உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, June 25, 2009

முப்பது ஆண்டு கால நண்பர்!

நான் பத்திரிகைத் துறைக்கு வர முக்கியக் காரணமாக இருந்தவர் நண்பர் மார்க்கபந்து அவர்கள். 30 வருடங்களுக்கு முன், விகடனில் நான் எழுதிய முதல் சிறுகதையைப் பாராட்டி ஒரு வாசகராக எனக்குக் கடிதம் எழுதியிருந்தார் அவர். அன்றிலிருந்து இன்று வரை மாறாத அன்புடன் இருந்து வருகிறார்.

அவரின் தந்தையார் மகரம் அவர்கள் ஒரு பழம்பெரும் எழுத்தாளர். மகரம் என்பது புனைபெயர். இயற்பெயர் கே.ஆர்.கல்யாணராமன். 1950-களிலேயே ஆனந்த விகடனில் ஏராளமான நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஏஜிஎஸ் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகும் எழுத்துத் துறையில் முழு மூச்சாக இயங்கிக்கொண்டு இருந்தார். ‘ரைட்டர்ஸ் கில்டி’ல் உறுப்பினராக இருந்து அடிக்கடி டெல்லி சென்று வருவார். பிரபல எழுத்தாளர்களிடம் சிறுகதைகள் கேட்டு வாங்கித் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டார். 80 வயது வரையில், தான் மறைவதற்கு முந்தின நாள் வரையில்கூட மலேசியாவிலிருந்து வெளியாகும் தமிழ் தினசரி ஒன்றுக்குக் கட்டுரைகள் எழுதி அனுப்பிக்கொண்டு இருந்திருக்கிறார்.

அவரின் மகன் மார்க்கபந்து தலைமைச் செயலகத்தில் செக்‌ஷன் ஆபீசராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

முப்பது வருடங்களுக்கு முன், நான் சென்னை வந்திருந்தபோது, அசோக் பில்லரிலிருந்து வடபழனிக்கு பாத யாத்திரையாகச் சென்று, பின் மாம்பலம் வந்து, என் அம்மாவின் சித்தி வீட்டில் தங்கியிருந்தேனே, அந்தச் சமயத்தில், மார்க்கபந்து அவர்களின் பாராட்டுக் கடிதத்தையும் கையோடு எடுத்து வந்திருந்தேன். அதில் இருந்த அவரின் முகவரியை வைத்து, பொடிநடையாக அவரது வீட்டைத் தேடிக்கொண்டு போனேன்.

கிராமத்து எளிய ஓட்டு வீட்டில் வசித்திருந்த எனக்கு அவரது வீடு பெரிய பங்களாவாகத் தெரிந்தது. உள்ளே சென்று அறிமுகப்படுத்திக்கொள்ளத் தயங்கி, வாசலில் காம்பௌண்டு சுவரில் மகரம், மார்க்கபந்து இருவரின் பெயர்களும் பொறித்திருந்ததைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டேன்.

மறுநாள், வெளியே போய்விட்டு வீடு (சித்தி வீட்டுக்குதான்) திரும்பியதும், “டேய்... உன்னைத் தேடி ஒருத்தர் வந்திருக்கார்டா! உனக்காக ஒரு மணி நேரமா வெயிட் பண்ணிட்டிருக்கார்” என்று வாசலிலேயே வரவேற்றார் சித்தி. உள்ளே நுழைந்தேன். “ஹலோ ரவிபிரகாஷ்!” என்று ரொம்ப நாள் பழகியவர் மாதிரி, நாற்காலியில் அமர்ந்திருந்தவர் எழுந்து வந்து என் கையைப் பிடித்துக் குலுக்கினார். நான் குழப்பமாக அவரைப் பார்க்க, “என்ன முழிக்கிறே? வா, நம்பாத்துலதான் இன்னிக்கு உனக்குச் சாப்பாடு!” என்று சுவாதீனமாக என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, என் சித்தியிடம் “வரோம் மாமி” என்று விடைபெற்றார்.

எனக்கு அவர் யாரென்றே அப்போதும் புரியவில்லை. “என்ன முழிக்கிறே? மார்க்கபந்து வீட்டில் மார்க்கபந்து! இப்பவாவது புரியறதா?” என்றார். அம்மாவின் சித்தி கணவர் பெயரும் மார்க்கபந்துதான்.

சட்டென்று புரிந்தது. எனக்குப் பாராட்டுக் கடிதம் எழுதி, நான் நேற்றுப் போய்ப் பார்த்துவிட்டு வாசலோடு திரும்பிவிட்ட, அந்த மார்க்கபந்துதான் இவர்.

“அடடே! நீங்களா! எப்படி நான் இங்கே இருக்கேன்னு கண்டுபிடிச்சு வந்தீங்க?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். காரணம், சென்னை வரப்போவதாக அவருக்குக் கடிதம் எதுவும் நான் எழுதியிருக்கவில்லை. வந்த பின்பும், அவரைச் சந்திப்பதற்காகப் போனேனே தவிர, கூச்சப்பட்டுக்கொண்டு சந்திக்காமலேயே திரும்பிவிட்டேன். மற்றபடி நான் இங்கிருக்கிற விஷயம் அவருக்குத் தெரிய வாய்ப்பே இல்லை.

“நீ சொல்லாட்டா என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சியா?” என்றாரே தவிர, எப்படி நான் இங்கிருப்பது தெரிந்து வந்தார்; அதுவும் நான் இங்கே வந்த மறுநாளே என்ற என் கேள்விக்கு அவர் கடைசி வரை பதில் சொல்லவில்லை.

அவரோடு அவரின் பங்களாவுக்குச் சென்றேன். பிரமாதமான விருந்து. ராஜ உபசாரம். ஏதோ பெரிய ஜெயகாந்தன், சுஜாதா இவர்களைக் கவனிப்பது போல என்னை அவர் தம் வீட்டாரிடம் பெருமைப்படுத்திப் பேசப் பேச, கூச்சத்தில் நெளிந்து குழைந்து, திக்குமுக்காடிப் போய்விட்டேன் நான்.

அதன்பின், சென்னையிலிருந்து ஊர் திரும்பிய நான் விழுப்புரத்தில் ஒரு சின்ன வேலை, பாண்டிச்சேரியில் கொஞ்ச நாள், எங்கள் கிராமத்தில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் என்றெல்லாம் ஒரு ரவுண்டு வந்து, பின்னர் ‘இங்கே இருந்தால் வேலைக்காகாது; மெட்ராஸ் போய்விடலாம்’ என்று முடிவெடுத்து, மார்க்கபந்து இருக்கும் தைரியத்தில் 1985-ல் சென்னைக்கு வந்து செட்டிலாகிவிட்டேன்.

ஆம்ப்ரோ பிஸ்கட் கம்பெனியில் எனக்கு டெப்போ இன்சார்ஜ் வேலை வாங்கித் தந்தார் மார்க்கபந்து. என்றாலும், பத்திரிகை வேலையில்தான் எனக்கு விருப்பம் என்பதை, அவரைச் சந்திக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பேன். அவரும் எனக்காகத் தீவிர முயற்சி செய்துகொண்டு இருந்தார்.

ஒருநாள் என்னை அழைத்துக்கொண்டு ‘பால்யூ’ வீட்டுக்குப் போனார் மார்க்கபந்து. பால்யூ வீடு அப்போது கே.கே.நகரில் இருந்தது. பால்யூவிடம் என்னை அறிமுகப்படுத்தி, குமுதம் பத்திரிகையில் என்னைச் சேர்த்துவிட முடியுமா என்று அவரை ரொம்பவே அரித்தெடுத்தார். அவரும் ‘பார்க்கிறேன். பயோடேட்டா கொடுங்கள்’ என்று என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டார்.

ஆம்ப்ரோ பிஸ்கட் கம்பெனி வேலைக்கு நான் வேண்டாவெறுப்பாகப் போய்க் கொண்டு இருந்தேன். இடையில் ஒருநாள், எழுத்தாளர் புஷ்பாதங்கதுரையிடம் இருந்து, தன்னை உடனே வந்து பார்க்கச் சொல்லி எனக்கு ஒரு கடிதம் வந்தது. அப்போதே போனேன். (அவரிடமும் என்னைப் பற்றிச் சொல்லி, பத்திரிகையில் ஏதேனும் வாய்ப்பு இருந்தால் எனக்கு வாங்கித் தரும்படி கேட்டுக்கொண்டு இருந்தார் மார்க்கபந்து.) அவர் உடனே சாவி சாரைப் போய்ப் பார்க்கச் சொன்னது, நான் சாவியில் சேர்ந்தது எல்லாம் தெரிந்த கதைதான்.

பின்பொரு நாள், பால்யூவைச் சந்தித்தபோது அவர் சொன்னார்: “நீ ஏன் அவசரப்பட்டே? குமுதம் மாதிரி பெரிய பத்திரிகையிலே சேர்றதை விட்டுட்டு சாவி மாதிரி சின்ன பத்திரிகையிலே சேர்ந்திருக்கே. குமுதம் எத்தனை லட்சம் காபி போகுது, சாவி எத்தனை ஆயிரம் போகுது... தெரிய வேண்டாமா உனக்கு? பயோடேட்டா கொடுத்தே இல்லே, நான் முடிவு சொல்றதுக்குள்ளே உனக்கு என்ன அவசரம்?” என்று கோபித்துக்கொண்டார்.

ஆனால், எந்த இழப்பும் நேர்ந்ததாக நான் நினைக்கவில்லை; வருந்தவில்லை. சாவியிடம் சேர்ந்தது குறித்து இன்றளவும் முழுச் சந்தோஷத்துடன்தான் இருக்கிறேன்.

பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் பால்யூவைச் சந்தித்தபோது, “உனக்கு வாங்கித் தருவதாக இருந்த வேலையை வேற ஒருத்தருக்கு நான் வாங்கிக் கொடுத்துட்டேன். தப்பு; ஒருத்தர் இல்லே, ரெண்டு பேருக்கு குமுதத்துல வேலை வாங்கிக் கொடுத்திருக்கேன். ஒரு ரவிபிரகாஷை சேர்க்கிறதுக்குப் பதிலா அதே பேர்ல ரெண்டு பேரைச் சேர்த்திருக்கேன்” என்றார்.

எனக்குப் புரியவில்லை. பிறகு அவர் விளக்கினார். அவர் குமுதத்தில் சேர்த்த இருவர் ப்ரியா கல்யாணராமன் மற்றும் பிரசன்னா. பிரசன்னாவின் இயற்பெயர் ரவி; ப்ரியா கல்யாணராமனின் இயற்பெயர் பிரகாஷ்.

ஆக, என் பத்திரிகையுலக வாழ்வுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் அருமை நண்பர் மார்க்கபந்து அவர்கள். நேற்று தன் வீட்டு விசேஷம் ஒன்றுக்காக என் அப்பா, அம்மா இருவரையும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார் அவர். அப்போது என் அப்பாவிடம், 30 வருடங்களுக்கு முன் அவருடைய பாராட்டுக் கடிதத்துக்கு நன்றி தெரிவித்து நான் போட்டிருந்த கடிதத்தை எடுத்துக் காண்பித்து, பிரமிப்பில் என் அப்பாவைத் திக்குமுக்காடச் செய்திருக்கிறார்.

தீபாவளி சமயம் ஆதலால், ஒரு வெள்ளைத்தாளின் ஒரு பக்கத்தில் அழகான பெண் குழந்தைப் படம் ஒன்றை நானே கலர் பென்சிலால் வரைந்து, மறுபக்கத்தில் தீபாவளி வாழ்த்து என்று தலைப்பிட்டு, கவிதை ஒன்றை எழுதி (அட! நான் கவிதைகூட எழுதியிருக்கிறேனா! எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால், நான் எழுதிய முதலும் கடைசியுமான கவிதை அதுவாகத்தான் இருக்கும்.) அனுப்பியிருக்கிறேன்.

அந்தக் கவிதை:

ச்சரியம் ஆனந்தம் அதிசயம் இன்றெனக்கு
அஞ்சல் மார்க்கமாக வந்த அருமையான பந்தமிது
அன்புடன் பாராட்டி ஆர்வமுடன் எழுதியதை
பன்முறையும் படித்துவிட்டேன் பரவசமாகிவிட்டேன்
பேர் இல்லாக் கதையினை பாராட்டியே புதுமையென்று
படைப்புகளைக் குவித்திடவே பரிசளித்தீர் ஊக்கந்தனை
என்நன்றி உங்களுக்கு என்றென்றும் நிலைத்திருக்கும்
எந்நாளும் என் நெஞ்சில் உம் நினைவு குடியிருக்கும்
தீமை ஒழிந்திடவும் தர்மம் தழைத்திடவும்
தீபஒளித் திருநாளில் தெய்வமருள் தான்பெற்று
பந்துக்கள் நண்பர்கள் பாசமுள்ள அனைவருடன்
பல்லாண்டு வாழ்ந்திடவே பணிவுடனே வாழ்த்துகின்றேன்!

10 comments:

பெயர்கள் உங்களோடும் வாழ்க்கையோடும் நிறைய விளையாடியிருக்கிறது.

கவிதை அருமை.

பகிர்விற்கு நன்றி.
 
வண்ணத்துப்பூச்சியாரே! அது கவிதைதான் என்று ஒப்புக்கொண்டீர்களே, அதற்கு என் நன்றி!
 
அது கவிதையாய் இல்லாவிட்டால் ஒரு பொக்கிஷமாக இத்தனை வருடம் வைத்திருந்த உங்கள் நண்பரை எப்படி பாராட்டுவது..??

நட்புக்கு இதை விட ஆதாரமுண்டோ..??
 
உங்களுக்குள் இன்னும் அந்த கவுஜர் தூங்கிகிட்டிருக்கார் தட்டி எழுப்பி ப்ளாக்ல எழுதி எல்லாரையும் கலங்கடிங்க
:)))))))))



நல்ல நட்பு. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
 
சந்தேகமென்ன? அது கவிதைதான். உள்ளத்தின் உள்ளிருந்து வரும் உண்மைக் கவிதை.
 
* மங்களம் சிவாஜி, என்னெ வெச்சுக் காமெடி கீமெடி பண்ணலியே! நல்ல நட்பு, மேன்மேலும் வளரணும்னு நான் ஆசைப்படறது மார்க்கபந்து நட்பு மட்டுமில்லே, மங்களூர் சிவா நட்பும்தான்!

* லதானந்த்ஜி! ஒரு கவிஞரே என்னுடையதைக் கவிதைன்னு ஒப்புக்கொண்ட பிறகு கேக்கணுமா! றெக்கையில்லாமலே பறந்துட்டிருக்கேன்.
 
உங்கள் நண்பர் நீங்க இருக்குமிடத்தை பின்னே எப்படித்தான் கண்டுபிடிச்சார்? தெரிஞ்சுதா தெரியலையா? அதைத் தெரிஞ்சுக்காட்டா என் மண்டை வெடிச்சுடும் போலிருக்கே!
சத்யநாராயணன் :-0
 
@ரவிஜி

சும்மா பின்னூட்ட சுவைக்காக சொன்னது!

:)
 
சத்யா! திரு.மார்க்கபந்து சொல்லலைன்னாலும், அவர் எப்படி என் இருப்பிடத்தைக் கண்டுபிடிச்சார்ங்கிற விஷயம் அடுத்த வாரத்துல தானா வெளிச்சத்துக்கு வந்துடுச்சு. அதையும் கண்டிப்பா எழுதறேன். உங்க ஆர்வத்துக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!
 
ஞாபகம் இருக்கோ இல்லியோ..நீங்க எழுதின ஒரு கதைய பாரட்டி நான் சத்தீஷ் அண்ணாவுக்கு கடிதம் எழுதினது