நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த சமயம்... காக்கி அரை நிஜாரும் வெள்ளைச் சட்டையும் எனக்கு யூனிஃபார்ம். இப்போதுள்ள பள்ளிகள் போல் வண்ணங்களோ, கட்டங்களோ இல்லாத வறட்டு வெள்ளைச் சட்டை. தினமுமே அதைத்தான் போட்டுக்கொண்டு போகவேண்டும். ஞாயிற்றுக்கிழமை மட்டும், அன்று ஒரு நாள் முழுக்க வீட்டில் கலர் டிரஸ் போட்டுக்கொண்டு திரியலாம்.
எனக்கு ஒரு கட்டத்தில் இந்தச் சீருடை மீது வெறுப்பே வந்துவிட்டது. அதற்கு முக்கியமான காரணம் வேறொன்று. வீட்டில் ஒரு பண்டிகை, விசேஷம் என்று வந்தாலும் எனக்குப் புத்தாடை எடுக்கும்போது வண்ணத் துணிகளுக்குப் பதிலாக யூனிஃபார்ம் துணி வாங்கி டிராயரும், சட்டையும் தைத்துக்கொடுத்துவிடுவார்கள். புதுசுக்குப் புதுசும் ஆச்சு, தனியாகச் சீருடைக்கென்று பணம் செலவழிக்க வேண்டாம்! ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!
ஆனால், நான் எஸ்.எஸ்.எல்.சி. முடிக்கும்போதுதான் (அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி. பதினொண்ணாவது.) சீருடையின் மகத்துவம் பற்றியும் அவசியம் பற்றியும் தெரிந்துகொண்டேன். இவன் பணக்காரன், இவன் ஏழை என்ற வித்தியாசம் எதுவும் குழந்தைகள் மனதில் படியாமல் ஒருவரோடொருவர் சமமாகப் பழகவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதே சீருடை.
கல்லூரியும் படிக்கிற வயசுதான். சகலத்தையும் கரைத்துக் குடித்துவிட்டு, ஞானியாகி கல்லும் வைரமும் ஒன்று என்ற பக்குவத்துக்கு மாணவர்கள் வந்துவிடும் வயதல்ல! அவர்களுக்கும் சீருடை அவசியம் தேவை என்பதே என் எண்ணம். ஆனால், எந்தக் கல்லூரியிலும் சீருடை என்பதே இல்லை.
கேட்டால், மாணவர்கள் துள்ளித் திரிகிற பருவமாம் கல்லூரிப் பருவம். அவர்களை ஒரு சிறைக்குள் அடைக்கக்கூடாதாம்! ஊடகங்களிலிருந்து, இந்த மாதிரி விஷயங்களுக்கு வக்காலத்து வாங்குவதற்கென்றே இருக்கிற சில அதி மேதாவிகள் வரை வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்கள். அப்படியானால், குழந்தைகளை மட்டும் சீருடைச் சிறையில் அடைக்கலாமா? அவர்கள் துள்ளித் திரிய வேண்டியதில்லையா?
மாணவிகள் ஜீன்ஸ், டாப்ஸ் எனக் கண்டபடி கண்ணியக் குறைவாக உடை உடுத்தி வந்தால், சில கல்லூரி நிர்வாகங்கள் அவர்களுக்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. அவர்களின் நோக்கம் பெண்களை அடிமைப்படுத்துவதா? இல்லையே! ஆனால், பொங்கிக்கொண்டு வந்துவிடுகிறது சில மாதர்குல மாமணிகளுக்கு. “ஆகா... ஓர் உடை கண்ணியக் குறைவானது என்று எப்படிச் சொல்லலாம்? உடையில் இல்லை ஆபாசம். பார்க்கிற பார்வையில் இருக்கிறது” என்று உள்நாக்கு தெரியக் குரலெழுப்பிக் கத்துகிறார்கள்.
கண்ணியக் குறைவுக்கு என்ன அளவுகோலா வைக்க முடியும்? முன்பக்கம் டெய்லர் வெட்டு இத்தனைக் கீழிறங்கி இருந்தால் ஆபாசம் என்று எல்லையா வகுக்க முடியும்? ஆண்களின் மனதில் கிளர்ச்சியைத் தோற்றுவிக்கிற மாதிரி இருந்தால், அது ஆபாசமான உடைதான்.
இதற்கும் சீறி எழுவார்கள் மங்கையர்திலகங்கள். ஒன்றுமே தெரியாத மாதிரி, “எது ஆண்களின் மனதைச் சலனப்படுத்தும், எது சலனப்படுத்தாது என்று ஒவ்வொன்றையும் யோசித்துக்கொண்டா நாங்கள் டிரஸ் செய்ய முடியும்?” என்று எதிர்க் கேள்வி கேட்பார்கள். ‘ஆண்களுக்கு இந்தக் கட்டுப்பாடு எதுவும் இல்லையே! பெண்கள் மட்டும் என்ன இளித்தவாயர்களா?’ என்பார்கள்.
எனக்குத் தெரிந்தவரை கல்லூரிப் பையன்கள் யாரும் கண்ணியக் குறைவாக உடை அணிந்து நான் பார்த்ததில்லை. சகலகலா வல்லவனில் கமல்ஹாசன் வெறும் வெய்ஸ்ட் கோட் மட்டும் அணிந்து ‘இளமை இதோ... இதோ...’ என்று ஆடுகிற மாதிரி எந்தப் பையனும் அக்குள் ரோமம் தெரிய அக்ஷய்குமார் மாதிரி சிக்ஸ்பேக்ஸ் காண்பித்துக்கொண்டு கல்லூரிக்குப் போகவில்லை. அப்படிப் போனால் அவர்களுக்கும் கல்லூரி நிர்வாகம் டிரஸ் கோடு வைக்கும்.
சுடிதார் அணிந்து துப்பட்டா அணிந்து வரவேண்டும் என்று நிபந்தனை விதித்தால், ஏதோ தன் சுதந்திரமே பறிபோய்விட்ட மாதிரி பதறுகிறார்கள் சில பெண்கள். கவனிக்க, சில பெண்கள்தான்! நூற்றுக்குப் பத்து பேர் மட்டும்தான் இப்படி. மற்றவர்கள் இந்த விளையாட்டில் கலந்துகொள்ளாமல் எட்ட நின்று வேடிக்கை பார்க்கிறவர்கள்தான். ‘நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்’ என்பது மாதிரித் தங்களைச் சொல்லிவிடுவார்களோ என்று பயந்து, இதற்கு எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஒதுங்கி நின்றுவிடுகிறார்கள்.
சேலைதான் கவர்ச்சியான உடை என்பது பெண்ணீயவாதிகள் (பெண்ணீயவாதிகள் என்போர் பெண்கள் மட்டுமல்ல) சிலரின் கண்டுபிடிப்பு. ஒரு சமுதாயத்தில் ஆண்டாண்டு காலமாக எதை உடுத்தி வருகிறோமோ, அதுதான் அந்தச் சமுதாயத்துக்கான கண்ணிய உடை. கேரளாவில் வெறும் முண்டு மட்டும் உடுத்துகிறார்களே, அது அங்கே கண்ணிய உடைதான். அதற்காக, தமிழ்நாட்டிலும் அப்படித்தான் உடுத்தி வருவேன் என்று பெண்கள் அடம்பிடித்தால் எப்படி இருக்கும்?
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். நீச்சல் போட்டிக்குப் போகிறோம். பெண்கள் ஸ்விம் சூட் அணிந்து நீரில் குதித்து, நீந்துகிறார்கள். வெற்றி பெற்ற பெண் அதே ஸ்விம் சூட்டோடு ஈரம் சொட்டச் சொட்ட தொலைக்காட்சி நிருபருக்கு பேட்டி கொடுக்கிறார். அங்கே அந்த உடை ஆபாசம் இல்லை. அதுவே அதே பெண் வீட்டுக்கு நாம் போகிறோம். அதே பெண் ஸ்விம் சூட்டில் நமக்கு காபி கொண்டு வந்து தந்தால் ஹார்ட் அட்டாக் வந்துவிடாதா?
கேட் வாக் நடக்கும்போது ஆபாசமில்லை, ஸ்பென்சர் பிளாசாவுக்கு அந்த உடையில் வந்தால் ஆபாசமாகிவிடுமா என்று கூச்சல் எழுப்பிப் பயனில்லை. அங்கே ஆபாசமில்லை; இங்கே ஆபாசம்தான்! ’ஆபாசம் என்பது உடையில் இல்லை; பார்க்கிற பார்வையில் இருக்கிறது’ என்று சொல்வதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. முதல் பாதி சரி. ஆனால், பார்க்கிற பார்வையில் என்பது சரி அல்ல. எந்த இடத்தில் அந்த உடை அணிந்துவரப்படுகிறது என்பதைப் பொறுத்துதான் அது முடிவாகிறது.
கிராமத்து விவசாயி வெறும் கோவணம் மட்டும் அணிந்து, பல நடவுப் பெண்கள் கண் எதிரில் ஏர் உழுகிறார். அதுவே ஒரு கிராமத்து வாலிபன் கோவணம் கட்டிக் கல்லூரிக்கு வந்தால் ஆபாசம் இல்லை என்பீர்களா?
சேலை ஆபாச உடை அல்ல. குதர்க்க வாதத்துக்காக அப்படித் திசை திருப்பாதீர்கள். நம் முப்பாட்டிகளும், பாட்டிமார்களும் அணிந்து வந்த உடையை ஆபாச உடை என்று திரிக்காதீர்கள். என்ன... இன்றைய நவீனத்துவப் பெண்கள் ஜாக்கெட்டின் பின்புறம் அபார இறக்கம் காட்டு்கிறார்கள். (பல இடங்களில் தைக்கிற ஆண் டெய்லருக்கே கை கூசி, ஓரளவுக்கு மேல் இறக்கம் வைக்காமல் போக, தையல் கூலி தரமாட்டேன் என்று சண்டைக்குப் போன சில பெண்களையும் நான் அறிவேன்.) அதே போல், இடுப்புச் சொருகலையும் திகிலூட்டும் அளவுக்குக் கீழே இறக்கிப் பார்க்கிறவர்களைப் பதறச் செய்கிறார்கள். அப்படியான உடுத்துதல்தான் ஆபாசமே தவிர, சேலை ஆபாசமல்ல!
‘சேலையில் இடுப்பு தெரிகிறது. அதுதான் ஆபாசம். ஜீன்ஸும் டாப்ஸும் அணிந்தால் உடம்பு முழுக்க மறைக்கப்படுகிறது. அது ஆபாசமில்லை!’ என்பது இன்னொரு விதண்டாவாதம். உடம்பு முழுக்க மறைந்தால், அது ஆபாசமில்லை என்று ஆகிவிடுமா என்ன? உடையே அணியாமல், உடம்பு முழுக்கப் பெயிண்ட் பூசிக்கொண்டு அப்படியே போய்விடலாமே? ஆபாச இலக்கணத்துக்குள் வராதல்லவா? உடம்புதான் மொத்தமும் மறைந்திருக்கிறதே! அங்கங்கள் தெரியவேண்டியது இல்லை; அவற்றின் நீள, அகல, பருமன்களைத் துல்லியமாக வெளிப்படுத்தினாலும் போதும்; அது ஆபாசம்தான்!
ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பார்த்தேன்... பேன்ட் அணிந்த இளைஞன் ஒருவன் படம். திடுக்கிட்டுப் போனேன். பேன்ட் ஜிப் அவிழ்ந்து, பேன்ட்டின் முன்பக்கம் திறந்து, உள்ளே வேறு நிறத்தில் ஜட்டி தெரிவது போன்ற படம். ஆனால், உண்மையில் அவனது ஜட்டி தெரியவில்லை. அப்படித் தோன்றும்படியாக அந்த பேன்ட் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்! அப்படியொரு பேன்ட்டை கல்லூரி மாணவர்கள் அணிந்து வந்தால் ஒப்புக்கொள்வார்களா?
முன்பு காவல்துறை உயரதிகாரி ஒருவர் நல்ல எண்ணத்தோடு பெண்களுக்குப் புத்திமதி சொன்னார்... “கவர்ச்சியாக உடை உடுத்தாதீர்கள்! பார்க்கிற ஆண்களைச் சபலப்படுத்தாதீர்கள். அதனால் உங்களுக்குத்தான் ஆபத்து. பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு அப்படி உடை அணிவதும் ஒரு காரணம்!” நல்லது சொன்னால் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான்! கட்டிக்கொண்டார். “தப்பு செய்பவனைத் தண்டிப்பதை விட்டுவிட்டு, பெண்களுக்கு ஏன் உபதேசம் செய்கிறார்” என்று கத்தித் தீர்த்துவிட்டார்கள்.
தண்டிப்பது மட்டுமல்ல, குற்றங்கள் நிகழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதும் போலீஸின் கடமைதான் என்று அந்த மாதரசிகளுக்குத் தெரியவில்லை. ‘திருட்டுப் பயம் அதிகமாக இருக்கிறது, வீட்டைத் திறந்து போட்டுவிட்டுப் போகாதீர்கள்’ என்று போலீஸ் புத்திமதி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும். ‘நான் திறந்துபோட்டுத்தான் போவேன். திருடு போனால் கண்டுபிடித்துக் கொடுக்கத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்’ என்று சொன்னால், எக்கேடும் கெட்டு ஒழியுங்கள் என்று விட வேண்டியதுதான்!
இயற்கை ஆண் உடம்பை ஒரு மாதிரியும், பெண் உடம்பை ஒரு மாதிரியும் படைத்திருக்கிறது. புத்தகத்தில் வரும் ஒரு சின்ன ஆபாசப் படம் கூட, அந்தப் பருவத்தில் இருக்கும் இளைஞனைச் சபலப்படுத்திவிடும். பெண் அப்படியல்ல. அவள் உடலளவில் கிளர்ந்தெழ வெகு நேரமாகும். எனவே, ஆணைச் சலனப்படுத்தாத வகையில் பெண்கள் உடை அணிவது அவசியம். இங்கே யாருமே யோகிகள் அல்ல; பெற்றோரின் மீது, சமுதாயத்தின் மீது, சட்டத்தின் மீது, கடவுளின் மீது... இப்படி ஏதோ ஒன்றின் மீது இருக்கிற பயத்தினால்தான் ஒவ்வொரு ஆணும் கட்டுப்பாடாக இருக்கிறான்.
புஷ்பாதங்கதுரை ஒருமுறை ஒரு பேட்டியில் சொன்னார்... “முனிவர்களின் கட்டுப்பாட்டைப் பார்த்து எனக்கு பிரமிப்பு வரவில்லை. பஸ்ஸில் இத்தனை நெருக்கடியில் பெண்களின் மத்தியில் போய்வரும் இளைஞர்கள் பலர் கண்ணியம், கட்டுப்பாட்டோடு இருக்கிறார்களே, அதை நினைத்தால்தான் பெருமையாக இருக்கிறது. அவர்களைத்தான் மதிக்கத் தோன்றுகிறது!”
உண்மைதான். ஏதோ ஒரு கட்டுப்பாடு காரணமாக, (அவன் தன் மனச்சாட்சிக்குக்கூடக் கட்டுப்பட்டு இருக்கக்கூடும்!) தமிழக இளைஞன் அத்துமீறிப் போகாமல் கட்டுப்பாட்டோடு கண்ணியமாகவே நடந்துகொள்கிறான். உடைச் சுதந்திரம் என்கிற பெயரில் விபரீதத்தை விதைக்காதீர்கள். பெட்ரோல் பங்க்குகளில் ‘சிகரெட் பிடிக்காதீர்’ என்று போட்டிருப்பது சிகரெட் பிடிப்பவரின் உரிமையை நசுக்குவதற்கு அல்ல என்று புரிந்துகொள்ளுங்கள்.
படிக்கிற வயசில் படிக்கிற வேலையை மட்டும் பாருங்கள். அதில் ஏதாவது பிரச்னை என்றால் தாராளமாகக் கேஸ் போடுங்கள். மற்றபடி உபயோகமில்லாத உடைப் பிரச்னையைத் தூக்கி உடைப்பில் போடுங்கள்!
Wednesday, June 17, 2009
உடைப்பில் போடுங்கள் உடைப் பிரச்னையை!
Posted by
ungalrasigan.blogspot.com
at
Wednesday, June 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
:)))))))))
பெட்ரோல் பங்க்குகளில் ‘சிகரெட் பிடிக்காதீர்’ என்று போட்டிருப்பது சிகரெட் பிடிப்பவரின் உரிமையை நசுக்குவதற்கு அல்ல என்று புரிந்துகொள்ளுங்கள்.
படிக்கிற வயசில் படிக்கிற வேலையை மட்டும் பாருங்கள். அதில் ஏதாவது பிரச்னை என்றால் தாராளமாகக் கேஸ் போடுங்கள். மற்றபடி உபயோகமில்லாத உடைப் பிரச்னையைத் தூக்கி உடைப்பில் போடுங்கள்!
/
well said. ஆனால் இதெல்லாம் செவிடன் காதில் ஊதின சங்குதான்.
:))
Krish
k.anbukkarasi :-(
This is absolutely rite..
useful blog..
இங்கே ஒரு விசயத்தை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.நான் சில காலங்கள் ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயங்களில் சேலை கட்டிக்கொண்டு பேருந்தில் பயணம் செய்வதை மறுபிறவியாகவே உணர்ந்திருக்கிறேன்.அவ்வளவு கஷ்டமாய் இருந்தது.ஆனால் சுடிதாரில் ரொம்ப வசதியாய்(கம்பர்ட்டபிள்) உணர்கிறேன்
* கிரிஷ்... உங்க பாராட்டு கிரஷ் குடிச்ச மாதிரி இருந்தது!
* கே.அன்புக்கரசி, சாரி, நீங்க யாருன்னு எனக்குத் தெரியலை. ஆனா, உங்களை ஒண்ணு மட்டும் கேக்க விரும்பறேன். என்னை மேல்ஷாவனிஸ்ட்னு சொல்ற நீங்க என் இன்னொரு பிளாக்ல இதே நாள்ல போட்ட 20 வருடங்களுக்கு முந்தைய கடிதம் என்கிற பதிவைப் படிச்சீங்களா?
* யூஸ்ஃபுல் பிளாக்னு பாராட்டியிருக்கிற அனானிமஸ் ஆசாமிக்கு நன்றி... நன்றி!
* ராஜேஸ்வரி மேடம்! பயனுள்ள பதிவுன்னு பாராட்டினதுக்கு நன்றி! சுடிதார் வசதியான உடைதான். அதை நான் ஒப்புக்கறேன். குதர்க்கவாதிகளைத்தான் நான் குற்றம் சாட்டுகிறேன்!
* நன்றி ஷிர்டி சாய்தாசன்!
அருமை...வாழ்த்துக்கள்!
அடேங்கப்பா...பிரிச்சு மேஞ்சிட்டீங்க...மேட்டரா...
அருமை...வாழ்த்துக்கள்!
sulakshana
Post a Comment