இந்தப் பதிவைப் படிக்கிற, படிக்காமல் விட்ட அத்தனை நேயர்களுக்கும் மற்றும் சக பதிவர்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ஆண்டுக்கு ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் உள்ள குதூகலம் அப்படியேதான் நீடிக்கிறதா அல்லது குறைந்து வருகிறதா என்று எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. பட்டாஸ்கள், எண்ணெய் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் எக்கச்சக்கமாக உயர்ந்திருப்பதால் பண்டிகையின் குதூகலம் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நிச்சயம் குறைந்துதான் இருக்கிறது என்கிறார்கள் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும். ஆனால், எனக்கு அப்படித் தோன்றவில்லை.
விலைவாசி உயர்வு என்பது ஏதோ நேற்றைக்கு இன்றைக்கு நிகழ்வதல்ல. நரகாசுரன் மாண்ட காலந்தொட்டே விலைவாசி உயர்ந்துகொண்டேதான் போகிறது. அதற்காக அந்த நாளில் நம் குதூகலம் குறைந்து போயிருந்ததா என்ன? ஒன்றைச் சொல்லலாம். நமக்கு ஆண்டுக்கு ஆண்டு வயசாகிறது. பொறுப்புகள் மிகுதியாகின்றன. கடமைகள் அழுத்துகின்றன. எனவே, நம்மால் இந்தப் பண்டிகைக் குதூகலங்களை முன்பு போல அனுபவித்து ரசிக்க முடியவில்லை. எனவே, நம் அனுபவத்தை வைத்து ஒட்டுமொத்தமாக நாட்டிலேயே குதூகலம் குறைந்துவிட்டதாக முடிவு கட்டிவிடுகிறோம்.
என் சின்ன வயதில் எங்கள் வீட்டில் அதிகம் பட்டாஸ் வாங்குவதில்லை. காசைக் கரியாக்குகிற அளவுக்கு எங்கள் அப்பாவுக்கு அவரின் ஆசிரியர் தொழிலில் வருமானம் இல்லை என்பதோடு, வெடி வெடித்து கையில், காலில் தீப்புண் பட்டுக் கொள்ளப் போகிறோமே என்கிற அவரின் பயமும் ஒரு காரணம். அதிக பட்சம் பத்து ரூபாய்க்கு கம்பி மத்தாப்பூ, பூ மத்தாப்பூ, கேப் வாங்குவார். வெடி என்கிற பேச்சே கிடையாது. கலசம், சங்கு சக்கரங்களுக்குக்கூடத் தடா! காரணம், கிராமப் புறத்தில் சுற்றி இருந்தவை அனைத்தும் (எங்கள் வீடு உள்பட) கூரைக் குடிசை வீடுகள். எனக்குத் தெரிந்து என் ஒன்பது, பத்து வயதுகளில் எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு தீபாவளிக்கும் எந்தத் தெருவிலாவது, யார் குடிசையாவது எரியாமல் இருந்ததில்லை.
நெருப்பைக் கண்டால் எனக்குச் சின்ன வயதிலிருந்தே பயம். ஒரு தீபாவளியின்போது எங்கள் பின் வீடோ, அல்லது கொட்டகையோ தீப்பற்றி எரிந்தது. எரிமலை நெருப்பைக் கக்குவது போல தீ ஜுவாலைகள் ஆகாயத்துக்கு எழுந்தன. எங்கள் வீட்டுக் கூரை மீதெல்லாம்கூட நெருப்புக் கங்குகள் வந்து விழுந்தன. வீட்டிலிருந்த எங்கள் பாட்டி உள்பட அனைவரையும் வெளியே அழைத்து வந்து, திறந்தவெளியில் ஒரு குட்டித் திடல் மாதிரி இருந்த இடத்தில் உட்கார வைத்துவிட்டு, வாளியில் தண்ணீரைச் சேந்தி எங்கள் வீட்டுக் கூரை மீது இறைக்கத் தொடங்கினார் அப்பா. பக்கத்துக் குடிசைக்காரர்களும் தங்கள் தங்கள் வீட்டின் மேல் தீ பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தீப்பிடித்த இடத்திற்கு ஒரு கும்பல் ஓடி தீயை அணைப்பதில் உதவியது. மொத்தத்தில் தெருவெங்கும் ஒரே களேபரம்!
பாட்டி, அம்மா, தம்பி தங்கைகளுடன் வெளித் திடலில் இருந்த எனக்கு உலகப் பேரழிவே வந்துவிட்ட மாதிரி ஒரு பீதி! அப்போது எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கலாம். என்ன செய்வதென்று புரியாமல், அந்த இடத்தை விட்டு எங்காவது ஓடித் தப்பித்துவிட வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்தது. நைஸாகக் கம்பி நீட்டிவிட்டேன். தெருவெல்லாம் ஜனங்கள் என் எதிரே ஓடி வந்துகொண்டு இருக்க, நான் அவர்களிடையே புகுந்து எதிர்த் திசையில் ஓடி, மெயின் ரோடுக்கு வந்தேன். அப்போதுதான் ஒரு பஸ் வந்து நின்று, கிளம்பத் தயாராக இருந்தது. திருக்கோவிலூர் செல்லும் பஸ் அது. எனக்கிருந்த வேகத்தில் தடக்கென்று அதனுள் ஏறி, ஒரு ஸீட் பிடித்து உட்கார்ந்துவிட்டேன். பஸ்ஸும் கிளம்பிவிட்டது.
அப்பா, அம்மா, தம்பி, தங்கைகளை விட்டு எங்கேயோ போகிறோமே என்கிற உணர்வே எனக்கு இல்லை. ஒரு கண்டத்திலிருந்து தப்பித்த உணர்வே இருந்தது. பஸ் அடுத்த கிராமத்தை நெருங்கும்போது, கண்டக்டர் என் அருகில் வந்து, ‘இந்தத் தம்பிக்கு யார் டிக்கெட் எடுக்குறது?’ என்று கேட்டுச் சுற்று முற்றிலும் பார்த்தார். பதில் இல்லை. “யார் கூடடா தம்பி வந்திருக்கே?” என்றார் என்னிடம். பிசுக் பிசுக்கென்று முழித்தேன். “ஊரெல்லாம் நெருப்பு. தப்பிச்சு வந்துட்டேன். சீக்கிரம் பஸ்ஸை ஓட்டச் சொல்லுங்க. இங்கேயும் நெருப்பு வந்துடும்” என்று சம்பந்தமில்லாமல் உளறினது இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அவருக்குப் புரிந்துவிட்டிருக்க வேண்டும்.
அடுத்த ஊரில் பஸ் நின்றதும், “இறங்குடா தம்பி!” என்று என்னை இறக்கிவிட்டு, அவரும் இறங்கினார். அங்கு எதிரே இருந்த டீக்கடைக்கு என்னை அழைத்துச் சென்று, அங்கிருந்தவர்களிடம் “இங்கே யாராவது பக்கத்துல காணை கிராமத்துக்குப் போறவங்க இருக்கீங்களா?” என்று கேட்டார். டீ குடித்துக்கொண்டு இருந்த ஓர் இளைஞர் எழுந்து வந்தார். “நான் அங்கேதான் போறேன். என்ன விஷயங்க?” என்று கேட்டார். “இந்தத் தம்பி காணையில ஏறிச்சு. வீட்டை விட்டுத் தனியா ஓடி வந்துடுச்சு போல! யார் வீடுன்னு பார்த்துப் பத்திரமா கொண்டு போய் விட்டுர்றீங்களா?” என்றார் கண்டக்டர். “விடுங்க, நான் பார்த்துக்கறேன்” என்று அந்த இளைஞர் மடக் மடக்கென்று டீயைக் குடித்துக் காசைக் கொடுத்துவிட்டு, “யார் வீடுடா தம்பி? அய்யர் புள்ளையாட்டம் தெரியுது. வாத்தியார் வீடா?” என்று கேட்டபடியே என்னைத் தூக்கி, கேரியரில் உட்கார வைத்தார். “நல்லா புடிச்சிக்க” என்று சைக்கிளைத் தள்ளியபடியே, “கண்டக்டர் சார், நீங்க போயிட்டு வாங்க!” என்று வழியனுப்பினார். பஸ் புறப்பட்டது.
அந்த இளைஞர் என்னை வைத்து சைக்கிளை ஓட்டிக்கொண்டு இருபது நிமிடத்தில் மீண்டும் காணைக்கு வந்துவிட்டார். மெயின்ரோட்டிலேயே சைக்கிளை நிறுத்தி, எதிர்ப்பட்ட இன்னொரு இளைஞரிடம், “இது வாத்தியார் ஊட்டுப் புள்ளையாட்டம் தெரியுது. உங்களுக்கு இந்தப் புள்ள யாருன்னு தெரியுமா? தப்பி வந்திருச்சு. வீடு எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா, கொண்டு போயி விட்டுருவேன்” என்றார். “விடுங்க, நான் கொண்டு போயி விட்டுர்றேன். நீங்க அலையாதீங்க” என்று இந்த இளைஞர் என் பாதுகாப்புப் பொறுப்பைத் தன் கைக்கு மாற்றிக் கொண்டார். அவர் விடைபெற்றுப் போக, நான் இந்த இளைஞருடன் நடக்கத் தொடங்கினேன்.
வழியெல்லாம் என் பயத்தைப் போக்கும் விதமாகப் பேசிக்கொண்டே வந்தார் அவர். “வீட்டை விட்டு ஓடிப் போயிட்டியே! அப்பாம்மா கவலைப்பட மாட்டாங்களா?” என்றெல்லாம் ஏதேதோ கேட்டுக்கொண்டே வந்தார். அதற்குள் இங்கே என்னைக் காணாமல், வீட்டில் பதற்றம். என்னைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளாததற்காக அம்மாவை செம டோஸ் விட்டுவிட்டு, தெருவெல்லாம் என்னைத் தேடிக்கொண்டு, வழியில் எதிர்ப்பட்டோரிடமெல்லாம் விசாரித்துக்கொண்டே வந்துகொண்டு இருந்தார் அப்பா. அவரிடம் இந்த இளைஞர் என்னை ஒப்படைத்து விஷயத்தைச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். அவர் முன்பு என் அப்பாவிடம் படித்த மாணவர்தான் என்பது அவர்களின் பேச்சிலிருந்து புரிந்தது.
மறக்கமுடியாத தீபாவளி இது. வெடிக்காமல் மிச்சம் வைத்திருந்த கம்பி மத்தாப்பூ, பூ மத்தாப்பையெல்லாம் அப்பா வெடிக்காமலேயே குழி தோண்டிப் புதைத்துவிட்டதாக ஞாபகம்.
இன்னொரு மறக்கமுடியாத தீபாவளியும் உண்டு. (வளர்த்தாமல் சுருக்கமாகச் சொல்கிறேன்.) அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறேன். பெரும்பாக்கம் என்கிற கிராமத்தில் வசித்தோம். தீபாவளிக்காக வாங்கிய மத்தாப்பூ வகைகளை வெயிலில் காய வைப்பது என்பது அப்போது ஒரு சம்பிரதாயம். அப்படி நானும் ஒரு பலகையில் பூ, கம்பி வகைகளைப் பரத்தி, வீட்டு வாசலில் காய வைத்திருந்தேன்.
அப்போது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு பையன் கொளுத்தி மேலே வீசிய ஒரு ராக்கெட் புஸ்ஸென்று சீறிக்கொண்டே சென்றது. அதைப் பார்த்த என் அப்பா, “கடவுளே! இது எங்கே போய் யார் வீட்டுப் பரணைல சொருகப் போகுதோ!” என்றார். அவர் சொல்லி வாய் மூடவில்லை, மேலே போன அந்த ராக்கெட் யு டர்ன் எடுத்து, பத்து வீடுகள் தள்ளி இருந்த ஒரு கூரை வீட்டைத் துளைத்துக்கொண்டு, சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் தட்டில் நெட்டுக்குத்தலாக விழுந்தது.
கடுங்கோபத்துடன் எழுந்து வந்தவர், எங்கள் வீட்டு முன் காய வைக்கப்பட்டு இருந்த பட்டாஸ்களைப் பார்த்துவிட்டு, நாங்கள்தான் ராக்கெட் விட்டது என்று எண்ணி, கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்துவிட்டார். நல்லவேளையாக, பக்கத்து வீட்டுக்காரர் ஓடி வந்து, “யோவ்... இவங்க வெடி ரகங்கள் ஏதாவது வெச்சிருக்காங்களான்னு பார்த்துட்டுப் பேசுய்யா! அடுத்த தெருவுலேர்ந்து எவனோ விட்ட ராக்கெட் வந்து விழுந்ததுக்கு இவங்க கிட்ட சண்டைக்கு வரியே!” என்று பதிலுக்கு எகிறி, அவரை ஒரு வழியாக அனுப்பி வைத்தார்.
‘ஐயோ! இந்த ராக்கெட் எந்த வீட்டைப் பத்த வைக்கப் போகுதோ!’ என்று அப்பா பதறியது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியைத்தான் சில வருடங்கள் கழித்து நான் ஒரு கதையாக எழுதி, அது அடுத்த பதினைந்து நாளில் கல்கி வார இதழில் என் முதல் கதையாகப் பிரசுரமாயிற்று!
.
Friday, October 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ரேகா ராகவன்.
:))))))))))
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
Post a Comment