உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, August 03, 2020

தாமினி என்ன ஆனாள்? - 11


ன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் போல், மூன்றாவது முறையாகவும் கிருஷ்ணவேணியின் அப்பாவுக்கு போன் செய்தாள் தாமினி.

‘டாக்டரோ..? என்று எடுத்துப் பார்த்தவர், மறுபடி அந்த ‘ட்ரிபிள் டூ’ எண்ணைப் பார்த்ததும் எரிச்சலுற்றார்.

“சட்… இவனுங்களுக்கு வேற வேலையில்லை. ஏதாவது எல்..சி., அல்லது மியூச்சுவல் ஃபண்டுலேர்ந்து கூப்பிடுவான்கள். ‘புதுசா ஒரு பாலிசி வந்திருக்குது, அல்லது இந்த ஃபண்டுல இன்னின்ன ஸ்கீம் வந்திருக்குது, அதன் பெனிஃபிட்ஸ் என்னன்னு விளக்கட்டுமா?’னு மொக்கை போடுவானுங்க. இல்லேன்னா, கார் சர்வீஸ் பண்ணீங்கன்னா ஃப்ரீ வாஷ் பண்ணித் தரோம்னு ஏதாவது சொல்வாங்க. இந்த மாதிரி அன்னெஸஸரி கமர்ஷியல் கால்ஸையெல்லாம் ‘ட்ராய்’ எப்படித்தான் அலவ் பண்ணுதோ…” என்று முனகியபடி அதை ‘கட்’ செய்தார்.

பத்து நிமிஷத்தில் வருகிறேன் என்றவர், ஒரு மணி நேரம் ஆகியும் வராத கவலை சங்கரநாராயணனுக்கு. டாக்டர் ஸ்ரீவத்ஸனுக்கு மறுபடி போன் செய்தார். “இதோ வந்தாச்சு” என்று போனில் சொல்லிக்கொண்டே மெல்லிதாக விசிலடித்தபடி ஹாலில் பிரவேசித்தார் ஸ்ரீவத்ஸன். “பொண்ணு எங்கே, ரூம்ல இருக்காளா? என்றபடி அறைக்குள் நுழைந்தார். கட்டிலில் அமர்ந்திருந்த மற்றவர்கள் இறங்கி, நகர்ந்துகொண்டார்கள். டாக்டர் உட்கார, கட்டில் அருகில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியைக் கொண்டு வந்து போட்டான் பாபு.

கிருஷ்ணவேணி இப்போது அரைக்கண் திறந்து, “தாமினி… தாமினி…” என்று முனகிக் கொண்டிருந்தாள். ஸ்ரீவத்ஸன் அவள் கையை எடுத்து நாடி பிடித்துப் பார்த்து, “என்னம்மா, என்ன பண்ணுது உடம்புக்கு? தன்வந்திரி என்ன சொல்றார்? என்று கேட்டார். அதற்கு அவளிடம் பதில் இல்லை. “தாமினி… தாமினி…” என்றாள். டாக்டர் அவள் கையை விட்டுவிட்டு, கண் இரப்பைகளை இழுத்துப் பார்த்தார்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னால எங்களையெல்லாம் ரொம்பவே பயமுறுத்திட்டா டாக்டர்! கை காலெல்லாம் வெட்டி வெட்டி இழுக்கறது… வாய் ஒரு பக்கம் கோணறது… மலங்க மலங்க முழிக்கிறா… கேட்டா ஒண்ணுமே சொல்லமாட்டேங்குறா…” கிருஷ்ணவேணியின் பாட்டி தன் வர்ணனையில் அந்த ஸீனைத் தத்ரூபமாக டாக்டருக்குப் புரியவைக்க முயன்றாள்.

ஆனால், அவர் சற்றும் அலட்டிக்கொள்ளவே இல்லை. “பாருங்கம்மா… இதுல பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லை. வீணா பதறாதீங்க. மத்தவங்களையும் பயப்படுத்தாதீங்க. ஷீ ஈஸ் நார்மல்! என்றார்.

பின்பு சங்கரநாராயணனிடம் திரும்பி, “ஷங்கர், இது ஃபிட்டெல்லாம் இல்லை. நீ பயப்படாதே! இதை ‘ஸூடோ சீஷர்’னுவோம். பொய் வலிப்பு. பயப்பட வேணாம். ராத்திரி முழுக்க கார்ல வந்ததுல தூங்கியிருக்க மாட்டா. நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். சரியாயிடும்! என்றார்.

“சரியா தூங்கலேன்னா இப்படி ஆகுமா டாக்டர்? என்றார் சங்கரநாராயணன்.

“அப்படி இல்லே… ராத்திரி முழுக்கத் தூங்காம ஏதாவது ஒரு விஷயத்துல மனசைப் போட்டு உழப்பிக்கிட்டிருந்தா, அல்லது எதைப் பத்தியாவது ரொம்பவே கவலைப்பட்டுக்கிட்டிருந்தா மன உளைச்சல் அதிகமாகி இப்படி ஆகும். அது சரி, என்னவோ தாமினி, தாமினின்னு முனகிக்கிட்டிருக்காளே, அது யாரு? என்றவர், சட்டென்று ஞாபகம் வந்தவர்போல், “ஓ யெஸ், யெஸ்… உம் பொண்ணு மாதிரியே இன்னொரு பொண்ணுக்கும் மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் வேணும்னு அவசரமா ரெடி பண்ணித் தரச் சொன்னியே, அந்தப் பொண்ணா? என்றார்.

“அவளேதான் டாக்டர்!

“அவளை இங்கே வரவழைக்க ஏற்பாடு பண்ணிட்டேதானே?

“இல்ல டாக்டர், அதுக்கு அவசியமே இல்லாம போச்சு! அங்கேயே திருச்சூர்ல இருக்கிற ரிலேஷன் வீட்டுக்கு அவ ஸேஃபா போய்ச் சேர்ந்துட்டா. அது இவளுக்கும் தெரியும். இருந்தும், ஏன் இப்படிக் கவலைப்படறா, ஏன் இந்த அளவுக்கு மனசைப் போட்டு உழட்டிக்கிறானு தெரியலே! என்றபடி, கண் மூடிப் படுத்திருக்கும் மகளைப் பார்த்தார் சங்கரநாராயணன்.

“நோ! உனக்கு வேணா தாமினி யாரோ டெல்லிப் பொண்ணா இருக்கலாம். ஆனா, உம் பொண்ணு அவளோடு ரெண்டு ரெண்டரை மாசம் ஒண்ணா இருந்திருக்கா. அன்பா பழகியிருக்கா. உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா, அவளை இங்கே உடனடியா வரவழைக்க ஏற்பாடு பண்ணு” என்றார் ஸ்ரீவத்ஸன் ஸ்ட்ரிக்டாக.

“எனக்கென்ன ஆட்சேபனை டாக்டர்… ஆனா, அந்தத் திருச்சூர் ரிலேஷன் அனுமதிக்கணுமே..?

“அவங்களோட பேசு. பேசிப் பாரு. உன் பொண்ணோட நிலைமையை எடுத்துச் சொல்லி, அவங்களை கன்வின்ஸ் பண்ணு. முதல்ல, அந்தப் பொண்ணுக்கு இங்க வர்றதுல இஷ்டமானு கேளு. உன் பொண்ணு இருக்கிற இருப்பைப் பார்த்தா, எனக்கென்னவோ அந்தப் பொண்ணும் இங்கே வந்திருக்க இஷ்டப்படும்னுதான் தோணுது. தானா எப்படி வர்றது, நீயா ஏதாவது ஏற்பாடு செய்யமாட்டியானுதான் அது காத்திருக்கும்னு தோணுது.

டாக்டர் பேசிக்கொண்டிருக்கும்போதே, மீண்டும் சங்கரநாராயணனின் மொபைல் சிணுங்கியது. மீண்டும் அந்த ‘ட்ரிபிள் டூ’ நம்பர். எரிச்சலுடன் கட் செய்துவிட்டு, “இருந்தாலும் டாக்டர்…” என்று இழுத்தார்.

“சொல்லு, என்ன பிரச்னை உனக்கு?

“அந்தப் பொண்ணை அழைச்சுட்டு வந்து ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ அல்லது நாலஞ்சு மாசமோகூட வெச்சிருக்கத் தயார். ஆனா, எப்படியும் அதுக்கப்புறம் அவங்கப்பா வந்து டெல்லிக்குக் கூட்டிட்டுப் போயிடுவார்தானே, அப்பவும் இவ இந்த மாதிரி அழுது ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டானு என்ன நிச்சயம்?

“ஷங்கர், நீ ஒண்ணை நல்லாப் புரிஞ்சுக்கணும். இப்ப உன் பொண்ணுக்கு ஏற்பட்டிருக்கிறது மன உளைச்சல். இந்த மன உளைச்சலுக்குக் காரணம், இவ அவ மேல வெச்சிருந்த அன்பு மட்டுமல்ல; வாக்குக் கொடுத்தபடி அந்தப் பொண்ணைத் தன்கூடக் கூட்டிட்டு வர முடியலையேங்கிற குற்ற உணர்ச்சி. அதை முதல்ல போக்கணும். அதுக்கு உடனடியா அவளை இங்கே வரவழைக்கிறதுதான் ஒரே வழி. அதைச் செய் முதல்ல” என்றவர் கௌரியிடம் திரும்பி, “நேத்து உங்க பொண்ணுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்தீங்களாம்மா? என்று கேட்டார்.

“ஹார்லிக்ஸ் மட்டும் குடிச்சா…”

“சரி, இப்ப ஏதாவது கஞ்சியோ, அல்லது சாதத்தை மையக் குழைச்சோ, வெதுவெதுப்பான சூட்டுல ரெண்டு டம்ளர் கொண்டு வாங்க. இவளை உட்கார வெச்சு, மெதுவா பொறுமையா குடிக்கக் கொடுங்க. நான் ஒரு ஊசி போட்டுட்டுப் போறேன். நல்லா தூங்குவா. நாலஞ்சு மணி நேரம் தூங்கட்டும். இப்ப மணி 9:30. மதியம் ரெண்டு ரெண்டரை மணிக்கு எழுப்பி, தெளுவா ரசம் சாதம் போடுங்க; அல்லது கரைச்சுக் கொடுங்க. நார்மலாயிடுவா. ஒண்ணும் பயப்பட வேணாம். எதானாலும் நான் இங்கதான் இருக்கேன். போன் பண்ணுங்க” என்றபடி, கிருஷ்ணவேணிக்கு இஞ்ஜெக்ஷன் போட்டுவிட்டு, விடைபெற்றுக் கிளம்பினார் ஸ்ரீவத்ஸன்.    

அவரை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டுத் திரும்பினார் சங்கரநாராயணன். மொபைல் கதறிக்கொண்டிருந்தது. அதே ‘ட்ரிபிள் டூ’ நம்பர்.

கடுப்புடன் எடுத்தார். “ஹலோ, யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்? ரெண்டு மூணு தடவை கட் பண்ணியும் திரும்பத் திரும்பக் கூப்பிட்டு டார்ச்சர் பண்றீங்களே, நேரங்காலம் தெரியாம..! கொஞ்சமாவது மேனர்ஸ் இருக்கா? கட் பண்ணுங்க மொதல்ல! என்று திட்டிவிட்டு, மொபைலை ஆஃப் செய்தார்.

தாமினி அதிர்ந்தாள். அவள் கையிலிருந்த மொபைல் நழுவி விழுந்தது.

(தொடரும்)

0 comments: