உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, January 17, 2010

மந்திர மூன்றெழுத்து!

ன்பு மூன்றெழுத்து, அறிவு மூன்றெழுத்து, அண்ணா மூன்றெழுத்து என்று அடுக்கிக்கொண்டே போவார் கலைஞர் மு.கருணாநிதி. ஆனால், மக்களை ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மயங்க வைத்த அந்த மந்திர மூன்றெழுத்து - எம்.ஜி.ஆர்-தான்! இன்றைக்கும் அவரின் பிறந்த நாளை முன்னிட்டுத் திரும்பும் திசையெல்லாம், தெரு முக்குகளில் எல்லாம் ஒரு ஸ்டூல் போட்டு, எம்.ஜி.ஆரின் படத்தை வைத்து மாலை அணிவித்து, ஊதுவத்தி ஏற்றி, அருகே ஸ்பீக்கரில் எம்.ஜி.ஆரின் படப் பாடலை ஒலிக்கவிட்டு, தங்கள் தலைவனை நெகிழ்ச்சியோடு மக்கள் நினைவுகூர்வதைப் பார்க்க முடிகிறது.

எனக்கு நினைவு தெரியத் தொடங்கிய காலத்திலிருந்தே நான் சிவாஜி ரசிகனாகத்தான் வளர்ந்தேன். நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது, என்னைப் போன்று சிவாஜி ரசிகர்களாக இருக்கும் பிள்ளைகளுடன்தான் நட்பு பாராட்டுவேன். எம்.ஜி.ஆரை ஒரு பையன் ரசிக்கிறான் என்றால், அவன் நிச்சயம் ஒரு ரவுடியாகத்தான் இருப்பான் என்று என்னவோ இனம்புரியாத பயம் அந்தப் பிஞ்சுப் பருவத்தில் என் மனதில் எழுந்திருந்தது. சிவாஜியின் படப் பாடல்களை ரசித்துக் கேட்கும் நான், எம்.ஜி.ஆர். பாடலையும் உள்ளுக்குள் ரசிப்பேன். வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டேன். சிவாஜியே சொந்தக் குரலில் பாடுகிறார் என்பது என் அப்போதைய எண்ணம். சிவாஜி அளவுக்கு எம்.ஜி.ஆரும் பாடிவிடுகிறாரே என்று மனசுக்குள் ஒரு காழ்ப்பு உணர்வு எழும். இருவருக்குமே டி.எம்.எஸ். என்கிற ஒரு காந்தர்வக் குரலோன்தான் பின்னணி பாடுகிறார் என்கிற உண்மை எனக்கு எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் தெரிய வந்தது. டி.எம்.எஸ்ஸின் அற்புதமான பாடல்களாலேயே நான் என்னையும் அறியாமல் எம்.ஜி.ஆரை ரசிக்கத் தொடங்கியிருந்தேன்.

நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர். படம் ‘குமரிக் கோட்டம்’. என் சின்ன வயதில் மிகவும் அரிதாகத்தான் நான் திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் சிவாஜி படங்கள்தான். இல்லையென்றால் பக்திப் படம். பத்தாம் வகுப்புக்கு வந்த பின்னர்தான், நான் தனியே சென்று திரைப்படங்கள் பார்க்கத் தொடங்கினேன். சிவாஜிக்கு அடுத்தபடியாக நான் அப்போது சென்று ரசித்துப் பார்த்தவை ஜெய்சங்கர் படங்கள்தான்.

எம்.ஜி.ஆர். படங்களில் நீரும் நெருப்பும், பல்லாண்டு வாழ்க இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள். தவிர, மாட்டுக்கார வேலன், தாயைக் காத்த தனயன், எங்க வீட்டுப் பிள்ளை, நான் ஆணையிட்டால், அடிமைப் பெண், ஒளிவிளக்கு, சிரித்து வாழ வேண்டும், பறக்கும் பாவை எனப் பல படங்கள் பார்த்திருக்கிறேன். ரசித்தும் இருக்கிறேன்.

சிவாஜி நடிப்போடு எம்.ஜி.ஆர். நடிப்பை ஒப்பிடக் கூடாது. சிவாஜி படத்தோடு எம்.ஜி.ஆர். படத்தை ஒப்பிடக் கூடாது. இட்லி இட்லிதான்; தோசை தோசைதான்; பொங்கல் பொங்கல்தான்; பூரி பூரிதான். ஒவ்வொன்றும் ஒவ்வொறு சுவை. ஒன்றோடு ஒன்றை ஒப்பிடக் கூடாது. இந்த ஞானம் வந்த பின், நான் நிறைய எம்.ஜி.ஆர். படங்களையும் பார்க்கத் தொடங்கினேன்.

எம்.ஜி.ஆர். தமிழக முதல்வர் ஆனதிலிருந்து அவர் மறையும் வரையில் நான் அ.தி.மு.க. விசுவாசியாகத்தான் இருந்தேன். அவர் உயிரோடு இருந்திருந்தால், இன்றைக்கும் என் ஓட்டு அவருக்குத்தான்.

எனக்குத் தெரிந்து அவரின் ஆட்சி, பொற்கால ஆட்சிதான். அவரின் ஆட்சியிலும் எத்தனையோ போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்கள், கொலை, கொள்ளை போன்றவை நிகழ்ந்திருக்கலாம். ஆனால், இன்று போல் ஒட்டு மொத்தமாகச் சட்டம், ஒழுங்கு கெட்டுப் போய்விடவில்லை. எம்.ஜி.ஆர். இருக்கிறார்; அவர் பார்த்துக் கொள்வார்; ஜனங்களுக்கு எது நல்லது என்று அவருக்குத் தெரியும்; அவர் ஒரு முடிவு எடுத்தால், அது சரியாகவே இருக்கும். அவர் ஏழை எளியவர்களைக் கைவிட மாட்டார்; தவறு செய்கிறவர்கள் தக்க தண்டனை பெறுவார்கள் என்கிற நம்பிக்கை ஒவ்வொரு குடிமகனிடமும் அன்றைக்கு இருந்தது.

1983 அல்லது 1984 என்று நினைக்கிறேன்... வருடம் சரியாக நினைவில் இல்லை; அப்போது நான் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் தங்கிக்கொண்டு, டைப்ரைட்டிங் இன்ஸ்ட்ரக்டர் கோர்ஸுக்குப் படித்துக்கொண்டு இருந்தேன். ஆறு வார கோர்ஸ் அது. கோடை விடுமுறையில், அந்தப் பள்ளி வளாகத்தின் வகுப்பறைகளை எங்களைப் போன்ற மாணவர்கள் குழுக் குழுவாகத் தங்கிக் கொள்ள அனுமதித்திருந்தார்கள். ஆறு வார முடிவில் அந்தப் பள்ளியிலேயே தேர்வு நடத்தப்பட்டது.

மெயின் ரோட்டிலிருந்து உள்ளடங்கி இருந்த அரசுப் பள்ளி அது. காபி, டிபன், சாப்பாடு சாப்பிட வேண்டுமென்றால் நீள, நெடுக நடந்து ‘வெற்றி’ தியேட்டர் வரை வர வேண்டும். அப்படி ஒரு நாள் காலையில் 8 மணி சுமாருக்கு, நானும் என் நண்பர்களுமாக வந்து டிபன், காபி சாப்பிட்டுவிட்டுத் திரும்பிச் செல்கிறபோது, அங்கேயுள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒரே கூட்டமாக இருந்ததைப் பார்த்தோம். கூட்டம் என்றால் பெருங்கூட்டம் இல்லை; ஒரு முப்பது நாற்பது பேர் இருப்பார்கள். என்னவென்று அறிய ஆவலோடு போய் எட்டிப் பார்த்த எங்களுக்கு இன்ப அதிர்ச்சி. எம்.ஜி.ஆர். வந்திருந்தார். காவல்துறை உயர் அதிகாரிகளோடு அவர் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டு இருந்தார். அவர் முகத்தில் கவலை படிந்திருந்தது. என்ன பிரச்னை என்று அப்போது தெரியவில்லை. நான் எம்.ஜி.ஆரை மிக அருகே பார்த்தது அப்போதுதான்! அவர் கிளம்பிச் செல்கிறவரைக்கும் இருந்து, அவரைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டுப் பின்னர் நாங்கள் எங்கள் பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.

பின்புதான், அகரம் நாராயணன் என்கிற ஒரு ரவுடி அன்றைக்கு அதிகாலையில் குரோம்பேட்டையில் சாலையோரம் இருந்த ரிக்‌ஷாக்காரர், பங்க் கடைக்காரர் என ஐந்தாறு பேரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டான் என்கிற விஷயம் தெரிய வந்தது. அதற்காகத்தான் நிலைமையை ஆராய எம்.ஜி.ஆரே நேரில் வந்துவிட்டுப் போயிருந்தார். அகரம் நாராயணன் காலில் ஸ்ப்ரிங் பூட்ஸ் அணிந்திருப்பான், எத்தனை உயரமான சுவரானாலும் சுலபமாக எகிறித் தாவிப் போய்விடுவான், அவனைப் பிடிக்கவே முடியாது என்றெல்லாம் வதந்திகள். எம்.ஜி.ஆர் போலீஸ் படையை முடுக்கிவிட்டு, அடுத்த சில மாதங்களிலேயே அவனைக் கைது செய்து சிறையில் தள்ளிவிட்டார். குரோம்பேட்டை மக்களுக்கு நெடு நாளாக இருந்த ஒரு தலைவலி ஓய்ந்தது.

பொதுவாகவே, ஆட்சியாளர்கள் மீது இப்போது இருப்பது போன்ற ஒரு வெறுப்போ, மிரட்சியோ மக்களுக்கு எம்.ஜி.ஆரிடம் இல்லை. நல்லவர்கள் அவர் ஆட்சியில் நிம்மதியாகத்தான் இருந்தார்கள். ஒரு திறமையான பஸ் டிரைவர் மீது, இவர் நம்மைப் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்ப்பார் என்று முழு நம்பிக்கை வைத்துப் பயணிகள் அயர்ந்து தூங்குவதில்லையா, அது போல ஒரு நம்பிக்கை எம்.ஜி.ஆரிடம் மக்களுக்கு இருந்தது. கடவுள் போல, ஒரு தேவ தூதன் போலத்தான் மக்கள் அவரை மதித்தார்கள்; போற்றினார்கள்.

என்றாலும்கூட, கலைஞருக்கு இன்று தொட்டதற்கெல்லாம் பாராட்டு விழாக்கள் நடக்கிற மாதிரி எம்.ஜி.ஆருக்கு நடந்ததாகவே தெரியவில்லை. இத்தனை ஜால்ரா சத்தங்கள் அன்றைக்கு நம் காதைக் கிழிக்கவில்லை. துக்ளக் சோ எம்.ஜி.ஆரைத் தன் பத்திரிகையில் எத்தனையோ கேலிச் சித்திரங்கள் போட்டு, எம்.ஜி.ஆருக்கு ஆட்சி செய்யவே தெரியாது, கோமாளி ஆட்சி என்றெல்லாம் விமர்சித்தார். எதுவுமே எடுபடவில்லை!

எம்.ஜி.ஆர். எதையுமே கண்டுகொள்ளவில்லை. கலைஞர் போல் பதிலுக்குப் பதில் வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கை விடவில்லை; பதில் சொல்லிக்கொண்டு இருக்கவில்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தார். அவர் மீது அம்பு எய்தவர்களே களைத்துப் போய் ஒரு கட்டத்தில் வில்லைக் கை நழுவ விட்டார்கள்.

யாரையும் எம்.ஜி.ஆர். எடுத்தெறிந்து பேசியதாக, யோசித்துப் பார்த்தாலும் எனக்குத் தெரியவில்லை. குறிப்பாக, தொழிலில் போட்டியாக இருந்த சிவாஜி கணேசன், அரசியலில் போட்டியாக இருந்த கருணாநிதி இருவரையும் எம்.ஜி.ஆர். ஒரு நாளும் தரக் குறைவாகவோ, மரியாதைக் குறைவாகவோ விமர்சித்ததில்லை. ‘என் நண்பர் கருணாநிதி அவர்கள்...’, ‘என் தம்பி கணேசன்...’ என்றுதான் பேசுவார்.

ஒருமுறை, சென்னை வானொலியில் வி.ஐ.பி. தொகுத்து வழங்கும் தேன் கிண்ணம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தது. தொகுத்து வழங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜி ரசிகன் என்ற முறையில் அந்த நிகழ்ச்சியை நானும் ரசித்துக் கேட்டேன். டி.எம்.எஸ். பாடல்கள் பட்டையைக் கிளப்பின. சிவாஜி ஒவ்வொரு குறிப்பைச் சொன்ன பிறகும் அதற்கான பாட்டு ஒலிபரப்பாகும். இப்படிப் பத்துப் பன்னிரண்டு பாடல்கள் அன்று ஒலிபரப்பாயின. பெரும்பாலும் தான் நடித்த படங்களிலிருந்தும், ஒன்றிரண்டு பாடல்களை மட்டும் வேறு சில படங்களிலிருந்தும் தொகுத்து வழங்கினார் சிவாஜி. நிகழ்ச்சியின் இறுதிவரையில் எம்.ஜி.ஆர். பாடல் எதையுமே சிவாஜி குறிப்பிடவில்லை; ஒலிபரப்பவில்லை. சிவாஜி ரசிகனாக இருந்தபோதிலும், எனக்கே இது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.

மறுநாள், செய்தித்தாள்களில் எம்.ஜி.ஆர். தேனியிலோ அல்லது பெரியகுளத்திலோ கூட்டத்தில் பேசிய பேச்சு முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. படித்தேன். சிவாஜியைப் பற்றிக் குறிப்பிட்டு ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்திருந்தார். “தம்பி கணேசனுக்கு இணையான நடிகர் உலகிலேயே இல்லை. ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ சிறந்த நடிகர். அதனால், நமது கணேசனை ‘தென்னகத்து மார்லன் பிராண்டோ’ என்பார் அறிஞர் அண்ணா. உண்மையில், மார்லன் பிராண்டோதான் தன்னை ‘ஹாலிவுட் சிவாஜி’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஈடு, இணையற்ற நடிகர் தம்பி கணேசன்” என்று பேசியிருந்தார். சிலிர்த்துப் போனேன்.

எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்தான். அவர் இடத்தை இனியொருவர் பிடிக்க முடியாது!
.

Monday, January 11, 2010

3 இடியட்ஸ் - விமர்சனம்

‘இடியட்’ என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானது. இன்றைக்கு முழு முட்டாள் என்கிற அர்த்தத்தில் இது வழங்கப்பட்டாலும், ஆரம்பத்தி்ல் இதன் பொருள் ‘குறிப்பிட்ட துறையில் சிறப்புப் பயிற்சி இல்லாதவன்’ என்பதுதான். எனவே, வேறு ஒன்றில் அவன் கெட்டிக்காரனாக இருக்க வாய்ப்புண்டு. அவன் எதற்கும் உதவாத முழு மூடன் அல்ல.

அந்த வகையில் ‘த்ரீ இடியட்ஸ்’ என்ற தலைப்பு இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ள கதைக்கு மிகவும் பொருத்தமானதே!

இந்தப் படம் நமது கல்வி முறையைக் கேள்விக்குள்ளாக்குகிறது, பிள்ளைகளின் விருப்பத்துக்கு விடாமல் அவர்களை இன்ஜினீயர், டாக்டர் என்று அதிக வருமானம் வரக்கூடிய படிப்புகளைப் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக இருக்கிறது என்றெல்லாம் கேள்விப்பட்டதில், ரொம்ப போரடிக்குமோ என்று கொஞ்சம் பயந்துகொண்டேதான் இந்தப் படத்தைப் பார்த்தேன்.

நல்லவேளையாக ரொம்பவெல்லாம் மெசேஜ் சொல்லி போரடிக்கவில்லை. கதையோட்டத்தில் மெசேஜ் இரண்டறக் கலந்திருக்கிறது.

ராஞ்சோதாஸ் ஷ்யாமல்தாஸ் சஜ்ஜத் - ‘3 இடியட்ஸ்’ படத்தில் அமீர்கான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் இது. சுருக்கமாக ராஞ்சோ.

வகுப்பில் முதலாவதாக வரும் ராஞ்சோ திடீரென்று ஒரு நாள் கல்லூரியைவிட்டுக் காணாமல் போகிறார். அவரைத் தேடிக்கொண்டு கிளம்புகிறார்கள் அவருடைய நண்பர்களான ஃபர்ஹான், ராஜு இருவரும். ஃபர்ஹானாக நம்ம மாதவன்; ராஜுவாக ஷர்மான் ஜோஷி. அமீர் கானைத் தேடுகிற சாக்கில், ஒளிப்பதிவாளர் சி.கே.முரளிதரன் புண்ணியத்தில் சிம்லா, மணாலி, லடாக் ஆகிய இயற்கை எழில் மிகுந்த பிரதேசங்களைக் கண்டு களிக்கிறோம்.

நண்பர்கள் ஃபர்ஹான், ராஜு இவர்களின் நினைவலைகளில் கதை பயணிக்கிறது.

பிரீமியர் இன்ஜினீயரிங் கல்லூரிப் பேராசிரியர் வீரு சஹஸ்ரபுத்தே (ஆங்கிலத்தில் இவர் பெயரின் முதல் ஐந்தெழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு இவருக்கு ‘வைரஸ்’ என்று செல்லப் பெயர் இட்டுவிட்டார்கள் மாணவர்கள்.) ரொம்ப கெடுபிடியான ஆசாமி. அவருக்கு இந்த மூவர் குழுவைக் கண்டாலே பிடிக்கவில்லை. மற்ற பிள்ளைகள் எதிரில் மட்டம் தட்டிக்கொண்டே இருக்கிறார். ஆனால், சோதனையாக அவரின் மகள் பியாவுக்கு (கரீனா கபூர்) அமீர் மேல் காதல் பிறந்துவிடுகிறது.

ஆக, நண்பர்களின் ஹாஸ்டல் நினைவுகளையும், அமீர்-பியா காதலையும் சுற்றிக் கதை நகர்கிறது. மற்றபடி, மாணவர்களின் விருப்பப்படி துறையைத் தேர்ந்தெடுத்துப் பாடம் படிக்க அனுமதிக்க வேண்டும் என்கிற மெசேஜ், தொட்டுக்கொள்ள ஊறுகாய்தான்!

கரீனா கபூர் தனக்குக் கொடுத்த பாத்திரத்தை நன்றாகவே செய்கிறார். அதில் சந்தேகமில்லை. ஆனால், அமீர்கானுக்கு அக்கா மாதிரி இருக்கிறார். கரீனாவின் அருகில் அமீர், கரீனாவின் கடைசித் தம்பி மாதிரி ரொம்பப் பொடிசாகத் தெரிகிறார்.

அமீருக்கு வயது 44. ஆனால், 20 வயதே ஆன கல்லூரி மாணவன் போன்று அத்தனை க்யூட்டாக, இளமையின் துறுதுறுப்போடு இருக்கிறார். அவர் பக்கத்தில் மாதவன், மாமா மாதிரி இருக்கிறார். நடிப்பில் சிரத்தை காட்டிய மாதவன், தோற்றத்திலும் அமீருக்குச் சமதையாகத் தன்னைச் சிக்கென மாற்றிக்கொண்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இவர்கள் இருவரைவிட மனதில் அதிகம் இடம்பிடிப்பவர் ஷர்மான் ஜோஷிதான். சந்தோஷம், அழுகை, நெகிழ்ச்சி, கழிவிரக்கம், வேதனை எனப் பலப் பல பாவங்களைக் காட்டி நடிக்க இவருக்கே நல்ல வாய்ப்பு. கிடைத்த வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

எல்லா வகுப்பிலுமே ‘ரொம்ப கெட்டிக்காரப் பிள்ளை’ என்று ஒன்று இருக்குமே! அடுத்த பிள்ளையை வாத்தியார் மட்டம் தட்டினால் விழுந்து விழுந்து சிரித்து... தன்னை ஆசிரியர் எழுப்பிக் கேள்வி கேட்டால் ஒழுங்கு மரியாதையாக எழுந்து நின்று பவ்வியமாகவும், உள்ளுக்குள் தானொரு புத்திசாலி மாணவன் என்கிற கெத்தோடும், மனப்பாடம் செய்த பதிலைக் கடகடவென்று ஒப்பித்து... அப்படியொரு மாணவன் சத்தூர் கேரக்டரில் ‘ஓமி’ என்கிற நடிகர் அசத்துகிறார்.

ஆசிரியர் தின விழாவில் பேசுவதற்காக கம்ப்யூட்டரில் சத்தூர் உருப் போடுவதற்காக வைத்திருந்த உரையில், ‘சமத்கார்’ என்கிற வார்த்தைக்குப் பதிலாக ‘பலத்கார்’ என்கிற வார்த்தையை அமீர்கான் ரீ-ப்ளேஸ் செய்துவிட, சொந்தப் புத்தியின்றி மனனம் செய்தே பேரெடுக்கும் சத்தூர் அதை அப்படியே உருப்போட்டுக்கொண்டு போய் ஏற்றமும் இறக்கமுமாகப் பேசி, அது கூட்டத்தில் ஏக தமாஷாகி, சிறப்பு விருந்தினரும் பேராசிரியரும் கடுப்பாகி சத்தூரை உதைக்கும் காட்சி நல்ல நகைச்சுவை விருந்து. ஆனால், அதை அத்தனை தூரத்துக்கு இழு இழுவென்று இழுத்திருக்க வேண்டுமா?

ராஞ்சோவைத் தேடிப் போகும் நண்பர்கள் அங்கே தங்கள் நண்பன் ராஞ்சோவுக்கு (அமீர் கான்) பதிலாக வேறு ஓர் அந்நிய முகத்தைக் காண்கிறார்கள். வீடு முழுக்க ஜனங்கள் சோக மயமாக நின்றிருக்கிறார்கள். சவப்பெட்டி காத்திருக்கிறது. அப்பா மரணமுற்றுக் கிடக்க, அருகே சோகத்தோடு ஜாவீத் ஜாஃப்ரி. இவர்கள் ராஞ்சோவைத் தேடி வந்ததாகச் சொல்ல, தான்தான் ராஞ்சோ என்று சாதிக்கிறார் ஜாவீத். அங்கே மாட்டியிருக்கும் ஃப்ரேம் போட்ட ஸ்காலர்ஷிப்பில் ராஞ்சோதாஸ் ஷ்யாமல்தாஸ் சஜ்ஜத் என்று இவரின் முழுப் பெயர். அருகே அந்நாளில் கல்லூரியில் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோவில், பேராசிரியருக்கு அருகே அமர்ந்திருந்த அமீர் கானுக்கு பதிலாக ஜாவீத் ஜாஃப்ரி!

(இடைவேளை)

ஜாவீதின் அப்பா அஸ்தியை ஃப்ளஷ்-அவுட்டில் போட்டுவிடுவதாக மாதவனும் ஷர்மான் ஜோஷியும் பயமுறுத்த, ஜாவீத் உண்மையை ஒப்புக் கொள்கிறார்.

எனக்கு இந்தி தெரியாது. எனவே, ஜாவீத் என்ன சொன்னார் என்று புரியவில்லை. அவரும் இன்ஜினீயர் படிப்பு படிக்க வேண்டும் என்று தன் அப்பாவால் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம்; இவருக்குப் படிப்பு வரவில்லை. ஆகவே, போலியாக சான்றிதழ் தயாரித்து ஃப்ரேம் போட்டு, குரூப் போட்டோவில் அமீர் படத்துக்குப் பதிலாக தன் படத்தை கிராபிக்ஸில் சேர்த்து தன் அப்பாவை நம்ப வைத்திருக்கலாம். சஸ்பென்ஸ் ஓவர்! இது என் கற்பனைதான். உண்மையும் இதுதானா, வேறு ஏதாவதா என்று இந்தி தெரிந்தவர்கள் சொல்லலாம்.

சீராகச் செல்லும் கதையோட்டத்தில், இடைவேளையின்போது ஒரு திடுக்கிடும் திருப்பம் வைக்க வேண்டுமே என்று திணித்த மாதிரி இருக்கிறது இது.

‘டிஸ்லெக்ஸியா’ குழந்தைகளும் நம்மைப் போல சாதாரண குழந்தைகள்தான்; அவர்களைக் கையாளவேண்டிய முறையே வேறு என்று ஒரு கனமான சப்ஜெக்டை எடுத்துக்கொண்டு, அதை விட்டு அங்கே இங்கே நகராமல், அதே சமயம் மெசேஜ் சொல்கிறேன்பேர்வழியென்று போரடிக்காமல் சுவாரசியமாகச் சொன்ன படம் ‘தாரே ஜமீன் பர்’. அதோடு ஒப்பிட்டால், இந்தப் படம் மெசேஜையும் அழுத்தமாகச் சொல்லவில்லை; வேண்டாத காட்சிகளும் நிறைய! பல இடங்களில் கத்தரி வைத்திருக்கலாம்.

ஆ... ஊ... என்றால், அத்தனை மாணவர்களும் பேண்ட்டைக் கழற்றிவிட்டு, ஜட்டியோடு திரும்பி நின்று பின்புறத்தை ஆட்டிக் காண்பிக்கிறார்கள். ஒருதடவை வந்தால் நகைச்சுவை என்று எடுத்துக் கொள்ளலாம். மீண்டும் மீண்டும் வந்தால் ‘சே’ என்றாகிவிடுகிறது.

வெப் காமிரா உதவியோடு அமீர்கான் நடத்தும் பிரசவம் பரபரப்புக்காகச் சேர்க்கப்பட்ட மாதிரி தெரிகிறது. நம்புகிற மாதிரி இல்லையென்றாலும், காட்சியை விறுவிறுப்பாக நகர்த்தியதில், கொஞ்சம் நம்பகத்தன்மை ஏற்பட்டிருப்பது உண்மை. அதுசரி, வெப் காமிரா மூலம் கரீனா கபூர் ‘புஷ்... புஷ்..’ என்று கர்ப்பிணியை இன்னும் முக்கி பிரசவிக்கத் தூண்டுகிறாரே தவிர, அமீர் கானுக்கு உருப்படியான, நுணுக்கமான ஐடியா எதுவும் கொடுத்ததாகத் தெரியவில்லையே! வெப் காமிரா என்பதெல்லாம் வெறும் பில்டப்!

இந்தப் படம் பல இடங்களில் ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ஸை (இந்தியில் ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’) நினைவூட்டுகிறது. இதில் ஷர்மானுக்கு தைரியம் சொல்லி, நம்பிக்கையூட்டுகிறார் அமீர்கான். அதிலும் ஒரு மாணவனுக்கு தைரியம் சொல்லுவார் கமல்/சஞ்சய் தத். இதில் கோமாவில் கிடக்கும் ஷர்மானுக்கு எதிரே நின்று பலவித சேஷ்டைகள் செய்து, சிரிப்பூட்டி, அவரை சுய நினைவுக்குக் கொண்டு வருவார் அமீர்கான். அதில், மயங்கிக் கிடக்கும் ஒரு பெரியவருக்கு எதிரே கேரம்போர்டு ஆடி, அவரை சுயநினைவுக்குக் கொண்டு வர முயற்சிப்பார் கமல். இதிலும் முரட்டுப் பேராசிரியர்; அவரோடு முரண்படும் மாணவன். அதிலும் முரட்டுப் பேராசிரியர்; முரண்படும் மாணவன்.

விண்வெளி வீரர்களுக்கென தான் ஒரு விசேஷ பேனா கண்டுபிடித்திருப்பதாகப் பேராசிரியர் வைரஸ் சொல்ல, அமீர்கான் குறுக்கிட்டு, “ஏன் அத்தனைக் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிக்க வேண்டும்? பென்சில் எடுத்துக்கொண்டு போகலாமே?” என்று கேட்கிற ஸீன்... ஏற்கெனவே இதைத் துணுக்காகவோ, ஒரு பக்கக் கதையாகவோ படித்த ஞாபகம்.

அதே போல இன்னொரு காட்சியையும் நான் ஏற்கெனவே ஒரு தமிழ்ப் படத்தில் நிச்சயம் பார்த்திருக்கிறேன்; அல்லது தமிழில் ஒரு பக்கக் கதையாகப் படித்து ரசித்திருக்கிறேன். தேர்வு நடக்கிறது. குறித்த நேரத்துக்குள் தேர்வு எழுதி முடிக்கவில்லை அமீர் கானும் அவரது நண்பர்களும். எக்ஸாமினர் இவர்களின் பேப்பர்களை வாங்கிக்கொள்ள மாட்டேன் என்று தீர்மானமாகக் கூறிவிடுகிறார். இவர்கள் கெஞ்சுகிறார்கள். அவர் முடியாது என்கிறார் கண்டிப்பாக. “எங்க ரோல் நம்பர் உங்களுக்குத் தெரியுமா சார்?” என்று கேட்கிறார்கள். அவர் தெரியாதென்று சொன்னதுமே, டேபிளில் அவர் அடுக்கி வைத்திருந்த மற்ற மாணவர்களின் பேப்பர்களையெல்லாம் இழுத்துக் கீழே கலைத்துப் போட்டுவிட்டுத் தங்களுடைய பேப்பர்களையும் அவற்றோடு கலந்து கடாசிவிட்டு ஓடிவிடுகிறார்கள்.

‘3 இடியட்ஸ்’ நல்ல படம்தான். ரசிக்கத்தக்க படம்தான். ஆனால், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வரக்கூடிய அபூர்வ படம், ஆஹா... ஓஹோ... அமீர் கானுக்கு இது இன்னொரு மைல் கல் என்று பலரும் ஓவராகப் புகழ்வதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. பல படங்கள், அதிகபட்ச எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டு, அதனாலேயே சப்பென்று இருக்கிற மாதிரி ரசிகர்கள் மனதில் ஒரு பிரமையை உண்டாக்கி, தோல்வியைத் தழுவியிருக்கின்றன. இந்தப் படமும் அப்படியாகிவிடக் கூடாது!

.

என்னாங்கடா இது அக்கிரமமா இருக்கு!

ல்யாணி என்கிற முகம் தெரியா அன்பரிடமிருந்து என்னுடைய ‘என் டயரி’ வலைப்பூவில் நான் இட்டிருந்த ‘நலமா ஞாநி?’ பதிவுக்கு ஒரு பின்னூட்டம் வந்தது. அதன் சாராம்சம் கீழே:

“இது இந்தப் பதிவுக்குப் பொருத்தமில்லாததாக இருந்தபோதிலும், நீங்கள் விகடனில் பணியாற்றுகிறவர் என்பதால் இந்த யுஆர்எல் இணைப்பை உங்களுக்கு அனுப்ப விரும்புகிறேன். (இணைப்பு: என்டிடிவி.காம்.) மிகுந்த மன வருத்தம் அளிக்கக்கூடிய இந்தச் செய்தியை என்டிடிவி.காம்.-ல் படித்தேன். எனக்குத் தெரிந்த வரையில் இந்தச் செய்தி துரதிர்ஷ்டவசமாக எந்தத் தமிழ்ப் பத்திரிகைகளிலும், செய்தித் தாள்களிலும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படவில்லை. விகடனாவது தனது வெப் பேஜில் இதை ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கும் என்று எதிர்பார்த்தேன். இல்லை. என்டிடிவி வெளியிட்டிருக்கும் இந்தச் செய்தி என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட தமிழ்நாடு அமைச்சர்களின் மீதான என்னுடைய கோபத்தை வெளிப்படுத்த என்னிடம் போதிய வார்த்தைகள் இல்லை. இறந்துபோன அந்தக் காவலரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட அந்தத் தார்மிக மற்றும் அற நெறி உணர்வுகள் அற்ற, தகுதியற்ற அமைச்சர்கள் தினம் தினம் தூக்கம் கெட்டு, குற்ற உணர்ச்சியோடும் குடைகிற மனத்தோடும் நெடுங்காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்!”

கல்யாணி கொடுத்திருந்த இணைப்பில் கண்ட என்டிடிவி செய்தியின் தமிழாக்கம் கீழே:

காவலர் ஒருவர் சாலையில் தாக்கப்பட்டார்; அமைச்சர்கள் அதிர்ச்சியுடன் காரில் அமர்ந்திருந்தனர்; உதவிக்கு யாரும் வரவில்லை!

மிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.வெற்றிவேல் என்கிற காவலர் சாலையில் விழுந்து துடிதுடித்தபடி உதவி கேட்டுக் கெஞ்சிக்கொண்டு இருக்கிறார். 44 வயதுடைய அவரின் கால்கள் ஒரு ரவுடிக் கும்பலால் துண்டிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த இந்தச் சாலை வழியாக அரசு கார்களின் அணிவகுப்பு ஒன்று கடக்கிறது. தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் (மொய்தீன் கான்) மற்றும் ஹெல்த் மினிஸ்டர் (எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்) இருவரும் அந்த அணிவகுப்பில் இருக்கிறார்கள். கார்களின் ஊர்வலம் நிற்கிறது. இரு அமைச்சர்களுமே தங்கள் கார்களை விட்டு இறங்கவில்லை. அவர்களுடன் அரசுத்துறை அதிகாரிகளான மாவட்ட ஆட்சியாளரும், ஹெல்த் செக்ரெட்டரியும் இருக்கிறார்கள்.

எட்டு நிமிடங்கள் கழிந்த பிறகு, கலெக்டர் ஜெயராமன் மிகுந்த தயக்கத்துடன் ஒருவழியாகக் காரை விட்டுக் கீழே இறங்குகிறார். ஆனால், யாருமே அடிபட்டுக் கிடக்கும் அந்தக் காவலரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முன் வரவில்லை. கடைசியாக கலெக்டர் ஆம்புலன்ஸுக்குப் போன் செய்கிறார். ஆனால், அது வரவில்லை.

இருபது நிமிடங்களுக்குப் பிறகு, அந்த போலீஸ்காரர் அந்தக் கார்களில் ஒன்றில் கிடத்தப்படுகிறார். (அப்போதும் அமைச்சர்கள் தங்கள் கார்களை வழங்க முன்வரவில்லை.) மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அந்தக் காவலர் இறந்துவிடுகிறார்.

ஆம்புலன்ஸ் வந்து போன பிறகு, ஹெல்த் மினிஸ்டர் தன் காரை விட்டுக் கீழே இறங்குகிறார்.

பின்னர் இது பற்றி அவரது கருத்தைக் கேட்டறிய முயன்றபோது, அவர் தன்னைத் தனியே விடுமாறு என்டிடிவி நிருபரிடம் கோபத்துடன் எரிந்து விழுகிறார்.

நடந்த நிகழ்வுகளில் எந்தத் தவறும் இல்லையென்று, அந்த கார் ஊர்வலத்தில் கலந்துகொண்ட மூத்த அதிகாரியான வி.கே.சுப்புராஜ் சொல்கிறார். “அந்தச் சூழ்நிலையில் என்ன செய்யமுடியுமோ அதை நாங்கள் சிறப்பாகவே செய்தோம். ஆம்புலன்ஸ் வருவதற்கு 20 நிமிடங்கள் ஆகிவிட்டன. போலீஸார் சிறப்பாகச் செயல்பட்டனர்...” என்று என்டிடிவி-க்கு அளித்த தொலைபேசி பேட்டியில் சொன்னார் அவர்.

கீழே வீடியோ இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது அந்த அமைச்சர்களின் விசிட்டைப் படமெடுப்பதற்காகச் சென்ற ஃப்ரீலான்ஸ் காமிராமேனால் பதிவு செய்யப்பட்ட காட்சியாகும். இது மிகக் கொடூரமான காட்சியாகவும், குழந்தைகள் பார்க்க முடியாத அளவுக்கு மோசமானதாகவும் உள்ளது.

(என்டிடிவி.காம்-ல் அந்த வீடியோ இணைப்பும் உள்ளது. உயிருக்குப் போராடும் காவலரின் உடம்பு கொடூரம் தெரியாத அளவுக்கு மாஸ்க் செய்யப்பட்டுள்ளது.)

வீடியோ காட்சியைப் பார்த்தபோது வயிறு பற்றி எரிந்தது. ‘என்னங்கடா இது அக்கிரமா இருக்கு’ என்று ஆத்திரம் வந்தது. தமிழ்த் திருநாட்டில் காவலர் ஒருவருக்கே பாதுகாப்பு இல்லை; அதுவும் மாண்புமிகுக்கள் கண் எதிரேயே துடிதுடித்துக் கிடக்கும் அவரைக் காப்பாற்ற நாதியில்லை என்றால், நாமெல்லாம் எந்த மூலை என்கிற பயம் வந்தது.

வேறு யாரோ ஒரு காவலரின் குடும்பப் பிரச்னையால் அவரைத் தாக்கத் திட்டமிட்டவர்கள் ஆள் மாறி, வெற்றிவேலைக் கண்டம்துண்டமாக வெட்டிப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். வெட்டுப்பட்டவர் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்; தீவிரவாதியாகவேகூட இருக்கட்டும். உடனடியாக அவரைக் காப்பாற்ற முனைவதுதானே மனிதப் பண்பு!

சமீபத்தில்தான் உச்ச நீதிமன்றம் பொன்னான ஒரு தீர்ப்பை வழங்கியது. சாலையில் அடிபட்டுக் கிடக்கும் நபரைக் கொண்டு வந்து சிகிச்சைக்குச் சேர்த்தால், எந்த மருத்துவமனையும் போலீஸ் எஃப்ஐஆர், லொட்டு லொசுக்கு என்று கேட்டு அலைக்கழிக்கக்கூடாது; உடனடியாக அவருக்குச் சிகிச்சை அளித்துக் காப்பாற்ற வேண்டும்; மற்ற சம்பிரதாயங்களைப் பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்கிறது அந்தத் தீர்ப்பு. இங்கே அடிபட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டு போகவே அத்தனை தயக்கம். இதற்கும் உச்ச நீதிமன்றம் பிறகு ஒரு தீர்ப்பு வழங்குமோ என்னவோ!

அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் ஒரு காவலரைக் காப்பாற்ற அமைச்சர்களே தயங்கும்போது, சாமானிய மக்களைக் குறை சொல்ல என்ன இருக்கிறது!

ஆங்கிலத்தில் ‘Ill Joke’ என்று ஒரு வகை நகைச்சுவைத் துணுக்குகள் உண்டு. அப்படி ஒரு வேதனையான நகைச்சுவைத் துணுக்கு இதோ:

மந்திரி 1: “எனக்கு ரொம்ப மென்மையான, இரக்கமுள்ள மனசு. உங்களுக்கு எப்படி?”

மந்திரி 2: “எனக்கும் அப்படித்தான்! ஒருத்தர் வேதனையில துடிக்கிறதைப் பார்க்க எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். மனசு தாங்காது!”

மந்திரி 1: “அப்ப சரி, ரெண்டு பேருமே கண்ணை மூடிக்கிட்டு இங்கே கார்லேயே இருப்போம். ஆம்புலன்ஸ் எப்ப வந்து அவரைக் கூட்டிட்டுப் போகுதோ, போகட்டும்!”
.

Wednesday, January 06, 2010

புத்தகக் காட்சியில் நானும்...

“புக் ஃபேர் போய் வந்தேன்” என்று சொல்லிக்கொள்வது சமீப காலங்களில் ஒரு ஃபேஷனாகிவிட்டது. பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பும் ஜனங்கள் புத்தகக் காட்சிக்குப் போய் வந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆனால், அது பற்றி ஓயாமல் பேசிக்கொண்டு இருப்பதில்லை. ‘போனோமா, பிடித்த புத்தங்களை வாங்கினோமா’ என்று இருந்துவிடுவார்கள். மற்றபடி அது குறித்து அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. எனக்குத் தெரிந்து கடந்த ஏழெட்டு வருடங்களாகத்தான் ‘புக் ஃபேர் மேனியா’ நம்ம ஜனங்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டு இருக்கிறது. இப்படி வலைப்பூவிலெல்லாம், தாங்கள் புத்தகக் காட்சிக்குப் போய் வந்த அனுபவத்தைப் பரவசமாக எழுதி எழுதி மகிழ்ந்து கொள்கிறார்கள் (என்னையும் சேர்த்துத்தான்!).

“நேத்து செம பார்ட்டிடா மச்சி! ஃபுல்லா சரக்கடிச்சுட்டு...” என்று பரவசப்படுவதற்கு, இந்தப் புத்தகக் காட்சிப் பரவசம் ஆயிரம் மடங்கு மேல்! சில நல்ல விஷயங்களில் கொஞ்சம் ஓவர் ரியாக்‌ஷன் செய்தாலும் தப்பில்லைதான்!

நானும் பத்துப் பன்னிரண்டு வருடங்களாக புத்தகக் காட்சிக்குப் (புத்தகக் கண்காட்சி என்று எழுதுவது தவறு. புத்தகக் காட்சிதான்! இரண்டு மூன்று ஆண்டுகளாக அரசு அறிவிப்புகளில், பேனர்களில் இந்தத் தவறு திருத்தப்பட்டு ‘புத்தகக் காட்சி’ என்று சரியாக வருகிறது.) போய்த் தலையைக் காண்பித்துவிட்டு வந்துகொண்டு இருக்கிறேன் - ஏதோ சுற்றுலாப் பொருட்காட்சிக்குப் போய் வருவது போல! புத்தகம் எதுவும் வாங்குவதில்லை. காரணம், முன்பே பலமுறை சொல்லியிருக்கிறேன், நான் இலக்கியவாதி இல்லை; சாமானியன்! தவிர, ஐந்நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் செலவழித்துப் புத்தகங்கள் வாங்கும் அளவுக்கு நான் வசதியானவன் இல்லை. கையில் இருக்கிற புத்தகங்களையே முழுசாகப் படித்துக் கிழித்தபாடில்லை; இதில் காசு போட்டு வேறு வாங்கி அறிவை விருத்தி செய்துகொண்டு விடப்போகிறோமாக்கும் என்கிற எண்ணமும் உண்டு.

காயிதே மில்லத் கல்லூரியில் புத்தகக் காட்சி நடந்த சமயத்தில் ஒரு முறை போய் வந்தபோது, ‘எப்படி இருந்தது உங்க எக்ஸ்பீரியன்ஸ்?’ என்று ஒரு நண்பர் ஆர்வத்தோடு கேட்க, “ப்ச்... நினைச்ச அளவுக்கு ஒண்ணும் பிரமாதமா இல்லே. ரொம்ப எதிர்பார்ப்போட போனேன். சுமாராதான் இருந்துது எல்லா அயிட்டங்களும்!” என்று பதில் சொன்னேன் யதார்த்தமாக. ‘என்ன சொல்றீங்க?’ என்று நண்பர் விழிக்க, “அறுசுவை நடராஜன் கேண்ட்டீனாச்சே! கை மணம் அபாரமா இருக்குமேன்னு நாக்கைச் சப்புக்கொட்டிக்கிட்டுப் போனேன். தோசை, இட்லி, பொங்கல்னு எல்லாமே சுமார் ரகம்தான்! இதுக்கு சரவணபவனே எவ்ளோ தேவலாம்!” என்று நான் மும்முரமாக விளக்க, தலையிலடித்துக் கொண்டார் நண்பர். என்ன செய்வது, என்னுடைய இலக்கிய ஆர்வம் அந்த லட்சணத்தில் இருக்கிறது!

இந்த 33-வது புத்தகக் காட்சிக்குப் போனபோதும் அதே கதைதான்! நான் முதலில் நுழைந்தது கிருஷ்ணா ஸ்வீட்ஸாரின் கேண்ட்டீனில்தான்! மசால் தோசை, மொறுமொறு வடை, போளி, குஜராத் வேர்க்கடலை மசாலா போட்டது/ வெஜிடபிள் போட்டது, அம்மணி கொழுக்கட்டை, காபி என ஒரு வெட்டு வெட்டினேன். காபி மட்டும் சுமார் ரகம். மற்ற அயிட்டங்கள் ஓகோ! சட்னி, சாம்பார் எல்லாம் ஏ-கிளாஸ்! வெளியே விலைப் பட்டியலே வித்தியாசமாக இருந்தது. அயிட்டங்களைப் போட்டு அதன் அருகில் இன்ன விலை என்று எழுதாமல், 30 ரூபாய், 35 ரூபாய், 40 ரூபாய் என தலைப்பில் எழுதி, அந்தக் காசுக்கு என்னென்ன அயிட்டங்கள் சாப்பிடலாம் என்று வரிசைப்படுத்தியிருந்தார்கள்.

டிபனை முடித்துக்கொண்டு வரும்போது, ஒதுங்க இடம் தேடி, கூட்டம் (நாற்காலிகளில் நாலைந்து பேரே உட்கார்ந்திருந்தாலும் அதைக் கூட்டம் என்றுதானே குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது!) நடந்துகொண்டு இருந்த இடத்துக்குப் பக்கவாட்டில், தடுப்புக்குப் பின்னால் கட்டைகளைத் தாண்டிக் குனிந்து, உள்ளே நுழைந்து சென்றால், ஏதோ ஜெயில் வளாகத்துக்குள் வந்துவிட்ட ஓர் உணர்வு. இடிபாடான கட்டடங்கள், புதர்க் காடுகள் ஒருபுறம்; மறுபுறம் மெஜந்தா கலரில் டிஸ்டெம்பர் அடித்த கட்டடங்கள். சினிமாக்களில் கைதிகள் கம்பங்களி வாங்கிக் கொள்ள கையில் நசுங்கிய அலுமினியத் தட்டுடன் வரிசையாக நின்றுகொண்டு இருப்பார்களே, அது போன்ற ஒரு இடம் மாதிரி இருந்தது அது. கைதிகள் கலவரக் காட்சி ஏதாவது படம் பிடிக்க வேண்டுமென்றால் கச்சிதமாக இருக்கும் (ஒருவேளை, ஏற்கெனவே எந்தப் படத்திலாவது இப்படி அந்த இடம் உபயோகப்பட்டிருக்கவும் கூடும்!).

இடிந்த சுவர் அருகே சிரம பரிகாரம் செய்துகொண்டு வெளியே வரும்போது மணி 4. மாநாட்டு மேடையில் பேசுவதற்காக இருந்தவர்களைவிட நாற்காலிகளில் அமர்ந்திருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஒருவர் மைக் பிடித்து, கூட்டம் இல்லாததைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலையே படாமல், அவர் பாட்டுக்கு முழங்கிக்கொண்டு இருந்தார். சமூகம், பொறுப்பு உணர்வு, எழுத்து, பேனா முனை, வரலாறு போன்ற வார்த்தைகள் காதில் விழுந்தன. இன்னதுதான் பேசுகிறார் என்று தொகுத்து அறிய முடியவில்லை.

புத்தகக் காட்சி உள்ளே நுழைந்தேன். முதலில் தென்பட்டவர்(கள்) எழுத்தாளர்(கள்) சுபா. ‘ஹாய்...’, ‘ஹாய்...’ ‘எங்கே இப்படி? இப்பத்தான் வந்தீங்களா?’ போன்ற அசட்டுக் கேள்விகளுக்குப் பிறகு, நான் என் வழி பார்த்துக் கொண்டு நடந்தேன். எந்த ஒரு ‘ரோ’வையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக நேரே கடைசி வரிசைக்குச் சென்று, அதன் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை நடந்து, அங்கே யூ டர்ன் எடுத்து, அடுத்த ‘ரோ’வில் புகுந்து, இந்த முனையில் மறுபடி யூ டர்ன் போட்டு... என் திட்டம் பிரமாதம் என்று எனக்கு நானே சர்ட்டிபிகேட் கொடுத்து முடிப்பதற்குள்ளாக ஓரிடத்தில் சொதப்பிவிட்டது.

ஸ்டால்களில் இரட்டை ஸ்டால், ஒற்றை ஸ்டால் என்று வகைகள் உள்ளன. இரட்டை ஸ்டால்கள் எனப்படுபவை சற்றுப் பெரிதாக இருப்பதோடு, இரண்டு பக்கமும் திறந்திருக்கின்றன. (விகடன் ஸ்டாலை மட்டும் ஒருபுறம் அடைத்து இருந்தனர்.) இதனால், என் திட்டப்படி ஒரு ஸ்டாலில் உள்ளே புகுந்தவன் மறு புறமாக வெளியேறிவிட, அந்த ‘ரோ’ பார்த்ததா பார்க்காததா, அடுத்து எந்தத் திக்கில் செல்லவேண்டும் என்றெல்லாம் குழப்படியாகிவிட்டது.

அநுராகம், பாரதி, நர்மதா, வானதி, கிழக்கு என விதம் விதமான பதிப்பகங்கள்; சமீபத்தில் உதயமான சூரியகதிரும், திரிசக்தியும்கூட ஸ்டால் போட்டிருந்தன. நான் பார்த்த வரையில் அதிகம் கூட்டம் காணப்பட்டது சந்தேகமில்லாமல் விகடன் ஸ்டாலில்தான். விகடனில் வேலை செய்கிறேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. உண்மையாகவே விகடன் ஸ்டால்தான் பரபரப்பாக இருந்தது. அதற்கு அடுத்தபடியாக நர்மதா, உயிர்மை ஆகியவை பிஸியாக இருந்தன.

அமைச்சர் துரைமுருகன் அதிக பரிவாரங்கள் இன்றி, ஒவ்வொரு ஸ்டாலாகப் பார்த்துக்கொண்டு போனார். நடிகர் நாசர் ஒரு கேஷுவல் டிரஸ்ஸில், தன்னந்தனியாக விறுவிறுவென்று அங்கேயும் இங்கேயும் வேக நடையில் ஓடிக்கொண்டிருந்தார். மனுஷ்யபுத்திரன், சாரு நிவேதிதா, தம்பதி சமேதராக நகைச்சுவை எழுத்தாளர் ஜே.எஸ்.ராகவன் (காட்சி ஆரம்பித்த நாளிலிருந்து தினமுமே வந்து போய்க்கொண்டு இருக்கிறாராம்!) ஆகியோரைப் பார்த்தேன்.

சுற்றி வந்தபோது நான் ரசித்த சுவாரசியமான காட்சி ஒன்று... ஒரு சின்ன குழந்தையை (அநேகமாக அது எல்.கே.ஜி. படிக்கிற குழந்தையாக இருக்கலாம்) கையைப் பிடித்து நடத்தி அழைத்து வந்துகொண்டு இருந்தார், சுடிதார் அணிந்த அதன் அம்மா. மழலை மொழியில் அந்தக் குழந்தை புத்தகக் காட்சியைப் பற்றி ஏதேதோ கேள்விகள் கேட்டபடியே வந்தது. திடீரென்று ஒரு ஸ்டால் எதிரே நின்று, “அம்மா! புக்ஸ்..!” என்று கை காட்டியது. “ஏய்... போதும்! நிறைய புக்ஸ் வாங்கித் தந்துட்டேன் உனக்கு இன்னிக்கு!” என்றார் அம்மா. உடனே அந்தக் குழந்தை, “ஐயே! எனக்கில்லம்மா! உனக்கு ஒண்ணுமே புக்ஸ் வாங்கிக்கலையேன்னு சொன்னேன்!” என்றது மழலையாக.

சட்டென்று நின்று அந்தக் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சினேன். சிரித்தார் அதன் அம்மா. “என்ன படிக்கிறா குழந்தை?” என்று விசாரித்தேன். “இன்னும் ஸ்கூல்ல போடலை! அதுக்குள்ளே இத்தனை வாய்!” என்றார் பெருமிதக் குரலில்.

பள்ளியிலேயே இன்னும் சேர்க்காத குழந்தையை அழைத்துக்கொண்டு புத்தகக் காட்சிக்கு வந்து சுற்றிக் காண்பித்து, சில புத்தகங்களையும் அதற்கென வாங்கித் தந்திருக்கும் அந்தப் பெண் நிச்சயமாகப் பாராட்டுக்குரியவர்.

சரி, நான் என்ன புத்தகங்கள் வாங்கினேன் என்று சொல்லவில்லையே? ரொம்ப எதிர்பார்க்காதீர்கள். பிரமாதமாக ஒன்றும் இல்லை. அ.மார்க்ஸின் ‘ஈழத் தமிழ் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும்’, ஜான் பெர்கின்ஸின் ‘அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு’, சாதத் ஹசன் மண்டோ எழுதிய ‘அங்கிள் சாமுக்கு மண்டோ எழுதிய கடிதங்கள்’, பிரம்ம ராஜனின் ‘வார்த்தையின் ரசவாதம்’ என்று அறிவுஜீவித்தனமாக எதுவும் வாங்காமல், பிரேமா பிரசுரத்தின் உள்ளே நுழைந்து, ‘விக்கிரமாதித்தன் கதைகள்’, ‘போதிசத்துவர் கதைகள்’, சந்திரமோகன் எழுதிய மர்ம நாவல்கள் இரண்டு, சிந்தைக்கு விருந்தாகும் குட்டிக் கதைகள் ஆகியவற்றை வாங்கினேன். ஆங்கிலத்திலும் ஏதாவது வாங்கினால்தானே பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும் என்று ‘ஆக்ஸ்ஃபோர்டு’ ஸ்டாலில் நுழைந்து English-English-Tamil Dictionary புத்தகத்தை வாங்கினேன். மனசு திருப்தியாகவில்லை. மீண்டும் ஒரு ரவுண்டு வந்தேன்.

ஒரு ஸ்டாலில் 50 Detective Stories, 50 Crime Stories, 50 Horror Stories, 50 Ghost Stories... என வரிசையாக அடுக்கியிருந்தார்கள். இந்த நான்கினையும் வாங்கினேன். பழுத்தது ஆயிரத்து நானூத்துச் சொச்சம் ரூபாய்!

இரவு எட்டு மணி போல் வெளியேறினேன். பந்தலின் கீழே கணிசமான கூட்டம் இருந்தது. (புத்தகக் காட்சியைச் சுற்றிப் பார்த்ததில் கால் வலி கண்டவர்களோ!) பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் நகைச்சுவையாக (அப்படித்தானே இருக்க வேண்டும்!) ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். அதைக் கடந்து, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கேண்ட்டீனில் ஒரு காபி சாப்பிடலாம் என்று ஒதுங்கினேன். ஜே.எஸ்.ராகவன் தம்பதி அங்கே தட்டுப்பட்டனர். எழுத்தாளர்கள் சுபாவும். விடை பெற்றேன். “வீட்டுக்குப் புறப்பட்டாச்சா? வாங்களேன், நம்ம காரிலேயே போயிடுவோம்!” என்று அன்பாக அழைத்தார் ராகவன். அவரது வீடு மாம்பலத்தில்.

பிகுவேதும் செய்யாமல் உடனே ஒப்புக்கொண்டு, ராகவன் தம்பதியோடு அரட்டை அடித்தபடி, அவர்களின் ஃபோர்டு ஐகான் காரில், ஏசி குளுமையில் சௌகரியமாக வீடு வந்து சேர்ந்தேன்.

நன்றி: துளசிதளம் வலைப்பூ! புகைப்படம் ஒன்றைக் கேட்காமல் கொள்ளாமல் அங்கிருந்து சுட்டுக்கொண்டதற்காக! துளசி கோபால் கோபிக்க மாட்டார் என்று நம்புகிறேன். பட்டர்ஃப்ளை சூர்யாவுக்கு தாராளமாக அனுமதித்தாரே என்கிற தைரியம்தான்! :-)
.