உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, June 24, 2020

சிலிர்க்க வைத்த மகா சக்தி!

தொடர்ச்சி... சாவியில் நடந்த அந்த விபரீதம்! - III சாவி தூக்கம் கலைந்து எழுந்து வந்தார். “என்னா பாலு, இவ்ளோ காலங்கார்த்தால வந்திருக்கே? என்னா விஷயம்?” என்றார். “சார், அது வந்து... ஒரு பெரிய தப்பு நடந்து போச்சு! ஃபாரம் முடிச்ச கவரை ரவி கொண்டு போனான் இல்லையா... வழியில எங்கேயோ தவற விட்டுட்டான்...” “என்ன சொல்றே... கவரு... தொலைச்சுட்டானா? புரியும்படியா சொல்லு!” என்றார் சாவி. “ஆமாம் சார்... சைக்கிள் கேரியர்ல ஃபாரம் முடிச்ச கவரை வெச்சுக்கிட்டு, அவனே நடராஜா கிராஃபிக்ஸ்ல கொடுத்துடலாம்னு கொண்டு போயிருக்கான். அப்போ, எங்கேயோ வழியில தவறி விழுந்துடுச்சாம். தேடிப் பார்த்துக் கிடைக்கலைன்னு...” - ஜே.பி. மேலே சொல்லத் தொடங்குவதற்குள், வாட்ச்மேன் சித்திரை அவசரமாகப் படியேறி மேலே வந்தார். “அய்யா! இல்லீங்கய்யா! கவர் இங்கேயேதான் ரவி சார் டேபிள் மேல இருக்குது” என்று அந்தக் கவரை சாவி சார் கையில் தந்தார் சித்திரை. அதை சோபாவில் அமர்ந்து நிதானமாகப் பிரித்துப் பார்த்த சாவி, எல்லாம் சரியாக இருப்பதை அறிந்து, அதை ஜே.பி-யிடம் கொடுத்து, “இதைக் கொண்டு போய் நீயே நடராஜா கிராஃபிக்ஸில் கொடுத்துட்டுப் போயிடு! ரவி பாவம், நேத்திக்கும் கண் முழிச்சிருக்கான். முந்தாநாளும் கண் முழிச்சிருக்கான். அந்தத் தூக்கக் கலக்கத்துல, கவரை எடுத்துக்கிட்டுப் போனதா தப்பா நினைச்சுக்கிட்டு தொலைச்சுட்டோமோன்னு பயந்து, உன்னை அனுப்பியிருக்கான். அவன்கிட்டே போய் உடனே, ‘கவரை நீ எடுத்துக்கிட்டுப் போகலை; எங்கேயும் தொலைக்கவும் இல்லை. அந்த கவர் அங்கேயேதான் உன் டேபிள் மேலேயே கிடந்துது’ன்னு சொல்லு. மனசு கஷ்டப்பட்டுட்டு இருக்கப் போறான். சீக்கிரம் போ!” என்று சொல்லிவிட்டு, மீண்டும் படுக்கச் சென்றுவிட்டார். ஜே.பி. என் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கவே இல்லை. கீழே இறங்கி வந்தார்கள் சித்திரையும் ஜே.பி-யும். “என்ன சித்திரை, நான் வந்து கேட்டப்போ நீங்களும்தானே பதறினீங்க? அப்போ தெரியலையா இது டேபிள் மேல இருந்தது?” என்று கேட்டார் ஜே.பி. “உஸ்...” என்று அவரை அமர்த்தி, எல்லாப் படிகளையும் கடந்து கீழே அழைத்துப் போன பின்பு, சித்திரை ரகசியக் குரலில் சொல்லத் தொடங்கினார்... “ரவி சார் அந்த கவரை எடுத்துக்கிட்டுப் போனதை நானே பார்த்தேன். அப்புறம் தொலைச்சுட்டு ரெண்டு மணிக்கொரு தடவை, மூணு மணிக்கொரு தடவை இங்கே வந்தாரு. என்ன சார்னு கேட்டேன். ஒண்ணுமில்லைன்னு போயிட்டாரு. நீங்க வரவரைக்கும் அந்த கவர் தொலைஞ்சுதான் போயிருந்தது. நீங்க படியேறிப் போனப்புறம், ஒரு பையன் வந்தான். இந்த கவரைக் கொடுத்தான். கவர் மேல பெரிசா ‘சாவி’ன்னு எழுதியிருந்ததைப் பார்த்துக் கொண்டு வந்தேன்னான். அவனுக்குப் பதினாறு, பதினேழு வயசு இருக்கும். காலையில அவன் வேலைக்குப் போற வழியில இது விழுந்து கிடந்ததாம். அதான், முக்கியமானதா இருக்கும்னு கொடுத்துப் போகலாம்னு வந்தேன்னான்.  உடனே எடுத்துக்கிட்டு மேலே ஓடியாந்தேன். ரவி சார் தொலைச்சு, அதை ஒருத்தன் கண்டுபிடிச்சுக் கொண்டு வந்தான்னு சொன்னா, ஐயா ரவி சாரை கோவிச்சுக்குவாருன்னுதான் டேபிள் மேல கிடந்ததா சொல்லிக் கொடுத்தேன். இதை அப்படியே நீங்களும் மறந்துடுங்க!” மறுநாள் அலுவலகம் போனதும், சித்திரையின் கைகளைப் பற்றிக்கொண்டு, நெஞ்சு நெகிழ நன்றி சொன்னேன். ஒரு ஸ்வீட் பாக்ஸ் வாங்கித் தந்தேன். எவ்வளவோ வற்புறுத்தியும், “அட, என்ன சார் நீங்க” என்று வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார் அந்தப் பெரிய மனிதர்! “கவரைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போன அந்தப் பையனின் பெயர், அட்ரஸ் ஏதாவது வாங்கி வெச்சிருக்கீங்களா?” என்று சித்திரையைக் கேட்டேன். “ஓ...” என்று ஒரு சீட்டை எடுத்து வந்து கொடுத்தார். “அந்தத் தம்பியே எழுதிக் கொடுத்துது.” பார்த்தேன். ‘அரவிந்த் - அன்னை டிரேடர்ஸ்’ என்று கிறுக்கல் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. வேறு தெளிவான முகவரி இல்லை. “இங்கேதான் எம்.எம்.டி.ஏ. காலனி உள்ள இறங்கி, திருமங்கலம்-கோடம்பாக்கம் ஹைவேஸ்ல ஏர்ற இடத்துக்கிட்ட அந்தக் கடை இருக்குதுன்னு சொல்லிச்சு அந்தத் தம்பி” என்றார். மாலை அலுவலகம் முடிந்து, அந்தப் பக்கமாகத்தான் மெதுவாக சைக்கிளைச் செலுத்திக்கொண்டு வந்தேன் - அந்த ஸ்வீட் பாக்ஸை அந்தத் தம்பியிடம் கொடுத்து நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் உத்தேசத்தோடு! அன்னை டிரேடர்ஸ் என்ற பெயரில் ஒரு கடை என் கண்ணில் தென்பட்டது. அது ஒரு ஹார்டுவேர் ஸ்டோர்ஸ். அங்கே சென்று, "இங்கே அரவிந்த்னு ஒரு பையன் வேலை செய்யறானா?" என்று கேட்டேன். "என்னங்க, ஏதும் பிரச்னையா?" என்று கேட்டார் கடைக்காரர். "இல்லீங்க. சும்மா பார்க்கணும்" என்றேன். "அவன் நேத்தோட வேலையை விட்டு நின்னுட்டான். சொந்த ஊருக்கே போறேன்னு போயிட்டான்" என்றார். எங்கே போனான், அவன் சொந்த ஊர் எது போன்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை.  நடந்த இந்தச் சம்பவம் இன்றுவரை என் மனைவிக்கு, என் தங்கை கணவர் ஜே.பி-க்கு மற்றும் நெருங்கிய உறவினர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். விசித்திரமான, சிக்கலான என் வேண்டுகோளை அன்னை நிறைவேற்றித் தந்த விதம், இதோ இப்போது பதிவிட்டுக்கொண்டு இருக்கும்போதும் என்னைச் சிலிர்க்க வைக்கிறது! அந்தப் பையனின் பெயர் அரவிந்த்; பணியாற்றும் இடம் ‘அன்னை டிரேடர்ஸ்’. இப்படியும்கூட யதேச்சையாக நிகழ முடியுமா என்ன?