(இந்தப் படத்தில் இருப்பவர் அல்ல எங்கள் உறவினர் காந்தி. ஆனால், ஆச்சரியம்... தோற்றத்தில் கிட்டத்தட்ட இவரைப் போலவேதான் இருப்பார் - இன்னும் க்ஷீண நிலையில்!)
தலைப்பைக் கண்டு பதற்றப்படாதீர்கள்! இந்த காந்தி நம் தேசத் தலைவர் மகாத்மா காந்தி அல்ல! என் தாய் வழி உறவினர். நடராஜன் என்பது இயற்பெயர். சின்ன வயதில் பள்ளி நாடகங்களில் மகாத்மா காந்தி வேடம் தரித்து, தத்ரூபமாக நடித்ததால் அவரைச் செல்லமாகக் காந்தி என்றே அனைவரும் அழைக்கத் தொடங்கி, அதுவே அவர் பெயராக ஆகிவிட்டது. எங்கள் உறவினர்களிலேயே கொஞ்சம் பேருக்குதான் காந்தியின் நிஜப் பெயர் நடராஜன் என்று தெரியும். மற்ற எல்லோருக்கும் அவர் ‘காந்தி’தான்!ஒரு காலத்தில் ஓகோவென்றிருந்த பெரிய பெரிய திரைக் கலைஞர்கள் தங்களின் கடைசிக் காலத்தில் ஒன்றுமில்லாமல் போய், அனைத்தையும் இழந்து, நடுத்தெருவுக்கு வந்து, அநாதை போல் செத்த கதைகள் நமக்குத் தெரியும். திரையுலகப் புள்ளிகள் தவிர, ஒரு சில தொழிலதிபர்களும் பிரமுகர்களும்கூட இந்த லிஸ்ட்டில் உண்டு. எல்லாச் சரித்திரங்களுமே கேள்விப்பட்டவை, புத்தகங்களில் படித்தவைதான். ஆனால், ‘வாழ்ந்து கெட்ட’ பெரிய மனிதருக்குக் கண்கூடான உதாரணமாக நான் பார்த்தது எங்கள் உறவினர் காந்தியைத்தான்.
நான் வீட்டில் கோபித்துக்கொண்டு 1982 முதல் 1984-க்கு இடைப்பட்ட காலத்தில் ஓர் ஒன்றரை வருட காலம் பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தேன். பிழைப்புக்குத் தெருவில் குப்பைகூடப் பொறுக்கியிருக்கிறேன். என் சுறுசுறுப்பைப் பார்த்து, தனது பழைய பேப்பர் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி, மாச சம்பளத்துக்கு என்னிடம் ஒப்படைத்தார் காந்தி. அவர் என் உறவினர் என்று எனக்குத் தெரியும். என்னை அவருக்கு ஆரம்பத்தில் தெரியாது. பின்னர் தெரிந்து கொண்டார்.
அவருக்கு பாண்டிச்சேரியில் ஏழெட்டு சிறு சிறு பழைய பேப்பர் கடைகள் இருந்தன. சுறுசுறுப்பாக வியாபாரம் செய்து சம்பாதித்த காசில் மூன்று அடுக்கு பங்களா ஒன்றைக் கட்டினார். தவிர, தற்போது ஓர்லயன்பேட்டையில் உள்ள பெரிய பஸ் ஸ்டேண்டுக்கு அருகில் (அப்போது இந்த பஸ் ஸ்டேண்ட் கிடையாது.) ஒரு மிகப் பெரிய இடமும் அவருக்குச் சொந்தமாக இருந்தது. இரண்டு மூன்று லாரிகளும் வாங்கினார். அவரின் கீழ் முப்பது நாற்பது பேர் வேலை செய்தார்கள்.
அவரே மொத்தமாக பேப்பர் மில்களில் டெண்டரில் எடுக்கும் ஜல்லிகள் (நூல் நூலாகக் கத்திரிக்கப்பட்ட பேப்பர்கள்) தவிர, இதர பழைய பேப்பர் கடைகள் மூலம் வந்து சேரும் குப்பைகளையெல்லாம் வண்டிகளில் அந்தப் பெரிய இடத்துக்கு வரவழைப்பார். குப்பைகளைக் கொட்டி வைத்துக்கொண்டு அதை கிராஃப்ட் (பழுப்பு அட்டைக் காகிதம்), கேடி (கேடி என்பது பேப்பர் வகைகளிலேயே மிக மட்டமான குப்பை), பிபி (சொதசொதவென்று இருக்கும் ஒரு வகை அட்டை. பள்ளி நோட்டுப் புத்தக அட்டைகள் பிபி ரகத்தைச் சேர்ந்தவைதான்!) என விதம் விதமாகப் பிரிப்பது அந்தப் பணியாளர்களின் வேலை. ரகம் ரகமாகப் பிரிக்கப்பட்ட பேப்பர்களை வலுவாக பிரஸ் செய்து, பேக் செய்வதற்கென்று இயந்திரங்கள் இருந்தன. பெரிய பெரிய பண்டலாக அவற்றை பேல் பேலாகக் கட்டி அடுக்குவார்கள். அவை பின்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு சென்னை, ஹைதராபாத் போன்ற ஊர்களில் உள்ள பேப்பர் மில்களுக்குப் போகும்; மறு சுழற்சியில் பேப்பர்களாகத் தயாராகும்.
நான் எம்.ஜி.ரோடில் இருந்த அவரது பழைய பேப்பர் கடையைப் பார்த்துக்கொண்டபோது எனக்கு மாச சம்பளம் 300 ரூபாய். அப்போது எனக்கு அது மிக அதிகம். காந்தி அவர்களின் வீட்டிலேயே காலையும் இரவும் சாப்பிட்டுவிடுவேன். மற்றபடி எனக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் முழுக்க நான் நொறுக்குத் தீனி வாங்கித் தின்பதற்கும், தினசரி சினிமா போவதற்கும் வெகு தாராளம். கண்ணே ராதா, இளஞ்ஜோடிகள், வாலிபமே வா, வா போன்ற உருப்படாத படங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் நான் பார்த்துத் தீர்த்தது இந்தக் கால கட்டத்தில்தான். ராஜபார்ட் ரங்கதுரை படத்தைத் தொடர்ந்து 20 நாட்களுக்கு மேல் ஒரே தியேட்டரில் போய்ப் பார்த்ததும் இங்கேதான்.
என் வாழ்க்கை அப்போது உற்சாகமாக இருந்தது; சந்தோஷமாக இருந்தது. ஆனால், கண்ணியமாக இல்லை. யாரிடமாவது வம்புக்குப் போவது, தியேட்டர்களில் விசிலடித்து கலாட்டா செய்வது எனக் கிட்டத்தட்ட தெருப் பொறுக்கியாகத்தான் இருந்தேன். தினம் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு, நடு இரவில் மசாலா பால் வாங்கிக் குடித்துவிட்டு (பாண்டிச்சேரியில் இருந்தவரைக்கும் எனக்குக் குடிப் பழக்கமே ஏற்படவில்லை என்பது ஓர் ஆச்சரியம்!) வீடு திரும்புவேன்.
என் தறிகெட்ட சுதந்திரத்துக்கும், யாரை வேண்டுமானாலும் வம்புக்கிழுக்கலாம், கேட்பார் இல்லை என்று எனக்கேற்பட்ட தைரியத்துக்கும் காரணம் என் உறவினர் காந்திதான். அன்றைக்குப் பாண்டிச்சேரியில் அவரைத் தெரியாதவர்களே கிடையாது. மற்ற கடைக்காரர்களெல்லாம் அவர் பேரைக் கேட்டாலே நடுங்குவார்கள். எந்தப் பொறுக்கியும் அவர் பேரைச் சொன்னால் சரண்டராகி விடுவான். அவரின் உறவினன் என்பதாலேயே யாரும் என்னோடு மோதுவதில்லை. போலீஸ்காரர்களை விரல் சொடுக்கி அழைத்து, காசு கொடுத்து, சினிமா டிக்கெட் வாங்கிக் கொடுக்கச் சொல்வார் காந்தி. அவர்களும் பணிவோடு அவர் சொன்னதைச் செய்வதைப் பார்த்திருக்கிறேன். பெரியவனானால் இவரைப் போல் ஆக வேண்டும் என்றெல்லாம் ஒரு ரோல் மாடலாக அவரை மனதில் பிரமிப்போடு பதித்திருக்கிறேன்
அவரின் திருமண வாழ்க்கை இன்பமாக இல்லை. குழந்தை இல்லை. தவிர, அவருக்கும் மனைவிக்கும் ஒத்துப் போகவில்லை. குடும்பத்தில் தினம் தினம் சண்டை. இதனிடையில் லேசு பாசாக இருந்த அவரின் குடிப் பழக்கம் நாளாக நாளாக அதிகரித்து தினம் தினம் குடிக்கத் தொடங்கினார். பின்னர் எந்த நேரத்திலும் குடியின் பிடியிலேயே கிடந்தார். தொழிலைச் சரியாகக் கவனிக்கவில்லை. அவரின் மனைவி அவரை விட்டு விலகிச் சென்னையில் உள்ள தன் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டார். இவருக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டது. அவளைத் தன் வீட்டுக்கே அழைத்து வந்து குடித்தனம் நடத்தத் தொடங்கிவிட்டார். அவளின் சகோதரன் இவருடைய தொழிலை எடுத்து நடத்தத் தொடங்கினான். இதெல்லாம் அதிக பட்சம் இரண்டே வருடங்களில் மளமளவென்று நடந்தன. நான் அப்போது வேறு காரணத்துக்காகப் பாண்டிச்சேரியை விட்டு விழுப்புரத்துக்கே போய்விட்டேன். அதன் பின்னர் சில வருடங்களில் சென்னைக்கு வந்து செட்டிலாகிவிட்டேன்.
தொடர்ந்து காந்தி பற்றி என் காதில் வந்து விழுந்த விஷயம் ஒவ்வொன்றும் எனக்கு மிகவும் வருத்தமூட்டக்கூடியதாகவே இருந்தது. இரண்டாவதாகச் சேர்த்துக்கொண்ட பெண்ணை இவர் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். உடனே முதல் மனைவி இவர் மீது வழக்குப் போட்டார். அவருக்குச் சில லட்சங்கள் கொடுக்கும்படி கோர்ட் தீர்ப்புச் சொல்லியது. வீட்டை விற்று அதைக் கொடுத்தார் காந்தி. மீதிப் பணத்தில் வேறு சில கடன்களை அடைத்தார்.
தொழிலைச் சரியாகக் கவனிக்காததால், அது இரண்டாவது மனைவியின் அண்ணனின் கைக்குப் போயிற்று. அவன் கண்டபடி செலவு செய்தான். லாரிகளை விற்றான். கண்ணெதிரே காந்தி சீரழிந்துகொண்டு வந்தார். அவரை ஒரு நாள் வீட்டை விட்டுத் துரத்திவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். ‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் எம்.ஆர்.ராதாவை எம்.என்.ராஜம் அடித்துத் துரத்தும் காட்சிதான் மனதில் வந்தது. அதன்பின், காந்தி சென்னைக்கு வந்து சில இடங்களில் வேலை கேட்டுப் பார்த்திருக்கிறார்.
ஒரு முறை ஆனந்த விகடன் அலுவலகத்துக்கு வந்து என்னைப் பார்த்து, “ஒரு இருநூறு ரூபாய் இருந்தா கொடு ரவி, ஒண்ணாந்தேதியிலிருந்து வேலைக்குப் போகப் போறேன். அடுத்த மாசம் சம்பளம் வாங்கினவுடனே திருப்பித் தந்துடறேன்” என்றார். கொடுத்தேன். இப்படி மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை வருவார். நூறு, இருநூறு கேட்பார். கொடுப்பேன். சில மாதங்கள் கழித்து மீண்டும் வந்தார். முன்பை விட ஏழ்மை நிலையில் பிச்சைக்காரனாகவே மாறியிருந்தார். எண்ணெய் காணாத சிக்குப் பிடித்த பரட்டைத் தலை, ஷேவ் செய்யப்படாத முகம்; பற்களில் சில விழுந்திருந்தன. சர்க்கரை நோய் முற்றிப் போய், கால்களில் பேண்டேஜையும் மீறி சீழ் வடிந்துகொண்டு இருந்தது.
இந்த முறை ஆபீஸ் செக்யூரிட்டகள் அவரை கேட்டுக்குள்ளேயே விடவில்லை. அவர் வந்திருப்பதை அறிந்து நானே இறங்கிப் போய்ப் பார்த்தேன். “நாலு நாளா சாப்பிடலை ரவி! ஒரு இருநூறு ரூபாய் இருக்குமா?” என்று பரிதாபமாகக் கேட்டார். “போன மாசம் உங்க மாமா ஒரு இருநூறு ரூபா கொடுத்தாரு. அதை வெச்சு ஒரு மாசம் ஓட்டினேன். திரும்பவும் அவர் கிட்டே போய் நிக்கிறதுக்கு வெக்கமா இருக்கு” என்றார். மனசு பாரமாகியது. இருநூறுக்கு முந்நூறாகவே கொடுத்தேன். கைகூப்பி வணங்கி நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
அதன்பின், அவர் வரவில்லை. நாகர்கோயிலில் அல்லது வேறு ஏதோ ஒரு ஊரில் பிச்சைக்காரர்கள் கும்பலில் அவரும் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததாக யாராவது அவ்வப்போது தகவல் சொல்வார்கள். மனசில் ரத்தம் கசியும்.
சில ஆண்டுகளுக்கு முன்னால், தான் ராஜாங்கம் நடத்திய பாண்டிச்சேரியிலேயே ஏதோ ஒரு தெருவில் பிச்சைக்காரர்கள் வரிசையில் இவரும் உட்கார்ந்திருப்பதை என் மாமா பார்த்துவிட்டுத் தன்னோடு விழுப்புரம் வந்துவிடும்படி அழைத்தாராம். (அவரின் சகோதரியைத்தான் என் மாமா திருமணம் செய்திருந்தார்.) “போங்க, நான் வந்தா உங்களுக்கு மரியாதையா இருக்காது. என்னைப் பத்திக் கவலைப்படாதீங்க. எனக்குச் சோத்துக்குக் கவலையில்லே. (மற்ற பிச்சைக்காரர்களைக் காட்டி) இவங்க எனக்கும் சேர்த்துப் பிச்சையெடுத்துக்கிட்டு வந்து தருவாங்க. தேவாமிருதமா இருக்குது. நீங்க போயிட்டு வாங்க. வந்து பார்த்ததுக்கு சந்தோஷம்!” என்று கைகூப்பி, தீர்மானமாக மறுத்து அனுப்பி விட்டாராம்.
ஓரிரு ஆண்டுகளில் என் மாமி இறந்தபோது அவருக்குத் தகவல் சொல்லி அழைத்திருக்கிறார்கள். அப்போதும் அவர் வரவில்லை. பின்னர், பாண்டிச்சேரியிலேயே தன் மூத்த மகனோடு பங்களாவில் வசித்த தாயார் இறந்து போன சமயத்திலும் காந்தியை வந்து அழைத்திருக்கிறார்கள். அப்போதும் போக மறுத்துவிட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரி வாசலில் அவர் விழுந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்து, அவரின் அண்ணன் மகன் போய்ப் பார்த்திருக்கிறான். சர்க்கரை வியாதி முற்றி, காந்தியின் ஒரு கால் அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு இருந்ததாம். செலவுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறான்.
அடுத்த சில மாதங்களில் அவர் இறந்துவிட்டார் என்றும், மாநகராட்சியே அவர் உடலை அநாதைப் பிணமாக எரித்துவிட்டது என்றும் தகவல் வந்தது.
என் மனத்தை மிகவும் ரணமாக்கிய அந்தத் தகவல் வந்த தினம் அக்டோபர் 20, 2007.
.
11 comments:
நல்ல அரசு வேலையில் இருந்துகொண்டு " நிவேதா" என்ற புனைப்பெயரில் சிறுகதைகளை எழுதிக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, உதவி இயக்குனராக சினிமாவில் பணியாற்றி குடிக்கு அடிமையாகி உடல் கெட்டு
மரணத்தை தழுவ அவரின் மனைவி கடைசி நேரத்தில் எனக்கு தகவல் தெரிவிக்க சொல்லி தன் மகளிடம் சொல்லி அதன் பின் நான் ஓடிச் சென்று அவருக்கு வாய்க்கரிசி போட்டதும் நடந்த கதைகள். " அவர் இப்படி கெட்டு சீரழிகிறாரே நீங்களாவது அவரிடம் எடுத்துச் சொல்லுங்க அண்ணா!" என்று அவரின் மனைவி என்னிடம் முறையிட்டதும் இன்னும் என் கண் முன்னே நிற்கிறது. இதை படிக்கும் குடிமகன்களில் யாராவது ஓரிருவர் மனந்திருந்தி குடிப்பழக்கத்துக்கு குட்பை சொன்னால் அது இந்த பதிவுக்கு கிடைத்த வெற்றி. அருமையான பதிவு.
ரேகா ராகவன்.
எவ்வளவு உண்மை...
வேறென்ன சொல்ல..??
படித்து முடித்தவுடன் கட்டுப்படுத்த முடியாமல் சில கண்ணீர் துளிகள்... ஒரு மனிதன் தன் வாழ்நாளை அவனது நடத்தை மூலம் தான் செம்மைப்படுத்திக்கொள்ள முடியும்.
எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இந்த காந்தியும் ஓர் நல்ல உதாரணம்.
பிரபாகர்.
நீங்களும் என்னுடைய விழுப்புரத்தைச் சேர்ந்தவர் (அல்லது, நானும் உங்களுடைய விழுப்புரத்தைச் சேர்ந்தவன்) என்பதனாலோ என்னவோ, ஒரு நெருங்கிய நண்பரின் கடிதத்தைப் படிக்கிற உணர்வே ஏற்படுகிறது உங்களின் பின்னூட்டத்தைப் படிக்கும்போது! அதிருக்கட்டும், எழுத்தாளர் நிவேதா இறந்துவிட்டாரா?! அதிகம் பழக்கம் இல்லையென்றாலும், ஓரிரு முறை அவரோடு பேசியிருக்கிறேன்.
திரு.கே.பி.ஜனா,
நீங்கள் சொல்வது சரி! அவரின் உள்ளம் என்ன பாடுபட்டிருக்குமோ! ஆனால், அவர் கடைசி கட்டம் வரையில் (ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா போல) தன் ‘கெத்தை’ விட்டுக் கொடுக்காமல்தான் பேசினார்.
திரு.மங்களூர் சிவா,
தாங்கள் சொல்வது போல எல்லோருக்கும் இது ஒரு படிப்பினையாக இருந்தால் நல்லது! கடைசியாக காந்தி என்னை விகடன் அலுவலகத்தில் வைத்துச் சந்தித்தபோது சொன்ன ஒரு வரி இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. ‘மோகன்தாஸ் காந்தி மட்டுமில்லே ரவி, இந்த நடராஜ காந்திகூட உனக்கு ஒரு பாடம்தான்! தயவுசெய்து குடியின் பக்கமே போகாதே!’ என்றார்.
திரு.சூர்யா,
ரணம் என்றால் சாதாரணம் அல்ல; நெஞ்சை அறுக்கும் ரணம்! என் மீது அத்தனை அன்பாகப் பழகியவர் அவர். தைரியமும் உற்சாகமும் கொடுத்தவர். சில ரூபாய்களைத் தந்து உதவியது தவிர, பெரிய அளவில் அவருக்கு உதவ முடியாது போனது குறித்து எனக்கு வருத்தமே!
திரு.பிரபாகர்,
தங்கள் கருத்து சரியே! ஆனால், இப்படி மோசமான உதாரணமாகத் திகழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவருக்கு வந்திருக்க வேண்டாம்!
திரு.யாழிசை,
ஆமாம்! ஆமாம்! உண்மைதான்!
திரு.லதானந்த்,
சில நினைவுகள் நினைத்தாலே இனிக்கும்; சில நினைவுகள் நினைத்தாலே கசக்கும்; இன்னும் சில நினைவுகள் நினைத்தாலே கலக்கும். காந்தியின் நினைவு இதில் மூன்றாவது வகை.
திரு.வேல்ஜி,
ஆமென்!
நண்பன்2k9, ஜெகதீஷ், தமில்ஸ், இராஅருண், அனுபகவான், வினோ23, கண்பத், கேவிஆதிவேலன், கௌதம், மௌனகவி, ஐடிஎன்கார்த்திக், பிரபாகர், கிருபாநந்தினி, கபோதி ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி!
Post a Comment