உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Monday, October 26, 2009

நட்புக்கு மரியாதை!

‘ஆசிரியர்கள் தினம்’ முடிந்து ரொம்ப நாள் கழித்துதான் முழித்துக்கொண்டு என் ஆசிரியர்கள் பற்றிய பதிவை எழுதினேன். அதே போல், ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று ‘நட்பு தினம்’; அன்றைக்கு என் நண்பர்களைப் பற்றி எழுதியிருக்கலாம். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, சாவகாசமாக இன்றைக்கு எழுதுகிறேன்.

‘நட்புக்கு மரியாதை இவ்வளவுதானா?’ என்று சிலர் முகம் சுளிக்கலாம். நியாயம்தான்! நட்பு என்றில்லை, பலரோடு கலந்து பழகுவதென்பது ஒரு கலை. அது எனக்குக் கை வரவே இல்லை. அபூர்வமாக வரக்கூடிய நெருங்கிய உறவினர் யாரேனும் வந்து ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார். எனக்கு உடனே எழுந்து போய், “அடடே! வாங்க, எப்ப வந்தீங்க? வீட்ல எல்லாரும் சௌக்கியமா? பேரனுக்குக் காது குத்தியாச்சு இல்லே? அத்தை, அம்மா எல்லாம் சொல்றானா? உங்க பெரிய பையன் இப்ப குவைத்லதானே இருக்கான்? அடிக்கடி போன்ல பேசிக்கிட்டிருக்கானா?” என்றெல்லாம் கலகலப்பாகப் பேசி, விசாரிக்கத் தோன்றுவதே இல்லை. விசாரிப்பது இருக்கட்டும், எழுந்து போகவே தோன்றாது. நான் அறைக்குள் என் வேலையைப் பார்த்துக்கொண்டு சிவனே என்றிருப்பேன்.

என் மனைவி இதில் கெட்டிக்காரி. எப்போதோ ஒருமுறை பார்த்துப் பேசியவர்களையும் ஞாபகம் வைத்துக்கொண்டு, “வாங்க, நல்லாருக்கீங்களா? அப்பா, அம்மாவை இங்கேயே வளசரவாக்கம் வீட்டுக்கு உங்களோடயே கூட்டிட்டு வந்து வெச்சுக்கப் போறேன்னு சொன்னீங்களே, இப்ப அவங்க உங்களோடதான் இருக்காங்களா? பெரியவன் இப்போ நாலாவது படிக்கிறானா? குட்டியா பார்த்தது!” என்று அடித்து விளாசுவாள். எனக்கே அதில் பல விஷயங்கள் புதுசாக இருக்கும்.

சின்ன வயதிலிருந்தே நான் ரொம்ப ரிசர்வ்ட் டைப். புதுசாக ஒருத்தரிடம் போய் மணி கேட்கவேண்டுமென்றாலும்கூடக் கேட்க மாட்டேன். பத்திரிகைத் துறைக்கு வந்த பின்பு எவ்வளவோ மாறியிருக்கிறேன், என்னை நானே மாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றாலும், ஆண்டாண்டு காலமாக உடம்பில் ஊறி வந்த பழைய புத்தி போகுமா?

சரி, நட்புக்கு வருகிறேன். நட்புக்காகவே திருவள்ளுவர் நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களில் 50 குறள்கள் எழுதியிருக்கிறார். பொதுவாக, ஒருவன் கஷ்டத்தில் இருக்கும்போது ஓடி வந்து உதவுவதுதான் நட்புக்கு இலக்கணம்; அப்படி உதவாதவர் நண்பரே இல்லை; அத்தகையோரின் நட்பைக் கொள்ளாதிருப்பதே நல்லது என்று சொல்கிறார்.

வள்ளுவரை விமர்சிக்க எனக்கு வயசு பத்தாது! ஆனால், அவர் சொல்கிற இலக்கணத்தில் என் நண்பர்களைத் தேர்ந்தெடுக்க நான் விரும்பவில்லை. என் மனசுக்குப் பிடித்தமானவர்கள், என் அலைவரிசையோடு ஒத்துப் போகின்றவர்கள் அனைவரையுமே நான் என் மனத்துக்குள் நண்பர்களாக வரித்துக் கொள்கிறேன். அவர்கள் எனக்கு ஓடி வந்து உதவி செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி! ‘கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பது ஓர்கோல்’ என்று வள்ளுவர் சொல்லுவது போல அதை ஓர் அளவுகோலாக வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அதே போல, என் நண்பர்கள் என்று என் மனத்தில் நான் வரித்திருப்பவர்களுக்கு ஒரு கஷ்டம் வந்தால், என் சக்திக்குட்பட்டும், சூழ்நிலைக்குட்பட்டும் அவர்களுக்கு என்னால் என்ன நல்லது செய்ய முடியுமோ அதைக் கண்டிப்பாகச் செய்வேன். மற்றபடி, அவர்களுக்காகப் பெரிய தியாகம் எதையும் என்னால் செய்ய இயலாது.

பொதுவாக, அப்போதைக்கு அலுவலகத்தில் சக பணியாளர்களாக இருப்பவர்கள்தான் பெரும்பாலும் நண்பர்களாக இருக்கிறார்கள். முன்னே எப்போதோ என்னுடன் படித்த நெருங்கிய நண்பர்கள் பலருடன் தொடர்பே விட்டுப் போய்விட்டது. அந்த வகையில், இன்றைய தேதியில் நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ள எனக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று, நேற்றைக்கு(ம்) மூட்டைக்கடியில் தூக்கம் வராமல் விடிய விடியப் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தபோது யோசித்துக் கொண்டு இருந்தேன். தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், ஓரிரு நாட்கள் மட்டுமே சந்தித்தவர்கள், உறவினர்கள் என யாரையும் இந்த லிஸ்ட்டில் சேர்க்காமல், எனக்கு ஏதாவது ஒரு கஷ்டம் என்றால், ‘ஐயோ, பாவமே! அவனுக்கா இந்த கதி!’ என்று மனசுக்குள் உண்மையாகவே ஒரு கணம் நினைப்பவர்களைப் பட்டியல் இட்டுள்ளேன்.

இந்தப் பட்டியலில், எனக்குக் கஷ்டம் வந்த காலத்தில் மிகப் பெரிய அளவில் பண உதவி செய்தவர்களும் இருக்கிறார்கள். உதவி செய்ய மனம் இருந்தும், இயலாமை காரணமாக உதவாதவர்களும் இருக்கிறார்கள். ஆதரவாகப் பேசி தைரியம் சொன்னவர்களும் இருக்கிறார்கள். எந்தவித ரியாக்‌ஷனும் காட்டாதவர்களும் இருக்கிறார்கள். மேலே சொன்ன நான்கு வகைகளில் எந்த ஒரு வகையிலும் சேர்ப்பதற்குரிய சமய சந்தர்ப்பம் அமையாதவர்களும் இருக்கிறார்கள்.

மார்க்கபந்து: இவரைப் பற்றித் தனியே ஒரு பதிவே எழுதியிருக்கிறேன். ஒரு வாசகராக, ஆனந்த விகடனில் வெளியான என் சிறுகதையை விமர்சித்துக் கடிதம் எழுதிய காலத்திலிருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிற நட்பு. இன்றைக்கு நான் இத்தனை உயர் நிலையில் இருப்பதற்கு முதல் காரணம் இவர்தான். என் வளர்ச்சியில் ஆத்மார்த்தமாக மகிழ்ச்சி கொள்கிற ஆத்மா. இப்போது என்னைவிட என் தந்தையாருடன்தான் அதிக நட்பு பாராட்டிக் கொண்டு இருக்கிறார்.

புஷ்பாதங்கதுரை: பெருமதிப்புக்குரிய சாவி சாரிடம் என்னை அறிமுகப்படுத்தி, அவரின் பத்திரிகையில் என்னைச் சேர்த்துவிட்டவர். சுமார் 25 ஆண்டுகளாக என் மீது பரிவும் பாசமும் கொண்டு இருக்கிறார். நான் கதைகள் எழுதத் தொடங்கிய புதிதில், ஒரே நேரத்தில் 13 பத்திரிகைகளில் இவரின் தொடர்கதைகள் வெளிவந்துகொண்டு இருந்ததைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன்.

ஹரன்: இப்போது விகடனில் கார்ட்டூன், இரண்டு பக்க மெகா ஜோக் போட்டிக்கான படம் மற்றும் பல படங்களை வரைந்துகொண்டு இருப்பவர். சாவி காலத்திலிருந்து என் நண்பர். என்னைப் போலவே மிகவும் ரிசர்வ்ட் டைப். அந்தக் காலத்தில் ‘எட்டுக்குப் போட்டி’ என்று சாவியில் வரைந்து என்னைப் பிரமிக்க வைத்தவர். அதுதான் இன்றைக்கு விகடனில் உருமாறி மெகா ஜோக் போட்டியாகியிருக்கிறது. இவரின் கார்ட்டூன் படங்கள் ஆங்கில கார்ட்டூனிஸ்ட் மேதைகளின் படங்களுக்கொப்பான நவீன அழகுடன் விளங்கும். பற்றற்ற ஒரு ஞானி போன்ற மனமும் குணமும் உள்ளவர். திடுமென்று ஒருமுறை விகடனில் அசத்தலாக ஒரு சிறுகதை வேறு எழுதி என்னை ஆச்சரியப்படுத்திவிட்டார்.

மதிக்குமார்: தினமணி நாளேட்டின் கார்ட்டூனிஸ்ட். ஆரம்பத்தில் இவர் மக்கள் குரலில் வரைந்துகொண்டு இருந்த சமயத்தில், சாவியில் வந்து என்னைச் சந்தித்தார். இவரது கார்ட்டூன்களைப் பார்த்துப் பிரமித்துப் போனேன். ஆசிரியர் சாவியிடம் அறிமுகப்படுத்தினேன். திறமைசாலிகள் எங்கே இருந்தாலும் அள்ளிக் கொள்பவர்தானே சாவி? ஹரனுக்குப் பிறகு, மதியின் கார்ட்டூன்கள் சாவியில் வெளியாகத் தொடங்கின. எப்படித்தான் அவர் மூளையில் உதிக்குமோ, சாவியிடம் கார்ட்டூன் ஐடியாக்களாக வந்து கொட்டுவார். எதை எடுப்பது, எதை விடுவது என்று ஆசிரியர் சாவி திணறிப் போவார். ஒருமுறை இவர் காண்பித்த எட்டு கார்ட்டூன்களையுமே விட மனசு வராமல் சாவியில் எட்டுப் பக்கங்களுக்கு வெளியிட்டுவிட்டோம்.

பாக்கியம் ராமசாமி:
இவரது அப்புசாமி கதைகளுக்கு என் அப்பா அந்தக் காலத்தில் பயங்கர விசிறி. அப்பா சொல்லி, குமுதத்தில் வெளியான ‘அப்புசாமியின் ஆயிரத்தொரு இரவுகள்’ தொடர்கதையைப் படித்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அப்புசாமி-சீதாப்பாட்டி கதைகள் காமிக்ஸ் புத்தகமாக வெளியானபோதும் வாங்கிப் படித்திருக்கிறேன். இவரை நேரில் சந்தித்து இவரின் அன்புக்குப் பாத்திரமாவேன் என்று கனவிலும் கருதியதில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக என்பால் அன்பு செலுத்தி வருபவர். இவரோடு பேசிக்கொண்டு இருந்தால் நேரம் போவதே தெரியாது.

அனுராதாசேகர்: சாவியில் எனக்கு உதவியாளர்களாக வந்து சேர்ந்தவர்களில் இன்றளவும் அதே தோழமையோடு பழகிக்கொண்டிருப்பவர். உரிமையோடு என் குறைகளை எடுத்துச் சொல்வார். ‘எவ்வளவு சொன்னாலும் நீங்க திருந்த மாட்டிங்க. உங்க வீட்டுக்கு வந்து உஷா கிட்டே உங்களைப் பத்திப் போட்டுக் கொடுக்கிறேன்’ என்று போலியாக மிரட்டுவார். மங்கையர் மலர் பத்திரிகையின் பொறுப்பாசிரியையாக இருக்கிறார்.

அனுராதாரமணன்: அறிமுகமே தேவையில்லை. அற்புதமான எழுத்தாளர். ஒரு ‘சிறை’ கதை மூலம் ஒட்டுமொத்த தமிழ் வாசகர்களின் மனங்களையும் சிறைப்பிடித்தவர். சாவியில் இவரது தொடர்கதையைக் கேட்டு வாங்கிப் பிரசுரித்திருக்கிறேன். ஆனாலும், அப்போது இவருடன் அதிகம் பழக்கமில்லை. விகடனுக்கு வந்த பிறகுதான் இவரின் நட்பு கிடைத்தது. போனில் தொடர்பு கொண்டு பேசினால், இரண்டு மணி நேரத்துக்கும் குறையாமல் பேசுவார். தான் பெரிய எழுத்தாளர் என்கிற பந்தா ஒரு சிறிதும் இல்லாதவர். இவர் என்னோடு பேசுவதற்குக் காரணமே தேவையில்லை. வீட்டில் வத்தக்குழம்பு செய்வதில் தொடங்கி, வெளிநாட்டிலிருந்து பேரன் வந்திருப்பது, உடம்பு சரியில்லாமல் சில நாட்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தது என எது பற்றி வேண்டுமானாலும் பேசுவார். கலகலப்பும் சுறுசுறுப்பும் நிறைந்த பெண்மணி. மனம் சோர்ந்திருக்கும் வேளையில் இவரோடு போனில் தொடர்பு கொண்டு பேசினால் போதும், இவரின் கலகல பேச்சிலேயே நம் துயரங்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய்விடும்.

பொன்ஸீ: விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராக இருக்கிறார். புகைப்படக் கலைஞர், லே-அவுட் ஆர்ட்டிஸ்ட், துணுக்கு எழுத்தாளர், சிறுகதை மற்றும் தொடர்கதை எழுத்தாளர், பத்திரிகையாளர் என இவர் ஓர் ஆல்ரவுண்டர். பார்த்த எவரையும் உடனே நட்பு கொள்வதில் எனக்கு நேர் எதிர். ‘வடவீர பொன்னையா’ என்கிற புனைபெயரில் இவர் எழுதிய ‘வருச நாட்டு ஜமீன் கதை’, வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’ ஆகிய நாவல்களின் தரத்துக்குச் சமம். சமீபத்தில் அரசு நூலகத்துறையிலிருந்து இவரின் ‘வருச நாட்டு ஜமீன்’ கதைக்கு ராயல்டியாக ஒரு பெரிய தொகை வந்தது. பாவி மனுஷன், அதில் பாதியை நண்பர்களையெல்லாம் அழைத்து ஸ்டார் ஹோட்டல்களில் விருந்து வைத்துக் கொண்டாடி மகிழ்ந்து தீர்த்துவிட்டார்.

ரா.கண்ணன்: இவரின் நட்பு வட்டம் பெரிது. ஆனால், இவரின் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் இவரின் சம வயதுக்காரர்கள்தான். வயதில் சீனியர்களை ஒரு மரியாதையான எல்லையில் வைத்துப் பழகுவது இவர் பாணி. எனக்கான எல்லையை எவ்வளவு தூரத்தில் அல்லது அருகில் வைத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் என் மனசுக்குள் நண்பராக வைத்திருப்பது இவரையும்தான். ஒரு பெரிய பத்திரிகையின் இணை ஆசிரியராக இருந்துகொண்டு, நண்பர்களின் படைப்புகள் தகுதியில்லாமல் இருக்கும்பட்சத்தில் அவர்களின் முகம் கோணாமல், அதே சமயம் தீர்மானமாக நிராகரிப்பதென்பது ஒரு சவாலான விஷயம். அதை எப்படி இவர் சாதுர்யமாகச் செய்து வருகிறார் என்பது எனக்கு இன்றளவும் ஆச்சரியமான விஷயமாகவே இருக்கிறது.

பி.ஆரோக்கியவேல் (வேல்ஸ்):
சாஃப்ட்வேர் கம்பெனி ஆசாமி போன்று மிடுக்காக இருக்கும் இவருக்குள் இருப்பது குழந்தை மனது. ஒபாமாவே ஆனாலும் சளைக்காமல் போய் நுனி நாக்கு ஆங்கிலத்தில் அசத்தலாகப் பேசி பேட்டி எடுத்து வந்துவிடுவார். என் ஆங்கில அறிவை இவரிடம்தான் அடிக்கடி சந்தேகங்கள் கேட்பதன் மூலம் விருத்தி செய்து கொள்கிறேன்.

ராஜரத்தினம்: பார்த்தால் சீரியஸான ஆசாமி போல் இருப்பார். ஆனால், அப்போதைக்கப்போது இவர் தூக்கிப் போடும் கமெண்ட்டுகள் படு காமெடியாக இருக்கும். நண்பர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். சிவாஜி ரசிகர், டி.எம்.எஸ். பிரியர் என்பதிலிருந்து எங்கள் இருவரின் கருத்துக்களும் எண்ணங்களும் ஒன்றாகவே இருக்கின்றன.

பாண்டியன்: விகடனின் தலைமை லே-அவுட் ஆர்ட்டிஸ்ட். மதுரைக்காரர். முன்பு குமுதம் பத்திரிகையில் பணியாற்றியவர். சாவியில் பிரபலங்களைப் பற்றி வாராவாரம் கட்டுரைகள் வெளியிட்டபோது, ஓவியர் அரஸ்தான் அந்தப் பிரபலங்களின் கேரிகேச்சர்களை வரைந்தார். அரஸ்ஸைப் பற்றியே ஒரு வாரம் கட்டுரை வெளியிட்டபோது, அதற்குப் பாண்டியன் வரைந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி, இவரிடமிருந்து படம் வரைந்து வாங்கி வந்து தந்தார். ஓவியர் அரஸ்ஸை இவர் வரைந்திருந்ததைப் பார்த்து அசந்துவிட்டேன். அசாத்திய திறமைசாலி. அவ்வப்போது மதுரைக்காரர்களின் குசும்பு பற்றியும் செய்யும் லந்துகள் பற்றியும் அலுவலகத்தில் இவர் கொஞ்சம்கூடச் சிரிக்காமல் மிமிக்ரி செய்து காட்டுவார். பார்க்கிற எங்களுக்குப் பகீர் சிரிப்பு தொற்றிக் கொள்ளும்.

அரஸ்: விகடனில் (1980-ல்) என் கதை ஒன்றுக்கு இவர் போட்டிருந்த படத்தில் மயங்கி, இவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். பின்பு சாவியில் வந்து நான் பணியில் சேர்ந்ததும், இவர் ஒரு முறை அங்கே வந்து என்னோடு பேசிக்கொண்டு இருந்தபோது, ஒரு ரஜினி ரசிகர் ரஜினிகாந்த்திடம் பேசுகிற வாய்ப்பு கிடைத்தால் எந்த மன நிலையில் இருப்பாரோ அப்படி இருந்தேன். பல ஓவியர்கள் ஆண்களையும் லேசாக பெண்மை கலந்து இருக்கும்படிதான் வரைவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அரஸ் வரைகிற ஆண் அத்தனை மிடுக்காக, ஆண்மை நிரம்பியவனாக இருப்பான்; பெண் அத்தனை அழகாக, நளினமாக இருப்பாள்.

ஸ்யாம்: ஓவியர் ஸ்யாமை சாவி பத்திரிகையிலேயே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன். ஆனால், அப்போது அதிகம் பழக்கம் இல்லை. ஆனால், மற்ற பத்திரிகைகளில் அவரின் படங்களைப் பார்த்து வியப்பதுண்டு; ரசிப்பதுண்டு. விகடனுக்குள் அவரின் படங்களைக் கொண்டு வந்தவன் என்கிற பெருமை எனக்குண்டு.

சிவகுமார்-கீதா தம்பதி: சிறிது காலம் ‘அமுதசுரபி’ பத்திரிகையில் வேலை செய்தபோது கிடைத்த அறிமுகம். அத்தனை அந்நியோன்னிய தம்பதி. ஒருவருக்கொருவர் கலாய்த்துக்கொள்ளும் அழகே தனி! கீதா ஸ்ரீராம் சிட்ஸில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். சிவகுமாரும் அங்கே கிராஃபிக் டிசைனராக இருக்கிறார். மிக அமைதியான சுபாவம் கொண்டவர் சிவகுமார். கீதா அவருக்கு நேர் எதிர். அவர் நம்மோடு சிறிது நேரம் பேசிவிட்டுப் போனால், பெரிய புயல் மழையே அடித்து ஓய்ந்தது போலிருக்கும்.

எஸ்பி.அண்ணாமலை: சன் டி.வி-யில் பணியாற்றுகிறார். இவர் முன்பு விகடனில் பணியாற்றிய காலத்திலிருந்து பழக்கம். நட்புக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுப்பார். தம்மால் முடிந்த உதவிகளை வலியப் போய்ச் செய்யக் கூடியவர். நான் சாலிகிராமத்தில் சொந்தமாக ஒரு பிளாட் வாங்கியதற்கு இவரின் தூண்டுதலும் உதவியுமே காரணம். எனக்கு அந்த அளவுக்கெல்லாம் சமர்த்து பத்தாது!

முருகேஷ்பாபு: நிறுத்தி நிதானமாகப் பேசுவார். நட்புக்கு மரியாதை கொடுப்பவரில் முக்கியமானவர் இவர். நான் விகடனில் சேர்ந்த சமயத்தில் இவர் அங்கே இளம் நிருபராக இருந்தார். ‘பஞ்ச தந்திரம்’ படத்தில் வருகிற ஐவர் குழு போல இவர் பிரெஞ்ச் தாடி, மீசை வைத்திருந்தார். எதிர் சுவர் ஓரமாக உட்கார்ந்து வைத்த கண் வாங்காமல் என்னையே குறுகுறுவென்று பார்த்தார். கொஞ்சம் பயமாகக்கூட இருந்தது எனக்கு. பழகத் தொடங்கிய பின்னர், என் பயத்தை இவரிடமே சொல்லிச் சிரித்திருக்கிறேன்.

சிம்புதேவன்: இயற்பெயர் செந்தில்குமார். இம்சை அரசன் எடுத்து எங்கேயோ போய்விட்டார். ஆனால், இன்றைக்கும் விகடனில் நான் அன்று பார்த்த அதே சிம்புவாக, எந்த பந்தாவும் அலட்டலும் இல்லாமல் பழகுகிறார். எந்த ஒரு விஷயமாக இவருக்கு நான் போன் செய்தாலோ அல்லது இவர் எனக்கு போன் செய்தாலோ, என் மகன் ரஜ்னீஷ் என்ன செய்கிறான் என்று அவனை விசாரிக்காமல், அவனோடு பேசாமல் போனை வைக்க மாட்டார். என் மகன் படம் வரைவதில் மிகவும் ஆர்வம் உள்ளவன் என்பது முக்கிய காரணம். அவனது நலன் மீது மிகுந்த அக்கறை இருப்பது இவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படும்.

மனோகர்:
ஆர்ட்ஸ் காலேஜ் புரொபசர். இவருக்கும் என் மீது அன்பும், என் மகன் மீது அக்கறையும் உண்டு. இவரின் வீட்டில் எப்போதும் இவரின் மாணவர்கள் பலர் வந்து ஓவியம் வரைந்து கொண்டு இருப்பார்கள். பல சிறார்கள் ஓவியம் பழகிக் கொண்டு இருப்பார்கள். என் மகனையும் லீவு நாளில் அனுப்பி வைக்கும்படி பலப்பல முறை சொல்லி அலுத்துவிட்டார். நான் அனுப்பாததில் இவருக்கு மிக மிக வருத்தம். பையனின் ஓவியத் திறமை வளர்ச்சி அடைய நானே முட்டுக் கட்டையாக இருக்கிறேன் என்பது இவர் எண்ணம். அதனால் என் மீது கோபம்!

ரமேஷ்வைத்யா:
அற்புதமான எழுத்தாளர்; கவிஞர்; முக்கியமாக, நல்ல இதயம் கொண்டவர். மிகத் திறமைசாலி. என்னை உரிமையோடு ‘அண்ணா’ என்றுதான் கூப்பிடுவார். சில மாதங்கள் சாலிகிராமத்தில் என் ஃபிளாட்டில் இவர் குடியிருந்தார். ஒரு சமயம். “இதை எனக்கு விலைக்குத் தருகிறீர்களா?” என்று கேட்டார். எனக்கு எந்த செண்டிமெண்ட்டும் இல்லை என்பதால், ‘ஆகட்டும், தருகிறேன்’ என்றேன். பேங்க்குக்குக் கூடச் சென்று ஃபார்மாலிட்டீஸ் பற்றிக் கேட்டறிந்துவிட்டு வந்தோம். பின்னர், “கையில் ஒரு தொகை சேர்த்துக்கொண்டு பின்னர் உங்களிடம் இது பற்றிப் பேசுகிறேன்” என்றார். ஆனால், பேசவில்லை. குடியின் பிடியிலிருந்து இவர் மீண்டு, திரையுலகில் அல்லது இலக்கிய உலகில் ஓர் உயரிய நிலைக்கு வரவேண்டும். அப்போதுதான் இந்த அண்ணனுக்கு மகிழ்ச்சி!

ரமேஷ்குமார்: பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் தம்பி. மிக மென்மையாகப் பேசுவார். மிக அன்பாகப் பழகுவார். மிக மிக மரியாதை கொடுப்பார். விகடனில் முன்பு இவர் வேலை செய்துகொண்டு இருந்தபோது இவருடன் நான் அதிகம் பழகியதில்லை. இப்போதுதான் பழகுகிறேன். முன்பு ரமேஷ்வைத்யாவுக்கு நான் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தபோது, அந்தப் பக்கமே நான் சென்றதில்லை. வீட்டுக்காரன் என்கிற ஹோதா எனக்குப் பிடிப்பதில்லை. இப்போதும் அது போலத்தான். “வாங்கன்னா வரமாட்டேங்கிறீங்களே சார்!” என்று அலுத்துக் கொள்கிறார் ரமேஷ்குமார். இவருக்காகவாவது அவசியம் ஒரு முறை போய் தலை காண்பித்துவிட்டு வரவேண்டும்.

ட்டியல் நீள்கிறது. பலரின் பெயர் விடுபட்டிருக்கலாம். குறிப்பாக குளுகுளு ஊட்டி நண்பர்கள் உதாபார்த்திபன் மற்றும் லதானந்த்! இவர்களைப் பற்றி ஏற்கெனவே விரிவாக வேறொரு தனிப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். மற்றபடி சரோஜ் நாராயண்சுவாமி, எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், சுபா, ஓவியர் கோபுலு, மாயா, ஜெயராஜ், ஞாநி, பாஸ்கர்சக்தி என்று என் மீது அபிமானமும் நல்ல நட்பும் கொண்டவர்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

‘இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு’ என்கிறார் வள்ளுவர். அதாவது, இவர் என்னிடம் இப்படி நடந்துகொள்கிறார், இவரிடம் நான் இப்படி நடந்துகொள்கிறேன் என்று விவரித்துச் சொன்னாலும், அந்த நட்பு சிறப்பிழந்துவிடுமாம்.

அய்யனின் இந்தக் கருத்தோடு நான் உடன்படுகிறேன். எனவேதான், அதிகம் விவரிக்காமல் இத்துடன் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்.
.

12 comments:

நட்பின் மற்றொரு இலக்கனம், நட்பைப் பற்றி நண்பனிடமே சொல்லாமல்; பிறரிடம் சொல்வது தான். அந்த வகையில் இந்த பிளாக்கை இதில் உள்ளோர் படிப்பார்களோ என்னமோ தெரியாது; ஆனாலும், இதயத்தில் உள்ளதை இனையத்தில் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு ஒரு பூச் செண்டு.
 
அடடே !! அருமை... நட்புக்கு ஐந்து அதிகாரம் இருக்கிறது திருக்குறளில் !! பழைமை-யும் சேர்த்து ... இதை தெரிந்து கொள்ள உதவியமைக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி ..

சிறுவன்
ஹரீஷ்
 
உங்கள் நட்பு வட்டம், சாரி, நட்பு மாவட்டம் பற்றி படித்து வியந்தேன். இப்படி நாலு நண்பர்கள் இருந்தாலே போதும் வாழ்க்கை இனித்து விடும்!--k.b.jana
 
உங்கள் பரந்த நட்பு எல்லைகளைப் பற்றி படித்து முடித்ததும் இவ்வளவு நண்பர்களா? என்று வியந்தேன். இப்படிப்பட்ட நண்பர்களை பெற்றுள்ள நீங்கள் எந்த இடர் வரினும் அஞ்சாமல் நடை போடலாம். பதிவை லேட்டா போட்டாலும் லேட்டஸ்ட் தலைமுறை வரை நண்பர்களாக்கி வச்சிருக்கீங்களே! அதுவே போதும்.

ரேகா ராகவன்.
 
சரியாகச் சொன்னீர்கள் பொன்னியின் செல்வன்! இதில் குறிப்பிடப்பட்டுள்ள நண்பர்கள் யாரிடத்திலும் இந்த அபிப்ராயங்களை நான் சொன்னதில்லை; இப்படி அவர்களைக் குறித்து ஒரு வலைப்பதிவு எழுதியிருக்கிறேன் என்றும் சொல்லவில்லை. நட்பின் இலக்கியம் தெரியாதே தவிர, எனக்கு நட்பின் இலக்கணம் தெரியும்!

***

அதென்ன சிறுவன்? எனில், என்னைக் கிழவன் என்கிறீர்களா?

***

என் நட்பு (மா)வட்டம் பெரிது என்பதை ஒரு சின்ன வார்த்தை மாற்றத்திலேயே கொண்டு வந்து அசத்தியிருக்கிறீர்கள் கே.பி.ஜே.!

***

நல்ல நண்பர்களைப் பெறுதல் ஒரு வரம்! அது இந்தப் பத்திரிகைத் தொழிலால் எனக்கு வாய்த்தது. தங்கள் அறிமுகம் கிடைத்ததும் அப்படித்தானே ராகவன்?!
 
'இலக்கணம்' என்ற வார்த்தையில்; என் பின்னூட்டத்தில் எழுத்துப்பிழை செய்துள்ளேன். அதை உங்கள் பின்னூட்டம் மூலம் தெரிந்து கொண்டமைக்கும்.
'இணையத்தில்' என்ற வார்த்தையிலும் எழுத்துப்பிழை உள்ளது.
நட்புக்கு திருவள்ளுவர் நான்கு அதிகாரம் எழுதி இருக்கிறார் என்று என்னுடைய வலைப்பூவில் பதிந்துள்ளேன். அது அறியாமையால்.
அப்படி என்றால் 'சிறுவன்' சரிதான்.
 
நட்புக்கு மரியாதை. :)
 
உங்கள் நட்பு வட்டத்தில் என் போன்றோர் பெயரும் உண்டா ரிஷபன்
 
பதிவுடன் படம் அசத்தல்.. ஒவ்வொருவராய் நினைவு கூர்ந்து சொல்லிய விவரங்கள் அருமை
 
//ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று ‘நட்பு தினம்’; அன்றைக்கு என் நண்பர்களைப் பற்றி எழுதியிருக்கலாம். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, சாவகாசமாக இன்றைக்கு எழுதுகிறேன்.// உங்களின் இன்னொரு வலைப்பூவில் நண்பர்கள் தினத்தன்று போய் உங்கள் பழைய நண்பரைச் சந்தித்தது பற்றி எழுதியிருந்தீர்களே, மறந்துவிட்டீர்களா?
 
பொன்னியின் செல்வன்:
எழுத்துப் பிழை மன்னிக்கப்படும்; கருத்துப் பிழை மட்டுமே கவனிக்கப்படும்!

விக்னேஷ்வரி:
நட்புக்கு மரியாதை - தங்களுக்கு நான் நன்றி சொல்வதும்!

ரிஷபன்:
உண்டா என்று கேட்டு செண்டிமெண்ட்டை டச் பண்ணிவிட்டீர்களே? 17 ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் நடந்த என் திருமணத்துக்கு நீங்களும் வந்திருந்தீர்கள் இல்லையா? என் திருமணத்துக்கு வந்த ஒரே எழுத்தாளர் நீங்கள்தானே?

கிருபாநந்தினி:
அட, ஆமா இல்லே! நான்கூட மறந்துட்டனோன்னு நெனச்சு ரெம்ப பீலாயிட்டேங்க!
 
‘தமிலிஷ்’ஷில் இந்தப் பதிவுக்கு ஓட்டுப் போட்டுத் தங்கள் ஆதரவைத் தெரிவித்த கீழ்க்கண்டவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
1.அனுபகவான், 2.சுதிர்1974, 3.யூ.ஆர்.விவேக், 4.கிருபாநந்தினி, 5.ஸ்டார்பாய்ஸ், 6.ஹெச்.ராஜேஷ், 7.இரா.அருண், 8.கிருத்திகா, 9.வினோ23, 10.அம்புலி