உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, November 23, 2009

தாயுமானவர்!

டல்நிலை சரியில்லாத காரணத்தால் கலைஞர் தன் 60-வது பிறந்த நாள் விழாவுக்கு வரப்போவது இல்லை என்பதை அறிந்த பத்திரிகையாளர் சாவி அவர்கள் வருத்தப்பட்டுக் கடிதம் எழுதி அனுப்ப, அவரின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து கலைஞர் தம் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் கிளம்பி வந்து வாழ்த்தினார் என்று ஒரு துணுக்குச் செய்தியை நேற்று தினகரன் நாளிதழுடன் இணைப்பாக வந்த ‘வசந்தம்’ புத்தகத்தில் படித்தேன். சாவி எழுதிய ‘என்னுரை’ என்னும் புத்தகத்திலிருந்து எடுத்து அந்தத் துணுக்கைப் பிரசுரித்திருந்தார்கள். அதைப் படித்ததும், பத்திரிகையாளர் சாவி பற்றிய எண்ணங்கள் மேலெழுந்தன.

1992-ல், நான் சாவி பத்திரிகையில் வேலை செய்துகொண்டு இருந்த சமயம்... என் திருமணம் வியாழனன்று திருச்சியில் நடைபெற இருந்தது. சாவி இதழ் வேலைகளை புதன் விடியற்காலை வரை இருந்து முடித்துவிட்டு, உடனே கிளம்பி வீட்டுக்கு வந்து, குளித்துவிட்டு, 9 மணி அளவில் கிளம்பி ஒரு வேனில் திருச்சிக்குச் சென்றோம். ஜானவாசத்தில் கலந்துகொண்டு, மறுநாள் திருமணம் முடிந்து, வெள்ளிக்கிழமையன்று சென்னை திரும்பிவிட்டோம். சனிக்கிழமையிலிருந்து மீண்டும் அலுவலகம் போகத் தொடங்கிவிட்டேன். அடுத்த செவ்வாய்க் கிழமை இரவுக்குள் அடுத்த புத்தகத்தை முடிக்க வேண்டுமே!

எடிட்டோரியலில் சாவி அவர்கள் தவிர, நான் மட்டுமே இருந்ததால், என் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்க முடியவில்லை. இதைப் பற்றி அடிக்கடி என்னிடம் சொல்லி வருத்தப்படுவார் சாவி.

உறவினர்கள், நண்பர்கள் என புதுமணத் தம்பதிகளான எங்களை விருந்துக்கு அழைக்கும் ஒவ்வொருவர் வீட்டுக்கும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையையும் ஒதுக்கிப் போய் வந்தோம். அப்படி ஒருமுறை சாவி பத்திரிகையில் விளம்பரத் துறை மேலாளராக இருந்த சீனிவாசக மணி (இப்போது ‘கோபுர தரிசனம்’ என்னும் ஆன்மிக மாத இதழை 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்) அழைப்பின் பேரில் அவர் இல்லத்துக்கும் சென்றோம். அந்தச் சமயத்தில்தான் ஒரு பெரிய விபத்தில் சிக்கி, என் மனைவியின் முகம் அடிபட்டுக் கிழிந்து, தையல் போட்டு... அது ஒரு பெரிய பயங்கரம்! அது பற்றி முன்பே விரிவாகப் பதிவிட்டுள்ளேன்.

விபத்து நடந்ததற்கு மறுநாள், திங்கள் கிழமையன்று நான் வழக்கம்போல் சாவி அலுவலகத்துக்குப் போனேன் - சற்றே தாமதமாக! சாவி அவர்கள் சாப்பிட்டுவிட்டு 11 மணிக்கு மேல் அலுவலகம் இயங்கும் இடத்துக்கு வந்தார் (சாவி சாரின் வீடும் அலுவலகமும் ஒன்றாக இருந்த சமயம் அது). “என்ன ரவி இன்னிக்கு லேட்? வழக்கமா பத்து மணிக்குள்ளே வந்துடுவியே?” என்றார். “நேத்திக்கு ஒரு ஆக்ஸிடெண்ட் சார்...” என்று தொடங்கி, நடந்ததை விவரித்தேன். “அடடா! இப்போ எப்படி இருக்கு உன் வொய்ஃபுக்கு?” என்றார். “கீழே விழுந்ததுல கருங்கல் குத்தி, தாடையில வெட்டியிருக்கு. முகவாய்க்கட்டை கிட்டே ஒரு வெட்டு. தையல் போட்டிருக்கு சார்! சரியாக எப்படியும் ஒரு மாசமாவது ஆகும்னு தோணுது!” என்றேன். “த்சொ... த்சொ! கவலைப்படாதே ரவி! திருஷ்டி கழிஞ்சுதுன்னு நினைச்சுக்கோ! சரியாயிடும்” என்று ஆறுதல் சொல்லிவிட்டுக் கொஞ்ச நேரம் இருந்து, பத்திரிகை வேலைகளைக் கவனித்துவிட்டுத் தன் வீட்டுக்குள் போய்விட்டார்.

அதன்பின் அவர் அலுவலகத்துக்கு வரவில்லை. மறுநாள் செவ்வாய்தான் இதழ் முடிப்பதால், எனக்கும் அன்றைக்கு அவரிடத்தில் வேலை இருக்கவில்லை. நான் வழக்கம்போல் என் வேலைகளை மாலை 6 மணி வரையில் பார்த்துவிட்டு, 7 மணி சுமாருக்கு சாவி சாரிடம் போய்ச் சொல்லிவிட்டு, மாம்பலத்தில் உள்ள என் தங்கை வீட்டுக்குக் கிளம்பிப் போனேன். (விபத்துக்குப் பின்பு தங்கை வீட்டுக்குத்தான் மனைவியை அழைத்து வந்திருந்தேன்.)

வீட்டுக்குள் நுழைந்ததுமே ஆப்பிள் பழங்கள், ஹார்லிக்ஸ் பாட்டில் எனக் கண்ணில் தட்டுப்பட்டன. “யார் வந்துட்டுப் போனாங்க?” என்று என் தங்கையிடம் விசாரித்தேன். “என்னண்ணா, தெரிஞ்சுதான் கேக்கறியா? தெரியாம கேக்கறியா?” என்று கேட்டாள். “நான் இப்பத்தானே ஆபீஸ்லேர்ந்து வரேன்! எனக்கெப்படித் தெரியும்? யார் வந்தது? சொல்லு” என்றேன். “சாவி மாமா, மாமி ரெண்டு பேரும் வந்திருந்தாங்க. மத்தியானம் 3 மணிக்கு வந்துட்டு, இவ்வளவு நேரம் இருந்துட்டு, இப்பத்தான் ஒரு அரை மணி முன்னே கிளம்பிப் போறாங்க! ஏன், அவர் உன் கிட்டே சொல்லலியா இங்கே வரப் போறது பத்தி?” என்று கேட்டாள் தங்கை.

சொல்லவில்லை. என் மனைவியின் உடல் காயங்கள் குணமாகிற வரைக்கும் மாம்பலத்தில் உள்ள என் தங்கை வீட்டில்தான் தங்கியிருக்கப் போகிறேன் என்பதைப் பேச்சு வாக்கில் சாவி சாரிடம் சொல்லியிருந்தேன். மற்றபடி மாம்பலம் முகவரியை அவருக்குச் சொல்லவில்லை. யாரிடம் விசாரித்தார், எப்போது கிளம்பிப் போனார், எப்போது திரும்பி வந்தார் என்று எதுவும் எனக்குத் தெரியாது. அவரிடம் விடைபெற்றுக் கிளம்பி வருகிறபோதுகூட, “உன் வீட்டுக்குப் போயிட்டு வந்தோம்” என்று சாவி சாரோ, அவரின் மனைவியோ என்னிடம் சொல்லவில்லை. சந்தடியில்லாமல் போய்விட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.

பத்திரிகையுலகில் அவர் ஒரு பெரிய ஜாம்பவான். அவரைச் சந்திக்கப் பெரிய பெரிய பிரமுகர்கள் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டு, வந்து போவது எனக்குத் தெரியும். திரைப்பட இயக்குநர்கள் கே.பாலசந்தர், மகேந்திரன் மற்றும் மனோரமா, நல்லி குப்புசாமி, பாலு ஜுவல்லர்ஸ் அதிபர் பாலசுப்ரமணியம், தூர்தர்ஷன் இயக்குநர் ஆர்.நடராஜன், வாணி ஜெயராம், வைரமுத்து எனப் பலர் வந்து போயிருக்கிறார்கள். கலைஞரே நாலைந்து முறை சாவியின் வீட்டுக்கு வந்து போயிருக்கிறார். அத்தனைப் பெரியவரான சாவி, தன்னிடம் பணிபுரிகிற ஓர் ஊழியன் வீட்டுக்குச் சத்தமே செய்யாமல் போய், அடிபட்டுக் கிடந்த அவன் மனைவிக்கு தைரியமும் ஆறுதலும் சொல்லி, அங்கே உபசரிக்கப்பட்ட காபியை மறுக்காமல் வாங்கிக் குடித்து, அவர் உட்காரப் போடப்பட்ட நைந்தும் கிழிந்தும் போன ஈஸிசேரில் எந்த பந்தாவும் இல்லாமல் மூன்று மணி நேரத்துக்கும் மேலாகப் படுத்திருந்து, ஏதோ குடும்ப உறவினர் போன்று அவனது குடும்பத்தாரிடம் பேசிக்கொண்டு இருந்துவிட்டுத் திரும்பியது என்ன சாமான்யமான விஷயமா?!

சாவி அவர்களின் மனைவி ஜானகி அம்மையார் என் மனைவியின் அருகில் உட்கார்ந்து இதமான வார்த்தைகள் சொல்லி, “காயங்கள் சீக்கிரம் ஆறிவிடும். தடங்கள் எதுவும் இருக்காது, பயப்படாதே!” என்று தலையை வருடிக் கொடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார்.

சாவியும் அவர் மனைவியும் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததுமே என் தங்கைக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. பதறிப் போய்விட்டிருக்கிறார்கள். ஆனாலும், சாவி சார் சிரித்துக் கொண்டே, “ஒன்றும் பதறாதீர்கள். அவசரமே இல்லை. நான் ஒரு மணி நேரம் இருந்துவிட்டே போகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சாவகாசமாக அவர்களுடன் பேசிவிட்டே கிளம்பியிருக்கிறார். ஆனால், அவரும் அவர் மனைவியும் என் வீட்டுக்குப் போனது பற்றியோ, என் மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தது பற்றியோ என்னிடத்தில் சொல்லவில்லை. அன்றைக்கு மட்டுமல்ல, அடுத்த நாள் அவரைச் சந்தித்தபோதும் சொல்லவில்லை.

அதன்பின் அவரிடம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன். கடைசி வரையிலும் அவர் இது சம்பந்தமாக என்னிடம் பேசவில்லை. நானும், “வீட்டுக்கு வந்திருந்ததாகக் கேள்விப்பட்டேன் சார்! ரொம்ப நன்றி!” என்று சொல்லவில்லை.

அப்படிச் சொல்லியிருக்க வேண்டுமா, அதுதான் முறையா, சொல்லாமல் விட்டது எனக்கு நன்றி உணர்வு இல்லை என்பதைக் காட்டுகிறதா, சாவி சார் அதை எதிர்பார்த்திருப்பாரா, நான் கண்டுகொள்ளாமல் விட்டதில் அவர் என்னைப் பற்றி என்ன எண்ணியிருப்பார் என்கிற கேள்விகளெல்லாம் எனக்கு அப்போது தோன்றவே இல்லை. மனசு பூராவும் நெகிழ்ந்திருந்தது மட்டும் நிஜம். மற்றபடி அதை வெளிப்படுத்தத் தெரியவில்லை.

வெளிச் சம்பிரதாய நன்றி நவிலல்களைத் தாண்டி, இந்தச் சாதாரண ரவிபிரகாஷை அவனது கோப தாபங்களோடு, பலம் மற்றும் பலவீனங்களோடு அவர் முழுமையாகப் புரிந்து வைத்திருந்தார். அவன் மேல் அக்கறையும் அன்பும் கொண்டிருந்தார். அதனால்தான், பின்னாளில் அவன் ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்து, ஆறு மாதங்களில் நிரந்தர ஊழியனாக ஆன பின்பு, சாவி அவர்களின் சதாபிஷேகத்தில் கலந்து கொண்டபோது, அவர் அவனை அன்புடன் அருகில் அழைத்து முதல் கேள்வியாக இப்படிக் கேட்டார்...

“அவா உன்னை நல்லா வெச்சுண்டிருக்காளா?”

திருமணம் செய்துகொடுத்த மகளைச் சிறிது காலத்துக்குப் பின்பு பார்க்கும் ஒரு தகப்பன் கேட்கும் கேள்வியல்லவா இது!
.

Monday, November 16, 2009

ஆண்களுக்குக் காலமில்லை!

தாய்மை, பெண்மை, புனிதம் என்கிற வார்த்தைகளெல்லாம் இன்று அர்த்தம் இழந்துவிட்டன. செய்தித் தாளைப் பிரித்தால், கள்ளக் காதலியுடன் சேர்ந்து மனைவியைக் கொன்ற கணவன்மார்களின் எண்ணிக்கையைவிட, கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவிமார்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. கள்ளக் காதலுக்காகப் பெற்ற மகனையே துண்டுத் துண்டாக வெட்டி ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்திருந்த பெண்ணைத் தாய் என்று சொல்லவே நாக்கூசுகிறது. தாய் என்றுகூட வேண்டாம்; அந்த நாய் பெண் என்று சொல்லவும் அருகதை அற்றவள்.

காதலிக்குக் கொடுப்பதற்காகத் தாயின் மார்பைப் பிளந்து, இதயத்தை எடுத்துக்கொண்டு சென்ற மகன் கல் தடுக்கி விழுந்தானாம். அப்போது அந்தத் தாயின் இதயம் பதறி, “ஐயோ, மகனே! பார்த்துப் போப்பா!” என்றதாம். முப்பது வருடங்களுக்கு முன்பு இந்தக் கதையைப் படித்தபோது விழுந்து விழுந்து சிரித்தேன். ‘தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்’ என்பது என்னைச் சிரிக்க வைத்த வாக்கியங்களில் ஒன்று. தாய்மை என்றும், சொந்த ரத்தம் என்றும் சொல்வதில் எல்லாம் எனக்கு அந்நாளிலிருந்தே நம்பிக்கை இருந்ததில்லை. பிறந்ததிலிருந்தே ஒரு குழந்தையை எடுத்து வளர்ப்பதில் உண்டாகிற நேசம் தாய்க்கும் பொது; தந்தைக்கும் பொது; யாரோ ஒரு வளர்ப்புத் தந்தைக்கும் பொதுதான்! சொந்தத் தாயின் பாசம் உசத்தி, வளர்ப்புத் தாயின் பாசம் மட்டம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பாசம் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அனைவரின் பாசமும் ஒன்றே! பிரத்யேகமாக தாய்ப் பாசம் என்ற ஒன்றை நாமாகக் கற்பனை செய்து வைத்திருக்கிறோம்.

அது போல்தான் பெண் என்ற வரையறைக்குள் நாமாக, அதாவது ஆண்களாகச் சில நல்ல உருவகங்களை, குணங்களைக் கற்பனை செய்து வைத்திருக்கிறோம். அமைதியே வடிவானவள் பெண், அன்பே உருவானவள் பெண், அடக்கம் நிறைந்தவள் பெண், பொறுமையின் சிகரம் பெண், சக்தி வடிவானவள் பெண், சாந்த சொரூபிணி பெண் என ஆணிடம் இல்லாத அத்தனை நல்ல குணங்களையும் கொண்டவள் பெண் என்று எண்ணி வந்திருக்கிறோம். ‘அப்படியெல்லாம் இல்லை; நாங்கள் ஆண்களைவிட மட்டம்’ என்று நிரூபித்துக் கொள்வதில் சமீப காலமாகச் சில பெண்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், பெண் விடுதலை. ஏதோ நாட்டில் உள்ள பெண்களின் காலில் எல்லாம் இரும்புக் குண்டைக் கட்டி, காராக்கிருகத்தில் தள்ளியிருப்பது போல!

உண்மையில் ஆண்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள். பெண்டாட்டி தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட ஆண்கள், சாமியாராக ஓடிப் போன ஆண்கள், கடனாளியாகி நடுத்தெருவுக்கு வந்த ஆண்கள், பெண்கள் ஊதிப் பெரிதாக்கிய சண்டையால் ஒருவரோடு ஒருவர் வெட்டிக் கொண்டு செத்துப் போன ஆண்கள் என்று பட்டியலிட்டால் அதற்கு முடிவே இராது.

சமீபத்தில் ஒரு வலைப்பூவில் படித்தேன். பத்திரிகைத் துறையில் பணியாற்றிய ஒரு பெண் அங்குள்ள ஆண்களின் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பணியை உதற நேர்ந்ததாம். பின்னர், தொலைக்காட்சியில் பணியாற்றச் சென்றாராம். அங்கே வேறு விதமான நிலைமை. பெண்களின் அழகு மட்டுமே அங்கே தகுதியாக இருந்ததாம். முட்டாள் பெண்களே அந்த வேலைக்குப் போதுமானதாக இருந்ததாம். மொத்தத்தில், பெண்களின் முன்னேற்றம் ஆண் வர்க்கத்திற்கே பிடிக்கவில்லை என்பதாக அந்தப் பதிவு முழுக்கப் பிதற்றல்!

(இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஆண்கள் ஒட்டு மொத்தப் பெண்களையும் எதிரியாகப் பாவித்துப் பேசுவதில்லை. ஒரு சில பெண்களிடம் உள்ள குறைகளை மட்டுமே பேசுகிறார்கள். ஆனால், பெண்ணீயம் பேசும் பெரும்பாலான பெண்கள் ஒட்டு மொத்த ஆண்களையுமே ‘ஒரு குட்டையில் ஊறிய மட்டை’ போலத்தான் நினைக்கிறார்கள்; கடிக்கிறார்கள்; குதறுகிறார்கள்!)

உண்மையில், பெண்களும் சேர்ந்து வேலை செய்யுமிடத்தில் ஆண்கள் பயந்து பயந்துதான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. முன்பு நான் வேலை செய்த ஓர் அலுவலகத்தில், ‘ட’னா போன்று வளைந்து திரும்புகிற இடத்தில் ஒரு பெண் பணியாளர் அமர்ந்திருப்பார். அந்த இடத்தைக் கடக்கிறபோது தவிர்க்கவே முடியாமல் எவரொருவர் பார்வையும் அவர் மீது பதியத்தான் செய்யும். அப்படித்தான் என் பார்வையும் யதேச்சையாகப் பதிந்தது. ஒருநாள் நான் அப்படிக் கடக்கிறபோது, சட்டென்று அந்தப் பெண் எழுந்து நின்றார். “கொஞ்சம் நில்லுங்க” என்றார். நின்றேன். ஏதோ சந்தேகம் கேட்கப் போகிறார் என்றுதான் சத்தியமாக நினைத்தேன். “அதென்ன, போறப்ப வர்றப்ப எல்லாம் என்னை முறைச்சு முறைச்சுப் பார்த்திட்டுப் போறீங்க? உங்க மனசுல என்னதான் நினைச்சுட்டிருக்கீங்க? இனியொரு தரம் பார்த்தீங்க, என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது; சொல்லிட்டேன்!” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார். எனக்குக் கை காலெல்லாம் ஆடிப்போய்விட்டது. அதன் பிறகு, அந்த இடத்தைக் கடக்க நேர்ந்தால் கழுத்து வலிக்காரன் மாதிரி தலையை எதிர்ப்புறமாகத் திருப்பிக் கொண்டுதான் கடப்பேன். அடுத்த சில மாதங்களில் அந்தப் பெண் எவனோடோ ஓடிப் போய்விட்டது.

அப்பழுக்கற்ற பழம்பெரும் அரசியல்வாதியின் பேத்தி ஒருத்தி, ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவருக்கும் மேலதிகாரிக்கும் தொடர்பு இருந்திருக்கும்போல! பணக் கையாடல் விஷயமாகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ அந்த மேலதிகாரியை அந்த நிறுவனத்திலிருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டார்கள். சில நாட்களில் அந்தப் பெண், அடுத்து அந்தப் பொறுப்புக்கு வந்த நல்ல மனுஷன் மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டை வீசியது. அவர்தான் அந்த மேலதிகாரியின் டிஸ்மிஸுக்குக் காரணம் என்பது அவர்களின் எண்ணம். அதோடு மட்டும் விடவில்லை; இன்னும் இருவர் மீதும் அதே போன்ற பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு. இதன் அட்டூழியத்தைத் தாங்க முடியாமல் நிர்வாகம் அந்தப் பெண்ணுக்கும் கல்தா கொடுத்து அனுப்பிவிட்டது. அபாண்டமாகப் போடப்பட்ட அந்த வழக்கும் தள்ளுபடியாகிவிட்டது.

‘பாலியல் பலாத்காரம்’ என்பது இன்று வேலைக்குப் போகும் சில (கவனிக்கவும்: சில) பெண்களுக்கு ஓர் அருமையான ஆயுதமாகிவிட்டது. எனக்குத் தெரிந்து எத்தனையோ இடங்களில், அலுவலக வேலையாக எந்தவித அறிவோ, அனுபவமோ இல்லாத பெண்கள் தங்கள் மேலதிகாரியைக் கைக்குள் போட்டுக்கொண்டு, கை நிறையச் சம்பளமும், கூடுதல் பெர்க்ஸும் அனுபவிக்க, நன்கு உழைக்கக்கூடிய அப்பாவி ஆண்கள் மத்தியானம் சாப்பாட்டுக்கு எவர்சில்வர் டப்பாவில் தயிர் சோறு கட்டி எடுத்துக்கொண்டு, பஸ்ஸுக்கு சில்லறை இருக்கிறதா என சட்டைப் பையைத் தடவிப் பார்த்துக்கொண்டு அலுவலகத்துக்கு போய் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்தக் குறிப்பிட்ட சில பெண்கள் மேலதிகாரியிடம் குழைகிற வரையில் குழைந்து, வேண்டிய மட்டும் வாங்கிச் சேர்ப்பார்கள். என்றைக்காவது அவர் முரண்டு பிடித்தால், இருக்கவே இருக்கிறது ‘பாலியல் பலாத்கார’ ஆயுதம்! அதன் பின் அவர் கேஸ், அது இது என்று அல்லாட வேண்டியதுதான். இல்லையென்றால், ஒரு பெரிய தொகையை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்துச் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டியதுதான். இந்தப் பெண்களுக்கு அடுத்து வேறு ஒரு அலுவலகமும், அங்கே ஒரு இளிச்சவாய் அதிகாரியும் காத்திருப்பார்கள்.

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படித்தேன்; திருமணம் ஆகாமல் ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்கிற கலாசாரம் சென்னையிலும் வேகமாகப் பரவி வருகிறதாம்! ‘தாலி என்பது அடிமை வேலி; அதை உதறுவோம். ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபிப்போம்’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு இந்த அனாசாரத்துக்கு - இல்லை, கலாசாரத்துக்கு சில அறிவுஜீவிப் பெண்களும் தயாராகிவிட்டார்களாம்.

பள்ளிப் பருவம் முடிந்து கல்லூரிக்குப் போகும் பையனைக் கவனித்திருக்கிறீர்களா? சிகரெட் பிடிக்கப் பழகுவான்; நண்பர்களுடன் கெட்ட வார்த்தை பேசத் தொடங்குவான்; அடுத்தவரை மரியாதையில்லாமல் பேசுவதில் இன்பம் காண்பான். அதாவது, இத்தனை நாள் அவன் பெற்றோருக்கு அடிமையாக, ஆசிரியர்களுக்கு அடிமையாக இருந்துவிட்டானாம். இப்போது அவன் கட்டுப்பாடுகள் இல்லாத பெரிய மனிதனாகிவிட்டான். அந்தச் சந்தோஷத்தை எப்படிக் கொண்டாடுவது என்று அவனுக்குத் தலைகால் புரியவில்லை. அதன் பிரதிபலிப்புதான் மேலே சொன்ன நடவடிக்கைகள் எல்லாம்!

பெண் விடுதலை பேசும் பெண்களில் பெரும்பாலோர் அந்தப் பையனைப் போலத்தான் நடந்து கொள்கிறார்கள். தன்னைக் கேட்பார் இல்லை என்கிற திமிர்த்தனம். ஒரு நாடு என்றால், நல்லதொரு தலைவனின் வழி நடக்க வேண்டும். ஒரு குடும்பம் என்றால், அந்தக் குடும்பத்தின் தலைவன் வழி நடக்க வேண்டும். தலைவன் சரியில்லை என்றால், அந்தக் குடும்பத்தைத் தலைவி வழி நடத்தவோ, அல்லது தலைவனை மாற்றவோ செய்யலாம். ஆனால், நல்ல தலைவன் சொற்படி கேட்டு நடப்பதையே அடிமைத்தனம் என்றால், எங்கே போய் முட்டிக் கொள்வது? அப்படியென்றால் மாணவர்கள் ஆசிரியர் பேச்சைக் கேட்டு நடப்பது, பிள்ளைகள் அப்பா அல்லது அம்மாவின் பேச்சைக் கேட்டு நடப்பது, வாகன ஓட்டிகள் டிராஃபிக் கான்ஸ்டபிள் சொல்கிற வழி நடப்பது எல்லாம்கூட அடிமைத்தனம்தான்!

‘திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்கிற’ கலாசாரத்துக்குப் பல ஆண்கள் தங்கள் ஏகோபித்த ஆதரவைத் தரத் தயாராக இருக்கிறார்கள். பின்னே, எதற்கு குடும்பம், பெண்டாட்டி, குழந்தை குட்டியென்று அவதிப்பட வேண்டும்? எல்லாம் சுமை! ஒரு பெண்ணோடு ஒன்றாகச் சில நாட்கள் வாழ்ந்தோமா, பின்னர் ‘மனம் ஒத்துப் போகவில்லை; இருவரின் எண்ணங்களும், கருத்துக்களும் முரண்படுகின்றன. எனவே, நட்புரீதியாகப் பிரிந்துவிட்டோம்’ என்று சொல்லிவிட்டு, அடுத்த பெண்ணோடு மீண்டும் ‘திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வதில்’ உள்ள சுகம் தாலி கட்டிய திருமணத்தில் கிடைக்குமா?

சொல்ல முடியாது. இவன் மனதில் இப்படிக் கணக்குப் போட்டுக் கொண்டு இருப்பான். அந்தப் பெண் கில்லாடியாக இருந்தால், ‘பாலியல் பலாத்கார’க் குற்றச்சாட்டையோ, தன்னை ‘நம்ப வைத்து ஏமாற்றிய’ குற்றச்சாட்டையோ இவன் மீது வீசி, இவனை ஒரு வழி பண்ணலாம்! அதையும் இந்த உலகம் நம்பும்; ஏற்கும். இவன் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க ஆயுள் முழுக்கப் போராடிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

இது பெண்கள் உலகம்; ஆண்களுக்குக் காலமில்லை!
.

Wednesday, November 11, 2009

சினிமா ஸ்டில்லுக்கு ஒரு சிறுகதை!

த்திரிகை வேலையில் சேருவதற்கு முன்பு நிறைய கதைகள் எழுத வேண்டும், எல்லாப் பத்திரிகைகளிலும் என் பெயர் வர வேண்டும் என்கிற ஆசை இருந்தது. எழுதினேன். கல்கி, விகடன், சாவி, தினமணிகதிர், குங்குமம், அமுதசுரபி, அலிபாபா, மங்களம் என பல பத்திரிகைகளில் என் சிறுகதைகள் வெளியாகின.

1986-ல் சாவியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்த பின்பு, அதுவும் சேர்ந்த இரண்டு ஆண்டுகளிலேயே அதன் முழுப் பொறுப்பையும் என் வசம் ஆசிரியர் சாவி ஒப்படைத்த பின்பு, நானே கதை எழுதி, நானே அதை ‘சாவி’யில் வெளியிட்டு விடலாம் என, ஒரு கதை அச்சில் வருவது அத்தனை சுலபமாக ஆன பிறகு, கதை எழுதுவதிலும், பத்திரிகையில் என் பெயர் பார்த்துப் பரவசப்படுவதிலும் எனக்கிருந்த ஆர்வம் விட்டுப் போயிற்று.

விகடனில் சேர்ந்த பின்பு ஆரம்ப நாட்களில் சில கதைகள் எழுதினேன். ஆசிரியர் பாலசுப்ரமணியன் ஊக்குவித்ததன்பேரில் ‘ஏடாகூடக் கதைகள்’ எழுதினேன். பின்பு, மிக அவசியமாக இருந்தாலொழிய நான் சிறுகதைகள் எழுதுவதில்லை. கதைகள் படிப்பதில் உள்ள ஆர்வம், எழுதுவதில் எனக்கு விட்டுப் போயிற்று.

இன்றைக்கு எழுதக்கூடிய பல இளம் எழுத்தாளர்கள் மிகவும் சுவாரசியமாகவே எழுதுகிறார்கள். அவர்களைப் படிக்கும்போதும், ஏதேனும் ஒரு நல்ல சிறுகதையை வாசிக்கும்போதும், நானும் எழுத வேண்டும் என்கிற ஒரு வேகம் எனக்குள் எழுவதுண்டு. உடனடியாக உட்கார்ந்து எழுதினால் உண்டு. அப்போது பார்த்து வேறு ஏதேனும் முக்கிய வேலை வந்தாலோ, கணினி தகராறு செய்தாலோ, கரன்ட் கட் ஆனாலோ, உடல் நிலை மந்தமாக இருந்தாலோ... கதை எழுதும் ஆர்வமும் வேகமும் குறைந்துவிடுகிறது. கெடுபிடியாக நிர்பந்தித்து என்னை எழுதச் சொன்னாலொழிய, எழுதவே தோன்றுவதில்லை எனக்கு.

ஒருமுறை திரு.கண்ணன் சில விஷுவல் டேஸ்ட் புகைப்படங்களைக் கொடுத்து, அவற்றுக்கு ஒரு பக்கக் கதைகள் எழுதித் தரும்படி சொன்னார். மறுநாளே வேண்டும் என்று கேட்டார். ஒரே ராத்திரியில் பத்து கதைகள் எழுதினேன். (நிர்பந்தம்!) அவற்றிலிருந்து செல்வமே, தண்ணீர் தண்ணீர், உயர்ந்தவன், வீரன், வசீகரா, இரண்டாவது காதல், மாடல் என ஏழு கதைகள் அந்த வார விகடனில், ஒரு பக்கம் புகைப்படம், எதிர்ப் பக்கம் கதை என்கிற முறையில் வெளியாகின.

அவற்றில் ‘செல்வமே’ கதையை மட்டும் இங்கே தருகிறேன். ஏழிலேயே மிகச் சிறப்பான கதை அதுதான் என்பது காரணம் அல்ல; அது என் எண்ணமும் அல்ல! உண்மையில், மற்ற ஆறு கதைகளும்கூட சிறப்பானவையா, அல்லது அனைத்துமே சுமார் ரகமா, அறுவையா என்பதெல்லாம் வாசகர்களின் ரசனைக்கு உரியவை. கண்ணன் எழுதச் சொன்னார்; எழுதினேன். அவ்வளவுதான்! அவர் தேர்ந்தெடுத்த ஏழு கதைகளில் இதை மட்டும் இங்கே கொடுப்பதற்குக் காரணம், இதன் சுத்தமான தமிழ் நடை. (சொல்ல முடியாது; எனக்கே தெரியாமல் இதில் அந்நிய பாஷைகளும் கலந்திருக்கலாம்!)

செல்வமே...

‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்னும் திரைப்பட ஸ்டில் அது. பாரம்பரிய நகைகள் அணிந்த ஜமீன்தார் குடும்பத்துப் பெண்மணி போன்ற தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன் தன் பத்து வயது மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வருகிறார். ஆசிரியருடன் ஏதோ பேசுகிறார். அவர்களின் பணியாள் போன்று ஒருவர் சற்று ஒதுங்கி நிற்கிறார். அந்த ஸ்டில்லில் உள்ள காட்சி இதுதான்!

இனி கதை...
திருமகளே பூதலத்தில் கால் பதித்து நடந்து வந்தாற்போன்று அந்தப் பெண்ணரசி தன் மகனைக் கைப்பிடித்து அழைத்து வந்தாள்.

“ஐயா! தங்களின் கற்பிக்கும் ஆற்றல் குறித்து ஆன்றோரும் சான்றோரும் ஏன்றோரும் கூறக் கேட்டுப் பெரிதும் உவகை கொண்டுள்ளனர் இந்த மைந்தனை ஈன்றோர். எனவே, தம் புத்திரனை உங்கள் பள்ளியில் சேர்த்துத் தமிழ் பயிற்றுவிக்க விரும்புகிறார் எம்பிராட்டி. ஆவன செய்வீர்!” என்று பணிவுடன் விண்ணப்பித்துக் கொண்டான் உடன் வந்த ஏவலாள்.

“நல்லது. அவ்வண்ணமே ஆகட்டும்! அதற்கு முன், நான் இச்சிறுவனின் கல்வித் தரத்தைச் சோதித்துப் பார்க்க விரும்புகிறேன்” என்ற உபாத்தியாயர் சிறுவன் பக்கம் திரும்பி, “இளையோனே! ஐம்பெருங் காப்பியங்கள் எவை?” என வினவினார்.

“சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி ஆகியன ஐயா!” எனப் பணிவுடன் விடை பகன்றான் பாலகன்.

“நன்று பகன்றனை! ஐம்புல நுகர்ச்சியினால் மரிப்பன யாவை?” என அடுத்த வினா வந்து விழுந்தது.

“சுவையாலிறப்பது மீன்; நாற்றத்தால் வண்டும், பரிசத்தால் ஆனையும், ஓசையால் அசுணமும், ஒளியால் விட்டிலும் ஐயா!”

“நல்லது. திருவாசகத்திலிருந்து ஒரு செய்யுளைச் சொல்வாயாக!”

அடுத்த மணித்துளி தொடங்குவதற்குள்ளாக அந்தச் சிறுவன் தன் இனிய குரலெடுத்துப் பாடத் தொடங்கினான்.

“அடடா! என்னே இனிமை... என்னே இனிமை! காதினில் தேன்மழை பெய்துவிட்டாய். உன்னைப் பெற்றதன் மூலம் பெரும்பேறு பெற்றுவிட்டனர் உந்தன் பெற்றோர். உன்னை மாணாக்கனாக அடைவதன் மூலம் இன்று நானும் இறும்பூது எய்துகிறேன். இறுதியாக ஒரு கேள்வி. ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு’ என்னும் குறட்பா எந்த அதிகாரத்தின் கீழ் வருகிறதென்று சொல் பார்க்கலாம்?”

“அறிவுடைமை என்னும் அதிகாரத்தின் கீழ் வருகிறது ஐயா!” என நவின்ற அச் சிறுவன் தொடர்ந்து மொழியலானான்...

“இதன் ஈற்றடியை மாற்றாமல் இதே போன்று வேறொரு குறட்பாவும் உள்ளது ஐயா!”

உபாத்தியாயர் உள்ளபடியே சிலிர்த்துப் போனார். “என்னது! ‘அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு’ என்று முடிகிற இன்னொரு குறட்பாவும் உள்ளதா?! அதை நான் அறிகிலேனே! எங்கே, விளம்பு?!” என்று சொல்லவொண்ணா தாகத்துடன் வினவினார்.

“ஆமாம் ஐயா! அக் குறள் ‘மெய்யுணர்தல்’ எனும் அதிகாரத்தின் கீழ் வருகிறது. ‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு’ என்பதே அஃது!”

“அம்மம்ம..! என் வியப்பை மேன்மேலும் மிகுதியாக்கிக் கொண்டே போகிறாய்!” என பூரிப்பால் விழிகளை விரித்த உபாத்தியாயர், அருகில் நின்ற அச் சிறுவனின் தாயார் பக்கம் திரும்பி, “இப்படி ஒரு நல்முத்தினைப் புத்திரனாகப் பெற தங்கள் மணி வயிறு மா தவம் செய்திருக்கிறது. அது இருக்கட்டும் அம்மா! தாங்கள் இங்கு வந்ததிலிருந்து ஒரு வார்த்தையும் பேசாமல் குறுநகை பூத்தபடியே மோனத் தவம் பயில்கின்றீரே, ஏனம்மா?” என்று உசாவினார்.

இடைமறித்த ஏவலாள் பகன்றான்... “ஐயன்மீர்! பிறவியிலிருந்தே செவிப் புலனை இழந்திருந்ததால், பேசும் திறனையும் இழந்துவிட்ட பரிதாபத்துக்குரியவர் எம்பிராட்டி!”

***

2004-ல் வெளியான கதை இது. இதற்குச் ‘செல்வமே’ என்று தலைப்பிட்டிருக்கிறேன். எதற்காக இந்தத் தலைப்பை வைத்தேன் என்று தெரியவில்லை. கதை எழுதிய சமயத்தில் இந்தத் தலைப்பு வைக்க ஏதேனும் காரணம் இருந்திருக்க வேண்டும். யோசித்தால் அகப்படக்கூடும்!
.
.

Sunday, November 08, 2009

அசோகமித்திரனும் எனது மித்திரனும்!

‘மழை பெய்தால் கேணி நிறையும் என்பது நியதி. ஆனால் நேர்மாறாக, மழை பெய்ததால் ஒரு கேணி வற்றியது’ என்று இந்தப் பதிவுக்கு சுவாரஸ்யமான ஓர் ஆரம்ப வாக்கியத்தை யோசித்து வைத்திருந்தேன். ஆனால், என் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக (ஆசைக்கு என்று தப்பர்த்தம் செய்துகொள்ளாதீர்கள்) வழக்கம்போல் கேணி நிரம்பி வழிந்தது.

ஞாநியின் கேணிக் கூட்டத்தைச் சொல்கிறேன். கேணியைச் சுற்றித் தண்ணீர் நின்றதால், கேணிக் கூட்டம் கூடத்துக் கூட்டமாகியது. ஹாலில் இடம் போதாமல், வெளியே ஜன்னல் அருகே நின்றபடியெல்லாம் ஆர்வத்துடன் கவனித்தார்கள். அடாது மழையிலும் விடாது வந்திருந்தவர்களைக் கண்டு பெருமையும் ஆச்சரியமும் கொண்டேன்.

இன்றைய முக்கிய விருந்தினர் எழுத்தாளர் அசோகமித்திரன். இவரைப் பற்றி என் இன்னொரு வலைப்பூவான ‘என் டயரி’யில் ஜூன் 26-ம் தேதியே எழுதியுள்ளேன். அதைப் படிக்க விரும்புகிறவர்கள் கீழே உள்ள வரியைச் சொடுக்கவும்.

(அசோக)மித்திரனின் மித்திரன் நான்!

அசோகமித்திரனை இந்தக் கூட்டத்துக்கு அழைத்து வந்த நண்பர் பாஸ்கர் சக்தியிடமும் ரமேஷ்வைத்யாவிடமும் வரும் வழியிலேயே காரில் அவர் என்னைப் பற்றி விசாரித்ததாகச் சொன்னார்கள். எத்தனைப் பெரிய எழுத்தாளர் அவர்! பாலு மகேந்திரா, கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் அவரின் ரசிகர்கள். அப்படியான ஒருவர் மிகச் சாமானியனான என்னை நினைவு வைத்து விசாரிக்க வேண்டுமானால், அது எனக்கு எத்தனைப் பெரிய பாக்கியம்!

அவர் உள்ளே நுழைந்ததுமே ஓடிச் சென்று அவர் முன் நின்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்குள், அவரே “ரவிபிரகாஷ்” என்று வாஞ்சையுடன் என் கையைப் பற்றிக் கொண்டதை நினைக்கையில் நெஞ்சு நெகிழ்கிறது.

மிகத் தளர்ந்திருந்தார். 78 வயதுக்குண்டான தளர்ச்சி அல்ல அது. 98 வயதுத் தளர்ச்சி!

அவரைப் பற்றி ஞாநி தமது அறிமுக உரையில் சொன்ன ஒரு விஷயம் என்னைக் கவர்ந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியை பேட்டி காண்பதற்காகச் சென்றிருந்தாராம் ஞாநி. அப்போது இந்திரா பார்த்தசாரதி ஊருக்குப் புறப்படுவதற்குத் தயாராகிக்கொண்டு இருந்திருக்கிறார். பேட்டி ஒன்றரை மணி நேரம் நீடித்தது. அந்தச் சமயத்தில் அங்கே வேறொருவரும் இருந்துள்ளார். ஞாநி இந்திரா பார்த்தசாரதியை பேட்டி எடுத்துக்கொண்டு இருக்க, அத்தனை நேரமும் அந்த மற்றொரு நபர் மும்முரமாக இந்திரா பார்த்தசாரதி ஊருக்குப் புறப்படுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை (படுக்கைகளைக் கட்டி வைப்பது, சட்டைகளை மடித்து சூட்கேஸில் வைப்பது, அறையை ஒழுங்குபடுத்துவது போன்றவற்றை) செய்துகொண்டு இருந்தாராம். பேட்டி முடிந்து கிளம்புகிற நேரத்தில் இந்திரா பார்த்தசாரதி அவரை ஞாநிக்கு, ‘இவர் மிஸ்டர் தியாகராஜன்’ என்று அறிமுகம் செய்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல; எழுத்தாளர் அசோகமித்திரன்தான். அவரின் பல கதைகளைப் படித்து அவரின் பெரிய ரசிகனாகவே ஆகியிருந்தபோதிலும், ‘அசோகமித்திரன்’ என்ற பெயர்தான் பரிச்சயமாகியிருந்ததே தவிர, தியாகராஜன் என்று தனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டவர்தான் தன் அபிமான எழுத்தாளர் அசோகமித்திரன் என்று ஞாநிக்கு அப்போதும் தெரியவே இல்லையாம். பின்னாளில் தெரிய வந்தபோது, தாமே ஒரு பெரிய எழுத்தாளராக இருந்தபோதிலும் அந்த நினைப்பே இல்லாமல், வேறொரு எழுத்தாளரின் பேட்டியில் குறுக்கிடாமல் அவரின் நண்பனாக மட்டுமே அங்கே இருந்து, அவரின் பயண ஏற்பாடுகளைக் கவனித்த அசோகமித்திரனின் பெருந்தன்மை, அவரின் மீதான மதிப்பை இன்னும் அதிகப்படுத்திற்று என்றார் ஞாநி.

அசோகமித்திரன் தமது உரையின்போது ‘சாவி’யில் வெளியான தன் தொடர்கதை ‘மானஸரோவர்’ பற்றிக் குறிப்பிட்டார். “எதையும் செய்து முடித்துவிடலாம் என்று ரொம்ப சுலபமாகச் சொல்லிவிடுவார் சாவி. திடீரென்று தொடர்கதை கேட்டால் எப்படி சார் என்னால் எழுதமுடியும் என்று நான் கேட்டபோது, ‘அதெல்லாம் முடியும். முதல்லே ஒரு மூணு அத்தியாயம் எழுதிக் கொடுங்க. அப்புறம் வாராவாரம் எழுதிக் கொடுங்களேன். என்ன பிரமாதம்?’ என்று சுலபமாகச் சொல்லிவிட்டார் சாவி. முடியாது என்றே ஒன்றே அவர் வாயிலிருந்து வராது. கோபக்காரர் அது இது என்று அவர் மீது பலவிதமான விமர்சனங்கள் உண்டு. ஆனால், தன்னம்பிக்கை மிகுந்தவர். அவரைப் போல ஒரு பத்திரிகையாளரைப் பார்ப்பதரிது. அவரின் தூண்டுதலால்தான் என்னால் ‘மானஸரோவர்’ எழுத முடிந்தது” என்று குறிப்பிட்டார் அசோகமித்திரன்.

இரண்டு, மூன்று கூட்டத்துக்கு முன்பேயே அவர் கலந்து கொள்வதாக இருந்தது. அவர் உடல் நிலை சீர்கெட்டதால் அப்போது முடியாமல் போய்விட்டது. அது பற்றியும் அவர் சொன்னார்.

தனக்கு நினைவு மறதி அடிக்கடி வந்தது என்றும், 78 வயதுக்காரனுக்கு மறதி சகஜம்தானே என்று நினைக்கலாம்; ஆனால், தனக்கு வந்த மறதி அப்படியானது அல்ல என்று தான் உணர்ந்துகொண்டதாகவும் சொன்னார். ஒரு நாள் வழக்கம்போல் செக்கப்புக்குப் போய்விட்டுக் காலை 11 மணிக்கு வீடு திரும்பி, ஒரு நாற்காலியில் போய் உட்கார்ந்தவர் மாலை 6 மணி வரையில் அப்படியே உட்கார்ந்துகொண்டு இருந்ததாகவும், மனைவி பயந்து அக்கம்பக்கத்து வீட்டு நண்பர்களைக் கூப்பிட்டு அவர்களின் உதவியோடு அவரைத் தூக்கிக்கொண்டு போய்ப் படுக்கையில் போட்ட பின்பும் பிரக்ஞையில்லாமல் 24 மணி நேரம் அப்படியே கிடந்ததாகவும், பின்னர் அவரின் பிள்ளைக்குத் தகவல் அனுப்பி, அவர் வந்து அப்பாவைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் சொன்னார்.

டாக்டர்கள் இவரைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, உடம்பில் உப்புச் சத்து சாதாரணமாக 135 இருக்க வேண்டும் என்றும், இவர் உடம்பில் மிகக் குறைவாக இருப்பதாகவும், அதனால்தான் இப்படியான உடல் தளர்ச்சி, நிற்க முடியாமல் தள்ளாடுதல், நினைவு பிறழ்தல் போன்றவை ஏற்படுகிறது என்றும் சொன்னார்களாம். “உப்பு என்று லேசாகச் சொல்கிறோம். ஆனால், நம் உடம்புக்கு உப்புச் சத்துக்கு எத்தனை முக்கியமானது என்பதை இந்த 78 வயதில்தான் நான் தெரிந்து கொண்டேன்” என்றார் அசோகமித்திரன். இதனால்தான் பெரியவர்கள், ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்று சொல்லி வைத்தார்கள் போலும்!

‘சாவி’ வார இதழில் வெளியான தனது ‘மானஸரோவர்’ தொடர்கதை பற்றிப் பேசும்போது, “அப்போதுதான் ரவிபிரகாஷை நான் பார்த்தேன். அவர் அப்போது மாம்பலம், கோதண்டராமர் கோயில் தெருவில் குடியிருந்தார்” என்று குறிப்பிட்டார் அசோகமித்திரன். இத்தனை வயதிலும், இத்தனை உடல் உபாதைக்குப் பிறகான நினைவு மறதியிலும் மிகச் சரியாக நான் குடியிருந்த தெருப் பெயர் முதற்கொண்டு அவர் குறிப்பிட்டுச் சொன்னது என்னை ரொம்பவே ஆச்சரியப்படுத்தியது. அவரே ஒருமுறை ‘மானஸரோவர்’ அத்தியாயத்தை எடுத்துக்கொண்டு அந்தத் தெருவுக்கு வந்து, என் வீட்டைக் கண்டுபிடித்து, நேரிலேயே என்னிடம் கொடுத்துவிட்டுப் போன சம்பவத்தைதான் மேலே கொடுத்துள்ள ‘லின்க்’கில் உள்ள பதிவில் நான் குறிப்பிட்டுள்ளேன்.

அசோகமித்திரனின் குரல் பலகீனமாக, மிக மென்மையாக ஒலித்ததால், சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த என் போன்றவர்களுக்கு அவர் பேசியது தெளிவாகக் காதில் விழவில்லை. ஆனாலும், குறும்பு குறையாமல், நகைச்சுவையோடு அவர் பேசினார் என்பது மட்டும் அவ்வப்போது எழுந்த குபீர் சிரிப்பலைகளால் தெளிவாகத் தெரிந்தது.

‘தண்ணீர்’ என்று அவர் எழுதிய ஒரு சிறுகதையைப் பற்றிப் பலர் பாராட்டிப் பேசினார்கள். தண்ணீர் பிடிக்க ஒரு குடும்பம் படும் கஷ்டம் பற்றியும், தண்ணீர் விநியோகம் முறையாக இல்லாதது பற்றியும் அவர் எழுதிய அந்தச் சிறுகதை பரவலான கவனம் பெற்று, அதன் பிறகுதான் மாநகராட்சி விழித்துக்கொண்டு, தண்ணீர் சப்ளையை முறைப்படுத்திற்று என்று ஓர் அரிய தகவலைச் சொன்னார் குடிநீர் வாரியத்திலிருந்து வந்து கலந்து கொண்ட ஒருவர்.

மழையைச் சாக்கிட்டு இந்த முறை கேணி கூட்டத்துக்குப் போகாமல் இருந்துவிடலாமா என்று கிளம்புவதற்குச் சற்று முன்னர் வரை யோசித்துக் கொண்டு இருந்தேன். எனினும், சட்டென்று பேண்ட், சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டேன். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, கலந்து கொள்ள இருப்பவர் என் அபிமான எழுத்தாளர் அசோகமித்திரன் என்பது. மற்றொன்று, அடாது மழையிலும் விடாது கூட்டத்தை நடத்த வேண்டும் என்கிற ஞாநி + பாஸ்கர்சக்தியின் ஆர்வம்.

கேணிக் கூட்டத்துக்குப் போனதில், அசோகமித்திரனைச் சந்தித்துப் பேசியதைவிட என்னை மகிழ்வித்த ஒரு விஷயம், நண்பர் ரமேஷ்வைத்யாவைச் சந்தித்துப் பேசியதுதான். சிகிச்சைக்குப் பிறகு பூரண தெளிவோடும் ஆரோக்கியத்தோடும் அவரைப் பார்த்தது சந்தோஷமாக இருந்தது.

அவர் சிகிச்சையில் இருந்த பெரும்பாலான நாட்கள் வெறும் சைக்கோதெரபிதானாம். கடைசி நாலைந்து நாட்களில்தான் மாத்திரை கொடுத்தார்களாம். அதைக் காலையில் விழுங்கிவிட்டால், அடுத்து மூன்று நாட்களுக்குக் குடிக்க முடியாதாம். மீறிக் குடித்தால், பக்க வாதம் தாக்கலாம்; நாக்கு இழுத்துக் கொள்ளலாம்; மூளை பாதிக்கப்படலாம்; ஏன், மரணமேகூட நிகழலாம் என்று கடுமையாக எச்சரிக்கை செய்தார்களாம் மருத்துவர்கள். குடிதான் என்றில்லை; இருமல், ஜலதோஷத்துக்கு எடுத்துக் கொள்ளும் மருந்திலும்கூடக் கொஞ்சம் ஆல்கஹால் இருப்பதால், அதுவும் ஆபத்துதான்; அவ்வளவு ஏன், ஷேவ் செய்துவிட்டுத் தடவிக் கொள்ளும் ஆஃப்டர் ஷேவ் லோஷனைக் கூடத் தடவக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்களாம்.

இத்தனை வீர்யமான மருந்தா என்று பயந்து, “இதனால் வேறு சைட் எஃபெக்ட்ஸ் எதுவும் இல்லையா?” என்று கேட்டேன். ரமேஷ் வைத்யா தனது வழக்கமான குறும்புத்தனம் மாறாமல், “வேலை போச்சு, வீடு போச்சு, குடும்பம் போச்சு! குடியினால் ஏற்பட்ட இந்த சைட் எஃபெக்ட்ஸை விடவா பெரிய சைட் எஃபெக்ட்ஸ் இதுல வந்துடப் போகுது!” என்றார் சிரித்துக் கொண்டே.

இந்த முறை அவர் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. நல்லதே நடக்கட்டும்!
.

Wednesday, November 04, 2009

ஒரு ஏடாகூடக் கதை!

ன் ‘ஏடாகூட கதைகள்’ முதல் பதிப்பு முழுக்க விற்றுத் தீர்ந்து, இரண்டாவது பதிப்பு சில மாதங்களுக்கு முன் போடப்பட்டு, ஐந்நூறு பிரதிகளுக்கு மேல் - சரியாகச் சொல்வதானால், 694 பிரதிகள் - விற்றிருக்கும் மகிழ்ச்சியான தகவலை இன்று கேள்விப்பட்டேன்.

விகடனில் முன்பு நான் வாராவாரம் ஒரு ஏடாகூட கதை எழுதி வந்தபோது முதல் வாசகராக அதை ரசித்துப் படித்து, அந்தக் கதையை மேலும் மெருகேற்றுவதற்கான யோசனைகளைச் சொன்னவர் எங்கள் மதிப்புக்குரிய சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள். அவர் தற்சமயம் வெளிநாட்டில் இருப்பதால், அவருக்கு என் மானசிக நன்றிகளை உடனடியாகத் தெரிவித்துக் கொண்டேன்.

விகடனில் எழுதிய எட்டு கதைகள் போக, இந்தப் புத்தகத்தில் மேலும் எட்டு கதைகள் எழுதிச் சேர்த்துள்ளேன்.

உயிரெழுத்துக்களே இல்லாத கதை, நம் விருப்பத்துக்கேற்ப வடிவமைத்துக் கொள்ள முடிகிற கதை, ஒரே ஒரு வாக்கியத்தில் அமைந்த முழு நீளக் கதை, வாசகர்களையே துப்புக் கண்டுபிடிக்க வைக்கும் புதுமையான க்ரைம் கதை, பக்கங்கள் மாறிப் போனதால் வந்த விபரீதக் கதை என இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு ஏடாகூடம் செய்திருக்கிறேன்.

புத்தகத்துக்காக மேலும் எட்டு கதைகளை நான் தயார் செய்துகொண்டு இருந்தபோதுதான், மதிப்புக்குரிய எழுத்தாள நண்பர் புஷ்பாதங்கதுரை அவர்கள் என்னை ஒரு புதுமையான கதை எழுத முடியுமா என முயற்சி செய்யும்படி சொன்னார். அதாவது, வினைச் சொற்களே இல்லாத கதை.

“எப்படி சார் அது போல எழுத முடியும்? சாத்தியமே இல்லையே! வினைச் சொல் இல்லாமல் வாக்கியம் எப்படி முழுமை அடையும்?” என்றேன்.

“முடியும். ஆங்கிலத்தில் ‘வெர்ப்’ இல்லாமல் அப்படி ஒரு கதை வந்திருக்கிறது. நான் படித்திருக்கிறேன். உதாரணமாக ‘என் பெயர் ரவி’. இதில் வினைச் சொல் நேரடியாக இல்லை. மறைந்திருக்கிறது. ‘என் சொந்த ஊர் விழுப்புரம்’. ‘இப்படிச் சில வாக்கியங்கள் எழுதலாம். முழுக் கதையையும் எழுத முடியுமா’ என்று யோசிக்காதே! முயன்று பார். உன்னால் முடியும்” என்று ஊக்குவித்தார்.

முயன்றேன். இறுதியில் வெற்றியும் பெற்றேன் என்றுதான் சொல்ல வேண்டும். வினைச் சொற்களே இல்லாமல், புத்தகத்தில் ஆறு பக்க அளவில் ஒரு முழுமையான கதையை எழுதிவிட்டேன். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளிலேயே என்னை மிகவும் சிரமப்படுத்திய கதை அது. படிப்பவர்களை நிச்சயம் சிரமப்படுத்தாது.

பொதுவாக, நன்கு விற்பனையாகிக்கொண்டு இருக்கும் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதையை இங்கே வலைப்பூவில் வெளியிடுவது சரியில்லைதான். என்றாலும், இன்றைய எனது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள மிகச் சிறிய கதையை இங்கே பதிவிடுகிறேன்.

ப்ரியாவின் கடிதம்!

பொன் கிடைத்தாலும், கிடைக்காத ஒரு புதன் கிழமை காலையில்தான் ப்ரியதர்ஷினி காணாமல் போனாள். ஆனால், அந்த விஷயம் அவளின் பெற்றோருக்கு, அன்று சாயந்திரத்துக்கு மேல்தான் தெரிய வந்தது.

எப்போதும்போல் ப்ரியா காலையில் கம்ப்யூட்டர் கிளாஸுக்குக் கிளம்பிப் போனாள். மதியம் 12 மணிக்கு மேல்தான், அவள் இன்னும் வீடு திரும்பாதது செண்பகாவுக்கு உறைத்தது. கணவரின் ஆபீஸுக்கு போன் போட்டாள்.

“வந்துருவாடி! அவ என்ன குழந்தையா..? எல்லாம் வருவா. யாராவது ஃப்ரெண்ட் வீட்டுக்கு, இல்லேன்னா உன் தங்கை ஒருத்தி இருக்காளே, மாம்பலத்துல, அங்கே போயிட்டு, சாயந்திரத்துக்கு மேல வராளோ என்னவோ?” என்றார் ஜெயராமன், வேலைக்கு நடுவில் அசுவாரசியமாக.

ப்ரியதர்ஷினியின் அறைக்குள் போய், என்ன தேடுகிறோம் என்றே தெரியாமல் குத்துமதிப்பாக எதையோ தேடிக்கொண்டு இருந்தபோதுதான், செண்பகாவின் கையில் ‘அது’ கிடைத்தது. ப்ரியதர்ஷினி பெயரில், கம்ப்யூட்டர் கிளாஸ் முகவரிக்கு வந்திருந்த ஒரு கடிதத்தின் கவர் அது. குப்பைத் தொட்டியில் சுருண்டு கிடந்த அதை எடுத்து மேஜை மேல் வைத்து நீவிப் பார்த்தாள் செண்பகா.

ஃப்ரம் அட்ரஸ், புரிந்தும் புரியாத கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. எழுதினவன் பெயர் விக்ரம் என்பதும், வில்லிவாக்கத்திலிருந்து எழுதியிருக்கிறான் என்பதும் மட்டும் செண்பகாவுக்குப் புரிந்தது.

திக்... திக்... திக்கென்று கடிகார முள் நகர, ஒருவாறு மாலை ஏழு மணி ஆயிற்று. கணவர் வீடு திரும்பியதும் காபி தந்துவிட்டு, “நம்ம ப்ரியா இன்னும் வரலைங்க. எனக்கென்னவோ...” என்று இழுத்தாள். “யாரோ விக்ரம்னு ஒருத்தன் அவ பேருக்கு ஒரு லெட்டர் போட்டிருக்கான்போல. கவர் மட்டும் கிடந்தது. அந்த அட்ரஸ்ல வேணா போய் விசாரிச்சுப் பார்ப்பமா?” என்று நீட்டினாள்.

உடனே அவளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார் ஜெயராமன்.

“ஓ... அந்தப் பொண்ணோட பேரண்ட்ஸ்தானா நீங்க?” என்றார், உதட்டில் பைப்புடன், மீசையில்லாத பிரகாஷ்ராஜ் ஜாடையில் இருந்த விக்ரமின் அப்பா வெங்கட்ராமன்.

“என் பொண்ணை உங்களுக்குத் தெரியுமா?”

“விக்ரம் சொல்லியிருக்கான். உங்க மகளை அவன் இழுத்துக்கிட்டு ஓடியிருப்பான்னு நினைக்கிறீங்களா மிஸ்டர் ஜெயராம்?”

“அதில்லை... இருந்தாலும்...”

“என் பையனை நீங்க நம்ப வேண்டாம். உங்க பொண்ணை நம்பலாம் இல்லியா? நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடந்திருக்காதுன்னுதான் எனக்குத் தோணுது. எப்படின்னு கேக்கறீங்களா? ஒன் செகண்ட்..!” என்றவர், மேஜைக்குச் சென்று இழுப்பறையை இழுத்து, ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு வந்தார்.

அது - விக்ரமுக்கு ப்ரியதர்ஷினி எழுதிய பதில் கடிதம்.

“இதைப் படிச்சுப் பாருங்க!”

வாங்கிப் படித்தார் ஜெயராமன்.

ன்புள்ள விக்ரம்,
நலம். நலமறிய அவா.
உங்கள் கடிதம் கிடைத்தது. விவரம் அறிந்தேன்.
உங்கள் முடிவைத் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.
வருகிற புதன்கிழமை காலையில்
கம்ப்யூட்டர் கிளாஸுக்குப் போவதுபோல் கிளம்பி
ஒன்பது மணி சுமாருக்கு பூக்கடை பஸ் ஸ்டாண்டில்
நுழைவாயிலருகே உள்ள பத்மினி பட்டாணிக்கடை அருகில்
என்னைக் காத்திருக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.
தேவையான துணிமணிகள், பணம் இவற்றுடன்
நீங்களும் சரியாக அதே நேரத்துக்கு வந்துவிடுவீர்கள் என்றும்,
அங்கிருந்து பஸ் பிடித்து, யாருக்கும் தெரியாமல்
நாம் இருவரும் உடனே பெங்களூரு சென்றுவிடலாம் என்றும்,
நாம் தங்குவதற்கென்று முன்னேற்பாடாக
ஏற்கெனவே அங்கு ஒரு வீடு வாடகைக்குப் பேசி வைத்திருப்பதாகவும்
அத்துடன், இதற்காக நீங்கள் முன்பே உங்கள்
வேலையையும் அங்கு டிரான்ஸ்ஃபர் செய்துகொண்டு விட்டதாகவும்
இன்னும் இது தொடர்பாக
நீங்கள் எழுதியிருந்தவற்றைப் படித்தேன்.
இதற்கு நான் எப்படி உடன்படுவேன் என்று நம்பினீர்கள், விக்ரம்?
நீங்கள் என் உயிர்; நான் உங்கள் உடல்.
அதை நான் மறுக்கவில்லை; மறக்கவும் இல்லை.
உங்களைப் பிரிந்து என்னால் வாழ முடியும் என்றே தோன்றவில்லை.
உண்மைதான். உங்கள் அறிவுக்கு நான் மயங்கியது நிஜம். ஆனால்,
என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய எனது
நடமாடும் தெய்வங்களாக விளங்கும்
பெற்றோரை மறந்து, உடன்பிறந்தோரை மறந்து உங்களுடன்
மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று தோன்றவில்லை. எனவே, இவர்களுடனே
வாழ்வது என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். ஆமாம்...
என் குடும்ப நலன்தான் எனக்கு முக்கியம்.
உணர்ச்சிவசப்பட்டோ, அவசரப்பட்டோ
சிந்தனைகளைச் சாகடித்தோ திடீரென்று
எடுத்த முடிவல்ல இது. உங்கள் மேல் எனக்குள்ள
காதலைவிட, குடும்பத்தின் மீதுள்ள பாசம் அதிகம். அந்த
ஆழ்ந்த அன்பின் அடிப்படையில்தான் இதை எழுதுகிறேன்.
என்னை மன்னித்துவிடுங்கள். மறந்தும் விடுங்கள்.
உடன் பதிவுத் திருமணம் செய்துகொண்டுவிடுவோம்.
என்று நீங்கள் அவசரப்பட்டபோதெல்லாம்
இத்தனை நாட்கள் நான் மறுத்து வந்ததற்குக் காரணம்
என் பெற்றோரை மீறி எதுவும் செய்ய விரும்பாததுதான்.
எப்படியாவது என் குடும்பத்தாரிடம் சம்மதம் பெற்றுவிட முடியாதா,
அவர்களின் பரிபூரண ஆசியோடு, மகிழ்ச்சிகரமாக
எல்லோர் திருமணம்போல் நம் திருமணமும் நிகழாதா என்ற
ஏக்கம் எனக்கு நிறையவே உண்டு. ஆனால், இது
நப்பாசைதான். என் ஆசை நிராசையாகிவிட்டது. இனி வேறு வழியில்லை.
தயவுசெய்து என்னை மறந்து விடுங்கள். நானும்
உங்களை மறந்து, பெரியவர்கள் முடிவு செய்யும் வரனை
ஏற்பதென்று தீர்மானித்துவிட்டேன். அவர்களை மீறி உங்களைக்
கணவராக ஏற்க என் மனச்சாட்சி இடம் தரவில்லை.
பெரியவர்களாகப் பார்த்துச் செய்யும் திருமணங்களில்தான்
நமது எதிர்காலம் நல்லபடியாக அமையும் என்று நம்புகிறேன்.
மீண்டும் சொல்கிறேன், தயவுசெய்து என்னை மறந்துவிடுங்கள்.
அன்புடன், ப்ரியதர்ஷினி.

ஜெயராமன் தம்பதி அந்தக் கடிதத்தைப் படித்து முடித்ததும், “பார்த்தீங்களா... என் பையனே கூப்பிட்டிருந்தாலும், உங்க பொண்ணு அவனோடு ஓடிப் போகத் தயாராக இல்லை. நான் உங்க பொண்ணை நினைச்சுப் பெருமைப்படறேன் மிஸ்டர் ஜெயராம்!” என்றார் வெங்கட்ராமன்.

கடிதம் ஒரு மன நிறைவைத் தந்தாலும், மீண்டும் ஒருமுறை ப்ரியதர்ஷினியின் கடிதத்தைப் படித்துப் பார்த்தார் ஜெயராமன். ஏதோ நெருடுகிற மாதிரி இருந்தது. மறுபடியும் படித்தார்.

“அடக் கடவுளே!” என்று கத்தினார்.

“என்ன... என்ன..?”

“அவங்க திட்டமிட்டபடி பெங்களூருக்கு ஓடிட்டாங்க!” என்றார்.

“எப்படிச் சொல்றீங்க? உங்க பொண்ணுதான்...”

“நோ..! அவ நம்ம கண்ணுல மண்ணைத் தூவுறதுக்காக லெட்டர்ல ஒரு திரிசமன் பண்ணியிருக்கா. இந்த லெட்டரை நான் சொல்ற விதத்துல மறுபடியும் ஒரு தடவை படிச்சுப் பாருங்க, புரியும்!” என்று அந்தக் கடிதத்தை வெங்கட்ராமனிடமே திரும்பத் தந்தார் ஜெயராமன்.

வாங்கிப் படித்துவிட்டு, “அட, ஆமாம்!” என்று அயர்ந்து போனார் வெங்கட்ராமன்.

(ஓடிப்போனவர்கள் திருமணம் செய்துகொண்டு சில நாட்களுக்குப் பின் தங்கள் பெற்றோர்களைத் தேடி வந்து ஆசி வாங்கியதும், இவர்களும் பெரிய மனது பண்ணி அவர்களை மன்னித்துத் தங்களோடு சேர்த்துக் கொண்டதும் இந்தக் கதைக்குத் தேவையில்லாத விஷயங்கள்.)

ன்ன வாசகர்களே, நீங்களும் மறுபடியும் ஒருமுறை அந்தக் கடிதத்தைப் படித்துப் பாருங்கள். ஆனால், ஒரு வரி விட்டு ஒரு வரியாக! அதாவது, முதல் வரிக்கு அடுத்து மூன்றாவது வரி; அடுத்து ஐந்தாவது வரி... இப்படிப் படித்தால், அந்தக் கடிதத்தில் ப்ரியதர்ஷினி செய்திருக்கும் திரிசமன் என்னவென்று தெரியும்.

அது இருக்கட்டும்... அந்தக் கடிதத்தில் ஜெயராமனுக்கு நெருடிய விஷயம் எது? ஒரு முற்றுப் புள்ளிதான்!

‘உடன் பதிவுத் திருமணம் செய்துகொண்டு விடுவோம்.’ என்று முற்றுப் புள்ளியோடு முடிந்த வாக்கியம், ‘என்று நீங்கள் அவசரப்பட்டபோதெல்லாம் என்று தொடர்கிறதே, ஏன்? அதுதான் நெருடல்! இந்த நெருடல் இருந்ததால்தான், அந்தக் கடிதத்தில் உள்ள வரிகளை மீண்டும் படிக்க ஆரம்பித்தார் ஜெயராமன்.
.

Monday, November 02, 2009

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்!

மிழ் சினிமாக்களில் பல வகை உண்டு. பழைய தமிழ்ப் படங்கள் எல்லாம் பெரும்பாலும் குடும்ப சென்டிமென்ட்டை அடிப்படையாகக் கொண்ட குணச் சித்திரப் படங்கள். சிவாஜி நடித்தது பெரும்பாலும் இம்மாதிரிப் படங்களில்தான். அடுத்து ஆக்‌ஷன் படங்கள். தந்தையைக் கொன்ற வில்லனை மகன் வளர்ந்து பெரியவனாகிப் பழி வாங்கும் படங்கள். எம்.ஜி.ஆரின் படங்கள் பெரும்பாலும் இந்த ரகம்தான். ஆனால், அதிலேயே தாய் சென்டிமென்ட், தங்கை சென்டிமென்ட், காதல் எல்லாவற்றையும் வைத்து சுவாரஸ்யப்படுத்தியிருப்பார். ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், எம்.ஜி.ஆர். படங்களில் முகம் சுளிக்கிற அளவுக்குத் திரையில் ரத்தம் தெறிக்காது. தவிர, நகைச்சுவைக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிற படங்களும் உண்டு. மேலும் புராணப் படங்கள், சரித்திரப் படங்கள், தேச பக்திப் படங்கள், அரசியல் படங்கள், மர்மப் படங்கள், பக்திப் படங்கள், ஜேம்ஸ்பாண்ட் படங்கள், பேய்-பிசாசு-ஆவியுலகப் படங்கள் எனப் பலவகை உள்ளன.

ராஜா-ராணிக் கதையையும் பேய்-பிசாசுகளையும் கலந்தடித்துப் படம் செய்து பெரிய வெற்றி பெற்றார் விட்டலாச்சார்யா. ராஜா-ராணிக் கதையோடு நகைச்சுவையைக் கலந்து கொடுத்து, ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’யாக வடிவேலுவைக் களமிறக்கி அசத்தினார் டைரக்டர் சிம்புதேவன். கவிதைக்கு இலக்கணத்தை மீறும் சுதந்திரம் உண்டு. அது ‘பொயட்டிக் லைசென்ஸ்’ எனப்படும். அதுபோல, ஒரு படத்தில் நகைச்சுவை பிரதானமாக அமைந்து விட்டால், லாஜிக் மீறல் ஒரு குற்றமாகாது! அதை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். கே.பாக்யராஜின் வெற்றிப் படமான ‘இன்று போய் நாளை வா’ இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

சிம்புதேவனின் ‘அறை எண் 305-ல் கடவுள்’ என்னும் அடுத்த படமும் யதார்த்தத்தை மீறிய கற்பனைதான். என்றாலும், இம்சை அரசனின் பாதிப்பால் இதிலும் நகைச்சுவையை எதிர்பார்த்துப் போனவர்கள் ஏமாந்தார்கள். படம் மிக அருமையாக இருந்தும், இம்சை அரசனின் வெற்றியை இது தொடவில்லை. ஒரே ஒரு படத்திலேயே மக்களுக்குத் தன் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டதே அவரது பலம், பலவீனம் இரண்டுமாகிவிட்டது.

சிம்புதேவனின் மூன்றாவது படம் ‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’ விரைவில் வெளிவர இருக்கிறது. அநேகமாக டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ வரக்கூடும். பொங்கல் ரிலீசாக வருகிறதோ என்னவோ! இன்னும் இரண்டு பாடல் காட்சிகளைப் படமாக்க வேண்டியிருக்கிறது; தவிர, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் பாக்கி இருக்கின்றன என்றார் சிம்புதேவன்.

எப்படி ராஜா-ராணிக் கதையைத் தனக்கே உரிய நகைச்சுவையோடு கலகலப்பாகக் கொடுத்தாரோ, அதே போல கௌபாய் படங்களை உல்டா செய்து அட்டகாசமான நகைச்சுவை விருந்தளிக்கத் தயார் செய்துகொண்டு இருக்கிறார் சிம்பு.

சிவாஜிக்குப் பிறகு நான் அதிகம் பார்த்து ரசித்த படங்கள் ஜெய்சங்கர் படங்கள்தான். ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் பற்றிக் கேள்விப்பட்டிராத காலத்திலேயே ஜெய்சங்கரின் ‘தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’ பட்டம் என்னை வெகுவாக வசீகரித்தது. கங்கா, எங்க பாட்டன் சொத்து, அன்று சிந்திய ரத்தம், துணிவே துணை என அவரின் பல கௌபாய் பாணி படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

‘கங்கா’ படத்தில் மேஜர் சுந்தர்ராஜனுக்கும் ஜெய்சங்கருக்கும் நடக்கும் சண்டைதான் ஆரம்பக் காட்சியாக இருக்கும். குதிரை லாயத்தில் நடக்கும் அந்தச் சண்டையில், இருவரும் குதிரைகளின் காலடியில் எல்லாம் விழுந்து புரண்டு சண்டையிடுவார்கள். சுந்தர்ராஜன் வில்லன் என்று பார்த்தால், சண்டையின் முடிவில் அவர் ஜெய்சங்கரின் அப்பா; தன் மகனுக்குச் சண்டைப் பயிற்சி அளிக்கிறார் என்பது புரியும். ‘அட!’ என்று அங்கே நிமிர்ந்து உட்கார்ந்தவன், படம் முடியும் மட்டும் சீட்டின் நுனியில் உட்கார்ந்தேதான் பார்த்தேன்.

மரத்தாலான வித்தியாசமான வீடு, இதர படங்களில் பார்க்க முடியாத ஏகப்பட்ட குதிரைகள், மலைகள், அருவிகள் என இயற்கை வளம் சூழ்ந்த லொகேஷன்கள் என கௌபாய் படங்களுக்கே உரித்தான அழகோடு அந்தப் படம் இருக்கும். மிதவை வீடு கூட உண்டு. அதில் அசோகனுடன் ஒரு சண்டையும் உண்டு. கிளாமராக உடை அணிந்த ஹீரோயினும் பிரமாதமாகச் சண்டை போடுவாள். காமிராமேதை கர்ணன் உபயத்தில் குதிரைகள் சிட்டாகப் பறக்கும். இதெல்லாம் வேறெந்தப் படத்திலும் காணக் கிடைக்காது.

‘கங்கா’ படம் ரிலீசான சமயத்தில் பார்த்ததுதான். ஆனால், அதில் இடம் பெறும் பல காட்சிகளும் கதையும் இன்னும் எனக்கு நினைவிருக்கின்றன. ஒரு காட்சியில் தெருவே வெறிச்சோடியிருக்கும். வில்லன் ஒரு அப்பாவியின் கழுத்தில் தன் பூட்ஸ் காலை வைத்து, அப்படியே அழுத்திக் கொல்வான். ஒரு காட்சியில் சுந்தர்ராஜனின் கைகளையும் கால்களையும் நான்கு குதிரைகளில் கட்டி, நாலு பக்கமும் குதிரைகளைச் செலுத்துவார்கள். சுந்தர்ராஜன் வலியால் கதறித் துடிப்பார். அவரைத் தரையோடு தரையாக இழுத்துக்கொண்டே பல மைல் தூரம் குதிரைகள் ஓடும். மேட்டிலும் பள்ளத்திலும் அவர் உடம்பு அடிபட்டு இறந்து போவார். பின்பு, அவரின் மகன் ஜெய்சங்கர் அதே போலவே அந்த நான்கு வில்லன்களையும் குதிரைகளின் கால்களில் கட்டிப் பழி வாங்குவார். செம விறுவிறுப்பான படம்!

அதே போலவே ‘எங்க பாட்டன் சொத்து’. இதில் ஜெய்சங்கர் பெரிய நெருப்பு வளையத்துக்குள் எகிறிக் குதித்து சண்டையிடும் காட்சியைத்தான் போஸ்டர்களாக அடித்து ஒட்டியிருந்தார்கள். இந்தப் படத்திலா அல்லது ‘துணிவே துணை’ படத்திலா என்று ஞாபகமில்லை... சவப் பெட்டி செய்யும் அசோகன் தன் பெரிய தொப்பை மீது பட்டையாக பச்சை பெல்ட் அணிந்து, ஊருக்குள் வருபவர்களையெல்லாம் ‘மாப்ளே... அளவெடுக்கணும் மாப்ளே’ என்பார். வேறொரு படத்தில் அசோகன் தங்கத்தைக் கடத்துவார். ஹெலிகாப்டர்கள் பறக்கும். ஓடுகிற கார் டாப் மீது ஒரு தேய் தேய்த்துவிட்டுப் பின் மேலெழும்பிப் பறக்கும். காஷ்மீரில் டூயட் பாடிக்கொண்டு இருக்கும் ஜெய், ஊர்த் திருவிழாவுக்கு வந்து கலந்து கொள்வார். அவரின் அண்ணனுக்கோ அப்பாவுக்கோ கோயிலில் முதல் மரியாதை செலுத்தும்போது வில்லன்களால் கொல்லப்பட, ஜெய் ஆவேசமாகிப் பழி வாங்கக் கிளம்புவார். ‘உடையப்பனைப் பழி வாங்குவோம்’ என்று சிறுவர்கள் கூட்டம் ஒன்று ஹீரோயின் தலைமையில் புறப்படும். உயிர் நண்பரான சிவகுமாருக்கும் (போலீஸ்) ஜெய்சங்கருக்கும் சண்டை.

நான் என் சின்ன வயதில் மிகவும் ரசித்துப் பார்த்த படங்கள் இம்மாதிரிப் படங்கள்தான். பொதுவாக, சிறுவர்களுக்கே குதிரைகள், அவற்றில் ஏறி சாகசம் செய்யும் வீரர்கள் எல்லாம் பிடிக்கும் என்றுதான் தோன்றுகிறது.

அந்த வகையில், அதே போன்ற ஒரு கௌபாய் படம், அதுவும் நகைச்சுவை கலந்து பார்க்கக் கிடைக்கிறதென்றால் அது நிச்சயம் மிக மிக சுவாரஸ்யமானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.எனக்கு சிம்புதேவனின் மீது நம்பிக்கை உண்டு. அவர் கதையை ‘இரும்புக் கோட்டை’ போல அழுத்தமாக அமைப்பார்; ‘முரட்டு சிங்கம்’ போன்று மிடுக்காகவும் ஸ்டைலாகவும் காட்சிகளை நகர்த்திச் செல்வார்.

கண்களுக்கும் காதுகளுக்கும் ஒரு பெரிய விருந்து காத்திருக்கிறது!
.