கிருஷ்ணவேணிக்கு மறுபடி கவலையும் பயமும் நெஞ்சை அழுத்தின. ஓடுகிற காரிலிருந்து கதவைத் திறந்து குதித்துவிடலாமா என்றுகூட ஒரு முட்டாள்தனமான ஆவேசம் வந்தது.
“அப்பா என்னம்மா சொன்னாரு? எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறேன்னு சொன்னாரா?” என்று கேட்டான் நாகராஜ்.
“பண்ணிடுவார்ண்ணா! பண்ணலேன்னா அப்புறம் நடக்கிறதே வேற. அவரை நான் உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன். ஆனா, இவ என் ‘காலை’ அட்டெண்ட் பண்ணவே மாட்டேங்கறாளே?” என்றாள் கிருஷ்ணவேணி கரகரத்த குரலில்.
“உங்க பேரைப் பார்த்திருப்பாங்க. விட்டுட்டுப் போயிட்டீங்களேன்னு உங்க மேல கோவமாயிருக்கும்…” என்றான் நாகராஜ்.
“இல்லண்ணா. அவ அப்படியெல்லாம் செய்யக்கூடியவ இல்லே. செய்யவும் தெரியாது அவளுக்கு. ரொம்ப நல்ல பொண்ணு. நான் போன் பண்றேன்னா பாய்ஞ்சு வந்து எடுப்பா. அவ அப்பா கிட்ட பேசும்போதெல்லாம் மறக்காம என்னையும் அக்கா, அக்கானு குறிப்பிட்டுப் பேசுவா. ‘அக்கா இன்னிக்கு சாம்பார் வெச்சிருந்தாங்க டாடி; மம்மிகூட அவ்ளோ டேஸ்ட்டா வெச்சதில்லே’ன்னுவா ஒரு நாள். ‘அக்கா இன்னிக்கு எனக்கு அவங்க ஸ்டைல்ல தலை பின்னிவிட்டாங்க’ன்னுவா ஒரு நாள். என்னோட சேர்ந்து தாடையோட தாடையா ஒட்டி செல்ஃபி எடுத்து, அதுக்கு மொபைல் ஆப் மூலமா முயல் மாதிரி காது, மீசையெல்லாம் வெச்சு அவங்கப்பாவுக்கு அனுப்பினா ஒரு நாள். ப்ச்… அவளை விட்டுட்டு வந்தது தாங்கலண்ணா எனக்கு. அழுகையா வருது!” என்று மீண்டும் வெடித்து அழத் தொடங்கினாள் கிருஷ்ணவேணி.
நாகராஜுக்கு என்ன பேசுவது, அவளை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. சாலையில் கவனமாக வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான்.
“நான் துரோகிண்ணா… பச்சைத் துரோகி. நம்பிக்கைத் துரோகி. எனக்கு நல்ல சாவே வராதுண்ணா!” என்று பொங்கிப் பொங்கி அழுதாள்.
“கூல்டவுன் மேடம். ஒண்ணும் பயப்படாதீங்க. உங்க தங்கச்சியையும் நாம மீட்டுக்கலாம். மொபைலை தெரியாம சைலன்ட்டுல போட்டிருப்பாங்களாயிருக்கும். எதுக்கும் ‘கால் மி, அர்ஜன்ட்’னு மெசேஜ் கொடுத்து வைங்க. பார்த்தா கூப்பிடுவாங்க” என்றான் நாகராஜ். அப்படியே செய்தாள்.
“அங்க லேண்ட் லைன் இருந்தா கூப்பிட்டுப் பாருங்களேன்” என்றான். “இருக்கும். ஆபீஸ் ரூம்ல இருக்கும். ஆனா, அதைப் பூட்டிட்டுப் போய்ப் பல நாளாச்சே!” என்றவள், அந்த எண்ணுக்கும் ‘கால்’ செய்தாள். அதையும் யாரும் எடுப்பதாயில்லை.
“ஏன் மேடம், வாசல்ல செக்யூரிட்டி ரூம் பார்த்தேனே… அங்கயும் ஒரு போன் இருக்கில்லே? அந்த நம்பர் தெரிஞ்சா அடிச்சுப் பாருங்களேன்! செக்யூரிட்டிக்கிட்ட வேணா கேட்டுப் பார்க்கலாம்” என்றான் நாகராஜ்.
“அந்த நம்பர் தெரியாதே! இருங்க, எங்கப்பாவுக்குத் தெரிஞ்சிருக்கலாம். அவர் கிட்டே கேட்டுப் பார்க்கிறேன்” என்றவள், அப்பாவுக்கு ‘கால்’ செய்தாள்.
அப்பா எடுத்தார். அவள் கேட்கும் முன்பாகவே, “அதுக்குதாம்மா ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன். நீ கவலைப்படாதே! அவளை நாம அழைச்சுக்கலாம். நீ பயப்படாம, அழாம வந்து சேரு. எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்றார்.
“அப்பா, அவளுக்கு தைரியம் சொல்லலாம்னு ரெண்டு மூணு தடவை போன் போட்டேன். ஆனா, அவ எடுக்கவே இல்லை. அங்கே செக்யூரிட்டி நம்பர் உங்களுக்குத் தெரியும்தானே? அவருக்கு போன் போட்டு, தாமினி எப்படி இருக்கா, என்ன பண்றான்னு கேளுங்களேன். அந்த நம்பரை எனக்கும் அனுப்புங்க. நானும் விசாரிக்கறேன்” என்றாள்.
“இதோ பேசறேன். பேசிட்டு உனக்குத் தகவல் சொல்றேன். வழியில எதுவும் பிராப்ளம் இல்லையே? போனை நாகராஜ்கிட்ட கொடு!” என்றார் அப்பா. கொடுத்தாள்.
“என்ன நாகராஜ், அங்க நிலமை எப்படி இருக்கு? ஒண்ணும் பிரச்னை இல்லையே? ஏதாவதுன்னா உடனே எனக்குக் கால் அடி! இங்கே போலீஸ் டிப்பார்ட்மென்ட் சீஃப் மொத்தப் பேரும் எனக்கு தோஸ்த். கேரளா பார்டரைத் தாண்டியாச்சில்லே… தைரியமா வா. என் பொண்ணை பத்திரமா கொண்டு வந்து சேர்க்க வேண்டியது உன் பொறுப்பு!” என்றார்.
“ஷுர் சார்! குமுளி தாண்டி வந்திட்டிருக்கோம்…” என்றான் நாகராஜ்.
“ஐ நோ! மொபைல்ல ட்ராக் பண்ணிட்டுதான் இருக்கேன். கரெக்டான ரூட்டுலதான் வந்துட்டிருக்கே. குட்! உனக்கு டிராவல்ஸுல சம்பளம் அதிகம் தரலேன்னு சொன்னேயில்லே… இங்க என் ஃப்ரெண்டு ரிடையர்டு ஜட்ஜ் ஒருத்தர், ‘டிரைவர் வேலைக்கு ஆள் வேணும். நல்ல பையனா இருந்தா சொல்லுங்க’ன்னார். நான் உன் பேரை சஜஸ்ட் பண்ணலாம்னு இருக்கேன். ரொம்ப நல்ல மனுஷன். நேர்மையான மனுஷன். பரமேஷ்வர் தாக்கூர்னு கேள்விப்பட்டிருக்கியா, அவர்தான். கம்பன் கழகம், கர்னாடிக் சங்கீதம்னு பிஸியா இருக்கார். நல்ல சம்பளம் தருவார். உனக்கும் அதிகம் அலைச்சல் இருக்காது….” – சங்கரநாராயணன் பேசுவது கிருஷ்ணவேணிக்கே கேட்டது.
“அண்ணா, அப்பா விட்டா பேசிட்டே போவார். கட் பண்ணிட்டு, முதல்ல செக்யூரிட்டிக்கு போன் போட்டுக் கேட்கச் சொல்லுங்க. எனக்குப் பதற்றமா இருக்கு!” என்று இடைமறித்தாள் கிருஷ்ணவேணி.
“நன்றி சார், இங்க ஒண்ணும் பிரச்னை இல்லே. வழியில ஒரே ஒரு இடத்துல மட்டும் பர்மிஷன் லெட்டரைக் கேட்டு வாங்கிப் பார்த்தாங்க. மத்தபடி எங்கேயும் எந்தத் தடங்கலும் இல்லை. அங்கே நைட் ஒரு மணிக்குள்ள வந்துடுவோம். நீங்க உடனே செக்யூரிட்டிக்கு போன் போட்டுப் பேசுவீங்களாம். மேடம்தான் பதறிக்கிட்டே இருக்காங்க” என்று சொல்லிவிட்டு, மொபைலை கிருஷ்ணவேணியிடம் தந்தான் நாகராஜ். காதில் வைத்தாள். அணைக்கப்பட்டிருந்தது. அப்பாவிடமிருந்து நல்ல தகவலாக வர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டாள்.
மனசு தறிகெட்டு ஓடியது. வேண்டாத கற்பனைகளையெல்லாம் செய்துகொண்டு பயந்தது.
தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலையில் சுற்றுமுற்றும் தாழ்வாரங்கள், அறைகள் இருக்க, நடுவில் 30-க்கு 50 என்கிற அளவில் நல்ல நீளமும் அகலமுமான சிமென்ட் தளம் உண்டு. அதன் ஒரு முனையில் வட்டமான ஒரு பெரிய கிணறு உண்டு. மரத்தாலான சிலிண்டர் வடிவ ராட்டினத்துடன் இருக்கும். கயிறும் பித்தளைக் குடமும் இருக்கும். கிணற்றைச் சுற்றிலும் வட்டமாக சின்ன சிமென்ட் தளம் இருக்கும். ராட்சத இரும்பு வாளி ஒன்றும் இருக்கும். வைத்தியசாலை சுறுசுறுப்பாக இருந்த நாள்களில் தண்ணீர் இழுத்துக் கொட்டுவதற்கென்றே பணிப்பெண்கள் இருப்பார்கள். மற்றபடி, அவரவர் துணிகளை அவரவரே துவைத்துக் கொள்ள வேண்டும்.
அந்தக் கிணறு பற்றிய ஞாபகம் வந்தவுடன், கிருஷ்ணவேணிக்கு மறுபடியும் அடிமனதில் பயம் பற்றிக்கொண்டது.
(தொடரும்)
0 comments:
Post a Comment