உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, July 01, 2009

இது சரியான தேர்வு அல்ல!

த்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் கபில் சிபல். காரணம், தேர்வுகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதாம்.

தினந்தோறும் நாளேடுகளில் கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்திகள் வருவது கண்டு அதைப் படிப்பவர்களுக்கெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறதே, அப்படியானால் இனி நாளேடுகளில் அப்படியான செய்திகளைப் பிரசுரிப்பது ரத்து செய்யப்படுமா?

ப்ளஸ் டூ தேர்வுகள் இன்னும் அதிக மன அழுத்தத்தைத் தருமே, அவற்றையும் ரத்து செய்துவிடலாமே?

மதிப்பெண் முறை கூடாது; அதுவும் மன அழுத்தத்தைத் தரும். அதனால் கிரேடு முறை கொண்டு வரப்படும் என்றும் சொல்லியிருக்கிறார். ‘ஏ’ கிரேடு மாணவனைப் பார்த்து ‘டி’ கிரேடு மாணவனுக்கு மன அழுத்தம் வராதா?

தேர்வு கூடாது, மதிப்பெண் கூடாது என்றால், அப்புறம் எப்படித்தான் மாணவர்களின் கல்வித் தரத்தைச் சோதிப்பது?

விஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக்கொண்ட ஒருவன், தவளை ஒன்றின் ஒரு காலை வெட்டிவிட்டு, ‘ஜம்ப்’ என்றான். தவளை வலி தாளாமல் துடித்து எகிறியது. இன்னொரு காலையும் வெட்டிவிட்டு ‘ஜம்ப்’ என்றான். அப்பவும் துள்ளித் துடித்தது. விஞ்ஞானி, தவளையின் மூன்றாவது காலையும் வெட்டிவிட்டு, ‘ஜம்ப்’ என்றான். வலியால் துடித்த அந்தத் தவளை தன் ஒரு காலைக் கொண்டே கோணலாக எகிறியது. கடைசியாக அந்த விஞ்ஞானி தவளையின் நான்காவது காலையும் வெட்டி எறிந்துவிட்டு, ‘ஜம்ப்’ என்றான். பரிதாபத்துக்குரிய அந்த ஜீவன் கொஞ்சம்கூட அசைய முடியாமல் விழுந்து கிடந்தது. ‘ஹூர்ரே..!’ என்று குஷியாகக் கத்திய அந்த போலி விஞ்ஞானி, ‘இன்றைக்கு நான் ஓர் அறிவியல் உண்மையைக் கண்டுபிடித்துவிட்டேன். அதாவது, தவளையின் நான்கு கால்களையும் வெட்டிவிட்டால், அதற்குக் காது கேட்காது!’ என்று குறிப்பு எழுதி வைத்தானாம்.

அப்படி இருக்கிறது இவர்களின் யோசனைகள்! நமது கல்வித் திட்டத்தில் உள்ள உண்மையான கோளாறு என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமல், எதையாவது செய்கிறார்கள். கடப்பாரையை முழுங்கிவிட்டு சுக்குக் கஷாயம் குடித்தால் செரிமானமாகிவிடுமா?

நமது கல்வித் திட்டத்தில் கட்டாயம் மாற்றம் வரவேண்டும். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்குத் தேர்வுகளை ரத்து செய்வதோ, மதிப்பெண் முறையை மாற்றியமைப்பதோ சரியான வழிமுறையாகாது!

நூறாண்டுகளுக்கு மேல் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளையர்கள் தங்களுக்குக் கணக்குப்பிள்ளை உத்தியோகம் பார்க்க வேலையாட்கள் வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தி வைத்த கல்வித் திட்டம்தான், இன்று நம்மிடையே நடைமுறையில் இருக்கும் மெக்காலே கல்வித் திட்டம். மாணவனின் மனன ஆற்றலை மட்டுமே வளர்த்து, புத்தாக்கத் திறனை வளர்த்துக்கொள்ள எந்த வழிவகையும் செய்யாத இந்தக் கல்வித் திட்டத்தைதான் மாற்றியமைக்க வேண்டுமே தவிர, மதிப்பெண் முறையை அல்ல!

நான் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது, எனக்கு நேர்ந்த சொந்த அனுபவத்திலிருந்து இரண்டு உதாரணங்கள் கூறுகிறேன்.

கணிதப் பாடம். ‘இருபது பேர் ஒரு வேலையை எட்டு நாளில் செய்வார்கள் என்றால், அதே வேலையை பத்து பேர் செய்ய எத்தனை நாளாகும்? ஒருவருக்கு ஒரு நாள் கூலி ஐம்பது ரூபாய் என்றால், மொத்தக் கூலி எவ்வளவு?’ என்று கணக்கு நீளமாக இருக்கும். உடனுக்குடன் அந்தப் பெருக்கல், வகுத்தலை எல்லாம் போட்டுக்கொண்டு இருந்தால், ஒவ்வொரு முறையும் பின்னமாக வரும். இறுதி விடை மட்டும் ரவுண்டாகக் கிடைக்கும். எனவே, ஒருமுறை நான் இதுமாதிரியான கணக்கில் பெருக்கல், வகுத்தல் இடங்களை மட்டும் அப்படி அப்படியே குறித்துக்கொண்டே, வழிமுறைகளை மட்டும் போட்டுக்கொண்டே போனேன். கடைசியில் பார்த்தால், மேலே இருக்கிற 74 என்கிற எண்ணை கீழே உள்ள 37-ஆல் மிச்சமில்லாமல் வகுக்க முடியும். கீழே இருக்கிற ஓர் எண்ணையும் மேலே இருக்கிற ஓர் எண்ணையும் ஒரு பொது எண்ணால் வகுத்துப் போட முடியும். இறுதியில் சரியான விடை லட்டு போல் கிடைக்கும்.

நானே என் புத்திசாலித்தனத்தை மெச்சிக்கொண்டு, இதே பாணியில் அத்தனைக் கணக்குகளையும் மிகச் சரியாக, சடுதியில் போட்டுக்கொண்டு போய் என் கணித ஆசிரியரிடம் காட்டியதில் சக்கையாக உதை விழுந்தது. ஒழுங்குமுறையாகப் போட்டுக்கொண்டு வரச்சொல்லி இம்போசிஷன் எழுத வைத்துவிட்டார்.

அடுத்து, தமிழ்ப் பாடம். புலவர் ஒருவர் ஒரு மன்னனிடம் போய்த் தம் புலமையை நிரூபிக்க, அவன் மகிழ்ந்து அவருக்கு ஒரு யானையைப் பரிசாகக் கொடுத்துவிடுவான். அவர் அந்த விஷயத்தைத் தன் மனைவியிடம் போய்ச் சொல்வார். யானை என்று நேரடியாகச் சொல்லாமல், அதன் வெவ்வேறு பெயர்களைச் சொல்வார். அவளும் ஒவ்வொரு முறையும் அதற்கான அர்த்தத்தை வேறு விதமாகப் புரிந்துகொண்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு பதிலைச் சொல்லுவாள். உதாரணமாக, மாதங்கம் என்று அவர் யானையைச் சொல்ல, அவளோ நிறைய தங்கம் என்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டு, ‘நாம் இனி ஒரு குறைவுமில்லாமல் வாழ்வோம்’ என்பாள். கடைசியில் புலவர் ‘கைம்மா’ என்றபோதுதான், அதற்கு யானை என்பதைத் தவிர வேறு அர்த்தம் இல்லாததால், சரியாக அர்த்தப்படுத்திக்கொண்டு திடுக்கிடுவாள் என்பது அந்தப் பாடலின் பொருள்.

இம்பர்வான் எல்லைஇரா மனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன் பூசு மென்றாள்
மாதங்கம் என்றேன் யாம் வாழ்ந்தே மென்றாள்
பம்புசீர் வேழமென்றேன் தின்னு மென்றாள்
பகடென்றேன் உழுமென்றாள் பழனந்தன்னைக்
கம்பமா என்றேன் நல்களியாம் என்றாள்
கைம்மாஎன் றேன் சும்மா கலங்கினாளே!

யானையைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்துவதுதான் இந்தப் பாடலின் நோக்கம். எனக்கு அந்த விஷயம் புரியாமல், நான் நேரே எங்கள் தமிழாசிரியரிடம் போய், “ஐயா! அந்தப் புலவர் முதலில் இரண்டு மூன்று முறை மாற்றிச் சொன்னபோதே, தன் கணவர் யானையைத்தான் பரிசாக வாங்கி வந்திருக்கிறார் என்று அந்த அம்மாள் புரிந்துகொண்டு இருக்கலாமே? அல்லது, அவளுக்குத்தான் புரியவில்லை என்றால், இவராவது கைம்மா என்று சொல்லியிருந்தால் இந்தக் குழப்பமே வந்திருக்காதே?” என்று சீரியஸாகக் கேட்டேன்.

அடுத்த கணம், பளாரென்று என் கன்னத்தில் அறை விழுந்தது. “என்ன பேச்சு பேசுறே அதிகப்பிரசங்கித்தனமா? ஒழுங்கா போய் மனப்பாடம் பண்ணி எழுதுற வழியைப் பாரு! கேக்கறான் கேள்வி கோணங்கித்தனமா!” என்று சீறினார் தமிழய்யா.

இன்னொருமுறை, ‘இன்றியமையாத’, ‘இடுக்கண்’ போன்ற பத்து சிக்கலான தமிழ் வார்த்தைகளைக் கொடுத்து, ஒவ்வொன்றையும் வாக்கியத்தில் பொருத்தி எழுதிக்கொண்டு வரச் சொன்னார். அத்தனை மாணவர்களும் சமர்த்தாக பத்து வார்த்தைகளுக்குப் பத்து வாக்கியங்கள் அமைத்து எழுதிக்கொண்டு போய்ப் பாராட்டுதல்களைப் பெற்றனர்.

நான்தான் கோணங்கியாச்சே? அந்தப் பத்து தமிழ் வார்த்தைகளையும் வரிசையாக அடுத்தடுத்த வாக்கியங்களில் வருமாறு அமைத்து ஒரு பாராவாக, அதாவது முதல் வாக்கியத்துக்கும் அடுத்த வாக்கியத்துக்கும் தொடர்பு இருக்கும்படியாக எழுதி எடுத்துக்கொண்டு போய்ப் பெருமிதத்தோடு காண்பித்தேன். அதற்கும் அறை விழுந்தது. காரணம் ஐயா சொல்லிக்கொடுத்த வாக்கியங்கள் அல்ல அவை. நானே சொந்தமாகத் தயாரித்து எழுதிக்கொண்டு போனவை. அந்தப் பத்து வார்த்தைகளைச் சரியானபடி நான் வாக்கியங்களில் பொருத்தியிருக்கிறேனா இல்லையா என்று கூடச் சோதிக்கவில்லை தமிழய்யா. சிவப்பு மசியால் குறுக்கே கோடு போட்டு அடித்துவிட்டு, தான் சொல்லிக்கொடுத்ததைப் பிழையின்றி ஒவ்வொன்றையும் பத்து முறை எழுதிக்கொண்டு வந்து காண்பிக்கச் சொல்லி உத்தரவிட்டார்.

எதற்குச் சொல்கிறேன், மாணவர்களின் புத்தாக்கத் திறமைகள் நமது பள்ளிகளில் ஊக்குவிக்கப்படுவதே இல்லை. அதற்கு முதலில் வழிவகை செய்யட்டும் இந்த அரசாங்கம்! தகுந்த கல்வியாளர்களைக் கொண்டு, கல்வித் திட்டத்தை எப்படி மாற்றியமைக்கலாம் என்று விரிவான ஆய்வு நடத்தட்டும்.

புத்திசாலிகள் பெரும்பாலும் ஞாபக மறதிக்காரர்களாகவே இருப்பதைக் காணலாம். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் புத்திசாலித்தனத்துக்கு எந்தக் குறைவும் இல்லை என்பதையும் இங்கே யோசித்துப் பார்க்கவேண்டும். ஆனால், நமது கல்வி முறையோ மனனம் செய்யும் திறன் உள்ள குழந்தைகளைத்தான் புத்திசாலிகளாகவும், படைப்பாக்கத் திறன் உள்ள குழந்தைகளை மக்குகளாகவும் காட்டுகிறது.

ஆகவே, அதை மாற்றியமைத்து, அதற்கேற்ப தேர்வு முறைகளை வடிவமைத்து, மதிப்பெண் வழங்கட்டும்.

அஸ்திவாரமே ஆட்டம் கண்டிருக்கிறபோது, சுவர் விரிசல்களைச் சும்மா பூசி மெழுகுவதில் அர்த்தமில்லை.

7 comments:

மிக நல்ல கட்டுரை. வரிக்கு வரி ஒத்துக் கொள்கிறேன், Ranking vs Grading பற்றிய உங்கள் கருத்தை தவிர. Grading முறை இருந்தால் மாணவர்களை முதலாவது, இரண்டாவது என்று வரிசைப் படுத்தாமல் creativity அடிப்படையில் தர வாரியான தொகுதிக்குள் பிரித்து மதிப்பிட இயலும்.

அதாவது நீங்கள் ஆதரிக்கும் படைப்பாற்றல் சார்ந்த கல்வி முறைக்கு Ranking எதிரி என்பது என் கருத்து.

[சத்யராஜ்குமார்]
 
அருமையான அலசல்.

ஆனால் மார்க்குக்காக பெற்றோர்கள் பிள்ளைகளை படாத பாடு படுத்துவதையும் பார்க்க சகிக்கவில்லை..
 
மதிப்பெண் முறை ஒரு மாணவனைச் சோர்வில் ஆழ்த்திவிடும். தாழ்வு மனப்பான்மையில் தள்ளிவிடும். அதை நீங்கள் ஆதரிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஸாரி!
- கிருபாநந்தினி, மைசூர்.
 
அன்புள்ள சத்யா, அன்புள்ள பட்டர்ஃப்ளை,அன்புள்ள கிருபாநந்தினி... இந்தப் பதிவைப் படித்துவிட்டு, ஓய்வுபெற்ற ஆசிரியரான என் தந்தையும் உங்கள் கருத்துக்களையே பிரதிபலித்தார். மதிப்பெண் முறையில் மட்டுமல்ல, கிரேடிங் முறையிலும்கூட எனக்கு உடன்பாடு இல்லை. ஏன், இப்போதைய தேர்வு முறையிலேயே எனக்கு உடன்பாடு இல்லை.நான் சொல்ல வந்ததை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று சொல்ல மாட்டேன்.புரியும்படி நான் சரியாக எழுதவில்லை என்பதைத்தான் உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு உணர்த்துகின்றன. இது தொடர்பான எனது அடுத்த பதிவு என் எண்ணத்தை முழுமையாகத் தெளிவுபடுத்தும்.மற்றபடி, மதிப்பெண் தொடர்பான உங்கள் கருத்துக்கள்தான் என்னுடைய கருத்துக்களும்!
 
Grading ponra visyangalai thaandi aasiriyargalukku ulaviyil reethiyinaa payirchi avasiyum..Apoodhudhan kulandhaigalin Kelvigalukku kobathai bathilakka maataargal...
UM.Krish
 
நல்ல கட்டுரை. கல்விமுறையில் நல்ல மாற்றங்கள் மிக அவசியம் அவசரமும் கூட.
 
* ஆசிரியர்களுக்கு உளவியல்ரீதியாகப் பயிற்சி அவசியம் என்று யு.எம். சொன்னதை ஒப்புக்கொள்கிறேன்.
* மங்களூர் சிவா, பின்னூட்டத்திற்கு நன்றி!