உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, August 03, 2020

தாமினி என்ன ஆனாள்? - 5

கிருஷ்ணவேணி இறங்கினாள். அது ஒரு பெட்ரோல் பங்க். இருளில் நின்றிருந்தது. தூரத்தில் அதன் அலுவலகக் கட்டடத்தில் மட்டும் ஒரு சின்ன சி.எஃப்.எல் பல்பு எரிந்துகொண்டிருந்தது.

“வாங்க” என்று முன்னால் நடந்தான் நாகராஜ். கிருஷ்ணவேணி புரியாமல் பின்தொடர்ந்தாள். பெட்ரோல் இல்லை என்பதற்கு அறிகுறியாக, கூம்புக் குழாய்கள் வைத்து, குறுக்கே மஞ்சள் பட்டை நாடா வேலி போடப்பட்டிருந்தது. நாகராஜ் அதைத் தாண்டிக்கொண்டு போனான்.

“யார் சார்… பெட்ரோல் கிடையாது. பாலம் ஏறிப் போங்க. ஒரு கி.மீட்டர்ல பாரத் பெட்ரோல் பங்க் ஒண்ணு வரும்…” என்று கட்டடத்திலிருந்து குரல் வந்தது. நாகராஜ் பொருட்படுத்தாமல் நெருங்கிச் சென்று, அங்கிருந்தவனிடம் தணிந்த குரலில் ஏதோ பேசினான். பங்க் ஆசாமி வெளியே வந்து கையசைத்து ஏதோ சொன்னான்.

நாகராஜ் மீண்டும் அவளிடம் வந்து, “மேடம், இந்தப் பக்கமா போனீங்கன்னா, பேக் சைடுல ஒரு ரெஸ்ட் ரூம் இருக்கு. போயிட்டு ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வந்துருங்க. நான் கார்ல வெய்ட் பண்றேன்” என்றான்.

“தேங்க்ஸ்ண்ணா…” என்றபடி மஞ்சள் வேலி  தாண்டிச் சிறிது தூரம் சென்றவள், மீண்டும் திரும்பி காருக்கு வந்தாள்.  பின்ஸீட்டில் வைத்திருந்த கைப்பையில் இருந்து ஒரு பாக்கெட்டை எடுத்துக்கொண்டாள். விஸ்ப்பர் சானிட்டரி நாப்கின்.

பீரியட்ஸுக்கு இன்னும் நாள் இருக்கிறது. ஆனால், எதற்கு வம்பு? வழியில் சங்கடம் என்றால், மறுபடியும் காரை நிறுத்தச் சொல்ல வேண்டும்!

“மேடம், மொபைல்லயே ஃப்ளாஷ் இருக்கும். இருந்தாலும், எதுக்கும் இதையும் வெச்சுக்கோங்க” என்று ஒரு மினி டார்ச் லைட்டை அவளிடம் தந்தான் நாகராஜ். வாங்கிக்கொண்டு பெட்ரோல் பங்க்கை நோக்கி நடந்தாள் கிருஷ்ணவேணி. ஆசுவாசப்படுத்திக்கொண்டு, ஒரு பத்து நிமிடத்துக்குப் பிறகு காருக்குத் திரும்பினாள்.  

கார்க் கதவைத் திறந்து, ஏறி உட்கார்ந்தாள். “புறப்படுவோமா, மணி இப்பவே 11 ஆகுது மேடம்! என்றபடி, பெல்ட்டைப் பொருத்திக்கொண்டு, காரை ஸ்டார்ட் செய்தான் நாகராஜ். கொஞ்சம் ரிவர்ஸ் வந்து, பாலத்தின் மேல் ஏறி, கார் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தது. 

“அப்பா போன் பண்ணியிருந்தார் மேடம்” என்றான் நாகராஜ். “ஏதாவது பிரச்னையானு கேட்டார். ‘இல்ல சார், இங்க ஒரு பங்க் இருக்கிறதா மேப்ல காண்பிச்சுது. அதான், கொஞ்சம் நிறுத்தியிருக்கேன். மேடம் ரெஸ்ட் ரூம் போயிருக்காங்க. வந்ததும் பேசச் சொல்றேன்’னேன். பேசிடுங்க மேடம். சார் கவலைப்படப் போறாரு! என்றான்.

அதற்குள் அப்பாவே அவள் லைனுக்கு வந்தார். “என்னம்மா… ஒண்ணும் பிரச்னையில்லியே? என்றார் கவலை தோய்ந்த குரலில். “ஒண்ணும் இல்லப்பா. நீங்க சொல்லுங்க. தாமினி பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சுதா? என்றாள் கிருஷ்ணவேணி.

“திரும்ப அந்த செக்யூரிட்டி கிட்டப் பேசினம்மா. அவன் கிட்ட ‘இன் அண்டு அவுட்’ என்ட்ரி ரெஜிஸ்டர் இருக்குமில்லையா… தாமினியை யார் அழைச்சுக்கிட்டுப் போனாங்கன்னு அதுல ஏதாவது நோட் பண்ணியிருக்கானு பார்க்கச் சொன்னேன். உன் பேர்ல மட்டும், 3:30 மணிக்கு உன்னை அனுப்பினதா குறிச்சிருக்கானாம் அந்த உதய். நாகராஜ் கிட்ட ஆதார் நம்பர், போலீஸ் பர்மிஷன் எல்லாம் பார்த்து பக்காவா செக் பண்ணி, ரெஜிஸ்டர்ல கார் நம்பரையும் குறிச்சுக்கிட்டு, நாகராஜோட சிக்னேச்சரையும் வாங்கியிருக்கானாம். ஆனா, தாமினி பேருக்கு நேரா எந்த விவரமும் இல்லாம, வெறுமே கோடு போட்டிருக்கானாம். அவனைக் கான்டாக்ட் பண்ணலாம்னா தொடர்ந்து ஸ்விச்டு ஆஃப்னே வருது…” என்று பேசிக்கொண்டே போனவர், “இரும்மா, ஒரு போன் கால் வருது. அதை அட்டெண்ட் பண்ணிட்டுத் திரும்ப உன் லைனுக்கு வரேன்” என்று இணைப்பைத் துண்டித்தார்.

கிருஷ்ணவேணி நகம் கடித்தபடி காத்திருந்தாள். அரை மணி நேரம் கழித்து அப்பாவே மறுபடி தொடர்பு கொண்டார். “ஆயுர்வேத சாலையின் மேனேஜர் பேசினார்ம்மா! கவலைப்பட வேணாம். அவர்தான் தாமினியை அழைச்சுட்டுப் போயிருக்கார்” என்றார்.

சட்டென்று மனதில் சுமந்துகொண்டிருந்த ஒரு பெரிய பாறையை இறக்கிவைத்தது மாதிரி, நிம்மதிப் பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது கிருஷ்ணவேணியிடம்.   

“ஏன் பின்ன அவ போன் எடுக்கலையாம்? என்றாள் கிருஷ்ணவேணி.

“அது தெரியலைம்மா. நீ இன்னிக்கு ஹோமைவிட்டுக் கிளம்பறேன்னு மேனேஜருக்குத் தெரியும். உன்னை சென்ட் ஆஃப் பண்ணிட்டு, அவளையும் கூட்டிட்டுப் போலாம்னு வந்திருக்காரு. வழியில செக்கிங் அது இதுன்னு கொஞ்சம் லேட்டாயிடுச்சாம். அதுக்குள்ள நீங்க கிளம்பிட்டீங்க. அந்தப் பையன் கிட்ட எல்லாம் விசாரிச்சுக்கிட்டு, தாமினியைக் கூட்டிட்டுக் கிளம்பிட்டாராம். ‘ஆக்சுவலா இங்கே இவங்களைத் தனியா தங்க வைக்கிறது சரியில்லேன்னு, இன்னிக்கு ரெண்டு பேரையுமேதான் அழைச்சுட்டுப் போறதா இருந்தேன், சார்! ஆனா, நீங்க உங்க பொண்ணைக் கூட்டிக்க ஏற்பாடு பண்ணிட்டீங்க. இது சின்னப் பொண்ணு பாவம்… இங்கே யோகா டீச்சரா வொர்க் பண்ணிட்டிருந்தாங்க ‘அவந்திகா’னு ஒரு லேடி. ரொம்பத் தங்கமானவங்க. ஆலப்புழாலேர்ந்து டெய்லி வந்து போவாங்க. தாமினிக்கும் அவங்களைத் தெரியும். அதனால தாமினியை சாயந்திரமே அவங்க வீட்ல கொண்டு விட்டுட்டு, நான் என் வீட்டுக்குப் போயிட்டேன். உங்க நம்பரைக் கொடுத்து அவங்களையே உங்க கிட்டப் பேசச் சொன்னேன். பேசினாங்களா?’னு கேட்டார். பேசலையேன்னேன். அவந்திகா நம்பரையும் எனக்கு மெசேஜ் பண்ணியிருந்தார். அவங்களுக்கும் ட்ரை பண்ணிட்டுதான் இருக்கேன், லைன் கிடைக்கலே! என்றார்.

“அவங்க நம்பரை எனக்கும் அனுப்புங்கப்பா. நானும் ட்ரை பண்ணிப் பார்க்கறேன்” என்றாள் கிருஷ்ணவேணி. அடுத்த சில விநாடிகளில் அவந்திகாவின் நம்பர் கிடைத்தது. உடனே அந்த எண்ணுக்குப் போன் செய்தாள்.

“ஹலோ, அவந்திகா ஹியர்! என்று எதிர்முனையில் குரல் கேட்டது.

“மேடம், நான் கிருஷ்ணவேணி…”

“ஹாய்… எப்படிம்மா இருக்கே..? என்று அவந்திகா கேட்டதற்குப் பதில் சொல்லாமல், “தாமினி இருந்தா அவகிட்ட போனைக் கொடுங்க” என்றாள் கிருஷ்ணவேணி.

“தாமினியா..?! நீ என்ன சொல்றே? என்றாள் அவந்திகா.

(தொடரும்)

0 comments: