உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, October 13, 2009

என் தம்பி ரமேஷ்வைத்யா!

ன் மனதுக்கு உகந்தவர்களிடமே, எனக்கு மிகவும் விருப்பமானவர்களிடமே இரக்கத்தைக் கைவிட்டுக் கொஞ்சம் கெடுபிடியாக நடந்துகொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை எனக்குப் பலமுறை உண்டாகியிருக்கிறது. ஒரு சமயம், சகோதரி கேட்ட கேள்விக்கு ஒழுங்காக பதில் சொல்லவில்லையென்று என் தம்பி மீது கடுங்கோபம் கொண்டு, மூன்று வருட காலத்துக்கு அவனோடு பேசாமல் ஒரே வீட்டில் இருந்திருக்கிறேன். பின்னொரு சமயம், என் மாமா மகனைக் கடிந்துகொண்டாள் என்று அதே சகோதரியிடம் கோபித்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறேன். சகோதர, சகோதரிகளிடம் மட்டுமல்ல; இதர உறவினர்கள், நண்பர்கள் சிலரிடம்கூட இப்படிக் கடுமையாக நான் நடந்துகொண்டு இருக்கிறேன். பின்னர் அது குறித்து வருந்தியும் இருக்கிறேன். வருத்தம் நான் அப்படிக் கடுமையுடன் நடந்துகொண்டதற்காக அல்ல; அந்த நிலைமைக்கு அவர்கள் என்னை ஆளாக்கிவிட்டார்களே என்பதற்காக!

அந்த வகையில் நண்பர் ரமேஷ் வைத்யா பற்றியும் எனக்கு வருத்தம் உண்டு. நண்பர் என்று குறிப்பிட்டுள்ளேனே தவிர, அவர் என்னைத் தன் மூத்த அண்ணனாகத்தான் மதித்தார். ரவி அண்ணே என்றுதான் அழைப்பார். ஆரம்பத்தில் அவர் பெயரை வைத்து அவர் மோகன் வைத்யா, ராஜேஷ் வைத்யா சகோதரர்களின் கடைசித் தம்பியோ என்று நான் நினைத்ததுண்டு. தன்வந்திரி என்கிற மருத்துவப் பத்திரிகையில் அவர் முன்பு பணியாற்றியதால், தன் பெயரோடு ‘வைத்யா’ ஒட்டிக்கொண்டுவிட்டது என்று பின்பு அவர் விளக்கினார்.

மிகச் சிறந்த படைப்பாளி; அறிவாளி; கவிஞர்; கதாசிரியர்; எழுத்தாளர்; நல்ல திறமை உள்ளவர். பழகுவதில் இனியவர். ஆனால், ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போல், அவரிடம் இருந்த அத்தனைத் திறமைகளையும் குடிப் பழக்கம் பாழாக்கிவிட்டது. அதில் எனக்குத் தீராத வருத்தம்.

அவர் தன் பெற்றோருடனோ, சகோதரருடனோ கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உடனடியாக வாடகைக்குப் புது வீடு பார்த்துக்கொண்டிருந்த நேரம்... சாலிகிராமத்தில் என் ஃப்ளாட் காலியாக இருப்பதை அறிந்து என்னை அணுகினார். சக பணியாளர், இனிய நண்பர் என்பதால், அவரது குடிப் பழக்கம் பற்றித் தெரிந்திருந்தும், அவருக்கு அந்த இடத்தை வாடகைக்குக் கொடுக்கச் சம்மதித்தேன். பல குடித்தனங்கள் மத்தியில் உள்ள ஃப்ளாட் என்பதால், அப்படியாவது அவர் தன் குடியைக் குறைத்துக் கொள்வார் என்கிற நப்பாசையும் உண்டு.

இடத்தை வந்து பார்த்தார். புது ஃப்ளாட். வாங்கிய ஆசைக்கு நான் அதில் ஒரு மூன்று மாத காலம் மட்டும் வசித்துவிட்டு, பின்பு குழந்தைகளின் பள்ளிக்கூட வசதியை முன்னிட்டு, நான் முன்பு வாடகைக்குக் குடியிருந்த அதே அசோக் நகர் வீட்டுக்கே மீண்டும் குடிவந்துவிட்டேன். பின்னர் ஓரிரு மாதங்கள் என் ஃப்ளாட் பூட்டியே கிடந்தது. அந்த நிலையில்தான் ரமேஷ் வைத்யா அந்த இடத்தை வந்து பார்த்தார். “எனக்கு இது பெரிய வசந்த மாளிகை மாதிரி இருக்கிறதே... வாடகை என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்றார். எனக்கு வீட்டு ஓனர் போன்றெல்லாம் வாடகை பேசிப் பழக்கமில்லை. அதுவும் ரமேஷ் வைத்யாவிடம் இன்னது கொடுங்கள் என்று கேட்க விருப்பமில்லை. எனவே, “உங்கள் இஷ்டம்தான். என்ன கொடுக்கிறீர்களோ, கொடுங்கள்!” என்றேன்.

“தாராளமாக இதற்கு 4,000 ரூபாய் வாடகை தரலாம். ஆனால், என்னால் அவ்வளவு தர முடியாதே!” என்றார். “பரவாயில்லை. உங்களுக்கு விருப்பமானதை, உங்களால் முடிவதைக் கொடுங்கள்” என்றேன். தயங்கிக்கொண்டே, “2,500 பரவாயில்லையா? என்னால நீங்க நஷ்டப்படக் கூடாது!” என்றார். “மூன்று மாதம் பூட்டியே வைத்திருந்தேனே! அது நஷ்டமில்லையா? தவிர, லாப நஷ்டம் பார்க்க நான் வியாபாரியல்ல! நீங்கள் உடனே குடி வாருங்கள். இங்கே வந்த பிறகு, நீங்கள் இன்னும் பல சினிமா வாய்ப்புகள் பெற்று, மேல் நிலைக்குச் செல்ல வேண்டும். (நீ வருவாய் என என்றொரு படத்தில் அவரின் முதல் திரைப்பாடல் வெளியாகியிருந்த நேரம் அது.) அதுதான் என் ஆசை! சடையப்ப வள்ளல் போன்று நான் பெரும் பணக்காரன் இல்லை; என்றாலும், கம்பருக்கு அவன் உதவியது போன்று உங்களுக்கு என்னால் உதவ முடிந்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன்” என்றேன்.

ரமேஷ் வைத்யா தன் மனைவி மற்றும் தாயாருடன் அங்கே குடி வந்தார். ஆனால், நான் எதிர்பார்த்தது போல், அவரின் குடிப் பழக்கம் மட்டுப்படவில்லை. இன்னும் அதிகமாகியிருப்பது தெரிந்தது. அக்கம்பக்கத்துக் குடித்தனக்காரர்களிடமிருந்து அவரைப் பற்றிய புகார்கள் எனக்கு வந்தன. ஒரே அலுவலகத்தில் வேலை செய்தாலும், நேரே அது பற்றி அவரைக் கேட்கச் சங்கடப்பட்டு, இ-மெயில் அனுப்பினேன். “ஒரு வீட்டுக்காரன் சொல்வதாக இதை எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு நண்பர் அல்லது நீங்களே சொல்வது போன்று ஒரு சகோதரர் சொல்கிற அறிவுரையாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை நான் சகித்துக் கொள்ள முடியும். ஆனால், மற்ற குடித்தனக்காரர்கள் உங்கள் செயலால் பாதிக்கப்பட்டால், அதற்கு நானல்லவா பொறுப்பு? இதுவே முதலும் கடைசியுமாய் இருக்கட்டும். மீண்டும் ஒருமுறை உங்கள் மீது புகார் வருமானால், தாட்சண்யமின்றி உங்களை வெளியேற்ற வேண்டி வரும்” என்று எச்சரித்தேன்.

அதன்பின் சில மாதங்கள், சில வருடங்கள் கடந்தன. ஒரு நடு இரவில் அவர் எனக்குப் போன் செய்து, (நடு இரவில் ரமேஷ் வைத்யாவிடமிருந்து போன்கால் என்றால், அவர் நல்ல சுதியில் இருக்கிறார் என்று பொருள்.) “ரவிண்ணே! எனக்கு உங்க மேல கோபம்! உங்களை நான் வெறுக்கிறேன். நீ பைத்தியக்காரன். உலகம் தெரியாத கம்மினாட்டி!” என்று ஏதேதோ பேசினார். பொறுமையாகக் கேட்டுக் கொண்டு, “சொல்லுங்க ரமேஷ்! அதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே? இப்ப எதுக்காகப் போன் பண்ணீங்க?” என்றேன். “உன்ன மாதிரி முட்டாள் இருப்பானாடா உலகத்துல? உன் ஃப்ளாட்டை வெளியில வாடகைக்கு விட்டா, எவ்வளவு வரும்னு உனக்குத் தெரியுமா?” என்றார். “தெரியலை! நீங்களே சொல்லுங்க!” என்றேன். “பைத்தியக்காரா, பைத்தியக்காரா! 6,000 ரூபாய், 7,000 ரூபாய்க்குப் போகும். நானும் இங்கே வந்ததுலேர்ந்து வெறும் 2,500-தான் கொடுத்திட்டிருக்கேன். நீயும் பேசாம அதை வாங்கிட்டிருக்கே! நீயெல்லாம் எப்படித்தான் பொழைக்கப் போறியோ?” என்றார்.

“சரி! இப்ப அதுக்கு என்ன? நாளைக்கு அது பத்திப் பேசி ஒரு முடிவெடுப்போம். படுத்துத் தூங்குங்க” என்றேன். “வர மாசத்துலேர்ந்து ஆயிரம் ரூபாய் சேர்த்து 3,500 ரூபாயா கொடுக்கப் போறேன். வாங்க மாட்டேன், வேண்டாம் அது இதுன்னா ஆள் வெச்சு உதைப்பேன்!” என்றார்.

குடிகாரன் பேச்சு, விடிஞ்சாப் போச்சு என்பார்கள். ஆனால், ரமேஷ் வைத்யா பத்துப் பன்னிரண்டு நாள் கழித்து, முதல் தேதியன்று ஞாபகமாய் ரூ.3,500-க்கு செக் தந்தார். நானாக அவரை வாடகை கேட்டதில்லை. சில சமயம் முதல் தேதியன்று வாடகை கொடுக்க மறந்துபோய், பத்துப் பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகே அவருக்கு ஞாபகம் வந்தால், பதறிப் போய்விடுவார். “என்ன ரவி சார், ஞாபகப்படுத்தக் கூடாதா? ஐயோ, ஸாரி!” என்று அடுத்த மாச வாடகையையும் சேர்த்துச் செக் எழுதுவார். எல்லாம் சரி..!

ஆனால்... போன வருட ஆரம்பத்தில் அவர் மீது மீண்டும் புகார்கள். நான் ரமேஷ் வைத்யாவுக்கு வீட்டை வாடகைக்கு விட்டபின்பு ஐந்தாறு வருடங்கள் அந்தப் பக்கமே போகவில்லை. ஏதோ வீட்டு ஓனர் தன் வீட்டைக் குடித்தனக்காரர் எப்படி வைத்திருக்கிறார் என்று பார்வையிடப் போவது போன்று நெருடலாக இருந்ததாலேயே போவதைத் தவிர்த்து வந்தேன். எனினும், இம்முறை அவர் மீது மற்ற குடித்தனக்காரர்கள் வைத்த புகார்கள் சற்றுக் கடுமையாக இருந்ததால், போனேன். நேரிலேயே புலம்பினார்கள். சிலர் என்னைக் கண்டிக்கவும் செய்தார்கள்.

மறுநாள், அலுவலகம் வந்ததும் ரமேஷ் வைத்யாவை அழைத்தேன். “மன்னித்துக் கொள்ளுங்கள் ரமேஷ்! எனக்கு வேறு வழியில்லை. வருகிற முதல் தேதியன்று வீட்டை நீங்கள் காலி செய்து கொடுக்க வேண்டும்” என்றேன். முதல் தேதிக்குப் பதினைந்து நாள்தான் இருந்தது.

அவர் இதை எதிர்பார்க்கவில்லை. எனினும், “சரி” என்றார். காரணம் கேட்கவில்லை. நானாகத்தான் சொன்னேன்... “என் தங்கை வீட்டில் தற்போது வசிக்கும் என் பெற்றோருக்கு அங்கே சரிப்படவில்லை. உடனடியாக அவர்கள் அங்கிருந்து காலி செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களுக்கும் என் தம்பிக்குமாக ஓர் இடம் அவசரமாகத் தேவைப்படுகிறது. எனவேதான் தங்களை நெருக்குகிறேன்!”

அவரை காலி செய்யச் சொன்னதற்கான காரணம் வேறாக இருந்தாலும், நான் அவருக்குச் சொன்ன காரணமும் பொய்யில்லை.

முதல் தேதி வந்தது. ரமேஷ் வைத்யா வீட்டைக் காலி செய்யவில்லை.

(அடுத்த பதிவில் தொடர்கிறேன்...)
.

0 comments: