அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறேன். என் தமிழய்யா திரு.அ.க.முனிசாமி அவர்கள் வகுப்பில் ஒரு செய்தியைச் சொன்னார். விழுப்புரத்தின் கடைக்கோடியில் இருக்கும் பெரிய சிவன் கோயிலில் திருவருட்பிரகாச வள்ளலாரின் ‘அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை’ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் காலை வேளையில் பிரார்த்தனை வகுப்பு நடத்த இருப்பதாகவும், தினமும் சென்று அதில் கலந்து கொண்டால் ஒரு நாளைக்கு 20 ரூபாய் உதவித் தொகை கிடைக்கும் என்றும் சொல்லி, விருப்பமுள்ள மாணவர்கள் அதில் சேரலாம் என்றார். பின்பு என் பக்கம் திரும்பி, “யார் சேருகிறார்களோ இல்லையோ ரவி, நீ கட்டாயம் சேர வேண்டும். அந்த வகுப்பில் கலந்து கொள்வது உனக்கு நன்மையைத் தரும்” என்றார்.
நானும் சேர்ந்துகொண்டேன். அதிகாலை 5 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு, கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த அந்த சிவன் கோயிலுக்கு நடந்து செல்வேன். அது டிசம்பர் மாதம் என்பதால், பனி பெய்யும். குளிர் நடுக்கும். ஸ்வெட்டர் அணிந்துகொண்டு, பற்கள் கிடுகிடுக்க நடந்து போவேன். சிவன் கோயில் வளாகத்தினுள், முன்புறம் இருந்த ஒரு கட்டடத்தினுள் இராமலிங்க அடிகளாரின் திருச்சபையினர் இந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தினர். பெரியவர்கள், சிறியவர்களாக ஒரு இருபது முப்பது பேர் சேர்ந்திருந்தோம்.
இராமலிங்கப் பெருமகனாரின் திருவுருவச் சிலை உள்ள சிறு தேக்கு மர மண்டபம் வைக்கப்பட்டு, அதன் மேலே அவரின் பிரத்யேக கோட்பாடான ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ எழுதப்பட்டிருக்கும். வள்ளலாரின் கதையை ஒருவர் முதலில் சிறிது விளக்கிச் சொல்லுவார். பின்பு ஓதுவார் ஒருவர் ஓங்கிய குரலெடுத்து வள்ளலாரின் பாடல்களில் ஒன்றைப் பாடுவார். நாங்கள் அதைப் பின்பற்றிப் பாடுவோம்.
அப்படித்தான் எனக்கு அறிமுகமானார் வள்ளலார்.
வள்ளலாரின் பாடல்கள் அனைத்துமே மிக எளிமையானவை. பதவுரை, பொருளுரை என்று பிரத்யேகமாக எதுவும் தேவையிராது. படிக்கும்போதே அதில் ஓர் எளிமையும், அழகும் புலப்படும். அர்த்தம் எளிதில் விளங்கும். வள்ளலாரின் பாடல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானது, ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்’ என்கின்ற பாடல்தான். ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா; ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டா; மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டா; வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டா’ என்று - மிக உயர்ந்த, நல்ல கருத்துக்களாகவே இருந்தாலும் - எதிர்மறை வாக்கியங்களாகவே எழுதிய உலகநாதரின் பாடல்களைப் படித்திருந்த என்னை, வள்ளலாரின் ‘வேண்டும், வேண்டும்’ என்கின்ற இந்தப் பாடல் ரொம்பவே ஈர்த்தது.
அவரின் ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே’ பாடலை டி.ஆர்.மகாலிங்கத்தின் குரலிலா அல்லது கே.ஆர்.ராமசாமியின் குரலிலா என்று ஞாபகமில்லை; கேட்டு ரசித்திருக்கிறேன். நாங்கள் அந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில், ஒரு பஜனைப் பாடல் போல, ‘கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே’ என்று நீட்டி முழக்கி கோரஸாகப் பாடுவோம். அது பரவசமும் சிலிர்ப்புமான அனுபவம்.
பின்னர், வள்ளலார் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, ஊரன் அடிகள் எழுதிய புத்தகத்தை விழுப்புரம் லைப்ரரியில் எடுத்துப் படித்தேன். வள்ளலாரின் பிறப்பு, வளர்ப்பு, அவர் தண்ணீரையே எண்ணெய்யாக்கி விளக்கெரித்த சம்பவம், கடலூர் கோர்ட்டில் ஒரு வழக்கில் வள்ளலார் நேரடியாக ஆஜரானபோது, நீதிபதியே சிலிர்த்து எழுந்து நின்ற நிகழ்ச்சி, வள்ளலாரின் அற்புத லீலைகள், இறுதியில் பூட்டிய அறைக்குள் காணமல் மறைந்து ஜோதியுடன் அவர் ஐக்கியமானது எனப் பலவற்றை அதன் மூலம் படித்து அறிந்து கொண்டேன்.
சில மாதங்களுக்கு முன் கலைஞர் டி.வி-யில் சுப.வீரபாண்டியன் ‘ஒன்றே சொல்; நன்றே சொல்’ நிகழ்ச்சியில் வள்ளலார் பற்றிப் பேசும்போது, ‘வள்ளலார் ஜோதியாக மறைந்தது சர்ச்சைக்குரியது. அவர் பார்ப்பனீயத்துக்கு எதிராக இருந்தார். அதனால், பார்ப்பனர்கள் சேர்ந்து அவரைக் கொளுத்திவிட்டு, ஜோதியோடு ஐக்கியமானதாக கதை கட்டி விட்டார்கள்’ என்றார். இருக்கலாம். பார்ப்பனர்களுக்கு எதிரான தகவல்களைத் தேடித் துருவிக் கண்டெடுத்துச் சொல்வதில் அவருக்கு அப்படியொரு அலாதி ஆனந்தம். பார்ப்பனர்களுக்கு ஆதரவான செய்திகள் எதுவும் அவர் கண்களில் படுவதே இல்லை. அவர் என்ன செய்வார் பாவம்! தாம் படிப்பதைத்தானே பகிர்ந்துகொள்ள முடியும்!
சிதம்பரம் மருதூரில் 1823-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5-ம் தேதி, ராமையா பிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் பிறந்தவர் இராமலிங்க அடிகளார். இன்று அவருடைய 187-வது அவதார தினம். சத்திய ஞான சபையை நிறுவி, சுத்த சமரச சன்மார்க்கத்தைப் போதித்தவர் அவர். கருணையின் உச்சத்துக்கே போய், ‘வாடிய பயிரைக் கண்டதும் வாடினேன்’ என்று மொழிந்தவர் அவர். வடலூரில் இன்றைக்கும் தொடர்ந்து அவரது அணையா ஜோதி சுடர்விட்டுக்கொண்டு இருக்கிறது. வள்ளலார் தொடங்கி வைத்த அன்னதானம் இன்னமும் அங்கே சிறப்பாக நடைபெற்று வருகிறது.
“அன்ன தானம் என்று சொல்லக் கூடாது; தானம் செய்ய நாம் யார்? நம்முடையது என்று நமக்குச் சொந்தமானது ஏதாவது இருந்தால்தானே அதை நாம் தானம் செய்ய முடியும்? இந்த உலகில் எதையும் நாம் கொண்டு வரவில்லை; எதையும் கொண்டு போகவும் போவதில்லை. அப்படியிருக்க, எப்படி அது தானமாகும்? எனவே, அதை அன்ன விரயம் என்றே சொல்ல வேண்டும்” என்று விளக்கினார் அந்த பிரார்த்தனை வகுப்பு நடத்திய வள்ளலாரின் சீடர் ஒருவர். விரயம் என்றால் வீணடித்தல் என்று பொருளல்ல. பகிர்ந்தளித்தலைத்தான் (distribution) அந்தச் சொல் குறிப்பிடும் என்றும் அவர் சொன்னார்.
இராமலிங்க அடிகளாரின் குடும்பம், 1825-ம் ஆண்டு முதல் 1858-ம் ஆண்டு வரை சென்னையில்தான் தங்கசாலைப் பகுதியில் சுமார் 33 ஆண்டுகள் வசித்தது. அதனாலேயே அந்தப் பகுதி வள்ளலார் நகர் என்று அழைக்கப்படுகிறது.
வள்ளலார் பிறந்த தினமாகிய இன்றைக்கு ஒரு நாள் மட்டும் கள்ளுக்கடைகளுக்கும் சாராயக் கடைகளுக்கும் விடுமுறை விட்டால் போதாது. (அப்படியும் ஷட்டரைப் பாதி இறக்கிவிட்டு அங்கங்கே வியாபாரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.) சென்னை, ஏழு கிணறு பகுதியில் வள்ளலார் வாழ்ந்த வீடு ஒரு தனியாரிடம் உள்ளது. அதை உரிய விலை கொடுத்து வாங்கி, வள்ளலார் நினைவு இல்லமாக மாற்றவேண்டியது தமிழக அரசின் கடமை!
சிபாரிசு செய்வாரா சுப. வீரபாண்டியன்?
.
Monday, October 05, 2009
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
நான் இதை வழிமொழிகிறேன்.
ரேகா ராகவன்.
மிகச்சரி.
//
‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்’ என்கின்ற பாடல்தான். ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா; ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டா; மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டா; வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டா//
தினமும் இந்த பாடல்களை பாடியபின்தான் மற்ற பாடங்களை படிக்க வேண்டும், தாத்தாவிடமிருந்து படித்த சிறு வயதில்.... முதலாவதாய் வாதினையடர்ந்த வேல்விழி.. என தொடங்கும் பாடல்...
//அதை உரிய விலை கொடுத்து வாங்கி, வள்ளலார் நினைவு இல்லமாக மாற்றவேண்டியது தமிழக அரசின் கடமை!//
தமிழே நாங்கள்தான் என சொல்பவர்கள் தாம் ஆட்சியில் இருக்கிறார்கள்... செய்வார்களா?
நல்லதோர் இடுகை....
பிரபாகர்....
(கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே,
காணார்க்கும் காண்பவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே,
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே,
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே,
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே,
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே,
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே,
என்னரசே யான் புகழும் இசையும் அணிந்தருளே..)
பல பாடல்கள் பாடத்தில் படித்தது இன்னும் நினைவில் உள்ளது.
அருமை.
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி
அனைத்துமே மிக எளிமை.......
http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Please follow
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
(First 2 mins audio may not be clear... sorry for that)
(PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)
Online Books
http://www.vallalyaar.com/?p=409 - Tamil
http://www.vallalyaar.com/?p=975 - English
BUT MOST FRIENDS FOCUSED VALLALAR IN HIS EARLIER THOUGHTS.
Post a Comment