உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, August 03, 2020

தாமினி என்ன ஆனாள்? - 1


ருத்துவமனைக் கட்டடங்கள், வங்கிகள், கோயில்கள், உணவகங்கள் எனப் பலவற்றைக் கடந்து, கார் ஓடிக்கொண்டிருந்தது. பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் ஆள் நடமாட்டமே இல்லை. அம்பலப்புழா இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்காததுபோல் இருந்தது. நாகராஜ் கருமமே கண்ணாயினனாக சாலையைப் பார்த்து வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான்.

நாகராஜ் நீல நிற ஜீன்ஸ் துணிக்குல்லா அணிந்திருந்தான். மெல்லிய ஃபிரேமிட்ட கண்ணாடி அணிந்திருந்தான். பருமனும் இல்லாத, ஒல்லியும் இல்லாத நடுத்தர வாகு உடம்பு.  தாடி லேசாக வளர்ந்திருந்தது. அவன் வயதை கிருஷ்ணவேணியால் யூகிக்க முடியவில்லை. ஆனால், வயதானவன் அல்ல என்பது மட்டும் தெரிந்தது. அதிகபட்சம் 45-க்குள் இருக்கலாம் என்று யூகித்தாள்.

55, 60 என்றால் ‘அங்கிள்’ எனலாம். யாரும் தன்னைத் தாத்தா என்று கூப்பிடுவதை விரும்புவதில்லை. சென்னையில் ஓலா, ஊபர் என கால்டாக்ஸிகளில் பயணிக்கும்போதெல்லாம் அதன் ஓட்டுநர்களை ‘அண்ணா’ என்று அழைத்துதான் கிருஷ்ணவேணிக்குப் பழக்கம்.

“அண்ணா, வண்டியைக் கொஞ்ச நிறுத்துங்களேன்” என்றாள் கிருஷ்ணவேணி, கன்னத்தில் காய்ந்திருந்த கண்ணீர்த் தடங்களைத் துடைத்துக்கொண்டே.

“ஏன் மேடம்… ஏதாவது வாங்கணுமா? என்றபடி, வேகம் குறைத்து, வசதியான ஓர் இடத்தில் காரை ஓரங்கட்டி நிறுத்தினான் நாகராஜ்.

“எனக்கு ஒரு உதவி செய்யறீங்களா?

“சொல்லுங்கம்மா!

“காரை மறுபடியும் தன்வந்திரிக்கே திருப்புங்க.

“ஏன் மேடம்? ஏதாச்சும் மறந்து விட்டுட்டீங்களா?

“ஆமாம். அந்தப் பொண்ணு தாமினியை! அவ இல்லாம, நான் மட்டும் சென்னைக்கு வர விரும்பலை” என்றாள் கிருஷ்ணவேணி உறுதியான குரலில்.

“ஐயோ! என்றான் நாகராஜ். “இப்படிச் சொன்னா எப்படி மேடம்? வந்து போற செலவுக்கு உங்கப்பா இன்னும் வண்டி வாடகை கொடுக்கலை. உங்களைப் பத்திரமா அழைச்சுட்டுப் போய்ச் சேர்த்தப்புறம்தான் அவர்கிட்ட துட்டு வாங்கணும். இப்ப நீங்க இல்லாம நான் மட்டும் போய் நின்னா,  என்ன ஆகுறது? என்று படபடத்தான் நாகராஜ். “இருங்க, எதுக்கும் ஒரு வார்த்தை உங்கப்பா கிட்ட நீங்களே சொல்லிடுங்க” என்றபடி மொபைலை எடுத்தான்.

“கொஞ்சம் இருங்கண்ணா. அப்ப அந்தப் பெண்ணையும் கூட்டிக்குவோம். வழியில செக்கிங் இருக்கும்னுதானே பயப்படறீங்க? அவ ரொம்ப ஒல்லியான பொண்ணு. அவளை ஸீட்டுல படுத்துக்கச் சொல்லிட்டு, மேல என் துணிப்பை அது இதுன்னு பரப்பிட்டு, நான் உட்கார்ந்துக்கறேன்.  யாருக்கும் சந்தேகம் வராது. அப்படியும் உங்களுக்குத் திருப்தியில்லேன்னா, கேரள பார்டரைத் தாண்டற வரைக்கும் அவளை ஸீட்டுக்கடியில, காலடியில படுத்துக்கிட்டு வரச் சொல்றேன். அதுக்கப்புறம் பெரிசா செக்கிங் இருக்காது. ஓகேவா? எப்படியும் அவளைக் கூட்டிட்டுத்தான் போறோம்!

நாகராஜ் பலகீனமாகச் சிரித்தான். “சினிமா, சீரியல்லெல்லாம் வர்றாப்புல இது அவ்வளவு சுலபமில்லை, மேடம்! மாட்டிக்கிட்டோம்னா பெண்டு எடுத்துடுவாங்க. எனக்கு, உங்களுக்கு, உங்கப்பாவுக்குன்னு எல்லாருக்கும் பிரச்னை.

“இல்லண்ணா… அந்தப் பொண்ணு ரொம்பப் பாவம். ரொம்பப் பயந்த சுபாவம். என்னோட கூட்டிட்டுப் போவேன்னு ரொம்ப ஆசையா இருந்துது. விட்டுட்டு வந்ததும் அது கதறி அழுததைப் பார்த்தீங்கல்ல..? உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தா இப்படித்தான் தனியா விட்டுட்டு வருவீங்களா, சொல்லுங்க?

“நீங்க சொல்றது கரெக்டுதான் மேடம்! ஆனா, நிலமை சரியில்லையே?

“சரி, அப்ப ஒண்ணு பண்ணுங்க. ரெண்டு பேரை அழைச்சுட்டுப் போக முடியாதுன்னா, எனக்குப் பதிலா அவளை அழைச்சுக்கிட்டுப் போயிடுங்க. அப்பா கிட்ட நான் பேசிக்கறேன். அவர் எப்படியும் என்னை அழைச்சுக்க இப்ப மாதிரியே ஏதாச்சும் ஏற்பாடு பண்ணுவாரு. அப்ப நான் வந்துக்கறேன். என்ன சொல்றீங்க? என்றாள் கிருஷ்ணவேணி.

“சான்ஸே இல்லை மேடம்! உங்க ஆதார்ல உங்க போட்டோ, பேர் எல்லாம் இருக்கு. இதை வெச்சுதான் உங்களுக்கு மெடிக்கல் சர்ட்டிஃபிகேட்,  கவர்மென்ட் பர்மிஷன் எல்லாம் ரெடி பண்ணியிருக்காங்க. அந்தப் பொண்ணு மூஞ்சியையும் ஆதாரையும் செக் பண்ணினாங்கன்னா, ரெண்டும் வேற வேற ஆள்னு சுலபமா புரிஞ்சுடும். அப்புறம் ஆள்மாறாட்டம், அது இதுன்னு கிரிமினல் கேஸாயிடும். வம்பே வேணாம். நாம கிளம்புவோம். நேரமாக ஆக எனக்கு பக் பக்குனு இருக்கு, பிரச்னை இல்லாம உங்களை நான் பத்திரமா சென்னை கொண்டுபோய்ச் சேர்க்கணுமேன்னு! என்றபடி காரை ஸ்டார்ட் செய்தான் நாகராஜ்.

“தாமினி ரொம்பக் குழந்தைண்ணா! வயசுதான் 18. ஆனா, மெச்சூரிட்டி கிடையாது. ரொம்பப் பயப்படும். அவ்ளோ பெரிய இடத்துல அது எப்படித் தனியா இருக்கும், சொல்லுங்க? அழுது அழுது மூச்சு முட்டிச் செத்தே போயிடும். எனக்கு பயம்மா இருக்கு. ப்ளீஸ், எப்படியாச்சும் கொஞ்ச ஹெல்ப் பண்ணுங்கண்ணா! உங்களைக் கடவுளா நினைச்சுக் கேக்கறேன்” என்று அழுகை முட்டும் குரலில், கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டாள் கிருஷ்ணவேணி.

காரை மீண்டும் வேகம் குறைத்து, தலைக்கு மேல் இருந்த கண்ணாடியில் கிருஷ்ணவேணியைப் பார்த்துப் பேசினான் நாகராஜ்.

“ஒண்ணு வேணா பண்ணலாம் மேடம். உங்கப்பா கிட்ட இப்பவே பேசுங்க. உங்களுக்கு ஏற்பாடு பண்ணின மாதிரியே, அந்தப் பொண்ணுக்கும் எல்லா டாகுமென்ட்ஸும் உடனே ரெடி பண்ணி வைக்கச் சொல்லுங்க. நாம சென்னை போய்ச் சேர எப்படியும் ராத்திரி 12, 1 மணி ஆயிடும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, நானே மறுபடியும் நாளைக்குக் கிளம்பி வந்து, அந்தப் பொண்ணையும் அழைச்சுக்கிட்டு வந்துடறேன். அதுதான் இப்போதைக்குச் சாத்தியமான வழி!

கிருஷ்ணவேணிக்கும் அது சரியென்றே பட்டது. இன்றைக்கு ஒரு நாள்தானே… பல்லைக் கடித்துக்கொண்டு இருந்துவிட்டால், நாளை தாமினியை அழைத்துக் கொள்ளலாம். முதலில் தாமினிக்கு தைரியம் சொல்ல வேண்டும்.

கார் உறுமிக்கொண்டு வேகம் பிடித்துப் பறந்தது. அரசினர் கல்லூரியைக் கடந்து, கிருஷ்ணசாமி கோயிலைக் கடந்து, திருவல்லா நெடுஞ்சாலையில் சீறிப் பாய்ந்தது.

மொபைலில் மணி பார்த்தாள் கிருஷ்ணவேணி. மாலை 4. ஃபேவரிட் லிஸ்ட்டில் தாமினி பெயரைத் தேடி, ‘கால்’ செய்தாள்.

எதிர்முனையில் ரிங் போய்க்கொண்டிருந்தது... நெடுநேரம்!

(தொடரும்)

0 comments: