உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, August 03, 2020

தாமினி என்ன ஆனாள்? - 6

கிருஷ்ணவேணி துடித்துப்போனாள். “என்ன மேடம், தாமினியாங்கிறீங்க? என் கூடவே இருப்பாளே ஒரு சின்ன பொண்ணு… டெல்லிப் பொண்ணு. அவளை  இன்னிக்குச் சாயந்திரம் உங்க வீட்லதான் கொண்டு விட்டுட்டுப் போனதா வைத்தியசாலா மேனேஜர் சொன்னாராம்…”

“இல்லையேம்மா… அவர் அப்படி யாரையும் இங்கே கொண்டு வந்து விடலையே? என்றாள் அவந்திகா குழப்பமாக.

கிருஷ்ணவேணியின் வயிற்றில் அமிலம் சுரந்தது. சற்று முன் இறக்கி வைத்த பாறாங்கல் இன்னும் அதிக கனத்தோடு நெஞ்சில் வந்து உட்கார்ந்துகொண்டதுபோல் ஒரு மூச்சுத்திணறல் உண்டானது. சற்று நேரம் பேசத் திராணியற்று, சிலை போல் அமர்ந்திருந்தாள்.

“ஹலோ… கிருஷ்ணவேணி, லைன்ல இருக்கியா?..

‘ம்ம்ம்…’ என்று முனகினாள் கிருஷ்ணவேணி.

“சரியா சொல்லு, மேனேஜர் அவளை  இங்கே இவ்ளோ தூரம் கொச்சிக்கா கொண்டு வந்து விட்டுட்டுப் போனதா சொன்னார்? நல்லாக் கேட்டியா? எனக்கென்னவோ அவர் அவளை பக்கத்துலேயே ஆலப்புழால இருக்கிற யோகா டீச்சர் அவந்திகா சோப்ரா மேடம் வீட்ல விட்டிருப்பார்னு தோணுது. தன்வந்திரியில நான் ஹவுஸ்கீப்பிங் மேனேஜரா இருந்தேன். என் பேரும் அவந்திகாதான். அவந்திகா மிஸ்ரா. நீ எதுக்கும் அவந்திகா சோப்ரா மேடத்துக்குப் போன் போட்டுப் பாரும்மா! என்றாள் அவந்திகா மிஸ்ரா.

சட்டென்று ஒரு ஜன்னல் திறந்து, காற்று வீசி, ஒரு புத்துணர்ச்சி பரவுவதுபோல் இருந்தது கிருஷ்ணவேணிக்கு. “ஆமா மேடம், யோகா டீச்சர் வீட்லதான் விட்டதா சொன்னாராம். தவறுதலா உங்க நம்பரை அனுப்பிட்டார்போல. அவங்க நம்பர் இருந்தா கொஞ்சம் உடனே எனக்கு அனுப்பறீங்களா மேடம், ப்ளீஸ்! என்றாள் கிருஷ்ணவேணி, கண்களைத் துடைத்துக்கொண்டே.

“இதோ அனுப்பறேன்… நீ இப்போ எங்கே இருக்கே? சென்னைக்குப் போயிட்டியா? இன்னும் அங்கே வேற யார் யார்லாம் இருக்காங்க. எல்லாரும் ஸேஃபா இருக்கீங்களா? சே, எல்லாரும் ஒரே குடும்பமா எவ்ளோ ஜாலியா சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தோம். பாழும் கொரோனா வந்து, இப்படி எல்லாரையும் அக்கக்கா பிரிச்சுப் போட்டிருச்சே!

அவந்திகா மிஸ்ராவுக்கு சமீபத்திய நிகழ்வுகள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. சுருக்கமாக அவளுக்கு அப்டேட் செய்துவிட்டு, ஆலப்புழா அவந்திகா நம்பருக்காகக் காத்திருந்தாள் கிருஷ்ணவேணி. சில நொடிகளில் நம்பர் வந்துவிட்டதற்கான அறிகுறியாக மொபைல் சிணுங்கியது.

ஓர் எலியைக் கவ்வும் பூனையின் ஆவேசத்தோடு மொபைலை எடுத்து, அவந்திகா சோப்ராவின் எண்ணுக்கு ‘கால்’ செய்தாள். ‘ஆல் லைன்ஸ் ஆர் பிஸி அட் திஸ் மொமன்ட். ப்ளீஸ் ட்ரை ஆஃப்டர் சம் டைம்! என்று இரக்கமே இல்லாமல் சொன்னது கணினிக் குரல். சோர்ந்துபோனாள் கிருஷ்ணவேணி.

தாமினி எங்கேயோ பத்திரமாகத்தான் இருக்கிறாள் என்கிற துளியூண்டு நம்பிக்கை, மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலைத் தந்தது. என்றாலும், அவளுடன் பேசி, அவள் குரலைக் கேட்டால்தான் முழு நிம்மதி பிறக்கும்.

மீண்டும் மீண்டும் அவந்திகா சோப்ரா மேடத்துக்கு ‘கால்’ செய்துகொண்டேயிருந்தாள் கிருஷ்ணவேணி. திரும்பத் திரும்ப அதே அறிவிப்பு! இந்த ராத்திரியில் ‘ஆல் லைன்ஸ் ஆர்’ அப்படியென்ன பிஸி?! எரிச்சலாக வந்தது.

மொபைலில் மணி பார்த்தாள். 12:30 காட்டியது. இப்போது இணைப்பு கிடைத்தாலும் அட்டெண்ட் செய்வாங்களா அவந்திகா மேடம்? எல்லாரும் தூங்கிக்கொண்டிருப்பார்களோ? இப்போது போன் செய்து டிஸ்டர்ப் செய்யலாமா?

‘ஆனது ஆகட்டும்’ என்று மீண்டும் ஒருமுறை ‘கால்’ செய்தாள். ‘நீங்கள் அழைக்கும் நபர் வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். லைனில் காத்திருக்கவும். அல்லது சிறிது நேரம் கழித்து அழைக்கவும்’ என்று இந்தியிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி அறிவிப்பு வந்தது.

“இப்ப எங்கண்ணா வந்துட்டிருக்கோம்? என்று கேட்டாள் கிருஷ்ணவேணி.

“விழுப்புரம் பைபாஸைத் தாண்டிட்டோம்மா. ரெண்டரைக்குள்ள சென்னைக்குப் போயிடலாம்” என்றான் நாகராஜ்.

மீண்டும் அவந்திகாவுக்கு போன் போட்டாள். ‘த சப்ஸ்கிரைபர்  யூ ஆர் ட்ரையிங் டு ரீச் ஈஸ் ஸ்பீக்கிங் டு சம் ஒன் எல்ஸ்…’

‘சட்…’ என்று அலுத்துக்கொண்டபடியே, ‘மேடம், ஐ’ம் கிருஷ்ணவேணி. ஐ’ம் இன் ட்ரபுள்! ப்ளீஸ் கால் மி. அர்ஜென்ட்! என்று அவந்திகா சோப்ராவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள் கிருஷ்ணவேணி.

அடுத்த சில நிமிடங்களில் மொபைல் சிணுங்கியது. சடுதியில் எடுத்துக் காதில் வைத்து, “ஹலோ… ஹலோ…” என்றாள்.

“அவந்திகா பேசறேம்மா! சாயந்திரத்திலேர்ந்து உன்னையும் உங்க அப்பாவையும் கான்ட்டாக்ட் பண்ண முயற்சி பண்ணிட்டேயிருக்கேன். லைன் கிடைக்கவே இல்லே! வெரி ஸாரி…”

“மேடம், தாமினி இருந்தா அவ கிட்ட போனைக் கொடுங்களேன், ப்ளீஸ்!

“பாத்ரூம் போயிருக்கா. வந்ததும் பேசச் சொல்றேன்…”

“மேடம், மேடம்… லைனைக் கட் பண்ணிடாதீங்க. கிடைக்க மாட்டேங்குது. நான் தாமினியோடு அர்ஜென்ட்டா பேசியாகணும். ப்ளீஸ்…”

“கண்டிப்பா கொடுக்கறேன். சரி, நீ ஏதோ ட்ரபுள்ல இருக்கிறதா மெசேஜ் பண்ணியிருந்தியே… என்ன அது? உனக்கு ஒண்ணும் பிரச்னையில்லையே?

“இல்ல மேடம், எனக்கு ஒரு பிரச்னையும் இல்லே. கல்லுக்குண்டாட்டம்தான் இருக்கேன். நான் இப்போ சென்னையை நோக்கிப் போயிட்டிருக்கேன். என்னோடு தாமினியையும் அழைச்சுட்டுப் போகலாம்னு பார்த்தேன். ஆனா, போலீஸ் பர்மிஷன், மத்த ஃபார்மாலிட்டீஸ் அது இதுன்னு அவளை அங்கேயே விட்டுட்டு வரும்படியா ஆயிடுச்சு. நான் கிளம்பிப் போறப்போ அவ கதறிக் கதறி அழுததைப் பார்க்க… என் மனசெல்லாம் சுக்குநூறா உடைஞ்சு போச்சு மேடம்! அவ என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பா…”

“சீச்சி… நீயா ஏன் அப்படியெல்லாம் கற்பனை பண்ணிக்கறே? அவ உன்னைப் பத்தியெல்லாம் தப்பா எதுவும் பேசலை. இங்க வந்தப்போ ரொம்ப பயந்துபோயிருந்தா. மழையில நனைஞ்ச கோழிக்குஞ்சு போல அவ உடம்பு வெட வெடன்னு நடுங்கிக்கிட்டிருந்துச்சு. உன் கூடப் பேசணும் பேசணும்னு சொல்லிட்டிருந்தா. அதான், ட்ரை பண்ணேன், லைனே கிடைக்கலை. நீ மூவிங்ல இருக்கிறதால கிடைக்கலையோ என்னவோன்னு நினைச்சேன்…”

“ஆமா மேடம்… ஆனா, அவ நம்பருக்கு நான் சாயந்திரமே கால் பண்ணேன். ரிங் போயிட்டிருந்துது. அவ எடுக்கவே இல்லையே, ஏன் மேடம்?

“அந்தக் கூத்தை ஏன் கேக்கறே… அவ போனை எங்கேயோ தொலைச்சுட்டா. உன்கூடக் கிளம்புறப்போ கையிலேயே வெச்சிருந்தாளாம். நீ கிளம்பிப் போனப்புறம் அழுதுட்டே உள்ளே போயிருக்கா. கொஞ்ச நேரம் என்ன பண்றதுன்னு தெரியாம விக்கி விக்கி அழுதுட்டே இருந்தாளாம். உதய் தெரியுமில்லையா, செக்யூரிட்டில ஒரு பையன் இருப்பானே… அவன்தான் பெரிய மனுஷனாட்டம் இவளை சமாதானம் பண்ணியிருக்கான்.  ரொம்ப நல்ல பையன். ‘அக்காவுக்கு ‘கால்’ பண்ணிப் பாருங்க’ன்னு அவன் சொன்னப்புறம்தான் போன் எங்கேனு தேடியிருக்கா. காணோம். அப்புறம் அவன் மொபைல்லேர்ந்து இவ மொபைலுக்கு கால் பண்ணிப் பார்த்திருக்கான். அவனுக்கும் ரிங் போயிருக்கு. ஆனா, சத்தம் எங்கேர்ந்து வருதுன்னு கண்டுபிடிக்க முடியலையாம். உன் நம்பருக்குப் பேசலாம்னா அவளுக்கு உன் நம்பர் தெரியலே! அதுக்குள்ளேதான் மேனேஜர் வந்து அவளை அழைச்சுக்கிட்டு இங்கே கொண்டு வந்து விட்டுட்டுப் போயிட்டார். உங்கப்பா நம்பரைக் கொடுத்துத் தகவல் சொல்லிடுங்கன்னு சொல்லிட்டுதான் போனார். எனக்குதான் லைன் கிடைக்கலே!

“ப்ச… அவரே தகவல் சொல்லியிருக்கலாம். எனக்கு மன உளைச்சல்தான் மிச்சம்! என்று அலுத்துக்கொண்டாள் கிருஷ்ணவேணி.

“இல்லம்மா… அவர் பையனுக்குக் கொரோனா சிம்ப்டம்ஸ் இருக்குன்னு காலைல ஆஸ்பத்திரியில சேர்த்திருந்தாராம். அவனைப் பார்க்கத்தான் அவசரமா போயிட்டிருந்தார். காட்ஸ் கிரேஸ்… ஒண்ணும் பிரச்னை இல்லை, சாதாரண சளி, ஜுரம்தான்னு டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்பிட்டாங்களாம்.

“அடடா… ஸாரி மேடம்! தாமினி வந்துட்டாளா..?

“இப்பத்தான் போனா. வந்துடுவா. சரி, சொல்லு… நீ சென்னை போய்ச் சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?

“ரெண்டரைக்குள்ள போயிடலாம்னு சொல்லியிருக்கார் டிரைவர் அண்ணா. அப்பா, தாமினிக்கும் எல்லா டாக்குமென்ட்ஸும் ரெடி பண்ணியிருக்கார். உங்க அட்ரஸை உடனே எனக்கு எஸ்.எம்.எஸ். பண்ணுங்க மேடம்… நாளைக்கு சாயந்திரம் நாகராஜ் அண்ணாவே வந்து அவளை அழைச்சுக்கிட்டு சென்னை வந்துடுவார்…”

“இல்லம்மா… அதுக்கு வாய்ப்பில்லே! என்றாள் அவந்திகா சோப்ரா.          

(தொடரும்)

0 comments: