உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, October 02, 2011

அந்தமான் போய் வந்தேன்!

விமானம் லேசாக நகரத் தொடங்கியதை, ஜன்னல் வழியே நகர்ந்த வெளிப்புறக் காட்சிகளை வைத்து உணர்ந்துகொண்டேன். ஒரு பஸ் மிக மெதுவாக நகர்வது போன்று விமானம் மெதுவாக தார்ச்சாலையில் ஊர்ந்து, ஒரு திருப்பத்தில் திரும்பி நின்றது.

எதிரே வேறொரு விமானம், திடுதிடுவென ஓடி வருவது தெரிந்தது. விரைந்து வந்த அந்த விமானம் கண்ணெதிரே குபுக்கென உயரே எழுந்து பறந்தது. அது வானில் புள்ளியாகி மறைந்த விநாடியில், எங்களின் விமானம் உறுமத் தொடங்கியது. அந்த உறுமல் சட்டென பேரிரைச்சலாக மாறியது. யோசிப்பதற்குள் திடுக்கெனக் கிளம்பி, எடுத்த எடுப்பில் படு வேகத்தில் ஓடியது. கண் சிமிட்டும் நேரத்துக்குள் நாங்கள் தரையை விட்டு இருநூறு அடி உயரத்தில் இருந்தோம்.

ஜன்னல் வழியே சென்னையின் வீடுகள், எல்.ஐ.சி. கட்டடம், அண்ணா மேம்பாலம், மெரினா கடற்கரை ஆகியவை புள்ளிப் புள்ளியாகத் தெரிந்தன. பின்னர் வெறுமே பச்சை மரங்களாக மட்டும் கண்ணில் பட்டன. பின்னர் வெறும் கடற்பரப்பு தெரிந்தது. சில விநாடிகளில் அதுவும் மறைந்து, வெறும் ஆகாயம் மட்டுமே தெரிந்தது (ஆல்பம் என் முகப் புத்தகத்தில்).

காதுக்குள் ஏதோ திரவம் சுரப்பது போன்று ஓர் உணர்வு. குறுகுறு என்று இருந்தது. குப் குப்பென்று அடைத்தது. சன்னமான வலி. விரல்களைச் செலுத்தி, காதுகளை இறுகப் பொத்திக்கொண்டேன்.

முழு உயரத்தை எட்டுவதற்குள், விமானம் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மாறி மாறிச் சாய்ந்து பறந்தது. பின்னர் சீராகப் பறக்கத் தொடங்கியதும், சீட் பெல்ட்டுகளை அவிழ்த்துக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பு கசிந்தது. நான் என் பெல்ட்டைக் கழற்றிவிட்டு, மெதுவாக எழுந்து நடந்தேன். இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை ஒரு நடை போய், நம்மவர்கள் யார் யார் எங்கே எங்கே உட்கார்ந்திருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு வந்தேன்.

இடப் பக்கம் மூன்று, வலப் பக்கம் மூன்று என வரிசைக்கு ஆறு சீட்டுகள். இப்படி சுமார் 30 வரிசைகள் இருந்தன. மையமாக, ஓராள் மட்டுமே நடந்து செல்ல முடிகிற அளவுக்குக் குறுகலான நடைபாதை. விமானம் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை. ஏழெட்டு சீட்டுகள் காலியாக இருந்தன.

என் சீட்டுக்குத் திரும்புவதற்குள், ஒரு நடை டாய்லெட்டுக்கும் போய் வந்தேன். அவசரமோ அவசியமோ எதுவும் இல்லை. என்றாலும், வந்ததுதான் வந்தோம்; விமானத்தில் டாய்லெட் வசதி எப்படி இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்று ஒரு எண்ணம்.

மிகக் குறுகிய அறை. வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமர்ந்தபடியே கழுவிக் கொள்ளும் சாமர்த்தியமோ, அல்லது நின்றபடியே கழுவிக் கொள்ளும் சாமர்த்தியமோ இருந்தால் பிழைத்தோம். உள்ளே நுழைந்து கதவைத் தாழ் போட்டதும் விளக்கு எரிந்தது. தாழ்ப்பாளைத் திறந்ததும் லைட் அணைந்தது. நம்மவர்களின் அசிரத்தை, அலட்சியம், பொறுப்பின்மை இவற்றை உணர்ந்து செய்திருந்த ஏற்பாடாகவே அது எனக்குத் தோன்றியது.

என் இருக்கையில் வந்து அமர்ந்தேன். அக்கம்பக்கத்து சீட்டுகளில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நோட்டமிட்டேன். சிலர் தங்களின் முன்னிருக்கையின் முதுகில் இருந்த குட்டி மானிட்டரில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டு இருந்தனர். சிலர் கூகுள் மேப் போன்ற ஒரு மேப்பில், விமானம் தற்போது எங்கே, என்ன உயரத்தில் பறந்துகொண்டு இருக்கிறது என்று கவனித்துக்கொண்டு இருந்தனர்.

நான் எனக்கான குட்டித் திரையை ஆன் செய்தேன். ஹெட்போனை எடுத்துக் காதில் மாட்டிக்கொண்டேன். இந்திப் படம் ஒன்று இருந்தது. அதை கிளிக் செய்து, கொஞ்ச நேரம் பார்த்தேன். போரடிக்கவே, வேறு என்னென்ன இருக்கிறது என்று தேடினேன். பாப் பாடல்கள் இருந்தன. அதைக் கிளிக் செய்து, ஓட விட்டேன். பரவாயில்லை ரகம்!

சற்று நேரத்தில், குறுகலான நடைபாதையில் சக்கர வண்டி ஒன்றைத் தள்ளியபடி ஏர் ஹோஸ்டஸ்கள் இருவர் வந்தனர். இந்த விமானத்தில் என் கண்ணில் பட்ட ஏர் ஹோஸ்டஸ்கள் மொத்தம் ஆறு பேர். நாலு பேர் பெண்கள்; இருவர் ஆண்கள். அனைவரும் கருநீல நிறத்தில் கோட், சூட் அணிந்திருந்தனர். பெண்கள் தங்கள் தலைமுடியை இறுக்க முடிந்து, கொண்டை போட்டிருந்தனர். அதீத மேக்கப். ரோஸ் நிறத்தில் ஓவர் லிப்ஸ்டிக். விழிகளில் பட்டையடித்திருந்த மை. ரோபோத்தனமான செயல்பாடுகள். உறைந்த சிரிப்பு! அவர்கள் உணர்ச்சியுள்ள ஜந்துக்கள் மாதிரி எனக்குத் தெரியவில்லை. கீ கொடுத்த பொம்மை போன்று இயங்கினார்கள்.

வண்டியைத் தள்ளியபடியே, ‘வெஜ்ஜா, நான்-வெஜ்ஜா?’ என்று கேட்டு, அதற்கேற்ப ஆளுக்கொரு பேக்கிங்கை விநியோகித்தபடி வந்தார்கள். எனக்கான பேக்கிங்கைப் பிரித்தேன். பனீர் ரொட்டி, கிச்சடி, சப்பாத்தி, குருமா என இருந்தது. சாப்பிட்டு முடித்ததும், மீண்டும் ‘காபியா, டீயா?’ என்று கேட்டபடி, அதே ஏர்ஹோஸ்டஸ்கள் மீண்டும் வந்தார்கள். காபி என்றேன். ஒரு சின்ன கப்பில் காபி டிகாக்‌ஷன் மட்டும் கொடுத்தார்கள். ஏற்கெனவே கொடுத்த பேக்கிங்கில், ஒரு சின்ன முட்டை மாதிரி கூட்டுக்குள் செயற்கைப் பால் இருந்தது. அதைப் பிரித்து டிகாக்‌ஷனுடன் கலக்க, காபி ரெடி! ஆனால், அப்படியொன்றும் சுவையாக இல்லை. மிகச் சுமார் ரகம்!

மீண்டும் சக்கர வண்டியைத் தள்ளியபடி வந்து, காலியான எச்சில் பேக்கிங்குகளை சேகரித்துக்கொண்டு போனார்கள் ஏர்ஹோஸ்டஸ்கள். பாதை ஓர சீட்டில் நான். எனக்குப் பக்கத்தில், அதாவது என் வரிசையின் மத்தியில் அமர்ந்திருந்த நபரின் காலி பேக்கிங்குகளைச் சேகரிக்கும்போது, ஏதோ ஒரு சிறு குப்பி, தவறி என் பேண்ட்டின் மீது விழுந்து, தரையில் விழுந்தது. பதறிவிட்டாள் அந்த ஏர்ஹோஸ்டஸ். ‘ஸாரி... ஸாரி...’ என்று பலமுறை சொல்லி, கையிலிருந்த சின்ன டவலால் பேண்ட்டைத் துடைத்துவிட்டாள். தரையில் முட்டி போட்டு அமர்ந்து, கீழே விழுந்திருந்த குப்பியை எடுத்து தள்ளுவண்டியில் போட்டுவிட்டு, தரையைத் துடைத்துச் சுத்தம் செய்தாள். பின்பு எழுந்து, மீண்டும் ‘ஸாரி...’ என்றாள். “இட்ஸ் ஓகே! விடும்மா!” என்றும் கேட்காமல், மறுபடியும் ஸாரி சொல்லி, ஒரு சின்ன டவல் தந்து துடைத்துக்கொள்ளச் சொன்னாள். நடிகை மாதிரி இருந்தவள் சர்வண்ட்டாக மாறிப் பணிவிடை செய்தபோது, அவள் மீது கொஞ்சம் பரிதாபமாக இருந்தது. பெயர் கேட்டேன். ‘ஏஞ்சலினா’ என்றபடி, இடது தோள் பக்கம் குத்தியிருந்த பேட்சைத் தொட்டுக் காட்டினாள், தனது வழக்கமான செயற்கைப் புன்னகையுடன்.

சரியாக இரண்டு மணி நேரப் பயணத்துக்குப் பின்பு, விமானம் இறங்கத் தொடங்கியது. தரையில் மேடு பள்ளமான சாலையில் தடக் தடக்கென்று பஸ் இறங்குவதைப் போலவே, விமானமும் தட் தட்டென்று எதிலோ தட்டுவது போல் இறங்கியது ஆச்சரியமாக இருந்தது. ஏர் பிளாக்குகள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு விமானம் மாறும்போது இப்படித்தான் இடிக்குமாம்.

ஜன்னல் வழியே மீண்டும் கடல் பரப்பு, பச்சைப் பசேல் மரங்கள், தீப்பெட்டிகள் போல வீடுகள் எல்லாம் கண்ணில் பட்டன. தட்டென்று தரை தட்டி, விறுவிறுவென்று ஓடி நின்றது விமானம். சினிமா முற்றாக முடிவதற்குள் எல்லோரும் கிளம்பி நகரத் தொடங்குவது போல, விமானம் நிற்பதற்குள் பலர் எழுந்துகொண்டார்கள். ‘உட்காருங்க, சொன்னதும் எழுந்திருக்கலாம்!’ என்றார்கள் ஏர்ஹோஸ்டஸ்கள்.

காக்பிட்டிலிருந்து இரண்டு விமானிகளும் வெளியே வந்து, பயணிகளின் முன் நின்று, சர்க்கஸ் முடிந்ததும் வீரர்கள் கையசைப்பது போல் கையசைத்து ‘ஹாய்’ என்றார்கள். விமானத்தைச் செலுத்திய விமானியின் பெயர் சுப்பிரமணியன் என்றும், துணை விமானியின் பெயர் சுரேஷ் என்றும் அறிவிப்புக் குரல் ஒலித்தது.

ஒவ்வொருவராக வெளியேறினோம். போர்ட்பிளேர் விமான நிலையத்தின் பெயர் வீர சாவர்க்கர் விமான நிலையம்.

தயாராக இருந்த கார்களில் கிளம்பி, நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மெகாபோட்’ ஹோட்டலுக்குப் போனோம்.

அந்தமான் சிறைச்சாலையைப் பார்வையிட்டோம். செல்லுலார் ஜெயிலில் வீர சாவர்க்கர் அடைபட்டிருந்த சிறு அறையில் நின்று பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பின்னர், ஒரு சிறு கப்பலில் கிளம்பி, ஹேவ்லாக் தீவு போனோம். அங்கிருந்து சிறு படகில் லாவெண்டர் தீவு, ரோஸ் ஐலண்ட் போன்ற குட்டிக் குட்டித் தீவுகளைப் பார்த்தோம். தரைப்பகுதியில் கண்ணாடி பதித்த ஒரு படகில் சென்று, கடலுள் இருந்த பவழப் பாறைகள், சிப்பிப் பாறைகள் ஆகியவ்ற்றைப் பார்த்தோம். கடலில் குதியாட்டம் போட்டோம். 30 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் நீரில் நீந்தினேன். கடலில் நீந்துவது இதுவே முதல்முறை!

எலிஃபெண்டா பீச் போனோம். அப்புறம் ராதா நகர் பீச் போனோம். அது ரொம்ப அழகான கடற்கரை; மியாமி கடற்கரைக்கு அடுத்தபடியாக ஆசியாவிலேயே அழகிய கடற்கரை; அங்கே நிறைய சினிமா ஷூட்டிங்குகள் நடந்திருக்கின்றன; சத்ரியன் படத்தில் ஒரு பாடல் காட்சி அங்கேதான் படமாக்கப்பட்டது; சமீபத்தில் வெளியான ‘செல்லமே’ படத்தில் இடம்பெறும் ‘காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னைக் காணும் வரை...’ பாடல் காட்சி அங்கே படமானதுதான் என்றெல்லாம் பில்டப் செய்து கூட்டிப் போனார்கள். ஆனால், என் கண்ணுக்கு அப்படியொன்றும் அது அழகாகத் தெரியவில்லை.

வியாழக் கிழமை அந்தமான் போய், இரண்டு நாட்கள் இருந்துவிட்டு, ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னை திரும்பினோம்.

‘அந்தமானைப் பாருங்கள், அழகு..!’ என்று பாட்டில்தான் அந்தமான அழகாக இருக்கிறது. மற்றபடி, நம்ம ஊட்டியைவிட அந்தமான் ஒன்றும் அழகானதாக எனக்குத் தெரியவில்லை. அங்கே பார்க்கவும் ரசிக்கவும் ஒன்றும் இல்லை. முன்பு ஐந்து சினிமா தியேட்டர்கள் இருந்ததாம். அத்தனையும் போணியாகாமல் மூடிவிட்டார்களாம். இப்போது மருந்துக்கு ஒரு சினிமா தியேட்டர் கூடக் கிடையாது என்றார்கள். ஆனால், இந்தியாவில் ரிலீசாகும் புத்தம்புதுப் படங்கள் எல்லாம் அடுத்த ஒரே வாரத்துக்குள் விசிடி-யாகக் கிடைத்துவிடுவதால், வீட்டிலேயே எல்லாப் படங்களையும் பார்த்துவிடுகிறார்கள். அந்தமானில் வங்காளிகள் அதிகம்; அடுத்தபடியாக தமிழர்கள் அதிகம். எனவே, தமிழ்நாட்டிலேயே வனங்கள் சூழ்ந்த பகுதி ஒன்றில் இருந்துவிட்டு வந்தது போல்தான் இருந்தது. என்றாலும், குளிர்ச்சியான தட்பவெப்பம் இல்லை. புழுக்கமும் வேர்வையும் இருந்தது.

மொத்தத்தில், சுவாரஸ்யமாகச் சொல்வதற்கு இந்தப் பயணத்தில் எனக்கு ஏதும் தெரியவில்லை.

இந்தப் பயணத்தில் சிறப்பாக ஒன்றை மட்டும் குறிப்பிடலாம். விகடன் குழுமத்தில் எடிட்டோரியல், சர்க்குலேஷன், பிரிண்ட்டிங், அட்வர்டைஸ்மெண்ட் எனப் பலப்பல பிரிவுகள் இருந்தாலும், அவரவர் பணியாற்றும் துறையைத் தவிர, மற்ற துறையில் உள்ளவர்களின் அறிமுகம் இல்லாதிருந்தது. இந்தப் பயணத்தில் சர்க்குலேஷன் மேனேஜர் யார், பெர்சோனல் மேனேஜர் யார், சேல்ஸ் மேனேஜர் யார், அக்கவுண்ட்ஸ் மேனேஜர் யார் என்றெல்லாம் தெரிந்துகொண்டேன்.

அக்கவுண்ட்ஸ் மேனேஜரும், பெர்சோனல் மேனேஜரும் நான் இருக்கும் மாம்பலத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதும் இந்தப் பயணத்தின்போதுதான் தெரிந்தது. அவர்கள் இருவரோடு நானும் கிளம்பி, ஒன்றாகத்தான் ஆட்டோவில் பேசிக்கொண்டே ஏர்போர்ட் போனோம். அந்தமானில் எல்லோரும் தங்கள் தங்கள் பதவிகளை உதறிவிட்டு, நண்பர்களாகப் பேசி கலகலப்பாகப் பழகியது இனிமையான அனுபவம்.

சென்னை ஏர்போர்ட்டில் இறங்கி, திரும்பி வரும்போது பர்ச்சேஸ் மேனேஜர் திரு.ஸ்ரீதரும் சேர்ந்துகொண்டார். “வேணாம்! ரொம்ப டிரிங்க்ஸ் எடுத்துக்காதீங்க. ஹெல்த்துக்குக் கெடுதல்!” என்று அங்கே எங்களுக்கு அடிக்கடி அன்பும் அக்கறையுமாக அட்வைஸ் பண்ணிக்கொண்டே இருந்தார் அவர். “விமானத்தில் வந்து இறங்கினா கால்டாக்ஸியிலோ, ஆட்டோவிலாதான் வீட்டுக்குப் போகணும்னு கட்டாயமா என்ன? வாங்க, சப்-வே இறங்கி ஏறினா திரிசூலம் ஸ்டேஷன். சபர்பன்ல போயிடுவோம்!” என்று எந்த பந்தாவும் இல்லாமல், எங்களை அழைத்துக் கொண்டு வந்தார்.

இதற்கு முன்பு அவரை எங்கள் அலுவலகத்தில் பார்த்திருக்கிறேன் என்றபோதிலும், அவர் யார் என்று தெரியாமல் கடந்து போயிருக்கிறேன். இந்தப் பயணத்துக்குப் பின்பு, அவர் எதிர்ப்படும்போதெல்லாம் ஒருவருக்கொருவர் புன்னகையைப் பரிமாறிக்கொண்டோம். விஷ் செய்து கொண்டோம். அவ்வப்போது நலம் விசாரித்துக் கொண்டோம்.

இனிமையான, பந்தா இல்லாத எளிய நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார் அவர்.

எல்லாம் சரி; புதிய, இனிய, அன்பானதொரு நட்பை எனக்குக் கொடுத்த இறைவன் ஏன் இத்தனை ஈவு இரக்கமற்றவனாகிப் போனான்?

அந்தமான் பயணம் நிகழ்ந்து ஒரு மாதம் பூர்த்தியாவதற்குள்ளாகவே, அந்த இனிய மனிதருக்கு ‘ஹார்ட் அட்டாக்’ கொடுத்து, ஏன் எங்களிடம் இருந்து பிரித்துவிட்டான்?

இன்னமும் ஆறவில்லை மனசு!
ஸ்ரீதர்