உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, June 07, 2009

நான் முரண்டு பிடிக்கிறேனா?

ன் முந்தைய பதிவைப் பார்த்துவிட்டு, ‘அந்தக் கதை என்ன, நாஞ்சில் நாடனின் கதை என்ன, உங்கள் குறிப்பிட்ட கதையைப் பிறகு வேறு எந்தப் பத்திரிகையிலாவது வெளியிட்டீர்களா?’ என்று கேட்டிருக்கிறார் திரு.சத்தியமூர்த்தி.

ஆனந்த விகடன் ஆசிரியர் அனுப்பி வைத்த அந்தப் புத்தகத்தில் (இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற கதைகளின் தொகுப்பு) இருந்த நாஞ்சில் நாடனின் குறிப்பிட்ட அந்த ‘முரண்டு’ சிறுகதையைப் படித்துப் பார்த்தேன். எனக்கென்னவோ, அந்தக் கதைக்கும் நான் எழுதியிருந்த கதைக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்தக் கதையிலும் ஒருவன் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொள்கிறான்; என் கதையிலும் ஒருவன் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொள்கிறான். இதைத் தவிர, வேறு எந்தச் சம்பந்தமும் இல்லை.

எனினும், எப்போது இரண்டும் ஒன்று என்று ஒரு பத்திரிகை ஆசிரியருக்குத் தோன்றிவிட்டதோ, அப்போதே அது அந்தப் பத்திரிகையில் மட்டுமல்ல, வேறு எந்தப் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்படத் தகுதியற்றதாகிவிட்டது - என்னைப் பொறுத்த வரையில். எனவே, அந்தக் கையெழுத்துப் பிரதியை, அது விகடனிலிருந்து திரும்பி வந்ததுமே கிழித்துப் போட்டுவிட்டேன். அதை வேறு எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பவும் இல்லை; பின்னர் நான் பணியாற்றிய ‘சாவி’ இதழிலும் வெளியிட்டுக் கொள்ளவில்லை. (ஆனால், விகடனிலிருந்து திரும்பிய அந்த ‘மானம்’ என்கிற சிறுகதையை மட்டும் சாவியில் வெளியிட்டேன்.)

நாஞ்சில் நாடனின் ‘முரண்டு’ கதை, என்னுடைய ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’ கதை இரண்டின் சுருக்கத்தையும் கீழே தருகிறேன். இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

முரண்டு:
இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற கதை இது. ரொம்ப காலத்துக்கு முன்னே படித்ததால், கதை துல்லியமாக நினைவில்லை. ஞாபகம் இருக்கிறவரையில் சொல்கிறேன்.

ஒரு ரெண்டுங்கெட்டான் இளைஞன். தான் செய்வது இன்னதென்று அவனுக்குத் தெரியாது. அவனை வைத்துக்கொண்டு அவன் அம்மா போராடுவாள். உறவுக்காரப் பெண் ஒருத்தியை அவனுக்குக் கட்டி வைத்துவிட்டால் தனக்கு ஒரு நிம்மதி பிறக்கும் என்று நினைத்து அதற்கு முனைவாள். அதற்குள் அவன் கள்ளு குடிக்கக் காசு புரட்டுவது எப்படி என்று யோசித்து, குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டால் ரூபாய் கொடுப்பார்கள் என்று தெரிந்துகொண்டு, அங்கே போய் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு விடுகிறான்.

அன்பிற்கும் உண்டு ஆராதனை:
ஒரு கணவன் - மனைவி. கணவன் நல்லவன்தான். ஆனால், அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை. அம்மா சொல்லைத் தட்டாதவன். அந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் அவன் அம்மா, தன் தம்பி மகளை அவனுக்கு இரண்டாம் தாரமாகக் கட்டி வைக்க நினைக்கிறாள்.

மனைவி இது பற்றிக் கணவனிடம் சொல்லி அழ, ‘கவலைப்படாதே! நீ மட்டும்தான் எனக்கு மனைவி. வேறு யாரையும் நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்’ என்று ஆறுதல் சொல்கிறான். ஆனால் அவளோ, வேறு சில சம்பவங்களைச் சொல்லிக் காட்டி, ‘அப்போதெல்லாம் நீங்கள் நான் சொன்னதையா செய்தீர்கள்? அம்மா மனம் நோகக் கூடாது என்று அவள் விருப்பப்படிதானே நடந்துகொண்டீர்கள்? இப்போதும் அப்படித்தான் செய்வீர்கள். உங்களை நம்ப முடியாது!’ என்கிறாள்.

மறுநாள்... கல்யாணப் பேச்சை எடுக்கிறாள் அம்மா. “வாரிசு வேண்டும் என்றுதானே எனக்கு மறு கல்யாணம் செய்ய நினைக்கிறீர்கள் அம்மா! ஆனால், அதற்கு வழியில்லை. நான் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டு விட்டேன்” என்கிறான் கணவன். மனைவி நெகிழ்கிறாள்.

என்ன... இரண்டுக்கும் சம்பந்தம் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா? அல்லது, சம்பந்தமே இல்லை என்று நான்தான் ‘முரண்டு’ பிடிக்கிறேனா?

2 comments:

இரு கதைகளுக்கும் ஒற்றுமை உள்ளது. ஆனால் காப்பி அடிக்காமலே யாருக்கும் சுலபமாய் மனதில் உதிக்கக் கூடிய கருதான். கு.க ட்விஸ்ட் உட்பட. உதாரணம் முந்தானை முடிச்சு க்ளைமாக்ஸ். பாக்கியராஜ் உங்கள் இருவரில் யாருடைய கதையை காப்பி அடித்திருப்பார்? :-)

உங்கள் கதையில் வரும் பையனின் அப்பாவை இரண்டாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்து நிற்க வைத்து, அந்த அம்மாவுக்கு அதிர்ச்சி தர எனக்கு உத்தேசம் !!!
 
ரவி சார், எந்த சம்மந்தம் இல்லை. ஆனால் உட்பொருள் ஒன்று போல தோன்றுகிறது.

ஆனால் முரண்டு கதையை படித்து கூட பார்க்காமல் நீங்கள் எழுதியிருப்பதும் உங்கள் கற்பனை அது அந்த கதையை ஒத்திருப்பது குற்றமல்லவே..

ஒரே மாதிரி கற்பனை படைப்பாளிகளுக்கு சாத்தியம் தான்.


ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி எழுதி இயக்கிய Pedar ( Father) திரைப்படமும் ஜெயகாந்தனின் உன்னை போல் ஒருவனின் காட்சிகளுக்கும் கதையும் ஒத்திருப்பதாக இயக்குநர் ஷண்முகப்பிரியன் சொல்லியிருக்கிறார்.

Pedar ( Father) திரைப்படத்தின் என் பதிவுவின் சுட்டி:

http://butterflysurya.blogspot.com/search/label/Pedar

நேரமிருக்கும் போது படிக்கவும்.

கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.