உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Saturday, October 31, 2009

சூ... சூ... மாரி..!

ன்றைய குழந்தைகள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்ற சந்தேகம் அடிக்கடி வருகிறது எனக்கு. பள்ளிக்கூடம், படிப்பு, டியூஷன், வீடு, டி.வி., படிப்பு, கம்ப்யூட்டர் கேம்ஸ், தூக்கம் என்று போய்க்கொண்டு இருக்கிறது என் குழந்தைகளின் வாழ்க்கை. இது எப்படி போரடிக்காமல் இருக்கிறது அவர்களுக்கு என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

என் சின்ன வயதில், நகரத்து வசதிகள் எதுவும் இல்லாத குக்கிராமங்களில் வசித்தாலும், சுதந்திரப் பறவையாக ஓடியாடி வளர்ந்தேன். நுங்கு எடுக்கப்பட்ட பனம் பழத்தின் மையத்தில் துளையிட்டு, வளைந்து கொடுக்கும் சவுக்கங்குச்சியை அதில் சொருகி, புழுதி பறக்கும் தெருக்களில் வெறுங்காலோடு, அந்தப் பனை வண்டியைச் சரசரவென ஓட்டிச் செல்வதில் உள்ள ஆனந்தத்தை என் குழந்தைகள் அறிய மாட்டார்கள். எந்தத் தெருவில், யார் வீட்டுக்குள்ளும் ஓடிப் போய்ப் புகுந்துகொள்ளும் உரிமை இருந்த அன்றைய ‘கண்ணாமூச்சி ரே... ரே...’ விளையாட்டில் உள்ள சுகம் என் குழந்தைகளுக்குத் தெரியாது. கார்த்திகை மாசத்தில், கரியையும் உமியையும் கலந்து ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டி, அதை மூன்று கழிகளுக்கு நடுவில் வைத்து சுயமாக மாவலி தயாரித்து, நெருப்புப் பொறிகள் பறக்கக் ‘கார்த்தீ... கார்த்தீ...’ என்று அதை வேக வேகமாகச் சுற்றுவதில் உள்ள மகிழ்ச்சியை என் குழந்தைகள் அனுபவித்தது கிடையாது. பழைய சைக்கிளின் ரிம்மோ அல்லது டயரோ கிடைத்தால், ஒரு வழவழ குச்சியால் அதை விறுவிறுவென்று அடித்து ஓட்டி, வாயாலேயே ஹாரன் அடித்தபடி ஊரை வலம் வருவதில் உள்ள சந்தோஷம் இன்னதென்று என் குழந்தைகளுக்குத் தெரியாது. புளிய மரத்தடியில் குழி பறித்து, கோடு போட்டு, ‘ஐயப்பன் ஜொள்ளு, அறுமுக தாளம், எழுமா லிங்கம், எட்டண கோட்டை...’ என்று பாடியபடி சின்ன கோலிகள், நத்தை கோலிகளை வைத்துக்கொண்டு நண்பர்களோடு கோலியாடுவதில் இருக்கும் பரவசம் பற்றி என் குழந்தைகள் கேள்விப்பட்டதுகூடக் கிடையாது. ஒரு பையனைக் குனிந்து நிற்கச் சொல்லி, ஓடி வந்து அவன் முதுகில் கையை வைத்து எகிறித் தாண்டும் பச்சைக் குதிரை விளையாட்டை விளையாடி மகிழ்ந்ததில்லை என் குழந்தைகள். ‘இச்சா... ஈயா... காயா...’ என்று கேட்டுக்கொண்டே வானத்தை அண்ணாந்து பார்த்தபடி, ஓட்டாஞ்சில்லு வைத்து ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி ஆடும் பாண்டி ஆட்டம் என்றால் என்னவென்றே தெரியாது என் குழந்தைகளுக்கு. நீர்க் குட்டைக் கரையில் நின்றுகொண்டு, பானை ஓட்டுச் சில்லு ஒன்றை வாகாகத் தண்ணீரில் எறிந்து, அது நீண்ட தூரம் தத்தித் தத்திப் போய் மறுகரையில் தாவி ஏறும் சாகச சந்தோஷத்தை என் குழந்தைகள் அறிய மாட்டார்கள். தோப்பினுள் ஓடியாடி, மரங்களின் மேல் ஏறி விளையாடியதில்லை அவர்கள். பம்ப் செட் கிணற்றினுள் குதித்துக் கும்மாளம் இட்டதில்லை. மாட்டுப் பொங்கல் அன்று கிராமத்தில் உள்ள மாடுகள் அனைத்தும் கொம்புகளில் வர்ணம் பூசிக்கொண்டு, பலூன்களும், சலங்கைகளும் தரித்து, கன குஷியோடு தெருக்களில் சுதந்திரமாக ஜலங்... ஜலங்கென்று ஓடி வரும் காட்சியைபக் கண்டு மகிழ்ந்ததில்லை அவர்கள். மாவிலைகளாலும் கலர் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகள் தெருக்களில் வேக வேகமாக ஓட, அந்த வண்டிகளில் ஏறியுள்ள ஆண்கள், பெண்கள், குமரிகள், கிழவிகள், சிறுவர்கள், தாத்தாக்கள் எல்லாரும் ஏக காலத்தில் ஊரே ரெண்டுபடும்படி கத்திக் கும்மாளம் போட்டு, உற்சாகம் ததும்ப ரேக்ளா ரேஸ் நடத்திய கோலாகலத்தைப் பார்த்ததில்லை என் குழந்தைகள்.

அவை மட்டுமல்ல; வீட்டு வாசலுக்கே வரும் பல சுவாரசியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை என் குழந்தைகள் அறிய மாட்டார்கள்.

மாதம் தவறாமல் ஒரு பாம்புப் பிடாரன் வருவான். வட்டமான இரண்டு மூன்று பிரம்புக் கூடைகள் வைத்திருப்பான். வாசலில் அமர்வான். ஒரு கூடையின் மூடியைத் திறப்பான். சுருண்டு படுத்திருக்கும் நாகத்தைக் கிண்டி எழுப்புவான். மகுடி ஊதுவான். அது கடமையே கண்ணாக ஓரடி உயரத்துக்கு எழுந்து, நிமிர்ந்து இப்படியும் அப்படியும் பார்க்கும். கொஞ்ச நேரம் அவன் மகுடி இசையைக் கேட்டு ரசித்துவிட்டு, அம்மா கொடுத்தனுப்பும் அரிசியைக் கொண்டு போய் அவன் பிரித்துக் காட்டும் துணி மூட்டைக்குள் கொட்டுவேன். இன்னொரு கூடையையும் திறந்து காட்டச் சொல்வேன். அவன் பிகு செய்துகொண்டு, இன்னும் கொஞ்சம் அரிசி போட்டால்தான் திறந்து காட்டுவேன் என்பான். ஓடிப் போய் என் இரண்டு கைகளிலும் கொஞ்சம் அரிசி அள்ளி வந்து போடுவேன். அவன் அந்த மற்றொரு கூடையைத் திறந்து காட்டுவான். அதனுள் ஒரு பாம்பு மூச்சு விட்டுக்கொண்டு படுத்திருப்பது, அதன் ஏறித் தாழும் உடலசைவிலிருந்து தெரியும்.

ஒரு முறை, ஒரு வீட்டார் தங்கள் குழந்தைக்குக் காதில் சீழ் வடிகிறது என்று சொல்லி, அந்தக் குழந்தையைப் பாம்புப் பிடாரன் முன் உட்கார வைத்தார்கள். பிடாரன் ஒரு பாம்பின் வாலைப் பிடித்து அந்தக் குழந்தையின் காதுக்குள் விட்டான். குழந்தை பயத்தில் அழுதது. இரண்டு மூன்று முறை அவன் இப்படிச் செய்துவிட்டு, “இனிமே சீழ் வடியாது” என்று உறுதியளித்தான். அவர்கள் அவனுக்குப் பைசா கொடுத்தார்கள்.

பிடாரன் தவிர, பூம்பூம் மாட்டுக்காரர்கள் வருவார்கள். அந்த மாடு ராஜஸ்தான் பாணியில் ஜரிகை வேலைப்பாடுள்ள உடை அணிந்திருக்கும். தான் வைத்திருக்கும் வித்தியாசமான உறுமி மேளத்தில் ‘விர்ரும்.. விர்ரும்..’ என்று தேய்த்து அடித்தபடியே என்னைப் பார்த்து, “இந்தத் தம்பி ரொம்பத் தங்கமான தம்பியா?” என்று அந்த மாட்டிடம் விசாரிப்பான் அவன். அது உடனே தலையை பலமாக ஆட்டும். எனக்குச் சந்தோஷம் சொல்லி மாளாது. குஷியாக ஓடிப் போய் அரிசி எடுத்து வந்து போடுவேன். பழைய சட்டை, டிராயர் ஏதாவது இருந்தால் கொடுக்கச் சொல்லிக் கேட்பான். இருந்தால் அம்மா எடுத்துத் தருவார். கொண்டு வந்து கொடுப்பேன். “சட்டை கொடுத்த இந்தத் தம்பிக்கு ஒரு வணக்கம் சொல்லு!” என்பான். அதற்கும் அந்த மாடு தலையை ஆட்டும். கும்பிட்டுவிட்டு, மாட்டை ஓட்டிச் செல்வான். அன்று பூராவும் மனசு சந்தோஷமாக இருக்கும் எனக்கு.

குடுகுடுப்பைக்காரன் வந்தால் கொஞ்சம் பயப்படுவேன். கலர் கலராக ஏகப்பட்ட துணிகளை வாரி மேலே போட்டுக்கொண்டு, தலையில் கறுப்புத் துணியில் பெரிய முண்டாசு கட்டிக்கொண்டு, தாடியும் மீசையுமாக இருக்கும் அவன் தோற்றமே என்னைக் கலவரப்படுத்தும். போதாக் குறைக்கு அவன் கையிலுள்ள குடுகுடுப்பை ‘ரொய்யூ... ரொய்யூ... ரொய்யூ... ரொய்ய்ய்...’ என்று காது ஜவ்வு கிழியும்படிச் சத்தமிடும். “நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... இந்த ஊட்டுக்குப் புது விருந்தாடி ஒருத்தரு வரப் போறாரு... விருந்தாடி வரப் போறாரு. அவரால இந்த ஊட்டுக்கு நல்லது நடக்கப் போவுது... நல்லது நடக்கப் போவுது... ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா...” என்று நாலு நல்ல வார்த்தைகள் சொல்வான். கேட்டுவிட்டு, அரிசி கொண்டு வந்து போடுவேன். வாங்கிக்கொண்டு அடுத்த வீட்டை நோக்கிப் போய்விடுவான். இங்கே பயந்துகொண்டு இருந்த நான் அவன் பின்னாலேயே போய், அந்த வீட்டில் மட்டும் ஏனோ தைரியமாக நின்று, அவனை வைத்த கண் வாங்காமல் பார்ப்பேன்.

குரங்காட்டி வந்தால் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். சமர்த்தாகச் சட்டை அணிந்த ஒரு குரங்கைப் பார்ப்பதே எங்களுக்கு அத்தனைக் குஷியாக இருக்கும். அதன் முன் ஒரு கழியைக் காட்டி, லங்கை தாண்டச் சொல்வான்; அதுவும் தாண்டும். அதன் கையில் ஒரு அலுமினியத் தட்டைக் கொடுத்து, ‘ஆயாவுக்குக் கூழ் கொண்டு போ’ என்பான். அது அந்தத் தட்டைக் கர்ம சிரத்தையாய்த் தலை மீது வைத்துக்கொண்டு, வட்டமாக ஒரு முறை சுற்றி நடந்து வரும். ‘மாமியார் வேலை சொன்னா என்ன பண்ணுவே நீ?’ என்று கேட்பான். அந்தக் குரங்கு உடனே தரையில் படுத்துக்கொண்டு இறுகக் கண்களை மூடிக் கொள்ளும். எங்களுக்கு அதன் சேஷ்டைகள் வெகு தமாஷாக இருக்கும். பக்கத்து பங்க் கடையில் ஓடிப் போய் வாழைப்பழம் வாங்கி வந்து நேரடியாகக் குரங்கு கையில் கொடுப்பேன். அது வாங்கி, ‘என்ன, சாப்பிடலாமா?’ என்பது போல் எஜமானனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, உத்தரவு கிடைத்ததும் தோலை வெகு அழகாக உரித்துச் சாப்பிடும். குரங்காட்டிக்கு அரிசி மட்டும் போட்டால் போதாது; கையில் ஐந்து பைசாவோ, பத்து பைசாவோ தர வேண்டும். வாங்கிக் கொண்டு, ‘காசு கொடுத்த தம்பிக்கு ஷேக்கண்ட் கொடு!’ என்பான். பயத்துடன் கையை நீட்டுவேன். அந்தக் குரங்கு என் கையைப் பற்றிக் குலுக்கும். வாழைப்பூ மடல்களைத் தொட்டது மாதிரி இருக்கும் அதன் விரல்கள்.

மகாராஜாவின் அடியாள் மாதிரி முண்டாசும், பெரிய மீசையும், கரிய நிற வெற்று உடம்பும், சிவப்பு நிறத்தில் விநோதமான கீழ்ப்பாய்ச்சு வேட்டியும் அணிந்து முரட்டுத்தனமான தோற்றத்தில் ஒருவன் வருவான். அவன் கையில் பெரிய, நீளமான சவுக்கு இருக்கும். துண்டுத் துணிகளைப் பிரிப் பிரியாகச் சுற்றித் தயாரிக்கப்பட்ட அந்தச் சவுக்கு, கைப்பிடியில் தடியாகவும் போகப் போகச் சிறுத்துக்கொண்டே சென்று, நுனியில் மெல்லியதாகவும் இருக்கும். அவன் இப்படி ஓடி, அப்படிக் குதித்துச் சுழன்று ஒரு சுற்றுச் சுற்றி, கையில் இருக்கும் அந்தச் சவுக்கை ஒரு விளாசு விளாசுவான். அது மின்னல் போல் வளைந்து சுழன்று ‘பட்டீர்...’ என்ற ஒரு மகா சத்தத்துடன் அவன் முதுகில் இறங்கும். அவன் முதுகில் ஏற்கெனவே சவுக்கடி பட்ட ரத்தத் தடங்கள் இருக்கும். அவனோடு வந்த பெண்மணி பாத்திரமேந்தி எங்களிடம் வருவாள். அரிசியோ, பைசாவோ போடுவோம். தெருவெல்லாம் ‘பட்டீர்... பட்டீர்...’ சத்தம் ஒலித்துக்கொண்டே போகும்.

நான் வெகுவாகப் பயந்தது புலிவேஷக்காரனிடம்தான். தனியொரு புலி வந்து நான் பார்த்ததில்லை. எப்போதுமே இரண்டு புலிக் கலைஞர்களும், கூட இன்னொரு ஆளுமாகத்தான் வருவார்கள். புலிகளின் வால் அபாரமாக வளைந்து நிற்கும். அசல் புலிக்குண்டான வளைவு நெளிவோடு அந்த மனிதப் புலிகள் இரண்டும் நடை போடுவது நிஜப் புலியையே கிட்டத்தில் பார்த்ததுபோல் த்ரில்லாக இருக்கும். நான் பாதுகாப்பாக என் அப்பா பின்னால் நின்றுகொண்டுதான் புலிக் கலைஞர்களின் ஆட்டத்தைப் பார்ப்பேன். ஒரு பெண் மேளம் அடித்து, நிகழ்ச்சிக்குப் பின்னணி சேர்த்துக்கொண்டு இருக்க, இரண்டு புலிகளுக்கும் சண்டை நடக்கும். அந்தத் தனி ஆள் மீது பாயும். பார்க்கப் பயமாக இருக்குமே தவிர, எட்டத்தில் நின்று எட்டி எட்டிப் பார்க்கும் ஆவல் என்னுள் கிளைக்கும். இந்தப் புலிக்கலைஞனின் வறுமை வாழ்க்கையை மையமாக வைத்து அசோகமித்திரன் ‘புலிக் கலைஞன்’ என்னும் தலைப்பிலேயே ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அருமையான கதை!

என் குழந்தைகளுக்கு இத்தகைய சந்தோஷ அனுபவங்கள் எதுவுமே கிடையாது என்பதை நினைக்க நினைக்க வருத்தமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள், “எப்படிப்பா இந்தப் பாட்டைப் போய் நீ இப்படி ரசிக்கிறே?!” என்று என்னை ஆச்சரியமாய்க் கேட்கிறார்கள்.

அந்தப் பாட்டு... ‘தட்டான் தட்டான் தண்ணிக்குள்ளே... தவளை ரெண்டும் பொந்துக்குள்ளே... சூ சூ மாரி..!’
.

Monday, October 26, 2009

நட்புக்கு மரியாதை!

‘ஆசிரியர்கள் தினம்’ முடிந்து ரொம்ப நாள் கழித்துதான் முழித்துக்கொண்டு என் ஆசிரியர்கள் பற்றிய பதிவை எழுதினேன். அதே போல், ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று ‘நட்பு தினம்’; அன்றைக்கு என் நண்பர்களைப் பற்றி எழுதியிருக்கலாம். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, சாவகாசமாக இன்றைக்கு எழுதுகிறேன்.

‘நட்புக்கு மரியாதை இவ்வளவுதானா?’ என்று சிலர் முகம் சுளிக்கலாம். நியாயம்தான்! நட்பு என்றில்லை, பலரோடு கலந்து பழகுவதென்பது ஒரு கலை. அது எனக்குக் கை வரவே இல்லை. அபூர்வமாக வரக்கூடிய நெருங்கிய உறவினர் யாரேனும் வந்து ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார். எனக்கு உடனே எழுந்து போய், “அடடே! வாங்க, எப்ப வந்தீங்க? வீட்ல எல்லாரும் சௌக்கியமா? பேரனுக்குக் காது குத்தியாச்சு இல்லே? அத்தை, அம்மா எல்லாம் சொல்றானா? உங்க பெரிய பையன் இப்ப குவைத்லதானே இருக்கான்? அடிக்கடி போன்ல பேசிக்கிட்டிருக்கானா?” என்றெல்லாம் கலகலப்பாகப் பேசி, விசாரிக்கத் தோன்றுவதே இல்லை. விசாரிப்பது இருக்கட்டும், எழுந்து போகவே தோன்றாது. நான் அறைக்குள் என் வேலையைப் பார்த்துக்கொண்டு சிவனே என்றிருப்பேன்.

என் மனைவி இதில் கெட்டிக்காரி. எப்போதோ ஒருமுறை பார்த்துப் பேசியவர்களையும் ஞாபகம் வைத்துக்கொண்டு, “வாங்க, நல்லாருக்கீங்களா? அப்பா, அம்மாவை இங்கேயே வளசரவாக்கம் வீட்டுக்கு உங்களோடயே கூட்டிட்டு வந்து வெச்சுக்கப் போறேன்னு சொன்னீங்களே, இப்ப அவங்க உங்களோடதான் இருக்காங்களா? பெரியவன் இப்போ நாலாவது படிக்கிறானா? குட்டியா பார்த்தது!” என்று அடித்து விளாசுவாள். எனக்கே அதில் பல விஷயங்கள் புதுசாக இருக்கும்.

சின்ன வயதிலிருந்தே நான் ரொம்ப ரிசர்வ்ட் டைப். புதுசாக ஒருத்தரிடம் போய் மணி கேட்கவேண்டுமென்றாலும்கூடக் கேட்க மாட்டேன். பத்திரிகைத் துறைக்கு வந்த பின்பு எவ்வளவோ மாறியிருக்கிறேன், என்னை நானே மாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றாலும், ஆண்டாண்டு காலமாக உடம்பில் ஊறி வந்த பழைய புத்தி போகுமா?

சரி, நட்புக்கு வருகிறேன். நட்புக்காகவே திருவள்ளுவர் நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களில் 50 குறள்கள் எழுதியிருக்கிறார். பொதுவாக, ஒருவன் கஷ்டத்தில் இருக்கும்போது ஓடி வந்து உதவுவதுதான் நட்புக்கு இலக்கணம்; அப்படி உதவாதவர் நண்பரே இல்லை; அத்தகையோரின் நட்பைக் கொள்ளாதிருப்பதே நல்லது என்று சொல்கிறார்.

வள்ளுவரை விமர்சிக்க எனக்கு வயசு பத்தாது! ஆனால், அவர் சொல்கிற இலக்கணத்தில் என் நண்பர்களைத் தேர்ந்தெடுக்க நான் விரும்பவில்லை. என் மனசுக்குப் பிடித்தமானவர்கள், என் அலைவரிசையோடு ஒத்துப் போகின்றவர்கள் அனைவரையுமே நான் என் மனத்துக்குள் நண்பர்களாக வரித்துக் கொள்கிறேன். அவர்கள் எனக்கு ஓடி வந்து உதவி செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி! ‘கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பது ஓர்கோல்’ என்று வள்ளுவர் சொல்லுவது போல அதை ஓர் அளவுகோலாக வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அதே போல, என் நண்பர்கள் என்று என் மனத்தில் நான் வரித்திருப்பவர்களுக்கு ஒரு கஷ்டம் வந்தால், என் சக்திக்குட்பட்டும், சூழ்நிலைக்குட்பட்டும் அவர்களுக்கு என்னால் என்ன நல்லது செய்ய முடியுமோ அதைக் கண்டிப்பாகச் செய்வேன். மற்றபடி, அவர்களுக்காகப் பெரிய தியாகம் எதையும் என்னால் செய்ய இயலாது.

பொதுவாக, அப்போதைக்கு அலுவலகத்தில் சக பணியாளர்களாக இருப்பவர்கள்தான் பெரும்பாலும் நண்பர்களாக இருக்கிறார்கள். முன்னே எப்போதோ என்னுடன் படித்த நெருங்கிய நண்பர்கள் பலருடன் தொடர்பே விட்டுப் போய்விட்டது. அந்த வகையில், இன்றைய தேதியில் நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ள எனக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று, நேற்றைக்கு(ம்) மூட்டைக்கடியில் தூக்கம் வராமல் விடிய விடியப் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தபோது யோசித்துக் கொண்டு இருந்தேன். தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், ஓரிரு நாட்கள் மட்டுமே சந்தித்தவர்கள், உறவினர்கள் என யாரையும் இந்த லிஸ்ட்டில் சேர்க்காமல், எனக்கு ஏதாவது ஒரு கஷ்டம் என்றால், ‘ஐயோ, பாவமே! அவனுக்கா இந்த கதி!’ என்று மனசுக்குள் உண்மையாகவே ஒரு கணம் நினைப்பவர்களைப் பட்டியல் இட்டுள்ளேன்.

இந்தப் பட்டியலில், எனக்குக் கஷ்டம் வந்த காலத்தில் மிகப் பெரிய அளவில் பண உதவி செய்தவர்களும் இருக்கிறார்கள். உதவி செய்ய மனம் இருந்தும், இயலாமை காரணமாக உதவாதவர்களும் இருக்கிறார்கள். ஆதரவாகப் பேசி தைரியம் சொன்னவர்களும் இருக்கிறார்கள். எந்தவித ரியாக்‌ஷனும் காட்டாதவர்களும் இருக்கிறார்கள். மேலே சொன்ன நான்கு வகைகளில் எந்த ஒரு வகையிலும் சேர்ப்பதற்குரிய சமய சந்தர்ப்பம் அமையாதவர்களும் இருக்கிறார்கள்.

மார்க்கபந்து: இவரைப் பற்றித் தனியே ஒரு பதிவே எழுதியிருக்கிறேன். ஒரு வாசகராக, ஆனந்த விகடனில் வெளியான என் சிறுகதையை விமர்சித்துக் கடிதம் எழுதிய காலத்திலிருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிற நட்பு. இன்றைக்கு நான் இத்தனை உயர் நிலையில் இருப்பதற்கு முதல் காரணம் இவர்தான். என் வளர்ச்சியில் ஆத்மார்த்தமாக மகிழ்ச்சி கொள்கிற ஆத்மா. இப்போது என்னைவிட என் தந்தையாருடன்தான் அதிக நட்பு பாராட்டிக் கொண்டு இருக்கிறார்.

புஷ்பாதங்கதுரை: பெருமதிப்புக்குரிய சாவி சாரிடம் என்னை அறிமுகப்படுத்தி, அவரின் பத்திரிகையில் என்னைச் சேர்த்துவிட்டவர். சுமார் 25 ஆண்டுகளாக என் மீது பரிவும் பாசமும் கொண்டு இருக்கிறார். நான் கதைகள் எழுதத் தொடங்கிய புதிதில், ஒரே நேரத்தில் 13 பத்திரிகைகளில் இவரின் தொடர்கதைகள் வெளிவந்துகொண்டு இருந்ததைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன்.

ஹரன்: இப்போது விகடனில் கார்ட்டூன், இரண்டு பக்க மெகா ஜோக் போட்டிக்கான படம் மற்றும் பல படங்களை வரைந்துகொண்டு இருப்பவர். சாவி காலத்திலிருந்து என் நண்பர். என்னைப் போலவே மிகவும் ரிசர்வ்ட் டைப். அந்தக் காலத்தில் ‘எட்டுக்குப் போட்டி’ என்று சாவியில் வரைந்து என்னைப் பிரமிக்க வைத்தவர். அதுதான் இன்றைக்கு விகடனில் உருமாறி மெகா ஜோக் போட்டியாகியிருக்கிறது. இவரின் கார்ட்டூன் படங்கள் ஆங்கில கார்ட்டூனிஸ்ட் மேதைகளின் படங்களுக்கொப்பான நவீன அழகுடன் விளங்கும். பற்றற்ற ஒரு ஞானி போன்ற மனமும் குணமும் உள்ளவர். திடுமென்று ஒருமுறை விகடனில் அசத்தலாக ஒரு சிறுகதை வேறு எழுதி என்னை ஆச்சரியப்படுத்திவிட்டார்.

மதிக்குமார்: தினமணி நாளேட்டின் கார்ட்டூனிஸ்ட். ஆரம்பத்தில் இவர் மக்கள் குரலில் வரைந்துகொண்டு இருந்த சமயத்தில், சாவியில் வந்து என்னைச் சந்தித்தார். இவரது கார்ட்டூன்களைப் பார்த்துப் பிரமித்துப் போனேன். ஆசிரியர் சாவியிடம் அறிமுகப்படுத்தினேன். திறமைசாலிகள் எங்கே இருந்தாலும் அள்ளிக் கொள்பவர்தானே சாவி? ஹரனுக்குப் பிறகு, மதியின் கார்ட்டூன்கள் சாவியில் வெளியாகத் தொடங்கின. எப்படித்தான் அவர் மூளையில் உதிக்குமோ, சாவியிடம் கார்ட்டூன் ஐடியாக்களாக வந்து கொட்டுவார். எதை எடுப்பது, எதை விடுவது என்று ஆசிரியர் சாவி திணறிப் போவார். ஒருமுறை இவர் காண்பித்த எட்டு கார்ட்டூன்களையுமே விட மனசு வராமல் சாவியில் எட்டுப் பக்கங்களுக்கு வெளியிட்டுவிட்டோம்.

பாக்கியம் ராமசாமி:
இவரது அப்புசாமி கதைகளுக்கு என் அப்பா அந்தக் காலத்தில் பயங்கர விசிறி. அப்பா சொல்லி, குமுதத்தில் வெளியான ‘அப்புசாமியின் ஆயிரத்தொரு இரவுகள்’ தொடர்கதையைப் படித்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அப்புசாமி-சீதாப்பாட்டி கதைகள் காமிக்ஸ் புத்தகமாக வெளியானபோதும் வாங்கிப் படித்திருக்கிறேன். இவரை நேரில் சந்தித்து இவரின் அன்புக்குப் பாத்திரமாவேன் என்று கனவிலும் கருதியதில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக என்பால் அன்பு செலுத்தி வருபவர். இவரோடு பேசிக்கொண்டு இருந்தால் நேரம் போவதே தெரியாது.

அனுராதாசேகர்: சாவியில் எனக்கு உதவியாளர்களாக வந்து சேர்ந்தவர்களில் இன்றளவும் அதே தோழமையோடு பழகிக்கொண்டிருப்பவர். உரிமையோடு என் குறைகளை எடுத்துச் சொல்வார். ‘எவ்வளவு சொன்னாலும் நீங்க திருந்த மாட்டிங்க. உங்க வீட்டுக்கு வந்து உஷா கிட்டே உங்களைப் பத்திப் போட்டுக் கொடுக்கிறேன்’ என்று போலியாக மிரட்டுவார். மங்கையர் மலர் பத்திரிகையின் பொறுப்பாசிரியையாக இருக்கிறார்.

அனுராதாரமணன்: அறிமுகமே தேவையில்லை. அற்புதமான எழுத்தாளர். ஒரு ‘சிறை’ கதை மூலம் ஒட்டுமொத்த தமிழ் வாசகர்களின் மனங்களையும் சிறைப்பிடித்தவர். சாவியில் இவரது தொடர்கதையைக் கேட்டு வாங்கிப் பிரசுரித்திருக்கிறேன். ஆனாலும், அப்போது இவருடன் அதிகம் பழக்கமில்லை. விகடனுக்கு வந்த பிறகுதான் இவரின் நட்பு கிடைத்தது. போனில் தொடர்பு கொண்டு பேசினால், இரண்டு மணி நேரத்துக்கும் குறையாமல் பேசுவார். தான் பெரிய எழுத்தாளர் என்கிற பந்தா ஒரு சிறிதும் இல்லாதவர். இவர் என்னோடு பேசுவதற்குக் காரணமே தேவையில்லை. வீட்டில் வத்தக்குழம்பு செய்வதில் தொடங்கி, வெளிநாட்டிலிருந்து பேரன் வந்திருப்பது, உடம்பு சரியில்லாமல் சில நாட்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தது என எது பற்றி வேண்டுமானாலும் பேசுவார். கலகலப்பும் சுறுசுறுப்பும் நிறைந்த பெண்மணி. மனம் சோர்ந்திருக்கும் வேளையில் இவரோடு போனில் தொடர்பு கொண்டு பேசினால் போதும், இவரின் கலகல பேச்சிலேயே நம் துயரங்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய்விடும்.

பொன்ஸீ: விகடன் பிரசுரத்தில் பொறுப்பாசிரியராக இருக்கிறார். புகைப்படக் கலைஞர், லே-அவுட் ஆர்ட்டிஸ்ட், துணுக்கு எழுத்தாளர், சிறுகதை மற்றும் தொடர்கதை எழுத்தாளர், பத்திரிகையாளர் என இவர் ஓர் ஆல்ரவுண்டர். பார்த்த எவரையும் உடனே நட்பு கொள்வதில் எனக்கு நேர் எதிர். ‘வடவீர பொன்னையா’ என்கிற புனைபெயரில் இவர் எழுதிய ‘வருச நாட்டு ஜமீன் கதை’, வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’ ஆகிய நாவல்களின் தரத்துக்குச் சமம். சமீபத்தில் அரசு நூலகத்துறையிலிருந்து இவரின் ‘வருச நாட்டு ஜமீன்’ கதைக்கு ராயல்டியாக ஒரு பெரிய தொகை வந்தது. பாவி மனுஷன், அதில் பாதியை நண்பர்களையெல்லாம் அழைத்து ஸ்டார் ஹோட்டல்களில் விருந்து வைத்துக் கொண்டாடி மகிழ்ந்து தீர்த்துவிட்டார்.

ரா.கண்ணன்: இவரின் நட்பு வட்டம் பெரிது. ஆனால், இவரின் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் இவரின் சம வயதுக்காரர்கள்தான். வயதில் சீனியர்களை ஒரு மரியாதையான எல்லையில் வைத்துப் பழகுவது இவர் பாணி. எனக்கான எல்லையை எவ்வளவு தூரத்தில் அல்லது அருகில் வைத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் என் மனசுக்குள் நண்பராக வைத்திருப்பது இவரையும்தான். ஒரு பெரிய பத்திரிகையின் இணை ஆசிரியராக இருந்துகொண்டு, நண்பர்களின் படைப்புகள் தகுதியில்லாமல் இருக்கும்பட்சத்தில் அவர்களின் முகம் கோணாமல், அதே சமயம் தீர்மானமாக நிராகரிப்பதென்பது ஒரு சவாலான விஷயம். அதை எப்படி இவர் சாதுர்யமாகச் செய்து வருகிறார் என்பது எனக்கு இன்றளவும் ஆச்சரியமான விஷயமாகவே இருக்கிறது.

பி.ஆரோக்கியவேல் (வேல்ஸ்):
சாஃப்ட்வேர் கம்பெனி ஆசாமி போன்று மிடுக்காக இருக்கும் இவருக்குள் இருப்பது குழந்தை மனது. ஒபாமாவே ஆனாலும் சளைக்காமல் போய் நுனி நாக்கு ஆங்கிலத்தில் அசத்தலாகப் பேசி பேட்டி எடுத்து வந்துவிடுவார். என் ஆங்கில அறிவை இவரிடம்தான் அடிக்கடி சந்தேகங்கள் கேட்பதன் மூலம் விருத்தி செய்து கொள்கிறேன்.

ராஜரத்தினம்: பார்த்தால் சீரியஸான ஆசாமி போல் இருப்பார். ஆனால், அப்போதைக்கப்போது இவர் தூக்கிப் போடும் கமெண்ட்டுகள் படு காமெடியாக இருக்கும். நண்பர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். சிவாஜி ரசிகர், டி.எம்.எஸ். பிரியர் என்பதிலிருந்து எங்கள் இருவரின் கருத்துக்களும் எண்ணங்களும் ஒன்றாகவே இருக்கின்றன.

பாண்டியன்: விகடனின் தலைமை லே-அவுட் ஆர்ட்டிஸ்ட். மதுரைக்காரர். முன்பு குமுதம் பத்திரிகையில் பணியாற்றியவர். சாவியில் பிரபலங்களைப் பற்றி வாராவாரம் கட்டுரைகள் வெளியிட்டபோது, ஓவியர் அரஸ்தான் அந்தப் பிரபலங்களின் கேரிகேச்சர்களை வரைந்தார். அரஸ்ஸைப் பற்றியே ஒரு வாரம் கட்டுரை வெளியிட்டபோது, அதற்குப் பாண்டியன் வரைந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி, இவரிடமிருந்து படம் வரைந்து வாங்கி வந்து தந்தார். ஓவியர் அரஸ்ஸை இவர் வரைந்திருந்ததைப் பார்த்து அசந்துவிட்டேன். அசாத்திய திறமைசாலி. அவ்வப்போது மதுரைக்காரர்களின் குசும்பு பற்றியும் செய்யும் லந்துகள் பற்றியும் அலுவலகத்தில் இவர் கொஞ்சம்கூடச் சிரிக்காமல் மிமிக்ரி செய்து காட்டுவார். பார்க்கிற எங்களுக்குப் பகீர் சிரிப்பு தொற்றிக் கொள்ளும்.

அரஸ்: விகடனில் (1980-ல்) என் கதை ஒன்றுக்கு இவர் போட்டிருந்த படத்தில் மயங்கி, இவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். பின்பு சாவியில் வந்து நான் பணியில் சேர்ந்ததும், இவர் ஒரு முறை அங்கே வந்து என்னோடு பேசிக்கொண்டு இருந்தபோது, ஒரு ரஜினி ரசிகர் ரஜினிகாந்த்திடம் பேசுகிற வாய்ப்பு கிடைத்தால் எந்த மன நிலையில் இருப்பாரோ அப்படி இருந்தேன். பல ஓவியர்கள் ஆண்களையும் லேசாக பெண்மை கலந்து இருக்கும்படிதான் வரைவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அரஸ் வரைகிற ஆண் அத்தனை மிடுக்காக, ஆண்மை நிரம்பியவனாக இருப்பான்; பெண் அத்தனை அழகாக, நளினமாக இருப்பாள்.

ஸ்யாம்: ஓவியர் ஸ்யாமை சாவி பத்திரிகையிலேயே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன். ஆனால், அப்போது அதிகம் பழக்கம் இல்லை. ஆனால், மற்ற பத்திரிகைகளில் அவரின் படங்களைப் பார்த்து வியப்பதுண்டு; ரசிப்பதுண்டு. விகடனுக்குள் அவரின் படங்களைக் கொண்டு வந்தவன் என்கிற பெருமை எனக்குண்டு.

சிவகுமார்-கீதா தம்பதி: சிறிது காலம் ‘அமுதசுரபி’ பத்திரிகையில் வேலை செய்தபோது கிடைத்த அறிமுகம். அத்தனை அந்நியோன்னிய தம்பதி. ஒருவருக்கொருவர் கலாய்த்துக்கொள்ளும் அழகே தனி! கீதா ஸ்ரீராம் சிட்ஸில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். சிவகுமாரும் அங்கே கிராஃபிக் டிசைனராக இருக்கிறார். மிக அமைதியான சுபாவம் கொண்டவர் சிவகுமார். கீதா அவருக்கு நேர் எதிர். அவர் நம்மோடு சிறிது நேரம் பேசிவிட்டுப் போனால், பெரிய புயல் மழையே அடித்து ஓய்ந்தது போலிருக்கும்.

எஸ்பி.அண்ணாமலை: சன் டி.வி-யில் பணியாற்றுகிறார். இவர் முன்பு விகடனில் பணியாற்றிய காலத்திலிருந்து பழக்கம். நட்புக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுப்பார். தம்மால் முடிந்த உதவிகளை வலியப் போய்ச் செய்யக் கூடியவர். நான் சாலிகிராமத்தில் சொந்தமாக ஒரு பிளாட் வாங்கியதற்கு இவரின் தூண்டுதலும் உதவியுமே காரணம். எனக்கு அந்த அளவுக்கெல்லாம் சமர்த்து பத்தாது!

முருகேஷ்பாபு: நிறுத்தி நிதானமாகப் பேசுவார். நட்புக்கு மரியாதை கொடுப்பவரில் முக்கியமானவர் இவர். நான் விகடனில் சேர்ந்த சமயத்தில் இவர் அங்கே இளம் நிருபராக இருந்தார். ‘பஞ்ச தந்திரம்’ படத்தில் வருகிற ஐவர் குழு போல இவர் பிரெஞ்ச் தாடி, மீசை வைத்திருந்தார். எதிர் சுவர் ஓரமாக உட்கார்ந்து வைத்த கண் வாங்காமல் என்னையே குறுகுறுவென்று பார்த்தார். கொஞ்சம் பயமாகக்கூட இருந்தது எனக்கு. பழகத் தொடங்கிய பின்னர், என் பயத்தை இவரிடமே சொல்லிச் சிரித்திருக்கிறேன்.

சிம்புதேவன்: இயற்பெயர் செந்தில்குமார். இம்சை அரசன் எடுத்து எங்கேயோ போய்விட்டார். ஆனால், இன்றைக்கும் விகடனில் நான் அன்று பார்த்த அதே சிம்புவாக, எந்த பந்தாவும் அலட்டலும் இல்லாமல் பழகுகிறார். எந்த ஒரு விஷயமாக இவருக்கு நான் போன் செய்தாலோ அல்லது இவர் எனக்கு போன் செய்தாலோ, என் மகன் ரஜ்னீஷ் என்ன செய்கிறான் என்று அவனை விசாரிக்காமல், அவனோடு பேசாமல் போனை வைக்க மாட்டார். என் மகன் படம் வரைவதில் மிகவும் ஆர்வம் உள்ளவன் என்பது முக்கிய காரணம். அவனது நலன் மீது மிகுந்த அக்கறை இருப்பது இவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படும்.

மனோகர்:
ஆர்ட்ஸ் காலேஜ் புரொபசர். இவருக்கும் என் மீது அன்பும், என் மகன் மீது அக்கறையும் உண்டு. இவரின் வீட்டில் எப்போதும் இவரின் மாணவர்கள் பலர் வந்து ஓவியம் வரைந்து கொண்டு இருப்பார்கள். பல சிறார்கள் ஓவியம் பழகிக் கொண்டு இருப்பார்கள். என் மகனையும் லீவு நாளில் அனுப்பி வைக்கும்படி பலப்பல முறை சொல்லி அலுத்துவிட்டார். நான் அனுப்பாததில் இவருக்கு மிக மிக வருத்தம். பையனின் ஓவியத் திறமை வளர்ச்சி அடைய நானே முட்டுக் கட்டையாக இருக்கிறேன் என்பது இவர் எண்ணம். அதனால் என் மீது கோபம்!

ரமேஷ்வைத்யா:
அற்புதமான எழுத்தாளர்; கவிஞர்; முக்கியமாக, நல்ல இதயம் கொண்டவர். மிகத் திறமைசாலி. என்னை உரிமையோடு ‘அண்ணா’ என்றுதான் கூப்பிடுவார். சில மாதங்கள் சாலிகிராமத்தில் என் ஃபிளாட்டில் இவர் குடியிருந்தார். ஒரு சமயம். “இதை எனக்கு விலைக்குத் தருகிறீர்களா?” என்று கேட்டார். எனக்கு எந்த செண்டிமெண்ட்டும் இல்லை என்பதால், ‘ஆகட்டும், தருகிறேன்’ என்றேன். பேங்க்குக்குக் கூடச் சென்று ஃபார்மாலிட்டீஸ் பற்றிக் கேட்டறிந்துவிட்டு வந்தோம். பின்னர், “கையில் ஒரு தொகை சேர்த்துக்கொண்டு பின்னர் உங்களிடம் இது பற்றிப் பேசுகிறேன்” என்றார். ஆனால், பேசவில்லை. குடியின் பிடியிலிருந்து இவர் மீண்டு, திரையுலகில் அல்லது இலக்கிய உலகில் ஓர் உயரிய நிலைக்கு வரவேண்டும். அப்போதுதான் இந்த அண்ணனுக்கு மகிழ்ச்சி!

ரமேஷ்குமார்: பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் தம்பி. மிக மென்மையாகப் பேசுவார். மிக அன்பாகப் பழகுவார். மிக மிக மரியாதை கொடுப்பார். விகடனில் முன்பு இவர் வேலை செய்துகொண்டு இருந்தபோது இவருடன் நான் அதிகம் பழகியதில்லை. இப்போதுதான் பழகுகிறேன். முன்பு ரமேஷ்வைத்யாவுக்கு நான் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தபோது, அந்தப் பக்கமே நான் சென்றதில்லை. வீட்டுக்காரன் என்கிற ஹோதா எனக்குப் பிடிப்பதில்லை. இப்போதும் அது போலத்தான். “வாங்கன்னா வரமாட்டேங்கிறீங்களே சார்!” என்று அலுத்துக் கொள்கிறார் ரமேஷ்குமார். இவருக்காகவாவது அவசியம் ஒரு முறை போய் தலை காண்பித்துவிட்டு வரவேண்டும்.

ட்டியல் நீள்கிறது. பலரின் பெயர் விடுபட்டிருக்கலாம். குறிப்பாக குளுகுளு ஊட்டி நண்பர்கள் உதாபார்த்திபன் மற்றும் லதானந்த்! இவர்களைப் பற்றி ஏற்கெனவே விரிவாக வேறொரு தனிப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். மற்றபடி சரோஜ் நாராயண்சுவாமி, எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், சுபா, ஓவியர் கோபுலு, மாயா, ஜெயராஜ், ஞாநி, பாஸ்கர்சக்தி என்று என் மீது அபிமானமும் நல்ல நட்பும் கொண்டவர்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

‘இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு’ என்கிறார் வள்ளுவர். அதாவது, இவர் என்னிடம் இப்படி நடந்துகொள்கிறார், இவரிடம் நான் இப்படி நடந்துகொள்கிறேன் என்று விவரித்துச் சொன்னாலும், அந்த நட்பு சிறப்பிழந்துவிடுமாம்.

அய்யனின் இந்தக் கருத்தோடு நான் உடன்படுகிறேன். எனவேதான், அதிகம் விவரிக்காமல் இத்துடன் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்.
.

Saturday, October 24, 2009

சீச்சீச்சீ சீரியல்கள்!

தொலைக்காட்சி சீரியல்களை நான் பார்ப்பதில்லை. பார்க்காமல், உள்ளே நான் சமர்த்தாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டு இருந்தாலும், ஹாலில் இருந்து வரும் அலறல் தீம் பாட்டுக்களும், அழுகை ஒப்பாரிகளும், அலட்டல் சவால்களும் என் செவிப்பறையைத் துளைத்து, ரணகளப்படுத்திக் கொண்டு உள்ளே போய் அதிர்கின்றன. இந்தக் கஷ்டத்துக்குதான் நான் காதே செவிடானாலும் பரவாயில்லை என்று யு.எஸ்.பி. எம்.பி-3 போட்டுக்கொண்டு பாட்டுக் கேட்பது! செவிடாகிற காது, நல்ல பாட்டுக்களைக் கேட்டுத்தான் செவிடாகட்டுமே!

தாய்க்குலங்கள் விழுந்து விழுந்து பார்க்கும்படியாய் அப்படி என்னதான் இருக்கிறது சீரியல்களில் என்று எனக்குப் புரியவில்லை. சாப்பிடும்போதோ, அல்லது காபிக்காகக் காத்திருக்கும்போதோ, ஹாலில் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் டி.வி-யில் ஏதாவது ஒரு சீரியல் காட்சியைப் பார்க்க நேரிடும். எந்தக் காட்சியும் புதுசாகவே இராது. திரும்பத் திரும்பப் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன காட்சிகளாகவேதான் இருக்கும்.

கோட்டா சீனிவாசராவே தேவலை என்கிற அளவுக்கு இரண்டு பெண்கள், ‘ஏய்... ஏய்...’ என்று எதிரெதிரே விரல் விட்டு ‘உன்னை அழிச்சுடறேன் பார்! உன்னைத் தொலைச்சுடறேன் பார்!’ என்று சவால் விட்டுக்கொண்டு இருப்பார்கள். ஒவ்வொருத்திக்கும் 50 வயதுக்கு மேல் இருக்கும். ‘பாட்டிகளுக்கு ஏன் இந்த பஞ்ச் டயலாகெல்லாம்?’ என்று கேட்கத் தோன்றும்.

முன்பெல்லாம் சினிமாக்களில் வில்லனாக நம்பியாரோ, அசோகனோ, அல்லது அவர்களைப் போன்ற வில்லன் நடிகர்களோதான் வந்து, யாரையாவது கொல்கிற சதித் திட்டம் பற்றிப் பேசுவார்கள். சபதம் எடுப்பார்கள். அப்போது அவர்கள் வெளிப்படுத்துகிற கோபமும் முறைப்பும் போதாதென்று, அவர்களின் முகத்தில் கீழ்ப்பக்கத்திலிருந்து சிவப்பு வெளிச்சம் பாய்ச்சி, இன்னும் கொடூரமாகக் காட்டுவார்கள். சீரியல்களில் அதெல்லாம் இல்லை. காலேஜ் போகிற டீனேஜ் பெண் கூட சர்வ சாதாரணமாகக் கொலை செய்துவிட்டு, தேமே என்றிருக்கிறது. குடும்பத்துக்குத் தெரிந்தால், அவர்களும் ஒன்றும் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். ‘அடடா! அவசரப்பட்டுட்டியேம்மா! என் கிட்டே சொல்லியிருந்தா, அவனை நானே கொன்னிருக்க மாட்டேனா? சரி, போகட்டும்... இனிமே யாரையும் கொல்லாம பார்த்து நடந்துக்க’ என்று பக்குவமாக எடுத்துச் சொல்வார்கள்.

சவால் இல்லையென்றால் அழுகை! யாராவது இளம் பெண் ஒருத்தி, எவனிடமாவது ஏமாந்து, கற்பைப் பறிகொடுத்து, விக்கி விக்கி அழுதுகொண்டு இருப்பாள். அவளைத் தேற்ற வரும் பெண்ணும் சேர்ந்து அழுவாள். இப்படியாக ஒரு கும்பலே கூடி ஒப்பாரி வைத்து அழும்.

சீரியல் கேரக்டர் யாராவது செத்துவிட்டால், டைரக்டருக்குக் கொண்டாட்டம்தான். பின்னே, அந்த ஒப்பாரிகளை வைத்தே இரண்டு மூன்று நாள் ஓட்டிவிடலாமே! பிணத்தைக் குளிப்பாட்டுவது, காது, மூக்கில் பஞ்சு வைப்பது, பாடை கட்டுவது, பானை உடைப்பது என்று சுடுகாட்டுக்குக் கொண்டு போய்க் கொளுத்துவது வரையில் எல்லாவற்றையும் விலாவாரியாகக் காட்டாவிட்டால் ஜென்மம் சாபல்யம் ஆகாது டைரக்டருக்கு!

இதெல்லாம் போக, நான் எப்போது எந்த சீரியல் காட்சியைப் பார்த்தாலும், நம்ப முடியாத, லாஜிக் இல்லாத சம்பவங்கள்தான் கண்ணில் படுகின்றன.

உதாரணமாக, அவசரமாக யாராவது ஒருவர் ஆட்டோவைக் கை காட்டி நிறுத்துவார். எங்கே போகவேண்டும் என்று இவரும் சொல்ல மாட்டார்; அவரும் கேட்க மாட்டார். ரேட் பேச மாட்டார். ஆட்டோ கிளம்பியதும்தான் ‘எங்கே போகணும் சார்?’ என்று கேட்பார். இவர் எந்த இடம் சொன்னாலும் மறுக்காமல் போவார். எந்த சீரியல் ஆட்டோக்காரரும் ‘இங்கே வர மாட்டேன்’ என்று மறுப்பது இல்லை. ‘மீட்டருக்கு மேல் போட்டுக் கொடுங்க’ என்று கேட்பதில்லை. அதில் பிரயாணம் செய்கிறவரும் தங்கள் இடம் வந்தவுடன், கையில் கிடைக்கிற ரூபாயைக் கொடுத்துவிட்டு விடுவிடென்று வந்துவிடுவார். மீட்டரைப் பார்த்தாரா, மிச்சம் வாங்கினாரா... ஒன்றும் கிடையாது.

அப்படித்தான், யாராவது தேடிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தால், வாசல் கதவு திறந்தே கிடக்கும். தேடி வருபவர் ஹாலுக்கு வந்தால் அங்கே ஒருவர் கூட இருக்க மாட்டார். இரண்டு மூன்று குரல் கொடுத்ததும்தான், இந்த அறையிலிருந்து ஒருவர், அந்த அறையிலிருந்து ஒருவர் என நாலைந்து பேர் வருவார்கள்.

ஒருவர் எந்த ஒரு காரணத்துக்காகவாவது, தன் அருகில் இருப்பவரைப் பைத்தியம் என்று எதிரே இருப்பவருக்கு ஜாடை காட்டித் தெரிய வைப்பார். உடனே, அதுவும் உண்மைதானோ என்று எதிராளி இவரைச் சந்தேகத்தோடு பார்த்தால், அதற்கேற்றாற்போல் இவரும் (காரணமே இல்லாமல்) தன் முகத்தைச் சுழித்து, தலையைச் சொறிந்து, பைத்தியம் போலவே நடந்து கொள்வார்.

டெலிபோனில் எதிர்பாராத ஒரு செய்தி வரும். எதிர்முனை வைக்கப்பட்டு விடும். ஆனால் இவர் வைக்காமல், ரிசீவரின் வாய்ப் பகுதியை ஒருமுறை முறைத்துப் பார்த்துவிட்டுத்தான் (என்ன தேடுகிறாரோ?) மெதுவாக வைப்பார்.

ஒரு திருடன் திடுதிடுவென்று ஓடுவான். சட்டென்று ஒரு குப்பைத் தொட்டி பின்னால் மறைந்து கொள்வான். அவனைத் துரத்தி வருபவர்கள் கரெக்டாக அந்தக் குப்பைத் தொட்டி அருகில் நிற்பார்கள். அங்கே இங்கே பார்ப்பார்கள். பின்பு ஆளுக்கொரு பக்கமாக ஓடுவார்கள். மறந்தும் குப்பைத் தொட்டியின் பின்னால் பார்க்க மாட்டார்கள்.

காணாமல் போன ஒருவரைத் தேடிக்கொண்டோ, அல்லது அது பற்றிப் பேசிக் கொண்டோ இருக்கும்போதுதான் யதேச்சையாக (!) டி.வி-யில் செய்தி ஓடிக்கொண்டு இருக்கும். அதில், இவர்கள் தேடுகிற ஆசாமி பற்றிய செய்தி வாசிக்கப்படும்.

ஏழெட்டு பேர் பேசுகிற காட்சியாக இருந்துவிட்டால், எல்லாரும் ஒரு வரிசையில் நின்றபடிதான் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வார்கள். எல்லாரும் கேமராவில் விழ வேண்டுமே!

சாப்பாட்டுக் காட்சி வராமல் இருக்காது. அதில் ஏதாவது பிரச்னைகள் அலசப்படும். யாராவது ஒருத்தர் கோபித்துக்கொண்டு, சாப்பாட்டுத் தட்டிலேயே சோற்றின் மீதே கை கழுவிக்கொண்டு எழுந்து போவார்.

எத்தனைப் பெரிய தொழிலதிபராக இருந்தாலும், அவசர போன்கால் வராதபடிக்கு ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கும். அல்லது, அது எங்கேயோ இருக்கும்; இவர் எங்கேயோ இருப்பார். செல்போனைக்கூட கையில் எடுத்துக்கொள்ளாத பிஸி தொழிலதிபர்!

வீட்டுக்குப் பலமான பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். செக்யூரிட்டிகள் ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். ஆனாலும், சுலபமாக அத்தனை பேரையும் ஏமாற்றிவிட்டு ஒருவன் உள்ளே போய்விடுவான். அவன் உள்ளே போவதற்காகவே அத்தனை பேரும் சொல்லி வைத்தாற்போல் ஆளுக்கொரு பக்கம் போய் ஏதோ சத்தம் வந்த மாதிரி இருந்ததே என்று தேடுவார்கள். ஒருத்தனும் வாசல் கேட்டில் இருக்க மாட்டான்.

சிங்கப்பூர் போகணுமா, அமெரிக்கா போகணுமா, உடனே, இப்போதே கிளம்பிவிடுவார்கள். நினைத்தால் அத்தனை பேரும் ஜப்பானில் இருப்பார்கள்; நியூயார்க்கில் இருப்பார்கள். எப்போது பாஸ்போர்ட் எடுக்கிறார்கள், டிக்கெட் எப்படி இவர்களுக்கு உடனே கிடைக்கிறது என்பதெல்லாம் ஆச்சரியம்!

கத்தியை எடுத்துக் குத்திக்கொள்ளப் போவாள் ஒருத்தி. வேண்டாம் என்று வெளியிலிருந்து ஒருவன் பதறி ஓடி வந்ததும், வேகமாக வயிற்றில் சொருகப் போன கத்தியை ஒரு நூலிழை முன்னதாக பிரேக் பிடித்து நிறுத்திவிடுவாள். அது எப்படித்தான் சாத்தியமாகுமோ அவளுக்கு மட்டும்!

தூக்கு மாட்டிக் கொள்ள நினைத்தால், அவர்களுக்கு வசதியாக அந்த அறையில் கயிறு, ஸ்டூல் எல்லாம் தயாராக இருக்கும். தேடி எடுக்க வேண்டிய அவசியமே இராது. அவர்களைக் காப்பாற்ற வருகிறவரும், பூட்டியிருக்கும் கதவை முதலிலேயே முட்டி மோதித் திறக்க மாட்டார். உள்ளே தற்கொலை செய்துகொள்ளப் போகிறவர் நிதானமாக ஃபேனில் கயிற்றைக் கட்டி, ஸ்டூலில் மீது ஏறி, சுருக்கைக் கழுத்தில் மாட்டிக் கொள்கிறவரை இவர் வெளியே இருந்தபடி தற்கொலை முயற்சி வேண்டாம் என்று நயமாக எடுத்துச் சொல்லிக்கொண்டு இருப்பார். கடைசியாகத்தான் கதவை மோதித் திறப்பார். ஓடிப் போய் அந்தக் கடைசி விநாடியில்தான் அவரைத் தாங்கிப் பிடிப்பார்.

அதிர்ச்சியான செய்தி வந்தால் அவ்வளவுதான்... கையில் காபி டம்ளரோ, செல்போனோ, தட்டோ, குடம் ஜலமோ எதுவாக இருந்தாலும் டொப்பென்று கீழே போட்டுவிடுவார்கள். அத்தனை பலவீனமான மனது கொண்டவர்கள்தான் அத்தனை பேரும்!

ஒருவர் ஒரு தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ள முயல்கிறார். கிடைக்கவில்லை. மீண்டும் முயல்கிறார். இப்படி அடுத்தடுத்து எத்தனை முறை முயன்றாலும், ஒவ்வொரு முறையும் அத்தனை எண்களையும் டொக் டொக்கென்று அழுத்திக்கொண்டு இருப்பாரே தவிர, ரீ-டயல் என்கிற ஒரு விஷயம் இருப்பதே சீரியலில் போன் பேசுகிறவர்களுக்குத் தெரியாது.

சீரியல் அபத்தங்களைப் பற்றி என் மகள், மகனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர்கள் கேலியும் கிண்டலுமாகச் சொன்னவைதான் மேலே உள்ளவை. இன்னும்கூட அபத்தங்கள் இருக்கலாம். பதிவு தாங்காது!
.

Tuesday, October 20, 2009

குடியால் கெட்டழிந்த காந்தி!

(இந்தப் படத்தில் இருப்பவர் அல்ல எங்கள் உறவினர் காந்தி. ஆனால், ஆச்சரியம்... தோற்றத்தில் கிட்டத்தட்ட இவரைப் போலவேதான் இருப்பார் - இன்னும் க்ஷீண நிலையில்!)
லைப்பைக் கண்டு பதற்றப்படாதீர்கள்! இந்த காந்தி நம் தேசத் தலைவர் மகாத்மா காந்தி அல்ல! என் தாய் வழி உறவினர். நடராஜன் என்பது இயற்பெயர். சின்ன வயதில் பள்ளி நாடகங்களில் மகாத்மா காந்தி வேடம் தரித்து, தத்ரூபமாக நடித்ததால் அவரைச் செல்லமாகக் காந்தி என்றே அனைவரும் அழைக்கத் தொடங்கி, அதுவே அவர் பெயராக ஆகிவிட்டது. எங்கள் உறவினர்களிலேயே கொஞ்சம் பேருக்குதான் காந்தியின் நிஜப் பெயர் நடராஜன் என்று தெரியும். மற்ற எல்லோருக்கும் அவர் ‘காந்தி’தான்!

ஒரு காலத்தில் ஓகோவென்றிருந்த பெரிய பெரிய திரைக் கலைஞர்கள் தங்களின் கடைசிக் காலத்தில் ஒன்றுமில்லாமல் போய், அனைத்தையும் இழந்து, நடுத்தெருவுக்கு வந்து, அநாதை போல் செத்த கதைகள் நமக்குத் தெரியும். திரையுலகப் புள்ளிகள் தவிர, ஒரு சில தொழிலதிபர்களும் பிரமுகர்களும்கூட இந்த லிஸ்ட்டில் உண்டு. எல்லாச் சரித்திரங்களுமே கேள்விப்பட்டவை, புத்தகங்களில் படித்தவைதான். ஆனால், ‘வாழ்ந்து கெட்ட’ பெரிய மனிதருக்குக் கண்கூடான உதாரணமாக நான் பார்த்தது எங்கள் உறவினர் காந்தியைத்தான்.

நான் வீட்டில் கோபித்துக்கொண்டு 1982 முதல் 1984-க்கு இடைப்பட்ட காலத்தில் ஓர் ஒன்றரை வருட காலம் பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தேன். பிழைப்புக்குத் தெருவில் குப்பைகூடப் பொறுக்கியிருக்கிறேன். என் சுறுசுறுப்பைப் பார்த்து, தனது பழைய பேப்பர் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி, மாச சம்பளத்துக்கு என்னிடம் ஒப்படைத்தார் காந்தி. அவர் என் உறவினர் என்று எனக்குத் தெரியும். என்னை அவருக்கு ஆரம்பத்தில் தெரியாது. பின்னர் தெரிந்து கொண்டார்.

அவருக்கு பாண்டிச்சேரியில் ஏழெட்டு சிறு சிறு பழைய பேப்பர் கடைகள் இருந்தன. சுறுசுறுப்பாக வியாபாரம் செய்து சம்பாதித்த காசில் மூன்று அடுக்கு பங்களா ஒன்றைக் கட்டினார். தவிர, தற்போது ஓர்லயன்பேட்டையில் உள்ள பெரிய பஸ் ஸ்டேண்டுக்கு அருகில் (அப்போது இந்த பஸ் ஸ்டேண்ட் கிடையாது.) ஒரு மிகப் பெரிய இடமும் அவருக்குச் சொந்தமாக இருந்தது. இரண்டு மூன்று லாரிகளும் வாங்கினார். அவரின் கீழ் முப்பது நாற்பது பேர் வேலை செய்தார்கள்.

அவரே மொத்தமாக பேப்பர் மில்களில் டெண்டரில் எடுக்கும் ஜல்லிகள் (நூல் நூலாகக் கத்திரிக்கப்பட்ட பேப்பர்கள்) தவிர, இதர பழைய பேப்பர் கடைகள் மூலம் வந்து சேரும் குப்பைகளையெல்லாம் வண்டிகளில் அந்தப் பெரிய இடத்துக்கு வரவழைப்பார். குப்பைகளைக் கொட்டி வைத்துக்கொண்டு அதை கிராஃப்ட் (பழுப்பு அட்டைக் காகிதம்), கேடி (கேடி என்பது பேப்பர் வகைகளிலேயே மிக மட்டமான குப்பை), பிபி (சொதசொதவென்று இருக்கும் ஒரு வகை அட்டை. பள்ளி நோட்டுப் புத்தக அட்டைகள் பிபி ரகத்தைச் சேர்ந்தவைதான்!) என விதம் விதமாகப் பிரிப்பது அந்தப் பணியாளர்களின் வேலை. ரகம் ரகமாகப் பிரிக்கப்பட்ட பேப்பர்களை வலுவாக பிரஸ் செய்து, பேக் செய்வதற்கென்று இயந்திரங்கள் இருந்தன. பெரிய பெரிய பண்டலாக அவற்றை பேல் பேலாகக் கட்டி அடுக்குவார்கள். அவை பின்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு சென்னை, ஹைதராபாத் போன்ற ஊர்களில் உள்ள பேப்பர் மில்களுக்குப் போகும்; மறு சுழற்சியில் பேப்பர்களாகத் தயாராகும்.

நான் எம்.ஜி.ரோடில் இருந்த அவரது பழைய பேப்பர் கடையைப் பார்த்துக்கொண்டபோது எனக்கு மாச சம்பளம் 300 ரூபாய். அப்போது எனக்கு அது மிக அதிகம். காந்தி அவர்களின் வீட்டிலேயே காலையும் இரவும் சாப்பிட்டுவிடுவேன். மற்றபடி எனக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் முழுக்க நான் நொறுக்குத் தீனி வாங்கித் தின்பதற்கும், தினசரி சினிமா போவதற்கும் வெகு தாராளம். கண்ணே ராதா, இளஞ்ஜோடிகள், வாலிபமே வா, வா போன்ற உருப்படாத படங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் நான் பார்த்துத் தீர்த்தது இந்தக் கால கட்டத்தில்தான். ராஜபார்ட் ரங்கதுரை படத்தைத் தொடர்ந்து 20 நாட்களுக்கு மேல் ஒரே தியேட்டரில் போய்ப் பார்த்ததும் இங்கேதான்.

என் வாழ்க்கை அப்போது உற்சாகமாக இருந்தது; சந்தோஷமாக இருந்தது. ஆனால், கண்ணியமாக இல்லை. யாரிடமாவது வம்புக்குப் போவது, தியேட்டர்களில் விசிலடித்து கலாட்டா செய்வது எனக் கிட்டத்தட்ட தெருப் பொறுக்கியாகத்தான் இருந்தேன். தினம் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு, நடு இரவில் மசாலா பால் வாங்கிக் குடித்துவிட்டு (பாண்டிச்சேரியில் இருந்தவரைக்கும் எனக்குக் குடிப் பழக்கமே ஏற்படவில்லை என்பது ஓர் ஆச்சரியம்!) வீடு திரும்புவேன்.

என் தறிகெட்ட சுதந்திரத்துக்கும், யாரை வேண்டுமானாலும் வம்புக்கிழுக்கலாம், கேட்பார் இல்லை என்று எனக்கேற்பட்ட தைரியத்துக்கும் காரணம் என் உறவினர் காந்திதான். அன்றைக்குப் பாண்டிச்சேரியில் அவரைத் தெரியாதவர்களே கிடையாது. மற்ற கடைக்காரர்களெல்லாம் அவர் பேரைக் கேட்டாலே நடுங்குவார்கள். எந்தப் பொறுக்கியும் அவர் பேரைச் சொன்னால் சரண்டராகி விடுவான். அவரின் உறவினன் என்பதாலேயே யாரும் என்னோடு மோதுவதில்லை. போலீஸ்காரர்களை விரல் சொடுக்கி அழைத்து, காசு கொடுத்து, சினிமா டிக்கெட் வாங்கிக் கொடுக்கச் சொல்வார் காந்தி. அவர்களும் பணிவோடு அவர் சொன்னதைச் செய்வதைப் பார்த்திருக்கிறேன். பெரியவனானால் இவரைப் போல் ஆக வேண்டும் என்றெல்லாம் ஒரு ரோல் மாடலாக அவரை மனதில் பிரமிப்போடு பதித்திருக்கிறேன்

அவரின் திருமண வாழ்க்கை இன்பமாக இல்லை. குழந்தை இல்லை. தவிர, அவருக்கும் மனைவிக்கும் ஒத்துப் போகவில்லை. குடும்பத்தில் தினம் தினம் சண்டை. இதனிடையில் லேசு பாசாக இருந்த அவரின் குடிப் பழக்கம் நாளாக நாளாக அதிகரித்து தினம் தினம் குடிக்கத் தொடங்கினார். பின்னர் எந்த நேரத்திலும் குடியின் பிடியிலேயே கிடந்தார். தொழிலைச் சரியாகக் கவனிக்கவில்லை. அவரின் மனைவி அவரை விட்டு விலகிச் சென்னையில் உள்ள தன் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டார். இவருக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டது. அவளைத் தன் வீட்டுக்கே அழைத்து வந்து குடித்தனம் நடத்தத் தொடங்கிவிட்டார். அவளின் சகோதரன் இவருடைய தொழிலை எடுத்து நடத்தத் தொடங்கினான். இதெல்லாம் அதிக பட்சம் இரண்டே வருடங்களில் மளமளவென்று நடந்தன. நான் அப்போது வேறு காரணத்துக்காகப் பாண்டிச்சேரியை விட்டு விழுப்புரத்துக்கே போய்விட்டேன். அதன் பின்னர் சில வருடங்களில் சென்னைக்கு வந்து செட்டிலாகிவிட்டேன்.

தொடர்ந்து காந்தி பற்றி என் காதில் வந்து விழுந்த விஷயம் ஒவ்வொன்றும் எனக்கு மிகவும் வருத்தமூட்டக்கூடியதாகவே இருந்தது. இரண்டாவதாகச் சேர்த்துக்கொண்ட பெண்ணை இவர் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். உடனே முதல் மனைவி இவர் மீது வழக்குப் போட்டார். அவருக்குச் சில லட்சங்கள் கொடுக்கும்படி கோர்ட் தீர்ப்புச் சொல்லியது. வீட்டை விற்று அதைக் கொடுத்தார் காந்தி. மீதிப் பணத்தில் வேறு சில கடன்களை அடைத்தார்.

தொழிலைச் சரியாகக் கவனிக்காததால், அது இரண்டாவது மனைவியின் அண்ணனின் கைக்குப் போயிற்று. அவன் கண்டபடி செலவு செய்தான். லாரிகளை விற்றான். கண்ணெதிரே காந்தி சீரழிந்துகொண்டு வந்தார். அவரை ஒரு நாள் வீட்டை விட்டுத் துரத்திவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். ‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் எம்.ஆர்.ராதாவை எம்.என்.ராஜம் அடித்துத் துரத்தும் காட்சிதான் மனதில் வந்தது. அதன்பின், காந்தி சென்னைக்கு வந்து சில இடங்களில் வேலை கேட்டுப் பார்த்திருக்கிறார்.

ஒரு முறை ஆனந்த விகடன் அலுவலகத்துக்கு வந்து என்னைப் பார்த்து, “ஒரு இருநூறு ரூபாய் இருந்தா கொடு ரவி, ஒண்ணாந்தேதியிலிருந்து வேலைக்குப் போகப் போறேன். அடுத்த மாசம் சம்பளம் வாங்கினவுடனே திருப்பித் தந்துடறேன்” என்றார். கொடுத்தேன். இப்படி மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வருவார். நூறு, இருநூறு கேட்பார். கொடுப்பேன். சில மாதங்கள் கழித்து மீண்டும் வந்தார். முன்பை விட ஏழ்மை நிலையில் பிச்சைக்காரனாகவே மாறியிருந்தார். எண்ணெய் காணாத சிக்குப் பிடித்த பரட்டைத் தலை, ஷேவ் செய்யப்படாத முகம்; பற்களில் சில விழுந்திருந்தன. சர்க்கரை நோய் முற்றிப் போய், கால்களில் பேண்டேஜையும் மீறி சீழ் வடிந்துகொண்டு இருந்தது.

இந்த முறை ஆபீஸ் செக்யூரிட்டகள் அவரை கேட்டுக்குள்ளேயே விடவில்லை. அவர் வந்திருப்பதை அறிந்து நானே இறங்கிப் போய்ப் பார்த்தேன். “நாலு நாளா சாப்பிடலை ரவி! ஒரு இருநூறு ரூபாய் இருக்குமா?” என்று பரிதாபமாகக் கேட்டார். “போன மாசம் உங்க மாமா ஒரு இருநூறு ரூபா கொடுத்தாரு. அதை வெச்சு ஒரு மாசம் ஓட்டினேன். திரும்பவும் அவர் கிட்டே போய் நிக்கிறதுக்கு வெக்கமா இருக்கு” என்றார். மனசு பாரமாகியது. இருநூறுக்கு முந்நூறாகவே கொடுத்தேன். கைகூப்பி வணங்கி நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

அதன்பின், அவர் வரவில்லை. நாகர்கோயிலில் அல்லது வேறு ஏதோ ஒரு ஊரில் பிச்சைக்காரர்கள் கும்பலில் அவரும் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததாக யாராவது அவ்வப்போது தகவல் சொல்வார்கள். மனசில் ரத்தம் கசியும்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், தான் ராஜாங்கம் நடத்திய பாண்டிச்சேரியிலேயே ஏதோ ஒரு தெருவில் பிச்சைக்காரர்கள் வரிசையில் இவரும் உட்கார்ந்திருப்பதை என் மாமா பார்த்துவிட்டுத் தன்னோடு விழுப்புரம் வந்துவிடும்படி அழைத்தாராம். (அவரின் சகோதரியைத்தான் என் மாமா திருமணம் செய்திருந்தார்.) “போங்க, நான் வந்தா உங்களுக்கு மரியாதையா இருக்காது. என்னைப் பத்திக் கவலைப்படாதீங்க. எனக்குச் சோத்துக்குக் கவலையில்லே. (மற்ற பிச்சைக்காரர்களைக் காட்டி) இவங்க எனக்கும் சேர்த்துப் பிச்சையெடுத்துக்கிட்டு வந்து தருவாங்க. தேவாமிருதமா இருக்குது. நீங்க போயிட்டு வாங்க. வந்து பார்த்ததுக்கு சந்தோஷம்!” என்று கைகூப்பி, தீர்மானமாக மறுத்து அனுப்பி விட்டாராம்.

ஓரிரு ஆண்டுகளில் என் மாமி இறந்தபோது அவருக்குத் தகவல் சொல்லி அழைத்திருக்கிறார்கள். அப்போதும் அவர் வரவில்லை. பின்னர், பாண்டிச்சேரியிலேயே தன் மூத்த மகனோடு பங்களாவில் வசித்த தாயார் இறந்து போன சமயத்திலும் காந்தியை வந்து அழைத்திருக்கிறார்கள். அப்போதும் போக மறுத்துவிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரி வாசலில் அவர் விழுந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்து, அவரின் அண்ணன் மகன் போய்ப் பார்த்திருக்கிறான். சர்க்கரை வியாதி முற்றி, காந்தியின் ஒரு கால் அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு இருந்ததாம். செலவுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறான்.

அடுத்த சில மாதங்களில் அவர் இறந்துவிட்டார் என்றும், மாநகராட்சியே அவர் உடலை அநாதைப் பிணமாக எரித்துவிட்டது என்றும் தகவல் வந்தது.

என் மனத்தை மிகவும் ரணமாக்கிய அந்தத் தகவல் வந்த தினம் அக்டோபர் 20, 2007.
.

Sunday, October 18, 2009

சந்தன வீரப்பனுக்கு ஒரு கடிதம்!


ந்தன வீரப்பன் மறைந்து இன்றோடு ஐந்து வருடம் பூர்த்தியாகிவிட்டது.

மூன்று மாநிலங்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தவன் வீரப்பன். யானைகளையும் சந்தன மரங்களையும் போலீஸ்காரர்களையும் கணக்கு வழக்கில்லாமல் வெட்டி வீழ்த்தியவன். ஆனால், அவனிடம் சில நல்ல குணங்களும் இருந்தன. அவன் ஒருபோதும் பெண்களைக் கடத்திப் போய் பாலியல் பலாத்காரம் செய்தது கிடையாது. கடவுள் நம்பிக்கை உள்ளவன். தனக்குக் குறிப்பிட்ட நபரால் தொல்லை எதுவும் இருக்காது என்று அவன் நம்பினால், அவரை அவன் துன்புறுத்துவதோ கொலை செய்வதோ கிடையாது.

அப்படித்தான் அவன் மாநில அரசுகளை மிரட்டித் தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் பொருட்டு கர்நாடக சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரைக் கடத்திக் காட்டில் கொண்டு போய் நூறு நாட்களுக்கும் மேலாக வைத்திருந்தாலும், அவரைக் கொஞ்சமும் துன்புறுத்தாமல் விடுவித்துவிட்டான். தவிர, அவரை விடுதலை செய்யும்போது அவன் அவருக்கு வேட்டி, சட்டைகளைப் பரிசாகத் தந்து, பிரியா விடை கொடுத்ததாகவும் செய்திகள். காட்டில் அவன் தன் மீது மிக அன்பாகவே நடந்துகொண்டான் என்றும், தனது மூட்டு வலிக்கு உடும்புத் தைலத்தை மருந்தாகத் தடவிவிட்டான் என்றும் பின்னர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் ராஜ்குமார்.

இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், வீரப்பனுக்கு ராஜ்குமார் கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து விகடனில் எழுதினேன். அது கீழே...

வீரப்பனுக்கு ராஜ்குமார் எழுதும் கடிதம்!

ன்புச் சகோதரர் வீரப்பனுக்கு, உங்கள் அன்புக்குரிய ராஜ்குமார் எழுதிக் கொள்வது.

நான் இறைவன் அருளாலும், தங்கள் அருளாலும் நலமுடன் பெங்களூர் வந்து சேர்ந்தேன். இங்கு யாவரும் நலம். அதுபோல் உங்கள் அனைவரின் நலத்துக்கும் அடிக்கடி கடிதம் எழுதவும் - மன்னிக்கவும் - காஸெட் அனுப்பவும்!

நூற்றியெட்டு நாட்களாக உங்களின் அன்பு உபசரிப்பில் உண்டு, உறங்கி, மகிழ்ந்து அந்த இயற்கைச் சூழலில் லயித்து இருந்ததில், உங்களை விட்டுப் பிரிந்து வரவே எனக்கு மனசில்லை. உங்களிடம் பிரியா விடை பெற்ற அந்தக் கணத்தில் எனக்குக் கட்டுப்படுத்தவே முடியாமல் கண்ணீர் துளிர்த்துவிட்டது. உங்களுக்கும் அப்படித்தான் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

உங்கள் மனசு ரொம்ப நெகிழ்ந்திருந்தது என்பதை நீங்கள் அந்தப் பக்கமாகத் திரும்பிக் கொண்டு, உங்கள் கண்களில் கசிந்த நீரைத் துப்பாக்கி முனையால் சுண்டி எறிந்ததைப் பார்த்ததும் புரிந்துகொண்டு விட்டேன்.

பெங்களூர் வந்ததிலிருந்து எனக்கு நாக்கே செத்துவிட்டது. அங்கே வாய்க்கு ருசியாக எனக்கு நீங்கள் மைனா பொரியல், உடும்புக் கறி, காட்டெருமைக் குழம்பு, பன்றிக் கொழுப்பு வறுவல் என காட்டுணவு வகைகளை உங்கள் கையால் அன்புடன் சமைத்துப் போட்டீர்கள். இங்கே அப்படி எனக்கு வக்கணையாக, என் டேஸ்ட் அறிந்து நாவுக்கு ருசியாகச் சமைத்துப் போட யார் இருக்கிறார்கள்!

தங்களின் உபசரிப்பையெல்லாம் என் மகன்களிடம் நான் விரிவாக எடுத்துச் சொன்னபோது, ‘அப்படியா!’ என்று ஆச்சரியப்பட்டார்கள். “அப்பா! வீரப்பன் அங்கிள் காட்டுக்கு நாமெல்லாம் போய் ஜாலியாக ஒரு வாரம், பத்து நாள் அவரோடு இருந்துட்டு வரலாம்ப்பா! எங்களுக்கும் அவரின் ரெசிப்பிக்களை ஒரு பிடி பிடிக்கவேண்டும் என்று ஆவலாக இருக்கிறது” என்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். உங்களிடமிருந்து சிக்னல் கிடைத்ததும், குடும்பத்தோடு வந்து உங்களுடன் சில நாட்கள் தங்கி, அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய விரும்புகிறேன்.

நான் அங்கிருந்த சமயங்களில் எனது பொழுதுபோக்குக்கும் நீங்கள் குறை வைக்கவில்லை. மிமிக்ரியில் தேர்ந்தவரான நீங்கள் சிறுத்தை போல் உறுமியும், ஆந்தை போல் அலறியும் இன்னும் பலவாறாக மிமிக்ரி செய்து காண்பித்து என்னைக் குதூகலப்படுத்தினீர்கள். எனக்காக நீங்கள் மயிலாட்டம், ஒயிலாட்டம், மாரியாத்தா, காளியாத்தா போன்ற புதுமையான ஆட்டங்களை ஆடிக் காண்பித்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதை என்னால் மறக்க முடியாது. உங்களின் அந்தச் சில அற்புதமான நடன அமைப்புகளை எனது அடுத்த படத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று பார்க்கிறேன்.

உண்மையைச் சொல்கிறேன்... உங்களிடமிருந்து பிரிந்து வந்ததிலிருந்து சில நாட்கள் எனக்குச் சரியாகவே தூக்கம் வரவில்லை. பிறகுதான் ஒரு யுக்தி செய்தேன். நீங்கள் கொடுத்தனுப்பிய ஆடியோ காஸெட்டுகளைப் போட்டு, அதிலிருந்து எழும் ராக்கோழிச் சத்தம், காட்டு வண்டுகளின் ரீங்காரம், யானையின் பிளிறல், புலிகளில் உறுமல், நரிகளின் ஊளை இவற்றையெல்லாம் காது குளிரக் கேட்ட பின்புதான் நிம்மதியான தூக்கம் கிடைத்தது எனக்கு.

பஞ்சு மெத்தை, திண்டு, தலையணை இவற்றைக் கண்டாலே வெறுப்பாக இருக்கிறது. வெறும் தரையில், அதுவும் மண் தரையில் இலை தழைகளையும் சருகுகளையும் பரப்பி, அதன் மீது கைகளையே தலையணையாக்கிக் கொண்டு படுத்தால்தான் உறக்கமே வருகிறது. அப்படிப் படுப்பதுதான் சௌகரியமாகவும் இருக்கிறது. இது ஓர் உன்னதத் துறவு நிலை. இத்தகைய ஓர் உயரிய நிலையை இந்தச் சாமானியனுக்கும் சித்திக்கும்படிச் செய்த என் ஞான குரு தாங்கள்தான்.

மற்றபடி உங்கள் ஆஸ்துமா எந்த மட்டில் இருக்கிறது? ஏதோ ஒரு மூலிகைச் சாறு பிழிந்து குடித்தால் சரியாகிவிடும், ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்று எனக்கு ஆறுதல் சொன்னீர்களே, அந்த மூலிகைச் சாறு கிடைத்ததா? பிழிந்து குடித்தீர்களா? உங்கள் உடல்நிலையைப் பற்றித்தான் எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது. நீங்கள் கொடுத்தனுப்பிய கருங்குரங்குத் தைலத்தைதான் தினமும் என் கால் மூட்டு வலிக்குத் தடவி வருகிறேன். இப்போது வலி எவ்வளவோ தேவலை. தைலம் தீரும் நிலையில் இருக்கிறது. முடிந்தால் காஸெட்டோடு இரண்டு பெரிய சைஸ் புட்டியில் கருங்குரங்குத் தைலம் கொடுத்தனுப்பினால் உதவியாக இருக்கும்.

மற்றபடி உங்கள் உடல் நலத்துக்கும், சேத்துக்குளி கோவிந்தன் உள்ளிட்ட உங்களின் அன்புத் தம்பிகள் அனைவரின் உடல் நலத்துக்கும் அடிக்கடி காஸெட் அனுப்பிக்கொண்டிருக்க வேண்டுகிறேன்.

உங்களின் அன்பை என்றும் மறவாத, உங்களின் உடன்பிறவா அண்ணன்

ராஜ்குமார்.
.

Friday, October 16, 2009

தீ... தீ... தீபாவளி!

இந்தப் பதிவைப் படிக்கிற, படிக்காமல் விட்ட அத்தனை நேயர்களுக்கும் மற்றும் சக பதிவர்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ண்டுக்கு ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் உள்ள குதூகலம் அப்படியேதான் நீடிக்கிறதா அல்லது குறைந்து வருகிறதா என்று எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. பட்டாஸ்கள், எண்ணெய் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் எக்கச்சக்கமாக உயர்ந்திருப்பதால் பண்டிகையின் குதூகலம் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நிச்சயம் குறைந்துதான் இருக்கிறது என்கிறார்கள் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும். ஆனால், எனக்கு அப்படித் தோன்றவில்லை.

விலைவாசி உயர்வு என்பது ஏதோ நேற்றைக்கு இன்றைக்கு நிகழ்வதல்ல. நரகாசுரன் மாண்ட காலந்தொட்டே விலைவாசி உயர்ந்துகொண்டேதான் போகிறது. அதற்காக அந்த நாளில் நம் குதூகலம் குறைந்து போயிருந்ததா என்ன? ஒன்றைச் சொல்லலாம். நமக்கு ஆண்டுக்கு ஆண்டு வயசாகிறது. பொறுப்புகள் மிகுதியாகின்றன. கடமைகள் அழுத்துகின்றன. எனவே, நம்மால் இந்தப் பண்டிகைக் குதூகலங்களை முன்பு போல அனுபவித்து ரசிக்க முடியவில்லை. எனவே, நம் அனுபவத்தை வைத்து ஒட்டுமொத்தமாக நாட்டிலேயே குதூகலம் குறைந்துவிட்டதாக முடிவு கட்டிவிடுகிறோம்.

என் சின்ன வயதில் எங்கள் வீட்டில் அதிகம் பட்டாஸ் வாங்குவதில்லை. காசைக் கரியாக்குகிற அளவுக்கு எங்கள் அப்பாவுக்கு அவரின் ஆசிரியர் தொழிலில் வருமானம் இல்லை என்பதோடு, வெடி வெடித்து கையில், காலில் தீப்புண் பட்டுக் கொள்ளப் போகிறோமே என்கிற அவரின் பயமும் ஒரு காரணம். அதிக பட்சம் பத்து ரூபாய்க்கு கம்பி மத்தாப்பூ, பூ மத்தாப்பூ, கேப் வாங்குவார். வெடி என்கிற பேச்சே கிடையாது. கலசம், சங்கு சக்கரங்களுக்குக்கூடத் தடா! காரணம், கிராமப் புறத்தில் சுற்றி இருந்தவை அனைத்தும் (எங்கள் வீடு உள்பட) கூரைக் குடிசை வீடுகள். எனக்குத் தெரிந்து என் ஒன்பது, பத்து வயதுகளில் எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு தீபாவளிக்கும் எந்தத் தெருவிலாவது, யார் குடிசையாவது எரியாமல் இருந்ததில்லை.

நெருப்பைக் கண்டால் எனக்குச் சின்ன வயதிலிருந்தே பயம். ஒரு தீபாவளியின்போது எங்கள் பின் வீடோ, அல்லது கொட்டகையோ தீப்பற்றி எரிந்தது. எரிமலை நெருப்பைக் கக்குவது போல தீ ஜுவாலைகள் ஆகாயத்துக்கு எழுந்தன. எங்கள் வீட்டுக் கூரை மீதெல்லாம்கூட நெருப்புக் கங்குகள் வந்து விழுந்தன. வீட்டிலிருந்த எங்கள் பாட்டி உள்பட அனைவரையும் வெளியே அழைத்து வந்து, திறந்தவெளியில் ஒரு குட்டித் திடல் மாதிரி இருந்த இடத்தில் உட்கார வைத்துவிட்டு, வாளியில் தண்ணீரைச் சேந்தி எங்கள் வீட்டுக் கூரை மீது இறைக்கத் தொடங்கினார் அப்பா. பக்கத்துக் குடிசைக்காரர்களும் தங்கள் தங்கள் வீட்டின் மேல் தீ பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தீப்பிடித்த இடத்திற்கு ஒரு கும்பல் ஓடி தீயை அணைப்பதில் உதவியது. மொத்தத்தில் தெருவெங்கும் ஒரே களேபரம்!

பாட்டி, அம்மா, தம்பி தங்கைகளுடன் வெளித் திடலில் இருந்த எனக்கு உலகப் பேரழிவே வந்துவிட்ட மாதிரி ஒரு பீதி! அப்போது எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கலாம். என்ன செய்வதென்று புரியாமல், அந்த இடத்தை விட்டு எங்காவது ஓடித் தப்பித்துவிட வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தது. நைஸாகக் கம்பி நீட்டிவிட்டேன். தெருவெல்லாம் ஜனங்கள் என் எதிரே ஓடி வந்துகொண்டு இருக்க, நான் அவர்களிடையே புகுந்து எதிர்த் திசையில் ஓடி, மெயின் ரோடுக்கு வந்தேன். அப்போதுதான் ஒரு பஸ் வந்து நின்று, கிளம்பத் தயாராக இருந்தது. திருக்கோவிலூர் செல்லும் பஸ் அது. எனக்கிருந்த வேகத்தில் தடக்கென்று அதனுள் ஏறி, ஒரு ஸீட் பிடித்து உட்கார்ந்துவிட்டேன். பஸ்ஸும் கிளம்பிவிட்டது.

அப்பா, அம்மா, தம்பி, தங்கைகளை விட்டு எங்கேயோ போகிறோமே என்கிற உணர்வே எனக்கு இல்லை. ஒரு கண்டத்திலிருந்து தப்பித்த உணர்வே இருந்தது. பஸ் அடுத்த கிராமத்தை நெருங்கும்போது, கண்டக்டர் என் அருகில் வந்து, ‘இந்தத் தம்பிக்கு யார் டிக்கெட் எடுக்குறது?’ என்று கேட்டுச் சுற்று முற்றிலும் பார்த்தார். பதில் இல்லை. “யார் கூடடா தம்பி வந்திருக்கே?” என்றார் என்னிடம். பிசுக் பிசுக்கென்று முழித்தேன். “ஊரெல்லாம் நெருப்பு. தப்பிச்சு வந்துட்டேன். சீக்கிரம் பஸ்ஸை ஓட்டச் சொல்லுங்க. இங்கேயும் நெருப்பு வந்துடும்” என்று சம்பந்தமில்லாமல் உளறினது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அவருக்குப் புரிந்துவிட்டிருக்க வேண்டும்.

அடுத்த ஊரில் பஸ் நின்றதும், “இறங்குடா தம்பி!” என்று என்னை இறக்கிவிட்டு, அவரும் இறங்கினார். அங்கு எதிரே இருந்த டீக்கடைக்கு என்னை அழைத்துச் சென்று, அங்கிருந்தவர்களிடம் “இங்கே யாராவது பக்கத்துல காணை கிராமத்துக்குப் போறவங்க இருக்கீங்களா?” என்று கேட்டார். டீ குடித்துக்கொண்டு இருந்த ஓர் இளைஞர் எழுந்து வந்தார். “நான் அங்கேதான் போறேன். என்ன விஷயங்க?” என்று கேட்டார். “இந்தத் தம்பி காணையில ஏறிச்சு. வீட்டை விட்டுத் தனியா ஓடி வந்துடுச்சு போல! யார் வீடுன்னு பார்த்துப் பத்திரமா கொண்டு போய் விட்டுர்றீங்களா?” என்றார் கண்டக்டர். “விடுங்க, நான் பார்த்துக்கறேன்” என்று அந்த இளைஞர் மடக் மடக்கென்று டீயைக் குடித்துக் காசைக் கொடுத்துவிட்டு, “யார் வீடுடா தம்பி? அய்யர் புள்ளையாட்டம் தெரியுது. வாத்தியார் வீடா?” என்று கேட்டபடியே என்னைத் தூக்கி, கேரியரில் உட்கார வைத்தார். “நல்லா புடிச்சிக்க” என்று சைக்கிளைத் தள்ளியபடியே, “கண்டக்டர் சார், நீங்க போயிட்டு வாங்க!” என்று வழியனுப்பினார். பஸ் புறப்பட்டது.

அந்த இளைஞர் என்னை வைத்து சைக்கிளை ஓட்டிக்கொண்டு இருபது நிமிடத்தில் மீண்டும் காணைக்கு வந்துவிட்டார். மெயின்ரோட்டிலேயே சைக்கிளை நிறுத்தி, எதிர்ப்பட்ட இன்னொரு இளைஞரிடம், “இது வாத்தியார் ஊட்டுப் புள்ளையாட்டம் தெரியுது. உங்களுக்கு இந்தப் புள்ள யாருன்னு தெரியுமா? தப்பி வந்திருச்சு. வீடு எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா, கொண்டு போயி விட்டுருவேன்” என்றார். “விடுங்க, நான் கொண்டு போயி விட்டுர்றேன். நீங்க அலையாதீங்க” என்று இந்த இளைஞர் என் பாதுகாப்புப் பொறுப்பைத் தன் கைக்கு மாற்றிக் கொண்டார். அவர் விடைபெற்றுப் போக, நான் இந்த இளைஞருடன் நடக்கத் தொடங்கினேன்.

வழியெல்லாம் என் பயத்தைப் போக்கும் விதமாகப் பேசிக்கொண்டே வந்தார் அவர். “வீட்டை விட்டு ஓடிப் போயிட்டியே! அப்பாம்மா கவலைப்பட மாட்டாங்களா?” என்றெல்லாம் ஏதேதோ கேட்டுக்கொண்டே வந்தார். அதற்குள் இங்கே என்னைக் காணாமல், வீட்டில் பதற்றம். என்னைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளாததற்காக அம்மாவை செம டோஸ் விட்டுவிட்டு, தெருவெல்லாம் என்னைத் தேடிக்கொண்டு, வழியில் எதிர்ப்பட்டோரிடமெல்லாம் விசாரித்துக்கொண்டே வந்துகொண்டு இருந்தார் அப்பா. அவரிடம் இந்த இளைஞர் என்னை ஒப்படைத்து விஷயத்தைச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். அவர் முன்பு என் அப்பாவிடம் படித்த மாணவர்தான் என்பது அவர்களின் பேச்சிலிருந்து புரிந்தது.

மறக்கமுடியாத தீபாவளி இது. வெடிக்காமல் மிச்சம் வைத்திருந்த கம்பி மத்தாப்பூ, பூ மத்தாப்பையெல்லாம் அப்பா வெடிக்காமலேயே குழி தோண்டிப் புதைத்துவிட்டதாக ஞாபகம்.

ன்னொரு மறக்கமுடியாத தீபாவளியும் உண்டு. (வளர்த்தாமல் சுருக்கமாகச் சொல்கிறேன்.) அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறேன். பெரும்பாக்கம் என்கிற கிராமத்தில் வசித்தோம். தீபாவளிக்காக வாங்கிய மத்தாப்பூ வகைகளை வெயிலில் காய வைப்பது என்பது அப்போது ஒரு சம்பிரதாயம். அப்படி நானும் ஒரு பலகையில் பூ, கம்பி வகைகளைப் பரத்தி, வீட்டு வாசலில் காய வைத்திருந்தேன்.

அப்போது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு பையன் கொளுத்தி மேலே வீசிய ஒரு ராக்கெட் புஸ்ஸென்று சீறிக்கொண்டே சென்றது. அதைப் பார்த்த என் அப்பா, “கடவுளே! இது எங்கே போய் யார் வீட்டுப் பரணைல சொருகப் போகுதோ!” என்றார். அவர் சொல்லி வாய் மூடவில்லை, மேலே போன அந்த ராக்கெட் யு டர்ன் எடுத்து, பத்து வீடுகள் தள்ளி இருந்த ஒரு கூரை வீட்டைத் துளைத்துக்கொண்டு, சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் தட்டில் நெட்டுக்குத்தலாக விழுந்தது.

கடுங்கோபத்துடன் எழுந்து வந்தவர், எங்கள் வீட்டு முன் காய வைக்கப்பட்டு இருந்த பட்டாஸ்களைப் பார்த்துவிட்டு, நாங்கள்தான் ராக்கெட் விட்டது என்று எண்ணி, கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்துவிட்டார். நல்லவேளையாக, பக்கத்து வீட்டுக்காரர் ஓடி வந்து, “யோவ்... இவங்க வெடி ரகங்கள் ஏதாவது வெச்சிருக்காங்களான்னு பார்த்துட்டுப் பேசுய்யா! அடுத்த தெருவுலேர்ந்து எவனோ விட்ட ராக்கெட் வந்து விழுந்ததுக்கு இவங்க கிட்ட சண்டைக்கு வரியே!” என்று பதிலுக்கு எகிறி, அவரை ஒரு வழியாக அனுப்பி வைத்தார்.

‘ஐயோ! இந்த ராக்கெட் எந்த வீட்டைப் பத்த வைக்கப் போகுதோ!’ என்று அப்பா பதறியது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியைத்தான் சில வருடங்கள் கழித்து நான் ஒரு கதையாக எழுதி, அது அடுத்த பதினைந்து நாளில் கல்கி வார இதழில் என் முதல் கதையாகப் பிரசுரமாயிற்று!
.

Thursday, October 15, 2009

என் வலைப்பூவில் சாக்கடை நாற்றம்!


சாக்கடையை அள்ளிக் கொட்டி என் வலைப்பூவை நாறடிக்கச் செய்ய வேண்டுமா என்று யோசித்தேன். ஒரு நடிகை பற்றிய விபசார வழக்கில் பத்திரிகையாளரைக் கைது செய்திருக்கிறார்களே, பத்திரிகையாளர்களைப் பற்றிச் சில நட்சத்திரங்கள் கேவலமாகப் பேசியிருக்கிறார்களே, ஒரு பத்திரிகையாள ரான நீங்கள் அது பற்றிய உங்கள் கருத்தை உங்கள் வலைப்பூவிலாவது எழுத வேண்டாமா என்று எனக்கு போன் மேல் போன். வேறு வழியில்லை; மூக்கை மூடிக்கொண்டு மேலே படியுங்கள்.

ஒரு நடிகை விபசார வழக்கில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. அதிலும் புவனேஸ்வரி கைதாவது இது இரண்டாவது முறையென்று நினைக்கிறேன். (அல்லது, மூன்றாவது முறையோ?!) அப்போதெல்லாம் வராத ஆவேசம் நமது நட்சத்திரங்களுக்கு இப்போது மட்டும் வரவேண்டிய அவசியம் என்ன?

அப்போது அவர்கள் பெயரை புவனேஸ்வரி சொல்லியதாகப் பத்திரிகையில் அடிபடவில்லை. ஆக, அவர்களுக்கு புவனேஸ்வரி எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை; தங்கள் பெயருக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது. அவ்வளவுதான்!

புவனேஸ்வரி சொன்ன பட்டியல் பொய்யோ, அதைக் காவல்துறை அதிகாரிகள் வெளியிட்டதாகச் சொன்னதுதான் பொய்யோ - எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் புரிகிறது. முழுக்க நனைந்தாலும் சரி, நனையாவிட்டாலும் சரி... முக்காடு நனையவில்லை என்று காட்டிக் கொள்ள விரும்புகிறவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

பலான பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றதால் தங்கள் மானம் போகிறது, குழந்தை குட்டிகளின் மனம் என்ன பாடுபடும் என்றெல்லாம் பொங்கியெழுந்து கேள்வி கேட்பவர்களுக்கு, காசு வருகிறதே என்று எத்தனைக் குறைவாக வேண்டுமானாலும் உடுத்தி நடிக்கும்போதே மானம் போனது தெரியவில்லையா? அப்போது குழந்தைகள் இல்லையென்றாலும், அந்தக் காட்சிகளை இப்போது பார்த்தால் அவர்களின் மனம் என்ன பாடுபடும் என்று யோசிக்கவில்லையா?

விவேகமேயில்லாது பேசியுள்ளார் ஒருவர்; அவர் நடிக்கிறபோது சிரிப்பு வந்ததோ இல்லையோ, அவரது ஆவேசப் பேச்சைக் கேட்டு வயிறு வலிக்கச் சிரிப்பு வந்தது. ‘சிவாஜி’ படத்தில் இவர் டாப்லெஸ்ஸாக இருக்கிற ஒரு ஸீனில், “ஐயோ! என்னை ஷகிலா மாதிரி ஆக்கிட்டீங்களேடா!” என்று சொன்னது, ஷகிலாவைப் பெருமைப்படுத்துகிற காட்சியா? ‘பேரழகன்’ படத்தில் மூச்சுக்கு முந்நூறு தடவை பிறரின் உடல் ஊனத்தையே இவர் கேலி செய்து நடித்ததைச் சுட்டிக் காட்டி விமர்சித்தபோது, அதைச் சரியான கோணத்தில் எடுத்துக் கொள்ளாமல், ‘இனிமேல் பேட்டியே கிடையாது, போ!’ என்று புசுக்கென்று கோபித்துக்கொண்டவர்தானே! ஏதோ இவர் பேட்டியால்தான் பத்திரிகைகளே போணியாகிற மாதிரி!

சத்திய நடிகர் சொன்னது சத்தியமா என்று இன்னமும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் சிவாஜி ரசிகன். எம்.ஜி.ஆரை முதலமைச்சராகத்தான் நேசிக்கத் தொடங்கினேன். ஆனாலும், எம்.ஜி.ஆரின் நடிப்பை ரசிக்காமல் தீவிர சிவாஜி ரசிகனாக இருந்த காலத்திலேயே எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தையும், மற்றவரிடம் அவர் பழகும் விதத்தையும் கண்டு பிரமித்திருக்கிறேன். சிவாஜி ரசிகர்களான என் நண்பர்கள் எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொன்ன சில அவதூறான தகவல்களையும் நான் அறவே நம்பியதில்லை. ஏதோ காழ்ப்புணர்வில் அப்படிச் சொல்கிறார்கள் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால், ஆவேசமாகப் பேசியவரின் வாயிலிருந்து அவரை மீறி வெளிப்பட்டது சத்தியமா, அபாண்டமா என்று நிஜமாகவே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு பத்திரிகையாளர் எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதோ தவறாக எழுதிவிட்டாராம். அதற்காக அவரை வரவழைத்து, அறைக்குள் அழைத்துக்கொண்டு போய், ஊமை அடியாக அடித்துப் பின்னியெடுத்துவிட்டாராம் எம்.ஜி.ஆர். அப்புறம் அவர் தலையை சீவி, நல்ல பிள்ளை மாதிரி அவர் தோளில் சிநேகிதமாகக் கை போட்டுக் கொண்டு தோழமையோடு வெளியே வந்தாராம். (அந்தப் பத்திரிகையாளர் ஒரு சினிமா நடிகரும்கூட என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.) ஆனால், அப்போது அதை நான் நம்பவில்லை. ‘சேச்சே! அப்படியான வன்ம எண்ணம் கொண்டவர் இல்லை எம்.ஜி.ஆர்! பொன்மனச் செம்மல் என்றால் செம்மல்தான். அவரைப் பிடிக்காதவர்கள் தாங்களாகக் கற்பனை செய்து அவர் மீது வீண் பழி சுமத்துகிறார்கள்’ என்றுதான் இத்தனை நாளும் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால், அவரின் தீவிர அபிமானியான சத்திய நடிகரே சொல்லும்போது எப்படி நம்பாமல் இருப்பது? அதே போல எம்.ஜி.ஆர். ஒரு நடிகையின்பொருட்டு ஜெய்சங்கரை மிரட்டியதாகக் கேள்விப்பட்டதும், வேறொரு நடிகையின்பொருட்டு ரஜினியை மிரட்டியதாகக் கேள்விப்பட்டதும்கூட உண்மைதானா? அதையும் இந்த உண்மை விளம்பிதான் உரைக்க வேண்டும்.

‘கீழேயிருந்து போட்டோ எடுக்காதீர்கள்’ என்று அட்வைஸ் செய்கிறார் ஒரு நடிகர். இன்றைய நடிகைகள் உடை அணிகிற லட்சணத்துக்கு மேலேயிருந்து புகைப்படம் எடுத்தாலும் தப்பாகப் போகுமே? அதாவது, அவர்கள் எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்தி வருவார்கள்; மேடையில் முதல்வரே அமர்ந்திருந்தாலும் சரி, உடை நாகரிகம் எதுவும் அவர்களுக்கில்லை; ஆனால், பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் முன் வரிசையில் கீழே நின்றுதான் போட்டோ எடுக்க வேண்டியிருந்தாலும் எடுக்கக் கூடாது. இதுதான் குமார நடிகரின் ஆவேச கட்டளை. பொத்தாம்பொதுவில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் சகட்டுமேனிக்கு வசை பாடியிருக்கிறார். அமைதியே உருவான நல்ல நடிகருக்கு மகனாகப் பிறந்த இவர், நடிப்போடு கொஞ்சம் பண்பையும் தன் அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டு இருந்திருக்கலாம்.

செய்திகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் ஊடகங்களின் வேலை. அதில் உண்மையும் நேர்மையும் இருக்க வேண்டும். வெளிநாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் நேர்மையும் பத்திரிகை தர்மத்துடனும் செயல்படும் பத்திரிகைகளின் விகிதாசாரம்தான் அதிகம். ஒரு சில பத்திரிகைகள் வியாபார நோக்கில் பத்திரிகை தர்மத்தை மீறிச் செயல்பட்டிருக்கலாம். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால், அவற்றின் மீது கேஸ் போட்டுத் தங்கள் நியாயத்தை நிலை நாட்டிக் கொள்வதுதான் முறையே தவிர, ஊரைக் கூட்டிக் குய்யோ முறையோ என்று எல்லாப் பத்திரிகையாளர்களையும் வாய்க்கு வந்தபடி வசைமாரி பொழிவது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல!

அரசியலில், ஆன்மிகத்தில், காவல்துறையில், மருத்துவத் துறையில், கல்வித் துறையில்... சமீபமாக நீதித் துறையில்கூடத்தான் சில கறுப்பு ஆடுகள் புகுந்துவிட்டிருக்கின்றன. இதெல்லாம் காலத்தின் கோலம்! அதற்காக ஒட்டுமொத்த துறையையே பழிப்பது நியாயமா?

புவனேஸ்வரி பிரச்னை பற்றிய கட்டுரையில், சினிமா நட்சத்திரங்களைச் சாடி எழுதிக்கொண்டே வரும்போது, ‘வெட்கங்கெட்ட பத்திரிகைத் துறைக்கும் காவல் துறைக்கும் சில வருடங்கள் முன்னர் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி மாநில மகளிர் ஆணையத் தலைவராக இருந்தபோது ஒரு வேண்டுகோள் அனுப்பினார்’ என்று எழுதுகிறார் பழுத்த விமர்சகர் என்று பெயரெடுத்த ஞாநி. ஒட்டு மொத்த துறையையே வெட்கங்கெட்ட துறையாகக் குறிப்பிடவேண்டிய அவசியம் என்ன?

பத்திரிகைத் துறையில் மட்டுமின்றி சினிமாத் துறையிலும் கால் பதித்திருப்பவராயிற்றே! இரண்டையும் ‘பேலன்ஸ்’ செய்யவேண்டாமா, பாவம்!
.

Tuesday, October 13, 2009

என் தம்பி ரமேஷ்வைத்யா! - PART II

மேஷ் வைத்யா பற்றித் திடீரென்று பதிவெழுதுவதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று - நேற்றைய ஞாயிறன்று ஞாநியின் கேணிக் கூட்டத்தில் சந்தித்த நண்பரும் எழுத்தாளருமான எஸ்.சங்கரநாராயணன், ரமேஷ் மீண்டும் தன் குடிப் பழக்கத்தை நிறுத்தும் சிகிச்சை மேற்கொள்ளும்பொருட்டு அடையாறு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார் என்ற தகவலைச் சொன்னது. மற்றொன்று, செல்வேந்திரன் தன் வலைப்பூவில் ரமேஷ் வைத்யா பற்றி எழுதியிருந்தது.

உபதேசங்களுக்கும் அறிவுரைகளுக்கும் இந்தக் காலத்தில் மதிப்பில்லை. யார் சொல்லியும் யாரும் கேட்கப்போவது இல்லை. அவரவர்கள் பட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். நான் என் மகள், மகனுக்குக்கூட எந்த அறிவுரைகளும் சொல்வதில்லை. ‘இப்படி நடந்தால் பின் விளைவுகள் இப்படி இருக்கும்’ என்று சுட்டிக்காட்டுவதோடு சரி.

ரமேஷ் வைத்யாவுக்கும் அவரின் குடிப்பழக்கத்தை நிறுத்த நான் எந்த அறிவுரையும் சொன்னதில்லை. மறைமுகமாக என் வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். அவர் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பை அவ்வப்போது வெளிப்படுத்தி, அவரது குடிப்பழக்கம் அந்த மதிப்பைக் குறைப்பதற்குத் தன்னாலான பங்களிப்பைச் செய்து வருகிறது என்பதையும் சொல்லியிருக்கிறேன். ஆனால், அவர் கேட்டிராத அறிவுரைகளா! அவர் அதையெல்லாம் தாண்டி, அவர் குடியைக் குடிக்கிறாரா அல்லது குடி அவரைக் குடிக்கிறதா என்று ஐயமுறும் நிலைக்கு வந்துவிட்டார்.

முதல் தேதியன்று, சொன்னபடி அவர் ஃப்ளாட்டைக் காலி செய்யவில்லை. இதற்குள் வேறு சில நிகழ்வுகள் நடந்தன. என் பெற்றோர் அங்கே குடி வருவதாக இருந்தது மாறிப் போயிற்று. அவர்கள் நான் வசிக்கும் அசோக் நகர் வீட்டுக்கே வர விரும்பினார்கள். தவிர, மற்றொரு நண்பரும், கவிஞர் நா.முத்துக்குமாரின் தம்பியுமான நா.ரமேஷ்குமார் (அட! இவரும் ரமேஷ்!) என் ஃப்ளாட் காலியாக இருப்பதை அறிந்து, தனக்கு அதைத் தர இயலுமா என்று கேட்டார். உடனே சம்மதித்தேன்.

ஆனி மாதம் குடி போகக்கூடாது என்பார்கள். ஆனி பிறக்க அப்போது சில நாட்களே இருந்தன. அதற்குள் தனக்கு அந்த இடம் கிடைக்குமா என்று கேட்டார் ரமேஷ்குமார். கண்டிப்பாகத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு, ரமேஷ் வைத்யாவை விசாரித்தேன். இரண்டு மூன்று இடங்கள் போய்ப் பார்த்ததாகவும், எதுவும் செட்டாகவில்லை என்றும், எப்படியும் இரண்டு மூன்று நாட்களுக்குள் காலி செய்துவிடுவதாகவும் சொன்னார். அதன்பின் அந்த ஃப்ளாட்டை புதிதாக டிஸ்டெம்பர் அடித்துக் கொடுக்க எனக்கு இரண்டு நாட்களாவது தேவை.

ஆனி பிறப்பதற்கு இரண்டு நாள் முன்பு வரைக்கும் அவர் காலி செய்யவில்லை. விசாரித்ததில், “நாளை கண்டிப்பாகச் செய்துவிடுகிறேன் அண்ணா!” என்றார். அவருக்கு நெருக்கடி கொடுக்கிறோமே என்று எனக்கு மனதில் தாங்கமுடியாத துக்கம் ஒருபுறம், ரமேஷ்குமாருக்குக் கொடுத்துவிட்ட வாக்கு ஒருபுறம்; மறுநாள் அலுவலகத்துக்கு லீவ் போட்டுவிட்டு, நேரே சாலிகிராமம் போனேன்.

இடம் எதுவும் அமையவில்லை என்று வருத்தமாக உட்கார்ந்திருந்தார். நான் போகும்போதே வழியில் இரண்டு தெருக்களுக்கு முன்னால் ஒரு வீடு காலியாக இருப்பதைக் கவனித்தேன். எனவே, “வாருங்கள், நான் இடம் காட்டுகிறேன்” என்று கையோடு அவரை அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

(இங்கே ஒரு குறிப்பு... இந்தப் பதிவை என் நண்பரும், உடன்பிறவாச் சகோதரருமாகிய ரமேஷ் வைத்யாவைக் குற்றம் சாட்டுவதற்காகவோ, அவர் மீது மற்றவர்களுக்கு ஒரு கெட்ட அபிப்ராயம் ஏற்படுவதற்காகவோ நான் எழுதவில்லை. மகாகவி பாரதிக்கு கஞ்சாப் பழக்கம் இருந்தது என்பார்கள்; கவியரசு கண்ணதாசன் பெத்தடினுக்கு அடிமையாக இருந்தது எல்லோருக்கும் தெரியும். பொதுவாகவே திறமைசாலிகள், படைப்பாளிகள், குறிப்பாகக் கவிஞர்கள் இத்தகைய போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, தங்கள் உடம்பையும் பாழடித்துக்கொண்டு, அவர்களால் சமூகத்துக்குக் கிடைக்கவிருக்கும் இன்னும் பல அரிய படைப்புகளையும் வெளிவர விடாமல் பாழடிக்கிறார்களே என்கிற தாங்கவொண்ணா ஆதங்கம் மட்டுமே காரணம் நான் இதை எழுதுவதற்கு.

இதன் முதல் பாகத்தைப் படித்த கையோடு நண்பர் ‘பட்டர்ஃப்ளை சூர்யா’ போன் செய்து, “அவசியம் இந்தப் பதிவை நீங்கள் போடத்தான் வேண்டுமா? ஒரு தனி நபர் பற்றிய பதிவு எதற்கு? அதுவும், ரமேஷ் வைத்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்த நேரத்தில் இது தேவையா?” என்றார்.

அவரது கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தப் பதிவை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ரமேஷ் வைத்யாவின் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் இதை நான் எழுதியதாக வேறு யாரேனும் எண்ணியிருந்தாலும்கூட, அவர்களுக்கு ‘அப்படி நிச்சயமாக இல்லை’ என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவ்விதம் அவர்கள் எண்ணும்படியாக என் எழுத்து தொனித்ததற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

என் இப்போதைய ஒரே ஆசை, என் தம்பி ரமேஷ் வைத்யா இந்த முறையாவது குடிப் பழக்கத்திலிருந்து முற்றிலுமாக மீண்டு வர வேண்டும்; பத்திரிகையுலகிலோ, திரையுலகிலோ மிக உயர்ந்த நிலையை அடைய வேண்டும்; அவரும் அவர் மனைவியும் குழந்தையும் சகல சௌபாக்கியங்களும் பெற்று, வளமாக வாழ வேண்டும். நான் வணங்கும் மகாஸ்ரீ அரவிந்த அன்னை என் பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பார் என்று நம்புகிறேன்.)
.

என் தம்பி ரமேஷ்வைத்யா!

ன் மனதுக்கு உகந்தவர்களிடமே, எனக்கு மிகவும் விருப்பமானவர்களிடமே இரக்கத்தைக் கைவிட்டுக் கொஞ்சம் கெடுபிடியாக நடந்துகொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை எனக்குப் பலமுறை உண்டாகியிருக்கிறது. ஒரு சமயம், சகோதரி கேட்ட கேள்விக்கு ஒழுங்காக பதில் சொல்லவில்லையென்று என் தம்பி மீது கடுங்கோபம் கொண்டு, மூன்று வருட காலத்துக்கு அவனோடு பேசாமல் ஒரே வீட்டில் இருந்திருக்கிறேன். பின்னொரு சமயம், என் மாமா மகனைக் கடிந்துகொண்டாள் என்று அதே சகோதரியிடம் கோபித்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறேன். சகோதர, சகோதரிகளிடம் மட்டுமல்ல; இதர உறவினர்கள், நண்பர்கள் சிலரிடம்கூட இப்படிக் கடுமையாக நான் நடந்துகொண்டு இருக்கிறேன். பின்னர் அது குறித்து வருந்தியும் இருக்கிறேன். வருத்தம் நான் அப்படிக் கடுமையுடன் நடந்துகொண்டதற்காக அல்ல; அந்த நிலைமைக்கு அவர்கள் என்னை ஆளாக்கிவிட்டார்களே என்பதற்காக!

அந்த வகையில் நண்பர் ரமேஷ் வைத்யா பற்றியும் எனக்கு வருத்தம் உண்டு. நண்பர் என்று குறிப்பிட்டுள்ளேனே தவிர, அவர் என்னைத் தன் மூத்த அண்ணனாகத்தான் மதித்தார். ரவி அண்ணே என்றுதான் அழைப்பார். ஆரம்பத்தில் அவர் பெயரை வைத்து அவர் மோகன் வைத்யா, ராஜேஷ் வைத்யா சகோதரர்களின் கடைசித் தம்பியோ என்று நான் நினைத்ததுண்டு. தன்வந்திரி என்கிற மருத்துவப் பத்திரிகையில் அவர் முன்பு பணியாற்றியதால், தன் பெயரோடு ‘வைத்யா’ ஒட்டிக்கொண்டுவிட்டது என்று பின்பு அவர் விளக்கினார்.

மிகச் சிறந்த படைப்பாளி; அறிவாளி; கவிஞர்; கதாசிரியர்; எழுத்தாளர்; நல்ல திறமை உள்ளவர். பழகுவதில் இனியவர். ஆனால், ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போல், அவரிடம் இருந்த அத்தனைத் திறமைகளையும் குடிப் பழக்கம் பாழாக்கிவிட்டது. அதில் எனக்குத் தீராத வருத்தம்.

அவர் தன் பெற்றோருடனோ, சகோதரருடனோ கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உடனடியாக வாடகைக்குப் புது வீடு பார்த்துக்கொண்டிருந்த நேரம்... சாலிகிராமத்தில் என் ஃப்ளாட் காலியாக இருப்பதை அறிந்து என்னை அணுகினார். சக பணியாளர், இனிய நண்பர் என்பதால், அவரது குடிப் பழக்கம் பற்றித் தெரிந்திருந்தும், அவருக்கு அந்த இடத்தை வாடகைக்குக் கொடுக்கச் சம்மதித்தேன். பல குடித்தனங்கள் மத்தியில் உள்ள ஃப்ளாட் என்பதால், அப்படியாவது அவர் தன் குடியைக் குறைத்துக் கொள்வார் என்கிற நப்பாசையும் உண்டு.

இடத்தை வந்து பார்த்தார். புது ஃப்ளாட். வாங்கிய ஆசைக்கு நான் அதில் ஒரு மூன்று மாத காலம் மட்டும் வசித்துவிட்டு, பின்பு குழந்தைகளின் பள்ளிக்கூட வசதியை முன்னிட்டு, நான் முன்பு வாடகைக்குக் குடியிருந்த அதே அசோக் நகர் வீட்டுக்கே மீண்டும் குடிவந்துவிட்டேன். பின்னர் ஓரிரு மாதங்கள் என் ஃப்ளாட் பூட்டியே கிடந்தது. அந்த நிலையில்தான் ரமேஷ் வைத்யா அந்த இடத்தை வந்து பார்த்தார். “எனக்கு இது பெரிய வசந்த மாளிகை மாதிரி இருக்கிறதே... வாடகை என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்றார். எனக்கு வீட்டு ஓனர் போன்றெல்லாம் வாடகை பேசிப் பழக்கமில்லை. அதுவும் ரமேஷ் வைத்யாவிடம் இன்னது கொடுங்கள் என்று கேட்க விருப்பமில்லை. எனவே, “உங்கள் இஷ்டம்தான். என்ன கொடுக்கிறீர்களோ, கொடுங்கள்!” என்றேன்.

“தாராளமாக இதற்கு 4,000 ரூபாய் வாடகை தரலாம். ஆனால், என்னால் அவ்வளவு தர முடியாதே!” என்றார். “பரவாயில்லை. உங்களுக்கு விருப்பமானதை, உங்களால் முடிவதைக் கொடுங்கள்” என்றேன். தயங்கிக்கொண்டே, “2,500 பரவாயில்லையா? என்னால நீங்க நஷ்டப்படக் கூடாது!” என்றார். “மூன்று மாதம் பூட்டியே வைத்திருந்தேனே! அது நஷ்டமில்லையா? தவிர, லாப நஷ்டம் பார்க்க நான் வியாபாரியல்ல! நீங்கள் உடனே குடி வாருங்கள். இங்கே வந்த பிறகு, நீங்கள் இன்னும் பல சினிமா வாய்ப்புகள் பெற்று, மேல் நிலைக்குச் செல்ல வேண்டும். (நீ வருவாய் என என்றொரு படத்தில் அவரின் முதல் திரைப்பாடல் வெளியாகியிருந்த நேரம் அது.) அதுதான் என் ஆசை! சடையப்ப வள்ளல் போன்று நான் பெரும் பணக்காரன் இல்லை; என்றாலும், கம்பருக்கு அவன் உதவியது போன்று உங்களுக்கு என்னால் உதவ முடிந்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன்” என்றேன்.

ரமேஷ் வைத்யா தன் மனைவி மற்றும் தாயாருடன் அங்கே குடி வந்தார். ஆனால், நான் எதிர்பார்த்தது போல், அவரின் குடிப் பழக்கம் மட்டுப்படவில்லை. இன்னும் அதிகமாகியிருப்பது தெரிந்தது. அக்கம்பக்கத்துக் குடித்தனக்காரர்களிடமிருந்து அவரைப் பற்றிய புகார்கள் எனக்கு வந்தன. ஒரே அலுவலகத்தில் வேலை செய்தாலும், நேரே அது பற்றி அவரைக் கேட்கச் சங்கடப்பட்டு, இ-மெயில் அனுப்பினேன். “ஒரு வீட்டுக்காரன் சொல்வதாக இதை எடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு நண்பர் அல்லது நீங்களே சொல்வது போன்று ஒரு சகோதரர் சொல்கிற அறிவுரையாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை நான் சகித்துக் கொள்ள முடியும். ஆனால், மற்ற குடித்தனக்காரர்கள் உங்கள் செயலால் பாதிக்கப்பட்டால், அதற்கு நானல்லவா பொறுப்பு? இதுவே முதலும் கடைசியுமாய் இருக்கட்டும். மீண்டும் ஒருமுறை உங்கள் மீது புகார் வருமானால், தாட்சண்யமின்றி உங்களை வெளியேற்ற வேண்டி வரும்” என்று எச்சரித்தேன்.

அதன்பின் சில மாதங்கள், சில வருடங்கள் கடந்தன. ஒரு நடு இரவில் அவர் எனக்குப் போன் செய்து, (நடு இரவில் ரமேஷ் வைத்யாவிடமிருந்து போன்கால் என்றால், அவர் நல்ல சுதியில் இருக்கிறார் என்று பொருள்.) “ரவிண்ணே! எனக்கு உங்க மேல கோபம்! உங்களை நான் வெறுக்கிறேன். நீ பைத்தியக்காரன். உலகம் தெரியாத கம்மினாட்டி!” என்று ஏதேதோ பேசினார். பொறுமையாகக் கேட்டுக் கொண்டு, “சொல்லுங்க ரமேஷ்! அதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே? இப்ப எதுக்காகப் போன் பண்ணீங்க?” என்றேன். “உன்ன மாதிரி முட்டாள் இருப்பானாடா உலகத்துல? உன் ஃப்ளாட்டை வெளியில வாடகைக்கு விட்டா, எவ்வளவு வரும்னு உனக்குத் தெரியுமா?” என்றார். “தெரியலை! நீங்களே சொல்லுங்க!” என்றேன். “பைத்தியக்காரா, பைத்தியக்காரா! 6,000 ரூபாய், 7,000 ரூபாய்க்குப் போகும். நானும் இங்கே வந்ததுலேர்ந்து வெறும் 2,500-தான் கொடுத்திட்டிருக்கேன். நீயும் பேசாம அதை வாங்கிட்டிருக்கே! நீயெல்லாம் எப்படித்தான் பொழைக்கப் போறியோ?” என்றார்.

“சரி! இப்ப அதுக்கு என்ன? நாளைக்கு அது பத்திப் பேசி ஒரு முடிவெடுப்போம். படுத்துத் தூங்குங்க” என்றேன். “வர மாசத்துலேர்ந்து ஆயிரம் ரூபாய் சேர்த்து 3,500 ரூபாயா கொடுக்கப் போறேன். வாங்க மாட்டேன், வேண்டாம் அது இதுன்னா ஆள் வெச்சு உதைப்பேன்!” என்றார்.

குடிகாரன் பேச்சு, விடிஞ்சாப் போச்சு என்பார்கள். ஆனால், ரமேஷ் வைத்யா பத்துப் பன்னிரண்டு நாள் கழித்து, முதல் தேதியன்று ஞாபகமாய் ரூ.3,500-க்கு செக் தந்தார். நானாக அவரை வாடகை கேட்டதில்லை. சில சமயம் முதல் தேதியன்று வாடகை கொடுக்க மறந்துபோய், பத்துப் பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகே அவருக்கு ஞாபகம் வந்தால், பதறிப் போய்விடுவார். “என்ன ரவி சார், ஞாபகப்படுத்தக் கூடாதா? ஐயோ, ஸாரி!” என்று அடுத்த மாச வாடகையையும் சேர்த்துச் செக் எழுதுவார். எல்லாம் சரி..!

ஆனால்... போன வருட ஆரம்பத்தில் அவர் மீது மீண்டும் புகார்கள். நான் ரமேஷ் வைத்யாவுக்கு வீட்டை வாடகைக்கு விட்டபின்பு ஐந்தாறு வருடங்கள் அந்தப் பக்கமே போகவில்லை. ஏதோ வீட்டு ஓனர் தன் வீட்டைக் குடித்தனக்காரர் எப்படி வைத்திருக்கிறார் என்று பார்வையிடப் போவது போன்று நெருடலாக இருந்ததாலேயே போவதைத் தவிர்த்து வந்தேன். எனினும், இம்முறை அவர் மீது மற்ற குடித்தனக்காரர்கள் வைத்த புகார்கள் சற்றுக் கடுமையாக இருந்ததால், போனேன். நேரிலேயே புலம்பினார்கள். சிலர் என்னைக் கண்டிக்கவும் செய்தார்கள்.

மறுநாள், அலுவலகம் வந்ததும் ரமேஷ் வைத்யாவை அழைத்தேன். “மன்னித்துக் கொள்ளுங்கள் ரமேஷ்! எனக்கு வேறு வழியில்லை. வருகிற முதல் தேதியன்று வீட்டை நீங்கள் காலி செய்து கொடுக்க வேண்டும்” என்றேன். முதல் தேதிக்குப் பதினைந்து நாள்தான் இருந்தது.

அவர் இதை எதிர்பார்க்கவில்லை. எனினும், “சரி” என்றார். காரணம் கேட்கவில்லை. நானாகத்தான் சொன்னேன்... “என் தங்கை வீட்டில் தற்போது வசிக்கும் என் பெற்றோருக்கு அங்கே சரிப்படவில்லை. உடனடியாக அவர்கள் அங்கிருந்து காலி செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களுக்கும் என் தம்பிக்குமாக ஓர் இடம் அவசரமாகத் தேவைப்படுகிறது. எனவேதான் தங்களை நெருக்குகிறேன்!”

அவரை காலி செய்யச் சொன்னதற்கான காரணம் வேறாக இருந்தாலும், நான் அவருக்குச் சொன்ன காரணமும் பொய்யில்லை.

முதல் தேதி வந்தது. ரமேஷ் வைத்யா வீட்டைக் காலி செய்யவில்லை.

(அடுத்த பதிவில் தொடர்கிறேன்...)
.

Sunday, October 11, 2009

ராகு காலக் கூட்டம்!

ஞாநியின் ஐந்தாவது கேணிக் கூட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கரிசல் காட்டு எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்கள் இந்தக் கேணிக் கூட்டத்துக்கு ‘ராகு காலக் கூட்டம்’ என்ற பெயரைச் சூட்டினார்; கூட்டம் நடைபெறும் நேரம் ஞாயிறு மாலை 4:30 - 6:00 ராகுகாலம் என்பதால்!

நான் அதிகம் படிப்பாளி இல்லை. கல்வி, புத்தக வாசிப்பு இரண்டிலுமே! இலக்கிய எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுகிற பல படைப்பாளிகளின் சிறுகதைகளையோ நாவல்களையோ நான் அதிகம் - அதிகம் என்ன, சிலரின் ஒரே ஒரு கதையைக்கூட நான் படித்தது இல்லை. அப்படி நான் அதிகம் படிக்காத எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.

கி.ரா. என்றதும் கோபல்லபுரத்து மக்கள், கரிசல் காட்டுக் கதைகள் என பளிச்சென்று இரண்டைக் குறிப்பிடுவார்கள். ஆனந்த விகடனிலும் ஜூனியர் விகடனிலுமாக அவரின் படைப்புக்கள் வெளியானபோது அவற்றுக்கு ஓவியம் வரைந்தவர் ஆதிமூலம். அவரின் படங்கள் யதார்த்த ஓவியங்களாக இல்லாமல், அப்ஸ்ட்ராக்ட் படங்களாக, நவீனத்துவ வகையைச் சார்ந்தவையாக இருக்கும். என்னை அப்படியான ஓவியங்கள் ஒரு சிறிதும் கவரவேயில்லை. நான் சாமானியன். என்னால் ம.செ., ஜெயராஜ், மாருதி, அரஸ், ஸ்யாம் போன்றவர்களின் படங்களை மட்டுமே ரசிக்க முடிந்திருக்கிறது.

பொதுவாக, பத்திரிகைகளில் வெளியாகும் படைப்புகளைப் படிக்க வைப்பதில் அவற்றுக்கு வெளியிடப்படும் ஓவியங்களின் பங்கு அதிகம். ஓவியங்கள் வசீகரிக்கவில்லை என்றால், வாசகர்கள் அந்தப் படைப்பைப் புறந்தள்ளிவிடுகிற ஆபத்து அதிகம். (தனிப் புத்தகங்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை.) அப்படி, ஆதிமூலத்தின் ஓவியங்கள் என்னைக் கவராததனாலேயே, கி.ரா-வின் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்று எனக்கு ஆர்வம் எழவில்லை. இன்னொரு காரணமும் உண்டு.

வலம்புரி ஜானை ஆசிரியராகக் கொண்டு ‘தாய்’ என்றொரு வார இதழ் முன்பு வந்துகொண்டிருந்தது. அதில்தான் கி.ராஜநாராயணன் என்ற பெயரை முதன்முதலில் பார்த்தேன். ‘கிராமியக் கதைகள்’ என்ற தலைப்பிலோ அல்லது வேறு தலைப்பிலோ, அவர் அதில் வாராவாரம் நாட்டுப்புறக் கதை ஒன்றை எழுதி வந்தார். ஒன்றைப் படித்துப் பார்த்தேன். படு ஆபாசம்! ‘... கிணற்றங்கரைக்கு ஒருத்தி குளிக்கப் போனாள்; படிக்கட்டில் கால்களை விரித்து உட்கார்ந்தாள்; தண்ணீர்ப் பாம்பு ஒன்று சரசரவென்று...’ என்று அந்தக் கதையில் குமட்டுகிற அளவுக்கு ஆபாசம் கொட்டிக் கிடந்தது. அத்தோடு கி.ரா. கதைகளைப் படிப்பதை நிறுத்திவிட்டேன். ‘தாய்’ வாசகர்களிடமும் அந்தக் கதைகளுக்கு எதிர்ப்புக் கிளம்பி, சில வாரங்களுக்குப் பின்பு நிறுத்திவிட்டார்கள்.

ஆனால், அந்த அனுபவத்தை வைத்து கி.ரா-வை எடை போடக்கூடாதுதான். ஆனால் என்ன செய்ய... அதற்குப் பின்பு அவரைப் படிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவே இல்லையே!

போன வருடமோ, அதற்கு முந்தின வருடமோ கி.ரா-விடம் ஆனந்த விகடன் தீபாவளி மலருக்காகக் கதை கேட்டிருந்தேன். அனுப்பியிருந்தார். அந்தச் சிறுகதையிலும் எனக்குப் பெரிய சுவாரசியம் தெரியவில்லை.

போகட்டும்... கேணிக் கூட்டத்துக்கு வருகிறேன். கி.ரா. பேச்சு சுவையாக இருந்தது. இயல்பான பேச்சு. பெருவிரல் குள்ளன் கதை, ஒன்பது பால்மாட்டுக்காரி ஒரு பால்மாட்டுக்காரியிடம் கடன் வாங்கிய கதை எனச் சில நாட்டுப்புறக் கதைகளை அதிகம் வளர்த்தாமல் சுருக்கமாகச் சொன்னார். கடவுளில் தொடங்கி, உழைப்பு, தன்னம்பிக்கை, வதந்தி, தாழ்வு மனப்பான்மை எனப் பல அம்சங்களை வெளிப்படுத்தும் நாட்டுப்புறக் கதைகள் உண்டு என்றார். பழைய கர்ண பரம்பரைக் கதைகள் மட்டுமில்லாது, வெள்ளைக்காரன் நம்மை ஆண்டபோது அவனைக் கேலி செய்யும் நாட்டுப்புறக் கதைகள் கூட உண்டு என்று, அதற்கு உதாரணமாக ‘நெல் எந்த மரத்தில் விளையும்?’ என்று கேட்ட வெள்ளைக்காரத் துரையின் கதையைச் சொன்னார்.

அவர் சொன்னவற்றில் பளீரென்று மனதில் பதிந்த விஷயம் ஒன்று உண்டு. நம்பிக்கைகள் பற்றிப் பேசும்போது, நல்ல நம்பிக்கை, மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, சகுனம் என மனிதன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனுக்கு ஏதாவது ஒரு நம்பிக்கை இருந்தே தீரும்; அதைத் தவிர்க்கவே முடியாது என்றவர், அதற்கு உதாரணமாக பெரியார் பற்றிய ஒரு நிகழ்வைச் சொன்னார்.

பெரியார் ஒரு முறை ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தாராம். அப்போது சட்டென்று ஜெனரேட்டர் மின்சாரம் தடைப்பட்டு, ஒலிபெருக்கியில் அவர் குரல் வெளிவரவே இல்லையாம். பின்னர் சரி செய்து, பெரியார் மீண்டும் தொடர்ந்து பேசத் தொடங்கினாராம். சில விநாடிகளில் மீண்டும் ஜெனரேட்டரில் கோளாறு. சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு, பெரியார் மீண்டும் பேசத் தொடங்கினாராம். சட்டென்று மீண்டும் மின் தடை! உடனே பெரியார் சலித்துப் போய், ‘அட ராமா!’ என்று உரக்கச் சொல்லித் தலையில் கைவைத்துக் கொண்டாராம். தன்னால் இயல்பாக வந்த வார்த்தை.

இதற்குப் பலர் பின்னர் வெவ்வேறு வியாக்கியானங்கள் சொல்லியிருக்கலாம். ஆனால், மனதின் ஆழத்தில் சில பதிவுகள் நம்மையறியாமல் பதிந்திருக்கும். அதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

நம்ப முதல்வர் கலைஞர் கூட சில நேரங்களில் தம்மையும் அறியாமல் ‘பகுத்தறிவு மாயை’யிலிருந்து கொஞ்சம் வெளியே வந்து, ‘எல்லாம் என் நேரம்’ என்றும், ‘நான் வந்த வேளை அப்படி’ என்றும் சொல்லவில்லையா?!
.

Monday, October 05, 2009

வள்ளலார் காட்டிய வழி!

ப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறேன். என் தமிழய்யா திரு.அ.க.முனிசாமி அவர்கள் வகுப்பில் ஒரு செய்தியைச் சொன்னார். விழுப்புரத்தின் கடைக்கோடியில் இருக்கும் பெரிய சிவன் கோயிலில் திருவருட்பிரகாச வள்ளலாரின் ‘அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை’ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் காலை வேளையில் பிரார்த்தனை வகுப்பு நடத்த இருப்பதாகவும், தினமும் சென்று அதில் கலந்து கொண்டால் ஒரு நாளைக்கு 20 ரூபாய் உதவித் தொகை கிடைக்கும் என்றும் சொல்லி, விருப்பமுள்ள மாணவர்கள் அதில் சேரலாம் என்றார். பின்பு என் பக்கம் திரும்பி, “யார் சேருகிறார்களோ இல்லையோ ரவி, நீ கட்டாயம் சேர வேண்டும். அந்த வகுப்பில் கலந்து கொள்வது உனக்கு நன்மையைத் தரும்” என்றார்.

நானும் சேர்ந்துகொண்டேன். அதிகாலை 5 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு, கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த அந்த சிவன் கோயிலுக்கு நடந்து செல்வேன். அது டிசம்பர் மாதம் என்பதால், பனி பெய்யும். குளிர் நடுக்கும். ஸ்வெட்டர் அணிந்துகொண்டு, பற்கள் கிடுகிடுக்க நடந்து போவேன். சிவன் கோயில் வளாகத்தினுள், முன்புறம் இருந்த ஒரு கட்டடத்தினுள் இராமலிங்க அடிகளாரின் திருச்சபையினர் இந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தினர். பெரியவர்கள், சிறியவர்களாக ஒரு இருபது முப்பது பேர் சேர்ந்திருந்தோம்.

இராமலிங்கப் பெருமகனாரின் திருவுருவச் சிலை உள்ள சிறு தேக்கு மர மண்டபம் வைக்கப்பட்டு, அதன் மேலே அவரின் பிரத்யேக கோட்பாடான ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ எழுதப்பட்டிருக்கும். வள்ளலாரின் கதையை ஒருவர் முதலில் சிறிது விளக்கிச் சொல்லுவார். பின்பு ஓதுவார் ஒருவர் ஓங்கிய குரலெடுத்து வள்ளலாரின் பாடல்களில் ஒன்றைப் பாடுவார். நாங்கள் அதைப் பின்பற்றிப் பாடுவோம்.

அப்படித்தான் எனக்கு அறிமுகமானார் வள்ளலார்.

வள்ளலாரின் பாடல்கள் அனைத்துமே மிக எளிமையானவை. பதவுரை, பொருளுரை என்று பிரத்யேகமாக எதுவும் தேவையிராது. படிக்கும்போதே அதில் ஓர் எளிமையும், அழகும் புலப்படும். அர்த்தம் எளிதில் விளங்கும். வள்ளலாரின் பாடல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானது, ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்’ என்கின்ற பாடல்தான். ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா; ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டா; மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டா; வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டா’ என்று - மிக உயர்ந்த, நல்ல கருத்துக்களாகவே இருந்தாலும் - எதிர்மறை வாக்கியங்களாகவே எழுதிய உலகநாதரின் பாடல்களைப் படித்திருந்த என்னை, வள்ளலாரின் ‘வேண்டும், வேண்டும்’ என்கின்ற இந்தப் பாடல் ரொம்பவே ஈர்த்தது.

அவரின் ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே’ பாடலை டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலிலா அல்லது கே.ஆர்.ராமசாமியின் குரலிலா என்று ஞாபகமில்லை; கேட்டு ரசித்திருக்கிறேன். நாங்கள் அந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில், ஒரு பஜனைப் பாடல் போல, ‘கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே’ என்று நீட்டி முழக்கி கோரஸாகப் பாடுவோம். அது பரவசமும் சிலிர்ப்புமான அனுபவம்.

பின்னர், வள்ளலார் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, ஊரன் அடிகள் எழுதிய புத்தகத்தை விழுப்புரம் லைப்ரரியில் எடுத்துப் படித்தேன். வள்ளலாரின் பிறப்பு, வளர்ப்பு, அவர் தண்ணீரையே எண்ணெய்யாக்கி விளக்கெரித்த சம்பவம், கடலூர் கோர்ட்டில் ஒரு வழக்கில் வள்ளலார் நேரடியாக ஆஜரானபோது, நீதிபதியே சிலிர்த்து எழுந்து நின்ற நிகழ்ச்சி, வள்ளலாரின் அற்புத லீலைகள், இறுதியில் பூட்டிய அறைக்குள் காணமல் மறைந்து ஜோதியுடன் அவர் ஐக்கியமானது எனப் பலவற்றை அதன் மூலம் படித்து அறிந்து கொண்டேன்.

சில மாதங்களுக்கு முன் கலைஞர் டி.வி-யில் சுப.வீரபாண்டியன் ‘ஒன்றே சொல்; நன்றே சொல்’ நிகழ்ச்சியில் வள்ளலார் பற்றிப் பேசும்போது, ‘வள்ளலார் ஜோதியாக மறைந்தது சர்ச்சைக்குரியது. அவர் பார்ப்பனீயத்துக்கு எதிராக இருந்தார். அதனால், பார்ப்பனர்கள் சேர்ந்து அவரைக் கொளுத்திவிட்டு, ஜோதியோடு ஐக்கியமானதாக கதை கட்டி விட்டார்கள்’ என்றார். இருக்கலாம். பார்ப்பனர்களுக்கு எதிரான தகவல்களைத் தேடித் துருவிக் கண்டெடுத்துச் சொல்வதில் அவருக்கு அப்படியொரு அலாதி ஆனந்தம். பார்ப்பனர்களுக்கு ஆதரவான செய்திகள் எதுவும் அவர் கண்களில் படுவதே இல்லை. அவர் என்ன செய்வார் பாவம்! தாம் படிப்பதைத்தானே பகிர்ந்துகொள்ள முடியும்!

சிதம்பரம் மருதூரில் 1823-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5-ம் தேதி, ராமையா பிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் பிறந்தவர் இராமலிங்க அடிகளார். இன்று அவருடைய 187-வது அவதார தினம். சத்திய ஞான சபையை நிறுவி, சுத்த சமரச சன்மார்க்கத்தைப் போதித்தவர் அவர். கருணையின் உச்சத்துக்கே போய், ‘வாடிய பயிரைக் கண்டதும் வாடினேன்’ என்று மொழிந்தவர் அவர். வடலூரில் இன்றைக்கும் தொடர்ந்து அவரது அணையா ஜோதி சுடர்விட்டுக்கொண்டு இருக்கிறது. வள்ளலார் தொடங்கி வைத்த அன்னதானம் இன்னமும் அங்கே சிறப்பாக நடைபெற்று வருகிறது.

“அன்ன தானம் என்று சொல்லக் கூடாது; தானம் செய்ய நாம் யார்? நம்முடையது என்று நமக்குச் சொந்தமானது ஏதாவது இருந்தால்தானே அதை நாம் தானம் செய்ய முடியும்? இந்த உலகில் எதையும் நாம் கொண்டு வரவில்லை; எதையும் கொண்டு போகவும் போவதில்லை. அப்படியிருக்க, எப்படி அது தானமாகும்? எனவே, அதை அன்ன விரயம் என்றே சொல்ல வேண்டும்” என்று விளக்கினார் அந்த பிரார்த்தனை வகுப்பு நடத்திய வள்ளலாரின் சீடர் ஒருவர். விரயம் என்றால் வீணடித்தல் என்று பொருளல்ல. பகிர்ந்தளித்தலைத்தான் (distribution) அந்தச் சொல் குறிப்பிடும் என்றும் அவர் சொன்னார்.

இராமலிங்க அடிகளாரின் குடும்பம், 1825-ம் ஆண்டு முதல் 1858-ம் ஆண்டு வரை சென்னையில்தான் தங்கசாலைப் பகுதியில் சுமார் 33 ஆண்டுகள் வசித்தது. அதனாலேயே அந்தப் பகுதி வள்ளலார் நகர் என்று அழைக்கப்படுகிறது.

வள்ளலார் பிறந்த தினமாகிய இன்றைக்கு ஒரு நாள் மட்டும் கள்ளுக்கடைகளுக்கும் சாராயக் கடைகளுக்கும் விடுமுறை விட்டால் போதாது. (அப்படியும் ஷட்டரைப் பாதி இறக்கிவிட்டு அங்கங்கே வியாபாரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.) சென்னை, ஏழு கிணறு பகுதியில் வள்ளலார் வாழ்ந்த வீடு ஒரு தனியாரிடம் உள்ளது. அதை உரிய விலை கொடுத்து வாங்கி, வள்ளலார் நினைவு இல்லமாக மாற்றவேண்டியது தமிழக அரசின் கடமை!

சிபாரிசு செய்வாரா சுப. வீரபாண்டியன்?
.

Friday, October 02, 2009

அக்டோபர் 2

மகாத்மா

காந்தி பிறந்த தினம். ஆனால், அவரது கொள்கைகளை யாராவது பின்பற்றுகிறோமா என்றால், இல்லை. ‘குவார்ட்டர் பாட்டில் வாங்கியதற்குக் கொடுத்த ரூபாய் நோட்டில் சிரிக்கும் காந்தி’ என்று புதுக் கவிதைகள் எழுதிக்கொண்டும், அதை ரசித்துக்கொண்டும் இருக்கிறோம். காந்தியின் பொருள்கள் ஏலத்துக்குப் போவதா என்று ஒரு கோஷ்டி பொங்குகிறது. சிலர் உடம்பு முழுக்க அலுமினிய வர்ணம் பூசிக்கொண்டு, தெருவில் யாசகம் கேட்டு வருகிறார்கள். வேதனையாக இருக்கிறது. சிவனும் பார்வதியும் விஷ்ணுவும் லட்சுமியும் அனுமாரும் பிச்சையெடுத்து வருகிற மாதிரி காந்தியாரும் தெருவுக்கு வந்துவிட்டார். மகாத்மா காந்தி சாலை, காமராஜர் சாலையில் எல்லாம் இரண்டு மூன்று டாஸ்மாக் கடைகள். பள்ளிகள், அலுவலகங்கள் இன்று விடுமுறை விட்டுவிட்டன. பள்ளிக் கலைவிழாக்களில் மாறுவேடப் போட்டி என்றால் காந்தியும் சந்தன வீரப்பனும் கை கோத்து வருவார்கள். அதையும் ரசிப்பார்கள் நம்மவர்கள்.

விழுப்புரம் மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியில் நான் படிக்கும் காலத்தில், தினமும் காலை வணக்கத்தின்போது, மகாகவியின் ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க, வாழ்க!’ என்கிற பாடலும் தவறாமல் பாடப்படும். (இப்போதும் அதைக் கடைப்பிடிப்பார்கள் என்று நினைக்கிறேன்.) பிள்ளைகள் நாங்கள் அதன் மகத்துவம் தெரியாது, மகாத்மாவின் மகிமை புரியாது கடனே என்று பாடுவோம்.

ஆனால், இன்றைக்கு வளர்ந்த பெரியவர்களும், காந்தி பற்றி நன்கு அறிந்தவர்களுமேகூட அவரது கொள்கைப்படி நடக்கிறார்களா என்றால், இல்லை. ‘அதெல்லாம் இந்தக் காலத்துக்குச் சரிவராதுப்பா!’ என்கிறார்கள். ‘பேசாம வெள்ளைக்காரன் கிட்டேயே நாடு இருந்திருந்தா, இன்னிக்கு இத்தனை ஊழலும், அயோக்கியத்தனமும் இருந்திருக்காது. நாடு நல்லாருந்திருக்கும். ரயில்வேயை யாரு கொண்டு வந்தது? போஸ்ட் ஆபீஸ்களை யாரு கொண்டு வந்தது? ரோடுகளைப் போட்டது யாரு? எல்லாம் வெள்ளைக்காரன்தானே? சுதந்திரம் வாங்கிக் கொடுக்கிறேன்பேர்வழின்னு நாட்டைக் குட்டிச்சுவராக்கிட்டுப் போயிட்டார் மனுஷன்’ என்று பேசும் பெரிசுகளைப் பார்த்திருக்கிறேன்.

நாட்டில் நடக்கும் இயற்கைப் பேரழிவுகளுக்கும் துர்மரணங்களுக்கும் இவர்கள் இப்படித்தானே தங்கள் தவறை மறைத்துக் கடவுளைக் குற்றம் சாட்டுகிறார்கள்! காந்தியை மட்டும் விடுவார்களா என்ன!

'World Fellowship of Faith' என்ற நிறுவனம், 1933-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதியன்று, காந்தியின் பிறந்த தினச் செய்தியாக ஒன்றைக் கூறும்படி அவரிடமே கேட்டது. “என் வாழ்க்கையின் மூலம் உங்களுக்குக் கிடைக்காத செய்தியை பேனா முனை மூலம் மட்டும் நான் எப்படி உங்களுக்கு எழுதியனுப்ப முடியும்?” என்று சிறு குறிப்பு மட்டும் எழுதியனுப்பினார் காந்தி.

அவர் தீர்க்கதரிசி!

லால்பகதூர் சாஸ்திரி

சிலரை இருக்கும்போதும் யாரும் கண்டுகொள்வதில்லை; மறைந்த பின்பும் கண்டுகொள்வதில்லை.

டிசம்பர் 12 என்றால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் என்று நேற்றைக்குப் பிறந்த பொடியன் கூடச் சொல்லிவிடுவான். அதே நாளில்தான் அற்புதமான நடிகை சௌகார்ஜானகியும் பிறந்தார். அவரை யாரும் கண்டு கொள்வதில்லை. அது இருக்கட்டும்; அதற்கு முந்தின நாள்தான் (டிசம்பர் 11) மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாள். அதுவாவது யாருக்காவது தெரியுமா? சந்தேகம்தான்!

சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த அதே ஜூன் 23-ம் தேதிதான் வி.வி.கிரியும் மறைந்தார். சஞ்சய் காந்தி ஞாபகத்தில் இருக்கும் அளவுக்கு வி.வி.கிரி இருக்கிறாரா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

காந்தியார் பிறந்த அதே தினத்தில்தான் லால்பகதூர் சாஸ்திரியும் பிறந்தார். காந்தியாரை நினைவு வைத்துக்கொண்டு, அவரது கொள்கைகளை மறந்துவிட்ட இந்தியா, லால்பகதூர் சாஸ்திரியையே மறந்துவிட்டது. இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக உயிர்த் தியாகம் செய்தவர் காந்திஜி. இந்தியா-பாகிஸ்தான் ஒற்றுமைக்காகப் பாடுபட்டு உயிர்த் தியாகம் செய்தவர் சாஸ்திரி. துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகி மண்ணில் சாயும்போது ‘ஹரே ராம்’ என்று உச்சரித்தவர் காந்தி என்று நமக்குத் தெரியும். லால்பகதூர் சாஸ்திரியும் உயிர் துறக்கையில் ‘ஹரே ராம்’ என்றுதான் தன் கடைசி வார்த்தைகளை உச்சரித்தார்.

இவருக்குப் பாவம்.... மகாத்மா, மனிதரில் மாணிக்கம் என்றெல்லாம் எந்தப் பட்டங்களையும் நாம் கொடுத்துக் கௌரவிக்கவில்லை.

பெருந்தலைவர்

காத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியில் நான் படிக்கிற காலத்தில், பெருந்தலைவர் கையால் புத்தகப் பரிசு பெற்றதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். ‘போதுமே! எத்தனை தடவைதான் அதை எழுதுவீங்க?’ என்று சிலர் சலித்துக் கொண்டாலும், எனக்கு அந்த நினைவு மகிழ்வைத் தருவதால், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அதைக் குறிப்பிடுவதில் எனக்குச் சலிப்பே ஏற்படுவதில்லை.

காந்தியைப் போலவேதான் காமராஜும் - ஆசாமியை நினைவு வைத்துக்கொண்டு, கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள். ‘காந்தி கணக்கு’ என்பது போல, ‘காமராஜ் ஆட்சி அமைப்போம்’ என்பதும் கேலிக்குரிய ஒன்றாகிவிட்டது.

காமராஜரின் எளிமை, நேர்மை பற்றி எல்லோருக்குமே தெரியும். கக்கனையும் காமராஜரையும் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று வர்ணிக்கிறது இன்றைய சமூகம். ‘காமராஜ்’ படம் கமர்ஷியல் ஹிட் இல்லை; ‘போக்கிரி’தான் ஹிட்!

சரி, விடுங்க! சொல்லி ஆகப்போவது ஒன்றும் இல்லை. காமராஜைப் பற்றி எனக்குத் தெரிந்த ஒரு சுவையான நிகழ்ச்சியைச் சொல்லி முடிச்சுக்கறேன்.

வாரியார் சுவாமிகளின் மிகப் பெரிய ரசிகர் காமராஜர். முன்பு வாரியார் அவர்கள் தலைவராகவும், திருமதி பட்டம்மாள் வாசன் (எஸ்.எஸ்.வாசனின் துணைவியார்) அவர்கள் உப தலைவராகவும் இருந்து நடத்திய ‘சத்திய சபா’வுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, மேடை நாடகங்களும் கதா காலட்சேபங்களும் பெருமளவில் நடத்த வகை செய்தவர் காமராஜர்.

ஒருமுறை, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் வாரியாரின் ராமாயணச் சொற்பொழிவு. தொடர்ந்து 40 நாட்கள் நடந்த அந்தச் சொற்பொழிவுக்குத் தினமும் அப்படி ஒரு கூட்டம்! சென்னையில் இருந்தால், கண்டிப்பாக அதற்கு வந்துவிடுவார் காமராஜர்.

ஒருநாள், வாரியார் மும்முரமாகச் சொற்பொழிவு செய்துகொண்டு இருந்தார். ஹனுமானுடைய வீரம், ஆற்றல், நேர்மை, எளிமை, தியாகம், கடமை உணர்வு பற்றியெல்லாம் விவரித்துக்கொண்டு இருந்தபோது, காமராஜர் அங்கே வந்தார். கூட்டத்தில் சிறு சலசலப்பு. வாரியார் தமது பிரசங்கத்தைத் தொடர்ந்தார்... “அவர் ஒரு பிரம்மசாரி! பிரம்மசாரிகளுக்கே தனியொரு ஆற்றல் இருக்கும். பிரம்மசாரிகள் மாபெரும் காரியங்களைச் சாதிக்க வல்லவர்கள். தங்கள் செயலில் உறுதியானவர்கள். திடமான முடிவுகளை விரைந்து எடுக்கக் கூடியவர்கள். நான் யாரைச் சொல்கிறேன் என்று தெரிகிறதா?” என்று சொல்லியபடியே காமராஜரைப் பார்த்தார். கூட்டம் புரிந்துகொண்டு கரவொலி எழுப்பியதில், தேனாம்பேட்டையே அதிர்ந்தது.

தொடர்ந்து வாரியார், “நான் இவ்வளவு நேரமும் ஹனுமானைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ஆமாம், நீங்கள் யாரையென்று நினைத்தீர்கள்?” என்று கேட்டார், கண்களை இடுக்கி, தமது வழக்கமான குறும்புச் சிரிப்போடு.

இந்த முறை சென்னையே அதிர்ந்தது.

காமராஜ் மறைந்தபோது, நான் விழுப்புரத்தில் இருந்தேன். அப்போது அங்கே ஒரு தியேட்டரில் சிவாஜியின் ‘பார் மகளே பார்’ படம் ஓடிக்கொண்டு இருந்தது. அதில் ஒரு காட்சியில், காணாமல் போன தன் மகளின் போட்டோவை வைத்துக்கொண்டு சிவாஜி கண் கலங்க நிற்கும் போஸ்டர்கள் ஊர் முழுக்கப் பெரிது பெரிதாக ஒட்டப்பட்டு இருந்தன. காமராஜ் இறந்த தகவல் வந்தவுடன், அத்தனைப் போஸ்டர்களிலும் மகள் படத்துக்குப் பதிலாக அந்த ஃபிரேமுக்குள் காமராஜ் படத்தைக் கச்சிதமாக ஒட்டிவிட்டார்கள். காமராஜ் மறைவைத் தாங்க முடியாமல் சிவாஜி கதறுவது போன்று இருந்த அந்த போஸ்டர்கள் உணர்வுபூர்வமாக என்னைக் கலங்கச் செய்தன.

காமராஜ் மீது மிகுந்த பக்தி கொண்டவர் சிவாஜி. ‘காமராஜ் மறைவுக்கு உண்மையாக அழுதவர் சிவாஜி ஒருவர்தான்’ என்று நடிகை லட்சுமி அப்போது தைரியமாக ஒரு கமெண்ட் அடித்தார். அதுதான் உண்மை!
.