உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Saturday, October 31, 2009

சூ... சூ... மாரி..!

ன்றைய குழந்தைகள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்ற சந்தேகம் அடிக்கடி வருகிறது எனக்கு. பள்ளிக்கூடம், படிப்பு, டியூஷன், வீடு, டி.வி., படிப்பு, கம்ப்யூட்டர் கேம்ஸ், தூக்கம் என்று போய்க்கொண்டு இருக்கிறது என் குழந்தைகளின் வாழ்க்கை. இது எப்படி போரடிக்காமல் இருக்கிறது அவர்களுக்கு என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

என் சின்ன வயதில், நகரத்து வசதிகள் எதுவும் இல்லாத குக்கிராமங்களில் வசித்தாலும், சுதந்திரப் பறவையாக ஓடியாடி வளர்ந்தேன். நுங்கு எடுக்கப்பட்ட பனம் பழத்தின் மையத்தில் துளையிட்டு, வளைந்து கொடுக்கும் சவுக்கங்குச்சியை அதில் சொருகி, புழுதி பறக்கும் தெருக்களில் வெறுங்காலோடு, அந்தப் பனை வண்டியைச் சரசரவென ஓட்டிச் செல்வதில் உள்ள ஆனந்தத்தை என் குழந்தைகள் அறிய மாட்டார்கள். எந்தத் தெருவில், யார் வீட்டுக்குள்ளும் ஓடிப் போய்ப் புகுந்துகொள்ளும் உரிமை இருந்த அன்றைய ‘கண்ணாமூச்சி ரே... ரே...’ விளையாட்டில் உள்ள சுகம் என் குழந்தைகளுக்குத் தெரியாது. கார்த்திகை மாசத்தில், கரியையும் உமியையும் கலந்து ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டி, அதை மூன்று கழிகளுக்கு நடுவில் வைத்து சுயமாக மாவலி தயாரித்து, நெருப்புப் பொறிகள் பறக்கக் ‘கார்த்தீ... கார்த்தீ...’ என்று அதை வேக வேகமாகச் சுற்றுவதில் உள்ள மகிழ்ச்சியை என் குழந்தைகள் அனுபவித்தது கிடையாது. பழைய சைக்கிளின் ரிம்மோ அல்லது டயரோ கிடைத்தால், ஒரு வழவழ குச்சியால் அதை விறுவிறுவென்று அடித்து ஓட்டி, வாயாலேயே ஹாரன் அடித்தபடி ஊரை வலம் வருவதில் உள்ள சந்தோஷம் இன்னதென்று என் குழந்தைகளுக்குத் தெரியாது. புளிய மரத்தடியில் குழி பறித்து, கோடு போட்டு, ‘ஐயப்பன் ஜொள்ளு, அறுமுக தாளம், எழுமா லிங்கம், எட்டண கோட்டை...’ என்று பாடியபடி சின்ன கோலிகள், நத்தை கோலிகளை வைத்துக்கொண்டு நண்பர்களோடு கோலியாடுவதில் இருக்கும் பரவசம் பற்றி என் குழந்தைகள் கேள்விப்பட்டதுகூடக் கிடையாது. ஒரு பையனைக் குனிந்து நிற்கச் சொல்லி, ஓடி வந்து அவன் முதுகில் கையை வைத்து எகிறித் தாண்டும் பச்சைக் குதிரை விளையாட்டை விளையாடி மகிழ்ந்ததில்லை என் குழந்தைகள். ‘இச்சா... ஈயா... காயா...’ என்று கேட்டுக்கொண்டே வானத்தை அண்ணாந்து பார்த்தபடி, ஓட்டாஞ்சில்லு வைத்து ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி ஆடும் பாண்டி ஆட்டம் என்றால் என்னவென்றே தெரியாது என் குழந்தைகளுக்கு. நீர்க் குட்டைக் கரையில் நின்றுகொண்டு, பானை ஓட்டுச் சில்லு ஒன்றை வாகாகத் தண்ணீரில் எறிந்து, அது நீண்ட தூரம் தத்தித் தத்திப் போய் மறுகரையில் தாவி ஏறும் சாகச சந்தோஷத்தை என் குழந்தைகள் அறிய மாட்டார்கள். தோப்பினுள் ஓடியாடி, மரங்களின் மேல் ஏறி விளையாடியதில்லை அவர்கள். பம்ப் செட் கிணற்றினுள் குதித்துக் கும்மாளம் இட்டதில்லை. மாட்டுப் பொங்கல் அன்று கிராமத்தில் உள்ள மாடுகள் அனைத்தும் கொம்புகளில் வர்ணம் பூசிக்கொண்டு, பலூன்களும், சலங்கைகளும் தரித்து, கன குஷியோடு தெருக்களில் சுதந்திரமாக ஜலங்... ஜலங்கென்று ஓடி வரும் காட்சியைபக் கண்டு மகிழ்ந்ததில்லை அவர்கள். மாவிலைகளாலும் கலர் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகள் தெருக்களில் வேக வேகமாக ஓட, அந்த வண்டிகளில் ஏறியுள்ள ஆண்கள், பெண்கள், குமரிகள், கிழவிகள், சிறுவர்கள், தாத்தாக்கள் எல்லாரும் ஏக காலத்தில் ஊரே ரெண்டுபடும்படி கத்திக் கும்மாளம் போட்டு, உற்சாகம் ததும்ப ரேக்ளா ரேஸ் நடத்திய கோலாகலத்தைப் பார்த்ததில்லை என் குழந்தைகள்.

அவை மட்டுமல்ல; வீட்டு வாசலுக்கே வரும் பல சுவாரசியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை என் குழந்தைகள் அறிய மாட்டார்கள்.

மாதம் தவறாமல் ஒரு பாம்புப் பிடாரன் வருவான். வட்டமான இரண்டு மூன்று பிரம்புக் கூடைகள் வைத்திருப்பான். வாசலில் அமர்வான். ஒரு கூடையின் மூடியைத் திறப்பான். சுருண்டு படுத்திருக்கும் நாகத்தைக் கிண்டி எழுப்புவான். மகுடி ஊதுவான். அது கடமையே கண்ணாக ஓரடி உயரத்துக்கு எழுந்து, நிமிர்ந்து இப்படியும் அப்படியும் பார்க்கும். கொஞ்ச நேரம் அவன் மகுடி இசையைக் கேட்டு ரசித்துவிட்டு, அம்மா கொடுத்தனுப்பும் அரிசியைக் கொண்டு போய் அவன் பிரித்துக் காட்டும் துணி மூட்டைக்குள் கொட்டுவேன். இன்னொரு கூடையையும் திறந்து காட்டச் சொல்வேன். அவன் பிகு செய்துகொண்டு, இன்னும் கொஞ்சம் அரிசி போட்டால்தான் திறந்து காட்டுவேன் என்பான். ஓடிப் போய் என் இரண்டு கைகளிலும் கொஞ்சம் அரிசி அள்ளி வந்து போடுவேன். அவன் அந்த மற்றொரு கூடையைத் திறந்து காட்டுவான். அதனுள் ஒரு பாம்பு மூச்சு விட்டுக்கொண்டு படுத்திருப்பது, அதன் ஏறித் தாழும் உடலசைவிலிருந்து தெரியும்.

ஒரு முறை, ஒரு வீட்டார் தங்கள் குழந்தைக்குக் காதில் சீழ் வடிகிறது என்று சொல்லி, அந்தக் குழந்தையைப் பாம்புப் பிடாரன் முன் உட்கார வைத்தார்கள். பிடாரன் ஒரு பாம்பின் வாலைப் பிடித்து அந்தக் குழந்தையின் காதுக்குள் விட்டான். குழந்தை பயத்தில் அழுதது. இரண்டு மூன்று முறை அவன் இப்படிச் செய்துவிட்டு, “இனிமே சீழ் வடியாது” என்று உறுதியளித்தான். அவர்கள் அவனுக்குப் பைசா கொடுத்தார்கள்.

பிடாரன் தவிர, பூம்பூம் மாட்டுக்காரர்கள் வருவார்கள். அந்த மாடு ராஜஸ்தான் பாணியில் ஜரிகை வேலைப்பாடுள்ள உடை அணிந்திருக்கும். தான் வைத்திருக்கும் வித்தியாசமான உறுமி மேளத்தில் ‘விர்ரும்.. விர்ரும்..’ என்று தேய்த்து அடித்தபடியே என்னைப் பார்த்து, “இந்தத் தம்பி ரொம்பத் தங்கமான தம்பியா?” என்று அந்த மாட்டிடம் விசாரிப்பான் அவன். அது உடனே தலையை பலமாக ஆட்டும். எனக்குச் சந்தோஷம் சொல்லி மாளாது. குஷியாக ஓடிப் போய் அரிசி எடுத்து வந்து போடுவேன். பழைய சட்டை, டிராயர் ஏதாவது இருந்தால் கொடுக்கச் சொல்லிக் கேட்பான். இருந்தால் அம்மா எடுத்துத் தருவார். கொண்டு வந்து கொடுப்பேன். “சட்டை கொடுத்த இந்தத் தம்பிக்கு ஒரு வணக்கம் சொல்லு!” என்பான். அதற்கும் அந்த மாடு தலையை ஆட்டும். கும்பிட்டுவிட்டு, மாட்டை ஓட்டிச் செல்வான். அன்று பூராவும் மனசு சந்தோஷமாக இருக்கும் எனக்கு.

குடுகுடுப்பைக்காரன் வந்தால் கொஞ்சம் பயப்படுவேன். கலர் கலராக ஏகப்பட்ட துணிகளை வாரி மேலே போட்டுக்கொண்டு, தலையில் கறுப்புத் துணியில் பெரிய முண்டாசு கட்டிக்கொண்டு, தாடியும் மீசையுமாக இருக்கும் அவன் தோற்றமே என்னைக் கலவரப்படுத்தும். போதாக் குறைக்கு அவன் கையிலுள்ள குடுகுடுப்பை ‘ரொய்யூ... ரொய்யூ... ரொய்யூ... ரொய்ய்ய்...’ என்று காது ஜவ்வு கிழியும்படிச் சத்தமிடும். “நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... இந்த ஊட்டுக்குப் புது விருந்தாடி ஒருத்தரு வரப் போறாரு... விருந்தாடி வரப் போறாரு. அவரால இந்த ஊட்டுக்கு நல்லது நடக்கப் போவுது... நல்லது நடக்கப் போவுது... ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா...” என்று நாலு நல்ல வார்த்தைகள் சொல்வான். கேட்டுவிட்டு, அரிசி கொண்டு வந்து போடுவேன். வாங்கிக்கொண்டு அடுத்த வீட்டை நோக்கிப் போய்விடுவான். இங்கே பயந்துகொண்டு இருந்த நான் அவன் பின்னாலேயே போய், அந்த வீட்டில் மட்டும் ஏனோ தைரியமாக நின்று, அவனை வைத்த கண் வாங்காமல் பார்ப்பேன்.

குரங்காட்டி வந்தால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். சமர்த்தாகச் சட்டை அணிந்த ஒரு குரங்கைப் பார்ப்பதே எங்களுக்கு அத்தனைக் குஷியாக இருக்கும். அதன் முன் ஒரு கழியைக் காட்டி, லங்கை தாண்டச் சொல்வான்; அதுவும் தாண்டும். அதன் கையில் ஒரு அலுமினியத் தட்டைக் கொடுத்து, ‘ஆயாவுக்குக் கூழ் கொண்டு போ’ என்பான். அது அந்தத் தட்டைக் கர்ம சிரத்தையாய்த் தலை மீது வைத்துக்கொண்டு, வட்டமாக ஒரு முறை சுற்றி நடந்து வரும். ‘மாமியார் வேலை சொன்னா என்ன பண்ணுவே நீ?’ என்று கேட்பான். அந்தக் குரங்கு உடனே தரையில் படுத்துக்கொண்டு இறுகக் கண்களை மூடிக் கொள்ளும். எங்களுக்கு அதன் சேஷ்டைகள் வெகு தமாஷாக இருக்கும். பக்கத்து பங்க் கடையில் ஓடிப் போய் வாழைப்பழம் வாங்கி வந்து நேரடியாகக் குரங்கு கையில் கொடுப்பேன். அது வாங்கி, ‘என்ன, சாப்பிடலாமா?’ என்பது போல் எஜமானனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, உத்தரவு கிடைத்ததும் தோலை வெகு அழகாக உரித்துச் சாப்பிடும். குரங்காட்டிக்கு அரிசி மட்டும் போட்டால் போதாது; கையில் ஐந்து பைசாவோ, பத்து பைசாவோ தர வேண்டும். வாங்கிக் கொண்டு, ‘காசு கொடுத்த தம்பிக்கு ஷேக்கண்ட் கொடு!’ என்பான். பயத்துடன் கையை நீட்டுவேன். அந்தக் குரங்கு என் கையைப் பற்றிக் குலுக்கும். வாழைப்பூ மடல்களைத் தொட்டது மாதிரி இருக்கும் அதன் விரல்கள்.

மகாராஜாவின் அடியாள் மாதிரி முண்டாசும், பெரிய மீசையும், கரிய நிற வெற்று உடம்பும், சிவப்பு நிறத்தில் விநோதமான கீழ்ப்பாய்ச்சு வேட்டியும் அணிந்து முரட்டுத்தனமான தோற்றத்தில் ஒருவன் வருவான். அவன் கையில் பெரிய, நீளமான சவுக்கு இருக்கும். துண்டுத் துணிகளைப் பிரிப் பிரியாகச் சுற்றித் தயாரிக்கப்பட்ட அந்தச் சவுக்கு, கைப்பிடியில் தடியாகவும் போகப் போகச் சிறுத்துக்கொண்டே சென்று, நுனியில் மெல்லியதாகவும் இருக்கும். அவன் இப்படி ஓடி, அப்படிக் குதித்துச் சுழன்று ஒரு சுற்றுச் சுற்றி, கையில் இருக்கும் அந்தச் சவுக்கை ஒரு விளாசு விளாசுவான். அது மின்னல் போல் வளைந்து சுழன்று ‘பட்டீர்...’ என்ற ஒரு மகா சத்தத்துடன் அவன் முதுகில் இறங்கும். அவன் முதுகில் ஏற்கெனவே சவுக்கடி பட்ட ரத்தத் தடங்கள் இருக்கும். அவனோடு வந்த பெண்மணி பாத்திரமேந்தி எங்களிடம் வருவாள். அரிசியோ, பைசாவோ போடுவோம். தெருவெல்லாம் ‘பட்டீர்... பட்டீர்...’ சத்தம் ஒலித்துக்கொண்டே போகும்.

நான் வெகுவாகப் பயந்தது புலிவேஷக்காரனிடம்தான். தனியொரு புலி வந்து நான் பார்த்ததில்லை. எப்போதுமே இரண்டு புலிக் கலைஞர்களும், கூட இன்னொரு ஆளுமாகத்தான் வருவார்கள். புலிகளின் வால் அபாரமாக வளைந்து நிற்கும். அசல் புலிக்குண்டான வளைவு நெளிவோடு அந்த மனிதப் புலிகள் இரண்டும் நடை போடுவது நிஜப் புலியையே கிட்டத்தில் பார்த்ததுபோல் த்ரில்லாக இருக்கும். நான் பாதுகாப்பாக என் அப்பா பின்னால் நின்றுகொண்டுதான் புலிக் கலைஞர்களின் ஆட்டத்தைப் பார்ப்பேன். ஒரு பெண் மேளம் அடித்து, நிகழ்ச்சிக்குப் பின்னணி சேர்த்துக்கொண்டு இருக்க, இரண்டு புலிகளுக்கும் சண்டை நடக்கும். அந்தத் தனி ஆள் மீது பாயும். பார்க்கப் பயமாக இருக்குமே தவிர, எட்டத்தில் நின்று எட்டி எட்டிப் பார்க்கும் ஆவல் என்னுள் கிளைக்கும். இந்தப் புலிக்கலைஞனின் வறுமை வாழ்க்கையை மையமாக வைத்து அசோகமித்திரன் ‘புலிக் கலைஞன்’ என்னும் தலைப்பிலேயே ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அருமையான கதை!

என் குழந்தைகளுக்கு இத்தகைய சந்தோஷ அனுபவங்கள் எதுவுமே கிடையாது என்பதை நினைக்க நினைக்க வருத்தமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள், “எப்படிப்பா இந்தப் பாட்டைப் போய் நீ இப்படி ரசிக்கிறே?!” என்று என்னை ஆச்சரியமாய்க் கேட்கிறார்கள்.

அந்தப் பாட்டு... ‘தட்டான் தட்டான் தண்ணிக்குள்ளே... தவளை ரெண்டும் பொந்துக்குள்ளே... சூ சூ மாரி..!’
.

16 comments:

//கார்த்திகை மாசத்தில், கரியையும் உமியையும் கலந்து ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டி, அதை மூன்று கழிகளுக்கு நடுவில் வைத்து சுயமாக மாவலி தயாரித்து, நெருப்புப் பொறிகள் பறக்கக் ‘கார்த்தீ... கார்த்தீ...’ என்று அதை வேக வேகமாகச் சுற்றுவதில் உள்ள மகிழ்ச்சியை//

சிறுவனாக இதை விழுப்புரத்தில் செய்து சுற்றி மகிழ்ந்திருக்கிறேன்.

உங்கள் பதிவை படித்ததும் சிறு வயதில் விளையாடியது அனைத்தும் பிளாஷ் பேக் ஆக என் மனதில் வந்து ஆனந்தக் கூத்தாடிவிட்டு சென்றன. இப்படி ஒரு அருமையான பதிவை படிக்க கொடுத்ததற்கு நன்றி.

ரேகா ராகவன்.
 
சுவையான பதிவு. ... அப்போது டி. வி., விடியோ கேம், கம்ப்யூட்டர் எல்லாம் இருந்திருந்தால் நாம் கண்ணாமூச்சி ரே ரே etc எல்லாம் விளையாடியிருப்போமா? சொல்ல முடியவில்லை. -- கே. பி. ஜனா
 
சார்.. அப்படியே கொஞ்சம் பின்னோக்கி சிறுவனாக பயனித்த அனுபவம்... அருமையான பதிவுக்கு நன்றி ...
 
//“எப்படிப்பா இந்தப் பாட்டைப் போய் நீ இப்படி ரசிக்கிறே?!” என்று என்னை ஆச்சரியமாய்க் கேட்கிறார்கள்.
//
தலைமுறை இடைவெளி, அவர்களுக்கு அதனைப்பற்றி அறிந்து கொள்ளாதிருத்தல் மற்றும் நவீன சூழல். அருமையான இடுகை. நினைவுகளை பின்னோக்கி அழைத்துச்சென்று விட்டீர்கள்.

பிரபாகர்.
 
நீங்க சொன்னதுல 50% அனுபவம் எனக்கு கிடைச்சிருக்கு. எனக்கு இப்போ வயசு 25 ஆகுது. பள்ளி முழாண்டு விடுமுறைல கிராமத்துக்கு போனதால இந்த அனுபவம் எனக்கு கிடச்சுது. ஆனா என்ன கவலைபட வைக்கிற விடயம் என்னன்ன இப்போ என்னோட கிராமமும் மாறிபோச்சு.
 
கவலைப்படாதீங்க..இந்த காலத்து பசங்களும் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். முறைகள் வேறு அவ்வளவே. அவர்களின் பார்வையில் வீடியோகேம்ஸ் ரசிக்கக்கூடிய விளையாட்டு தான்.
 
நண்பரே! மேல சொன்ன விளையாட்டுக்கள் எல்லாம் நான் சிறு பிள்ளையில் விளையாடி மிகவும் மகிழ்ந்தவை. இது போக இன்னும் பல விளையாட்டுக்களும் உள்ளன...
உங்களின் ஏக்கம் எனக்கு திருமணம் ஆகும் முன்பே வந்தது....நமக்கென குழந்தைகள் இருந்தால் அவர்கள் இதையெல்லாம் எங்கு அனுபவிப்பார்கள் என....ம்ம்ம் இப்பொழுதெல்லாம் கிராமங்களில் கூட இந்த விளையாட்டுகள் அழிந்துகொண்டு தான் வருகின்றன....மிக வருந்தத்தக்கது தான்.
 
அவர்கள் மகிழ்ச்சியாய்த்தான் இருக்கிறார்கள் .. நம் பெற்றோர் நம்மைப் பற்றியும் இப்படித்தான் சொல்லிக் கொண்டு இருந்தார்கள் .. ஆனாலும் படிக்கும்போது பால்யம் திரும்பி கொஞ்ச நேரம் குழந்தைத் தனம் எட்டிப் பார்த்தது என்னுள்
 
கால யந்திரத்தில் ஏறி கொஞ்ச நேரம் இளமைப் பருவத்து நாட்களில் உலா வந்தது போல ஓர் உணர்வு!
 
சின்ன வயசில் வெளையாடுன அப்பா அம்மா வெளியாட்டுதான் எனக்கு நாபகம் வந்துச்சு
 
அருமையான பதிவு ரவி சார்.

இந்த மாதிரி விளையாட்டுகளை இன்றைய கிராமத்தில் வளரும் குழந்தைகளும் இழந்து வருகிறார்கள். எப்போது கேபிள் டிவி வந்ததோ அப்போதே கிராமங்களிலும் தற்போது குழந்தைகள் பெரும்பாலும் விஜய், ரஜினி, அஜீத் அல்லது வடிவேலு,விவேக் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனரே ஒழிய இது மாதிரி ஆட்டங்களில் அவ்வளவு ஈடுபாடு தற்போது இல்லை. (சமீபத்தில் நான் சென்றபோது கண்ட நேரடி உண்மை இது).

இதைப் போன்ற, நகரத்தைப் பற்றிய ஒரூ பதிவு இதோ http://balaji_ammu.blogspot.com/2009/10/551.html

- அலெக்ஸ் பாண்டியன்
 
ஹா ஹா கம்ப்யூட்டர்லாம் எப்ப சார் நாம பாத்தோம்? அவங்க எந்த வயசுல பாக்குறாங்க?

சிறுவயதில் கிராமத்தில் வளர்ந்ததால் இந்த எல்லா அனுபவங்களும் கிடைத்திருக்கிறது.

பதிவு மிக அருமை.
 
குழந்தைகளின் உலகம் அழகானது...! அதனை மீள் பார்வை செய்திருப்பது அழகிலும் அழகு. நானும் கிராமத்தான் தான். நீங்கள் சுட்டியுள்ள விளையாட்டுக்களில் பாதியையேனும் அனுபவித்தவன் ரவி. உங்களுடைய பதிவு குழந்தை பிராயத்தை நினைவுபடுத்துகிறது.
 
ரேகா ராகவன்:
எல்லோருமே இப்படி ஒரு இனிமையான இளமைப் பருவத்தைக் கடந்துதான் வந்திருக்கிறோம். அதைச் சற்றே ஞாபகப்படுத்தினேன் என்கிற வரையில் சந்தோஷம் எனக்கு. பின்னூட்டத்துக்கு நன்றி!

கே.பி.ஜனா:
நீங்கள் சொல்வதும் யோசிக்கக் கூடியதுதான். ஆனால், அப்போது இந்தப் பதிவை என் அப்பா எழுதியிருப்பார். அவ்வளவுதான் விஷயம்!

பொன்னியின் செல்வன்:
கருத்துக்கு நன்றி! ஆனால், நீங்கள் இளமைப் பருவத்துக்குப் போக என்னைப் போல ரொம்ப தூரம் பின்னோக்கிப் போக வேண்டியது இல்லை அல்லவா?

பிரபாகர்:
பாராட்டுக்கு நன்றி பிரபாகர்!

ஷமீர்:
கிராமமும் தன் பாரம்பரிய அழகை இழந்து வருவது நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் கவலைப்பட வேண்டிய விஷயம்தான் ஷமீர்!

பின்னோக்கி:
பெயர் பின்னோக்கியாக இருந்தாலும் முன்னோக்கிச் சிந்திக்கிறீர்கள். ஐ லைக் இட்!

ரோஸ்விக்:
இங்கே வந்ததற்கும் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றி!

ரிஷபன்:
குழந்தைப் பருவம் குதூகலமானது. கொஞ்ச நேரமாவது அந்த அனுபவத்தை நீங்கள் பெற இந்தப் பதிவு காரணமாக இருந்தது என்பதில் மகிழ்ச்சி! பின்னூட்டத்துக்கு நன்றி!

கிருபாநந்தினி:
நன்றி கிருபா!

லதானந்த்:
ஹக்..! அதான் லதானந்த்! :-)

அலெக்ஸ் பாண்டியன்:
ஹூம்ம்... பெருமூச்சு விடத்தான் முடிகிறது என்னால்!

மங்களூர் சிவா:
கம்ப்யூட்டரா... டி.வி-யையே நான் இப்பத்தானே பார்த்தேன்! பாராட்டுக்கு நன்றி சிவா!

கிருஷ்ண பிரபு:
‘கிருஷ்ண’ என்றாலே சேட்டைக்காரக் குறும்புக் குழந்தைதான் நினைவுக்கு வருகிறது. உங்கள் குழந்தைப் பருவத்தை என் பதிவு நினைவூட்டியதில் மகிழ்கிறேன். கருத்துக்கு நன்றி!
 
இந்தப் பதிவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து கே.பி.ஜனா, ஐடிஎன்.கார்த்திக், கே.பாலா, கிருபாநந்தினி, ஷ்யாம் கண்டல்லு, பிரபாகர், எம்.வேதா, என்.ஈ.பாஸ், அனுபகவான், சுட்டியார், யு.ஆர்.விவேக், பின்னோக்கி ஆகியோர் ஓட்டளித்திருந்தனர். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
 
இதெல்லாம் தான் தொலைத்த நாட்கள். வரும் தலைமுறை அறிவது கடினமே.