உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, June 10, 2009

ஊட்டியில் ஓர் உறவு!

ண்டுக்கு ஒருமுறை நான் என் குடும்பத்தோடு கோடை விடுமுறையில் உல்லாசப் பயணம் செல்வதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறேன். அதற்கு ஆகும் செலவை ஒரு தண்டச் செலவாக நான் ஒருபோதும் கருதியதே இல்லை. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் இடையில் ஒரே ஒரு வருடம் மட்டும் உல்லாசப் பயணம் போகவில்லை. அந்த ஆண்டு எக்கச்சக்கமான பண நஷ்டம் உள்பட வேறு பல பிரச்னைகள் ஒட்டுமொத்தமாக வந்து அழுத்தியதில் டூர் கேன்ஸல். ‘அப்பா பை சொல்றாரு’ என்று டாடா காட்டி மற்றவர்களை மட்டும் அனுப்பி வைக்க, அதொன்றும் ஈனோ சாப்பிட்டுத் தீர்கிற சின்ன விஷயமாக இல்லை. (இந்த வருடமும் டூர் போகவில்லை. பெரியவள் ப்ளஸ் டூ; சின்னவன் டென்த் பப்ளிக். அவர்களே டூர் வேண்டாம் என்று கேன்ஸல் செய்துவிட்டார்கள்.)

சென்ற வருடம், மே மாத இறுதியில் ஊட்டி போய் வந்தோம். ஊட்டி போவது இது நாலாவது முறை. இதற்கு முன் போனபோது பிள்ளைகள் ரொம்பச் சின்னவர்களாக இருந்தார்கள். போட்டோ ஆல்பத்தைப் பார்த்த அவர்களுக்கு ஏதோ ஞாபகம் இருக்கலாமே தவிர, மற்றபடி அந்த அனுபவம் அதிகம் நினைவிருக்க வாய்ப்பில்லை. எனவே, அவர்கள் விருப்பத்தின்பேரில் வேறு ஸ்தலம் யோசிக்காமல் ஊட்டி என்று முடிவு செய்தோம்.

இந்த முறை குழந்தைகள் ரொம்பவே ஊட்டி பயணத்தை ரசித்தார்கள். ஊட்டியிலேயே ரூம் எடுத்துத் தங்கினோம். மழையில் தொப்பலாக நனைந்து மகிழ்ந்தோம். பற்கள் தந்தியடிக்க, உடம்பு உதறிப்போட, கை கால்கள் கிடுகிடுக்க சொத சொதவென்ற ஈரத்தோடு டூர் வேனில் அமர்ந்து பயணித்தது மறக்க முடியாத அனுபவம். தனியாக ஒரு வாடகைக் கார் அமர்த்திக்கொண்டு கடும் மழையிலும் தொட்டபெட்டா ஏறிப்போய் பார்த்தே தீருவது என்று போய் வந்தோம். சாலை வளைவுகளே தெரியாதபடிக்குச் சரியான மழை.

இதற்கு முந்தைய வருடங்களில், ஊட்டியில் இருக்கும் என் அன்பு நண்பர் பார்த்திபன் அவர்கள் குடும்பத்தாரின் அன்பு உபசரிப்பில் திளைத்து மகிழ்ந்தோம். பார்த்திபன், ஊட்டியில் இந்து பிலிம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கிறார். நல்ல எழுத்தாளர். இனிமையாகப் பழகுவார். அவரது துணைவியாரும் ஏதோ பல வருட காலம் பழகிய குடும்ப உறுப்பினர் போலவே இயல்பாகப் பழகுவார். அவரின் சமையல் அருமையாக இருக்கும். முந்தின முறை சென்றபோது, நாங்கள் நால்வரும் டிபன் சாப்பிட வரிசையாக உட்கார்ந்து, அவர் ஒவ்வொரு தோசையாகச் சுட்டுப் போடப் போட, அதன் சுவையில் மயங்கி, இலையை விட்டு எழுந்திருக்காமல், அவசரப்படாமல், பொறுமையாகக் காத்திருந்து, கூச்சமே இல்லாமல் வேண்டுமென்கிற தோசைகளைக் கேட்டு வாங்கித் திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டே எழுந்தோம். தோசை மட்டுமா, அதற்கு சப்போர்ட்டாக இணைப் பதார்த்தங்கள், தேங்காய்ச் சட்னி, புதினாச் சட்னி, மிளகாய்ப் பொடி, எள்ளுப் பொடி, மணக்க மணக்க சாம்பார் என்றால், யாருக்குத்தான் எழுந்திருக்கத் தோன்றும்?

சென்ற ஆண்டு ஊட்டிப் பயணத்தின்போது நாங்கள் இன்னொரு புதிய நண்பரின் பரிவான உபசரிப்பில் கிறங்கியிருந்தோம். அவர் வேறு யாருமல்ல; நல்ல எழுத்தாளரும், காட்டிலாகா அதிகாரியுமான லதானந்த் அவர்கள்தான். ஆனந்த விகடன், கல்கி எனப் பல பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். லதானந்த்பக்கம் என பிளாக் எழுதி வருகிறார்.

விகடனில் ‘குதுர கர்ணா’ என்கிற புனைபெயரில் இவர் எழுதிய திருக்குறள் பொழிப்புரை படு தமாஷ்! பரிமேலழகரிலிருந்து சுஜாதா வரை எத்தனையோ பேர் திருக்குறளுக்கு உரை எழுதிவிட்டார்கள். ஆனால், இவர் எழுதிய உரை போல் வராது. கொங்குத் தமிழ்க்காரராக இருந்துகொண்டு சென்னைத் தமிழில் இவர் எழுதிய திருக்குறள் பொழிப்புரை செம கலக்கல். படிக்கலாம்; ரசிக்கலாம்; சிரிக்கலாம்; சிந்திக்கலாம். கடினமான அர்த்தங்களையும் ரொம்பச் சுலபமாக போகிறபோக்கில் குதுர கர்ணா சொல்லியிருந்த விதம் படு அசத்தல்! ஆனால், அது ஏனோ தமிழ்ப்பற்றாளர்கள் சிலரின் கண்களை உறுத்த, எதிர்ப்பு கிளம்பி, மேலிடம் வரை போய் குதிரையின் கழுத்து முறிக்கப்பட்டது. (இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை; குதுர கர்ணா 1330 திருக்குறள்களுக்கும் பொழிப்புரை எழுதி, தனிப் புத்தகமாகவே கொண்டு வரலாம்!)

நாங்கள் கோவை வந்து சேர்ந்ததுமே, தனக்கு போன் செய்யும்படி லதானந்த் சொல்லியிருந்தார். குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே எங்கள் ரயில் கோவையை அடைந்துவிட்டது. போன் போட்டதும், பதறி பத்தே நிமிடத்துக்குள் தனது ஹூண்டாய் ஆக்சென்ட் காரை கோவை ரயில் நிலையத்துக்குக் கொண்டு வந்துவிட்டார். அப்போதுதான் அவரை முதன்முதலாகப் பார்க்கிறேன். ஆனால், அவர் முகத்தில் என்னைப் புதிதாகப் பார்க்கிற பாவனை இல்லை. ஏதோ நெடுநாள் பழகியவர் மாதிரி கலகலவெனப் பேசியபடி, எங்களைத் தமது காரில் ஏற்றிக்கொண்டு, அவரது கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்துப் போனார். சிறிது நேர இளைப்பாறலுக்குப் பிறகு, அறையிலேயே மற்றவர்கள் தங்கியிருக்க, என்னைத் தனது அலுவலகத்தைச் சுற்றியுள்ள பாதைகளில், ஒவ்வொன்றாக விளக்கிச் சொன்னபடியே நீள நெடுக ஒரு ரவுண்டு அழைத்துப் போய் வந்தார்.

பின்னர் காரில், அன்னபூர்ணா ஹோட்டலுக்கு அழைத்துப் போய் உணவருந்தச் செய்து, ஜெயண்ட் சைஸில் ஃபான்ட்டா பாட்டில் ஒன்றை தாக சாந்திக்குக் கையில் வாங்கிக் கொடுத்து, கூட இருந்து ஊட்டிக்கு பஸ் ஏற்றிவிட்டே கிளம்பினார்.

அவரின் வீடு கோவையிலிருந்து கொஞ்சம் தள்ளி, துடியலூர் என்ற இடத்தில் இருந்தது. அங்கே எங்களை அழைத்துச் செல்ல முடியவில்லை என்கிற ஆதங்கமோ என்னவோ, ஊட்டியில் இரண்டு நாள் தங்கிச் சுற்றிப் பார்த்துவிட்டு நாங்கள் கிளம்பியதுமே அவரிடமிருந்து மறுபடியும் போன்... “வர வழியில துடியலூர்ல இறங்கிக்குங்க.” “நாங்க கோயமுத்தூருக்கு டிக்கெட் வாங்கிட்டோமே!” - அவருக்குச் சிரமம் தரக்கூடாது என்கிற எண்ணம் எனக்கு. எங்களைத் தன் இல்லத்துக்கு அழைத்துப் போய் உபசரிக்காமல் அனுப்பிவிடக் கூடாது என்கிற பிடிவாதம் அவருக்கு. “அதெல்லாம் பரவாயில்லை. நீங்க துடியலூர்ல இறங்கறீங்க. நான் வெயிட் பண்றேன்.”

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? துடியலூரில் இறங்கிவிட்டோம். காரில் காத்திருந்து அழைத்துப் போனார்.

ஊட்டி மழையில் நனைந்ததாலோ என்னவோ, சரியான தலைவலி எனக்கு. உள்ளூர லேசாக ஜுரமும் இருந்தது. அதை அவரிடம் காண்பித்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், ‘எவ்வளவு நேரம்தான் ஜுரம் வராத மாதிரியே நடிக்கிறது..!’ எங்களுக்கு அவர் ஒதுக்கியிருந்த அறைக்கு, சென்னையாக இருந்தால் ஒரு நாள் வாடகை குறைந்தபட்சம் 1,200 ரூபாயாவது கேட்பார்கள். அத்தனை சொகுசான அறை. உபசரிக்க அழைத்துப் போன அவருடன் பேசக்கூட முடியாமல் தலையில் ஒரு கர்ச்சீப்பை இறுகக் கட்டிக்கொண்டு படுத்துவிட்டேன்.

அப்புறம் மாத்திரை, டீ தந்தது நினைவிருக்கிறது. எத்தனை நேரம் உறங்கினேனோ தெரியவில்லை; ஆனால், சீக்கிரமே கொஞ்சம் சுதாரித்து எழுந்து ஹாலுக்குப் போனேன். லதானந்த் ஒரு அறையில் பிளாக் எழுதுவதில் மும்முரமாக இருக்க, என் பிள்ளைகள் இருவரும் மற்றொரு அறையில் கம்ப்யூட்டர் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்தார்கள்.

பிளாக் சம்பந்தமாக அவர் தமது அனுபவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண்டு இருந்தார். நடுவில் என் பையன் கேட்டான் என்று அந்த கிரிக்கெட் விளையாட்டை டிவிடியில் பதிவு தரும் வேலையிலும் இறங்கினார் லதானந்த். டிபன் சாப்பிட்டோம். அட, இங்கேயும் தோசை! பார்த்திபன் வீட்டுச் சுவையான தோசைக்குச் சற்றும் பின்வாங்காத மொறுமொறுவென்ற அசத்தல் தோசை! ‘அது எப்படித்தான் செய்யுறாங்களோ! நமக்குத் திங்கத்தான் தெரியும்!’
குரூப் போட்டோ எடுத்துக்கொண்டோம். பின்னர் விடைபெற்று வெளியே வரும்போது தன் வளர்ப்புச் செல்லங்களான மாலா, கென்ஸி இரண்டையும் அறிமுகப்படுத்தினார். கிளம்பினோம். கோவை ரயில்வே ஸ்டேஷனில் எங்களைக் கொண்டு விடுவதற்காக அவரின் மகன் எங்களைக் காரில் அழைத்துப் போனார். போகிற வழியிலேயே பாதி வழியில் ஓரிடத்தில் நிறுத்தினார். ‘பெட்ரோல் கிட்ரோல் தீர்ந்து போச்சா, போடப் போகிறாரா’ என்று யோசிப்பதற்குள், பக்கத்தில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸில் நுழைந்து ஒரு பெரிய மைசூர்பாகுப் பெட்டி வாங்கி வந்து தந்துவிட்டுக் காரைக் கிளப்பினார்.

யம்மாடி..! ஊட்டி மழையில் நனைந்த குளிர் ஜுரம் ஒரு சில மணி நேரத்தில் விட்டுப் போய்விட்டது. ஆனால், லதானந்த் குடும்பத்தாரின் அன்பு மழையில் நனைந்ததில் பிடித்துக்கொண்ட பாச ஜுரம் இன்றைக்கு வரைக்கும் விடவில்லை.

2 comments:

அருமையான பதிவு.

நட்பை விட சிறந்தது எது..??

"Friends never make assumptions about you. They never expect a reason to go out with you. In fact friends only expect you to be you!"

என்றோ படித்த வாசகம் நினைவுக்கு வருகிறது.

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த இனிய பயணம் அமைந்தால் அதைவிட சந்தோஷம் வேறில்லை.


வாழ்த்துகள்.
 
nice one!