ஞாநியின் ஐந்தாவது கேணிக் கூட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கரிசல் காட்டு எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்கள் இந்தக் கேணிக் கூட்டத்துக்கு ‘ராகு காலக் கூட்டம்’ என்ற பெயரைச் சூட்டினார்; கூட்டம் நடைபெறும் நேரம் ஞாயிறு மாலை 4:30 - 6:00 ராகுகாலம் என்பதால்!
நான் அதிகம் படிப்பாளி இல்லை. கல்வி, புத்தக வாசிப்பு இரண்டிலுமே! இலக்கிய எழுத்தாளர்கள் என்று சொல்லப்படுகிற பல படைப்பாளிகளின் சிறுகதைகளையோ நாவல்களையோ நான் அதிகம் - அதிகம் என்ன, சிலரின் ஒரே ஒரு கதையைக்கூட நான் படித்தது இல்லை. அப்படி நான் அதிகம் படிக்காத எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
கி.ரா. என்றதும் கோபல்லபுரத்து மக்கள், கரிசல் காட்டுக் கதைகள் என பளிச்சென்று இரண்டைக் குறிப்பிடுவார்கள். ஆனந்த விகடனிலும் ஜூனியர் விகடனிலுமாக அவரின் படைப்புக்கள் வெளியானபோது அவற்றுக்கு ஓவியம் வரைந்தவர் ஆதிமூலம். அவரின் படங்கள் யதார்த்த ஓவியங்களாக இல்லாமல், அப்ஸ்ட்ராக்ட் படங்களாக, நவீனத்துவ வகையைச் சார்ந்தவையாக இருக்கும். என்னை அப்படியான ஓவியங்கள் ஒரு சிறிதும் கவரவேயில்லை. நான் சாமானியன். என்னால் ம.செ., ஜெயராஜ், மாருதி, அரஸ், ஸ்யாம் போன்றவர்களின் படங்களை மட்டுமே ரசிக்க முடிந்திருக்கிறது.
பொதுவாக, பத்திரிகைகளில் வெளியாகும் படைப்புகளைப் படிக்க வைப்பதில் அவற்றுக்கு வெளியிடப்படும் ஓவியங்களின் பங்கு அதிகம். ஓவியங்கள் வசீகரிக்கவில்லை என்றால், வாசகர்கள் அந்தப் படைப்பைப் புறந்தள்ளிவிடுகிற ஆபத்து அதிகம். (தனிப் புத்தகங்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை.) அப்படி, ஆதிமூலத்தின் ஓவியங்கள் என்னைக் கவராததனாலேயே, கி.ரா-வின் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்று எனக்கு ஆர்வம் எழவில்லை. இன்னொரு காரணமும் உண்டு.
வலம்புரி ஜானை ஆசிரியராகக் கொண்டு ‘தாய்’ என்றொரு வார இதழ் முன்பு வந்துகொண்டிருந்தது. அதில்தான் கி.ராஜநாராயணன் என்ற பெயரை முதன்முதலில் பார்த்தேன். ‘கிராமியக் கதைகள்’ என்ற தலைப்பிலோ அல்லது வேறு தலைப்பிலோ, அவர் அதில் வாராவாரம் நாட்டுப்புறக் கதை ஒன்றை எழுதி வந்தார். ஒன்றைப் படித்துப் பார்த்தேன். படு ஆபாசம்! ‘... கிணற்றங்கரைக்கு ஒருத்தி குளிக்கப் போனாள்; படிக்கட்டில் கால்களை விரித்து உட்கார்ந்தாள்; தண்ணீர்ப் பாம்பு ஒன்று சரசரவென்று...’ என்று அந்தக் கதையில் குமட்டுகிற அளவுக்கு ஆபாசம் கொட்டிக் கிடந்தது. அத்தோடு கி.ரா. கதைகளைப் படிப்பதை நிறுத்திவிட்டேன். ‘தாய்’ வாசகர்களிடமும் அந்தக் கதைகளுக்கு எதிர்ப்புக் கிளம்பி, சில வாரங்களுக்குப் பின்பு நிறுத்திவிட்டார்கள்.
ஆனால், அந்த அனுபவத்தை வைத்து கி.ரா-வை எடை போடக்கூடாதுதான். ஆனால் என்ன செய்ய... அதற்குப் பின்பு அவரைப் படிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவே இல்லையே!
போன வருடமோ, அதற்கு முந்தின வருடமோ கி.ரா-விடம் ஆனந்த விகடன் தீபாவளி மலருக்காகக் கதை கேட்டிருந்தேன். அனுப்பியிருந்தார். அந்தச் சிறுகதையிலும் எனக்குப் பெரிய சுவாரசியம் தெரியவில்லை.
போகட்டும்... கேணிக் கூட்டத்துக்கு வருகிறேன். கி.ரா. பேச்சு சுவையாக இருந்தது. இயல்பான பேச்சு. பெருவிரல் குள்ளன் கதை, ஒன்பது பால்மாட்டுக்காரி ஒரு பால்மாட்டுக்காரியிடம் கடன் வாங்கிய கதை எனச் சில நாட்டுப்புறக் கதைகளை அதிகம் வளர்த்தாமல் சுருக்கமாகச் சொன்னார். கடவுளில் தொடங்கி, உழைப்பு, தன்னம்பிக்கை, வதந்தி, தாழ்வு மனப்பான்மை எனப் பல அம்சங்களை வெளிப்படுத்தும் நாட்டுப்புறக் கதைகள் உண்டு என்றார். பழைய கர்ண பரம்பரைக் கதைகள் மட்டுமில்லாது, வெள்ளைக்காரன் நம்மை ஆண்டபோது அவனைக் கேலி செய்யும் நாட்டுப்புறக் கதைகள் கூட உண்டு என்று, அதற்கு உதாரணமாக ‘நெல் எந்த மரத்தில் விளையும்?’ என்று கேட்ட வெள்ளைக்காரத் துரையின் கதையைச் சொன்னார்.
அவர் சொன்னவற்றில் பளீரென்று மனதில் பதிந்த விஷயம் ஒன்று உண்டு. நம்பிக்கைகள் பற்றிப் பேசும்போது, நல்ல நம்பிக்கை, மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, சகுனம் என மனிதன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனுக்கு ஏதாவது ஒரு நம்பிக்கை இருந்தே தீரும்; அதைத் தவிர்க்கவே முடியாது என்றவர், அதற்கு உதாரணமாக பெரியார் பற்றிய ஒரு நிகழ்வைச் சொன்னார்.
பெரியார் ஒரு முறை ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தாராம். அப்போது சட்டென்று ஜெனரேட்டர் மின்சாரம் தடைப்பட்டு, ஒலிபெருக்கியில் அவர் குரல் வெளிவரவே இல்லையாம். பின்னர் சரி செய்து, பெரியார் மீண்டும் தொடர்ந்து பேசத் தொடங்கினாராம். சில விநாடிகளில் மீண்டும் ஜெனரேட்டரில் கோளாறு. சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு, பெரியார் மீண்டும் பேசத் தொடங்கினாராம். சட்டென்று மீண்டும் மின் தடை! உடனே பெரியார் சலித்துப் போய், ‘அட ராமா!’ என்று உரக்கச் சொல்லித் தலையில் கைவைத்துக் கொண்டாராம். தன்னால் இயல்பாக வந்த வார்த்தை.
இதற்குப் பலர் பின்னர் வெவ்வேறு வியாக்கியானங்கள் சொல்லியிருக்கலாம். ஆனால், மனதின் ஆழத்தில் சில பதிவுகள் நம்மையறியாமல் பதிந்திருக்கும். அதிலிருந்து யாரும் தப்ப முடியாது.
நம்ப முதல்வர் கலைஞர் கூட சில நேரங்களில் தம்மையும் அறியாமல் ‘பகுத்தறிவு மாயை’யிலிருந்து கொஞ்சம் வெளியே வந்து, ‘எல்லாம் என் நேரம்’ என்றும், ‘நான் வந்த வேளை அப்படி’ என்றும் சொல்லவில்லையா?!
.
Sunday, October 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ரேகா ராகவன்.
கி.ரா அய்யா பற்றி அழகா சொல்லியிருக்கீங்க. கிராமத்து பெசுகள் கூட பச்ச பச்சையா பேசுவாங்க.... ஆனா, விஷயம் நிறைய இருக்கும்.
பிரபாகர்.
நன்றி
பதிவு அருமை.
- கே.பி.ஜனா
* திரு.பிரபாகர், //கடவுளைப் பற்றி அதிகமாய் நினைப்பவர்கள் கடவுள் மறுப்பாளர்கள்தாம்...// நீங்கள் என்னைவிட மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
* ஈரோடு கதிர் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி!
* நன்றி திரு.(மங்களூர்)சிவா!
* திரு.கே.பி.ஜனார்த்தனன், காலம் - coloumn; அருமை! ஒவ்வொரு முறையும், இந்த முறை பின்னூட்டத்தில் என்ன வார்த்தை விளையாட்டு செய்யப் போகிறீர்கள் என்று எதிர்பார்க்க வைத்துவிட்டீர்கள்!
* மேடம் கிருபாநந்தினி, தங்கள் கருத்துக்கு நன்றி!
Post a Comment