலும்பு மாதிரி இருக்கிற ரவியை உருவிக்கிட்டீங்கன்னா என்ன அர்த்தம்?'னு கேட்டா, அவருக்கு நான் என்ன பதில் சொல்வேன்?" என்றார்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சுஜாதாவின் பலமான சிபாரிசோடு குமுதத்தில் சேர்ந்துவிடலாம் என்று ரொம்ப நம்பிக்கையோடு போயிருந்தேன். எஸ்.ஏ.பி. என்னடாவென்றால் இப்படி ஒரு கேள்வியைத் தூக்கிப் போடுகிறார். இதற்கு என்ன பதில் சொல்வது?

"சார், மறுபடியும் சொல்றேன்... எனக்கு சாவியை விட்டு வர மனசில்லை. ஆனா, நான் அங்கே நீடிச்சாலும், அவர் இன்னும் எத்தனை நாளைக்கு சாவியை நடத்துவார்னு தெரியாது. உங்க கிட்டே '2000 வரைக்கும் நடத்துவேன்'னு அவர் சொல்லியிருக்கலாம். ஆனா, அது சாத்தியமில்லை. எனவே, நான் சுயநலமா யோசிச்சுதான் முடிவு எடுக்க வேண்டியிருக்கு!" என்றேன்.

எஸ்.ஏ.பி. புன்னகைத்துவிட்டு, "ஒண்ணும் கவலைப்படாதீங்க! நீங்க குழப்பம், கவலை எல்லாத்தையும் விட்டுட்டு, வழக்கம்போல நாளைக்கு சாவி கிட்டேயே வேலைக்குப் போங்க! எவ்வளவு காலம் நடத்தறாரோ நடத்தட்டும். அது வரைக்கும் அவர் கிட்டேயே வேலை செய்யுங்க. சாவி போன்ற பத்திரிகை ஜாம்பவான்களிடம் வேலை செய்ய, நீங்க கொடுத்து வெச்சிருக்கணும். அவர் என்னிக்குப் பத்திரிகையை மூடிட்டு உங்களை வேற வேலை தேடிக்கச் சொல்றாரோ, அன்னிக்கு வேற எங்கேயும் போகாம நேரே என்கிட்டே வாங்க. குமுதத்தின் கதவுகள் உங்களுக்காக என்னிக்கும் திறந்திருக்கும்" என்றார்.

எதிர்பார்த்தபடி குமுதத்தில் வேலை கிடைக்கவில்லை என்றாலும், எஸ்.ஏ.பி. கொடுத்த தைரியமும், சொன்ன ஆறுதல் வார்த்தைகளும் என் மனசில் இருந்த குழப்பத்தையும் கவலையையும் துப்புரவாகப் போக்கிவிட்டன. அவர் சொன்னபடியே, தொடர்ந்து சாவியிடம் வேலைக்குப் போய் வந்தேன்.

எஸ்.ஏ.பி. அடுத்த இரண்டு நாளில் அமெரிக்கா பயணமானார். அங்கிருந்து திரும்பி வரவில்லை... உயிரோடு!

சுஜாதாவை நான் மீண்டும் சந்தித்தது, சாவி பத்திரிகை நின்ற பின்பு!

மீண்டும் குமுதம் ஆபீஸ் போனேன். ஒரு சின்ன அறையில், மிகச் சாதாரண மர மேஜையின் பின்னால், மர நாற்காலியில் எலிமென்ட்டரி ஸ்கூல் வாத்தியார் போல அமர்ந்திருந்தார் சுஜாதா. என்னைப் பார்த்ததும், "வாங்க ரவி! முன்னாடி கிடைக்கவிருந்த ஒரு நல்ல வாய்ப்பு கை நழுவிப் போயிடுச்சு உங்களுக்கு. இப்ப சூழ்நிலையே வேற. எல்லாமே மாறிப்போச்சு! இங்கே சப்-எடிட்டர்கள் தேவையில்லே. ரிப்போர்ட்டர்கள்தான் தேவை. இளம் விஞ்ஞானிகள் நாலஞ்சு பேரைப் பார்த்து லேட்டஸ்ட் தியரிகள், கண்டுபிடிப்புகள்னு ஏதாவது மேட்டர் பண்ணிட்டு வாங்க. நாலு வாரம் தொடர்ந்து பண்ணா போதும்; மாச சம்பளத்தைவிட அதிகமா ரெமுனரேஷன் வாங்கிடலாம்!" என்று சொல்லி அனுப்பினார்.

எனக்குத் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை. இளம் விஞ்ஞானிகளை எங்கே போய்த் தேடுவேன் என்று சுஜாதாவிடமே கேட்பதற்கும் தயக்கமாக இருந்தது. தவிர பேட்டி எடுத்தெல்லாம் எனக்குப் பழக்கமில்லை. ஜர்னலிஸத்தில் நான் பழகாத ஒரு பிரிவு, பேட்டி எடுத்தல்தான். குறிப்பாக அரசியல்வாதிகள், சினிமா தொடர்புடையவர்கள் என்றால், எனக்கு அலர்ஜி!

சாவியில் இருக்கும்போது கவிஞர் வைரமுத்துவுடனெல்லாம் டீல் பண்ணியிருக்கிறேனே தவிர, அதெல்லாம் சப்-எடிட்டராக இருந்துதான். பேட்டி என்று யாருக்காகவும் போய்க் காத்திருந்தது இல்லை.

எனவே, "ஆகட்டும் சார்!" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து தப்பித்தால் போதும் என்கிற மன நிலையில் எஸ்கேப் ஆனேன்.

அதற்கப்புறம், 'சுதேசமித்திரன்' நாளிதழில் சுதாங்கனின் கீழ் ஒரு நாலு நாள் வேலை பார்த்தேன். இடையில், சாவி நின்றவுடனேயே வேலை கேட்டு ஆனந்த விகடனுக்கும் விண்ணப்பித்திருந்தேன். என்னைப் பற்றி அங்கிருப்பவர்களுக்குத் தெரிந்திருந்தது. கூடவே, ஓவியர் அரஸ்ஸின் பலமான சிபாரிசும் சேரவே, அங்கிருந்து அழைப்பு வந்தது. விகடன் அலுவலகத்துக்குப் போனது, ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களைப் பார்த்துப் பேசியது, வேலையில் சேர்ந்தது எல்லாவற்றையும் பிறகு விரிவாக எழுதுகிறேன்.

விகடனில் வேலையில் சேர்ந்த பின், சுஜாதா அவர்களுடனான தொடர்பு அறுந்தது.

அங்கே சீனியர்களே சுஜாதா, வாலி, வைரமுத்து போன்ற பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தனர். பின்னர் மதன், ராவ், வீயெஸ்வி என ஒவ்வொருவராக விலகிவிட, ஆனந்த விகடனின் நிர்வாக ஆசிரியர் ஆனார் அசோகன்.

அவர் பந்தா இல்லாதவர்; பழகுவதற்கு மிக மிக எளிமையானவர்; தன் தலைக்குப் பின்னே ஒளிச் சக்கரம் சுழல்வது போன்ற எண்ணங்கள் எதுவும் இல்லாதவர். அவர் விகடனின் முக்கியப் பொறுப்புக்கு வந்த பிறகுதான் சுஜாதா, வாலி இருவரிடமும் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. சுஜாதாவுடனாவது முன்பே பழகியிருக்கிறேன். காவியக் கவிஞர்
வாலியின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது விகடனில்தான். அதற்குக் காரணம் அசோகன்தான். மற்றபடி, எனக்கு வைரமுத்துவுடனான தொடர்பு சாவியோடு அறுந்தது. விகடனில் தொடரவில்லை. காரணம், இங்கே வைரமுத்துவுடன் மிக நெருக்கத்தில் இருந்தவர் கண்ணன்.

சுஜாதாவிடம் சிறுகதை, கட்டுரைகள் வேண்டுமென்றால், அது விகடனுக்காக மட்டுமல்ல, ஜூனியர் விகடனுக்காக இருந்தாலும் என்னைத்தான் பேசச் சொல்வார் அசோகன். அதே போல் வாலியிடம் ஏதாவது பேசவேண்டும் என்றாலும், என்னைத்தான் பேசச் சொல்வார். அதை அசோகன் எனக்கு அளித்த கௌரவமாகவே கருதினேன். இந்த இரு ஜாம்பவான்களுடன் தொடர்பு கிட்டியதற்கு, இன்றளவும் அசோகனுக்கு மானசிகமாக நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

சுஜாதாவிடம் பல முறை போனிலும், சில முறை நேரிலும் பேசியிருக்கிறேன். மிக மென்மையான குரலில் பேசுவார். பெரும்பாலும் அவர் பேச்சினிடையே 'அது வந்திட்டு...' என்ற சொற்றொடர் தவறாமல் இடம்பெறும்.

அவர் விகடனில் தொடர்ந்து எழுதி வந்த 'கற்றதும் பெற்றதும்' கட்டுரைகளில் ஒரு முறை, மாயச் சதுரம் அமைப்பது பற்றி எழுதியிருந்தார். எப்படிக் கூட்டினாலும் கூட்டுத் தொகை 15 வருகிற 3x3 கட்டத்தைக் கொடுத்துவிட்டு, சீனர்கள் அதை சனி கிரகத்துக்கான கட்டம் என்று சொல்வதாகவும், அதே போல் 9x9 கட்டத்தைக் கொடுத்து (எப்படிக் கூட்டினாலும், கூட்டுத் தொகை 369 வரும்) அது சந்திரனுக்கான மாயச் சதுரம் என்றும், அது போல் உங்களால் (வாசகர்களால்) அமைக்க முடியுமா என்றும் கேட்டிருந்தார்.

இப்படியான மாயச் சதுரங்கள் அமைப்பது பற்றி நான் விளையாட்டாக, எட்டாம் வகுப்பு படிக்கும்போதே அறிந்து வைத்திருந்தேன். இந்த ட்ரிக்கை யார் எனக்குச் சொல்லிக்கொடுத்தார்கள் என்பது நினைவில்லை. உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக திருச்சி போயிருந்த சமயத்தில், அங்கே யாரோ ஒருவர் சொல்லிக்கொடுத்தார் என்று ஞாபகம்.

ஒற்றைப்படை எண்ணிக்கையிலான சிறு சிறு கட்டங்கள் கொண்ட எத்தனை பெரிய மாயச் சதுரத்தையும் அமைக்கமுடியும். ஒரே ஒரு ட்ரிக்தான். மேல் நோக்கி வலது புறமாகப் பாயும் ஒரு அம்புக்குறியைக் கற்பனை செய்துகொள்ள வேண்டும். அதன் போக்கிலேயே கட்டங்களை நிரப்பிக்கொண்டு போகவேண்டும். அதாவது, ஒரு எண்ணை ஒரு கட்டத்தில் பூர்த்தி செய்த பிறகு, அடுத்த எண்ணைப் பக்கத்தில் உள்ள கட்டத்துக்கு மேலே உள்ள கட்டத்தில் எழுத வேண்டும். இதற்குப் பல துணை நிபந்தனைகள் உள்ளன. எல்லாமே சிம்பிள்தான்! இந்த விதிமுறைகளின்படி எத்தனை பெரிய மாயச் சதுரமும் அமைக்க முடியும். ஒன்றிலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும் என்பதில்லை. எந்த ஒரு எண்ணிலிருந்தும் தொடங்கலாம்; கூட்டு எண்ணாக எந்த ஒரு எண்ணையும் பயன்படுத்திக் கூட்டிக் கூட்டிப் போட்டுக்கொண்டே போனால், இறுதியில் படுக்கைவசமாக, நெடுக்குவசமாக, மூலை விட்டமாக எப்படிக் கூட்டினாலும், ஒரே கூட்டுத் தொகைதான் வரும்.

அது எப்படி என்று சுஜாதாவுக்கு விரிவாக விளக்கி ஒரு கடிதம் எழுதி, 25x25 அளவிலான ஒரு பெரிய மாயச் சதுரத்தையும் தயார் செய்து அனுப்பியிருந்தேன்.

அதைப் படித்துவிட்டு, சுஜாதா உடனே எனக்கு போன் செய்தார். "ஆச்சர்யமா இருக்கு ரவிபிரகாஷ்! எப்படி இதை நீங்க கண்டுபிடிச்சீங்க? பிரமிப்பா இருக்கு. மேத்ஸ்ல நீங்க கில்லாடியோ?" என்றெல்லாம் மனம் விட்டுப் பாராட்டினார். "அப்படியெல்லாம் இல்லை சார்! கணக்குல நான் புலியும் இல்லை. இந்த மாதிரி கணக்குப் புதிர்கள்னா எனக்கு இன்ட்ரஸ்ட் உண்டு. எப்பவோ சின்ன வயசுல யாரோ சொல்லிக்கொடுத்த ட்ரிக்தான் இது. ஒற்றைப் படை எண்ணில் அமைந்த மாயச் சதுரங்கள் அமைக்கிறதுக்கான ட்ரிக் இது. அதுக்கப்புறம் நானே முயற்சி பண்ணி இரட்டைப் படை மாயச் சதுரத்துக்கு என்ன ட்ரிக்னு கண்டுபிடிச்சேன். அதையும் உங்களுக்கு எழுதி அனுப்பறேன், பாருங்க!" என்றேன்.

சுஜாதா தனது அடுத்த க-பெ கட்டுரையில், 'மாயச் சதுரம் பற்றி ஒரு சுவாரஸ்யமான கடிதம், விகடன் ஆசிரியர் குழுவைச் சார்ந்த ரவிபிரகாஷிடமிருந்து வந்தது. எந்த எண்ணையும் ஆரம்ப எண்ணாக வைத்து, ஒற்றைப் படை எண் வரிசையில் எத்தனை பெரிய மாயச் சதுரத்தையும் அமைக்க, ஓர் எளிய முறை சொல்லியிருக்கிறார். Amazing! இதே போல் இரட்டைப் படை மாயச் சதுரம் அமைக்கவும் ஒரு தந்திரம் உள்ளது. தெரிந்தவர்கள் எழுதலாம்' என்று என்னைப் பற்றிச் சிலாகித்துக் குறிப்பிட்டிருந்தார்.

ஏராளமான வாசகர்கள் மாயச் சதுரம் அமைப்பது பற்றி எழுதியிருந்தார்கள். அவற்றில் சிக்கலான வழிமுறைகளை விட்டுவிட்டு, எளிமையானவற்றை, சுலபத்தில் விளக்கிப் புரிந்துகொள்ள முடிகிற வழிமுறைகளை நானே தேர்வு செய்து, சின்ன குறிப்புகளோடு சுஜாதாவுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதை அப்படியே அடுத்த வார 'கற்றதும்-பெற்றதும்' கட்டுரையில் ஆரம்பப் பகுதியாக வைத்திருந்தார்.

சுஜாதா மறைவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு கூட, அவரோடு போனில் பேசி, காதலர் தினத்தை முன்னிட்டுக் காதல் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று கேட்டிருந்தேன். கேட்ட ஒரு வாரத்துக்குள் கட்டுரையை எனக்கு இ-மெயில் செய்தார். அதற்கு அவர் தலைப்பு எதுவும் வைக்கவில்லை. இரண்டு வகையான காதலைப் பற்றி அவர் அதில் விவரித்திருந்தார். எனவே, நானே 'காதலிலே ரெண்டு வகை' என்று தலைப்பு போட்டு, கீழே பிராக்கெட்டுக்குள் குட்டியாக 'சைவம், அசைவம் அல்ல!' என்று போட்டிருந்தேன். வைரமுத்துவின் வரிகளை சுஜாதா பாணியில் கொஞ்சம் நகைச்சுவையாக்கிய தலைப்பு அது.

அவரது கட்டுரை விகடனில் பிரசுரமான பிறகு, அது பற்றிய அவரது அபிப்ராயத்தைக் கேட்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன். சந்தர்ப்பம் அமையவில்லை.

அது மட்டுமல்ல, விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கும் என் 'ஏடாகூட கதைகள்' புத்தகத்தை அவர் வீட்டுக்கே சென்று அவரிடம் கொடுத்து ஆசி வாங்கி வரவேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். அதற்கும் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.

விகடன் பிரசுரம் மாதா மாதம் வெளியிடும் 'விகடன் புக்ஸ்்' என்கிற புத்தகத்தில் வெளியிட பொன்ஸீ என்னிடம் சுஜாதா பற்றி ஒரு கட்டுரை கேட்டிருந்தார். வியாழன் அன்று காலையில், அவரைப் பற்றி எனக்குத் தோன்றியதை மடமடவென்று கம்போஸ் செய்தேன். ஜூனியர் விகடனுக்காக ரா.கி.ரா-விடம் சுஜாதா பற்றி ஒரு கட்டுரை கேட்கச் சொன்னார் அசோகன். கேட்டேன். அதன்படியே மறுநாள் (வியாழன்) காலை கொடுத்தார். அது ரொம்ப நீளமாக இருக்கவே, ஜூ.வி-யில் இடம் இல்லாத காரணத்தால், இரண்டு பக்க அளவில் சுருக்கிக் கொடுக்கச் சொன்னார்கள். செய்தேன்.

சுஜாதா பற்றிய அந்த நினைவு அஞ்சலி கட்டுரைக்கு ரா.கி.ரா வைத்திருந்த தலைப்பு...

'அவரைப் போல் இனி ஒருவர் வரமாட்டார்!'

சத்தியமான வார்த்தை.