உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, August 03, 2020

தாமினி என்ன ஆனாள்? - 7

கிருஷ்ணவேணி பதறிப்போனாள். “ஏன்…. ஏன் மேடம்…? என்றாள்.

“இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவங்கப்பாதான் பேசிட்டிருந்தார். திருச்சூர்ல அவங்க ரிலேஷன் யாரோ இருக்காங்களாம். கொஞ்சம் தூரத்து ரிலேஷனாம். பல வருஷங்களுக்கு முன்னே எப்பவோ ஒரு மேரேஜ்ல பார்த்ததுன்னார். அவரோட ஃபேமிலி மெம்பர் யாரோதான் இந்தத் திருச்சூர் உறவினர் நம்பரைக் கொடுத்துப் பேசிப் பாருன்னாராம். இவரும் பேசிட்டாராம். ‘தாராளமா குழந்தையை இங்க கொண்டு வந்து விடுங்க, தங்கமா பார்த்துக்கறேன்’னுட்டாங்களாம் அந்தம்மா. நாளைக்குக் காலையில இவ அங்க போயிடுவா!

கிருஷ்ணவேணிக்கு இதைக் கேட்டதும், மனசு இத்துப்போன மரக் கட்டை மாதிரி பொளக்கென்று பொத்துக்கொண்டுவிட்டது.

“எப்படிப் போவா? பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்தான் எதுவும் இல்லையே, மேடம்?

“இருந்தா மட்டும்..? இவளைத் தனியா அனுப்ப முடியுமா? ஒரு டாக்ஸி பிடிச்சுதான் இவளை அனுப்பி வைக்கணும். எனக்கு ரெகுலரா திலீப்னு ஒரு பையன் கால் டாக்ஸி கொண்டு வருவான். இப்பத்தான் கல்யாணமாகி, ஒரு குழந்தைகூட இருக்கு அவனுக்கு. காலைல போன் பண்ணி, அவனை வரச் சொல்லப்போறேன். அவன் ஜாக்கிரதையா அவளைக் கொண்டு போய் அவங்க வீட்ல சேர்த்துடுவான். நீ கவலைப்படாதே!

“ஒண்ணும் பிரச்னை இருக்காதே மேடம்?

“இருக்காது. இங்கே கேரளாவுக்குள்ளதானே… அதனால ஒரு பிரச்னையும் இருக்காது. யூ டோன்ட் வொர்ரி! என்ற அவந்திகா, “என்னைக் கேட்டா அவ இங்கேயே இருக்கலாம். சொன்னா அவங்கப்பா கேட்க மாட்டேங்கிறார். ‘உங்களுக்கு எதுக்குங்க மேடம் வீண் சிரமம்?’கிறார். இந்தக் குழந்தையை வெச்சுக்குறதுல எனக்கென்ன சிரமம்? எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியும் கேட்காம அடம் பிடிக்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல சரின்னு நானும் விட்டுட்டேன்…” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே இணைப்பு துண்டிக்கப்பட்டது.

‘அடடா…’ என்று பதறி, அவந்திகாவைத் தொடர்புகொள்ள முயன்றாள் கிருஷ்ணவேணி. சத்தத்தையே காணோம். ரிங் போகிறதா, போகவில்லையா, அல்லது வழக்கம்போல் ஆல் லைன்ஸ் ஆர் பிஸியா? ஒரு மண்ணும் தெரியவில்லை. கிருஷ்ணவேணிக்கு மளுக்கென்று கண்களில் நீர் கோத்துக்கொண்டது. ‘பாத்ரூம் போயிட்டு வர எவ்ளோ நேரம் ஆகும் ஒருத்திக்கு… அங்கேயே தூங்கறாளா, என்ன? என்று தாமினி மேல் ஒரு சின்ன கோபம்கூட எழுந்தது கிருஷ்ணவேணிக்கு.

‘அக்கா… நான் வர வரைக்கும் கொஞ்சம் இங்கேயே வாசல்ல வெயிட் பண்றீங்களா… ரூமுக்குப் போயிடாதீங்கக்கா… தோ, நானும் வந்துடறேன்!

‘ஏழரைக் கழுதை வயசாறது… பயம் என்னடி பயம்…? இங்க என்ன பேய், பிசாசா இருக்கு?

‘அக்கா… ப்ளீஸ்க்கா…!

‘சரி சரி… போய்ட்டு வா! வெய்ட் பண்றேன். போனேன் வந்தேன்னு சட்டுபுட்டுனு வேலையை முடிச்சுட்டு வா!

இங்கே அவந்திகா வீட்டின் பாத்ரூம் வாசலில் தாமினிக்குத் துணையாக யார் நின்றுகொண்டிருப்பார்கள் என்று யோசனை ஓடியது கிருஷ்ணவேணிக்கு. அவள் யோசனையைக் கலைப்பது போல் மொபைல் ஒலித்தது. எடுத்துப் பார்த்தாள். அப்பா.

அட்டெண்ட் செய்து, “என்னப்பா…? என்றாள் அலுப்பான குரலில்.

“பெருங்களத்தூர் நெருங்கிட்டதா காட்டுதும்மா மொபைல் ட்ராக் ஆப். இனிமே பயப்பட வேணாம். வா, நாங்கள்ளாம் முழிச்சிட்டுதான் இருக்கோம். அம்மா உனக்கு திருஷ்டி கழிச்சுக் கூப்பிட்டுக்கணும்னு எல்லாம் ரெடியா வெச்சிட்டுக் காத்திட்டிருக்கா.

“இப்ப எனக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்! என்றாள் கிருஷ்ணவேணி.

“என்னம்மா இப்படிச் சொல்றே… அந்த தாமினியைப் பத்தின கவலைதானே உணக்கு… அவளுக்குதான் மெடிக்கல் ரிப்போர்ட் உள்பட எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேனே… இதே மாதிரி நாளைக்கு ராத்திரி அவ இங்கே உன்னோட இருப்பா. அப்புறம் ஏன் கவலைப்படறே?

ஆயாசமாக இருந்தது கிருஷ்ணவேணிக்கு. ஒன்றும் சொல்லத் தோன்றாமல், “போப்பா…” என்று சலிப்புடன் சொல்லிவிட்டு மொபைலை அணைத்தாள். மீண்டும் அவந்திகாவுக்குத் தொடர்புகொள்ள முயன்றாள். பலனில்லை. மொபைலை கார் ஸீட்டில் விட்டெறிந்துவிட்டு, சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

கார் லேசான அதிர்வுடன் ஓடிக்கொண்டிருந்தது. சாலையில் முழுக் கவனத்தையும் வைத்தபடி, சீரான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான் நாகராஜ்.

‘இந்த அண்ணன்தான் எவ்வளவு கண்ணியமானவாக, பொறுப்புள்ளவனாக இருக்கிறான்! சொல்லாமலே தன் சங்கடம் புரிந்து, என்னவொரு நாசூக்காக அதற்கு ஒரு வழி செய்தான். கார் வாடகை போக, அப்பாவிடம் சொல்லி, இவனுக்கென்று தனியாக கணிசமாக ஏதாவது ஒரு அமௌன்ட் வாங்கித் தர வேண்டும்.

‘அங்கே, தன்வந்திரி வைத்தியசாலாவின் செக்யூரிட்டி பையன் உதய்… தன்னை நாகராஜுடன் அனுப்பிவைக்கும்போது, எவ்வளவு பொறுப்பாகச் சொன்னான்… ‘அண்ணே, சென்னை போய்ச் சேர்ந்ததும் எனக்கு மெசேஜ் பண்ணுங்க. கவலைப்பட்டுக்கிட்டே இருப்பேன்’னானே..! எவ்வளவு முன்ஜாக்கிரதையாக நாகராஜைத் தன் மொபைலில் புகைப்படம் எடுத்துக்கொண்டான்!

‘அந்த மேனேஜரும்தானாகட்டும்… கொரோனாவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் தன் மகனைக் காலையில் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தபோதிலும், அந்தக் கவலையை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, தாமினியை பத்திரமான ஓரிடத்தில் சேர்க்க வேண்டுமே என்று கவலைப்பட்டு, அவளைப் பொறுப்பாக அழைத்துக்கொண்டு போய் அவந்திகா சோப்ரா வீட்டில் ஒப்படைத்திருக்கிறாரே!

‘யோகா டீச்சர் அவந்திகா மேடமும் சும்மாவா ‘குழந்தையை இங்கே வெச்சுக்கிறதுல எனக்கென்னம்மா கஷ்டம்? சொன்னா அவங்கப்பா கேட்க மாட்டேங்கறார்’னு எவ்ளோ அன்பொழுகச் சொன்னாங்க.

‘ச்சீ… நான் ஒருத்திதான் மட்டம். வேஸ்ட். கழிசடை. நம்பிக்கைத் துரோகி. மனுஷப் பிறவிக்கே லாயக்கில்லாத ஜென்மம்!

கிருஷ்ணவேணியின் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்துகொண்டிருந்தது. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாள் என்று தெரியவில்லை. கழிவிரக்கம் அவளை வாட்டியெடுத்துக் கொண்டிருந்தது.

மூக்கை உறிஞ்சிக்கொண்டு, கார்க் கண்ணாடி வழியே பார்த்தாள். கத்திப்பாரா பாலத்தின் மேல் ஓடிக்கொண்டிருந்தது கார். இதோ சில நிமிடங்களில் அசோக் நகர் வந்துவிடும். சுதாரித்து எழுந்து உட்கார்ந்தாள்.

கார் பில்லரைத் தொட்டு, சுரதா சிலையைக் கடந்து, அடுத்து வந்த 16-வது அவென்யூவில் திரும்பியது. அடுத்த சில விநாடிகளில், வேகம் குறைந்து, அவள் வீட்டின் முன்னால் போய் நின்று இளைப்பாறியது.

அப்பா, அம்மா, தம்பி, பாட்டி நால்வரும் வாசலிலேயே காத்திருந்தார்கள். கிருஷ்ணவேணி இறங்கினாள். ஸீட் பெல்ட்டைக் கழற்றிவிட்டு நாகராஜும் டிரைவர் ஸீட்டிலிருந்து இறங்கினான். “நீங்க போங்க மேடம், நான் எடுத்துட்டு வரேன் லக்கேஜை” என்றான்.

வாசலில் இருந்த சச்சதுரமான சிமென்ட் தளத்தைக் கடந்து, இரும்பு கேட் அருகில் நின்றாள் கிருஷ்ணவேணி. அம்மா அவளுக்கு ஆரத்தி எடுத்து, சிவப்பு நீரில் தொட்டு, அவள் நெற்றியில் பொட்டு இட்டு, “உள்ளே போம்மா” என்றுவிட்டு, ஆரத்தியைக் கொண்டுபோய்த் தெருவில் கொட்டிவிட்டு வந்தாள்.

“பாத்ரூம்ல வெந்நீர் போட்டு வெச்சிருக்கும்மா…  சூடு திட்டமா இருக்கா பாரு. ரொம்பக் கொதிச்சா வெளாவிக்கோ. நல்லா தலைக்குக் குளிச்சிட்டு வா. டிரஸ்ஸையெல்லாம் பாத்ரூமுக்குள்ளேயே அவுத்து பக்கெட்ல போட்டுடு! அம்மா உனக்கு வேற டிரஸ் எடுத்துக் கட்டில்ல வெச்சிருக்கா, பாரு! குளிச்சுட்டு வந்து அதைக் கட்டிக்கோ” என்றாள் பாட்டி.

கிருஷ்ணவேணிக்கு எதுவும் பிடிக்கவில்லை. நடப்பதெல்லாம் கசப்பாக இருந்தது. கடனே என்று கேட்டுக்கொண்டாள். ‘கொரோனா வந்து செத்தா செத்துட்டுப் போறேன். நான் இருந்து யாருக்கு என்ன பிரயோஜனம்? என்று பைத்தியம்போல் தனக்குள்ளாக முனகிக்கொண்டாள்.

நாகராஜும் தம்பியுமாக ஆளுக்கொரு பையைச் சுமந்து வந்தார்கள். “அதையெல்லாம் முன்னறையில ஒரு ஓரமா வெச்சுடுங்க” என்றார் அப்பா. பின்பு, கார் டாஷ் போர்டில் இருந்து இன்வாய்ஸ் புக்கை எடுத்து, தொகையை எழுதி எடுத்து வந்து நாகராஜ் நீட்ட, அப்பா அதை வாங்கிக் கொண்டார். ரூ.20,000/- ஏற்கெனவே பேசிய கான்ட்ராக்ட் தொகைதான்.

தயாராய் எடுத்து வைத்திருந்த ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி அவனிடம் கொடுத்தபடியே, “போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, ஒன்பது மணிக்கா வரியா? மறுபடியும் அவ்ளோ தூரம் போய் வர முடியுமா உன்னால? என்றார்.

“ஒண்ணும் வேண்டாம்! என்றாள் கிருஷ்ணவேணி, வெடுக்கென்று. தொடர்ந்து நாகராஜிடம் திரும்பி, “ஸேஃபா கொண்டு வந்து சேர்த்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்ண்ணா. இந்த உதவியை நான் என்னிக்கும் மறக்க மாட்டேன். போக வர ஆயிரத்தைந்நூறு கி.மீட்டர் தூரம் நான்ஸ்டாப்பா ஓட்டிட்டு வர்றதுங்கிறது சாதாரண விஷயமில்லை.ரொம்ப தேங்க்ஸ். நீங்க போங்க. தாமினி நாளைக் காலைல திருச்சூர்ல இருக்கிற அவ ரிலேஷன் வீட்டுக்குப் போயிடுவா. அதனால, அவளைப் போய்க் கூட்டிட்டு வர வேண்டிய வேலை இருக்காது.  அப்பா, இவருக்குத் தனியா கையில ஒரு ஆயிரம் ரூபா கொடுங்க” என்று சொல்லிவிட்டு, உள்ளே போனாள் கிருஷ்ணவேணி.

அப்பாவும் நாகராஜும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“மேடம் அப்செட்ல இருக்காங்க சார், விட்டுப் பிடிங்க. இப்ப எதுவும் கேக்காதீங்க. நாளைக் காலைல நிதானமா என்ன ஏதுன்னு விசாரிங்க. எதுனாலும் கூப்பிடுங்க. நான் ரெடியா இருக்கேன். ஒரு ஃபோனடிங்க… ஓடி வர்றேன்” என்றபடி விடைபெற்று, காரில் கிளம்பினான் நாகராஜ். அவனை அனுப்பிவிட்டு, உள்ளே சென்றார் சங்கரநாராயணன்.

பாத்ரூமிலிருந்து கிருஷ்ணவேணி விக்கி விக்கி அழும் சத்தம் கேட்டது.

(தொடரும்)

0 comments: