தொலைக்காட்சி சீரியல்களை நான் பார்ப்பதில்லை. பார்க்காமல், உள்ளே நான் சமர்த்தாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டு இருந்தாலும், ஹாலில் இருந்து வரும் அலறல் தீம் பாட்டுக்களும், அழுகை ஒப்பாரிகளும், அலட்டல் சவால்களும் என் செவிப்பறையைத் துளைத்து, ரணகளப்படுத்திக் கொண்டு உள்ளே போய் அதிர்கின்றன. இந்தக் கஷ்டத்துக்குதான் நான் காதே செவிடானாலும் பரவாயில்லை என்று யு.எஸ்.பி. எம்.பி-3 போட்டுக்கொண்டு பாட்டுக் கேட்பது! செவிடாகிற காது, நல்ல பாட்டுக்களைக் கேட்டுத்தான் செவிடாகட்டுமே!
தாய்க்குலங்கள் விழுந்து விழுந்து பார்க்கும்படியாய் அப்படி என்னதான் இருக்கிறது சீரியல்களில் என்று எனக்குப் புரியவில்லை. சாப்பிடும்போதோ, அல்லது காபிக்காகக் காத்திருக்கும்போதோ, ஹாலில் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் டி.வி-யில் ஏதாவது ஒரு சீரியல் காட்சியைப் பார்க்க நேரிடும். எந்தக் காட்சியும் புதுசாகவே இராது. திரும்பத் திரும்பப் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன காட்சிகளாகவேதான் இருக்கும்.
கோட்டா சீனிவாசராவே தேவலை என்கிற அளவுக்கு இரண்டு பெண்கள், ‘ஏய்... ஏய்...’ என்று எதிரெதிரே விரல் விட்டு ‘உன்னை அழிச்சுடறேன் பார்! உன்னைத் தொலைச்சுடறேன் பார்!’ என்று சவால் விட்டுக்கொண்டு இருப்பார்கள். ஒவ்வொருத்திக்கும் 50 வயதுக்கு மேல் இருக்கும். ‘பாட்டிகளுக்கு ஏன் இந்த பஞ்ச் டயலாகெல்லாம்?’ என்று கேட்கத் தோன்றும்.
முன்பெல்லாம் சினிமாக்களில் வில்லனாக நம்பியாரோ, அசோகனோ, அல்லது அவர்களைப் போன்ற வில்லன் நடிகர்களோதான் வந்து, யாரையாவது கொல்கிற சதித் திட்டம் பற்றிப் பேசுவார்கள். சபதம் எடுப்பார்கள். அப்போது அவர்கள் வெளிப்படுத்துகிற கோபமும் முறைப்பும் போதாதென்று, அவர்களின் முகத்தில் கீழ்ப்பக்கத்திலிருந்து சிவப்பு வெளிச்சம் பாய்ச்சி, இன்னும் கொடூரமாகக் காட்டுவார்கள். சீரியல்களில் அதெல்லாம் இல்லை. காலேஜ் போகிற டீனேஜ் பெண் கூட சர்வ சாதாரணமாகக் கொலை செய்துவிட்டு, தேமே என்றிருக்கிறது. குடும்பத்துக்குத் தெரிந்தால், அவர்களும் ஒன்றும் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். ‘அடடா! அவசரப்பட்டுட்டியேம்மா! என் கிட்டே சொல்லியிருந்தா, அவனை நானே கொன்னிருக்க மாட்டேனா? சரி, போகட்டும்... இனிமே யாரையும் கொல்லாம பார்த்து நடந்துக்க’ என்று பக்குவமாக எடுத்துச் சொல்வார்கள்.
சவால் இல்லையென்றால் அழுகை! யாராவது இளம் பெண் ஒருத்தி, எவனிடமாவது ஏமாந்து, கற்பைப் பறிகொடுத்து, விக்கி விக்கி அழுதுகொண்டு இருப்பாள். அவளைத் தேற்ற வரும் பெண்ணும் சேர்ந்து அழுவாள். இப்படியாக ஒரு கும்பலே கூடி ஒப்பாரி வைத்து அழும்.
சீரியல் கேரக்டர் யாராவது செத்துவிட்டால், டைரக்டருக்குக் கொண்டாட்டம்தான். பின்னே, அந்த ஒப்பாரிகளை வைத்தே இரண்டு மூன்று நாள் ஓட்டிவிடலாமே! பிணத்தைக் குளிப்பாட்டுவது, காது, மூக்கில் பஞ்சு வைப்பது, பாடை கட்டுவது, பானை உடைப்பது என்று சுடுகாட்டுக்குக் கொண்டு போய்க் கொளுத்துவது வரையில் எல்லாவற்றையும் விலாவாரியாகக் காட்டாவிட்டால் ஜென்மம் சாபல்யம் ஆகாது டைரக்டருக்கு!
இதெல்லாம் போக, நான் எப்போது எந்த சீரியல் காட்சியைப் பார்த்தாலும், நம்ப முடியாத, லாஜிக் இல்லாத சம்பவங்கள்தான் கண்ணில் படுகின்றன.
உதாரணமாக, அவசரமாக யாராவது ஒருவர் ஆட்டோவைக் கை காட்டி நிறுத்துவார். எங்கே போகவேண்டும் என்று இவரும் சொல்ல மாட்டார்; அவரும் கேட்க மாட்டார். ரேட் பேச மாட்டார். ஆட்டோ கிளம்பியதும்தான் ‘எங்கே போகணும் சார்?’ என்று கேட்பார். இவர் எந்த இடம் சொன்னாலும் மறுக்காமல் போவார். எந்த சீரியல் ஆட்டோக்காரரும் ‘இங்கே வர மாட்டேன்’ என்று மறுப்பது இல்லை. ‘மீட்டருக்கு மேல் போட்டுக் கொடுங்க’ என்று கேட்பதில்லை. அதில் பிரயாணம் செய்கிறவரும் தங்கள் இடம் வந்தவுடன், கையில் கிடைக்கிற ரூபாயைக் கொடுத்துவிட்டு விடுவிடென்று வந்துவிடுவார். மீட்டரைப் பார்த்தாரா, மிச்சம் வாங்கினாரா... ஒன்றும் கிடையாது.
அப்படித்தான், யாராவது தேடிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தால், வாசல் கதவு திறந்தே கிடக்கும். தேடி வருபவர் ஹாலுக்கு வந்தால் அங்கே ஒருவர் கூட இருக்க மாட்டார். இரண்டு மூன்று குரல் கொடுத்ததும்தான், இந்த அறையிலிருந்து ஒருவர், அந்த அறையிலிருந்து ஒருவர் என நாலைந்து பேர் வருவார்கள்.
ஒருவர் எந்த ஒரு காரணத்துக்காகவாவது, தன் அருகில் இருப்பவரைப் பைத்தியம் என்று எதிரே இருப்பவருக்கு ஜாடை காட்டித் தெரிய வைப்பார். உடனே, அதுவும் உண்மைதானோ என்று எதிராளி இவரைச் சந்தேகத்தோடு பார்த்தால், அதற்கேற்றாற்போல் இவரும் (காரணமே இல்லாமல்) தன் முகத்தைச் சுழித்து, தலையைச் சொறிந்து, பைத்தியம் போலவே நடந்து கொள்வார்.
டெலிபோனில் எதிர்பாராத ஒரு செய்தி வரும். எதிர்முனை வைக்கப்பட்டு விடும். ஆனால் இவர் வைக்காமல், ரிசீவரின் வாய்ப் பகுதியை ஒருமுறை முறைத்துப் பார்த்துவிட்டுத்தான் (என்ன தேடுகிறாரோ?) மெதுவாக வைப்பார்.
ஒரு திருடன் திடுதிடுவென்று ஓடுவான். சட்டென்று ஒரு குப்பைத் தொட்டி பின்னால் மறைந்து கொள்வான். அவனைத் துரத்தி வருபவர்கள் கரெக்டாக அந்தக் குப்பைத் தொட்டி அருகில் நிற்பார்கள். அங்கே இங்கே பார்ப்பார்கள். பின்பு ஆளுக்கொரு பக்கமாக ஓடுவார்கள். மறந்தும் குப்பைத் தொட்டியின் பின்னால் பார்க்க மாட்டார்கள்.
காணாமல் போன ஒருவரைத் தேடிக்கொண்டோ, அல்லது அது பற்றிப் பேசிக் கொண்டோ இருக்கும்போதுதான் யதேச்சையாக (!) டி.வி-யில் செய்தி ஓடிக்கொண்டு இருக்கும். அதில், இவர்கள் தேடுகிற ஆசாமி பற்றிய செய்தி வாசிக்கப்படும்.
ஏழெட்டு பேர் பேசுகிற காட்சியாக இருந்துவிட்டால், எல்லாரும் ஒரு வரிசையில் நின்றபடிதான் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வார்கள். எல்லாரும் கேமராவில் விழ வேண்டுமே!
சாப்பாட்டுக் காட்சி வராமல் இருக்காது. அதில் ஏதாவது பிரச்னைகள் அலசப்படும். யாராவது ஒருத்தர் கோபித்துக்கொண்டு, சாப்பாட்டுத் தட்டிலேயே சோற்றின் மீதே கை கழுவிக்கொண்டு எழுந்து போவார்.
எத்தனைப் பெரிய தொழிலதிபராக இருந்தாலும், அவசர போன்கால் வராதபடிக்கு ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கும். அல்லது, அது எங்கேயோ இருக்கும்; இவர் எங்கேயோ இருப்பார். செல்போனைக்கூட கையில் எடுத்துக்கொள்ளாத பிஸி தொழிலதிபர்!
வீட்டுக்குப் பலமான பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். செக்யூரிட்டிகள் ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். ஆனாலும், சுலபமாக அத்தனை பேரையும் ஏமாற்றிவிட்டு ஒருவன் உள்ளே போய்விடுவான். அவன் உள்ளே போவதற்காகவே அத்தனை பேரும் சொல்லி வைத்தாற்போல் ஆளுக்கொரு பக்கம் போய் ஏதோ சத்தம் வந்த மாதிரி இருந்ததே என்று தேடுவார்கள். ஒருத்தனும் வாசல் கேட்டில் இருக்க மாட்டான்.
சிங்கப்பூர் போகணுமா, அமெரிக்கா போகணுமா, உடனே, இப்போதே கிளம்பிவிடுவார்கள். நினைத்தால் அத்தனை பேரும் ஜப்பானில் இருப்பார்கள்; நியூயார்க்கில் இருப்பார்கள். எப்போது பாஸ்போர்ட் எடுக்கிறார்கள், டிக்கெட் எப்படி இவர்களுக்கு உடனே கிடைக்கிறது என்பதெல்லாம் ஆச்சரியம்!
கத்தியை எடுத்துக் குத்திக்கொள்ளப் போவாள் ஒருத்தி. வேண்டாம் என்று வெளியிலிருந்து ஒருவன் பதறி ஓடி வந்ததும், வேகமாக வயிற்றில் சொருகப் போன கத்தியை ஒரு நூலிழை முன்னதாக பிரேக் பிடித்து நிறுத்திவிடுவாள். அது எப்படித்தான் சாத்தியமாகுமோ அவளுக்கு மட்டும்!
தூக்கு மாட்டிக் கொள்ள நினைத்தால், அவர்களுக்கு வசதியாக அந்த அறையில் கயிறு, ஸ்டூல் எல்லாம் தயாராக இருக்கும். தேடி எடுக்க வேண்டிய அவசியமே இராது. அவர்களைக் காப்பாற்ற வருகிறவரும், பூட்டியிருக்கும் கதவை முதலிலேயே முட்டி மோதித் திறக்க மாட்டார். உள்ளே தற்கொலை செய்துகொள்ளப் போகிறவர் நிதானமாக ஃபேனில் கயிற்றைக் கட்டி, ஸ்டூலில் மீது ஏறி, சுருக்கைக் கழுத்தில் மாட்டிக் கொள்கிறவரை இவர் வெளியே இருந்தபடி தற்கொலை முயற்சி வேண்டாம் என்று நயமாக எடுத்துச் சொல்லிக்கொண்டு இருப்பார். கடைசியாகத்தான் கதவை மோதித் திறப்பார். ஓடிப் போய் அந்தக் கடைசி விநாடியில்தான் அவரைத் தாங்கிப் பிடிப்பார்.
அதிர்ச்சியான செய்தி வந்தால் அவ்வளவுதான்... கையில் காபி டம்ளரோ, செல்போனோ, தட்டோ, குடம் ஜலமோ எதுவாக இருந்தாலும் டொப்பென்று கீழே போட்டுவிடுவார்கள். அத்தனை பலவீனமான மனது கொண்டவர்கள்தான் அத்தனை பேரும்!
ஒருவர் ஒரு தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ள முயல்கிறார். கிடைக்கவில்லை. மீண்டும் முயல்கிறார். இப்படி அடுத்தடுத்து எத்தனை முறை முயன்றாலும், ஒவ்வொரு முறையும் அத்தனை எண்களையும் டொக் டொக்கென்று அழுத்திக்கொண்டு இருப்பாரே தவிர, ரீ-டயல் என்கிற ஒரு விஷயம் இருப்பதே சீரியலில் போன் பேசுகிறவர்களுக்குத் தெரியாது.
சீரியல் அபத்தங்களைப் பற்றி என் மகள், மகனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர்கள் கேலியும் கிண்டலுமாகச் சொன்னவைதான் மேலே உள்ளவை. இன்னும்கூட அபத்தங்கள் இருக்கலாம். பதிவு தாங்காது!
.
Saturday, October 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
உங்கள் வீட்டில் எவ்வளவோ பரவாயில்லை, சீரியல் ஓடினாலும் காபியும் சாப்பாடும் மேசைக்கு வந்துவிடுகிறது. :)
வீட்டிலிருக்கும் பெண்களுக்கென்று பொழுதுபோக்க வேற என்ன சார் இருக்கு?
முதல் வரியிலேயே கியர் அருமை.
/ செவிடாகிற காது, நல்ல பாட்டுக்களைக் கேட்டுத்தான் செவிடாகட்டுமே!/
/‘பாட்டிகளுக்கு ஏன் இந்த பஞ்ச் டயலாகெல்லாம்?’/ :-)
/சரி, போகட்டும்... இனிமே யாரையும் கொல்லாம பார்த்து நடந்துக்க’ என்று பக்குவமாக எடுத்துச் சொல்வார்கள்./ :-)
/சீரியல் அபத்தங்களைப் பற்றி என் மகள், மகனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர்கள் கேலியும் கிண்டலுமாகச் சொன்னவைதான் மேலே உள்ளவை. இன்னும்கூட அபத்தங்கள் இருக்கலாம். பதிவு தாங்காது!/
நல்ல வேளை சார், இவ்வளவு அபத்தங்கள் இருக்கிறதே, எல்லாம் பார்த்து தெரிந்து கொண்டீர்களோ என்று சிறிதே பயந்து விட்டேன். எம்.பி.3 புண்ணியத்தில் காதும், கம்ப்யூட்டர் உதவியில் கண்களும் தப்பித்தன !!
இதன் தொடர்ச்சியாய் நானும் சில விஷயங்களை எழுதலாமென இருக்கிறேன், உங்கள் அனுமதியுடன்...
பிரபாகர்.
எனக்கும்தான். என்ன பண்றது?
ரேகா ராகவன்
:-)
இங்கே சீரியல்களை விடாமல் ரசிக்கும் ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு அது இன்னமும் ஆச்சரியம். (ஒரு வேளை தம் மனைவியின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுக்கிறார்களோ!)
’சௌசாலயம்’ தேவைதான். அதுக்காகா அங்கேயே பொழுதன்னைக்கும் இருக்கக் கூடாது.
(’சௌசாலயம்’ அப்படின்னா என்னனு தெரியாதவிங்களுக்குத் தசாவதாரம் பாத்தவிங்க சொல்லிக் குடுங்க.)
The worst is my 5 yr old is also watching these. I cannot stop since i cannot say anything to my elders.
Somebody pls. help me
இப்படியே போனால் தொலைக் காட்சியை விட்டு விட்டு எல்லாரும் 'வலை'க் காட்சிக்குப் போய்விடுவார்கள்! அங்கே அட்லீஸ்ட் சாய்ஸ் இருக்கிறதே! -- கே.பி.ஜனா
என்றென்றும் அன்புடன்
வெங்கட், புது தில்லி
1.பவான், 2.தருண், 3.அனுபகவான், 4.கிருபாநந்தினி, 5.பொன்னியின்செல்வன், 6.மகிஷ், 7.ஹிஹி12, 8.சி.எஸ்.கிருஷ்ணா, 9.கே.வடிவேலன், 10.மௌனகவி, 11.கொசு, 12.பாமரன், 13.இரா.அருண்
இப்போதுதான் உங்கள் வலைப்பக்கத்தை கவனித்தேன். இரண்டொரு பதிவுகள் படித்தேன். சுவாரசியமாக இருந்தது.
சினிமா மற்றும் நாடகக் காட்சிகள் வரும் கிளிஷேக்களை எத்தனை முறை கிண்டலடித்தாலும் சுவாரசியம் குன்றாது.
நானும் ஓர் உதாரணம் சொல்ல முயல்கிறேன். வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு அல்லது சண்டை போட்டு ஓடி திரும்பி வந்த மகன் அப்பாவிற்குத் தெரியாமல் அம்மா உதவியுடன் சாப்பிட அமர்ந்திருப்பான். அம்மா உருக்கத்துடன் பரிமாறுவார். சாதத்தை போட்டு அதன் மீது சாம்பாரையோ அல்லது எதையோ போட்டு பிசையும் வரை எதுவும் நிகழாது. அவன் முதல் கவளத்தை வாயில் வைக்கும் போதுதான் சரியாக அப்பாவின் குரல் கடுமையாக ஒலிக்கும். "துரைக்கு சாப்பாடு கேக்குதோ"
மகன் முதல் கவளச் சோற்றை அப்படியே வைத்துவிட்டு எழுந்து செல்வான். பின்னணயில் ஒரு ஷெனாய்.
ஆரம்பமே கலக்கல்..
தனியா உக்காந்து சிரிக்க வச்சட்டிங்களே சார்... நீங்க சொன்ன அத்தனை லாஜீக் ஓட்டைகளம் சினிமாவுக்கும் பொருந்தும்...
Post a Comment