உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, June 28, 2009

வல்லாள கண்டன் கதை!

சில நாட்களுக்கு முன்னால், தொடர்பதிவு விளையாட்டு ஒன்று நடந்தது. அதில் 32 கேள்விகளுக்கு பதில் சொல்லியிருந்தேன். ஒரு கேள்விக்கான பதிலில், ‘கேட்டதும் கடன் கொடுக்கும் கிண்டான கிண்டன்; வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள கண்டன்’ போன்ற கதைகளை என் தாத்தா எனக்குச் சொல்லியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தேன்.

‘அதென்ன கதை? இதுவரை நாங்கள் கேள்விப்படாத புதுக் கதையாக இருக்கிறதே!’ என்று ஆர்வமுடன் கேட்டு இ-மெயில் அனுப்பியிருந்தார்கள் பெங்களூரைச் சேர்ந்த வசுமதி, திருச்சியைச் சேர்ந்த கலியாணராமன் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த ராமபத்ரன் ஆகியோர். விரைவில் சொல்கிறேன் என்று மூவருக்கும் பதில் போட்டேன். அதை அத்தோடு மறந்தே போய்விட்டேன். இன்றைய மெயிலில் அது பற்றிய நினைவூட்டல் கடிதம் அனுப்பியிருந்தார் ராமபத்ரன்.

இதோ, அந்த மூவருக்காகவும் மற்ற நேயர்களுக்காகவும் அந்தக் கதை:

கேட்டதும் கடன் கொடுக்கும் கிண்டான கிண்டன்;
வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள கண்டன்!

முன்னொரு காலத்தில் கிண்டான கிண்டன், கிண்டான கிண்டன் என்றொரு தனவான் வாழ்ந்து வந்தான். அவன் கேட்டவர்க்கெல்லாம் கடன் வழங்கும் தாராளப் பிரபுவாக இருந்தான். கடன் கொடுப்பது மாத்திரமல்லாமல், கொடுத்த கடனை உரிய காலத்துக்குள் வசூலித்துவிடும் திறமைசாலியாகவுமிருந்தான்.

அவன் வாழ்ந்த பக்கத்தூரில் வல்லாள கண்டன், வல்லாள கண்டன் என்றொரு முரட்டுப் பயல் இருந்தான். அவன் வருவோர் போவோரிடமெல்லாம் கடன் வாங்கிச் செலவழித்துத் திருப்பித் தருவேனா என்றிருந்தான். அவனிடம் போன பணமும் முதலையின் வாய் சென்ற பொருளும் ஒன்றென்றறிக! இதனால் அவனை யாவரும் வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள கண்டன் என்றே பிரஸ்தாபித்துக்கொண்டு இருந்தனர்.

தங்களிடம் மட்டும் இவன் இப்படிக் கடன் வாங்கித் திருப்பித் தராமல் ஏய்க்கின்றானே, இவனை என்ன செய்தால் தகும் என்று யோசித்த, அவனிடம் பணம் கொடுத்து ஏமாந்த ஒரு சோணகிரி ஓர் உபாயஞ் செய்தான். நேரே வல்லாள கண்டனிடத்திலே போய், “அடா வல்லாள கண்டா! பக்கத்தூரில் ஒரு பிரபு இருக்கின்றான். கேட்டவருக்குப் பணம் கொடுக்கும் கிண்டான கிண்டன் என்பது அவன் நாமம். ஆனால், கொடுத்த பணத்தை வட்டியுடன் வசூலிப்பதிலும் அவன் கிண்டான கிண்டன். நீ அவனிடம் உன் சாமர்த்தியத்தைக் காட்டினாயானால்தான், நீ வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள மகராஜா என நான் ஒப்புக்கொள்வேன்” என்று தூபம் போட்டுவிட்டுப் போனான்.

வல்லாளனுக்கு ரோசம் பொத்துக்கொண்டது. உடனே கிளம்பிப் போய் கிண்டான கிண்டனிடம் தேவையான பணத்தைக் கடனாகக் கேட்டான். கிண்டனும் கொடுக்கும்போது, “நீ வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள கண்டனென்று தெரிந்தேதான் கொடுக்கிறேன். உன்னிடமிருந்து இந்தக் கடனைக் குறித்த தேதியில் எப்படி வசூலிப்பதென்று எனக்குத் தெரியும். போய் வா!” என்று வழியனுப்பி வைத்தான்.

தேதி ஒன்றாயிற்று; இரண்டாயிற்று; மூன்றும் ஆயிற்று! பத்து தேதிக்குள் வல்லாளன் பணத்தை வட்டியுடன் திருப்பித் தரவேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், அது பற்றிய பேச்சு மூச்சைக் காணோம். வல்லாள கண்டனிடமிருந்து பணத்தை வசூலிக்கவில்லை என்றால், கிண்டான கிண்டனின் பராக்கிரமம் கேலிக்குரியதாகிவிடுமே என்று கவலைக்கு ஆளானான் கிண்டன். நேரே வல்லாள கண்டனைத் தேடிச் சென்றான். கொடுத்த பணத்தை ஞாபகப்படுத்தினான். வல்லாளனோ பித்தனுக்குப் பித்தன்; எத்தனுக்கு எத்தனாயிற்றே! ஆகட்டும் பார்க்காலாமென்று மழுப்பலாகச் சொன்னான்.

“சரி, அது போகட்டும். என் உல்லாச பங்களா ஒன்றிருக்கிறது. அதை உனக்குக் காண்பிக்கவேண்டும் என்று ஆவலாயிருக்கின்றேன். வருகிறாயா என்னோடு, அல்லது பயத்தில் கை கால்கள் நடுங்குமோ உனக்கு?” என்று கேட்டான் கிண்டன். “ஆகா, எனக்கென்ன பயம்? இப்போதே வருகிறேன் உம்மோடு” என்று கிளம்பிவிட்டான் வல்லாளன்.

கிண்டன் கூட்டிச் சென்ற இடம் பங்களாவன்று; பாழடைந்த ஓர் இடிபாடு! அதனுள் வல்லாள கண்டனை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தான் கிண்டன். எங்கெங்கும் எலும்புகள், மண்டையோடுகள், பிண நாற்றத்தின் வீச்சம் எட்டு ஊரைத் தூக்கியடிப்பதாகயிருந்தது. “இதோ பார்த்தாயா, இதுதான் என் உல்லாசபுரி. இங்கே விழுந்துகிடக்கும் மண்டையோடுகள் யாவும் என்னிடம் கடன் வாங்கித் திருப்பித் தராத கபோதிகள். இந்த மண்டையோடுகளை வைத்து, நீண்ட தொடை எலும்புகளால் தட்டி விளையாடுவதுதான் எனது கேளிக்கை விளையாட்டு!” என்று வர்ணித்துச் சொன்னான் கிண்டன். “சரி, நீ போகலாம். பத்தாம் நாள் பணம் வரவேண்டும்” என்று அழுத்திச் சொல்லி, வல்லாளனை அனுப்பி வைத்தான்.

நாள்கள் ஓடின. பணம் வந்தபாடில்லை. வருவதற்கான ச்மிக்ஞையும் தெரிவதாயில்லை. பின்னொரு நாளும் மீண்டும் கண்டனின் வீட்டுக்குப் படையெடுத்தான் கிண்டன். “வாங்கின பணமெங்கே? அதற்கான வட்டியெங்கே?” என்று வினவினான்.

“அகோ வாருமய்யா கிண்டரே! நல்ல நேரத்தில்தான் வந்தீர்! என் மகன் இறந்துகிடக்கிற நேரத்தில் வந்து உம்முடைய பணத்தைத் திருப்பிக் கேட்பது உலகுக்கே அடுக்குமா?” என்று கதறியழுதவாறு வல்லாள கண்டன் கிண்டனையும் அழைத்துக்கொண்டு சுடுகாடு சென்றான்.

கிண்டன் சற்றுத் தொலைவில் ஒரு புங்க மரத்தடியில் காத்திருக்க, மகனுக்குக் கொள்ளி வைப்பதற்கெனச் சென்ற வல்லாளன் அங்கே பிணத்தருகில் அமர்ந்து அதை அங்கஹீனம் செய்தவாறு பிய்த்துப் பிய்த்துத் தின்னத் தொடங்கியது கண்ட கிண்டன், “ஏதேது, இவன் நமக்கும் முப்பாட்டனாகவன்றோ இருக்கிறான்” என்றெண்ணியவாறு அங்கிருந்து நடையைக் கட்டலானான். அவன் போவதைப் பார்த்து உள்ளூரப் பொங்கிப் பொங்கிச் சிரித்துக்கொண்ட வல்லாள கண்டன் தனது பார்யாளிடத்திலே போய், சுடுகாட்டில் சோற்றுப் பிண்டத்தைப் பரப்பி வைத்துப் பிணம் என்று பொய்யாகச் சொல்லித் தின்று, கிண்டனைக் கிலி பிடிக்கச் செய்து விரட்டிய தனது பராக்கிரமத்தைச் சொல்லி மகிழ்ந்தான்.

கிண்டன் வாளாவிருப்பானா? விசாரித்து அறிந்தவரையில் கண்டனின் மகன் சாகவில்லையென்றும், சகல சௌபாக்கியங்களுடனும் க்ஷேமமாக ஊருக்குள் உலா வந்துகொண்டிருப்பதாயும் அறிந்தான். உடனே தன் ஆட்களையனுப்பி அவனைப் பிடித்து மூட்டையாய்க் கட்டித் தன்னிடத்திலே கொண்டு வரப் பணித்தான். அதன்பின்பு வல்லாள கண்டனுக்கு ஓர் லிகிதம் அனுப்பினான். ‘அதாவது இப்பவும் நீரெமக்குச் சேரவேண்டிய தொகை இத்தனையாயிரம் உரூபாயை வட்டியும் முதலுமாகக் குறித்த பத்து திகதிக்குள்ளாக என்னைத் தேடி வந்து தரவேண்டியது. அன்னியில், உமது மகனை ஊர் முச்சந்தியில், வீர மாகாளியம்மன் கோவில் எதிரே பலரறிய தகனஞ்செய்வேன்’ என்று அதில் கண்டிருந்தது.

பத்தாம் நாளன்று வீரமாகாளியம்மன் கோவில் எதிரே, ஊர் முச்சந்தியில் ஒரு பீப்பாய் வைக்கப்பட்டது. அதனுள்ளிருந்து ஒரு பாலகன் அழும் சத்தம் கேட்டது. ஊர் முழுக்கக் கிண்டன் கண்டனின் மகனை, சொன்ன தேதியில் பணம் திருப்பித் தராததால், வீரமாகாளியம்மனுக்குப் பலியிடப் போகிறான் என்று தண்டோரா போடப்பட்டது.

வல்லாள கண்டன் ஏய்ப்பன், சூழ்ச்சிக்காரன், ஏமாற்றுக்காரன், பித்தலாட்டக்காரன், பொய்யன், புரட்டன் என்று சகலமான பட்டங்களுக்கும் சொந்தக்காரனாக இருந்தாலும், அவனொரு தகப்பனும்தானே? எந்தத் தகப்பந்தான் தன் மகனைப் பலியிடப் பார்த்துக்கொண்டிருப்பான்? ஆகையினால், வெம்பித் துடித்து பக்கத்தூருக்குப் பதறி ஓடினான் வல்லாள கண்டன்.

அங்கே ஊர்ப் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள், சமயப் பெரியோர்கள் நடுவே பீப்பாய் ஒன்று கிடக்க, தண்டோரா முழக்கமிடுவோன் நாலைந்து முறை தண்டோராவை ஓங்கியடித்துவிட்டுக் கூடியிருந்த அனைவருக்கும் நடக்கப்போவதை விவரித்துச் சொல்லிவிட்டு அப்பால் நகர, பீப்பாய் மீது சீமெண்ணையைக் கொட்டித் தீப்பந்தத்தால் தொட்ட நாழிகையில் அது குபீரென்று பற்றிக்கொண்டு சொக்கப்பனை போல் உயர்ந்தெழுந்து பட் படீரென வெடித்துச் சிதறியது.

“ஐயோ! நான் என் செய்வேன்” என்று கூடியிருந்தோர் நடுவேயிருந்து ஓர் கூக்குரல் எழுந்தது. முன்னே வந்தான் வல்லாள கண்டன். “அடேய் கிண்டா! இதோ இருக்கிறதடா உன் பணம் வட்டியும் அசலுமாய். எடுத்துக்கொள். திருப்பித் தா என் மகனை! தர முடியுமா உன்னால்? இப்போதே தரவேணும். நான் சொன்ன திகதியில் வாக்குத் தவறாமல் உன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். நீ இப்போதே என் மைந்தனை எனக்குத் தரவில்லையானால், இங்கே கூடியிருப்போர் சாட்சியாக, அந்த மலைகள், மரங்கள், மேலே தகித்துக்கொண்டிருக்கும் சூர்யன் சாட்சியாக, அந்த வீரமாகாளியம்மன் சாட்சியாக உன் உடலை இரண்டு துண்டாகக் கிழித்து, உன் குடலை மாலையாக அணிவேன். இது சத்தியம்! சத்தியம்!” என்று சூளுரை செய்தான்.

பணத்தை எடுத்துக்கொண்ட கிண்டன், “அப்படியே தந்தேன் உன் மகனை” என்று ஓர் ஓரமாக நின்றிருந்த தன் சேவகனுக்குச் சைகை காட்ட, அவன் ஓடிப்போய் மறைவாக இருந்த மைந்தனைக் கொணர்ந்து வல்லாள கண்டனிடம் ஒப்புவித்தான்.

இதனால் அறியப்படுகிற நீதியென்னவென்றால், வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டென்பதோடு, ஏமாற்றும் சூழ்ச்சியும் எந்நாளும் நிலைக்காது என்பதேயாம்!

4 comments:

அருமை. நல்லாயிருக்கு..
 
பிளாக் டிசைனும் நல்லாருக்கு! கதையும் நல்லாருக்கு ஆசிரியரே! வாழ்த்துக்கள்!
 
mmmmmmmmmmmmmmmmmmmmm ok.
 
* நல்லா இல்லைன்னாலும் தாராளமா எழுதுங்க, வண்ணத்துப்பூச்சி. கோவிச்சுக்கிறதுக்கு எங்க தாத்தா இப்போ இல்லே!

* பிளாக் டிசைன் நல்லா இருந்தா அதுக்கான பாராட்டு என் பிள்ளைங்களுக்குப் போய்ச் சேரும். கதை நல்லா இருந்தா அதுக்கான பாராட்டு என் தாத்தாவுக்குப் போகிறது. அப்ப, என்ன சிராப்பள்ளி பாலா, எனக்கு எதுவுமே இல்லியா?

* சாம், நீங்கதான் கரெக்ட்! ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லேங்கிறதை நாசூக்காச் சொல்லிட்டீங்க!