உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, September 22, 2015

(அசோக) மித்திரனின் மித்திரன் நான்!

(செப்டம்பர் 22 – எழுத்தாளர் அசோகமித்திரன் பிறந்த நாள்)

அசோகமித்திரன் என்ற பெயர் எனக்கு 30, 35 ஆண்டுகளுக்கு முன்பே பரிச்சயம்.

1980-81-ல் வேலை தேடி நான் சென்னையில் அலைந்துகொண்டிருந்த காலகட்டம். மாம்பலத்திலிருந்து கே.கே.நகர் பஸ் ஸ்டாண்டைக் கடந்து எம்.ஜி.ஆர். நகரை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். எதற்காக நடந்தேன் என்று தெரியாது. கிட்டத்தட்ட, காரணமின்றி இங்கேயும் அங்கேயும் சுறுசுறுப்பாக நடைபோடும் நாயின் நிலைதான் என் நிலையும்!

கே.கே.நகர் பஸ் ஸ்டாண்டைக் கடந்ததும் ஒரு ரவுண்டானா. அதைக் கடந்தால், ஒரு பள்ளிக்கூடம் வரும். அதன் வாசலில் ஒரு கரும்பலகையில் ‘இன்று மாலை 4 மணிக்கு, எழுத்தாளர் அசோகமித்திரன் உரையாற்றுகிறார்’ என்று சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தது. மணி அப்போது 4-தான் இருக்கும். உள்ளே ஆரவாரமாக இருந்தது. கதவைத் திறந்து உள்ளே போனேன். பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் பொதுமக்களுமாக கூட்டம் அதிகம் இருந்தது. மேடையில் நாலைந்து நாற்காலிகள் போட்டு, ஆசிரியப் பெருமக்கள் அமர்ந்திருந்தனர். அவர்களில் யார் அசோகமித்திரன் என்று எனக்குத் தெரியவில்லை.
பின்னர் ஒருவர் மைக் பிடித்து, “இப்போது திருவாளர் அசோகமித்திரன் அவர்கள் நம்மிடையே உரையாற்றுவார்” என்றதும், அசோகமித்திரன் எழுந்து வந்தார். இலக்கியம், தமிழ், கல்வி, மாணவர்களின் கடமை எனப் பேசினார். அன்றிருந்த என் சூழ்நிலையில் அவரின் உரையை சுவாரஸ்யமாகக் கேட்கும் மனநிலை எனக்கு இல்லை. சற்று நேரம் கேட்டுவிட்டு, போரடிக்கவே, அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

பின்னர், 1987-ல் சாவி பத்திரிகையில் பிழை திருத்துவோனாகச் சேர்ந்து, 89-ல் அதன் முழுப் பொறுப்பையும் கவனித்துக்கொள்ளும் அளவுக்கு உயர்ந்தேன்.

ஒருநாள் சாவி சார், “அடுத்த இதழ்லே ஒரு புதிய தொடர்கதை ஆரம்பிக்கிறோம். ‘மானசரோவர்’னு தலைப்பு. இந்த இதழ்லே ஒரு பக்கம் அறிவிப்பு வெச்சுடு” என்றார். “யார் சார் எழுதப் போறாங்க?” என்றேன். 

”அசோகமித்திரன்” என்றார் சாவி.

அசோகமித்திரனின் சில சிறுகதைகளை அதற்கு முன்பு நான் படித்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அவற்றுள் குறிப்பாக, புலிக்கலைஞன், எலி ஆகிய கதைகள் எனக்கு ரொம்பப் பிடித்தமானவை.

மானசரோவரின் முதல் அத்தியாயத்தை அவர் தன் மகனிடம் கொடுத்து அனுப்பியிருந்தார். அடுத்தடுத்த அத்தியாயங்களை தனது உதவியாளர் மூலம் கொடுத்தனுப்பினார். சில நேரங்களில் கதை ரெடியாகிவிட்டதென்று போன் செய்வார். அட்டெண்டரை அனுப்பி வாங்கி வரச் செய்வேன்.

வழக்கமாக தொடர்கதை அத்தியாயங்களை முன்கூட்டியே கொடுத்துவிடுவார். ஒருமுறை, அத்தியாயம் கிடைக்கத் தாமதமாகிவிட்டது. மறுநாள் காலையில் தந்துவிடுவதாக அட்டெண்டரிடம் சொல்லி அனுப்பியிருந்தார்.

அசோகமித்திரனின் இயற்பெயர் தியாகராஜன். அப்போது தி.நகரில் கிருஷ்ணவேணி தியேட்டருக்குப் பக்கத்துத் தெருவில் (தாமோதரன் தெரு என்று ஞாபகம்) குடியிருந்தார். நான் மேற்கு மாம்பலத்தில், கோதண்டராமர் கோயில் தெருவில் குடியிருந்தேன். ஓராள் நிற்கும்படியான கிச்சன்; ஐந்துக்கு ஐந்து உள்ள ஒரே ஒரு அறை கொண்ட வீட்டில் (பல குடித்தனங்கள் கொண்ட பகுதி அது) என் சகோதரி குடும்பத்துடன் நானும் தங்கியிருந்தேன்.

மறுநாள் காலையில் அத்தியாயம் ரெடியாகிவிடும் என்று சொன்னதாலும், எனக்கு தி.நகர் பக்கம் என்பதாலும், கதை அவசரம் என்பதாலும், மறுநாள் நானே நேரில் சென்று வாங்கி வரலாம் என்று எண்ணினேன்.

மாலை 6 மணி இருக்கும். ஆபீசிலிருந்து வீடு திரும்பி, வீட்டில் ரிலாக்ஸ்டாக காபி குடித்தபடி அமர்ந்திருந்தேன்.


சார்என்று வாசலில் குரல் கேட்டது. எழுந்து போய்ப் பார்த்தேன். பெரியவர் ஒருவர் கையில் ஒரு கவருடன் நின்றிருந்தார். “இது ரவிபிரகாஷ் வீடுதானே?” என்று கேட்டார். “ஆமாம். நான்தான். என்ன விஷயம் என்று சொல்லுங்கள்என்று கேட்டேன்.

அசோகமித்திரன் வீட்டிலிருந்து வரேன். இந்த வாரத்துக்கான அத்தியாயத்தைக் கொடுத்துட்டு வரச் சொன்னார்என்று அந்த கவரை என்னிடம் நீட்டினார். ‘சரிஎன்று வாங்கி வைத்துக்கொண்டேன். “இந்த முறை லேட்டானதுக்கு ஸாரி சொல்லச் சொன்னார்என்றார். “அதனாலென்ன, பரவாயில்லை!” என்றேன். அந்தப் பெரியவர் கிளம்பிச் சென்றுவிட்டார்.

எண்ணியிருந்தபடி நானே நேரில் போய் அசோகமித்திரனைச் சந்தித்து அத்தியாயத்தை வாங்கி வரலாம் என்ற என் எண்ணம் நிறைவேறாமல் போனதில் வருத்தம்தான்.

ஆனால், அடுத்த வாரம் கதை ரெடியானதாக அசோகமித்திரனிடமிருந்து போன் வந்ததும், அட்டெண்டரை அனுப்பவில்லை. நானே போய் வாங்கி வர முடிவு செய்தேன். அதன்படி மறுநாள், தி.நகரிலுள்ள அவரின் இல்லத்துக்குச் சென்றேன்.

வழியை அடைத்தாற்போல் ஒரு பெஞ்சு போடப்பட்டு, அதில் முழுக்கப் புத்தகங்கள் இரைந்து கிடந்தன. உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. “எழுத்தாளர் அசோகமித்திரன் இருக்காரா?” என்று குரல் கொடுத்தேன்.

எழுத்தாளர் கிழுத்தாளர்னெல்லாம் இங்கே யாரும் கிடையாது. நான் தியாகராஜன் இருக்கேன். உங்களுக்கு யார் வேணும்?” என்று உள்ளிருந்து ஒரு குரல் வந்தது. பின்னாடியே அவர் வந்தார்.

தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அவர்தான் எழுத்தாளர் அசோகமித்திரன். அவர்தான் அசோகமித்திரன் என்பதில் தூக்கிவாரிப் போட என்ன இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? அவர்தான் முந்தின வாரம் என் வீடு தேடி வந்து, யாரோ ஒரு பெரியவர் மாதிரி, அத்தியாயம் கொடுத்துச் சென்றவர்.

அதற்கு முன்பு அசோகமித்திரனை நான் எம்.ஜி.ஆர். நகர் பள்ளியில், தூரத்தில் மேடையில் பார்த்திருக்கிறேன். தவிர, அது நடந்து பல வருடங்களாகிவிட்டன. எனவே, அன்றைக்கு என் வீடு தேடி வந்தவர் அவர்தான் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும், சந்தேகத்துக்கே இடமில்லாதபடி, அசோகமித்திரன் வீட்டிலிருந்து வருவதாக அவர் அன்று சொன்னதால், யூகிக்கவும் இடம் இல்லாது போயிற்று. இல்லம் தேடி வந்த அத்தனைப் பெரிய இலக்கியவாதிக்கு ஒரு காபி கூட உபசரிக்காமல் அனுப்பிவிட்டோமே என்று குற்ற உணர்ச்சி என்னைப் பிடுங்கியெடுத்தது.

அதற்குப் பிராயச்சித்தமாக, அன்றிலிருந்து ஒவ்வொரு வாரமும் நானே அவர் வீடு தேடிச் சென்று, ‘மானசரோவர்அத்தியாயங்களை வாங்கி வருவது என வழக்கத்தில் வைத்துக்கொண்டேன். மானசரோவர் தொடர் முடியும் வரை அப்படித்தான் வாங்கி வந்தேன்.
அதன்பின், 1995-ல் சாவி பத்திரிகை நிறுத்தப்பட்டு, நான் ஆனந்தவிகடனில் பணியில் சேர்ந்தேன். சுமார் ஒரு மாத காலம் கழித்து ஒரு தபால் கார்டு வந்தது. போஸ்ட் கார்டில் இரண்டே வரி... “திரு.ரவிபிரகாஷ், இப்போது எங்கே இருக்கிறீர்கள்? - அசோகமித்திரன். அவ்வளவுதான்.
நான் உடனே அவரைத் தேடிச் சென்றேன். அப்போது அவர் அதே தி.நகரில் சிவா-விஷ்ணு கோயிலுக்கு எதிரே உள்ள ஒரு தெருவில் இருந்த அப்பார்ட்மெண்ட்டின் தரைத் தளத்தில் குடியிருந்தார் என்று ஞாபகம்.. நான் அங்கே சென்றேன். அவரிடம் நான் ஆனந்த விகடனில் சேர்ந்திருக்கும் விஷயத்தைச் சொன்னேன். “நல்ல இடத்துலதான் போய்ச் சேர்ந்திருக்கீங்க. நானும் அங்கே ஜெமினி ஸ்டுடியோவில் சில காலம் பணியாற்றியிருக்கிறேன்” என்றார்.
பின்னர் சில மாதங்கள் கழித்து, மூன்று பாகங்களாக வந்த ஒரு புத்தகம் குறித்து விகடனில் என்னை விசாரிக்கச் சொல்லியிருந்தார்கள். என்ன புத்தகம், யார் ஆசிரியர் என்பதெல்லாம் நினைவில் இல்லை. (டயரி எழுதுகிற பழக்கமோ, முக்கிய நிகழ்வுகளைக் குறித்து வைக்கிற பழக்கமோ எனக்கு இல்லாததால், நடந்த சம்பவங்கள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன.) அசோகமித்திரன் அவர்களிடம் கேட்டால் தெரியும் என்று சொல்லி, என்னை விசாரித்து வரும்படி அனுப்பினார்கள்.

அதன்படி, அசோகமித்திரன் வீட்டுக்குப் போனேன். அவர் குறிப்பிட்ட ஒரு பிரமுகரின் பெயரைச் சொல்லி (அவர் பதிப்பகத்தாரா, இலக்கியவாதியா என்பது ஞாபகம் இல்லை) அவரைத் தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்றேன்.

இங்கே பிஞ்சால சுப்பிரமணியன் தெருன்னு ஒரு தெரு இருக்கே, தெரியுமா?” என்றார். தெரியாது என்றேன். (தெரியாது என்று சொல்ல நான் வெட்கப்படுவதே இல்லை.)

அந்தத் தெருவில்தான் அவர் இருக்கார். அவரிடம் அந்தப் புத்தகம் இருக்கும். ஒரு நிமிஷம் இரு!” என்றவர், ஒரு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கிளம்பினார்.

என்னை அழைத்துக்கொண்டு அந்தத் தெருவுக்குச் சென்றார். தெரு முனையில் இருந்தது அவர் குறிப்பிட்ட வீடு. இந்த வீடா, பக்கத்து வீடா என்று தெரியவில்லை. ஒரு வீட்டில் ஏறி, விசாரித்தார். அவர்கள் பக்கத்து வீடு என்று கை காட்ட, வெளியேறி, பக்கத்து வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார்.

அங்கே, அசோகமித்திரன் குறிப்பிட்ட அந்த நபர் இருந்தார். அவரிடம் விஷயத்தைச் சொல்லி அசோகமித்திரன் கேட்க, அவர் உடனே அந்தப் புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார்.

பயன்பாடு முடிந்ததும், இரண்டு வார காலம் கழித்து அந்தப் புத்தகங்களை மீண்டும் அந்த பிரமுகரிடமே திருப்பிக் கொண்டு கொடுத்துவிட்டேன்.

திரு.அசோகமித்திரன், பிஞ்சால சுப்பிரமணியன் தெருவுக்கு வழி சொல்லி, என்னை அனுப்பியிருக்கலாம். ஆனால், பொறுப்பாக தானே என்னோடு வந்து, அவரிடம் பேசி, புத்தகங்களைப் பெற்றுத் தந்த அந்த அதீத அக்கறை என்னை நெகிழ வைத்தது.

ஓராண்டுக்கு முன்பு, காலச்சுவடு பத்திரிகை நேர்காணலில் அசோகமித்திரன் என்னைப் பற்றி ஒரு வரி குறிப்பிட்டுள்ளார். மிக நீளமான அந்த பேட்டிக் கட்டுரையில் என்னைக் குறிப்பிடும் பாரா மட்டும் கீழே.

''நான் பல சமயங்களில் நிர்ப்பந்தங்களால்தான் எழுதினேன். மானசரோவர் நான் ஏதோ திட்டம் போட்டு எழுதியதாக நினைக்காதீர்கள். ஒரு சமயம் நான் சாவியைப் பார்த்தேன். நாரதகான சபாவிலோ வேறு எதோ ஒரு நிகழ்ச்சியிலோ அவர் என்னைப் பார்த்துஎன்னப்பா ஒரு கதை கொடுக்கறியாஎனக் கேட்டார். அவர் எல்லோரையும்என்னப்பாஎன்றுதான் கேட்பார். உடனே தலைப்பும் தரச் சொன்னார். நான் உடனே மானசரோவர் என்று போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். இதையெல்லாம் கேட்டால் உங்களுக்கு இவ்வளவு பொறுப்பற்ற தன்மையோடு ஒரு எழுத்தாளன் இருப்பானா என்று தோன்றும். அப்போது பிரதி தொலைந்து போய்விட்டால் என்ன செய்வது என்கிற பயம். அதனால் கார்பன் வைத்துக்கொண்டு பால் பாயிண்ட் பேனாவால்தான் எழுத வேண்டும். அப்படி எழுதியதை ரவி பிரசாத் என்று ஒருவர் வாங்கிக் கொண்டு போவார். அவர் இப்போது ஆனந்த விகடனில் வேலைபார்க்கிறார் என்று சொன்னார்கள். அந்தக் கதையை சாவி படித்ததே இல்லை."
ரவிபிரகாஷ் என்பதை ரவிபிரசாத் என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தனை வயதிலும் என்னை நினைவு வைத்திருந்து பேட்டியில் குறிப்பிட்ட அந்த மாமனிதரை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்ற என் விருப்பதை ஃபேஸ்புக்கில் போன வாரம்தான் ஒரு ஸ்டேட்டஸாகப் போட்டிருந்தேன். பார்த்தால், இன்று அவருக்குப் பிறந்த நாள்.
அநேகமாக, இம்மாத இறுதிக்குள்ளாக அவரைத் தேடிச் சென்று ஆசி பெறுவேன். அவரின் பிறந்த நாள் நினைவாக இந்தக் கட்டுரையை, என் வலைப்பூவில் வெகுநாட்களுக்குப் பிறகு மீண்டும் புதுப்பித்துப் பதிவிடுகிறேன்.