உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, September 24, 2010

குதிரைக்குக் குரல் கொடுத்தவர்!

சை மேதைகள் சுதர்ஸனம், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் எனப் பலரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இசை மேதை சங்கீத பூஷணம் எம்.டி.பார்த்தசாரதி பற்றி யாராவது கேள்விப்பட்டிருக்கிறோமா?

அபார திறமை இருந்தும், குடத்தில் இட்ட விளக்காக இருந்து, மறைந்துவிடுகிறார்கள் பல மேதைகள். அவர்களில் ஒருவர்தான் திரு.எம்.டி.பார்த்தசாரதி.

ஜெமினி பிக்சர்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளராகப் பணியாற்றியவர் இவர். ஜெமினியின் தயாரிப்புகளான மதன காமராஜன், பக்த நாரதா, ஞான சௌந்தரி, மங்கம்மா சபதம், தாசி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி, பாதுகா பட்டாபிஷேகம், சக்ரதாரி, அபூர்வ சகோதரர்கள் போன்ற பல படங்களுக்கு இசையமைத்தவர் இவர்தான்.

‘நந்தனார்’ படத்தில் நந்தனாராகவே வாழ்ந்திருந்தார் எம்.எம்.தண்டபாணி தேசிகர்; ‘ஔவையார்’ படத்தில் ஔவையாராகவே மாறிவிட்டார் கே.பி.சுந்தராம்பாள். இருவரையும் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த இந்த இரண்டு படங்களுக்கும் இசை அமைத்திருந்தவர் பார்த்தசாரதிதான். இந்தப் படங்களின் இசை அந்தக் காலத்தில் பலராலும் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றது. ‘சந்திரலேகா’வில் கர்னாடக முறையிலான இசையை பார்த்தசாரதியும், மேற்கத்திய பாணியிலான இசையை எஸ்.ராஜேஸ்வரராவும் அமைத்திருந்தனர். அந்தப் படத்தில் ‘நாட்டியக் குதிரை’ பாட்டு செம ஹிட்! பார்த்தசாரதி இசைமைத்த அந்தப் பாட்டில் குதிரை பாடுவது போல் குரலை மாற்றிக் கட்டைக் குரலில் பாடியுள்ளவர் அவரேதான்.

இசை மேதைகள் சபேசய்யரிடமும், பொன்னையாபிள்ளையிடமும் சங்கீதம் கற்றுத் தேர்ந்து ‘சங்கீத பூஷணம்’ என்ற பட்டத்தைப் பெற்றிருந்தாலும், பார்த்தசாரதி ஆரம்ப காலத்தில் ஒரு நடிகராகத்தான் திரையுலகுக்கு வந்தார். ‘சக்குபாய்’ படத்தில் விஷ்ணுசித்தராக நடித்தார். தொடர்ந்து ஸ்ரீனிவாச கல்யாணம், திரௌபதி வஸ்திராபரணம், சேது பந்தனம், தியாக பூமி எனப் பல படங்களில் நடித்தார். கருட கர்வ பங்கம் படத்தில் ஹனுமானாக இவர் நடித்தது, இவருக்குப் பெரிய புகழைத் தேடித் தந்ததோடு, சிறந்த நடிகர் விருதையும் பெற்றுத் தந்தது. ராஜபக்தி படத்தில் வில்லனாக நடித்தார் பார்த்தசாரதி. தமிழில் முதலில் தயாரான வண்ணப்படம் ‘தர்மபுரி ரகசியம்’. இதில் நடிக்கும் வாய்ப்பு பெற்றவர் பார்த்தசாரதி. அதில் அவர் இரண்டு வேடங்களில் நடித்தார்.

அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த சுகுண விலாஸ் சபாவின் மேடை நாடகங்களில் ஏற்கெனவே நடித்திருந்தார் பார்த்தசாரதி. இவரது நடிப்பாற்றலைக் கண்டு வியந்து, இவரைத் திரையுலகுக்கு அழைத்து வந்தவர் அந்தக் காலத்தில் மிகப் பிரபல நடிகராகவும் வசனகர்த்தாவாகவும் இருந்த திரு.வடிவேலு நாயக்கர். அந்நாளில் பாடத் தெரிந்தவர்கள்தான் நடிக்கவும் முடியும். பார்த்தசாரதிக்கு இயல்பிலேயே கணீர் குரலும், சங்கீத ஞானமும் அமைந்திருந்ததால், அவரால் சுலபமாகத் திரையில் பரிமளிக்க முடிந்தது.

நடிகராகப் புகழ் பெற்றதும் சொந்தமாகத் திரைப்படம் எடுக்க முயன்றார் பார்த்தசாரதி. ஆனால், அது தோல்வியில் முடிந்தது. 1940-ல் ‘அபலா’ என்னும் திரைப்படத்துக்கு முதன்முதலாக இசையமைத்தார். இசை என்னவோ பரவலாகப் பெரிதும் பாராட்டப்பட்டாலும், படம் ஃப்ளாப் ஆனதால், இவர் பெயரும் சேர்ந்து அடிபட்டது. பின்னர் இவர் திருச்சி சென்று ‘ஆல் இண்டியா ரேடியோ’வில் (அந்நாளில் இது திருச்சி ரேடியோ கார்ப்பொரேஷன் என்று அழைக்கப்பட்டது) நிலைய வித்வானாகச் சேர்ந்து பணியாற்றினார். பின்பு, ஜெமினி நிறுவனத்தில் வேலை கிடைக்க, அந்த வேலையை உதறிவிட்டுச் சென்னை வந்தார்.
இவரது இசையாற்றலுக்கு ஓர் உதாரணம்... சக்ரதாரி படத்தில் கோராகும்பராக நடிப்பார் பழம்பெரும் நடிகர் நாகையா. பானை வனையும் தொழில் செய்பவர் பக்த கோராகும்பர். நாராயண பக்தியில் திளைத்து, பாண்டுரங்கனை நினைத்துப் பரவசத்தில் பாடியபடியே மண்ணை மிதித்துக் குழைத்துக்கொண்டு இருப்பார் நாகையா. அப்போது அவரது குழந்தை தவழ்ந்து, அவரது காலின் கீழ் வரும். பக்தியில் மெய்ம்மறந்திருந்த கோராகும்பர், குழந்தை வந்தது தெரியாமல், அதையும் சேர்த்து மிதித்துக் குழைத்து மண்ணோடு மண்ணாக்கிவிடுவார். குழந்தையின் தாய் பதறி ஓடி வந்து, இந்தக் காட்சியைக் கண்டு, மயக்கமுற்று விழுவதாக ஸீன்.

குழந்தையின் தாயாக நடித்தவர் புஷ்பவல்லி. குறிப்பிட்ட அந்தக் காட்சியில், அவர் நிஜமாகவே மயங்கி விழுந்துவிட்டார். அதை முதலில் நடிப்பு என்று நினைத்த படப்பிடிப்புக் குழுவினர், நீண்ட நேரம் அவர் எழுந்திருக்காததால், பின்னர் அவரை அவசரமாகத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சையளித்து, மயக்கம் தெளிவித்தனர்.

எழுந்ததும் புஷ்பவல்லி சொன்னார்... “இந்தக் காட்சியின்போது ஒலித்த உருக்கமான இசையும் பாடலும் என்னை என்னவோ செய்தது. காட்சியின் தீவிரமும் அபூர்வமான இசையும் சேர்ந்துகொண்டதில், உண்மையாகவே எனக்கு மயக்கம் வந்துவிட்டது!”

தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் புலமை மிக்கவர் பார்த்தசாரதி. இவர் இசையமைப்பில் வெளியான கடைசி படம் ‘நம் குழந்தை’. இதில் பணியாற்றிய இசைக்குழுவினருக்குப் படத் தயாரிப்பாளரால் சம்பளம் கொடுக்க முடியாமல் போக, பார்த்தசாரதி தமது சொந்தப் பணத்திலிருந்து எடுத்து அவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத் தந்தார்.

1958-ல் திரைத் துறையை விட்டு விலகி, பெங்களூர் ஆல் இண்டியா ரேடியோவில் மெல்லிசை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகச் சேர்ந்து பணியாற்றினார் பார்த்தசாரதி. அங்கே பற்பல குறிப்பிடத்தக்க இசை நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்து, 1963-ல் அமரர் ஆனார்.

மிகுந்த தெய்வ பக்தி உள்ளவர் பார்த்தசாரதி. குறிப்பாக, திருப்பதி வெங்கடாசலபதி மீதும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மீதும் அளவற்ற பக்தி கொண்டவர். சின்ன வயதிலிருந்தே கோயில் பஜனைகளிலும், ஏகாந்த சேவைகளிலும் கலந்துகொண்டு பாடுவதில் விருப்பம் கொண்டவர். சாகும் தறுவாயிலும்கூட அவரது வாய் காயத்ரி மந்திரத்தைதான் முணுமுணுத்துக்கொண்டு இருந்தது; அவரது கை விரல்கள் அதன் எண்ணிக்கையைக் கணக்கிட்டபடி இருந்தன.

1910-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி பிறந்தவர் எம்.டி.பார்த்தசாரதி. நாளைய 25-ஆம் தேதி (நட்சத்திரப்படி), மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் இவரது நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.

‘சந்திரலேகா’ படத்தின் ‘நாட்டியக் குதிரை’ பாடல் காட்சியைக் காண விரும்புகிறவர்கள் இதை க்ளிக் செய்யவும்.
.

Monday, September 20, 2010

கருணையே இல்லையா கந்தா?

ன் நண்பர் ஒருவரின் மகன் சிங்கப்பூரில் உள்ள கல்லூரியில் படிக்கிறான். அங்கே அவனுக்குத் தமிழ் கட்டாயப் பாடம். சில நாட்களுக்கு முன், அவனது பேராசிரியர் அவனுக்கு ஒரு அஸைன்மென்ட் கொடுத்திருந்தார். ‘கந்தன் கருணை’ படத்தைப் பார்த்து, அதன் நிறை குறைகளை அலசி ஒரு விமர்சனம் எழுத வேண்டும் என்பதே அந்த அஸைன்மென்ட். நண்பரின் மகன் இது சம்பந்தமாக என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘கந்தன் கருணை’ விமர்சனம் எழுதித் தரும்படி என்னைக் கேட்டுக்கொள்ள, நானும் ஆவலோடு டிவிடி வாங்கி, முதன்முறையாக ‘கந்தன் கருணை’ படம் பார்த்தேன்.

நண்பரின் மகனுக்கு நான் எழுதி அனுப்பிய விமர்சனம் கீழே.


முருகப் பெருமானின் லீலைகளை விளக்கும் படம். ஆன்மிக அன்பர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.

பொதுவாக இயக்குநர் ஏ.பி.நாகராஜன், இம்மாதிரி பக்தித் திரைப்படங்களை எடுப்பதில் திறமையானவர். திருவிளையாடல், திருவருட்செல்வர் போன்ற பல படங்கள் நாகராஜனின் திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

அவற்றோடு ஒப்பிடும்போது ‘கந்தன் கருணை’ மிகச் சுமாரான படமாகவே தெரிகிறது. திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களில் காணப்பட்ட ஒரு நேர்த்தி ‘கந்தன் கருணை’யில் இல்லை. அந்தப் படங்களில் கதை சொன்ன விதம் சீராக இருந்தது. கதாபாத்திரங்களும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. சுத்தமான தமிழ் உச்சரிப்பு வசனங்கள்தான் என்றாலும், கதைப்போக்கில் இயல்பாக இருந்தன. ‘கந்தன் கருணை’யில் இவை எதுவும் இல்லை.

கதை: ‘கந்தன் கருணை’ என ‘க’வுக்கு ‘க’ போட்டு ஒரு பொருத்தமான, அழகான தலைப்பு வைத்ததோடு, ‘கதை’க்கான ‘க’வையும் இன்னும் செம்மைப்படுத்தியிருக்கலாம். துண்டுத் துண்டாகச் சில சம்பவங்களைக் காட்சியாக்கித் தொகுத்திருப்பதால், எந்தக் காட்சியிலும் போதுமான அழுத்தம் கிடைக்கவில்லை; ஒரு முழுமையான திரைப்படம் பார்த்த திருப்தி வரவில்லை என்பதே உண்மை.

கந்தபுராணம் என எடுத்துக்கொண்டால், சூர சம்ஹாரமே பிரதானம். ராமாயணத்தில் ராவண வதமே கிளைமாக்ஸ். அது போல், கந்தபுராணத்தில் சூர சம்ஹாரத்தை கிளைமாக்ஸாக வைத்துத் திரைக்கதையை அமைத்திருந்தால், ஒரு முழுமையான திரைப்படம் பார்த்த உணர்வு கிடைத்திருக்கும். ஆனால், ‘கந்தன் கருணை’யில் இடைவேளை வருவதற்குள்ளேயே சூர சம்ஹாரம் நடந்து முடிந்து, மரமாக நின்ற சூரனை இரண்டாகப் பிளந்து, சேவலாகவும் மயிலாகவும் முருகப் பெருமான் தடுத்தாட்கொண்டு விட்டதால், படமே முடிந்துவிட்ட உணர்வு வந்துவிட்டது.

காட்சியமைப்புகள்: புராணப் படங்களுக்கே மிக முக்கியமாக இருக்க வேண்டிய பிரமாண்டம் இதில் இல்லை. இதை ஏதோ இன்றைய தொழில்நுட்பத்தோடு எடுக்கப்படும் தமிழ்ப் படங்களை மனதில் கொண்டு செய்கிற விமர்சனம் அல்ல. ஏ.பி.நாகராஜனே ஏற்கெனவே சாதித்துக் காட்டியிருக்கிற படங்களோடு ஒப்பிட்டும் பார்க்கும்போது தோன்றுகிற எண்ணம்தான். ‘திருவிளையாடல்’ படத்தில் ‘ஒரு நாள் போதுமா’ பாடல் காட்சியையும், ‘திருவருட்செல்வர்’ படத்தில் ஆரம்பப் பாடலான ‘மன்னவன் வந்தானடி’ பாடல் காட்சியையும் அவற்றின் பிரமாண்டத்துக்கும், அழகான காட்சியமைப்புக்கும் உதாரணமாகச் சொல்லலாம். அப்படி எந்தக் காட்சியும் ‘கந்தன் கருணை’யில் குறிப்பாகச் சொல்லும்படியாக இல்லை. பிரமிக்க வைக்கவில்லை. தேவலோக ஸீன்கள் உள்பட அத்தனைக் காட்சிகளுமே, ஏதோ நாலு சுவருக்குள் நடந்து முடிந்துவிடுகிற மாதிரியே இருக்கின்றன.

சண்டைக் காட்சி என்றும் பெரிதாக எதுவும் இல்லை. சூரபத்மனை அழிப்பதிலும் முருகர் அத்தனை வேகம் காட்டவில்லை. முருகர் எறியும் வேலும், சூரன் எறியும் ஈட்டியும் காகித ஏரோப்ளேன் போல் நிதானமாகக் காற்றில் மிதந்து வந்து, ஒன்றை ஒன்று நேருக்கு நேர் முத்தமிட்டுக்கொண்டு, பின்பு தீபாவளிக் கலசம் மாதிரி வெண்புகை கக்கிக்கொண்டு கீழே விழுகிறது சூரனின் ஆயுதம்.

தவிர, முருகர் சூரனை அழிப்பதில் ஆர்வம் காட்டவே இல்லை. அவனுடைய கோட்டையை ‘எத்தனை அழகான கோட்டை! இதை அழிப்பதாவது!’ என்று தயங்குகிறார். ‘சூரபத்மன் ஆரம்பத்தில் என் தந்தையான சிவபெருமானிடம் அத்தனை பக்தியோடு இருந்தான்; அவனைக் கொல்லவேண்டுமா? திருத்துகிறேன். நீ தூது போய் வா!’ என்று தன் தளபதி வீரபாகுவிடம் சொல்கிறார். அண்ணன் சூரபத்மனுக்காக உயிரை விடவும் தயாராக இருக்கும் தாரகாசுரன் பற்றித் தெரிந்ததும், ‘எத்தனை நல்ல பிள்ளை இவன்! இவனைக் கொல்லவேண்டுமா!’ என்று யோசிக்கிறார். ஒவ்வொரு முறையும் வீரபாகுதான் முருகரை உசுப்பேற்றி, போர் புரிய அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, சூரபத்மனை அழித்ததிலும் எந்த விறுவிறுப்பும் கிடைக்கவில்லை.

பாடல் காட்சிகளும் எதுவும் சிலாகித்துச் சொல்லும்படி இல்லை. ‘திருவிளையாடல்’ படத்தில், ‘பொதிகை மலை உச்சியிலே’ பாடலில் நீச்சல் குளம், அன்னம் போன்ற செட்டப் ஷவர் என செட்டிங்குகள் கண்ணுக்கு விருந்தாக இருக்கும். அப்படி எந்த மெனக்கிடலும் ‘கந்தன் கருணை’யில் இல்லை. ஏதோ கே.வி.மகாதேவன் ஏழெட்டுப் பாட்டு போட்டுக் கொடுத்துவிட்டார்; அதற்கு என்னமாவது காட்சிகள் ஏற்பாடு பண்ணிப் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டுமே என்று எடுத்த மாதிரி இருக்கிறது.

நட்சத்திரங்கள்: நட்சத்திரப் பட்டாளத்துக்குக் குறைவில்லை. சிவாஜி, ஜெமினிகணேசன், சாவித்திரி, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, அசோகன், சிவகுமார், நாகேஷ், மனோரமா எனத் திறமையான நடிகர், நடிகைகள் பலர் இருந்தும், யாருமே மனதில் ஒட்டவில்லை என்பதே நிஜம்.

கதாநாயகன் முருகப் பெருமான் என்பதால், சிவகுமார் இதில் ஹீரோ ஆகிவிட்டாரே தவிர, பளிச்சென்று முத்திரை பதிக்கும்படியான ஸீன் ஒன்றுகூட அவருக்கு இல்லை. அதிலும் அவரின் தளபதியாக வீரபாகு கேரக்டரில் சிவாஜி வரும் இடங்களில், சிவகுமார் துணை நடிகர் போலாகிவிடுகிறார், பாவம்!

சூரபத்மனாக அசோகன். சம்பூர்ண ராமாயணம் படத்தில் ராவணனாக வந்த டி.கே.பகவதிக்குக் கிடைத்த பெயர் இவருக்கும் கிடைத்திருக்க வேண்டும். கிடைக்கவில்லை. காரணம், படம் எடுக்கப்பட்ட விதமும், கதாபாத்திரங்களுக்குக் கொடுத்திருக்க வேண்டிய அழுத்தமும் இதில் சரியாக அமையாமல் போனதுதான். இருந்தாலும், தனக்குக் கிடைத்த கொஞ்ச நஞ்ச வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு, தன் பங்களிப்பை வெகு சிறப்பாகவே செய்திருக்கிறார் அசோகன்.

ஜெயலலிதாவும் கே.ஆர்.விஜயாவும் வள்ளி, தெய்வானையாக வந்து போகிறார்கள். முருகன் இவர்கள் இருவரைத் திருமணம் புரிந்துகொண்ட காட்சிகளிலும் எந்தவித சுவாரசியமும் இல்லை. இது போன்ற புராணப் படத்தில், ‘மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு’ எனும் பள்ளியறைப் பாடல் காட்சி ஒட்டவே இல்லை (பாட்டு என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது!).

கே.ஆர்.விஜயாவும் சரி, ஜெயலலிதாவும் சரி... டைரக்டர் சொன்னதைச் செய்துவிட்டுப் போகிறார்கள். இதில் எதற்கோ, ஒரு காட்சியில் ஜெயலலிதாவுக்கு இரட்டை வேடம் வேறு! வள்ளிக்குக் குறி சொல்லும் வஞ்சி என்கிற குறத்திப் பெண்ணாகவும் ஜெயலலிதாவே வரவேண்டிய அவசியம் என்னவென்று புரியவில்லை! குறி சொல்வதற்காக குறத்திப் பெண்ணிடம் நீட்டிய தன் கையை நீட்டியபடியே ரொம்ப நேரம் வள்ளி வைத்திருக்க, குறவஞ்சி அதைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல் பாடி ஆடத் தொடங்கிவிடுகிறாள். நாடகப் பாட்டுப்போல பலப் பல மெட்டுக்களில் நீளும் அந்த ஒரு பாட்டிலேயே, வள்ளியின் கையைப் பார்க்காமலேயே, நிகழப்போவது அத்தனையையும் குறி சொல்லி முடித்துவிடுகிறாள் வஞ்சி. முருகப் பெருமான் முதியவராக வந்து வள்ளியிடம் குறும்பு செய்வது, அண்ணன் கணேசன் யானை உருவில் தோன்றி பயமுறுத்துவது என வள்ளித் திருமணம் தொடர்பான அத்தனைச் சங்கதிகளையும் பாட்டிலேயே சொல்லி முடித்துவிடுகிறாள் வஞ்சி. எனவே, ஏ.பி.நாகராஜனுக்கு மறுபடியும் விலாவாரியாக அவற்றைக் காட்சிப்படுத்தவேண்டிய ஒரு வேலை மிச்சம்!

ஜெமினிகணேசனும் சாவித்திரியும் சிவ-பார்வதியாக வருகிறார்கள். தங்கள் குறைவான பங்கைக் குறைவில்லாமல் செய்கிறார்கள்.

நகைச்சுவைக்கு நாகேஷ்- மனோரமா ஜோடி! அவர்களும் பாவம், என்ன பண்ணுவார்கள்? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? மனோரமாவுக்குத் திக்குவாய் கேரக்டர். இழுத்து இழுத்து மனோரமா பேசுவதும், ஒவ்வொரு முறையும் நாகேஷ் அதைக் கேலி செய்வதுமே இந்தப் படத்தில் நகைச்சுவைக் காட்சியாகியிருக்கிறது. ஊனமுற்றவர்களைக் கேலி செய்வது இன்றைக்கு மிக அநாகரிகமாகக் கருதப்படுவதுபோல், இந்தப் படம் வெளிவந்த காலத்தில் அது அத்தனைக் கடுமையாகக் கருதப்படாமல் இருந்திருக்கலாம். அதையும் ஒருவகை நகைச்சுவையாக அந்தக் காலத்தில் ஜனங்கள் ஏற்றுக்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால், திக்குவாய் என்கிற ஒரு விஷயத்தைத் தாண்டி நகைச்சுவைக்கென எந்த ஹோம்வொர்க்கும் இதில் செய்யப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

கடைசியாக சிவாஜிக்கு வருவோம். மிகப் பெரிய நடிகர்தான். ஆனால், பொதுவாகவே இவர் நடிப்பை ‘ஓவர் ஆக்ட்’ என்று விமர்சனம் செய்பவர்கள் இருக்கிறார்கள். ‘நடிப்பு என்பதே சற்று மிகைப்படுத்துவதுதானே?’ என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். ‘சிவாஜியிடம் ரசிப்பதே அந்த மிகை நடிப்பைத்தான்’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

‘கந்தன் கருணை’யில் சிவாஜி நடிப்பு பற்றிப் பார்ப்போம். ‘ஓவர் ஆக்ட்’ என்று சிலர் விமர்சனம் செய்வதற்கு ஏற்ப, இதில் அவரின் நடிப்பும், அங்க அசைவுகளும், வசன உச்சரிப்பும் அதிகப்படியாகத்தான் தெரிகின்றன. ஆனால்... வீரபாகு என்பது புராண கேரக்டர். தமிழ்த் திரைப்படங்களில் சாதாரண கேரக்டர்களிலிருந்து மன்னர்கள் கேரக்டர்களை வித்தியாசப்படுத்திக் காண்பிப்பதற்கே இலக்கணச் சுத்தமான தமிழ் உச்சரிப்பையும், சற்று அலட்டலான அங்க அசைவுகளையும் மேற்கொள்ளும்போது, ஒரு புராண கேரக்டர் எப்படிப் பேசும், எப்படி நடக்கும் என்று யார் தீர்மானிப்பது? ஆகவே, அந்த கேரக்டருக்கே ஒரு கனம் சேர்க்கும் வகையில் சிவாஜி வேண்டுமென்றே தன் நடிப்பை சற்று மிகைப்படுத்தியிருக்கக்கூடும். சொல்லப்போனால், திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற புராணப் படங்களில் அவர் எப்படி நடித்தாரோ, அப்படியேதான் இதிலும் நடித்திருக்கிறார் எனலாம். ஆனால், அந்தப் படங்களில் காட்சியமைப்புகளும், இதர கதாபாத்திரங்களும் சிவாஜியின் கேரக்டருக்குத் தோதாக இசைந்து வந்தன. ஆனால், இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரமான முருகர் ரொம்பவும் சாந்தமாக, மென்மையாக தன் பங்கைச் செய்திருப்பதால், சிவாஜியின் நடிப்பு ரொம்பவே மிகை போன்று ஒரு தோற்றம் கொடுத்துவிட்டது. முருகர் மட்டுமல்ல; சிவாஜி, அசோகன் தவிர ஏனைய கதாபாத்திரங்கள் அனைத்தும் சாதுவாக வந்து போய்விட்டதால், சிவாஜி ரொம்பவும் அலட்டிக்கொள்கிறாரோ என்று நினைக்கும்படி ஆகிவிட்டது.

ஔவையாக வரும் கே.பி.சுந்தராம்பாள் ஒன்றும் புதுசில்லை; சுட்ட பழம், சுடாத பழம் விவகாரத்தை ஏற்கெனவே ‘ஔவையார்’ படத்திலேயே பார்த்தாகிவிட்டது. நக்கீரராக வரும் சீர்காழி கோவிந்தராஜன் முருகனுக்கும் தமிழ் மொழிக்குமான பொருத்தத்தைச் சொல்லிவிட்டு, தன் வெண்கலக் குரலில் ‘ஆறுபடை வீடு கொண்ட திருமுருகா...’ என்று பாடி முடித்ததும், சற்றும் எதிர்பாராமல் தடக்கென்று படமே முடிந்துபோய்விடுகிறது.

சரி, எங்கேயாவது முடித்தாகவேண்டுமே என்று ‘வணக்கம்’ கார்டு போட்ட மாதிரி... ‘போதும் எடுத்தவரைக்கும்’ என்று அலுத்துக்கொண்ட மாதிரி படம் முடிகிறதே தவிர, சரியான ஒரு கட்டத்தில் படத்தை முடிக்கவேண்டும் என்று இயக்குநர் பிரயத்தனப்படவே இல்லை.

பிடித்த காட்சி: யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. முருகரிடம் தோற்றுவிட்டுத் திரும்பும் நேரத்தில், மனைவியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் வெட்கமும் அவமானமும் ஆத்திரமுமாக சூரபத்மன் பொங்கிப் பொருமுகிற காட்சியில், அசோகன் அசத்தியிருக்கிறார். ‘தோற்றாலும் ஒரு சுத்த வீரனிடம்தான் தோற்றிருக்கிறேன். எனக்கு அந்தப் பெருமை ஒன்று போதும். இந்த சூரபத்மன் இல்லாமல் முருகனின் சரித்திரம் நிறைவு பெறாது!’ என்று முழங்கும் இடத்தில் மிளிர்கிறார் அசோகன்.

சில தகவல்கள்: இந்தப் படத்தைப் பொறுத்தமட்டில், தன் பங்கை வழக்கம்போல் முழுமையாகவும் சிறப்பாகவும் செய்திருப்பவர் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்தான். இந்திராணியாக வரும் எஸ்.வரலட்சுமி ‘வெள்ளிமலை மன்னவா, வேதம் நீ அல்லவா’ என்று தன் ஸ்டீரியோஃபோனிக் குரலில் பாடி அசத்துகிறார். சீர்காழி கோவிந்தராஜனின் தெய்வீகக் குரலில் ‘ஆறுபடை வீடு கொண்ட திருமுருகா’ என்னும் பாடலைக் கேட்கும்போது, நிச்சயம் பக்திச் சிலிர்ப்பு உண்டாகத்தான் செய்கிறது. ஆனால், நீளமான அந்தப் பாடல் காட்சியில் முருகரும் சரி, நக்கீரரும் சரி... தாங்கள் நின்ற இடத்தை விட்டு அப்படி இப்படி ஓரிரு அங்குலங்கள்கூட நகரவே நகராமல், சிலையாக நின்றிருப்பது ஏனோ?

வழக்கமாகவே மிகச் சிறப்பாக இசையமைக்கும் திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், ‘திருவிளையாடல்’ படத்தில் இசையமைத்த ‘பாட்டும் நானே பாவமும் நானே’, ‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’, ‘பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்’ போன்ற பாடல்களைவிடவும் இந்தப் படத்தில் புதிதாகவோ சிறப்பாகவோ எதுவும் செய்யவில்லை என்றபோதிலும், இந்தப் படத்துக்காக கே.வி.மகாதேவனுக்கு மத்திய அரசிடமிருந்து ‘சிறந்த இசையமைப்பாளர்’ விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் இடம்பெறும் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் முருகா’ பாடல் மட்டும் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் உருவானது இல்லை. குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் உருவான பாடல் அது. தன்னுடைய ஆல்பம் ஒன்றுக்காக கவிஞர் பூவை செங்குட்டுவனிடம் குன்னக்குடி வைத்தியநாதன் கேட்டு எழுதி வாங்கி இசையமைத்து வைத்திருந்த பாடல் அது. அதன் இசை மிகச் சிறப்பாகவும், கந்தன் கருணை படத்துக்கு மிகப் பொருத்தமாகவும் இருந்ததால், அந்தப் பாடலைத் தங்களுக்குக் கொடுக்கச் சொல்லி ஏ.பி.நாகராஜனும் கே.வி.மகாதேவனும் கேட்க, மனமுவந்து கொடுத்துவிட்டார் குன்னக்குடி.

இதில் இன்னொரு சுவாரசியமும் உண்டு. குன்னக்குடியின் வற்புறுத்தலின்பேரில் இப்படியொரு பக்திப் பாடலை எழுதிக் கொடுத்த சமயத்தில், கவிஞர் பூவை செங்குட்டுவன் பரம நாத்திகர்!
.