Saturday, June 27, 2009
நண்பரல்ல... உறவினர்!
நான் மாம்பலம் வந்த மறுநாளே நண்பர் மார்க்கபந்து எப்படி நான் இருக்குமிடம் தேடி வந்தார் என்பது எனக்குப் பேராச்சரியமாக இருந்தது. அவர் அதைத் தன் வாயால் கடைசி வரை சொல்லவே இல்லை. என்றாலும், அந்தக் குட்டு தன்னால் அந்த வாரமே உடைந்தது.
நான் முந்தின தினம்தான் மாம்பலத்துக்கு வந்திருந்தேனே தவிர, பதினைந்து நாட்களுக்கு முன்பேயே சென்னை வந்து, மண்ணடியில் உள்ள என் அத்தை வீட்டில் தங்கியிருந்தேன். முதல் நாள் மாம்பலம் சித்தி (என் அம்மாவின் சித்தி) வீட்டுக்கு வந்திருந்த என் அத்திம்பேர் (அத்தையின் கணவர்) நான் வந்திருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார். ‘நாளைக்கு அவனை இங்கே வரச் சொல்லுங்களேன்’ என்று சித்தி அவரிடம் சொல்லியனுப்பியதன்பேரில்தான் மறுநாள் நான் புறப்பட்டு மாம்பலம் வந்தேன்.
முதல் நாள் அத்திம்பேர் மாம்பலம் வந்து, சித்தியிடம் நான் வந்திருக்கும் தகவலைச் சொல்லியபோது, அங்கே இருந்தவர் ரிசர்வ் பேங்க் அதிகாரியாக இருந்த சுப்பிரமணியன். அவரும் சுற்றி வளைத்து எனக்கு உறவினர்தான். அதாவது சித்தியின் தம்பிக்கு மச்சான்.
இது இப்படியிருக்க, ஜெயரதன் என்று ஓர் எழுத்தாளரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆர்ப்பாட்டமில்லாத எளிய நடையில் இதமான சமூகக் கதைகளாக எழுதுவார். கல்கியில் இவரின் சிறுகதைகள் நிறைய வந்திருக்கின்றன. நாவல்களும், தொடர்கதைகளும்கூட எழுதியிருக்கிறார்.
அவரின் ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு, அதைப் பாராட்டி மகிழும்பொருட்டு அவரைத் தேடிச் சென்றிருக்கிறார் நண்பர் மார்க்கபந்து. பிறரை வஞ்சனை இல்லாமல் பாராட்டுவதிலும், ஊக்குவிப்பதிலும், தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதிலும் மார்க்கபந்து போல இன்னொருவரை நான் காணவில்லை.
ஜெயரதனும் ஒரு ரிசர்வ் பேங்க் அதிகாரியாகப் பணிபுரிந்தவர்தான். என் உறவினர் சுப்பிரமணியனுக்குப் பக்கத்து ஸீட்தான்!
ஜெயரதனைக் காண்பதற்காக மார்க்கபந்து ரிசர்வ் பேங்க் சென்றிருந்த அன்றுதான் நான் இங்கே மாம்பலத்துக்கு வந்து, மார்க்கபந்து வீட்டை மட்டும் வெளியிலேயே பார்த்துவிட்டுச் சித்தி வீட்டுக்குப் போய்விட்டேன்.
அங்கே ஜெயரதனின் சிறுகதையைப் புகழ்ந்து பாராட்டிய மார்க்கபந்து, அவரிடம் என் ‘விளக்கில் விழுந்த விட்டில்’ சிறுகதை வெளியாகியிருந்த ஆனந்தவிகடன் இதழைக் கொடுத்து, “படிச்சுப் பாருங்க ஜெயரதன்! யாரோ ரவிபிரகாஷ்னு புது எழுத்தாளர் போலிருக்கு. ரொம்ப அருமையா எழுதியிருக்காரு!” என்று சொல்ல, அருகில் இருந்த சுப்பிரமணியன் உடனே, “அந்த ரவிபிரகாஷ் என்னுடைய உறவுக்காரப் பையன்தான். இன்னிக்கு அவன் அநேகமா மாம்பலத்துலதான் இருப்பான்” என்று ஆர்வ மிகுதியில் சொல்லியிருக்கிறார். உடனே அவரிடம் மாம்பலம் சித்தி வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டுவிட்டார் மார்க்கபந்து. சரியாக மறுநாள் தேடிக்கொண்டு வந்துவிட்டார்.
என்னைச் சந்தித்த அன்றிலிருந்து, தொடர்ந்து பத்துப் பதினைந்து நாள்கள் என்னை அழைத்துக்கொண்டு் பால்யூ வீடு, புஷ்பாதங்கதுரை வீடு, கவிஞர் மெய்யப்பன் வீடு என ஒவ்வோர் இடமாக அலைந்தார் நண்பர் மார்க்கபந்து. எல்லோரிடமும் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அம்பத்தூரில் இருந்தார் எழுத்தாள மாமுனி லா.ச.ரா. அவரிடமும் என்னை அழைத்துப்போய் அறிமுகப்படுத்தினார். அவர் வீட்டில் லா.ச.ராவே தன் கையால் எங்களுக்குத் தோசை வார்த்துப்போட, சாப்பிட்டுக் காபி குடித்துவிட்டுக் கிளம்பினோம்.
அப்படியான ஒரு நேரத்தில்தான், எழுத்தாளர் ஜெயரதனிடம் என்னை அறிமுகப்படுத்தி வைக்கும்பொருட்டு ரிசர்வ் பேங்குக்கு அழைத்துச் சென்றார் மார்க்கபந்து. ஜெயரதனிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதே அருகில் இருந்த என் உறவினர் சுப்பிரமணியன், முந்தின வாரம் மார்க்கபந்து வந்ததையும், நான் வந்திருப்பதை அவரிடம் தான் சொல்லி மாம்பலம் முகவரி தந்ததையும் விலாவாரியாகச் சொல்லிவிட்டார். ‘சொல்லாதீங்க!’ என்று மார்க்கபந்து என்னதான் கண்ணைக் காட்டி சமிக்ஞை செய்தும் சுப்பிரமணியன் புரிந்துகொள்ளாமல் எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டார்.
அந்த நட்பு இன்று வரை இறுக்கமாகத் தொடர்கிறது. எனக்காகப் பல இடங்களில் பெண் பார்த்துக்கொண்டு இருந்தார் மார்க்கபந்துவின் தாயார். இந்திரா காலனியில் (அசோக் நகர் உதயம் தியேட்டர் பின்புறம்) குடியிருந்த என் மனைவியின் அக்கா வீட்டில் நடந்த பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்கு என் அப்பா, அம்மாவோடு மார்க்கபந்துவும் அவரது தாயாரும் பெரு விருப்பத்தோடு கூட வந்ததோடு மட்டுமின்றி, பெண் வீட்டாரிடம் என் சார்பாகப் பேசி திருமணத்தை நிச்சயித்ததுகூட அவர்கள்தான்.
ஆக, என்னுடைய இந்தப் பத்திரிகை வேலை, திருமண வாழ்க்கை எல்லாமே மார்க்கபந்து தொடங்கி வைத்தவை.
அவர் எனக்கு இப்போது வெறும் நண்பராக மட்டும் தெரியவில்லை; ஓர் உறவினராகவே தோன்றுகிறார்!
Posted by
ungalrasigan.blogspot.com
at
Saturday, June 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உறவினர்களை விட பல சமயங்களில் நண்பர்கள் மேலானவர்கள்.
* பட்டர்ஃப்ளை, நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை! அதிக நெருக்கத்தைக் காண்பிப்பதற்காகவே அவர் எனக்கு உறவினராகத் தெரிந்தார் என்று குறிப்பிட்டேன்.
Post a Comment