உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, May 31, 2009

அரவணைத்தார் அன்னை!

கிட்டத்தட்ட நடுத்தெருவில் நான் அப்போது நின்றுகொண்டு இருந்தேன். வசமாக ஏமாற்றப்பட்ட துக்கம் ஒருபுறம்; என்னதான் அமுதசுரபியின் கதவுகள் எனக்காகத் திறந்திருக்கும் என்று விக்கிரமன் அவர்கள் சொன்னாலும், திரும்ப மறுநாளே அவர் முன் எந்த முகத்தோடு போய் நிற்பது என்கிற கழிவிரக்கம் ஒருபுறம்...

அன்னையிடம் பிரார்த்தித்துக்கொண்டேனே தவிர, அவர் என் பிரார்த்தனையை நிறைவேற்றித் தருவார் என்கிற நம்பிக்கை எனக்கு அப்போது கடுகளவும் இல்லை. அடுத்து என்ன செய்வதென்றும் தெரியவில்லை. ’வேலை இல்லை’ என்று வெட்டியாக வீடு திரும்பவும் கொஞ்சம் கூச்சமாக இருந்தது.

என் பழைய நண்பர்களைப் போய் ஒரு நடை பார்த்துவிட்டு வரலாமென்று சாவி அலுவலகம் போனேன். அவர் முகத்தில் விழிக்க எனக்கு பயமாக இருந்தது. அவர் வீடு மாடியில். கீழே சாவி அலுவலகம். அதனால், நண்பர்களை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்பது எண்ணம்.

போனேன். நண்பர்கள் என்னை வரவேற்று அன்போடு பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆசிரியரைப் பார்க்கிறீர்களா என்று கேட்டார்கள். ‘ஐயோ, வேண்டாம்!’ என்று பதறினேன். ஆனால், நான் வந்திருப்பதை வாட்ச்மேன் சித்திரை என்பவர் மேலே மாடிக்குப் போனபோது, அவராகவே ஆசிரியர் சாவியிடம் சொல்லிவிட்டிருக்கிறார்.

சற்று நேரத்தில், ஆசிரியர் சாவி என்னை அழைப்பதாக சித்திரை வந்து கூப்பிட்டார். ‘அடடா! ஏங்க நான் வந்ததை அவர்கிட்டே சொன்னீங்க’ என்று நெளிந்தேன். சார் கூப்பிட்டு அனுப்பிய பின், பார்க்காமல் போவது மரியாதையாகாதே! எனவே, திக்திக்கென்று நெஞ்சு துடிக்க மாடி ஏறிப் போனேன்.

முன்பு, அவரிடமிருந்து பிரியும்போது நேரில் கூடச் சொல்லிக்கொள்ளவில்லை; கோபத்தில் சற்றுக் கடுமையாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு நான்பாட்டுக்குக் கிளம்பிப் போய்விட்டிருந்தேன். அவரோ மகா கோபக்காரர். ஏதாவது திட்டினால், கம்மென்று வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான் என்று நினைத்தபடியே, மெதுவாக பூனைப்பாதம் வைத்து நடந்துபோய் அவர் முன் நின்றேன்.

சார் தலைகுனிந்து ஹிந்து படிப்பதில் மூழ்கியிருந்தார். நான் உதறலோடு அவர் முன் நின்றுகொண்டு இருந்தேன். ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாகக் கழிந்தது எனக்கு.

பின்னர், அவர் பேப்பரை வைத்துவிட்டு நிமிர்ந்தார். என்னைப் பார்த்ததும் சட்டென்று முகத்தில் பிரகாசத்தோடு, “அடடே! வா, ரவி! டீ... (தன் மனைவியை) யாரு வந்திருக்கான்னு பாரு!” என்று உள் நோக்கிக் குரல் கொடுத்தார். மாமி உள்ளிருந்து வந்தபடியே, “வா, ரவி” என்று அன்புடன் வரவேற்றார். “இரு, காபி கொண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் உள்ளே போய்விட்டார்.

சாவி சார் அடுத்து என்ன கேட்கப் போகிறார் என்று காத்திருந்தேன்.

காபி வந்தது. “சாப்பிடு” என்றார். இருவரும் காபி பருகினோம்.

பின்பு, “வா, கீழே போகலாம்!” என்று அழைத்துப் போனார் சாவி. அலுவலகத்துக்குள் சென்றோம்.

“நாளை நான் அமெரிக்கா கிளம்பறேனே, பத்திரிகையை யார் கிட்டே பொறுப்பா விட்டுட்டுப் போறதுன்னு கவலைப்பட்டுக்கிட்டிருந்தேன். ரவி வந்துட்டான். இனி எனக்குக் கவலையில்லே! இனிமே, இவன் பார்த்துப்பான்” என்று மற்ற உதவியாளர்களுக்கும், லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கும் என்னை அறிமுகப்படுத்தினார். அவர்களும் என் வரவால் உற்சாகம் அடைந்ததை அவர்களின் பூரிப்பான முகம் காட்டியது.

மேனேஜர் துரையை அழைத்தார் சாவி. “துரை, ரவி இனி நம்மோடுதான் இருக்கப் போறான். 1,500 ரூபாய் சம்பளம். அட்வான்ஸ் ஏதாவது வேணும்னா கேட்டுக் கொடு” என்றவர் சிறிது நேரம் சகஜமாகப் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, “வா, மாடிக்குப் போகலாம்!” என்றார்.

மேரி பின்னால் ஆட்டுக்குட்டி மாதிரி அவரைப் பின்தொடர்ந்தேன்.

சோபாவில் அமர்ந்தவர், பக்கத்தில் இருந்த சிறு குறிப்பு நோட்டை எடுத்தார். என்னவோ எழுதி, “இதை இந்த வாரமே நம்ம பத்திரிகையில் சேர்த்துடு!” என்றார். என்னவென்று வாங்கிப் பார்த்தேன். ‘பொறுப்பாசிரியர்: ரவிபிரகாஷ்’ என்று எழுதியிருந்தார்.

உடம்பெல்லாம் சிலீரென்றாகிவிட்டது எனக்கு. ஜன்னி வந்தது போல் கிடுகிடுவென்று நடுங்கத் தொடங்கிவிட்டது. அதற்கு இரண்டு காரணங்கள்.

1. அவரிடம் வேலை வேண்டும் என்று நான் கேட்கவில்லை; அந்த எண்ணமே எனக்குச் சுத்தமாக இல்லை. காரணம், கேட்டாலும் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அந்த அளவுக்கு அவரிடம் நான் கடுமையாகக் கோபித்துக்கொண்டு வெளியேறியிருந்தேன். (அது என்ன சம்பவம் என்று பிறகு ஒருமுறை சொல்கிறேன்.) அப்படியிருக்க, என்ன செய்கிறேன், எதற்காக வந்திருக்கிறேன் என்று அவர் என்னை எதுவுமே கேட்காமல், அவராகவே வேலை கொடுத்ததோடு, சரியாக 1,500 ரூபாய் சம்பளம், பொறுப்பாசிரியர் பதவி என்று வழங்கினாரே... அன்னையிடம் பிரார்த்தித்துக்கொண்ட ஐந்து மணி நேரத்தில் அத்தனை துல்லியமாகவா என் வேண்டுதல் பலிக்கும் என்கிற எதிர்பாராத திக்குமுக்காடலால் எழுந்த சிலிர்ப்பே அது!

2. அடுத்த காரணம், சாவி சாரின் பெருந்தன்மை. ‘ஏன் இப்படிப் பண்ணிட்டுப் போயிட்டே?’ என்று, நான் நடந்துகொண்ட முறை பற்றி அப்போதும், அதன்பின்னும் அவர் என்னிடம் ஒருமுறை கூடக் கேட்கவே இல்லை. அத்தகைய மாமனிதரின் மனசு புண்படும்படி நான் எத்தனை ஈனத்தனமாக நடந்துகொண்டுவிட்டேன் என்கிற குற்றவுணர்ச்சியால் எழுந்த நடுக்கமே அது.

கரகரவென்று கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன் - சாவி சாரிடம் நான் முன்பு நடந்துகொண்ட முறைக்காகவும், அன்னையிடமே சவால் விட்டோமே என்கிற அதிகப்பிரசங்கித்தனத்துக்காகவும்!

அன்னையின் மகிமைகள் தொடரும்!

Friday, May 29, 2009

அன்னைக்கு ஒரு சவால்!

நான் அப்போது ஐந்தாம் வகுப்போ ஆறாம் வகுப்போ படித்துக்கொண்டு இருந்ததாக ஞாபகம். பத்திரிகைகளில் நகைச்சுவைத் துணுக்குகள் மட்டும் படிப்பதுண்டு. அதிலும் பல புரியாது.

தினமணி கதிரில் ஒரு சின்ன அறிவிப்பு பார்த்தேன். 'பெட்டி வந்துவிட்டது; சாவி வரவில்லை. எனவே, கட்டுரை அடுத்த இதழில்தான் ஆரம்பமாகும்.'

எனக்கு இது புரியவில்லை. என் தந்தையிடம் கேட்டேன். அவர் சொன்னார்... 'சாவி என்ற பெயரில் ஒரு பத்திரிகையாளர் இருக்கிறார். அவர் குறிப்பிட்ட பிரமுகரை பேட்டி காண டெல்லி போயிருக்கிறார். அவர் இன்னும் சென்னை வந்து சேரவில்லை. அவர் வந்ததும் கட்டுரை எழுதத் தொடங்குவார் என்பதைத்தான் அப்படிப் புதுமையாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்'.

சாவி டெல்லி போனாரா, மும்பை போனாரா அல்லது முஜிபுர் ரஹ்மானைப் பேட்டியெடுக்க பாகிஸ்தான் போனாரா என்பதெல்லாம் சரியாக நினைவில் இல்லை. ஆனால், 'பெட்டி வந்துவிட்டது; சாவி வரவில்லை' என்கிற அந்தப் புதுமையான அறிவிப்பு மட்டும் அழுத்தமாக மனதில் பதிந்திருக்கிறது. அன்றிலிருந்தே சாவி என்கிற அந்த மாமனிதர் மீது எனக்குப் பெரிய இமேஜ் விழுந்துவிட்டது. பின்னாளில் அவரிடமே நான் நேரடியாக ஜர்னலிசம் பயிலப் போகிறேன் என்று எனக்கு அப்போது தெரியாது.

சாவி பத்திரிகையில் சேர்ந்து, அவரிடம் மூன்று முறை கோபித்துக்கொண்டு வேலையை உதறிவிட்டு வெளியேறி, வேறு பத்திரிகையில் பணியாற்றி, பின்னர் மீண்டும் அவரிடமே சேர்ந்த கதைகள் உண்டு. அவற்றில், இரண்டாவது முறை நான் வெளியேறியபோது சேர்ந்த பத்திரிகை அமுதசுரபி.

சாவியில் கிடைத்த சம்பளம் அதில் கிடைக்கவில்லை. சம்பளத்தில் மர்மம் என்ன வேண்டிக் கிடக்கிறது? சாவியில் மாசச் சம்பளம் 1,000 ரூபாய். அமுதசுரபியில் எனக்குக் கிடைத்தது 750 ரூபாய்.

இதற்கிடையில், போலீஸ் செய்தி, மின்மினி ஆகிய பத்திரிகைகளை நடத்திக் கொண்டு இருந்தவர் தனது மேனேஜரை அனுப்பி என்னை அழைத்து வரச் சொன்னார். போயிருந்தேன். 'மின்மினி பத்திரிகையைப் பார்த்துக்கொள்ள ஒரு ஆசிரியர் தேவை. நீங்கள் வருகிறீர்களா?' என்று என்னைக் கேட்டார். 'வருகிறேன்' என்றேன்.

'சம்பளம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?' என்றார்.

அதிகபட்சமாக அப்போது என் வாயில் வந்த தொகை 1,500 ரூபாதான். அதைச் சொன்னேன். ஆனால் குறிப்பாக இன்னொன்றும் சொன்னேன்... 'சம்பளம் எனக்கு ஒரு பொருட்டில்லை. ஆனால், பத்திரிகை இம்ப்ரின்ட்டில் பொறுப்பாசிரியர் என்று என் பெயரைப் போடவேண்டும்' என்றேன்.

சம்மதித்தார்.

சந்தோஷமாக விடைபெற்று வீடு வந்தேன். மறுநாள் அமுதசுரபி அலுவலகத்தில் ஆசிரியர் விக்கிரமன் அவர்களிடம் (மனசுக்குள் சற்று மிதப்பலாக) என் ராஜினாமா கடிதத்தை நீட்டினேன். மின்மினி பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஆகவிருப்பதைச் சொன்னேன்.

'எங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்தி, 'அங்கே ஏதாவது பிரச்னை என்றால், நீங்கள் யோசிக்காமல் இங்கே மீண்டும் வரலாம். அமுதசுரபியின் கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும்' என்றார் விக்கிரமன்.

மறுநாள், கையில் வழக்கம்போல் ஒரு டிபன் பாக்ஸில் சாப்பாடு எடுத்துக்கொண்டு, பஸ் பிடித்து, யானை கவுனி போனேன். அங்கேதான் பழநியப்பா தியேட்டர் அருகில் போலீஸ் செய்தி பத்திரிகை அலுவலகம் இருந்தது.

கீழேயே காத்திருக்க வைத்தார்கள். முதலாளி பூஜையில் இருக்கிறார் என்றார்கள். சுலபத்தில் சந்திக்க முடியவில்லை. எனக்கு உள்ளுக்குள் எதோ குறுகுறுவென்றது.

மூன்று மணி நேரம் காத்திருந்த பிறகு, மேலே அழைத்தார். போனேன்.

'சம்பளம் எல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லை. ஆனா, பொறுப்பாசிரியர்னு உங்க பேரைப் போடறதுல சிக்கல் இருக்கு. அது மட்டும் முடியாது. மத்தபடி இன்னிக்கே பொறுப்பு ஏத்துக்குங்க. நல்ல வேலை செய்யுங்க' என்றார்.

'மன்னிக்கணும். நான் முன்னேயே தீர்மானமாகச் சொன்னேன், சம்பளம் எனக்குப் பிரச்னை இல்லை. பெயர்தான் முக்கியம் என்று. இம்ப்ரின்ட்டில் என் பெயரைப் போடுவீர்களா, மாட்டீர்களா?' என்று கேட்டேன்.

'சாரி, அது முடியாது!' என்றார்.

'மன்னிக்கணும். என்னாலும் இந்த வேலையை ஏத்துக்க முடியாது' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

செந்திலை நம்பி கவுண்டமணி வேலையை உதறிவிட்டு, அங்கே ஏமாந்ததும் மீண்டும் கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டே நம்பியார் முன் போய் தலையைச் சொறிந்தபடி நிற்பாரே, அப்படியாகிவிட்டது என் நிலைமை.

அப்போதுதான் மகாஸ்ரீ அன்னையிடம் முதன்முதலாக என் வேண்டுதலை ஒரு சவாலாக முன்வைத்தேன்.

'அம்மா... உண்மையிலேயே நீங்கள் அருள் தரும் அன்னை என்றால், எனக்கு 1,500 ரூபாய் சம்பளத்தில், குறிப்பாக பொறுப்பாசிரியர் பதவியோடு ஒரு வேலை வாங்கித் தாருங்கள், பார்க்கலாம்!' என்று மனசுக்குள் வேண்டிக்கொண்டேன்.

என்ன ஆயிற்று? என் வேண்டுதல் நிறைவேறியதா?

பின்னர் பார்ப்போம்.

Thursday, May 28, 2009

அருள் தரும் அன்னை!

டவுள் உண்டா, இல்லையா என்பது பன்னெடுங்காலமாக ஒரு தீராத விவாதத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது. எனக்குக் கடவுள் நம்பிக்கையும் இல்லை; அதே சமயம், இல்லை என்று மறுப்பதற்குரிய சரியான ஆதாரங்களும் என்னிடம் இல்லை. கடவுள் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வது பலவிதங்களில் எனக்கு வசதியாக இருக்கிறது. ஒரு கஷ்டம், தோல்வியின்போது மன நிம்மதியை இழக்காமல் இருக்கவும், இந்தக் காயங்கள் எல்லாம் ஒரு நாள் சரியாகும்; எல்லாவற்றையும் விடப் பெரிதான சக்தி ஒன்று இருக்கிறது; அது எனக்கான நியாயத்தை வழங்கும் என்று சோதனைகளின்போது நிமிர்ந்து நிற்கவும் ஒரு கடவுள் எனக்குத் தேவைப்படுகிறார்.

மற்றபடி, கடவுள் தன்னை இல்லை என்று மறுப்பவனைப் பார்த்தும் சிரிக்கிறார்; உண்டு உண்டு என்று வாதத்திற்குச் செல்பவனைப் பார்த்தும் சிரிக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

ஆனால், மனித மூளைக்கு எட்டாத ஏதோ ஒரு மிகப் பெரிய சக்தி இருக்கவே செய்கிறது. நாம் கற்கக் கற்க நமது அறியாமையின் பிரமாண்டம் புலனாவது போல, விஞ்ஞானம் புதிய புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்கப் பிடிக்க, அந்த மிகப் பெரிய சக்தியின் விஸ்வரூபம் கூடிக்கொண்டே போகிறது.

நான் பாண்டிச்சேரி அன்னையின் பக்தன். அன்னை கடவுளா, கடவுளின் தூதுவரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், முழு மனதோடு அவரிடம் பிரார்த்தித்துக்கொண்ட எதுவும் வீண் போனதில்லை. முதல் முறை அன்னையிடம் என் வேண்டுதல் பலித்தபோது, என்னுள் இருந்த நாத்திக மனசு 'இது ஏதோ காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை' என்றே கூவியது.

அடுத்த முறை, அடுத்த முறை என நான் வேண்டிக்கொண்ட ஒவ்வொன்றுமே சிலிர்க்க வைக்கும் விதத்தில் பலித்துக்கொண்டே வந்தபோது, 'ஒவ்வொரு முறையுமா பழம் விழும்?' என்று யோசித்தேன்.

அமுதசுரபி பத்திரிகையில் சிறிது காலம் வேலை செய்தபோதுதான் அன்னையைப் பற்றி நான் அதிகம் தெரிந்துகொண்டேன். இத்தனைக்கும், அதற்குப் பல வருடங்களுக்கு முன்பே நான் சில ஆண்டுகள் பாண்டிச்சேரியில் வசித்திருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் நான் அரவிந்தாஸ்ரமத்துக்கோ, மணக்குள விநாயகர் கோயிலுக்கோ போனதில்லை. எல்லாவற்றுக்கும் நேரம் என்று ஒன்று வேண்டியிருக்கிறதே!

அமுதசுரபி மாத இதழில் அன்னையைப் பற்றி கர்மயோகி என்பவர் தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதைப் பிழை திருத்தும்போதுதான் அன்னையின் மகிமை பற்றி எனக்குத் தெரிய வந்தது. அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பாக ஒன்று எழுதியிருந்தார்... 'உங்கள் தகுதிக்கு மீறியது என்று உங்களுக்கே நிச்சயமாகத் தெரிந்தால், அதை உங்களுக்கு அளிக்கச் சொல்லி அன்னையிடம் பிரார்த்தனையாக வைக்காதீர்கள். சில விஷயங்கள், உங்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டியிருந்து, ஏதோ காரணத்தால் அது கிடைக்காமலே தள்ளிப் போய்க்கொண்டு இருந்தால், அதை நிறைவேற்றித் தரும்படி அன்னையிடம் பிரார்த்தியுங்கள்; அன்னை நிச்சயம் அருளுவார்!'. இந்த வரி என்னைக் கவர்ந்தது.

நானே என்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளக் கூடாது; இருந்தாலும் இங்கே சொல்லவேண்டியிருக்கிறது... சின்ன வயதிலிருந்தே எனக்குப் பேராசை என்பதே கிடையாது. அதே சமயம், எனக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டியது கிடைக்காமல் போனால், நான் சோர்ந்து விடுவேன். எனவே, அன்னையிடம் நான் வைக்கும் பிரார்த்தனைகள் நியாயமானவையாகவே இருக்கும் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை.

அமுதசுரபி வேலையை விட்டு வேறொரு பத்திரிகையை நம்பிப் போய் வசமாக ஏமாந்தேன். அப்போதுதான் அன்னையிடம் முதன்முதலாக என் பிரார்த்தனையை, அன்னைக்குச் சவால் விடும் ஒரு தோரணையில் முன்வைத்தேன். அந்த என் பிரார்த்தனையை அன்னை உடனே எந்தத் தடங்கலுமின்றி நிறைவேற்றித் தந்தார். அதுதான் அன்னையின் மகிமையை நான் உணர்ந்துகொண்ட முதல் நேரடி அனுபவம்.

அதன்பின், எனது திருமணம்; எனக்கு மிகச் சரியான ஒரு துணையை நான் மனைவியாக அடைந்ததற்கும் அன்னையின் அருள்தான் காரணம் என்று நம்புகிறேன். அதையடுத்து, சாவி பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது நடந்த ஒரு விபரீதம்; அதிலிருந்து என்னை மீட்டெடுத்த அன்னையின் அருள், இப்போது நினைத்தாலும் சிலிர்க்கச் செய்கிறது. பின்னர், ஆனந்த விகடனில் வேலைக்குச் சேர்ந்ததுகூட அன்னையின் அருளால்தான் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.

நான் பிளாக் எழுதத் தொடங்கும்போது, அன்னையின் அருளை விவரிக்கும் கட்டுரையிலிருந்துதான் தொடங்கவேண்டும் என்று யோசித்து வைத்திருந்தேன். ஆனால், நான் ஏதோ கதை விடுகிறேன் என்று நினைத்துவிடுவார்களோ, அல்லது ரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதா சொல்வது போல, 'என்னமோ இவன்தான் கடவுளுக்குச் செக்ரெட்டரி மாதிரி பேசறானே' என்று எண்ணிவிடுவார்களோ என்ற எண்ணத்தில்தான் எழுதாமல் விட்டேன்.

அன்னையின் அருளால் எனக்கு நிகழ்ந்த ஒவ்வொரு அனுபவத்தையும் அடுத்தடுத்துப் பதியவிருக்கிறேன். அன்னையின் அருளைப் பரப்புவதற்காக அல்ல; அப்படி நான் நினைத்துக்கொண்டால் என்னைவிட கர்வி, என்னைவிட அகம்பாவி உலகில் வேறு யாரும் இருக்கமாட்டார்.

சாவியில் நடந்த விபரீதத்திலிருந்து அன்னை என்னை மீட்டெடுத்தது உண்மையிலேயே சிலிர்க்க வைக்கும் ஒரு த்ரில் அனுபவம். அதைப் பிறகு ஒருநாள் பார்க்கலாம்.

முதலில், அன்னையின் அருளைப் பெற்ற எனது முதல் அனுபவத்தை எழுதுகிறேன்.

Tuesday, May 19, 2009

என் இனிய இலங்கை அப்பாவித் தமிழ் மக்களே..!

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஒரு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. உலக சாட்சியாக தமிழன் ஏமாளி, இளிச்சவாயன் என்பது ருசுப்படுத்தப்பட்டுவிட்டது. இங்கேயே கர்நாடகா, ஆந்திரா, கேரளா இவை கொடுக்கும் உள்குத்துகளையெல்லாம் தாங்கிக்கொண்டு, 'நான் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாம்மா...' என்று வடிவேலு மாதிரி புலம்பிக்கொண்டு இருக்கிறான் தமிழன். இதோ இருக்கும் இலங்கை அந்நிய நாடாம். அதில் நாம் தலையிட முடியாதாம்!

இருக்கட்டுமே... அந்நிய நாடாகவே இருக்கட்டுமே! அதனால் என்ன?

பக்கத்து வீட்டில் ஒரு முரடன் தன் பெண்டாட்டியைப் போட்டு அடித்தால், அவள் கதறல் தெரு முழுக்க ஒலித்தால், "ஏண்டா பாவி, அவளை இப்படிப் போட்டுக் கொல்றே?" என்று கேட்கமாட்டோ மா நாம்? நமக்கென்ன போச்சு என்று இருந்துவிடுவோமா? அதுதான் மனிதப் பண்பா?

இலங்கைப் பிரச்னை இன்று நேற்று முளைத்ததல்ல! என்றைக்கு இந்தியாவும் இலங்கையும் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றனவோ, அன்றிலிருந்தே உருவான பிரச்னை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கைக்குப் போனார் மகாத்மா காந்தி. 'பாலில் சர்க்கரை கலந்தது போல இங்கே சிங்களர்களோடு தமிழர்களும் கருத்தொருமித்து இணைந்து வாழ்வார்கள்' என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார். மகாத்மா கண்ட மற்ற கனவுகள் போலவே, அவரது இந்த ஆசையும் நிராசையாகிவிட்டது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல தமிழ் மன்னர்கள் ஈழத்தில் ஆட்சி புரிந்திருக்கிறார்கள்; சிங்கள அரசர்களின் உறவினர்களாகவும் ஆகியிருக்கிறார்கள் என்கிறது வரலாறு. யாழ்ப்பாணம், மாவிட்டபுரம், மாத்தை, மட்டக்களப்பு, நல்லூர், வெள்ளவத்தை, கண்டி, கதிர்காமம் இவை எல்லாம் சிங்களப் பெயர்கள் அல்ல; சுத்த தமிழ்ப் பெயர்கள்தான்.

அதன் பின் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான், இந்தியாவின் வட பகுதியில் உள்ளவர்கள் இலங்கைக்குப் போனார்கள். அங்கே புத்த மதம் பரவியது அதன்பிறகுதான். அவர்களே சிங்களர்களாகப் பெருகினார்கள். 'அன்புதான் இன்ப ஊற்று; அன்புதான் உலக ஜோதி; அன்புதான் உலக மகா சக்தி' என்று போதித்த புத்தரின் கொள்கையைப் பரப்ப, சாம்ராட் அசோகனின் மகனும் இலங்கை சென்றான்.

16-ம் நூற்றாண்டில், இலங்கையில் ஐரோப்பியர்கள் குடியேறினார்கள். பின்னர் போர்ச்சுகீசியர் வந்தனர். அவர்களுக்குப் பின் டச்சுக்காரர்கள். கடைசியாக ஆங்கிலேயர்கள் இலங்கையை அடிமைப்படுத்தி ஆட்சி செய்யத் தொடங்கினார்கள்.

அப்போது வெறும் காடாக இருந்தது இலங்கை. அங்கே தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள், தென்னந்தோப்புகளை உருவாக்கி லாபம் பெற ஆசைப்பட்ட ஆங்கிலேய தோட்ட முதலாளிகள் தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கில் ஏழைத் தமிழர்களை இலங்கைக்கு வரவழைத்து, அடிமைகளாக நடத்தி, கசக்கிப் பிழிந்து வேலை வாங்கி, அவர்களின் உழைப்பில் இலங்கையை வளம் மிக்கதாக மாற்றி, சொர்க்கபுரியாக்கினர்.

அப்படிப் பாடுபட்ட தமிழர்களைத்தான், 'இங்கே உனக்கு உரிமையில்லை' என்று விரட்டியது சிங்கள அரசு. அவர்களின் உடைமைகளைப் பறித்து, நாட்டை விட்டே துரத்தத் துடித்தது.

இலங்கை பிரிட்டிஷார் ஆட்சியின் கீழ் இருந்தவரையில் ஆங்கிலம் மட்டும்தான் அரசாங்க பாஷையாக இருந்தது. ஆனாலும் சிங்களம், தமிழ் இரண்டுமே இரண்டு கண்கள் போல் தாய்மொழியாகத்தான் இருந்தன. 1948-ல் பிரிட்டிஷார் போன பிறகு, இலங்கை சுதந்திரம் அடைந்ததும், சிங்களத்தை மட்டும்தான் அரசியல் மொழியாக்குவோம், தமிழுக்கு இங்கே இடமில்லை என்று கூறி, அதைச் சட்டமாகவும் ஆக்கிவிட்டனர் சிங்களர்கள்.

அதிலிருந்துதான் பிரச்னை ஆரம்பித்தது. அந்தச் சட்டம் நிறைவேறிய நாளில் தமிழர்கள் தங்கள் மொழி உரிமையைக் கோரிக் கிளர்ச்சி செய்தார்கள். அதைப் பொறுக்க முடியாத சிங்கள மொழி வெறியர்கள் தமிழ் மக்களைப் பலவிதங்களிலும் துன்புறுத்தத் தொடங்கினார்கள். மொழிவெறி பிடித்தலைந்த சிங்களர்களுக்கு அன்பைப் போதித்து நெறிப்படுத்த வேண்டிய புத்த பிட்சுக்களும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு, தமிழர்களின் உரிமைகளை மறுத்தார்கள். சிங்களமே அறியாத, தமிழ் மொழி மட்டுமே தெரிந்த தமிழர் வாழும் பகுதிகளில் கூட மணியார்டர் தாள்கள், கார் நம்பர்கள் எல்லாம் சிங்கள மொழியில்தான் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தியது சிங்கள அரசாங்கம்.

1954-ல் பாரதப் பிரதமர் நேருஜியை வந்து சந்தித்தார் இலங்கைப் பிரதமர் சர் ஜான் கொத்தலாவலை. அன்றைக்கே ஏதோ குடும்பப் பிரச்னையை ஒன்றாக உட்கார்ந்து பேசித் தீர்த்துவிடுவது போல இரு தலைவர்களும் பேசி, ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். ஆனால், பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "இந்த இலங்கை&தமிழர் பிரச்னை 2000 ஆண்டுகளுக்கு முன் விஜய மன்னன் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் குடியேறியதிலிருந்தே இருந்து வருகிறது. அதை அத்தனைச் சுலபத்தில் தீர்த்துவிட முடியாது" என்று ஒரு போடு போட்டார் ஜான் கொத்தலாவலை. அவர்கள் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்திலும் சட்ட ரீதியாக இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகள் பற்றிய ஷரத்துக்கள் அத்தனை திருப்தி தருவதாக இல்லை. பல அடிப்படைப் பிரச்னைகளுக்கான தீர்வுகள் அதில் இல்லை. இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை மனுக்களை இரண்டு வருஷத்திற்குள் பரிசீலித்து, ஒரு நல்ல முடிவு சொல்வதாகச் சொல்லிவிட்டுப் போனார் கொத்தலாவலை. ஆனால், எந்தவொரு நல்ல முடிவும் எடுக்கப்படவில்லை. சிங்களரின் அட்டகாசம் நாளுக்கு நாள் நீடித்துக்கொண்டேதான் இருந்தது.

அவர்களின் வன்முறையை எதிர்த்து, காந்திஜியின் அகிம்ஸா வழியில் அறப்போர் தொடங்கினார்கள் ஆறுமுக நாவலர் போன்ற தமிழ்ப் பெரியார்கள்.
அறப் போராட்டத்தின் முதற்படியாக, மோட்டார் வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் சிங்கள மொழியில்தான் எழுதப்பட வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து, 1957-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், பிடிவாதமாகத் தமிழிலேயே எழுதத் தொடங்கினார்கள்.

இந்தப் போராட்டத்தில் வன்னியசிங்கம், பொன்னம்பலம், செல்வநாயகம், தொண்டமான், அண்ணாமலை, டாக்டர் நாகநாதன், கந்தய்யா என அத்தனைத் தமிழர்களும் ஒருமித்த கருத்தோடு ஒன்று திரண்டார்கள்.

இது அன்றைய ஸ்ரீலங்கா பிரதமர் பண்டாரநாயகாவுக்குப் பதைபதைப்பை ஏற்படுத்தியது. ஒரு வட்ட மேஜை மாநாடு கூட்டி, இது பற்றிப் பேசுவோம் என்றார். 'வெறுமே மொழிப் பிரச்னையைப் பற்றி மட்டும் இதில் பேசினால் போதாது; தமிழர்களுக்கு வாக்குரிமையோடு சம அந்தஸ்து கொடுப்பது பற்றியும் இதில் முடிவு செய்யவேண்டும்' என்ற நிபந்தனையோடு அதில் கலந்துகொண்டார்கள் தமிழர்கள். ஆனால், அன்றைக்கும் தமிழர்களின் தலையில் மிளகாய்தான் அரைக்கப்பட்டது.

அதற்கு முன்பே லண்டனில் நடந்த பேச்சு வார்த்தையில், இலங்கையில் இருக்கும் மொத்தம் எட்டரை லட்சம் இந்தியர்களில் நாலரை லட்சம் பேருக்கு உடனடியாகக் குடியுரிமை வழங்குவதென்றும், இரண்டரை லட்சம் தமிழர்களுக்கு இலங்கையில் நிரந்தரமாக வசிக்க சட்ட பூர்வமாக அனுமதி அளிப்பது என்றும், மீதமுள்ள ஒன்றரை லட்சம் தமிழர்களை மட்டும் வெளியேற்றுவது என்றும் அப்போதைய இலங்கைப் பிரதமர் டட்லி சேன நாயகா வாக்கு கொடுத்திருந்தார். அது காற்றோடு போச்சு!

நேருஜி-கொத்தலாவலை போட்டுக்கொண்ட ஒப்பந்தத்திலும் அது பற்றிய தகவல் எதுவும் காணோம். எனவே, இந்த ஒப்பந்தம் தங்களுக்கு அதிருப்தியை அளிப்பதாக நேருஜிக்கு ஒரு மகஜர் அனுப்பியிருந்தார்கள் இலங்கைத் தமிழ்ப் பெரியவர்கள். பின்னர், திருவனந்தபுரத்தில் வைத்து அதிருப்தியாளர்களைச் சந்தித்த நேருஜி, இரு நாட்டின் நல்லுறவை மனதில் கொண்டே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும், 'ஒருவரோடு ஒருவர் வீண் தகராறு செய்துகொண்டு இருந்தால் எந்த முடிவும் கிடைக்காது; அதனால் இந்தியா, இலங்கை இரண்டு நாட்டுக்கும் நல்லதல்ல' என்று பேசி, சமாதானப்படுத்திவிட்டுப் போனார்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த இந்தப் பிரச்னையில், இறுதி வரையில் தமிழர்களுக்கான உரிமை கிடைக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

எனக்குத் தெரிந்து, 83-ல் ஜெயவர்த்தனே ஆட்சிக் காலத்தில்தான், இலங்கைத் தமிழர்கள் மீது கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத மிகக் கொடூரமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கணவனின் கண் எதிரே அவன் மனைவியையும், தகப்பனின் கண் எதிரே அவன் மகளையும் ஒரு மானை ஏழெட்டு வேங்கைகள் வெறி கொண்டு வேட்டையாடுவது போல இலங்கை ராணுவத்தினர் காம வேட்டை ஆடிக் கடைசியில் கொன்றும் போட்டனர். குழந்தைகளும் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட்டன.

அந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்து அன்றைக்கும் கடையடைப்புகள், உண்ணாவிரதங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டன. கவனிக்கவும், தமிழ்நாட்டில் மட்டும்தான். மற்ற மாநிலங்களோ, மத்திய அமைச்சரவையோ இதில் தங்களுக்குச் சம்பந்தம் இல்லை என்பது போல்தான் நடந்துகொண்டன.

வெறும் 15 மைல் தள்ளி இருக்கும் இலங்கையில் நடந்த இந்த இனப் படுகொலையைத் தட்டிக்கேட்கக் கையாலாகாமல், 1,500 மைல்களுக்கு அப்பால் இருக்கும் டெல்லியின் கடைக்கண் பார்வைக்காக அன்றும் நாம் காத்திருந்தோம். அவர்களும் இன்றைக்குச் சொன்னது மாதிரியே அன்றைக்கும், "ஆமாம், இலங்கைப் பிரச்னை கவலையளிப்பதாக இருக்கிறது. விசாரிக்க வெளியுறவு அமைச்சரை அனுப்பியிருக்கிறோம்" என்று மழுப்பல் பதில்தான் சொன்னார்கள்.

அன்றைய வெளியுறவு அமைச்சரான நரசிம்மராவ் போனார்; பேசினார். என்ன பேசினார், ஏது பேசினார், என்ன உறுதிமொழி பெற்று வந்தார் என்று யாருக்கும் தெரியாது. இன்றைக்கும் பிரணாப் முகர்ஜி அதைத்தானே செய்தார்?

இலங்கைத் தமிழர்களின் உரிமையை மீட்டுத் தருவதற்காகத் தோன்றிய பல இயக்கங்களில் ஒன்றுதான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம். நோக்கம் என்னவோ நியாயமானதுதான். ஆனால், சகோதர தமிழர் இயக்கத் தலைவர்களுடன் கலந்து பேசி, அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்று, வலுவான இயக்கமாக மாறி சிங்களை அரசை எதிர்ப்பதை விட்டுவிட்டு, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் முதலான சக தமிழர்களையே கொன்று, பின்னர் சென்னை கோடம்பாக்கத்தில் பவர் அப்பார்ட்மென்ட்ஸில் தங்கியிருந்த பத்மநாபா உள்ளிட்ட 15 தமிழ்த் தலைவர்களைக் கொன்று, கடைசியாக பாரதப் பிரதமர் ராஜீவையும் கொன்று, இந்தியாவின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது பிரபாகரன் செய்த மிகப் பெரிய தவறு.

இலங்கை அப்பாவித் தமிழர்கள் வேறு, விடுதலைப் புலிகள் வேறு என்கிற மன நிலைக்கு மத்திய அரசு மட்டுமின்றி, தமிழகத் தமிழர்களும் தள்ளப்பட்டது புலிகளின் இந்தத் தவறான போக்கினால்தான்.

நடுவில் புலிகளின் கை சில காலம் ஓங்கியிருந்தது. அந்தச் சமயத்தில், 'இது சகோதர யுத்தம். நாங்களே தீர்த்துக் கொள்வோம்' என்றார் பிரபாகரன். பின்னர் இலங்கை அரசு புலிகளை அடக்கத் திராணியின்றி இந்தியாவின் உதவியைக் கேட்டது. ராணுவமும் அங்கே போய் புலிகள் மீது போர் தொடுத்து, அவப் பெயர் சம்பாதித்துக்கொண்டு திரும்பியது.

ஆக, இந்தப் பிரச்னையில் என்னென்னவோ குழப்பங்கள், திருப்பங்கள் எல்லாம் நிகழ்ந்து, கட்டக் கடைசியாக தங்களுக்காகக் குரல் கொடுக்க புலிகள் அமைப்பு மட்டுமே இருக்கிறது என்ற நிலைக்கு வந்தார்கள் இலங்கை அப்பாவித் தமிழர்கள். இப்போது புலிகளும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள்.

மிச்சமிருக்கும் இலங்கைத் தமிழர்களின் நிலை என்ன? அவர்களுக்குரிய நியாயமான அந்தஸ்தைக் கொடுத்து, உரிமைகளைக் கொடுத்து, மதிப்பாக வாழ வழி செய்யுமா இலங்கை அரசு?

இந்தியாவிலும் இதர நாடுகளிலும் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை என்ன? அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளுமா இலங்கை அரசு? இந்தியாவில் தங்கியிருக்கும் அகதிகள் அங்கே திரும்பப் போகாவிட்டால், அவர்களைச் சுமையாகக் கருதுமா இந்திய அரசு?

ஒன்றின் முடிவு, மற்றொன்றின் தொடக்கம். இலங்கை யுத்தத்தின் முடிவு, மிச்சமிருக்கும் இலங்கைத் தமிழர்களின் ஒளிமயமான எதிர்காலமாக அமையுமா? அல்லது, 'புலிகளின் கை ஓங்கியிருந்த காலத்திலேயே உன்னைக் கேட்க நாதியில்லை. இனியாவது... உனக்குச் சம அந்தஸ்து தருவதாவது!' என்று இலங்கை அரசு கொக்கரித்து, அவர்களைக் கொத்தடிமையாக நடத்தத் தொடங்குமா?

யாரை நம்புவது, எதை நம்புவது, எம் எதிர்காலம் என்ன என்று தெரியாமல் நிர்க்கதியற்று நிற்கும் இலங்கைத் தமிழர்களின் நிலை கண்களில் நீரை வரவழைப்பதாக இருக்கிறது.

இந்தியா அவர்களுக்காக என்ன செய்யப்போகிறது?

அட, என்னவோ செய்துகொள்ளட்டும் என்று நாம்பாட்டுக்கு 'மானாட, மயிலாட', 'எல்லாமே சிரிப்புதான்' எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கலாம். ஐ.பி.எல் கிரிக்கெட் பார்த்து மகிழலாம். 'அடச்சே! இந்த கொல்கத்தா அணி மட்டும் விட்டுக் கொடுத்திருந்தால், நம்ம சென்னை அணி செமி ஃபைனல்ஸ் போயிருக்குமே' என்று அங்கலாய்க்கலாம்.

நம்மால் முடிந்தது அவ்வளவுதான்!

Sunday, May 17, 2009

ஒண்ணுமே புரியலே உலகத்திலே!

ரு கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. சுவரிலிருந்த பூனை ஒரு பக்கமாகக் குதித்துவிட்டது. ஊகங்கள், எதிர்பார்ப்புகள், கணிப்புகள் எல்லாம் பொய்த்துப் போயின.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-தான் பெரும்பான்மை இடத்தைப் பிடிக்கும்; தி.மு.க. மண்ணைக் கவ்வும் என்றும், இலங்கைப் பிரச்னையை ஆவேசமும் உருக்கமுமாக மக்களிடம் கொண்டு சென்ற வைகோ பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் பலரும் சொன்ன கணிப்புகள் இன்று அர்த்தம் இழந்து பல்லிளிக்கின்றன.

காங்கிரஸ் பெரிய தலைகள் குப்புறடித்துவிட்டதற்குக் காரணம் கூட, அது இலங்கைப் பிரச்னையில் காட்டிய அக்கறையின்மையால் என்று தோன்றவில்லை. தவளைகள் போல அவர்கள் காலை அவர்களே பற்றி இழுத்து மேலே ஏற முடியாமல் செய்துவிட்டார்கள். இனி, தமிழக ஆட்சியில் பங்கு என்று குரலெழுப்ப அவர்களுக்கு வாயிருக்காது.

மருத்துவரின் சில சிகிச்சையில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால், ஜெயிக்கிற கட்சி மீது தொற்றிக்கொள்கிற அவரது போக்கு ரசிக்கத்தக்கதல்ல. எல்லாக் கட்சியினரும்தான் இந்த ரகம் என்றாலும், பா.ம.க. கூச்ச நாச்சமில்லாமல் இந்த பல்டி விளையாட்டில் ஈடுபட்டது. 'ஆஹா... பா.ம.க. மொத்தமும் புட்டுக்கிச்சு. இனி அந்தக் கட்சியைத் தேட வேண்டியதுதான்' என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், எனக்கு அப்படித் தோன்றவில்லை. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் சந்திக்காத சரிவுகளா? பா.ம.க-வை விளம்பரம் போட்டுத்தான் தேடவேண்டும் என்று இப்போது சொல்லும் தி.மு.க-வினர் அடுத்தமுறை மருத்துவரைத் தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ள விளம்பரம் கொடுத்துக் கூப்பிடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

அவரவர் தங்கள் அணி தோற்றதற்கு வழக்கமான காரணங்களைச் சொல்லிப் புலம்புவதில் ஆச்சரியமில்லை. பின்னே... குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று மழுப்பிச் சமாளிக்கத்தானே வேண்டியிருக்கிறது இந்தப் பாழாய்ப்போன அரசியலில்?

ஆனால், எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. தமிழ்நாடு முழுக்க யாரைக் கேட்டாலும் பெரும்பாலானவர்கள் அ.தி.மு.க. கூட்டணிதான் வலுவான கூட்டணி, அதுதான் ஜெயிக்கும் என்றார்களே? ரிசல்ட் ஏன் வேறா வந்தது?

ஒருவேளை, தமிழக அரசியல்வாதிகளோடு பழகிப் பழகி, அவர்களும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசக் கற்றுக்கொண்டு விட்டார்களோ? இருந்தாலும் இருக்கும்.

ஏன் எழுதினேன்? ஏன் நிறுத்தினேன்? ஏன் தொடங்கினேன்?

மூன்று கேள்விகள். மூன்றுக்கும் பதில் அளிப்பது முக்கியமா என்று தெரியவில்லை. ஆனாலும், மீண்டும் பிளாக் எழுதத் தொடங்குவதற்கு முன்பாக, எனக்கு ஓர் ஆரம்பம் தேவைப்படுவதால், அந்த பதில்களை இங்கே எழுதுகிறேன்.

முதல் கேள்வி: ஏன் எழுதினேன்?

ஏதோ ஒரு நப்பாசை. எல்லாரும் பிளாக் எழுதுகிறார்களே, நாமும் எழுதிப் பார்ப்போமே என்கிற நப்பாசை. தவிர, நான் பிளாக் எழுதவேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தவர்கள் என் குழந்தைகள் ஷைலஜாவும் ரஜ்னீஷும். ஆகவே ரொம்ப சுறுசுறுப்பாக ஆரம்பத்தில் சில எழுதினேன். மற்றபடி எனக்கு இதில் அவ்வளவு ஆர்வம் அப்போதும் இல்லை; இப்போதும் இல்லை!

இரண்டாவது கேள்வி: ஏன் நிறுத்தினேன்?

இதற்கு நிறைய காரணங்கள்.

ஆர்வமில்லை என்பது முதல் காரணம். தவிர, பிளாக் என்பது எதை வேண்டுமானாலும் கிறுக்குகிற பொதுச் சுவராக இருக்கிறது. அதில் நானும் போய் ஏதாவது கிறுக்க வேண்டுமா என்ற ஓர் எண்ணம். மூன்றாவது... பிளாக் எழுதத் தொடங்கியதும் எனக்கு ஏகப்பட்ட உபதேசங்கள்... கேலிகள்... 'ஐயையே! ஒரு முன்னணிப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்துகொண்டு பிளாக் எப்படி எழுதுவதென்று தெரியவில்லையே! இத்தனை நீளமாகவா எழுதுவது? இன்னின்ன பிளாக்குகளைப் போய்ப் பாருங்கள்' என்று வந்த மெயில்கள்.

சரிதான் என்று அந்தக் குறிப்பிட்ட பிளாக்குகளைப் போய்ப் பார்த்தால், அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள், என்ன சொல்ல வருகிறார்கள் என்று எனக்குப் புரியவே இல்லை. ஒரே தலை சுற்றல். நான்காவதாக, இடுகை, பின்னூட்டங்கள், அங்கதச் சுவை என எனக்கு ஜீரணமாகாத ஒரு வித வித்தியாசத் தமிழ். அட, என்னவோ மனதில் தோன்றியதை எழுதினோம், இதற்கு இத்தனை நக்கலா என்று தோன்றிவிட்டது. பிளாக் எழுதுவதை நிப்பாட்டிவிட்டேன்.

இன்னும்கூட காரணங்கள் இருக்கின்றன. மறுபடி உபதேச மழை பொழியத் தொடங்கிவிடப் போகிறதே என்று இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

சரி, மீண்டும் ஏன் எழுதத் தொடங்கினேன்?

இப்போதும் என் குழந்தைகளின் விருப்பம்தான் முதல் காரணம்.

இரண்டாவது, பிளாக் என்பது நான் நினைத்த மாதிரி பொதுச் சுவர் இல்லை; அங்கே பல நல்ல விஷயங்களும் உள்ளன என்று பா.ராகவன், எஸ்.ராமகிருஷ்ணன், மாலன், ஞாநி, இட்லி வடை, லக்கி லுக் இன்ன பிற பிளாக்குகளைப் பார்த்த பின் புரிந்தது. தவிர அவற்றில், நான் மிரண்ட மாதிரியான 'பிளாக் தமிழ்' காணப்படவில்லை. சரி, நாமும் எழுதுவோமே என்று ஒரு துணிச்சல் மீண்டும் வந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, என் முகம் அறிந்த மற்றும் முகமறியா நண்பர்கள், அலுவலக நண்பர்கள், என்னோடு அவ்வப்போது தொடர்பு கொள்ளும் ஒரு சில வாசகர்கள், சில எழுத்தாள நண்பர்கள், மின்னஞ்சல் மூலமாக மட்டுமே தொடர்பு கொண்ட நண்பர்கள் எனப் பலர், 'ஏன் ரவி பிளாக் எழுதறதை நிறுத்திட்டீங்க?' என்று உண்மையான அக்கறையுடன் கேட்டார்கள்.

இதோ, மீண்டும் எழுதத் தொடங்கிவிட்டேன்.