உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Saturday, June 06, 2009

விகடனோடு ஒரு லடாய்!

னந்த விகடன் வார இதழில் என் சிறுகதைகள் அடுத்தடுத்து வெளியாகி, நான் தலைகால் புரியாத உற்சாகத்தில் திளைத்துக்கொண்டு இருந்த 1982-1983 கால கட்டம்!

ஒரு நேரத்தில், பரிசீலனைக்கு நான் அனுப்பி வைத்த கதை பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கடிதம் வரும். அது பிரசுரமாவதற்குள் இன்னொரு கதை எழுதி அனுப்புவேன். சில நாட்களில், அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கடிதம் வரும். இரண்டும் பிரசுரமாவதற்குள் வேறொரு கதை எழுதி அனுப்புவேன். சில மாதங்களில் அதுவும் பரிசீலனையில் தேறிவிட்டதாகவும், விரைவில் பிரசுரமாகும் என்றும் கடிதம் வரும். இப்படி, என் சிறுகதைகள் ஆறு அடுத்தடுத்து விகடன் பரிசீலனையில் தேர்வாகி, பிரசுரத்துக்காகக் காத்திருந்தன.

அப்போது வந்தது ஒரு கடிதம், விகடனிலிருந்து எனக்கு இடி போல! ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்களே கையெழுத்திட்டு அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார்.

கடைசியாக நான் விகடனின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்த சிறுகதை ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’. அது ஏற்கெனவே தீபம் இதழில் திரு.நாஞ்சில் நாடன் எழுதிய ‘முரண்டு’ என்கிற சிறுகதையின் அப்பட்டமான காப்பி என்றும், அவர் வட்டார வழக்கில் எழுதியிருந்த கதையை நான் பிராமண பாஷை உபயோகித்து எழுதியுள்ளேனே தவிர, மற்றபடி மையக் கரு ஒன்றுதான் என்றும், இதனால் பரிசீலனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் என் மற்ற கதைகளை ஏன் நிராகரிக்கக்கூடாது என்று கேட்டு், அந்தக் கடிதத்துக்கு உடனடியாக விளக்கம் சொல்லும்படி அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

அந்தக் கடிதம் எனக்கு வருத்தத்தை விடக் கோபத்தைதான் அதிகம் ஏற்படுத்தியது. அந்தக் கோபத்துடனேயே ஆசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு ஒரு பதில் எழுதிப் போட்டேன். “ ‘அவர் கதையும் உங்கள் கதையும் பொருந்திப் போகிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டால் விளக்கம் சொல்லலாம். நான் காப்பி அடித்து எழுதியதாக நீங்களே தீர்ப்பளித்துவிட்டு, பிறகு விளக்கம் கேட்டால் எப்படி? நான் உங்களுக்கு விளக்கம் எதுவும் சொல்லத் தயாராக இல்லை. திட்டமிட்டுக் குற்றம் செய்பவன்தான் அலிபி தயாரித்துக்கொள்ள முடியும். இது நான் சொந்தக் கற்பனையில் எழுதினதுதான் என்பதற்கு என் மனச்சாட்சி தவிர, வேறு சாட்சியில்லை. என் கதைகள் எதையும் நீங்கள் பிரசுரிக்க வேண்டாம். தயவுசெய்து உடனடியாக அத்தனைக் கதைகளையும் திருப்பி அனுப்பிவிடுங்கள்” என்று எழுதியிருந்தேன்.

என் அப்பா கோபித்துக்கொண்டார். பதில் அனுப்புகிற முறை இதுதானா என்று சத்தம் போட்டார்.

இரண்டொரு நாளில், மீண்டும் ஆனந்த விகடன் ஆசிரியரியரிடமிருந்து ஒரு கடிதமும், ஒரு புத்தகமும் வந்தது. கடிதத்தில், “உங்கள் உணர்வை நாங்கள் புரிந்து கொண்டோம். உங்கள் கதைகளை நாங்கள் திருப்பி அனுப்புவதாக இல்லை. அவை கண்டிப்பாக விகடனில் பிரசுரமாகும். இத்துடன் ஒரு புத்தகம் அனுப்பியுள்ளோம். அதில் உள்ள நாஞ்சில் நாடனின் ‘முரண்டு’ சிறுகதையைப் படித்துப் பாருங்கள். எங்கள் சந்தேகத்தில் நியாயம் உள்ளது என்று உங்களுக்குப் புரியும்” என்று எழுதியிருந்தார்.

பாரம்பரியம் மிக்க ஒரு பத்திரிகையின், அனுபவம் மிக்க ஆசிரியர் எழுதியிருந்த மிகத் தன்மையான அந்தக் கடிதம் என்னைப் பற்றி நானே கூசச் செய்துவிட்டது. உடனே மிக நீண்ட பதில் எழுதினேன்.

நான் கிராமத்துவாசி. ஆனந்த விகடன், குமுதம், கல்கி தவிர வேறு பத்திரிகைகள் படித்தறியாதவன். தீபம், கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி என்று பெயர்கள்தான் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, அவற்றைக் கண்ணாலும் பார்த்தது இல்லை.

தவிர, அந்தச் சமயத்தில் ஆனந்த விகடனுக்கு அடுத்ததாக இன்னொரு சிறுகதையும் எழுதி அனுப்பியிருந்தேன். ‘மானம்’ என்ற தலைப்புடைய அந்தக் கதையின் சாராம்சம் இதுதான். வறுமையான ஓர் எழுத்தாளன் சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்கிறான். முதல் பரிசு பெறுகிறது அக் கதை. பரிசுக்கான காசோலை வருகிறது. அவன் அதை எடுத்துக் கடன்காரர்களுக்குக் கொடுக்கும் முன்பு, அடுத்த வார இதழ் வெளியாகிறது. தன் கதைக்குக் கடிதம் ஏதும் வந்துள்ளதா என ஆவலோடு வாங்கிப் பார்க்கிறான். ‘மேற்படி கதை மலையாளப் பத்திரிகை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட அப்பட்டமான காப்பி’ என்று ஒரு வாசகரின் கடிதம் கட்டம் கட்டிப் பிரசுரமாகியிருக்கிறது. அவன் மனம் நொந்து அந்த காசோலையைத் திருப்பி அனுப்பிவிடுகிறான்.

மேலும், அப்போது தினமணி கதிருக்கு ‘மாடு காத்துக்கொண்டிருக்கிறது’ என்னும் தலைப்பில் ஒரு சிறுகதை அனுப்பி, கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாகியும், அது பற்றி விசாரித்தும் பதில் வராத நிலையில் அதை கல்கி, குங்குமம், ஆனந்தவிகடன், சாவி என எல்லாவற்றுக்கும் அடுத்தடுத்துப் பரிசீலனைக்கு அனுப்பி வைத்த நிலையில் திடுமென ஒரு நாள் அந்தக் கதை தினமணி கதிரில் பிரசுரமாகி புத்தகம் வந்தது. திடுக்கிட்டுப் போன நான் உடனடியாக அந்தக் கதையை நான் அனுப்பிய எல்லாப் பத்திரிகைகளுக்கும் (ஆனந்த விகடன் உள்பட) நடந்ததை விவரித்து, அந்தக் கதையைப் பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.

“இப்படி ‘மானம்’ கதையை எழுதும் மன நிலையில் இருப்பவன், தப்பித் தவறியும் ஒரே கதை வேறு இதழில் பிரசுரமாகிவிடக் கூடாதே எனப் பதறியவன் காப்பி அடித்து எழுதத் துணிவேனா?” என்று அந்த நீண்ட கடிதத்தில் தன்னிலை விளக்கம் சொல்லியிருந்தேன்.

“இதை முன்பே செய்திருக்கலாம். ஆனால், காப்பி அடித்து ஒரு கதை எழுதி, அதை எங்களுக்கு அனுப்பியும் வைத்துள்ளீர்கள் என்று நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த ‘உம்’ என்னை மிகவும் நோகச் செய்துவிட்டது. உங்கள் அடுத்த கடிதம், நான் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துகொண்டு விட்டேன் என்று என்னைக் கூசச் செய்துவிட்டது. எனவேதான், இப்போது இந்தத் தன்னிலை விளக்கம்” என்று மிக விரிவான கடிதம் எழுதிப் போட்டேன்.

அதன் பிறகு, விகடனில் என் பல சிறுகதைகள் வெளியாகியுள்ளன. ஆனால், அந்தக் கோபக்கார இளைஞனே தன்னிடம் வந்து பணியாற்றுவது ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியனுக்கு இன்று வரை தெரியாது. அவருக்கு மட்டுமல்ல, இன்றைய எம்.டி., ஆசிரியர் அசோகன் உள்ளிட்ட யாருக்குமே தெரியாது!

மறைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. அதைச் சொல்வதற்கான வாய்ப்பு வரவேயில்லை. இதோ, இங்கேதான் முதன்முறையாக அதை எழுதுகிறேன்.

போட்டுக்கொடுத்துட மாட்டீங்களே?!

6 comments:

பகிர்விற்கு நன்றி.

26 உண்மையோ இல்லையோ.. 28 உண்மைதான்.

ஆனாலும் வருத்தம் தெரிவித்து ஜெயித்து விட்டீர்.

வாழ்த்துகள்.
 
இந்த அனுபவங்களையெல்லாம் தனிப் புத்தகமாகவே போடலாமே!
 
ஹா ஹா
:)))
 
விகடனோடு ஒரு லடாய் படித்தேன்; சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
ஆமாம், போட்டுக்கொடுத்துவிடமாட்
டீர்களே என்று முடிவில் குறிப்பிட்டிரு
க்கிறீர்களே, இந்த பிளாகை அசோகன் படித்திருக்கமாட்டார் என்று எப்படி அஸ்யூம் செய்கிறீர்கள்? ஒருக்கால் அவரும் படித்து, பாலசுப்ரமணியமும்
படித்திருந்தால் என்ன செய்வீர்கள்; எப்படியாயினும் சரி, உங்களின் நேர்மையான எண்ணமும், சுமார் 25,26 ஆண்டுகளுக்கு முன்னர் உங்களுள் புதைந்திருந்த இளரத்த வேகமும் உங்கள் மாசற்ற மனதை புரிந்து கொள்ள வைக்கிறது. அது சரி, நீங்கள் ப்ளாக் எழுதுவது எத்தனை பேர்களுக்குத் தெரியும்?
அன்புடன்,
சரோஜ் நாராயணசுவாமி
 
நாஞ்சில் நாடன் கதை என்ன? தங்களின் கதை என்ன? அப்புறம் தங்களின் குறிப்பிட்ட அந்தக் கதையை வேறு எந்தப் பத்திரிகையிலாவது, அல்லது தாங்கள் பணியாற்றிய பத்திரிகையிலாவது வெளியிட்டீர்களா? அறிந்துகொள்ள ஆவல்.
:-) எஸ்.சத்தியமூர்த்தி
 
* வண்ணத்துப்பூச்சியாரின் வாழ்த்துக்களுக்கு நன்றி! நான் பதிவிட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே பின்னூட்டம் இட்டுவிடுகிறீர்களே, அதற்கு டபுள் தேங்க்ஸ்!

* ம்ம்... போடுவம் போடுவம்..! அட, ஏங்க உங்களுக்கு இந்தக் கொல வெறி! ஒரு மனுசன் நல்லா இருக்குறது உங்களுக்குப் புடிக்கலையா? அது சரி, நீங்க எப்ப கவிதைப் புத்தகம் போடப்போறிங்க? அல்லது, முன்னேயே போட்டுட்டீங்களா?

* நக்கலு..? ஒரு மனுசன் தும்பப்படறதைப் பார்த்து நக்கலு? ம்... வெச்சிக்கிறேன், வெச்சிக்கிறேன்!

* சரிதான்... நீங்களே போட்டுக் கொடுத்துடுவீங்க போலிருக்குதே! நான் பிளாக் எழுதுவது என் அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது. ஒரு சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் சொல்லியிருக்கிறேன்.

* சத்தியமூர்த்தி சார்! உங்க இ-மெயில் கொடுத்தீங்கன்னா உங்களோடு தொடர்புகொள்ள எனக்கு வசதியாக இருக்குமே?