என் சின்ன வயதில், நகரத்து வசதிகள் எதுவும் இல்லாத குக்கிராமங்களில் வசித்தாலும், சுதந்திரப் பறவையாக ஓடியாடி வளர்ந்தேன். நுங்கு எடுக்கப்பட்ட பனம் பழத்தின் மையத்தில் து
ளையிட்டு, வளைந்து கொடுக்கும் சவுக்கங்குச்சியை அதில் சொருகி, புழுதி பறக்கும் தெருக்களில் வெறுங்காலோடு, அந்தப் பனை வண்டியைச் சரசரவென ஓட்டிச் செல்வதில் உள்ள ஆனந்தத்தை என் குழந்தைகள் அறிய மாட்டார்கள். எந்தத் தெருவில், யார் வீட்டுக்குள்ளும் ஓடிப் போய்ப் புகுந்துகொள்ளும் உரிமை இருந்த அன்றைய ‘கண்ணாமூச்சி ரே... ரே...’ விளையாட்டில் உள்ள சுகம் என் குழந்தைகளுக்குத் தெரியாது. கார்த்திகை மாசத்தில், கரியையும் உமியையும் கலந்து ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டி, அதை மூன்று கழிகளுக்கு நடுவில் வைத்து சுயமாக மாவலி தயாரித்து, நெருப்புப் பொறிகள் பறக்கக் ‘கார்த்தீ... கார்த்தீ...’ என்று அதை வேக வேகமாகச் சுற்றுவதில் உள்ள மகிழ்ச்சியை என் குழந்தைகள் அனுபவித்தது கிடையாது. பழைய சைக்கிளின் ரிம்மோ அல்லது டயரோ கிடைத்தால், ஒரு வழவழ குச்சியால் அதை விறுவிறுவென்று அடித்து ஓட்டி, வாயாலேயே ஹாரன் அடித்தபடி ஊரை வலம் வருவதில் உள்ள சந்தோஷம் இன்னதென்று என் குழந்தைகளுக்குத் தெரியாது. புளிய மரத்தடியில் குழி பறித்து, கோடு போட்டு, ‘ஐயப்பன் ஜொள்ளு, அறுமுக தாளம், எழுமா லிங்கம், எட்டண கோட்டை...’ என்று பாடியபடி சின்ன கோலிகள், நத்தை கோலிகளை வைத்துக்கொண்டு நண்பர்களோடு கோலியாடுவதில் இருக்கும் பரவசம் பற்றி என் குழந்தைகள் கேள்விப்பட்டதுகூடக் கிடையாது. ஒரு பையனைக் குனிந்து நிற்கச் சொல்லி, ஓடி வந்து அவன் முதுகில் கையை வைத்து எகிறித் தாண்டும் பச்சைக் குதிரை விளையாட்டை விளையாடி மகிழ்ந்ததில்லை என் குழந்தைகள். ‘இச்சா... ஈயா... காயா...’ என்று கேட்டுக்கொண்டே வானத்தை அண்ணாந்து பார்த்தபடி, ஓட்டாஞ்சில்லு வைத்து ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி ஆடும் பாண்டி ஆட்டம் என்றால் என்னவென்றே தெரியாது என் குழந்தைகளுக்கு. நீர்க் குட்டைக் கரையில் நின்றுகொண்டு, பானை ஓட்டுச் சில்லு ஒன்றை வாகாகத் தண்ணீரில் எறிந்து, அது நீண்ட தூரம் தத்தித் தத்திப் போய் மறுகரையில் தாவி ஏறும் சாகச சந்தோஷத்தை என் குழந்தைகள் அறிய மாட்டார்கள். தோப்பினுள் ஓடியாடி, மரங்களின் மேல் ஏறி விளையாடியதில்லை அவர்கள். பம்ப் செட் கிணற்றினுள் குதித்துக் கும்மாளம் இட்டதில்லை. மாட்டுப் பொங்கல் அன்று கிராமத்தில் உள்ள மாடுகள் அனைத்தும் கொம்புகளில் வர்ணம் பூசிக்கொண்டு, பலூன்களும், சலங்கைகளும் தரித்து, கன குஷியோடு தெருக்களில் சுதந்திரமாக ஜலங்... ஜலங்கென்று ஓடி வரும் காட்சியைபக் கண்டு மகிழ்ந்ததில்லை அவர்கள். மாவிலைகளாலும் கலர் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகள் தெருக்களில் வேக வேகமாக ஓட, அந்த வண்டிகளில் ஏறியுள்ள ஆண்கள், பெண்கள், குமரிகள், கிழவிகள், சிறுவர்கள், தாத்தாக்கள் எல்லாரும் ஏக காலத்தில் ஊரே ரெண்டுபடும்படி கத்திக் கும்மாளம் போட்டு, உற்சாகம் ததும்ப ரேக்ளா ரேஸ் நடத்திய கோலாகலத்தைப் பார்த்ததில்லை என் குழந்தைகள்.அவை மட்டுமல்ல; வீட்டு வாசலுக்கே வரும் பல சுவாரசியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை என் குழந்தைகள் அறிய மாட்டார்கள்.
மாதம் தவறாமல் ஒரு பாம்புப் பிடாரன் வருவான். வட்டமான இரண்டு மூன்று பிரம்புக் கூடைகள் வைத்திருப்பான். வாசலில் அமர்வான். ஒரு கூடையின் மூடியைத் திறப்பான். சுருண்டு படுத்திருக்கும் நாகத்தைக் கிண்டி எழுப்புவான். மகுடி ஊதுவான். அது கடமையே கண்ணாக ஓரடி உயரத்துக்கு
எழுந்து, நிமிர்ந்து இப்படியும் அப்படியும் பார்க்கும். கொஞ்ச நேரம் அவன் மகுடி இசையைக் கேட்டு ரசித்துவிட்டு, அம்மா கொடுத்தனுப்பும் அரிசியைக் கொண்டு போய் அவன் பிரித்துக் காட்டும் துணி மூட்டைக்குள் கொட்டுவேன். இன்னொரு கூடையையும் திறந்து காட்டச் சொல்வேன். அவன் பிகு செய்துகொண்டு, இன்னும் கொஞ்சம் அரிசி போட்டால்தான் திறந்து காட்டுவேன் என்பான். ஓடிப் போய் என் இரண்டு கைகளிலும் கொஞ்சம் அரிசி அள்ளி வந்து போடுவேன். அவன் அந்த மற்றொரு கூடையைத் திறந்து காட்டுவான். அதனுள் ஒரு பாம்பு மூச்சு விட்டுக்கொண்டு படுத்திருப்பது, அதன் ஏறித் தாழும் உடலசைவிலிருந்து தெரியும்.ஒரு முறை, ஒரு வீட்டார் தங்கள் குழந்தைக்குக் காதில் சீழ் வடிகிறது என்று சொல்லி, அந்தக் குழந்தையைப் பாம்புப் பிடாரன் முன் உட்கார வைத்தார்கள். பிடாரன் ஒரு பாம்பின் வாலைப் பிடித்து அந்தக் குழந்தையின் காதுக்குள் விட்டான். குழந்தை பயத்தில் அழுதது. இரண்டு மூன்று முறை அவன் இப்படிச் செய்துவிட்டு, “இனிமே சீழ் வடியாது” என்று உறுதியளித்தான். அவர்கள் அவனுக்குப் பைசா கொடுத்தார்கள்.
பிடாரன் தவிர, பூம்பூம் மாட்டுக்காரர்கள் வருவார்கள். அந்த மாடு ராஜஸ்தான் பாணியில் ஜரிகை வேலைப்பாடுள்ள உடை அணிந்திருக்கும். தான் வைத்திருக்கும் வித்தியாசமான உறுமி மேளத்தில் ‘விர்ரும்.. விர்ரும்..’ என்று தேய்த்து அடித்தபடியே என்னைப் பார்த்து, “இந்தத் தம்பி ரொம்பத் தங்கமான தம்பியா?” என்று அந்த மாட்டிடம் விசாரிப்பான் அவன். அது உடனே தலையை பலமாக ஆ
ட்டும். எனக்குச் சந்தோஷம் சொல்லி மாளாது. குஷியாக ஓடிப் போய் அரிசி எடுத்து வந்து போடுவேன். பழைய சட்டை, டிராயர் ஏதாவது இருந்தால் கொடுக்கச் சொல்லிக் கேட்பான். இருந்தால் அம்மா எடுத்துத் தருவார். கொண்டு வந்து கொடுப்பேன். “சட்டை கொடுத்த இந்தத் தம்பிக்கு ஒரு வணக்கம் சொல்லு!” என்பான். அதற்கும் அந்த மாடு தலையை ஆட்டும். கும்பிட்டுவிட்டு, மாட்டை ஓட்டிச் செல்வான். அன்று பூராவும் மனசு சந்தோஷமாக இருக்கும் எனக்கு.குடுகுடுப்பைக்காரன் வந்தால் கொஞ்சம் பயப்படுவேன். கலர் கலராக ஏகப்பட்ட துணிகளை வாரி மேலே போட்டுக்கொண்டு, தலையில் கறுப்புத் துணியில் பெரிய முண்டாசு கட்டிக்கொண்டு, தாடியும் மீசையுமாக இருக்கும் அவன் தோற்றமே என்னைக் கலவரப்படுத்தும். போதாக் குறைக்கு அவன் கையிலுள்ள குடுகுடுப்பை ‘ரொய்யூ... ரொய்யூ... ரொய்யூ... ரொய்ய்ய்...’ என்று காது ஜவ்வு கிழியும்படிச் சத்தமிடும். “நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... இந்த ஊட்டுக்குப் புது விருந்தாடி ஒருத்தரு வரப் போறாரு... விருந்தாடி வரப் போறாரு. அவரால இந்த ஊட்டுக்கு நல்லது நடக்கப் போவுது... நல்லது நடக்கப் போவுது... ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா...” என்று நாலு நல்ல வார்த்தைகள் சொல்வான். கேட்டுவிட்டு, அரிசி கொண்டு வந்து போடுவேன். வாங்கிக்கொண்டு அடுத்த வீட்டை நோக்கிப் போய்விடுவான். இங்கே பயந்துகொண்டு இருந்த நான் அவன் பின்னாலேயே போய், அந்த வீட்டில் மட்டும் ஏனோ தைரியமாக நின்று, அவனை வைத்த கண் வாங்காமல் பார்ப்பேன்.
குரங்காட்டி வந்தால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். சமர்த்தாகச் சட்டை அணிந்த ஒரு குரங்கைப் பார்ப்பதே எங்களுக்கு அத்தனைக் குஷியாக இருக்கும். அதன் முன் ஒரு கழியைக் காட்டி, லங்கை தாண்டச் சொல்வான்; அதுவும் தாண்டும். அதன் கையில் ஒரு அலுமினியத் தட்டைக் கொடுத்து, ‘ஆயாவுக்குக் கூழ் கொண்டு போ’ என்பான். அது அந்தத் தட்டைக் கர்ம சிரத்தையாய்த் தலை மீது வைத்துக்கொண்டு, வட்டமாக ஒரு முறை சுற்றி நடந்து வரும். ‘மாமியார் வேலை சொன்னா என்ன பண்ணுவே நீ?’
என்று கேட்பான். அந்தக் குரங்கு உடனே தரையில் படுத்துக்கொண்டு இறுகக் கண்களை மூடிக் கொள்ளும். எங்களுக்கு அதன் சேஷ்டைகள் வெகு தமாஷாக இருக்கும். பக்கத்து பங்க் கடையில் ஓடிப் போய் வாழைப்பழம் வாங்கி வந்து நேரடியாகக் குரங்கு கையில் கொடுப்பேன். அது வாங்கி, ‘என்ன, சாப்பிடலாமா?’ என்பது போல் எஜமானனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, உத்தரவு கிடைத்ததும் தோலை வெகு அழகாக உரித்துச் சாப்பிடும். குரங்காட்டிக்கு அரிசி மட்டும் போட்டால் போதாது; கையில் ஐந்து பைசாவோ, பத்து பைசாவோ தர வேண்டும். வாங்கிக் கொண்டு, ‘காசு கொடுத்த தம்பிக்கு ஷேக்கண்ட் கொடு!’ என்பான். பயத்துடன் கையை நீட்டுவேன். அந்தக் குரங்கு என் கையைப் பற்றிக் குலுக்கும். வாழைப்பூ மடல்களைத் தொட்டது மாதிரி இருக்கும் அதன் விரல்கள்.மகாராஜாவின் அடியாள் மாதிரி முண்டாசும், பெரிய மீசையும், கரிய நிற வெற்று உடம்பும், சிவப்பு நிறத்தில் விநோதமான கீழ்ப்பாய்ச்சு வேட்டியும் அணிந்து முரட்டுத்தனமான தோற்றத்தில் ஒருவன் வருவான். அவன் கையில் பெரிய, நீளமான சவுக்கு இருக்கும். துண்டுத் துணிகளைப் பிரிப் பிரியாகச் சுற்றித் தயாரிக்கப்பட்ட அந்தச் சவுக்கு, கைப்பிடியில் தடியாகவும் போகப் போகச் சிறுத்துக்கொண்டே சென்று, நுனியில் மெல்லியதாகவும் இருக்கும். அவன் இப்படி ஓடி, அப்படிக் குதித்துச் சுழன்று ஒரு சுற்றுச் சுற்றி, கையில் இருக்கும் அந்தச் சவுக்கை ஒரு விளாசு விளாசுவான். அது மின்னல் போல் வளைந்து சுழன்று ‘பட்டீர்...’ என்ற ஒரு மகா சத்தத்துடன் அவன் முதுகில் இறங்கும். அவன் முதுகில் ஏற்கெனவே சவுக்கடி பட்ட ரத்தத் தடங்கள் இருக்கும். அவனோடு வந்த பெண்மணி பாத்திரமேந்தி எங்களிடம் வருவாள். அரிசியோ, பைசாவோ போடுவோம். தெருவெல்லாம் ‘பட்டீர்... பட்டீர்...’ சத்தம் ஒலித்துக்கொண்டே போகும்.
நான் வெகுவாகப் பயந்தது புலிவேஷக்காரனிடம்தான். தனியொரு புலி வந்து நான் பார்த்ததில்லை. எப்போதுமே இரண்டு புலிக் கலைஞர்களும், கூட இன்னொரு ஆளுமாகத்தான் வருவார்கள். புலிகளின் வால் அபாரமாக வளைந்து நிற்கும். அசல் புலிக்குண்டான வளைவு நெளிவோடு அந்த மனிதப் புலிகள் இரண்டும் நடை
போடுவது நிஜப் புலியையே கிட்டத்தில் பார்த்ததுபோல் த்ரில்லாக இருக்கும். நான் பாதுகாப்பாக என் அப்பா பின்னால் நின்றுகொண்டுதான் புலிக் கலைஞர்களின் ஆட்டத்தைப் பார்ப்பேன். ஒரு பெண் மேளம் அடித்து, நிகழ்ச்சிக்குப் பின்னணி சேர்த்துக்கொண்டு இருக்க, இரண்டு புலிகளுக்கும் சண்டை நடக்கும். அந்தத் தனி ஆள் மீது பாயும். பார்க்கப் பயமாக இருக்குமே தவிர, எட்டத்தில் நின்று எட்டி எட்டிப் பார்க்கும் ஆவல் என்னுள் கிளைக்கும். இந்தப் புலிக்கலைஞனின் வறுமை வாழ்க்கையை மையமாக வைத்து அசோகமித்திரன் ‘புலிக் கலைஞன்’ என்னும் தலைப்பிலேயே ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அருமையான கதை!என் குழந்தைகளுக்கு இத்தகைய சந்தோஷ அனுபவங்கள் எதுவுமே கிடையாது என்பதை நினைக்க நினைக்க வருத்தமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள், “எப்படிப்பா இந்தப் பாட்டைப் போய் நீ இப்படி ரசிக்கிறே?!” என்று என்னை ஆச்சரியமாய்க் கேட்கிறார்கள்.
அந்தப் பாட்டு... ‘தட்டான் தட்டான் தண்ணிக்குள்ளே... தவளை ரெண்டும் பொந்துக்குள்ளே... சூ சூ மாரி..!’
.






.jpg)

