உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, June 02, 2009

சாவியில் நடந்த அந்த விபரீதம்!

1993... சாவியில் எனக்கு அந்த விபரீதம் நடந்தது அந்த வருடத்தில்தான்!

வழக்கம்போல் சாவி அலுவலகத்தில் நான், லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் மோகன் (இவர் ஓவியர் ஜெயராஜின் அக்கா மகன்), கார்ட்டூனிஸ்ட் என எல்லோரும் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக்கொண்டு இருந்தோம். அன்றைய வார இதழை முடிக்கிற தினம் அன்று. 80 பக்கம் மட்டுமே என்பதால், தனித்தனி ஃபாரங்களாக இல்லாமல் 80 பக்கத்தையும் ஒட்டுமொத்தமாகத்தான் கொண்டு போய் நடராஜா கிராஃபிக்ஸில் நெகடிவ் எடுக்கக் கொடுப்பது வழக்கம். அதன்பின், அதை வைத்து பிளேட் போட்டு, அச்சாகி மறுநாளே புத்தகம் கைக்குக் கிடைக்கும். அதாவது ஒவ்வொரு சனிக்கிழமையும் புத்தகத்தை முடித்துக் கொடுத்தால், திங்கள் கிழமை புத்தகம் ரெடியாகிவிடும்!

அன்று வேலை முடிய இரவு ஒரு மணி ஆகிவிட்டது. ஆசிரியர் சாவி வந்து அனைத்துப் பக்கங்களையும் பார்த்து ஓ.கே. செய்துவிட்டார். வழக்கமாக அதை எடுத்துப் போகும் அட்டெண்டர் ஃபிரான்சிஸ் என்பவருக்கு அன்று காய்ச்சல். எனவே, சீக்கிரமே அவரை அனுப்பிவிட்டிருந்தேன்.

நடராஜா கிராஃபிக்ஸ் எல்டாம்ஸ் ரோடு சிக்னல் அருகில் இருந்தது. நான் சைக்கிளில்தான் மாம்பலத்தில் உள்ள என் வீட்டுக்குப் போகவேண்டும். சரி, இந்த ஃபாரத்தைக் கொண்டு போய் நாமே நடராஜா கிராஃபிக்ஸில் (அது 24 மணி நேரமும் திறந்திருக்கும்.) கொடுத்துவிட்டு, அப்புறம் வீட்டுக்குப் போவோம் என்று முடிவு செய்தேன். வேறு வழி?

ஒரு தடித்த பிரவுன் கவரில், லே-அவுட் செய்யப்பட்ட 80 பக்கங்களையும், அதற்குரிய புகைப்படங்கள், லைன் டிராயிங்குகளோடு சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துப் போட்டுக்கொண்டு, அதை சைக்கிளின் கேரியரில் க்ளிப்பில் வைத்துக்கொண்டேன். க்ரிப்பாக இருக்கிறதா என்று இழுத்துப் பார்த்துச் சோதித்துக்கொண்டேன். பின்னர் வாட்ச்மேன் சித்திரையிடம் விடைபெற்றுக் கிளம்பினேன்.

மணி நடு நிசி இரண்டு. சைக்கிளை ஆழ்வார்ப்பேட்டை நோக்கிச் செலுத்தினேன். தெருக்கள் சிலோவென்றிருந்தன. அண்ணா நகரிலிருந்து ஆழ்வார்ப்பேட்டை வர, சைக்கிளில் அதிகபட்சம் அரை மணி நேரத்துக்கு மேல் ஆகாது.

நடராஜா கிராஃபிக்ஸ் வாசலில் சைக்கிளை நிறுத்தி இறங்கி, கேரியரைப் பார்த்ததும் நெஞ்சு தடக்கென்று தூக்கிப் போட்டது. பிரவுன் கவரைக் காணோம். குபீரென்று வியர்த்துவிட்டது எனக்கு.

வழியில் எங்கோ நழுவி, விழுந்துவிட்டிருக்கிறது.

பதறியபடி, திரும்ப வந்த வழியே இருட்டில், மங்கலான வெளிச்சத்தில், பிரவுன் கவர் எங்காவது விழுந்து கிடக்கிறதா என உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே மெதுவாக சைக்கிளைச் செலுத்தினேன். ஊஹூம்! எங்குமே காணோம்.

ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் ரோடு சிக்னல், பாண்டி பஜார், பனகல் பார்க், வலப்புறம் உஸ்மான் ரோடில் திரும்பி மகாலிங்கபுரம், அதைத் தாண்டி நேரே லயோலா கல்லூரி, அங்கே சப்-வேயில் இறங்கி நேரே அருண் ஹோட்டல், இடப்புறம் திரும்பிக் கொஞ்ச தூரம் சென்றால் அண்ணா வளைவு... என நான் வந்த வழியெல்லாம் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு, அந்த பிரவுன் கவரைத் தேடியபடியே சாவி அலுவலகம் வரை வந்துவிட்டேன்.

வாசலில் சித்திரை உட்கார்ந்திருந்தார். ‘என்ன சார்...’ என்றபடி எழுந்து வந்தார். ‘ஒண்ணுமில்ல சித்திரை...’ என்று மீண்டும் அதே வழியில் சைக்கிளைச் செலுத்தி, இன்னொரு நடை நடராஜா கிராஃபிக்ஸ் வரை போனேன். உள்ளமெல்லாம் வெதுக் வெதுக்கென்று அடித்துக் கொண்டது.

பின்னே, சாவி்யின் ‘வடம் பிடிக்க வாங்க’ தொடர்கதை, அதற்கான ஓவியர் கோபுலுவின் லைன் டிராயிங் படம், தவிர கதைப்படி, கலைஞர் கருணாநிதி சொற்பொழிவாற்றுவதாக அதில் ஒரு ஸீன், அதற்கு கருணாநிதியே கைப்பட எழுதிக் கொடுத்த உரையை அப்படியே ஸ்கேன் செய்து அவரது கையெழுத்தில் வெளியிடும் உத்தேசத்தோடு அந்த ஒரிஜினல் கட்டுரை, ஓவியர் கோபுலுவின் பயணக் கட்டுரைக்காக அவர் எடுத்து வந்த போட்டோக்கள், அதற்கு அவர் வரைந்து தந்திருந்த ஸ்கெட்ச்கள்... இன்னும்... இன்னும்...

இத்தனையும் போய்விட்டால், அதை எப்படி ஈடு செய்வது? சாவி சாருக்கு நான் என்ன பதில் சொல்வது?

இரவு இரண்டு மணியிலிருந்து விடியற்காலை ஐந்து மணி வரை சாவி அலுவலகத்துக்கும் நடராஜா கிராஃபிக்ஸுமாக இரண்டு மூன்று தடவை சைக்கிளில் ஷண்ட்டிங் அடித்ததுதான் மிச்சம்! அந்த பிரவுன் கவர் எங்கே விழுந்ததென்றே தெரியவில்லை. சோர்ந்து போனேன்.

சாவி சாரை எதிர்கொள்ள பயமான பயம்! எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர் முன் நிற்பது?

ஒரு முடிவுக்கு வந்தேன்.

அது என்ன முடிவு? அதைப் பின்னர் பார்ப்போம்!

அதுவரை என் நெஞ்சைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.

5 comments:

அட! பயங்கரத் த்ரில்லிங்காக இருக்குதே?
 
அன்புள்ள திரு.ரவிபிரகாஷ் அவர்களுக்கு,

வணக்கம் பல. உங்கள் 'blog' -ல் எனக்கு ஆச்சரியம் கொடுத்த ஒரு விஷயம்... உங்களுக்குப்
பிடித்த தமிழ்ப் படங்களைப் பற்றி.

பொதுவாக நான் விலை கொடுத்து தமிழ்ப் படங்களை வாங்க மாட்டேன். அவ்வப்போது வாடகைக்கு எடுத்தால் போதுமே என்றுதான் நினைப்பேன். ஆனால் 'சவாலே சமாளி', 'இரு மலர்கள்', 'எங்கிருந்தோ வந்தாள்' படங்களுடன் என்னிடம் இருக்கும் இன்னொரு சினிமா 'நீரும் நெருப்பும்'. ஒரு கால கட்டத்தில் அனைவரும் சிவாஜி ரசிகர்களாக இருக்கும்போது நான் எம்.ஜி.ஆர். ரசிகை.அதுவும் அவருடன் ஜெயலலிதா இணைந்து நடிக்கும் போது இருவருக்கும் இடையே இருந்த 'கெமிஸ்ட்ரி' மிகவும் பிடிக்கும். என்னைத் தவிர வேறு யாருக்கு ’நீரும் நெருப்பும்’ படம் பிடிக்கும்? அப்படிப் பிடித்தாலும் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கும் போதுதான் நீங்கள் ஆச்சரியம் கொடுத்தீர்கள். உங்களுக்கு அந்தப் படம் பிடிக்க என்ன காரணம் என்று தெரிவிப்பீர்களா?
அன்புடன்,
கீதா பென்னெட்.

திருமதி அனுராதா சேகர்,
நீரும் நெருப்பும் எல்லாம் ஒரு படமா? முதலில் உங்கள் புரொஃபைலிலிருந்து அதைத் தூக்குங்கள் என்றீர்களே, இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்?
- ரவிபிரகாஷ்
 
அது என்ன முடிவு?//

சீக்கிரம் பதிவிடவும். இதே போல் எனக்கும் ஒரு சம்பவம் உண்டு.
 
எப்படி சமாளிச்சீங்க? பயங்கர த்ரில்லிங்காதான் இருக்கு!
 
ரவிப்ரகாஷ் சார்,

இதன் தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...