உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, October 15, 2009

என் வலைப்பூவில் சாக்கடை நாற்றம்!


சாக்கடையை அள்ளிக் கொட்டி என் வலைப்பூவை நாறடிக்கச் செய்ய வேண்டுமா என்று யோசித்தேன். ஒரு நடிகை பற்றிய விபசார வழக்கில் பத்திரிகையாளரைக் கைது செய்திருக்கிறார்களே, பத்திரிகையாளர்களைப் பற்றிச் சில நட்சத்திரங்கள் கேவலமாகப் பேசியிருக்கிறார்களே, ஒரு பத்திரிகையாள ரான நீங்கள் அது பற்றிய உங்கள் கருத்தை உங்கள் வலைப்பூவிலாவது எழுத வேண்டாமா என்று எனக்கு போன் மேல் போன். வேறு வழியில்லை; மூக்கை மூடிக்கொண்டு மேலே படியுங்கள்.

ஒரு நடிகை விபசார வழக்கில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. அதிலும் புவனேஸ்வரி கைதாவது இது இரண்டாவது முறையென்று நினைக்கிறேன். (அல்லது, மூன்றாவது முறையோ?!) அப்போதெல்லாம் வராத ஆவேசம் நமது நட்சத்திரங்களுக்கு இப்போது மட்டும் வரவேண்டிய அவசியம் என்ன?

அப்போது அவர்கள் பெயரை புவனேஸ்வரி சொல்லியதாகப் பத்திரிகையில் அடிபடவில்லை. ஆக, அவர்களுக்கு புவனேஸ்வரி எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை; தங்கள் பெயருக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது. அவ்வளவுதான்!

புவனேஸ்வரி சொன்ன பட்டியல் பொய்யோ, அதைக் காவல்துறை அதிகாரிகள் வெளியிட்டதாகச் சொன்னதுதான் பொய்யோ - எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் புரிகிறது. முழுக்க நனைந்தாலும் சரி, நனையாவிட்டாலும் சரி... முக்காடு நனையவில்லை என்று காட்டிக் கொள்ள விரும்புகிறவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

பலான பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றதால் தங்கள் மானம் போகிறது, குழந்தை குட்டிகளின் மனம் என்ன பாடுபடும் என்றெல்லாம் பொங்கியெழுந்து கேள்வி கேட்பவர்களுக்கு, காசு வருகிறதே என்று எத்தனைக் குறைவாக வேண்டுமானாலும் உடுத்தி நடிக்கும்போதே மானம் போனது தெரியவில்லையா? அப்போது குழந்தைகள் இல்லையென்றாலும், அந்தக் காட்சிகளை இப்போது பார்த்தால் அவர்களின் மனம் என்ன பாடுபடும் என்று யோசிக்கவில்லையா?

விவேகமேயில்லாது பேசியுள்ளார் ஒருவர்; அவர் நடிக்கிறபோது சிரிப்பு வந்ததோ இல்லையோ, அவரது ஆவேசப் பேச்சைக் கேட்டு வயிறு வலிக்கச் சிரிப்பு வந்தது. ‘சிவாஜி’ படத்தில் இவர் டாப்லெஸ்ஸாக இருக்கிற ஒரு ஸீனில், “ஐயோ! என்னை ஷகிலா மாதிரி ஆக்கிட்டீங்களேடா!” என்று சொன்னது, ஷகிலாவைப் பெருமைப்படுத்துகிற காட்சியா? ‘பேரழகன்’ படத்தில் மூச்சுக்கு முந்நூறு தடவை பிறரின் உடல் ஊனத்தையே இவர் கேலி செய்து நடித்ததைச் சுட்டிக் காட்டி விமர்சித்தபோது, அதைச் சரியான கோணத்தில் எடுத்துக் கொள்ளாமல், ‘இனிமேல் பேட்டியே கிடையாது, போ!’ என்று புசுக்கென்று கோபித்துக்கொண்டவர்தானே! ஏதோ இவர் பேட்டியால்தான் பத்திரிகைகளே போணியாகிற மாதிரி!

சத்திய நடிகர் சொன்னது சத்தியமா என்று இன்னமும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் சிவாஜி ரசிகன். எம்.ஜி.ஆரை முதலமைச்சராகத்தான் நேசிக்கத் தொடங்கினேன். ஆனாலும், எம்.ஜி.ஆரின் நடிப்பை ரசிக்காமல் தீவிர சிவாஜி ரசிகனாக இருந்த காலத்திலேயே எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தையும், மற்றவரிடம் அவர் பழகும் விதத்தையும் கண்டு பிரமித்திருக்கிறேன். சிவாஜி ரசிகர்களான என் நண்பர்கள் எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொன்ன சில அவதூறான தகவல்களையும் நான் அறவே நம்பியதில்லை. ஏதோ காழ்ப்புணர்வில் அப்படிச் சொல்கிறார்கள் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால், ஆவேசமாகப் பேசியவரின் வாயிலிருந்து அவரை மீறி வெளிப்பட்டது சத்தியமா, அபாண்டமா என்று நிஜமாகவே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு பத்திரிகையாளர் எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதோ தவறாக எழுதிவிட்டாராம். அதற்காக அவரை வரவழைத்து, அறைக்குள் அழைத்துக்கொண்டு போய், ஊமை அடியாக அடித்துப் பின்னியெடுத்துவிட்டாராம் எம்.ஜி.ஆர். அப்புறம் அவர் தலையை சீவி, நல்ல பிள்ளை மாதிரி அவர் தோளில் சிநேகிதமாகக் கை போட்டுக் கொண்டு தோழமையோடு வெளியே வந்தாராம். (அந்தப் பத்திரிகையாளர் ஒரு சினிமா நடிகரும்கூட என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.) ஆனால், அப்போது அதை நான் நம்பவில்லை. ‘சேச்சே! அப்படியான வன்ம எண்ணம் கொண்டவர் இல்லை எம்.ஜி.ஆர்! பொன்மனச் செம்மல் என்றால் செம்மல்தான். அவரைப் பிடிக்காதவர்கள் தாங்களாகக் கற்பனை செய்து அவர் மீது வீண் பழி சுமத்துகிறார்கள்’ என்றுதான் இத்தனை நாளும் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால், அவரின் தீவிர அபிமானியான சத்திய நடிகரே சொல்லும்போது எப்படி நம்பாமல் இருப்பது? அதே போல எம்.ஜி.ஆர். ஒரு நடிகையின்பொருட்டு ஜெய்சங்கரை மிரட்டியதாகக் கேள்விப்பட்டதும், வேறொரு நடிகையின்பொருட்டு ரஜினியை மிரட்டியதாகக் கேள்விப்பட்டதும்கூட உண்மைதானா? அதையும் இந்த உண்மை விளம்பிதான் உரைக்க வேண்டும்.

‘கீழேயிருந்து போட்டோ எடுக்காதீர்கள்’ என்று அட்வைஸ் செய்கிறார் ஒரு நடிகர். இன்றைய நடிகைகள் உடை அணிகிற லட்சணத்துக்கு மேலேயிருந்து புகைப்படம் எடுத்தாலும் தப்பாகப் போகுமே? அதாவது, அவர்கள் எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்தி வருவார்கள்; மேடையில் முதல்வரே அமர்ந்திருந்தாலும் சரி, உடை நாகரிகம் எதுவும் அவர்களுக்கில்லை; ஆனால், பத்திரிகைப் புகைப்படக்காரர்கள் முன் வரிசையில் கீழே நின்றுதான் போட்டோ எடுக்க வேண்டியிருந்தாலும் எடுக்கக் கூடாது. இதுதான் குமார நடிகரின் ஆவேச கட்டளை. பொத்தாம்பொதுவில் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் சகட்டுமேனிக்கு வசை பாடியிருக்கிறார். அமைதியே உருவான நல்ல நடிகருக்கு மகனாகப் பிறந்த இவர், நடிப்போடு கொஞ்சம் பண்பையும் தன் அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டு இருந்திருக்கலாம்.

செய்திகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் ஊடகங்களின் வேலை. அதில் உண்மையும் நேர்மையும் இருக்க வேண்டும். வெளிநாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் நேர்மையும் பத்திரிகை தர்மத்துடனும் செயல்படும் பத்திரிகைகளின் விகிதாசாரம்தான் அதிகம். ஒரு சில பத்திரிகைகள் வியாபார நோக்கில் பத்திரிகை தர்மத்தை மீறிச் செயல்பட்டிருக்கலாம். இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால், அவற்றின் மீது கேஸ் போட்டுத் தங்கள் நியாயத்தை நிலை நாட்டிக் கொள்வதுதான் முறையே தவிர, ஊரைக் கூட்டிக் குய்யோ முறையோ என்று எல்லாப் பத்திரிகையாளர்களையும் வாய்க்கு வந்தபடி வசைமாரி பொழிவது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல!

அரசியலில், ஆன்மிகத்தில், காவல்துறையில், மருத்துவத் துறையில், கல்வித் துறையில்... சமீபமாக நீதித் துறையில்கூடத்தான் சில கறுப்பு ஆடுகள் புகுந்துவிட்டிருக்கின்றன. இதெல்லாம் காலத்தின் கோலம்! அதற்காக ஒட்டுமொத்த துறையையே பழிப்பது நியாயமா?

புவனேஸ்வரி பிரச்னை பற்றிய கட்டுரையில், சினிமா நட்சத்திரங்களைச் சாடி எழுதிக்கொண்டே வரும்போது, ‘வெட்கங்கெட்ட பத்திரிகைத் துறைக்கும் காவல் துறைக்கும் சில வருடங்கள் முன்னர் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி மாநில மகளிர் ஆணையத் தலைவராக இருந்தபோது ஒரு வேண்டுகோள் அனுப்பினார்’ என்று எழுதுகிறார் பழுத்த விமர்சகர் என்று பெயரெடுத்த ஞாநி. ஒட்டு மொத்த துறையையே வெட்கங்கெட்ட துறையாகக் குறிப்பிடவேண்டிய அவசியம் என்ன?

பத்திரிகைத் துறையில் மட்டுமின்றி சினிமாத் துறையிலும் கால் பதித்திருப்பவராயிற்றே! இரண்டையும் ‘பேலன்ஸ்’ செய்யவேண்டாமா, பாவம்!
.

13 comments:

//காசு வருகிறதே என்று எத்தனைக் குறைவாக வேண்டுமானாலும் உடுத்தி நடிக்கும்போதே மானம் போனது தெரியவில்லையா?//

காசுக்காகத்தான் அனைத்தும். ஒருவேளை ரேட்டை குறைத்து மதிப்பிட்டதற்காகத்தான் இத்தனை போராட்டமா.. தெரியவில்லை.
----

கீழேயிருந்து போட்டோ எடுக்கவேண்டும் என்பதற்காகத்தானே, பொது விழாக்களிலும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது. சரி.. மேலேயிருந்து எடுக்கப்பட்ட லட்சணம்தான் இங்கே போட்டோவில் தெரிக்கிறதே.
----

பூவில் தெளித்த சாக்கடை தான் இந்த போட்டோ.
 
வேறொரு பதிவில் இட்ட பின்னூட்டம், மீண்டும் இங்கே -

நடிகைகள் பிரபலமாக இருப்பதுதான், அவர்களுடைய அதிக சந்தை விலைக்கும், போட்டோ பத்திரிக்கைகளில் வருவதற்கும் காரணம்.

தனக்கு கோயில் கட்டப்படும், பால் அபிஷேகம் செய்யப்படும் போட்டோ பத்திரிக்கைகளில் வருவதை ஏற்றுக்கொள்ளும் இவர்கள், இத்தகைய விழைவுகளையும் சந்தித்தே ஆக வேண்டும்.
 
சண்டைன்னா உணர்ச்சிவசப்பட்டு சினிமாக்காரங்க திட்டறதும்.. வேணுங்கிற போது கவர் வாங்கிட்டு இவங்க எழுதறதும் சகஜம்தானே விட்றா..விட்றா...
 
புவனேஷ்வரியின் படம் நன்றாக இருக்கிறது..:)
 
அட்டகாசம்!
 
வணக்கம்,

பெரும்பாலான பத்திரிக்கைகளுக்கு விபச்சார வழக்கில் அடிபடும் நடிகைகள் உட்பட அவர்களின் வழமையான சதைதானே அட்டைப் படத்திற்கு தேவைப்படுகிறது..

அப்படிப்போட்டால்தான் பத்திரிக்கை விற்பனையாகும், வாசகன் வாங்குவான் என்று யார் இந்த பத்திரிக்கை அட்டைப் பட வடிவமைப்பாளர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது...

சினிமாக்காரர்கள் மேல் இருக்கும் மோகம் தமிழனுக்கு வடியவேண்டும்...

எந்தப் படத்தைப் போட்டிருந்தாலும் உங்களின் இந்த இடுகையைப் படித்திருப்பேன்... காரணம் உங்கள் இடுகைகளை வாசிக்கச் சொன்னது ஒரு நல்ல நண்பன்...

ஆனாலும் புவனேஸ்வரியின் பச்சையான படத்தை நீங்கள் போட்டிருப்பதன் நியாயம் புரியவில்லை
 
திரு.பீர், நீண்ட கருத்துக்கு என் நெடிய நன்றி!

திரு.சங்கர், கவர் கொடுத்தவங்க கவர் வாங்கினவங்களைத் திட்டினா பரவாயில்லை சங்கர், ஒட்டு மொத்தமால்ல வையிறாங்க! படம் நல்லாருக்கா? ‘வலை’யில சிக்குனதுதான்.

திரு.யுவகிருஷ்ணா,அட்டகாசம்னு சொன்னது புவனேஸ்வரி படத்தையா, என் பதிவையான்னு தெரியலை. எப்படியிருந்தாலும் நன்றி! அது சரி, பத்திரிகை, பிளாக், ஆர்க்குட், டிவிட்டர்னு எப்படி எல்லாத்துலயும் புகுந்து கலக்குறீங்க? எப்படி நேரம் கிடைக்குது உங்களுக்கு மட்டும்னு புரியலையே?

திரு.கதிர், //சினிமாக்காரர்கள் மேல் இருக்கும் மோகம் தமிழனுக்கு வடியவேண்டும்...// சரியாச் சொன்னீங்க. அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன். ஆனா, வடியுற மாதிரி தெரியலையே?
//ஆனாலும் புவனேஸ்வரியின் பச்சையான படத்தை நீங்கள் போட்டிருப்பதன் நியாயம் புரியவில்லை// நீங்க ஒரிஜினல் படத்தைப் பார்க்கலை போல. கீழேயிருந்து ரொம்பவே ட்ரிம் பண்ணிப் போட்டிருக்கேன். அப்பவும் பச்சைன்னா முழுப் படத்தையும் அப்படியே போட்டிருந்தா என்ன சொல்லியிருப்பீங்களோ? நெட்ல தேடினா இதை விட நாசூக்கான படம் கிடைக்கலை பாஸ்! எல்லாம் குண்டக்க மண்டக்க இருக்கு. எப்படியிருந்தாலும் பீர் சொன்னாப்ல, //பூவில் தெளித்த சாக்கடை தான் இந்த போட்டோ// ஒப்புக்கறேன்!
 
கதிர் சொன்னது கரெக்ட்! உங்கள் பிளாகில் இப்படி வல்கரான படத்தை நான் எதிர்பார்க்கவில்லை.
 
ஐயே! ச்சீ...சீ...ரேகா ராகவன்.
 
எதோ பாவம் இரண்டு வேளை வயிற்று பிழைப்புக்காக செய்யறாங்க இதைப்போய்........

என்ன 15000 வாடகைல அடையாறுல பங்களா எல்லா ரூமுலயும் எல்.சி.டி டிவி வெச்சிருக்கவங்களுக்கு ரெண்டு வேளை சோத்துக்கு எப்பிடி வழியில்லாம போச்சுன்னு ரசினிகாந்த்தான் சபீனா போட்டு வெளக்கணும்.
 
அருமையான கட்டுரை. நன்றி
 
அம்மணி கிருபா, இதுவே வல்கரான படம்னா நான் என்னத்தைச் செய்ய? புவனேஸ்வரி பற்றிய பதிவுக்கு கே.பி.சுந்தராம்பாள் படத்தையா போட முடியும்?

ஐயா ராகவன், சீச்சீன்னது படத்தைதானே? என் பதிவை இல்லையே?

மங்களூர் சிவா, நீங்க இப்படியெல்லாம் கேட்டீங்கன்னா அப்புறம் ரஜினிகாந்த் கோபமாயிடுவாரு. அவரு கோபமாயிட்டாருன்னா அப்புறம் பேச மாட்டாரு!

அப்பாடா! அருமையான கட்டுரைன்னு அதிஷாதான் நேரடியா பாராட்டியிருக்காங்க. நன்றி! நன்றி!!
 
நீங்கள் ஒன்றை கவனித்ததில்லையா? சிறுவர்கள் அவர்களில் யாராவது ஆபாசமாக பேசினாலோ அல்லது ஒரு ஆபாசமான காட்சியையோ, படத்தையோ பார்த்தால் "ஐயே ச்சீ...சீ..." என்பார்கள். இங்கே படத்தைப் பார்த்து அப்படி சொல்வதாக எழுதினேன்.மற்றபடி பதிவு சம்பந்தப்பட்டவர்களுக்கு நெத்தி அடி.

ரேகா ராகவன்.