உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, October 13, 2009

என் தம்பி ரமேஷ்வைத்யா! - PART II

மேஷ் வைத்யா பற்றித் திடீரென்று பதிவெழுதுவதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று - நேற்றைய ஞாயிறன்று ஞாநியின் கேணிக் கூட்டத்தில் சந்தித்த நண்பரும் எழுத்தாளருமான எஸ்.சங்கரநாராயணன், ரமேஷ் மீண்டும் தன் குடிப் பழக்கத்தை நிறுத்தும் சிகிச்சை மேற்கொள்ளும்பொருட்டு அடையாறு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார் என்ற தகவலைச் சொன்னது. மற்றொன்று, செல்வேந்திரன் தன் வலைப்பூவில் ரமேஷ் வைத்யா பற்றி எழுதியிருந்தது.

உபதேசங்களுக்கும் அறிவுரைகளுக்கும் இந்தக் காலத்தில் மதிப்பில்லை. யார் சொல்லியும் யாரும் கேட்கப்போவது இல்லை. அவரவர்கள் பட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். நான் என் மகள், மகனுக்குக்கூட எந்த அறிவுரைகளும் சொல்வதில்லை. ‘இப்படி நடந்தால் பின் விளைவுகள் இப்படி இருக்கும்’ என்று சுட்டிக்காட்டுவதோடு சரி.

ரமேஷ் வைத்யாவுக்கும் அவரின் குடிப்பழக்கத்தை நிறுத்த நான் எந்த அறிவுரையும் சொன்னதில்லை. மறைமுகமாக என் வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். அவர் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பை அவ்வப்போது வெளிப்படுத்தி, அவரது குடிப்பழக்கம் அந்த மதிப்பைக் குறைப்பதற்குத் தன்னாலான பங்களிப்பைச் செய்து வருகிறது என்பதையும் சொல்லியிருக்கிறேன். ஆனால், அவர் கேட்டிராத அறிவுரைகளா! அவர் அதையெல்லாம் தாண்டி, அவர் குடியைக் குடிக்கிறாரா அல்லது குடி அவரைக் குடிக்கிறதா என்று ஐயமுறும் நிலைக்கு வந்துவிட்டார்.

முதல் தேதியன்று, சொன்னபடி அவர் ஃப்ளாட்டைக் காலி செய்யவில்லை. இதற்குள் வேறு சில நிகழ்வுகள் நடந்தன. என் பெற்றோர் அங்கே குடி வருவதாக இருந்தது மாறிப் போயிற்று. அவர்கள் நான் வசிக்கும் அசோக் நகர் வீட்டுக்கே வர விரும்பினார்கள். தவிர, மற்றொரு நண்பரும், கவிஞர் நா.முத்துக்குமாரின் தம்பியுமான நா.ரமேஷ்குமார் (அட! இவரும் ரமேஷ்!) என் ஃப்ளாட் காலியாக இருப்பதை அறிந்து, தனக்கு அதைத் தர இயலுமா என்று கேட்டார். உடனே சம்மதித்தேன்.

ஆனி மாதம் குடி போகக்கூடாது என்பார்கள். ஆனி பிறக்க அப்போது சில நாட்களே இருந்தன. அதற்குள் தனக்கு அந்த இடம் கிடைக்குமா என்று கேட்டார் ரமேஷ்குமார். கண்டிப்பாகத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு, ரமேஷ் வைத்யாவை விசாரித்தேன். இரண்டு மூன்று இடங்கள் போய்ப் பார்த்ததாகவும், எதுவும் செட்டாகவில்லை என்றும், எப்படியும் இரண்டு மூன்று நாட்களுக்குள் காலி செய்துவிடுவதாகவும் சொன்னார். அதன்பின் அந்த ஃப்ளாட்டை புதிதாக டிஸ்டெம்பர் அடித்துக் கொடுக்க எனக்கு இரண்டு நாட்களாவது தேவை.

ஆனி பிறப்பதற்கு இரண்டு நாள் முன்பு வரைக்கும் அவர் காலி செய்யவில்லை. விசாரித்ததில், “நாளை கண்டிப்பாகச் செய்துவிடுகிறேன் அண்ணா!” என்றார். அவருக்கு நெருக்கடி கொடுக்கிறோமே என்று எனக்கு மனதில் தாங்கமுடியாத துக்கம் ஒருபுறம், ரமேஷ்குமாருக்குக் கொடுத்துவிட்ட வாக்கு ஒருபுறம்; மறுநாள் அலுவலகத்துக்கு லீவ் போட்டுவிட்டு, நேரே சாலிகிராமம் போனேன்.

இடம் எதுவும் அமையவில்லை என்று வருத்தமாக உட்கார்ந்திருந்தார். நான் போகும்போதே வழியில் இரண்டு தெருக்களுக்கு முன்னால் ஒரு வீடு காலியாக இருப்பதைக் கவனித்தேன். எனவே, “வாருங்கள், நான் இடம் காட்டுகிறேன்” என்று கையோடு அவரை அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

(இங்கே ஒரு குறிப்பு... இந்தப் பதிவை என் நண்பரும், உடன்பிறவாச் சகோதரருமாகிய ரமேஷ் வைத்யாவைக் குற்றம் சாட்டுவதற்காகவோ, அவர் மீது மற்றவர்களுக்கு ஒரு கெட்ட அபிப்ராயம் ஏற்படுவதற்காகவோ நான் எழுதவில்லை. மகாகவி பாரதிக்கு கஞ்சாப் பழக்கம் இருந்தது என்பார்கள்; கவியரசு கண்ணதாசன் பெத்தடினுக்கு அடிமையாக இருந்தது எல்லோருக்கும் தெரியும். பொதுவாகவே திறமைசாலிகள், படைப்பாளிகள், குறிப்பாகக் கவிஞர்கள் இத்தகைய போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, தங்கள் உடம்பையும் பாழடித்துக்கொண்டு, அவர்களால் சமூகத்துக்குக் கிடைக்கவிருக்கும் இன்னும் பல அரிய படைப்புகளையும் வெளிவர விடாமல் பாழடிக்கிறார்களே என்கிற தாங்கவொண்ணா ஆதங்கம் மட்டுமே காரணம் நான் இதை எழுதுவதற்கு.

இதன் முதல் பாகத்தைப் படித்த கையோடு நண்பர் ‘பட்டர்ஃப்ளை சூர்யா’ போன் செய்து, “அவசியம் இந்தப் பதிவை நீங்கள் போடத்தான் வேண்டுமா? ஒரு தனி நபர் பற்றிய பதிவு எதற்கு? அதுவும், ரமேஷ் வைத்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்த நேரத்தில் இது தேவையா?” என்றார்.

அவரது கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தப் பதிவை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ரமேஷ் வைத்யாவின் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் இதை நான் எழுதியதாக வேறு யாரேனும் எண்ணியிருந்தாலும்கூட, அவர்களுக்கு ‘அப்படி நிச்சயமாக இல்லை’ என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவ்விதம் அவர்கள் எண்ணும்படியாக என் எழுத்து தொனித்ததற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

என் இப்போதைய ஒரே ஆசை, என் தம்பி ரமேஷ் வைத்யா இந்த முறையாவது குடிப் பழக்கத்திலிருந்து முற்றிலுமாக மீண்டு வர வேண்டும்; பத்திரிகையுலகிலோ, திரையுலகிலோ மிக உயர்ந்த நிலையை அடைய வேண்டும்; அவரும் அவர் மனைவியும் குழந்தையும் சகல சௌபாக்கியங்களும் பெற்று, வளமாக வாழ வேண்டும். நான் வணங்கும் மகாஸ்ரீ அரவிந்த அன்னை என் பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பார் என்று நம்புகிறேன்.)
.

7 comments:

நன்றி ரவி சார். சில காலமாக மட்டுமே பழகியிருந்தாலும் ரமேஷ் வைத்யா ஒரு மிகச்சிறந்த மனிதர் என்பதை புரிந்து கொண்டேன். இந்த சொற்ப பழக்கத்திலும் உரிமையுடன், அவர் என்னை டேய்... வண்ணத்து பூச்சி என்றுதான் அழைப்பார். அவர் மீதுள்ள அன்பால் அந்த உரிமையும் பேச்சும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளது.


அந்த பழக்கம் மட்டும் இல்லையென்றால் செல்வா பதிவில் சொன்னது போல் இந்நேரம் ஒரு மிகச்சிற்நத பாடலாசிரியராகவோ பத்திரிகையாளாரகவோ வந்திருக்க வேண்டும் என்பதில் துளியும் மாற்று கருத்தில்லை.

வேறு பல விஷயங்கள் பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்று பல தடவை தோன்றினாலும் உங்கள் வேலையின் பொறுப்புகள் அறிந்து அலைபேசியில் அழைக்க பல முறை தயங்கியுள்ளேன்.


இன்று கூட உங்களிடம் பேசி முடித்ததும் சில நொடி சிந்தித்தேன். தங்கள் பதிவில் நீங்கள் எழுதுவதில் நான் எப்படி குறுக்கிட முடியும்?? தவறு செய்து விட்டோமோ என்றும் கூட வருந்தினேன்.

என் கருத்துக்கு மதிப்பளித்து என் இதயத்தில் நீங்கள் வெகு வெகு உயர்ந்து விட்டீர்கள். மனப்பூர்வமான நன்றி சார். வேறு வார்த்தைகளில்லை.

உங்களை போலவே நானும் அன்னையையும் அரவிந்தரையும் பிரார்திக்கிறேன்.

அவரது வாழ்க்கையில் இனி நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும்.
 
ரமேஷ் வைத்தியா பற்றி அறிமுகமில்லை. பெயர் மட்டும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

குடி குடியை கெடுக்கும்.
 
//அவரும் அவர் மனைவியும் குழந்தையும் சகல சௌபாக்கியங்களும் பெற்று, வளமாக வாழ வேண்டும். நான் வணங்கும் மகாஸ்ரீ அரவிந்த அன்னை என் பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பார் என்று நம்புகிறேன்//

நானும் அவர் விரைவில் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையை தொடங்கிட எல்லாம் வல்ல பாண்டிச்சேரி மணக்குள விநாயகரிடம் வேண்டிக் கொள்கிறேன்.

ரேகா ராகவன்.
 
ரமேஷ் வைத்யாவுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாலும் நேற்று தான் போய் பார்த்துவிட்டு வந்தேன். நலமாய் இருக்கிறார்.
 
//அவரது கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தப் பதிவை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.//
பதிவை நிறுத்திய பணிவை வியக்கிறேன்...
அவர் நலனுக்காக எல்லாம் வல்ல இறைவனை நானும் பிரார்த்திக்கிறேன்.-- கே.பி.ஜனா
 
பார்ட் 1-ஐப் படித்தேன். தவறாக எதுவும் தெரியவில்லை. ஆனால், பார்ட் 2-வில் அவரைப் பற்றித் தவறாக ஏதேனும் எழுதிவிடுவீர்களோ என்று என்று ஒரு சந்தேகம் இருந்தது. எனினும் சக பதிவர் ஒருவரின் கருத்துக்கு மதிப்பளித்து அதைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்ட செயலைப் பாராட்டுகிறேன். நண்பர் ரமேஷ் வைத்யாவைப் பார்த்தால் நான் விசாரித்ததாகச் சொல்லுங்கள். என்னை அவருக்குத் தெரியும்.
 
திரு.சூர்யா,
தனி மனித பலவீனங்கள் பலருக்குமே வெவ்வேறு விகிதாசாரத்தில் உண்டு. சம்பந்தப்படாதவர்களாக இருந்தால், நம்மைப் பாதிக்காதவரை அது பற்றி நாம் கவலைப்படப் போவதில்லை. நண்பர்களாக இருந்தால், அவர்கள் அந்த பலவீனங்களை வெற்றி கொண்டு மேலே வரவேண்டுமே என்று ஏங்குவோம். அப்படியான ஒரு ஏக்கம்தான் என்னை அந்தப் பதிவை எழுத வைத்தது. இது என் கோணம். ஆனால், பதிவைப் படிக்கிறவர்களும் அதே கோணத்தில் எடுத்துக் கொள்வார்கள் என்பது என்ன நிச்சயம்? உங்கள் போன்கால் என்னை யோசிக்க வைத்தது. நன்றி! எழுதப்பட்ட வரையிலும்கூட ஏதேனும் உறுத்தலாக இருந்தால் சொல்லுங்கள், பதிவுகளையே நீக்கி விடுகிறேன்.

திரு.சிவா,
நீங்கள் சொன்னது சம்பிரதாய வாக்கியமில்லை. கண்ணெதிரே நிகழ்ந்துகொண்டிருக்கிற நிஜம்! கருத்துக்கு நன்றி!

திரு.ராகவன்,
மனம் இருந்தால் மார்க்கமுண்டு. ரமேஷ் வைத்யா வயதில் மிக இளையவர். நிச்சயம் புது மனிதனாக வந்து, சாதனைகள் நிகழ்த்துவார். தங்கள் பிரார்த்தனைக்கு என் நன்றி!

திரு.சங்கர்,
ஆறுதலான வார்த்தையைச் சொல்லியிருக்கிறீர்கள். மனம் மகிழ்கிறது. நன்றி! விரைவில் ரமேஷ் வைத்யாவைச் சந்திப்பேன்.

திரு.ஜனா,
பதிவை நிறுத்தியதில் பணிவு என்பதைவிட, அவரது கருத்துக்கு மதிப்பளித்தேன் என்பதையும்விட, அதில் உள்ள நியாயம் எனக்குப் புரிந்ததுதான் காரணம். தங்கள் கருத்துக்கு நன்றி!

திருமதி கிருபா,
நண்பர் ரமேஷ் வைத்யாவைச் சந்தித்தால் அவசியம் சொல்கிறேன். தனிப்பட்ட ஒருவரைப் பற்றி, அதுவும் இனிய நண்பரைப் பற்றித் தவறாக எப்படி எழுதுவேன்? ஆனால், அப்படியொரு சந்தேகத்தை என் முதல் பதிவு தந்திருக்கிறது என்பதே என்னை வருத்தமுறச் செய்கிறது. பார்ட் 1-ல் தவறாக எதுவும் தெரியவில்லை என்று சொன்ன தங்களுக்கும், தவறாக எதுவும் தப்பித் தவறிக்கூட எழுதிவிடாதவாறு தடுத்தாட்கொண்ட சூர்யாவுக்கும் நன்றி!