உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, January 21, 2011

வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம்தான்...

‘வேலை தேடி அலைந்த இந்தச் சமயத்தில்தான் ஒரு நாள், இயக்குநர் பாண்டியராஜன் வீட்டில் போய் தவம் கிடந்ததும், தீரன் சின்னமலை பகுதியில் 'என்டர்பிரைஸிங் என்டர்பிரைஸஸ்' என்னும் வாட்ச் உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறியதொரு கம்பெனியில் ஒரு நாள் பணியாற்றியதும் நடந்தது. பின்னர், நண்பர் மார்க்கபந்துவின் உதவியால் 'ஆம்ப்ரோ' பிஸ்கட் கம்பெனியில் டெப்போ இன்சார்ஜாக வேலைக்குச் சேர்ந்தேன். இது பற்றியெல்லாம் முன்பே விலாவாரியாக என் வலைப்பூவில் எழுதியிருக்கிறேன்!’
- சென்ற பதிவில் நான் குறிப்பிட்டிருந்த வரிகள் இவை.

“இப்போதைய உங்கள் இரண்டு வலைப்பூக்களிலும் இந்த விஷயங்களைத் தேடினேன்; கிடைக்கவில்லை. ஒருக்கால், நீங்கள் முன்பு உங்கள் ‘ஏடாகூடம்’ வலைப்பூவில் அவற்றை எழுதியிருப்பீர்கள். சுவாரஸ்யமான நிகழ்வுகளாக இருந்தால் மீண்டும் அவற்றைத் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளுங்களேன். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்ததுபோல் இருக்கும்” என்று தொலைபேசியில் கேட்டுக்கொண்டார், என்னிடம் அடிக்கடி நட்புரீதியில் உரையாடும் ஒரு பிரமுகர்.

அவர் சொன்னதை உத்தரவாக ஏற்று, வாட்ச் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒரு நாள் ஊழியனாக இருந்த அனுபவத்தை இங்கே பதிவிடுகிறேன். இது சுவாரஸ்யமான நிகழ்வா, இல்லையா என்பதைப் படிப்பவர்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

ஒரே ஒரு திருத்தம். பாண்டியராஜனைச் சந்தித்தது, ஆம்ப்ரோ கம்பெனியில் சேர்ந்தது எல்லாம் 1984-85-ஆம் ஆண்டுகளில்தான். ஆனால், யோசித்துப் பார்க்கையில், தீரன் சின்னமலை பகுதி அனுபவம் மட்டும் அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது என்று தோன்றுகிறது.

1979-ஆம் ஆண்டு. அப்போது நான் மட்டும் வேலை தேடி சென்னை வந்து, என் அத்தை வீட்டில் தங்கியிருந்தேன்.

அப்போது, தண்டையார்ப்பேட்டையில் ஸ்ரீசாய் டிரேடர்ஸ், கங்கப்பா கிருஷ்ணமூர்த்தி அண்ட் கோ என இரண்டு மூன்று பெயர்களில் நடந்துகொண்டிருந்த பழைய பேப்பர் நிறுவனம் ஒன்றில் சில காலம் வேலை(?!) செய்தேன்.

வேலைக்குப் பக்கத்தில் கேள்விக்குறியும் ஆச்சர்யக்குறியும் போட்டதன் பின்னணியில் ஒரு பெரிய கதையே இருக்கிறது. சுருக்கமாகச் சொல்கிறேன்.

அங்கே மேனேஜராக இருந்தவர் என் தூரத்து உறவினர். என் மேல் பரிதாபப்பட்டு அங்கு கிளார்க் உத்தியோகம் வாங்கிக் கொடுத்தார்.

உண்மையில், அப்போது அங்கு எந்த வேலையும் காலி இல்லை. காலி இல்லை என்பதைவிட, அங்கே பணியாற்றிக்கொண்டு இருந்தவர்களுக்கே வேலை இல்லை என்பதுதான் உண்மை. அங்கே பணியில் சேர்ந்த பிறகுதான் எனக்கு இந்த விஷயமே தெரிய வந்தது.

பழைய பேப்பர்களை வாங்கி, ரகம் பிரித்து, பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்கும் ஒரு நிறுவனம்தான் அது. அப்போது பேப்பர் மார்க்கெட் படு டல்லாக இருந்தது. நிறுவனமே தள்ளாடிக்கொண்டு இருந்தது. எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்பது அங்குள்ளவர்களாலேயே உறுதியாகச் சொல்ல முடியாத நிலை.

எனக்கு வாரக் கூலி. ஒரு நாளைக்கு 5 ரூபாய் வீதம் ஆறு நாளைக்கு 30 ரூபாய் என்று கணக்கிட்டு, ஒவ்வொரு சனிக்கிழமையும் கையில் கொடுத்துவிடுவார்கள். இதை அப்படியே என் அத்தையிடம் கொடுத்துவிடுவேன். ஞாயிற்றுக்கிழமை லீவ். சம்பளம் கிடையாது.

காலையில் சாப்பிட்டுவிட்டு, கையில் ஒரு டப்பாவில் சாப்பாடு எடுத்துப் போய், கம்பெனியில் மதியம் சாப்பிடுவேன். பிறகு, இரவு வீடு வந்ததும் சாப்பாடு. இடையில் கம்பெனியில் காலையில் ஒரு டீ, மதியம் ஒரு டீ கம்பெனி செலவில் கிடைக்கும். மற்றபடி நான் வேறு எந்தச் செலவும் செய்ய மாட்டேன்.

பவழக்காரத் தெருவில் உள்ள என் அத்தை வீட்டிலிருந்து காலையில் நடராஜா சர்வீஸில் புறப்பட்டால், இப்ராஹிம்ஜி தெரு வழியாக ஸ்டான்லி ஆஸ்பத்திரியைக் கடந்து, ஜி.ஏ.ரோடில் (கொல்லவார் அக்ரஹாரம் ரோடு என்பார்கள்) உள்ள கங்கப்பா கம்பெனியை அடைவேன். அதேபோல், சாயந்திரம் ஐந்தரை மணிக்கு வேலை முடிந்ததும், நடந்தே வீடு வந்து சேருவேன்.

இதெல்லாம் எனக்குக் கஷ்டமாக இல்லை. கம்பெனியில் வேலை செய்கிற மாதிரி வேலை செய்வதுதான் கஷ்டமாக இருந்தது. அதாவது, அங்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. ஆனால், ஏதாவது வேலை செய்கிற மாதிரி வேலை செய்துகொண்டு இருக்க வேண்டும். சும்மா உட்கார்ந்திருக்கக்கூடாது.

ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும் முதலாளி திடீர் விஸிட் செய்வார். (அவருக்குச் சென்னையில் வேறு சில இடங்களில், வேறு சில பிசினஸ்கள் இருந்தன.) ‘நீ என்ன செய்யறே?’, ‘நீ என்ன செய்யறே?’ ‘இவன் என்ன பண்றான்?’ என்றெல்லாம் மேனேஜரைக் கேட்பார். இவன் அக்கவுண்ட் டேலி பண்றான், அவர் சேல்ஸ் டீடெய்ல்ஸ் சரி பார்க்கிறார் என்று என்னத்தையாவது சொல்லிச் சமாளிப்பார் மேனேஜர். யாரும் எந்த வேலையும் செய்யாமல் ஈ ஓட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தெரிந்தால், தன்னை உள்பட வேலையை விட்டுத் தூக்கிவிடப் போகிறாரே என்ற பயம்.

ஆக, வேலையே இல்லாமல் நாள் முழுக்க வேலை செய்வது மாதிரி நடிப்பதுதான் அங்கே என் வேலை என்று ஆகிப்போனது. அதற்காகக் கதைப் புத்தகம் படித்துக் கொண்டு இருக்கக்கூடாது. எதையாவது பில் புக்கை வைத்துக் கூட்டிக்கொண்டு இருக்க வேண்டும். சுறுசுறுப்பாக ஏதாவது இன்வாய்ஸில் எழுதிக்கொண்டு இருக்க வேண்டும். போனில் யாருடனாவது(?) பரபரப்பாக வியாபாரம் பேசிக்கொண்டு இருக்க வேண்டும். ஆக்டிவ்வாக இருக்க வேண்டும். எப்போதுமே படு சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டு இருக்க வேண்டும். ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும், முதலாளி வருவார்.

நான் அங்கே வேலையில் சேர்ந்த முதல் வாரம் முழுக்க அவர் வரவில்லை. ஆனால், எனக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவை மதித்து நான் படு சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டு இருந்தேன். ஆனால், எதற்கும் ஒரு எல்லை இருக்கிறதல்லவா? (‘எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’ என்கிற வடிவேலுவின் டயலாகை மனசுக்குள் பின்னணியாக ஓடவிட்டுக் கொள்ளவும்.) எனக்கு இப்படி வேலை செய்வது மாதிரி வேலை செய்யச் சாமர்த்தியம் போதவில்லை. அடிக்கடி மேனேஜர், “என்னப்பா வேடிக்கை பார்க்கிறே? முதலாளி வந்து பார்த்தார்னா அந்த நிமிஷமே உன்னை வேலையை விட்டுத் தூக்கிடுவார். பரவாயில்லையா? உனக்குப் பரவாயில்லைப்பா! என்னையும் சேர்த்து இல்லே தூக்கிடுவார், வேலை இல்லாத பயல்களையெல்லாம் எதுக்கு வேலைக்கு வெச்சுக்கிட்டு தண்டச் சம்பளம் கொடுக்கிறேன்னு?” என்று என்னைக் கடுப்படிக்கத் தொடங்கினார்.

முதல் வார இறுதியில் கை நிறையச் சம்பளம் வாங்கியபோது, இந்த கம்பெனிக்காக இன்னும் நான் நிறைய உழைக்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டேன்.

அடுத்த வார மத்தியில் ஒரு நாள்... திடீரென்று மொத்த கம்பெனியுமே பரபரக்கத் தொடங்கியது. பேல் இயந்திரம் சுறுசுறுப்பாகப் பழைய பேப்பர்களை பேல் பிடிக்கத் தொடங்கியது. ஆட்கள் பரபரப்பாக இயங்கினார்கள். அங்கே இங்கே ஓடி ஓடி வேலை செய்தார்கள். அதை எடுத்து இங்கே போட்டார்கள். இங்கே கிடப்பதை அங்கே கொண்டு போய் வைத்தார்கள்.

அலுவலகத்தில் எங்களில் பலர் கால்குலேட்டரில் சுறுசுறுப்பாக எண்களைத் தட்டிக் கணக்குப் போட்டார்கள்; போனில் யாரையோ கூப்பிட்டு செம டோஸ் விட்டார்கள்; “சார், அந்த லெட்ஜரை இப்படித் தள்ளுங்க!” என்று அருகில் இருந்தவரிடம் பரபரப்பாகக் கேட்டார்கள். சீனிவாசன் என்று ஒருவர் (அவர் மேனேஜரின் ஒன்றுவிட்ட தம்பி) எல்லாரையும் மிஞ்சிவிட்டார். தொலைபேசி ரிசீவரை தோளில் இடுக்கிக்கொண்டு, கழுத்தைச் சாய்த்துப் பேசிக்கொண்டே இன்வாய்ஸில் ஏதோ எழுதிக்கொண்டு, கால்குலேட்டரிலும் ஏதோ கணக்குப் போட்டுக்கொண்டு சதாவதானி ஆகிவிட்டார். இவர்கள் பரபரப்பாக இயங்குவதைப் பார்த்து எனக்கு ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தது; ஒரு பக்கம் பயமாக இருந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பிசுக் பிசுக்கென்று விழித்துக்கொண்டு இருந்தேன்.

யாருக்கோ, ஏதோ உத்தரவு போட்டபடி வேகமாக உள்ளே வந்த மேனேஜர், “ஏம்ப்பா... குப்தாவுக்கு லெட்டர் அனுப்பச் சொன்னேனே, அனுப்பிட்டியா?” என்று ஒருவரைக் கேட்க, “அனுப்பிட்டேன் சார்! போன்லயும் புடிச்சி ஏறு ஏறுன்னு ஏறிட்டேன். ஒரு வாரத்துக்குள்ள சரக்கு அனுப்பிடறதா சொன்னாரு” என்று பதில் சொன்னார் அவர். அதே நேரம், முதலாளி என்கிற அந்த மாங்கா மடையன் உள்ளே நுழைந்துகொண்டு இருந்தார். நேரே போய் தன் குஷன் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, சினிமா தயாரிப்பாளர் பாலாஜி போன்று பைப் பிடித்தபடி, சுழல் நாற்காலியில் ஒரு சுற்றுச் சுற்றி எங்கள் எல்லோரையும் பார்த்தார்.

நான் சும்மா உட்கார்ந்திருப்பதை அவருக்கு முன்னால் கவனித்துவிட்ட மேனேஜர், சட்டென்று ஒரு லெட்ஜரை எடுத்து என் முன் போட்டு, “கூட்டல்களைச் சரி பாரு! அக்கவுண்ட்ஸ் டேலி ஆகமாட்டேங்குது. எங்கேயோ ஃபிகர் இடிக்குது. எங்கே தப்புன்னு பாரு. சீக்கிரம். க்விக்!” என்று உசுப்பினார். நானும் எங்கே தப்பு என்று தேட ஆரம்பித்தேன். ‘இங்கே வந்து வேலைக்குச் சேர்ந்ததுதான் தப்பு’ என்பதைத்தான் நான் போன வாரமே கண்டுபிடித்துவிட்டேனே!

முதலாளி அங்கே மூன்று மணி நேரத்துக்கு மேல் இருந்தார். கம்பெனியை ஒவ்வொரு இடமாக, வேலையெல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்று சுற்றிப் பார்த்தார். மேனேஜர் அவருடனேயே போய், நடந்துகொண்டிருக்கும் வேலைகள் பற்றி விளக்கிச் சொன்னார்.

ஒரு வழியாக, அவரை வாசல் வரை சென்று காரில் ஏற்றி டாட்டா காட்டி வழியனுப்பி வைத்துவிட்டு, உள்ளே வந்து ஒரு பெருமூச்சுடன், “உஸ்... அப்பாடா! இவனை நல்லபடியா பேக் பண்ணி அனுப்புறதுக்குள்ள என் தாலி அறுந்து போகுது!” என்றவர், என் பக்கம் திரும்பி, “என்ன ரவி, உனக்கு எத்தனை தடவைதான் படிச்சுப் படிச்சு சொல்றது! அதுவும், முதலாளி வந்திருக்கிற நேரத்துல இப்படிப் பக பகன்னு முழிச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தேன்னா என்ன அர்த்தம்? உனக்கு முன்னேறணும்கிற எண்ணம் துளியாவது இருக்கா இல்லையா? இன்னொரு தடவை இப்படி வேலையில்லாம உட்கார்ந்திருந்தேன்னா, முதலாளி என்ன உன்னை டிஸ்மிஸ் பண்றது... நானே பண்ணிடுவேன். சொல்லிட்டேன்!” என்று என்னை எச்சரித்தார்.

அந்த கம்பெனியில் என்ன முக்கியும், என்னால் ஒரு மாதத்துக்கு மேல் குப்பை கொட்ட முடியவில்லை.

ஆனால், ஒன்றைச் சொல்ல வேண்டும். அங்கே வேலை செய்த (வேலை செய்த என்று இந்தப் பதிவில் எழுதும்போதெல்லாம் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது) அந்த ஒரு மாத காலத்தில் சம்பளம் தவிர, உபயோகமாக எனக்கு எந்த நன்மையுமே கிடைக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது.

அரக்கு சீல் வைத்து தபால் மூலம் பார்சல்கள் அனுப்புவது எப்படி என்று அங்கேதான் கற்றுக் கொண்டேன். தந்தி அனுப்பக் கற்றுக் கொண்டது அங்கேதான்.

அங்கேதான், டெலிபோனில் டயல் செய்து பேசவும் கற்றுக் கொண்டேன். தியேட்டர்களுக்கெல்லாம் பேசி, அங்கே இப்போது என்ன படம் ஓடுகிறது என்று சும்மாவாச்சும் கேட்டுத் தெரிந்துகொள்வேன். தொலைபேசித் துறையில், என்கொயரிக்கு என அப்போது ஒரு நம்பர் உண்டு. அதற்குப் பேசி, இந்த கம்பெனி நம்பர் என்ன, அந்த ஹாஸ்பிட்டலின் நம்பர் என்ன என்று எதையாவது விசாரித்துக்கொண்டு இருப்பேன். டெலிபோன் டைரக்டரியை வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வது சரியா என்று கிராஸ் செக் செய்வேன். சரி, எனக்கும் பொழுது போகவேண்டாமா? அப்படித்தான் ஒருதடவை ‘மோட்சம் (தியேட்டர்) எங்கே இருக்கு?’ என்று கேட்க, எதிர்முனையில் இருந்த பெண் களுக்கென்று சிரித்து, தன் பக்கத்திலிருந்த சிநேகிதியிடம், ‘மோட்சத்துக்குப் போகணுமாமா’ என்று கிசுகிசுப்பாகச் சொல்லிவிட்டுப் பின்பு அந்தத் தியேட்டர் இருக்கும் ஏரியா புரசைவாக்கம் என்றும், போன் நம்பரும் கொடுத்தாள்.

டெலிபோனிலேயே தந்தி தருவது (ஃபோனோகிராம் என்று சொல்வார்கள்) எப்படி, ரிமைண்டர் வைப்பது எப்படி, டயம் ஆங்கிலம்/தமிழ் கேட்பது எப்படி என்றெல்லாம் அந்த கம்பெனியில் வேலை செய்தபோதுதான் தெரிந்துகொண்டேன். ட்ரங்க்கால் புக் செய்து பேசக் கற்றுக் கொண்டதும் அங்கேதான்.

கம்பெனிக்குள்ளேயே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள இன்டர்காம் என்று ஒரு வசதி இருப்பதைத் தெரிந்துகொண்டது அங்கேதான். எதிர் டேபிள்காரருக்கு, பக்கத்து டேபிள்காரருக்கெல்லாம் இன்டர்காம் போட்டுப் பேசுவேன். அட, வேலையாத்தாங்க!

மற்றபடி, ஒரு மாதத்துக்கு மேல் அங்கே நான் கற்றுக்கொள்ள புதிதாக எதுவும் இல்லை என்கிற கட்டத்தில், மேனேஜரிடம் சொல்லிவிட்டு வேலையை விட்டு நின்றுவிட்டேன்.

தீரன் சின்னமலை கம்பெனியில் ஒரு நாள் ஊழியனாக வேலை பார்த்தது இதற்கும் முந்தி. சுருக்கமாகச் சொல்கிறேன் பேர்வழி என்று கங்கப்பா கதையே பெருங்கதையாக நீண்டுவிட்டது. எனவே, சத்தியமாக அடுத்த பதிவில் வாட்ச் கம்பெனி வேலை!

ப்ளீஸ், வெயிட் அண்ட் ‘வாட்ச்’!
.

Monday, January 17, 2011

மீண்டும் ரேடியோவில் நான்!

1984. வேலை தேடி நானும் என் தம்பியுமாக‌ சென்னை வந்த‌ புதிது.

நான் எஸ்.எஸ்.எல்.ஸி (11ஆம் வகுப்பு) ப‌‌டித்துவிட்டு, மாமா வீட்டில் தங்கி, விழுப்புரம் ஆர்ட்ஸ் காலேஜில் பி.யு.ஸி முடித்துவிட்டு, மேலே படிக்கக் குடும்பச் சூழ்நிலையும், வறுமையும் இடம் கொடுக்காததால், டைப்ரைட்டிங் வகுப்புகளுக்குச் சென்று தமிழ், ஆங்கிலம் இரண்டும் ஹைஸ்பீட் வரை பாஸ் செய்து, மேலும் டைப்ரைட்டிங் இன்ஸ்ட்ரக்டர் கோர்ஸ் முடித்து, கொஞ்ச காலம் கிராமத்தில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்டியூட் வைத்து நடத்தி, ஒரே ஒரு செட் மாணவர்களை மட்டும் தட்டச்சுப் பரீட்சைக்குத் தயார் செய்து (மொத்தம் 6 மாணவ, மாணவிகள்) அனுப்பிப் பாஸ் செய்ய வைத்து, மேலே வியாபாரம் போணியாகாமல், 'கடை விரித்தேன் கொள்வாரில்லை; கட்டுவித்தேன்' என்னும் பட்டினத்தார் கதையாக இன்ஸ்டிட்யூட்டை மூடிவிட்டு, பிழைப்புத் தேடி சென்னைக்குப் பயணிக்க உத்தேசிக்கையில், பத்தாம் வகுப்பு முடித்திருந்த (அப்போது அதுதான் எஸ்.எஸ்.எல்.ஸி.) என் தம்பி, "நானும் உன்னுடன் கிளம்பி வருகிறேன் அண்ணா!" என்றான், வனவாசம் புறப்பட்ட‌ ராமனைப் பின்தொடர்ந்த லட்சுமணனாக.

அப்பா கொடுத்ததும், நான் சேர்த்து வைத்திருந்ததுமாக என் கையில் அப்போது மொத்தம் ரூ.1,500 மட்டுமே இருந்தது. சென்னையில் அத்தை வீடு உள்பட, எங்களின் உறவுக்காரர்கள் அதிகம் பேர் இருந்தார்கள். ஆனால், பள்ளிப் பருவத்தில் விழுப்புரம் மாமா வீட்டில் தங்கி, மாமியின் கொடுமைக்கு ஆளாகியிருந்த‌ அனுபவத்தால், சூடு கண்ட பூனையாக,‌ யார் வீட்டிலும் தங்க நான் விரும்பவில்லை.‌

எம்.ஜி.ஆர். நகரில், தூரத்து உறவினராக, 80 வயதுகளைக் கடந்த‌ ஒரு முதிய தம்பதி, இடிபாடான ஒரு வீட்டில் தனியே வசித்தார்கள். அவர்களின் வீட்டில் ஒரு அறையை ரூ.90 மாத வாடகைக்கு எடுத்துத் தங்கினோம். கரன்ட் பில்லுக்குத் தனியே ரூ.10. எனக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை, கையில் உள்ள பைசாவை வைத்துக்கொண்டு எத்தனைக் காலம் தாக்குப் பிடிக்க முடியும் என்று கணக்குப் போட்டேன்.

வீட்டுக்காரப் பாட்டி வீட்டிலேயே நாங்கள் இருவரும் காலையும் ராத்திரியும் சாப்பிடுவதென்று முடிவாயிற்று. பெரிய சமையல் எதுவும் பாட்டியால் முடியாது. ஒரு குழம்பு அல்லது ரசம், மோர், தொட்டுக்க ஊறுகாய், ஒரு கீரை. அவ்வளவுதான் மெனு. எங்கள் இருவருக்குமாகச் சேர்த்துச் சாப்பாட்டுக்கென‌ மாசம் ரூ.200 தரச் சொன்னார் பாட்டி. அன்றைக்கிருந்த விலைவாசிப்படி பார்த்தாலும், ரொம்ப சீப்! எனவே, கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக்கொண்டேன்.‌‌

ஆக, வேறு எந்தச் செலவுகளும் செய்யவில்லை என்றால், ஐந்து மாதங்களைப் பல்லைக் கடித்துக்கொண்டு ஓட்டிவிடலாம். பார்க்கலாம், அதற்குள்ளாகவா ஒரு வேலை கிடைக்காமல் போய்விடும் என்று ஒரு தைரியம் வந்த‌து.

வேலை தேடி அலையத் தொடங்கினேன். மாம்பலத்தில் ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் இன்ஸ்ட்ரக்டராக வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் 300 ரூபாய். அது கொஞ்ச நாள்தான். அங்கேயிருந்த ரவுடிப் பிள்ளைகள் எனக்குக் கட்டுப்படவே இல்லை. சென்னை நகரச் சூழ்நிலைக்குப் பழகாத ‌என்னை கேரோ செய்து வெறுப்பேற்றினார்கள். 20 நாள் வேலை செய்ததற்குண்டான சம்பளமும் கிடைக்கவில்லை.

வேலை தேடி அலைந்த இந்தச் சமயத்தில்தான் ஒரு நாள், இயக்குநர் பாண்டியராஜன் வீட்டில் போய் தவம் கிடந்ததும், தீரன் சின்னமலை பகுதியில் 'என்டர்பிரைஸிங் என்டர்பிரைஸஸ்' என்னும் வாட்ச் உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறியதொரு கம்பெனியில் ஒரு நாள் பணியாற்றியதும் நடந்தது.

பின்னர், நண்பர் மார்க்கபந்துவின் உதவியால் 'ஆம்ப்ரோ' பிஸ்கட் கம்பெனியில் டெப்போ இன்சார்ஜாக வேலைக்குச் சேர்ந்தேன். இது பற்றியெல்லாம் முன்பே விலாவாரியாக என் வலைப்பூவில் எழுதியிருக்கிறேன்.

பிஸ்கட் கம்பெனியில் எனக்கு மாதச் சம்பளம் ரூ.300. எனக்கும் என் தம்பிக்கும் மாதச் செலவுகளுக்கு இது போதாது. தவிர, பாரிமுனையில் இருந்த 'ஜெமினி இன்ஸ்டிட்யூட்'டில் டி.வி. மெக்கானிசம் பயில என் தம்பியைச் சேர்த்திருந்தேன். அதற்கு வேறு மாதக் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.

இந்த நிலையில்தான், மேல் வருமானத்துக்கு என்ன வழி என்று யோசித்தேன். இறுதியில் ஓர் உபாயம் கண்டுபிடித்தேன். ரேடியோ நாடகங்களில் நடித்தால் என்ன என்று ஒரு யோசனை ஓடியது. இதற்கு முன் சிறுவனாக இருந்தபோது, பாண்டிச்சேரி வானொலி நிலையத்தில், ஒரே ஒரு நாடகத்தில் நடித்திருக்கிறேன். அதன்பிறகு, அதைச் சுத்தமாக மறந்தே போயிருந்தேன். இப்போது மீண்டும் அந்த யோசனை வந்தது.

சென்னை வானொலி நிலையத்துக்கு ஆடிஷன் டெஸ்ட்டில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துக் கடிதம் எழுதிப் போட்டேன். உடனேயே தேதி கொடுத்து, வரச் சொல்லி அழைப்பு வந்தது. ஆடிஷன் டெஸ்ட்டில் கலந்துகொள்ள ஒரு சொற்பத் தொகை கட்டணம் வைத்திருந்தார்கள்.

அவர்கள் குறிப்பிட்ட தேதியில் போய்க் கலந்துகொண்டேன். சிறுவனாக இருந்தபோது, எந்த பயமும் இல்லை. ஆனால், இந்த முறை நடுக்கமாக இருந்தது; குரல் தேர்வில் ஜெயிக்க வேண்டுமே என்று கவலையாகவும் இருந்தது.

வழக்கம்போலவே ஒரு ஸ்க்ரிப்டைக் கொடுத்து, ஏற்ற இறக்கத்துடன் பேசி நடித்துக் காட்டச் சொன்னார்கள். தவிர, "உங்களுக்குத் தெரிந்த ஏதாவது நாடக வசனம் இருந்தால் பேசிக் காட்டலாம்" என்றார்கள். எனக்குக் குஷியாகிவிட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் கதை வசனம் முழுவதும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அதிலிருந்து, 'கிஸ்தி, திரை, வரி, வட்டி... வேடிக்கை! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி?' என்று பொளந்து கட்டினேன்.

"பாடத் தெரியுமா?" என்றார்கள். "சினிமா பாடல்கள் பாடுவேன்" என்றேன். "பாடுங்கள் பார்க்கலாம்" என்றார்கள். 'ஆனந்தம் விளையாடும் வீடு, நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு...' என டி.எம்.எஸ். குரலை உள்வாங்கிக்கொண்டு சில வரிகள் பாடினேன். அவர்களுக்குப் பிடித்துவிட்டது போலிருக்கிறது. "இன்னொரு பாடல் பாடுங்கள்" என்றார்கள். 'என்னம்மா ராணி, பொன்னான மேனி, ஆலவட்டம் போட வந்ததோ...' எனப் பாடினேன்.

"சரி, வீட்டுக்குப் போங்கள். பதில் வரும்" என்று அனுப்பிவிட்டார்கள். நம்பிக்கையுடன் வந்தேன்.

குரல் தேர்வில் நான் பாஸானதாக இனிப்புச் செய்தி, அடுத்த பதினைந்து நாளில் வந்தது.

அதன்பின், நாடகத்தில் பங்கேற்று நடிக்க, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சென்னை வானொலி நிலையம் என்னை அழைத்துக்கொண்டு இருந்தது. காலையில் சைக்கிள் எடுத்துக்கொண்டு போனால், பத்து மணிக்கு ரிகர்சல் ஆரம்பிப்பார்கள். மதியம் ஒரு மணிக்கு லன்ச் பிரேக். அங்கேயே உள்ள காண்ட்டீனில் சப்பாத்தியோ, உப்புமாவோ கிடைக்கும். பிறகு இரண்டு மணிக்கு அனைவரும் கூடியதும், ரெக்கார்டிங் ஆரம்பிப்பார்கள். நடிப்பவர்களில் பல பேர் உச்சரிப்பில் குழறிவிடுவார்கள். அல்லது, வரிகளை மாற்றிப் பேசிவிடுவார்கள். நான் ஒருமுறைகூடத் தடுமாறியது கிடையாது. இதனால், மற்றவர்கள் சொதப்பும்போது எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால், ரெக்கார்டிங் செய்பவர்களோ, நாடக இயக்குநரோ யாரையும் இதற்காகக் கடுப்படிக்கவே மாட்டார்கள். சிரித்துக்கொண்டே கட் செய்துவிட்டு, மீண்டும் விட்ட இடத்திலிருந்து பேசி நடிக்கச் சொல்வார்கள். இதனால் ரெக்கார்டிங் முடிய மாலை ஐந்தரை, ஆறு மணி ஆகிவிடும்.

ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், ஒருமுறை நடித்துவிட்டுச் சற்று காத்திருந்தால், கையோடு செக் தருவார்கள். வாங்கி வந்துவிடலாம். (அதை மாற்றுவதற்காகத்தான் மாம்பலம் இந்தியன் வங்கியில் முதன்முதலாக ஒரு கணக்கு ஆரம்பித்தேன். அது இன்றளவும் உள்ளது.) அப்போதெல்லாம் நாடகத்தில் ஒரு முறை பங்கேற்க, சன்மானமாக ரூ.200 கிடைத்தது. இந்த மேல் வருமானம் எனக்கு அப்போது பெரிய உதவியாக இருந்தது.

1987-ல் நான் 'சாவி' பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்த பின்னரும்கூட ரேடியோ நாடகங்களில் நடித்துக்கொண்டு இருந்தேன். 'சி' கிரேடு ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து, 'பி' கிரேடு, 'ஏ' கிரேடு என உயர்ந்தேன். ஒவ்வொரு கிரேடுக்கும் தனித்தனி சன்மானம். எனக்கான ரேடியோ சன்மானம் ரூ.500 வரை உயர்ந்தது. அந்நாளில், எனக்கு அது பெரிய தொகை. சாவியில் என் மாதச் சம்பளமே ரூ.500-தான் அப்போது!

அப்போதைய சென்னை வானொலி இயக்குநராக இருந்த எம்.கே.மூர்த்திதான் என்னைத் தேர்வு செய்தவர்; எனக்கு அதிகம் வாய்ப்புகளை வழங்கியவர். யாரேனும் நடிகர்கள் வரவில்லை என்றால், அவரே கதாபாத்திரமாகப் பங்கேற்று நடித்துவிடுவார்.

குமரேசன் என்றொரு நடிகருடன் ஒரு நாடகத்தில் நடித்தேன். அவர் அந்தக் காலத்தில் ‘கலியுகம்’ போன்ற ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்திருப்பதாகச் சொன்னார். தன்னை வளர்த்து ஆளாக்கியது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான் என்றும், ‘அவர் எங்கே போனாலும் நாங்கள் ஒரு ஏழெட்டுப் பேர் அவர் கூடவே போவோம்’ என்றும், கலைவாணர் பற்றிய இன்னும் பல நினைவுகளை அன்று அவர் எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.

டைப்பிஸ்ட் கோபு, செந்தாமரை, வி.எஸ்.ராகவன், ஒரு விரல் கிருஷ்ணாராவ், பீலி சிவம் போன்ற சினிமா நடிகர்களும் ரேடியோ நாடகங்களில் கலந்துகொண்டு நடிப்பார்கள் என்பது தெரிந்து ஆச்சரியப்பட்டேன். இவர்கள் அன்றைக்குக் காரில்கூட வராமல், வானொலி நிலையத்துக்கு வெளியே ஆட்டோவைக் கை தட்டி அழைத்து ஏறிச் சென்றதைப் பார்த்து இன்னும் அதிக வியப்பு எனக்கு. இவர்களுடனெல்லாம் நான் ரேடியோ நாடகத்தில் பங்கேற்று நடித்திருக்கிறேன். அதெல்லாம் இனிமையான அனுபவங்கள்!

கணீர்க் குரலுக்குச் சொந்தக்காரர் ஹெரான் ராமசாமி. இவருடனும் ஒரு சரித்திர நாடகத்தில் நடித்திருக்கிறேன் நான். மிகவும் அன்பான மனிதர். சக நடிகர்களைப் பாராட்டக்கூடியவர். என் இத்தனை ஆண்டு கால ரேடியோ அனுபவத்தில், என் நடிப்பை மனம்திறந்து பாராட்டிய ஒரே நடிகர் அவர்தான்.

1995-ல் ஆனந்த விகடனில் வேலைக்குச் சேர்ந்த பின்னர், முதல் ஒரு வருடம் மட்டுமே சென்னை வானொலி நிலைய நாடகங்களில் பங்கேற்று நடிக்க முடிந்தது. பின்னர், பத்திரிகை வேலை பளுவால் வானொலி அழைப்பை ஏற்க முடியாமல் போக, அவர்களும் பின்னர் அழைப்பு அனுப்புவதைத் தவிர்த்துவிட்டனர். அந்தத் தொடர்பு அத்தோடு அறுந்துவிட்டது.

கடைசியாக நான் வானொலியில் பங்கேற்றது நாடகத்துக்காக அல்ல. பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கையில் நடந்த சில முக்கியச் சம்பவங்களை ஒரு கட்டுரையாகத் தொகுத்து எழுதியிருந்தார்கள். அதை பிரபல வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், வர்ணனையாளர் மற்றும் கவிஞரான‌ ஜஹானாரா பேகமும் நானும் மாற்றி மாற்றிப் படித்தோம். ஒரு மணி நேரம் ஒலிபரப்பான நிகழ்ச்சி இது.

நான் பங்கேற்ற ரேடியோ நிகழ்ச்சிகளிலேயே எனக்குத் திருப்தியான நிகழ்ச்சியும் இதுதான்!

ஒரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்... நான் சிறுவனாக இருந்தபோது, பாண்டிச்சேரி வானொலி நிலைய‌ நாடகத்தில் பங்கேற்று நடித்ததை, பின்னர் அந்நாடகம் ஒலிபரப்பானபோது வானொலியில் கேட்டேனா இல்லையா என்பது எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், எனக்கு நினைவு தெரிந்து, மேல் வருமானத்துக்காக‌ நானே வலியச் சென்று கலந்துகொண்டு நடித்த சென்னை வானொலி நிலைய நாடகங்கள் எதையுமே, அது ஒலிபரப்பானபோது வானொலியில் நான் கேட்டது கிடையாது. வானொலியில் என் குரல் எப்படி இருந்திருக்கும் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது!

காரணம், அந்தக் காலத்தில் எங்களிடம் ஒரு சின்ன பாக்கெட் ரேடியோகூட இல்லை.
.

Saturday, January 15, 2011

ரமணீயன் எழுதிய கதை

ழுத்தாளர் ரமணீயனின் நினைவாக, ஆனந்த விகடனில் அந்தக் காலத்தில் வெளியான சிறுகதைகளில் ஒன்றை எனது வலைப் பதிவில் பிரசுரிப்பதாகச் சொல்லியிருந்தேன்.

அதன்படி, விகடனில் வெளியான அவரது சிறுகதைகளைப் படித்துப் பார்த்தேன். அவற்றுள், ‘அபிராமி வந்தாள்’ என்கிற சிறுகதை மிகவும் சிறியதாகவும், சுவையானதாகவும், கருத்துள்ளதாகவும் இருந்ததாக எனக்குத் தோன்றியது.

அந்தக் கதையை இங்கே பதிவிட்டுள்ளேன். கதையின் சுவையைக் கூட்டும் விதமாக ஒன்றிரண்டு மிகச் சிறிய திருத்தங்கள் மட்டும் செய்துள்ளேன். (பத்திரிகைக்காரன் புத்தி!)

ராமநாதனுக்குப் புரியவில்லை!

இத்தனை வருடங்களாக வராத அபிராமி இன்று திடுதிப்பென்று அவ்ர்கள் வீட்டுக்கு எதற்காக வந்துவிட்டுப் போக வேண்டும்? அவள் மட்டும் தனியாகவா வந்தாள்? இல்லை. தன்னுடைய மூத்த பிள்ளையையும், இரண்டு நாட்டுப் பெண்களையும், முதல் பேரனையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். காரில் வந்து இறங்கி, அவர்கள் வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்து, பேசி, சிரித்து, காபி சாப்பிட்டுவிட்டுப் போனாள்.

இதில் ராமநாதனுக்கு மாத்திரம் ஆச்சரியம் இல்லை; அவருடைய நான்கு பிள்ளைகளுக்கும் கொள்ளை ஆச்சரியம்! மூன்று நாட்டுப்பெண்களுக்கும்கூட அபிராமியின் வரவுக்கான காரணம் விளங்கவில்லை.

அபிராமி, ராமநாதனுக்கு நெருங்கிய உறவு. இருக்கப்பட்ட இடம். ஆனால், ராமநாதனும் ஒன்றும் அபிராமியின் வசதிகளைவிடத் தாழ்ந்து விடவில்லை. சொல்லப்போனால், அபிராமி சொந்த வீடு கட்டுவதற்கு முன்பே ராமநாதன் சொந்தமாக இரண்டு வீடுகள் கட்டியாகிவிட்டது. அபிராமி வாங்குவதற்கு முன்பே ராமநாதன் வீட்டுக்கு டெலிவிஷன் வந்துவிட்டது. ஆகவே, அபிராமி ஒன்றும் ராமநாதனைப் பற்றித் தாழ்வான அபிப்ராயம் வைத்துக் கொண்டு வராமல் இருந்திருக்க முடியாது. அப்படியே ஓர் அபிப்ராயம் இருந்திருந்தாலும், இப்போது திடுதிப்பென்று விஜயம் செய்யும்படி அவர் என்ன வகையில் உயர்ந்துவிட்டார்? தெரியவில்லை.

ராமநாதன் தன்னுடைய முதல் பையன் கல்யாணத்துக்கு அபிராமியை நேரிலேயே போய்க் கூப்பிட்டார். அபிராமி வரவில்லை. இரண்டாம், மூன்றாம் பையன்களின் கல்யாணத்துக்குப் பத்திரிகைகள் அனுப்பி வைத்தார். ஆனால், அபிராமி கலந்து கொள்ளவில்லை.

அபிராமியின் முதல் மகன் (வக்கீல்) கல்யாணத்துக்குப் பத்திரிகை மட்டுமே வந்தது ராமநாதனுக்கு. இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் போய்விட்டு வந்தார். இரண்டாவது பிள்ளை (டாக்டர்) கல்யாணத்துக்கு அழைப்பு வரவில்லை. ஆனாலும், விஷயத்தைக் கேள்விப்பட்டு இவராகவே வலியப் போய் விசாரித்துவிட்டு வந்தார்.

அவருடைய பையன்களுக்கு அது பிடிக்கவில்லை. “நாம் என்ன குறைந்தா போய்விட்டோம்?” என்று கேட்டான் மூத்தவன் சுந்தர்.

“அவர்கள் வராதபோது நாமும் போகக் கூடாது” என்றான் இரண்டாமவன் பாபு. மூன்றமவன் சந்துருவுக்கும் ரொம்பக் கோபம்.

இவ்வளவு வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளான அபிராமி, யாரும் எதிர்பாராத வகையில் தன் மூத்த பையன், அவனுடைய மனைவி, இரண்டாவது பையன், அவனுடைய மனைவி, குழந்தைகள் சகிதம் விஜயம் செய்தது எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்ததில் ஆச்சரியம் இல்லைதானே!

அபிராமி ஏன் வந்துவிட்டுப் போனாள் என்பதைப் பற்றி அவர்கள் என்னென்னவோ யோசித்துக் கொண்டார்கள்.

“ஒருவேளை, அவர்களுடைய வருமானம் அப்படி இப்படி ஆட்டம் கண்டிருக்கும். நாளைக்கு உதவி வேண்டியிருக்குமே என்பதற்குப் பூர்வாங்கமாக இந்த விஜயம் இருக்கும்” என்றான் பாபு.

மூன்றாம் நாள் சாயங்காலம், அபிராமியின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டு மாடியில் குடியிருக்கும் சாரதா வந்து ஒரு விஷயம் சொன்னாள்.

அபிராமி வீட்டில் சில நாட்களாகவே உள்ளுக்குள் மூட்டமாக இருந்த அந்தப் பிரச்னை திடுதிப்பென்று புகைந்து, கனலவும் ஆரம்பித்துவிட்டிருக்கிறது. டாக்டர் பையனின் மனைவிக்கும், வக்கீல் பையனின் மனைவிக்கும் முதலில் லேசான உரசல். இது எப்படியோ தூண்டப்பட்டுவிட்டது. இவனுக்கு பிராக்டீஸ் அதிகம், அவனுக்கு பிராக்டீஸ் குறைவு, இவன் சம்பாத்தியம் நிரந்தரம், அவன் சம்பாத்தியம் நிரந்தரமில்லை என்றெல்லாம் ஏதேதோ பேச்சுக்கள் எழத் துவங்கிவிட்டன.

“தனித்தனியே குடித்தனம் நடத்தி விடலாம். அதுதான் பிரச்னைக்கு ஒரே முடிவு” என்று வாதம் புரிந்தாள் வக்கீலின் பெண்டாட்டி. “ஆமாம். பிரிஞ்சுடறதுதான் ரொம்ப நல்லது” என்று டாக்டரின் மனைவியும் ஒத்துப் பாடினாள்.

ஆடிப் போய்விட்டாள் அபிராமி. தன் பிள்ளைகளையும் நாட்டுப் பெண்களையும் வைத்துக் கொண்டு, கணவனின் சம்பாத்தியம், கார், பங்களா எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு ஏகபோகமாகக் கோலோச்சி வந்த அவளுடைய கௌரவத்துக்கு இந்தப் பிரிவினை வாதம் நல்ல சாட்டையடி கொடுத்த மாதிரி இருந்தது. இதை எப்படித் தடுப்பதென்று அவளுக்குப் புலப்படவில்லை. தன் வீட்டு விவகாரங்களை ஒருநாளும் வெளியில் சொல்லாத அவள்கூடத் தாங்க முடியாமல் அடுத்த வீட்டு சாரதாவிடம் ஒரு குரல் அழுதுவிடும் அளவுக்கு இந்தத் தனிக் குடித்தன விவகாரம் அவளைப் பாதித்துவிட்டது.

இந்த விவரங்களையெல்லாம் சாரதா மூலமாகக் கேள்விப்பட்ட ராமநாதன் குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

“அபிராமி எதுக்கு வந்தாள்னு இப்போ உங்களுக்குப் புரிஞ்சதா?” என்று புன்னகையுடன் கேட்டார் ராமநாதன்.

“நாம் பங்களா கட்டியதோ, டி.வி. வாங்கியதோ அந்த அம்மாளுக்குப் பெருமையாகப் படவில்லை” என்றான் பாபு.

“ஏ.சி-யும் மற்ற வசதிகளும்கூட அவர்கள் கண்ணில் நம் குடும்பத்தைப் பற்றிய உயர்வான அபிப்ராயத்தை ஏற்படுத்தவில்லை” என்றான் சந்துரு.

“காசு இருந்தால் இவற்றையெல்லாம் யார் வேண்டுமானாலும் வாங்கிவிடலாம். ஆகவே, மற்றவர்களின் கண்ணுக்கு நம் குடும்பம் உயர்வாகத் தெரிவதற்குக் காரணம் இதெல்லாம் இல்லை. நாம் எல்லோரும் ஒன்றாக, ஒற்றுமையாகக் குடித்தனம் நடத்துகிறோமே, அதுதான் அவர்களுக்குப் பெருமையாகப் படுகிறது!” என்றான் சுந்தர்.

“ஆமாம். மூன்று நாட்டுப் பெண்கள் வந்த பிறகும் அவர்கள் வீட்டில் எப்படி இன்னும் சௌஜன்யம் நிலவுகிறது; எப்படி அவர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்துக் குடும்பம் நடத்துகிறார்கள் என்பதையெல்லாம் தன்னுடைய இரண்டு நாட்டுப் பெண்களும் பார்த்தாலாவது திருந்த மாட்டார்களா என்று நினைத்திருக்கிறாள் அபிராமி. அதன் பலன்தான் இந்தத் திடீர் விஜயம்!” என்று முடித்தார் ராமநாதன்.

- ஆனந்த விகடன் 12.9.1976 தேதியிட்ட இதழில் வெளியான சிறுகதை.
.

Thursday, January 13, 2011

ரேடியோவில் நான்!

தொலைக்காட்சி வருவதற்கு முன்பு, ரேடியோ நிகழ்ச்சிகள் பிரபலமாக இருந்த காலம். தினமும் இரவு எட்டரை முதல் எட்டேமுக்கால் மணி வரையில் நாடகம் ஒலிபரப்புவார்கள். அதற்குப் பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. இப்போது மெகா சீரியல்களுக்கு ஆதரவளிப்பதுபோல் அன்றைக்கும் ரேடியோ நாடகங்களுக்குத் தாய்க்குலங்களின் ஆதரவுதான் அதிகமாக இருந்தது. எட்டரை மணிக்குள் பரபரவென்று வேலைகளை முடித்துக்கொண்டு வந்து, சாவகாசமாக ரேடியோ முன் உட்கார்ந்துகொள்வார்கள். வால்யூமை அதிகப்படுத்துவார்கள்.

கணீர்க் குரலொன்று நாடகத்தின் தலைப்பைச் சொல்லிவிட்டு, அதில் நடிக்கும் நடிகர்களின் பெயர்களைக் கதாபாத்திரத்தின் பெயரோடு சேர்த்து அறிமுகப்படுத்தும். அறிவிப்பு முடியும் வரைக்கும், அதற்குப் பின்பு நாடகத்தின் காட்சிகளுக்கேற்பவும் நிலைய வித்வான் தனது குழுவினரோடு பின்னணி வாசிப்பார். அந்தப் பின்னணி இசை நாடகத்துக்கு நாடகம் வித்தியாசப்பட்டுத் தெரியாது. சந்தோஷம், துக்கம், அழுகை, கொண்டாட்டம் என எல்லாவற்றுக்கும் ரெடிமேடாக ஒரு டியூனை வைத்துக்கொண்டு, அதையே எல்லா நாடகங்களுக்கும் பின்பற்றுகிற மாதிரி தோன்றும்.

அந்நாளில், வானொலி என்றொரு மாதப் பத்திரிகை வந்துகொண்டு இருந்தது. அதில் அந்த மாதம் இடம்பெறப்போகும் ரேடியோ நிகழ்ச்சிகள், பஞ்சாங்கக் குறிப்புகள் போல் வரிசையாகக் கொடுக்கப்பட்டிருக்கும். 'திரைகானம்', 'நேயர் விருப்பம்' போன்ற திரை இசைப் பகுதிகளில், ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் எந்தெந்த படங்களிலிருந்து பாடல்கள் ஒலிபரப்பாகும் என்கிற பட்டியலும்கூட இருக்கும்.

'ஆல் இண்டியா ரேடியோ நாடக விழா' என்பது அந்நாளில் பிரசித்தமான ஒன்று. நாடகப் போட்டி வைத்து, அதில் வெற்றி பெற்ற பத்துப் பன்னிரண்டு நாடகங்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒலிபரப்புவார்கள். இந்த நாடகங்கள் ஒரு மணி நேரம் நடக்கும். நானும்கூட ஆவலோடு அவற்றை அந்த நாளில் கேட்டு ரசித்திருக்கிறேன்.

பின்னர், ஒரு திரைப்படத்தை எடிட் செய்து ஒரு மணி நேரமாகக் குறைத்து, 'ஒலிச்சித்திரம்' என்ற பெயரில் ஒலிபரப்பியது ஆல் இண்டியா ரேடியோ. குடும்பத்தோடு அமர்ந்து, அதை அத்தனை ஆவலாகக் கேட்டு ரசிப்போம்.

தொடர் நாடகங்களையும் ஒலிபரப்பியது ரேடியோ. அவற்றையும் ஒரு நாள் விடாமல் கேட்டு ரசித்த காலம் உண்டு. பெரியவர்களிடம் கேட்டால், மனோரமாவின் புகழ்பெற்ற 'காப்புக்கட்டிச் சத்திரம்' போன்ற தொடர் நாடகங்களைக் கேட்டு ரசித்ததைக் கதை கதையாய்ச் சொல்வார்கள்.

நான்கூட ரேடியோ நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஆர்வ மிகுதியில் அப்பா என்னை ரேடியோ நாடகத்தில் நடிக்க வைக்கும் பொருட்டு, பாண்டிச்சேரி வானொலி நிலையத்துக்கு எழுதிப் போட்டார். அப்போது எனக்குப் பத்து வயது. குரல் தேர்வுக்கு அழைப்பு வந்தது. 'ஆடிஷன்' என்பார்கள். அப்பா என்னை அழைத்துக்கொண்டு போனது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.

வானொலி நிலையத்தில், என் போன்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் அன்று ஆடிஷனுக்கு வந்திருந்தார்கள். என்னைத் தேர்ந்தெடுப்பார்களா, மாட்டார்களா என்கிற எந்தக் கவலையும் இல்லாமல் நான் சுற்றிலும் பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்பாதான் டென்ஷனாக இருந்தார்.

ஆடிஷன் துவங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக, நடித்துக் காட்ட‌வேண்டிய நாடகக் காட்சியை டைப் செய்து, ரோனியோடு காப்பியாக (ஜெராக்ஸ் மிஷின் வராத காலம். ஸ்டென்ஸில் பேப்பரில் டைப் கட் செய்து, அதைப் பிரதியெடுக்கும் மெஷினில் பொருத்தி, கைப்பிடியை உருட்டினால், ஒவ்வொரு பேப்பராக அச்சாகும். கார்பன் காப்பி என்பது அசல் அல்ல; அது நகல். ஆனால், இப்படி ரோனியோடு காப்பி எடுத்தால், ஒவ்வொன்றுமே அசல்!) ஆளுக்கொன்று தந்தார்கள். உடனேயே, வந்திருந்த பிள்ளைகள் அனைவரும் துடிப்பாக அதைப் படித்து, ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்கப் பழகத் தொடங்கிவிட்டார்கள்.

நான் என் கையிலிருந்த பேப்பரைப் பார்த்தேன். சிறுவர்களுக்கு நீதி புகட்டும்படியாக, ஏதோ ஒரு நாடகம். நான் சிறு வயதிலிருந்தே பள்ளிகளில் வீரபாண்டியக் கட்டபொம்மன், மனோகரா, அன்னையின் ஆணை படத்தில் சேரன் செங்குட்டுவன் நாடகம் என மனப்பாடமாகப் பேசி நடித்துப் பழகியிருந்ததால், இந்த ரேடியோ நாடக வசனம் ஜுஜுபியாகப் பட்டது. தவிர, மனனம் செய்யவேண்டிய அவசியமும் இல்லாததால், இரண்டொரு தடவைக்கு மேல் நான் அதைப் படிக்கவில்லை. மற்ற பையன்கள் ஒவ்வொருவரும் அதற்காக எப்படி மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள் என்று பார்ப்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏதோ சினிமாவில் நடிப்பது போன்று பற்களைக் கடித்தும், முறைத்தும், முஷ்டியை மடக்கி உயர்த்தியும், நாக்கைத் துருத்தியும் நடித்துக்கொண்டு இருந்தார்கள்.

ஆடிஷன் ஹால் சில்லென்று குளிரூட்டப்பட்டிருந்தது. எனக்கு நினைவு தெரிந்து நான் ஏ.சி. அறைக்குள் சென்றது அதுதான் முதல் முறை. அவ்வளவு பெரிய ஹாலில் ஒருவருமே இல்லை. நடுவாக ஒரே ஒரு மைக் மட்டும் ஸ்டேண்டில் வைக்கப்பட்டு இருந்தது. எதிரே இருந்த சுவரில் ஒரு செவ்வகக் கண்ணாடித் தடுப்பு. அதற்கு அப்பால் இருக்கும் சவுண்ட் இன்ஜினீயர் கை அசைத்தால் நடிக்கத் தொடங்கவேண்டும் என்பது உத்தரவு.

அதன்படியே செய்தேன். ஒரு சில நொடிகள் பேசி நடித்த‌தும், "நாலாம் பக்கத்தில் 'நான் அவனுடைய பேனாவை எடுக்கலே, சார்!' என்பதிலிருந்து படி!" என்று அசரீரி உத்தரவு வந்தது. அப்படியே படித்து நடித்தேன். மீண்டும் குறுக்கிட்டு, "இரண்டாம் பக்கத்தில் 'நாம இனிமே நண்பர்களா இருப்போம்டா' என்பதிலிருந்து படி!" என மறு உத்தரவு. இப்படியே ஒரு பதினைந்து நிமிடம் ஆடிஷன் நடந்தது. அப்புறம் என்னைப் போகச் சொல்லிவிட்டார்கள்.

ஒரு வாரத்துக்குப் பிறகு, பாண்டிச்சேரி வானொலி நிலையத்திலிருந்து, நான் குரல் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக, காணை கிராமத்தில் இருந்த எங்கள் வீட்டுக்குக் கடிதம் வந்தது.

அதன்பின்பு உடனேயே நாடகத்தில் நடிக்க அழைப்பும் வந்தது. நான் நடித்த முதல் நாடகம் 'தீபாவளிப் பரிசு'. அதில் என் கேரக்டர் பெயரும் 'ரவி'தான். தீபாவளியன்று ஒலிபரப்பாயிற்று இந்த நாடகம். அப்பாவுக்குச் சந்தோஷமான சந்தோஷம்! நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறுவன் என்பதால், எனக்கு இதில் பெரிய சந்தோஷம் எதுவும் தெரியவில்லை என்பதுதான் நிஜம்!

இந்த நாடகம் ஒலிபரப்பான அடுத்த மாதமே திருச்சி வானொலி நிலையத்திலிருந்தும், சென்னை வானொலி நிலையத்திலிருந்தும் தங்கள் ஆடிஷன் டெஸ்ட்டுகளில் வந்து கலந்துகொள்ளும்படி, அப்பா எதுவும் விண்ணப்பிக்காமலே கடிதங்கள் வந்தன.

திருச்சிக்கு அழைத்துப் போனார் அப்பா. அங்கேயும் இதே நடைமுறையிலான ஆடிஷனில் கலந்துகொண்டேன். அங்கும் குரல் தேர்வில் நான் தேர்ச்சி பெற்றேன். நாடகத்தில் பங்கேற்று நடிக்க அங்கிருந்தும் அழைப்பு வந்தது. ஆனால், போய்க் கலந்துகொள்ளவில்லை. சென்னை ஆடிஷனிலும் கலந்துகொள்ளவில்லை.

காரணம், அப்போது நாங்கள் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்த ஒரு குக்கிராமத்தில் வசித்தோம். திருச்சிக்கும் சென்னைக்கும் பயணம் மேற்கொள்வது என்பது எங்களுக்கு அந்நாளில் அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பயணப்படுவதுபோல! தவிர, 'ரேடியோவில் என் மகனும் நடிக்கிறான்; அவன் குரல் தமிழ்நாடு பூராவும் கேட்கிறது' என்கிற சந்தோஷத்தைத் தவிர, பெரிய வருமானம் ஒன்றும் அதில் கிடைக்கவில்லை என் அப்பாவுக்கு. போக வர பஸ் சார்ஜுக்குக்கூடக் கட்டுப்படியாகவில்லை, ரேடியோ நாடகத்தில் நடித்ததன் மூலம் எனக்குக் கிடைத்த சன்மானம்.

இதெல்லாம் போக, ரேடியோ நாடகத்தில் நான் நடித்ததை ஏதோ சினிமாவில் நடித்தது மாதிரி... பாராட்டி அல்ல; கேலியாகப் பேசினார்கள். "படிக்கிற புள்ளைக்கு ஏங்க இந்த வேல? புள்ளைய நல்லா படிக்க வைப்பீங்களா... அத்த வுட்டுப்புட்டு நாடகம், கூத்துன்னுக்கிட்டு இது என்ன கண்ணராவி!" என்றார்கள். அப்பாவுடன் பணியாற்றிய சக ஆசிரியர்களும், அப்பா என்னைத் தவறான வழியில் திசை திருப்பிக் கெடுப்பதாகக் குற்றம் சாட்டினார்கள்.

எனவே, 'தீபாவளிப் பரிசு' என்கிற அந்த‌‌ ஒரே ஒரு நாடகத்தில் நடித்த‌தோடு, என் ரேடியோ அனுபவம் அப்போதைக்கு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

கவனிக்க... அப்போதைக்கு! மீண்டும் நான் ரேடியோ நாடகங்களில் பங்கேற்றது குறித்துப் பின்னர் எழுதுகிறேன்!
.

Wednesday, January 05, 2011

பிடியுங்கள் பொக்கிஷத்தை!

'பொக்கிஷம் வேணுமா?' பதிவில் என் வலைப்பூ நேயர்களுக்கு ஒரு புதிர்ப் போட்டி வைத்து, விடை கண்டுபிடிக்கச் சொல்லியிருந்தேன். அதற்கான விடைகளை அனுப்பக் கடைசி தேதி ஜனவரி 15 வரை கொடுத்திருந்தேன்.

யோசித்துப் பார்க்கையில், புதிர் முடிவை அவ்வளவு தள்ளி அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. காரணம், சரியான விடையைப் பின்னூட்டமாக அனுப்பும் முதல் நேயருக்குத்தான் புத்தகப் பரிசு என்று அந்தப் பதிவில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். அப்படியிருக்க, எப்போது சரியான விடையை முதலில் கிடைக்கப் பெற்றேனோ அப்போதே பரிசை அவருக்கென்று அறிவித்துவிட வேண்டியதுதானே? தள்ளி அறிவிக்க வேண்டியதன் அவசியம் என்ன? நிறையப் பின்னூட்டங்கள் வரட்டும் என்கிற குயுக்தியா?

ஒரு வாசகனாக இந்தப் பதிவை நான் மீண்டும் படித்தபோதுதான் எனக்குள் இந்தக் கேள்வி எழுந்தது. எனவே, இதோ உடனடியாக அந்தப் புதிருக்கான விடைகளையும் பரிசுக்குரியவரையும் அறிவிப்பதென்று முடிவெடுத்துவிட்டேன்.

புதிரில் கொடுத்துள்ள குறிப்புகளின்படி அட்டவணைப்படுத்தினால், அது இப்படித்தான் அமையும்.

இடமிருந்து முதல் வீட்டில்:
ஆந்திரர் - மஞ்சள் வீடு - பூனை - (பானம் ?) - வீணை

இரண்டாம் வீட்டில்:
கேரளக்காரர் - நீல வீடு - குதிரை - டீ - மிருதங்கம்

மூன்றாம் (நடு) வீட்டில்:
தமிழர் - சிவப்பு வீடு - ஆடு - பால் - வயலின்

நான்காம் வீட்டில்:
வட இந்தியர் - வெள்ளை வீடு - நாய் - பழரசம் - கடம்

ஐந்தாம் வீட்டில்:
கன்னடத்துக்காரர் - பச்சை வீடு - (மிருகம் ?) - காபி - கஞ்சிரா

ஆக, இளநீர் அருந்துபவர் ஆந்திரர்; மாடு வளர்ப்பவர் கன்னடக்காரர் என்றாகிறது. இதுவே சரியான விடை.

என்னிடமிருந்த பழைய 'ரீடர்ஸ் டைஜஸ்ட்'டுகளைப் புரட்டிக்கொண்டு இருந்த‌போது, அதில் நான் பார்த்த ஒரு சுவாரசியமான புதிர்தான் இது. இதைத் தமிழுக்காகச் சற்று வார்த்தைகளை மாற்றிக் கொடுத்துள்ளேன்.

இந்தப் புதிரை விடுவிக்க நான் ரொம்பவே மண்டையை உடைத்துக்கொண்டேன். யோசித்து யோசித்து மூளை குழம்பி, உண்மையில் தலைவலியே வந்துவிட்டது. விடை கண்டுபிடிக்க முழுசாக இரண்டு நாள் தேவைப்பட்டது எனக்கு.

எனவேதான், ஓர் அலட்சிய மனோபாவத்தோடு, யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் இந்தப் புதிருக்கான விடையை என்ற எண்ணத்தில், ஜனவரி 15 வரை கடைசி தேதி கொடுத்திருந்தேன். சரியான விடையை முதலில் அனுப்பும் நபருக்கு மட்டுமே புத்தகப் பரிசு என்று குறிப்பிட்டிருந்தது நல்லதாகப் போயிற்று. காரணம், சரியான விடையைப் பலர் பின்னூட்டம் இட்டிருந்தார்கள்.

ஆச்சரியமாக, நான் மேற்படி புதிரைப் பதிவிட்டு முடித்த ஒரு சில மணி நேரத்துக்குள்ளேயே திரு.சொக்கன் தனது விடையை மிகத் தெளிவாகவும், விரிவாகவும், மிகச் சரியாகவும் கணித்து எழுதியிருந்தார். அதேபோல் 'அதிஷா'வும்! இவர் விரிவாக எழுதவில்லையென்றாலும், நான் கேட்டிருந்த இரண்டு கேள்விகளுக்குமான சரியான விடைகளை எழுதியிருந்தார்.

ஹேட்ஸ் ஆஃப் சொக்கன்! ஹேட்ஸ் ஆஃப் அதிஷா!

முறைப்படி சொக்கனுக்கு மட்டுமே நான் புத்தகப் பரிசு தந்தால் போதுமானது. ஆனால், இன்னொரு புத்தகம் கூடுதலாகப் பரிசளித்தால் யாராவது சண்டைக்கு வரப்போகிறீர்களா என்ன? எனவே, பதிவிட்ட அன்றைய தினமே சரியான விடையை அனுப்பி வைத்த 'அதிஷா'வுக்கும் புத்தகம் பரிசளிப்பதென்று தீர்மானித்திருக்கிறேன்.

வாழ்த்துக்கள் சொக்கன் மற்றும் அதிஷா!

'ஆனந்த விகடன் காலப் பெட்டகம்' புத்தகம் அச்சாகிக்கொண்டு இருக்கிறது. மொத்தம் 368 பக்கங்கள்; விலை ரூ.180/‍- சென்னை புத்தகச் சந்தை தொடங்கும் 4-ம் தேதியன்றே கொண்டு வரவேண்டுமென்று கடுமையாக உழைத்தும், முடியாமல் போய்விட்டது. வார இறுதியில் சனி, ஞாயிறுக்குள் புத்தகச் சந்தையில் உள்ள விகடன் ஸ்டாலில் மேற்படி புத்தகம் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று விகடன் அச்சகத்தார் உறுதியளித்திருக்கிறார்கள்.

9.1.11 ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 3 மணி முதல் 6 மணி வரை நான் சென்னை புத்தகச் சந்தையில் இருப்பேன். அப்போது நேரில் வந்தால் சொக்கன், அதிஷா இருவரையும் சந்தித்தது போலவும் இருக்கும்; பரிசை நேரில் தந்தது போலவும் இருக்கும்; கூரியர் செலவை மிச்சம் பிடித்தது மாதிரியும் இருக்கும்.

புத்தகச் சந்தைக்கு வருவதற்கு முன்னதாக, அன்று (9.1.11) காலையில் என்னை மொபைலில் தொடர்புகொண்டு, 'புத்தகம் தயாராகிவிட்டதா?' என்று எதற்கும் ஒரு தடவை தீர விசாரித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

என் மொபைல் எண்: 98409 24911
.

மாதவன் சார் - பி.கே.பி.

கிராமம் என்றாலே எனக்கு ஒருவித போர்’ உடனடியாய்த் தொற்றிக் கொள்ளும்.

உண்மையில் கிராமம் அழகுதான்!

ஆறு சுழித்துக்கொண்டு ஓடும்; பறவைகள் கி அமைக்கும்; பச்சை மரங்கள் காற்றைக் குளிர்ச்சியால் குளிப்பாட்டும்; கட்ட கட்ட வயல்களில் கதிர்கள் கதகளி பழகும்; புல்லின் தலையில் பனி தொப்பி போட்டுவிடும்; சூரிய உதயத்தில் பாலுமகேந்திராவுக்குத் தோதாய் வானம் சிரிக்கும்; ஆண்கள், மாடுகளோடு நடந்து வயல் உழுவார்கள்; பெண்கள், ஆற்றில் நிறைய சுதந்திரத்தோடு குளிப்பார்கள்; பம்ப் செட்டுகளில் குழந்தைகள் குதிக்கும்; ஒரே ஒரு டீக்கடை இருக்கும்; தட்டியில் ஔவையார் போஸ்டர். சமயத்தில் லேட்டஸ்ட்டாய்அன்பே வா’.

இதெல்லாமும் அழகுதான்; இனிமைதான். ஆனால், எத்தனை நாளைக்கு? என்னைப் பொறுத்தவரை முதல் நாளுக்கப்புறம் எல்லாமே சலித்துப் போகும்.

வருஷத்திற்கு ஓரிரு தடவை கிராமத்திற்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் எனக்குண்டு. சென்னையில் ரயிலேறி மயிலாடுதுறையில் இறங்கணும். அங்கிருந்து மேற்கே போகும் பஸ் பிடித்து, ஒரு மணி நேரம் பயணம் செய்து இறங்கி, பொடிநடையாய் 1 கி.மீ. நடந்து வந்து என் அக்காவைச் சந்திக்கணும்.

என்னக்கா, எப்படி இருக்கே? ஏன் கொஞ்சம் இளைச்ச மாதிரி தெரியுது? மணி என்ன சொல்றான்? பேசறானா? எங்கே, மாமா சொல்லுடா கண்ணா, சொல்லு... மா... மா... மாமா! தோடு புதுசா செஞ்சு கொடுத்தாரா அத்தான்? அப்புறம்... புதுசா டிராக்டர் வாங்கியிருக்கீங்களாமே..?’ - இப்படியாகச் சில கேள்விகள் கேட்கணும்.

வயலிலிருந்து அத்தான் வந்தவுடன் அவரோடு சேர்ந்து சாப்பிடணும். புதுசாய் வந்திருக்கிற யூரியா உரத்தைப் பற்றியும், பயிருக்கு அடியுரம் இடுவதில் இருக்கிற சில டெக்னிக்குகள் பற்றியும்வயலும் வாழ்வும்’ நடத்துவார். பெருமாள் கோயில் மாடு மாதிரி தலையாட்டணும். பைசா புரியாது. அப்புறம் கை கழுவி,துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு...

ஒரு வாரம் தங்கிட்டுத்தான் போகணும்” என்று கனமான தொண்டையில் சொல்லிவிட்டு, வயலுக்குப் போய்விடுவார்.

அக்கா வேலை எல்லாம் முடித்துக்கொண்டு வந்து பாயில் படுத்துக்கொண்டு, “இப்ப ஏதாச்சும் சம்பளம் உசந்திருக்காடா ராஜு?” என்பாள். இல்லாவிட்டால், “எப்பதான் கல்யாணம் பண்ணிக்கப் போறே?” என்பாள். இந்த இரண்டு கேள்விகளை தடவைக்குத் தடவை மாற்றி மாற்றிக் கேட்பாள். சற்றைக்கெல்லாம் தூங்கிவிடுவாள்.

இதைப் போல இரண்டு வருஷத்துக்கு முன்பு, ஒரு பயணத்தில் நான் அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருந்தபோதுதான், மாதவன் சாரை சந்தித்தேன்.

மாதவன் சார் கேரளக்காரர் இல்லை. பள்ளிக்கூட வாத்தியாரும் இல்லை. அதென்னவோ, அவர் பெயரைச் சொல்லும்போதெல்லாம் சார் சேர்க்காமல் சொல்ல வரவில்லை. தானாய் மனத்திலிருந்து ஓர் அதீத மரியாதை வந்துவிடுகிறது. யாருக்கும் வரும்.

அறுபத்தாறு வயது மாதவன் சாருக்கு இரண்டு பையன்கள். இரண்டு பேரும் விவசாயத்தில். இருவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் பிறந்து... வீட்டில் சின்ன டிக்கெட்டுகள் ஐந்தாறு இருக்கும்.

மாத்வன் சாரை முதல் சந்திப்பில் என்னால் சரியாய் எடை போடவே முடியவில்லை. எனக்கு அவர் ஓர் ஆச்சரிய ஆசாமியாகத் தெரிந்தார்.

கதர் வேஷ்டி கட்டி, கதர் ஜிப்பா போட்டிருந்தார். வயலுக்கு அருகில் களத்து மேட்டில், சாய்வுப் பலகையின் பின்னால் ஒரு விரித்த குடை சணல் போட்டுக் கட்டப்பட்டிருக்கும். நாற்காலியில் தடியாய் ஒரு புத்தகத்தை மடி மீது வைத்துப் புரட்டிக்கொண்டு இருந்தார். வெள்ளை வெளேரென்று மீசை.

இடையிடையே எழுந்து வந்து, போரடித்துக்கொண்டு இருப்பவர்களிடம், “கருக்கா அதிகம் நிக்குது. இது சொந்த நெல்லு. பாத்துத் தூவுங்க” என்று சொல்லிவிட்டுத் திரும்பப் போய் புத்தகத்தைப் புரட்டினார்.

அவர் வயலுக்கு அடுத்த வயல்தான் என் அக்காவினுடையது. இங்கே கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு அவரைக் கவனித்துக்கொண்டு இருந்த நான், முதலில் அது ஏதோ சம்பளக் கணக்குப் புத்தகம் என்றுதான் நினைத்திருந்தேன்.

திடீர் திடீர் என்றுஅடடா!” என்று சொல்வதையும், பாக்கெட்டுக்குள்ளிருந்து பேனா எடுத்துப் புத்தகத்தில் அடிக்கோடு இடுவதையும் கண்டு, அவரை நெருங்கினேன்.

என்ன புஸ்தகம் சார் அது?”

ஏதாவது புராணப் புத்தகமாய் எதிர்பார்த்தேன்.

பால் எலுவார்ட் கவிதைத் தொகுப்பு.”

அசந்துபோனேன்.

சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. அவர் உடை, தோற்றம், அமர்ந்திருந்த இடம், சுற்றிலும் நடக்கும் வயல் பணிகள்... இந்தச் சூழ்நிலையில் எவனும் இதை எதிர்பார்க்க முடியாது.

யார் சார் அது?” என்றேன்.

என்னையறியாமல்சார்’ வந்தது.

பிகாஸோ தெரியுமா? அவர் ஃபிரண்ட். பொயட்; சர்ரியலிஸ்ட்.”

சார், உங்க க்வாலிஃபிகேஷன் என்ன?”

பழைய பி..! பாத்தா தெரியலை இல்லை?”

நிஜமா தெரியலை சார். நீங்க என்னவா இருந்தீங்க சார்?”

உட்காருங்க தம்பி” என்று அடுத்த நாற்காலியைக் காட்டினார். உற்சாகமாய் அமர்ந்தேன். இன்னமும்கூட இவர் ஒரு படித்த, நிறையப் படிக்கிற மனிதர் என்கிற விஷயத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

என்ன கேட்டீங்க? ம்... நான் ஸ்டேட் பாங்க்லே பிராஞ்ச் மேனேஜரா இருந்து ரிடையரானேன். மாலை போட்டு அனுப்பிட்டாங்க. இந்தியாவின் முதுகெலும்புக்கு வந்துட்டேன்.”

உங்களைச் சந்திச்சதிலே எனக்கு ரொம்பச் சந்தோஷம், சார்! பேச ஆளே கிடைக்காம தவிச்சிக்கிட்டிருந்தேன். ஆமாம், இந்த வயசிலயும் எப்படி சீரியஸான விஷயங்களையெல்லாம் படிக்கிறீங்க?”

கொஞ்சம் சிரித்தார் மாதவன்.

உங்க வயசென்ன தம்பி?”

இருபத்தேழு.”

என்ன செய்யறீங்க?”

மெட்ராஸ்ல ஒரு கம்பெனில அக்கவுன்ட்டன்ட்டா இருக்கேன்.”

கவிதை படிப்பீங்களா?”

எப்பவாவது. அதுவும் தமிழ் மட்டும்.”

வானப் புடவைக்கு கஜமெத்தனை? கடலின் காலுக்கு உயரமென்ன? விண்ணின் ஓட்டைகளில் ஜ்வலிப்பவையை எண்ணு! முடியுமா இதெல்லாம்? முடியாது. இது நடக்காத காரியம். நம்மாலே முடிஞ்சதைச் செய்யலாமே! என்னாலே எந்த விஷயத்தையும் என் அறிவுக்கு எட்டலைன்னு சட்டுனு உதறிட முடியாது. இது சாதா விஷயம், இது சீரியஸ் விஷயம்னு கூறு போட்டு ஜாதி மாதிரி பிரிச்சு வெச்சுத் தொடாம விட்டுட முடியறதில்லை.”

எனக்கு மாதவன் சார் மேல் மகா மதிப்பு உடனடியாய் விழுந்துவிட்டது. அவரோடு நிறைய நேரங்களைக் கழிப்பது என்று அந்த நொடியே முடிவெடுத்தேன்.

நாங்கள் பேசினோம். சாயந்திர ஆரஞ்சு வெளிச்சம் மரக் கிளைகளினூடே பிசிறடிக்க, மாந்தோப்புக் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து... சலசலத்துச் சீறிப் பாயும் ஆற்றின் ஓரமாகச் சம்மணம் போட்டமர்ந்து, மடியில் இருந்து கடலைக் காய்களை ஒவ்வொன்றாய் உடைத்துத் தின்றுகொண்டே நாங்கள் பேசுவோம்.

இதில் நான் பேசுவது மிகக் குறைவாகவே இருக்கும். ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, அரை மணி நேரம் வாயை மூடிக்கொண்டு விடுவேன். அவர் அழகாய், ஆழமாய் விளக்கிக்கொண்டே, சலிக்காமல் பதில் சொல்கையில், உதாரணங்களுக்கு எட்டுத் திசைகளிலிருந்தும் கவிதை வந்து குதிக்கும்.

பாப்லோ நெரூடா படிச்சிருக்கீங்களா?” என்பார். வழக்கம்போலஇல்லை” என்பேன்.

ஓவியத்தில் க்யூபிஸம் தெரியுமா?”

க்யூப் என்றொரு விளையாட்டு தெரியும்.”

சல்வடோர் டாலி என்ன எழுதினான் தெரியுமா?”

சார், இந்த மாதிரி தெரியுமா, தெரியுமானு கேக்காதீங்க. நீங்களே சொல்லிடுங்க” என்பேன்.

எனக்கும் ஒரு பைத்தியக்காரனுக்கும் உள்ள ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், நான் பைத்தியம் இல்லை - அப்படீன்னு எழுதினான்.”

உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், நான் அறிவாளி இல்லை” என்றேன்.

நோ ராஜு! நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. வைரம் வெட்டி எடுத்த உடனேயே பளிச்சிடறது கிடையாது. என்கிட்டே ஒரு தேடல் நெருப்பு அணையாம தீவிரமா தகிச்சுக்கிட்டே இருந்திச்சு. இப்பவும் இருக்கு. உங்ககிட்டே அந்தத் தேடல் இல்லை. உங்க கம்பெனில என்ன தயாரிக்கிறீங்க?”

காருக்கான பாட்டரி.”

பாட்டரி எப்படித் தயாரிக்கிறது, நம்ம நாட்டுல அதன் ஸ்கோப் என்ன... இப்படி பாட்டரி பத்தியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?”

தெரியும்.”

காரோட இன்ஜின் பத்தி..?”

தெரியாது.”

தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டலை நீங்க. உங்க வட்டம் பாட்டரியோடு நின்னு போச்சு. ஒருவேளை கார் இன்ஜின் தயார் பண்ற கம்பெனில இருந்தா ஆர்வம் காட்டியிருப்பீங்க. ஆனா, என் வட்டம் பெரிசு. எதை எடுத்துக்கிட்டாலும், அது சம்பந்தப்பட்ட அத்தனையும் எனக்குத் தெரிஞ்சாகணும். இந்தத் தாகம் நிறையப் பேருக்கு ஏற்படறதில்லை. ஏற்படணும்னு ஒண்ணும் கட்டாயமும் இல்லை. அதனாலே நீங்க என்னைப் பார்த்து ஆச்சரியப்படறதும் தேவையில்லை.

ஆனாலும், நான் ஆச்சரியப்படுவேன்.

மாதவன் சாரை சந்தித்த பின்னர், சென்னை வந்து அவருக்குக் கடிதம் எழுதினேன். அவரும் பதில் எழுதினார்.

எனக்கு வாழ்வில் சோர்வும் சலிப்பும் ஏற்படும்போதெல்லாம், என்னை எழுப்பி முன்னே ஓடச் செய்யும் முள்ளங்கிகளாக இருக்கும் அவரது கடிதங்கள். தோண்டத் தோண்ட அவரிடமிருந்து புதிய புதிய கோணங்கள் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தன. வாவ்..! இவர் லட்சத்தில் அல்ல; கோடியில் ஒரு மனிதர் என்ற என் பிரமிப்பும் அதிகரித்தது.

நடுவில் எழுந்த ஒரே ஒரு சந்தேகத்தைப் போன தடவை, ஆறு மாசம் முன்பு சென்றிருந்தபோது கேட்க நினைத்தேன். காபியைக் குடித்துவிட்டு டம்ளரை வைத்துவிட்டுக் கேட்டேன்...

தப்பா நினைக்கக்கூடாது. உங்களைப் பல துறைகளிலும் வளர்த்துக்கிறதனாலயும், எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்கிறதனாலயும், நமக்கு நிறையத் தெரியும்கிற பெருமிதத்தைத் தவிர, வேற என்ன லாபம்?”

ரொம்ப மேம்போக்கான கேள்வி. தமிழகத்தின் முதலமைச்சர் யார் மிஸ்டர் ராஜு?”

எம்.ஜி.ஆர்.”

உங்களுக்குக் காலையிலே டிபன் சாப்பிடணும், ஆபீஸ் போகணும், கூட்டணும், கழிக்கணும், மத்தியானம் சாப்பிடணும், சாயங்காலம் சினிமா, இல்லை அரட்டை... சாப்பாடு, தூக்கம் - இதுதானே உங்க ரொட்டீன் வாழ்க்கை?

ஆமாம்.”

அதனாலே தமிழகத்தின் முதலமைச்சர் யார்னு தெரியலைன்னாலும், உங்க ரொட்டீன் வாழ்க்கை தடைப்படப் போறதில்லை. உங்களுக்கு அது ஏன் தெரிஞ்சிருக்கணும்? இதை ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன். விஷயங்களை, விவரங்களை நாம லாப, நஷ்டக் கணக்குப் பார்த்துத் தெரிஞ்சுக்கறதில்லை. அவங்கவங்களுக்கு இருக்கிற தாகத்தைப் பொறுத்தது.”

அதாவது, நான் கேக்க வந்தது...”

புரியுது. சமுதாயத்துக்கு என்ன லாபம்? அதானே..?

யெஸ்! வித்தியாசமா பார்க்க, சிந்திக்கத் தெரிஞ்ச நீங்க, உங்க அறிவை ஏன் சமுதாய மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தலை?”

உங்களுக்குத் தெரிவிக்காத விஷயங்கள் நிறைய இருக்கு, ராஜு. இருபது வருஷத்துக்கு முன்னாடி நான் ஓர் எழுத்தாளன், தெரியுமா? அப்போ என்கிட்டே ஒரு வெறியே இருந்துச்சு. ‘தனி மனித எழுத்தினால் சரித்திரமே புரண்டிருக்கிறது, புரட்சித் தீ எழுந்திருக்கிறது, எழுத்தினால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை’ அப்படீன்னெல்லாம் மேடைகளிலே பேசியிருக்கேன். அனுபவத்திலே என் கருத்து தப்புன்னு புரிஞ்சுக்கிட்டேன். பொம்மை செய்யறவனின் விரல்கள் மட்டும் திறமையா இருந்தா போதாது, ராஜு... அந்த மண்ணும் தரமா, குழைவா இருக்கணும். எத்தனையோ இலக்கியமா எழுதியிருக்கேன். பிரச்னைகளை அலசியிருக்கேன். புதுமையான நடைமுறை சொல்யூஷன்ஸ் தந்திருக்கேன். அந்த எழுத்துக்களுக்குப் பலன்... அடுத்த வார இதழில் ரெண்டு பேர்பிரமாதமா எழுதியிருந்தார் ஆசிரியர்’ என்பதோடு சரி. இப்போ வரதட்சிணைக் கொடுமை பத்தி எத்தனை ஆயிரம் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வந்துடுச்சி. சாதனை என்ன? நின்னு போச்சா அந்தப் பிரச்னை? கதைகள் அந்த நிமிஷத்திலே ஓர் உத்வேகத்தை ஏற்படுத்திடும். ஆனா, அந்த வேகத்துக்கு நீர்க்குமிழியின் ஆயுசுதான்! எங்காவது ஒரு இதயம், படைப்பினால் திருந்தலாம். ஆனா, அதை என்னால சாதனையா ஏத்துக்க முடியலை. மூணு நாளா சாப்பிடாம, ‘பசி ஐயா’ன்னு சொல்ற ஒருத்தனுக்கு, விளைஞ்சு நிக்கிற வயலைக் காட்டி,இந்த வயல் பூரா என்னதுதான். அறுவடை பண்ணி, போரடிச்சி, மில்லுக்கு அனுப்பி அரிசியாக்கி சமைச்சுப் போடறேன், காத்திரு’ன்னு சொல்ற மாதிரியான சாதனை இது. சமுதாயமே மாறணும்னு பேனாவைப் பிடிச்ச எனக்கு அது சரியான பாதையா தோணலை. புகழுக்காக எழுதப் பிடித்தமில்லை. பேனாவை மூடிட்டேன் ராஜு! அப்புறம் குடும்பச் சூழ்நிலைகள், பிரச்னைகள் என்னை எனக்காக வாழறவனா மாத்தி, சமுதாயக் கவலைகள் விடுபட்டுப் போச்சு!

இவருக்குள் இத்தனை மாதவன்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. மனத்தில் அவரைக் கிட்டத்தட்ட பூஜிக்கவே தொடங்கிவிட்டேன்.

உங்களுக்குப் பிரச்னைகள் ஏதாவது இருக்கா சார்?” என்றேன், அன்று.

ஒண்ணே ஒண்ணு!”

என்ன சார்?”

பர்சனல். ஆனாலும், எனக்கு வடிகால் தேவை. அதனால சொல்றேன். இப்ப கொஞ்ச நாளா என் வார்த்தைகள் என் மகன்களினாலே அவ்வளவா எடுத்துக்கப்படறதில்லை. வயசானவன் சும்மா தொணதொணப்பான் அப்படின்னு லேசா ஒரு முனகல் துவங்கியிருக்கு. என்னால அவங்களைப் புரிஞ்சுக்க முடியுது. அவங்களாலே என்னைப் புரிஞ்சுக்க முடியலை. என்னை நான் மாத்திக்க முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.”

அந்தச் சந்திப்புக்குப் பிறகு நான் எழுதின நான்கு கடிதங்களுக்கு மாதவன் சாரிடமிருந்து பதில் இல்லை.

ஏன்? என்ன ஆயிற்று? என் அக்காவுக்குக் கடிதம் எழுதினேன், யாரையாவது விட்டு அவரிடம் கடிதம் எழுதச் சொல்லும்படி.

போன வாரம் அக்கா பதில் எழுதியிருந்தாள்... “நீ எழுதியுள்ள அந்தக் கிழவர் செத்துப் போய்விட்டார் போன மாசம்.”

கப்பென்று உள்ளுக்குள்ளே அடைத்துக் கொண்டது. சொந்தம் இல்லை; ரத்த உறவு இல்லை. ஆனால், கண்கள் கசிந்தன.

முந்தாநாள் சனிக்கிழமை புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அக்காவின் ஊருக்கு வந்தேன். கொஞ்ச நேரத்தில் மாதவன் சார் வீட்டுக்கு வந்தேன். அவர் படம் மாலை போட்டுக்கொண்டிருந்தது. மகன்கள் இல்லை. மருமகள்கள் இருந்தார்கள். அவர் படுக்கும் ஈஸிசேர் இருந்தது குப்பையாய், தூசியாய்.

என்னை ஞாபகம் இருக்கா?”

மெட்ராஸ்தானே? வர்றப்பல்லாம் வந்து பேசுவீங்களே, ஞாபகம் இருக்கு.”

என்ன ஆச்சு அவருக்கு?”

நல்ல சாவுதான். அவஸ்தைப்படாம, வேற நோய் எதுவும் வராம, ஒருநாள் காலையில் இறந்துட்டார்.”

என் கண்கள் திரை கட்டின.

உங்க அக்கா வீட்டுக்குப் பன்னண்டு புஸ்தகம் கொடுத்தனுப்பிச்சோம். உங்க கிட்டே கொடுக்கச் சொல்லி ஒப்படைச்சார் அவர்.”

கடிதம் எழுதாதற்குக் காரணம் புரிந்தது. அவர் கொடுத்த புத்தகங்களை வாங்கிப் புரட்டியபோது, மரணத்தின் காரணம் புரிந்தது.

ஒரு புத்தகத்தினுள் எழுதி வைத்திருந்த அந்தக் கடிதத்தில், அவர் கையெழுத்து மிகத் தடுமாறியிருந்தது.

“அன்புள்ள ராஜு!

சமீபகாலமாய் நான் உங்களுக்குக் கடிதம் எழுதவில்லை. இயலாமைதான் காரணம்.

எனது கண்கள் உழைத்து, ஓய்ந்துவிட்டன. என் செயல்கள் அத்தனையையும் முறித்துப் போட்டுவிட்டன அவை. காலையில் எழுந்து பல் துலக்கப் பின்புறம் செல்லக்கூட இன்னொருவர் உதவி தேவைப்பட்டது. தினம் எதையாவது படிக்காவிட்டால் எனக்கு உறக்கம் வராது. ஆனால், அத்தனை என் எண்ணங்களையும் சாட்டையால் அடித்து ஒடுக்கிவிட்டன. நடக்கவும், உட்காரவும், சாப்பிடவும் என்று எல்லாவற்றுக்கும் உதவுபவர்களின் உதடுகள், முதல் ஒரு வாரம் மட்டுமே மௌனமாய் இருக்கும்.

தவிர, நான் உணர்ந்தேன்... இனி என்னாலும் மற்றவர்களாலும் என் வாழ்க்கையைப் பொறுத்தவரை எதிர்பார்க்கப்படும் ஒரே நிகழ்ச்சி, என் மரணம் மட்டுமே! நானும் அந்த நிகழ்ச்சிக்காகவே காத்திருந்தேன்.

நாம் ஒரு சமயம்மெர்ஸி கில்லிங்’ பற்றிப் பேசியிருக்கிறோம், நினைவிருக்கிறதா? கருணைக் கொலை! அது நியாயமானதே என்று நீங்கள்கூடச் சொன்னீர்கள். என் எண்ணம்மெர்ஸி சூசைட்’ என்ற ஒன்றைப் பற்றி உடன் நினைத்தது. கருணைத் தற்கொலை! செய்வதற்குக் காரியங்கள் எதுவும் எனக்கு இல்லை. இருந்தாலும் உத்தரவுகள் மட்டுமே இட முடிகிற நிலை. மாலை வானத்தைத் தினமும் போல் ரசிக்க முடியாது. காலை பேப்பரை எழுத்து ஒன்று விடாமல் படிக்க முடியாது. இன்னும் படிக்க நினைத்த புத்தகங்கள் எத்தனையோ பாக்கி இருக்கின்றன. ஒரு குடும்பத் தலைவன் என்கிற முறையில் அத்தனைக் கடமைகளையும் செய்து முடித்து விட்டேன். என் இறப்பினால் விதவை ஆக மனைவிகூட இல்லை. ஆக, அந்த நாளுக்காக எதற்காகக் காத்துக்கொண்டு இருக்க வேண்டும் என யோசித்தேன். தீர்மானித்தேன். மாத்திரைகள் சில கடமையாற்றின.

யாருக்கும் தெரியாது. தெரியப்போவது இல்லை. ஆனால், சமீப காலமாக எல்லாவற்றையும் சொல்லி வந்த உங்களிடம் மட்டும் சொல்ல நினைத்து இந்தக் கடிதம். பல புத்தகங்கள் இத்துடன். படியுங்கள். உபயோகமாகலாம். ஒரே ஒரு அட்வைஸ்... அந்த நிமிடத்துச் சூழ்நிலைக்கு நியாயமாய்ப் படுவதை நிறைவேற்றத் தயங்காதீர்கள்.

என் இறுதியான வாழ்த்துக்கள் - உங்களின் எல்லா முயற்சிகளுக்கும்!

அன்புடன், மாதவன்.

நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன். “ஏண்டா, என்னடா?” என்று ஓடி வந்த அக்கா,என்னடா அது லெட்டர்? ஏன் அழறே? ஏதாச்சும் காதல் விஷயமா?” என்றாள்.

(ஆனந்த விகடன் 27.3.83 இதழில் வெளியான சிறுகதை)

.