உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, August 03, 2020

தாமினி என்ன ஆனாள்? - 2

“என்னண்ணா, ரிங் போகுது… எடுக்கமாட்டேங்கறா?! பயம் கலந்த குரலில் கேட்டாள் கிருஷ்ணவேணி.

“பயப்படாதீங்க, பாப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது. எங்கேயாச்சும் வெச்சுட்டுப் போயிருக்கும். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு மறுபடி ட்ரை பண்ணிப் பாருங்க!  என்றபடி, கியரை மாற்றி காருக்கு வேகம் கூட்டினான் நாகராஜ்.

இரண்டு மூன்று முறை தாமினிக்குத் தொடர்புகொண்டும் அவள் எடுப்பதாக இல்லை. கிருஷ்ணவேணிக்குக் கவலையும் பயமும் அதிகரித்தது.

“மேடம், அவங்க கிட்ட அப்புறம் பேசிக்கலாம். அதுக்குள்ள நீங்க உங்க அப்பாவுக்கு போன் போட்டு விஷயத்தைச் சொல்லி, நான் சொன்ன மாதிரி எல்லா டாக்குமென்ட்ஸையும் ரெடி பண்ணி வைக்கச் சொல்லுங்க. அது ரொம்ப முக்கியம்” என்றான் நாகராஜ், கண்ணாடியில் பார்த்து.

கிருஷ்ணவேணி அப்பாவுக்கு ‘கால்’ செய்தாள். இரண்டாவது ரிங்கிலேயே எடுத்தார். “என்னம்மா… செங்கணாச்சேரியைத் தாண்டி வந்துட்டிருக்கீங்க போலிருக்கே! பிரச்னை ஒண்ணுமில்லையே! ஒண்ணும் இருக்காது. எல்லாம்தான் பக்காவா ரெடி பண்ணிக் கொடுத்திருக்கேனே! சரி, ஸேஃபா வந்து சேரு. சாப்பிட்டியா? வழியில ஓட்டல், கடை எதுவும் திறந்திருக்காதுன்னு நினைக்கிறேன். அப்படி ஏதாவது கண்ணுல பட்டுதுன்னா நாகராஜை நிறுத்தி, பிரெட் பாக்கெட் வாங்கித் தரச் சொல்லு. நீ இறங்கிப் போகாதே, என்ன?

அப்பா நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனார்.

“கொஞ்சம் என்னைப் பேச விடறீங்களா? என்றாள் கிருஷ்ணவேணி. அப்படி அவள் அப்பாவை மறித்துப் பேசக்கூடியவள் அல்ல என்பதால், அப்பா கொஞ்சம் ஆடிப் போனார். “என்னம்மா, எனி பிராப்ளம்?

“பிராப்ளமே நீங்கதான். நான் கடைசியா உங்க கிட்டப் பேசும்போது என்ன சொன்னேன்… ‘நானும் தாமினியும் மட்டும்தாம்ப்பா இங்கே இருக்கோம். ஏதாவது செஞ்சு எங்களை அழைச்சுக்கோங்கப்பானு சொன்னேனா இல்லையா? இப்ப எனக்கு மட்டும் எல்லாம் பக்காவா ரெடி பண்ணிக் கொடுத்திட்டேன்னு பெருமை பீத்திக்கிறீங்களே, அவ யாரோ எவளோங்கிறதாலதானே? அவ என் கூடப் பொறந்த தங்கச்சியா இருந்தா, அவளுக்கும்தானே சேர்த்து ஏற்பாடு பண்ணியிருப்பீங்க? ஏம்ப்பா இப்படிப் பண்ணீங்க… அவ ரொம்பப் பாவம்ப்பா! கடுகடுத்த குரலில் பேசிக்கொண்டே வந்தவளின் குரல் கடைசியில் அழுகையில் தழுதழுத்தது.

எதிர்முனையில் அமைதி காத்தார் சங்கரநாராயணன். கிருஷ்ணவேணியின் அப்பா. பெரிய தொழிலதிபர், பெரும் பணக்காரர் என்று சொல்ல முடியாவிட்டாலும், நெருங்கின வட்டத்தில் மதிப்புப் பெற்றவர். பிரபல டாக்டர்கள், வக்கீல்கள், காவல்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், ஒருசில அரசியல்வாதிகள் எனப் பலரின் நன்மதிப்பையும் நட்பையும் பெற்றவர்.

“சொல்லுங்க, ஏன் பேசாம இருக்கீங்க? என்று கிட்டத்தட்டக் கத்தவே செய்தாள் கிருஷ்ணவேணி.

“இல்லம்மா… நீ இவ்வளவு எமோஷனலாவேன்னு நான் நினைக்கலே! யாரோ உன்கூட இருக்கிற ஒருத்தின்னுதான் நினைச்சேன். தவிர, அவங்க பேரன்ட்ஸ் எப்படி தங்கள் பெண்ணை இத்தனை மைல்களுக்கு அந்தாண்டை இப்படித் தனியா விட்டுட்டுப் போனாங்க? அவங்களுக்கு அக்கறை இல்லையா?

“நீங்க மட்டும் என்னை இங்கே தனியா விட்டுட்டுப் போகலையா?

“ஏம்மா, நான் இதோ இங்கே பக்கத்துல சென்னை. இவ டெல்லிக்காரிங்கிறியே!

“ஊரடங்கு வரும், இப்படியெல்லாம் ஆகும்னு யாராவது கண்டோமா? நார்மலா இருந்திருந்தா சென்னை, டெல்லி எல்லாம் ஒண்ணுதான். தவிர, அவளை ஒண்ணும் அவங்கப்பா தனியா விட்டுட்டுப் போகலையே, நாங்க எல்லாரும் ஒரு 120 பேர் அவகூடத்தானே இருந்தோம். சரி, விடுங்க. நடந்தது நடந்துபோச்சு! அதையெல்லாம் பேசி இப்ப பிரயோஜனமில்லை. அவளையும் நம்மோட கூட்டிக்க சட்டுபுட்டுனு ஏதாச்சும் ஏற்பாடு பண்ணுங்க. அதான் இப்ப முக்கியம்.

“அவங்கப்பா எதுவும் ஸ்டெப் எடுக்கலையா?

“ஆ ஊன்னா அதையே சொல்லுங்க. அவரும் ஏதேதோ ட்ரை பண்ணிட்டுதான் இருக்கார். டெல்லியையே பிளாக் பண்ணி வெச்சிருக்காங்களாம். அதனால இவ அங்கே போறதுல சிரமம் இருக்கு. இவ இங்கே கேரளாவுல தனியா இருக்க வேணாம். சென்னையில நம்மோட இருக்கட்டும். அவ அப்பாவுக்கு எப்ப சவுகரியமோ அப்ப வந்து கூட்டிட்டுப் போகட்டும். அதனால, எனக்கு ஏற்பாடு பண்ணின மாதிரி எல்லாத்தையும் தாமினிக்கும் ஏற்பாடு பண்ணிக் கொடுங்க. நான் நாகராஜ் அண்ணா கிட்ட பேசிட்டேன். எல்லாம் ரெடியா இருந்தா, அவரும் நாளைக்கே வந்து தாமினியைக் கூட்டிட்டு வரதா சொல்லிட்டார். என்ன சொல்றீங்க?

“அதெல்லாம் பண்ணிடலாம்மா. ஒண்ணும் பிரச்னை இல்லே! அவளோட ஆதார் நம்பர், பேரு, வயசு, போட்டோ இருந்தா போதும். இங்கே ‘ஸ்ரீவத்சன்’னு என் டாக்டர் ஃப்ரெண்டு ஒருத்தர் இருக்கார். மலையாளிதான். அவருக்குக் கேரளாவிலும் ஒரு க்ளினிக் இருக்கு. இங்க பாதி நாள், அங்க பாதி நாள் இருப்பார். அவர் மூலமாதான் உனக்கு மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் ரெடி பண்ணினேன். இப்ப அது பிரச்னை இல்லை. ஆனா…”

அப்பா முடிப்பதற்குள், “பின்ன எது பிரச்னை? என்றாள் கிருஷ்ணவேணி கடுப்பாக.

“கொஞ்சம் பொறுமையா கேளும்மா. நாம அவளை இங்க கூட்டிட்டு வர்றதுல ஒண்ணும் பிரச்னை இல்லை. ஆனா, வர்ற வழியில எதிர்பாராத விதமா ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆயிட்டா, அவங்க பேரன்ட்ஸுக்கு யாரு பதில் சொல்றது? யாரைக் கேட்டு அவளை அழைச்சுக்கிட்டுப் போனீங்கன்னு கேட்டா என்ன சொல்றது? வேண்டாத வம்பை விலைக்கு வாங்கணுமானு யோசி!

“இல்லப்பா… நான் ஏற்கெனவே அவங்க அப்பா கிட்ட பேசியாச்சு. அவரும் இதுக்கு ஓகே சொல்லிட்டார். வேணா உங்க நம்பர் தந்து அவரையே உங்க கிட்ட பேசச் சொல்றேன். எந்தப் பிரச்னையும் வராது. நான் கேரண்ட்டி. நீங்க உடனடியா வேண்டிய ஏற்பாடுகளைப் பண்ணுங்க. உங்களுக்குத் தேவையான விஷயங்களை நான் இப்பவே வாட்ஸப் மூலமா அனுப்பறேன்!

சொல்லிவிட்டு, தன் மொபைலில் இருந்த தாமினி தொடர்பான விவரங்களைக் கையோடு அப்பாவுக்கு வாட்ஸப்பில் அனுப்பினாள் கிருஷ்ணவேணி. தொடர்ந்து தாமினிக்கு போன் செய்தாள்.

ரிங் நெடுநேரம் போனது. பின்னர், ‘த சப்ஸ்கிரைபர் யூ ஆர் ட்ரையிங் டு ரீச் ஈஸ் நாட் ஆன்சரிங். ப்ளீஸ் ட்ரை லேட்டர்’ என்று ஆங்கிலத்திலும், இந்தியிலும் மாறி மாறி கணினிக் குரல் ஒலித்தது.     

(தொடரும்)

0 comments: