உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, June 04, 2009

அன்னையிடம் ஒரு விசித்திர வேண்டுதல்!

தொடர்ச்சி...
சாவியில் நடந்த அந்த விபரீதம்! - II

அடுத்த வார சாவி இதழ் வெளி வராது என்கிற நிலைமை. பொறுப்பாசிரியராகிய நான் பொறுப்பற்ற ஆசிரியராக நடந்துகொண்டதால் வந்த வினை! எப்படியும் என் முகத்தில் காரி உமிழ்ந்து, டிஸ்மிஸ் செய்யப்போகிறார் சாவி! வேறென்ன, நான் செய்த காரியத்துக்குக் கொஞ்சவா செய்வார்?

அதனால் ஒரு முடிவுக்கு வந்தேன். நேரே வீட்டுக்குப் போனேன். மனைவியிடம் விஷயத்தைச் சொன்னேன். பின்பு, ஒரு வெள்ளைத் தாளை எடுத்து மளமளவென்று எழுத ஆரம்பித்து விட்டேன்.

‘மதிப்பு மிக்க ஐயா! உங்கள் முன் நிற்கக் கூடத் தகுதியில்லாதபடிக்கு நான் ஒரு பெரிய விபரீதமான காரியத்தைச் செய்துவிட்டேன். அதை எப்படி எழுதுவது என்று கூடத் தெரியவில்லை. கை நடுங்குகிறது. சாவி இதழ் முடித்த ஃபாரம் வைத்திருந்த கவரை வழியில் எங்கோ தொலைத்துவிட்டேன். இதற்காக என்னை மன்னிக்கும்படி நான் உங்களிடம் கேட்பதற்கும் யோக்கியதை அற்றவன். எனவே, நானாகவே வேலையிலிருந்து விலகிக் கொள்கிறேன். தங்களுக்கு இந்த விஷயத்தைத் தெரிவிப்பது கடமை என்பதால், இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளேன். இப்படிக்கு, பொறுப்பற்ற ஆசிரியன், ரவிபிரகாஷ்.’

இதை ஒரு என்வலப் கவரில் போட்டு ஒட்டி, மாம்பலத்திலேயே அடுத்த தெருவில் குடியிருந்த என் தங்கை கணவரிடம் ஓடினேன். காலை மணி 7. விஷயத்தைச் சொன்னதும், ‘ஐயையோ! என்னப்பா... ரவி!’ என்று அலறியே விட்டார். என்னைவிட அவருக்குக் கை கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. வெறும் வார்த்தைக்காகச் சொல்லவில்லை; அவரின் கை கால்கள் உதறுவதைக் கண்கூடாகப் பார்க்கவே முடிந்தது.

ஜே.பாலசுப்பிரமணியன் என்கிற அவரும் அன்று சாவி வார இதழில், சர்க்குலேஷன் பிரிவில் வேலை செய்துகொண்டு இருந்தார். இப்போது கல்கியில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்.

அவரிடம் என் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து, “இதை உடனே கொண்டு போய் ஆசிரியர் சாவியிடம் கொடுத்து விடுங்கள்!” என்றேன்.

பின்னர் வீடு திரும்பி, மேஜையில் மகாஸ்ரீ அன்னை படத்தின் முன்பு, செய்வதறியாமல், வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்.

‘வேலை போனது பெரிய துக்கமில்லை. வேறு ஏதாவது தேடிக் கொள்ளலாம். ஆனால், இத்தனை அலட்சியமாக ஒரு தவறை, திருத்தவே முடியாத ஒரு தவறைச் செய்துவிட்டேனே’ என்கிற என் மீதே எழுந்த கோபம்தான் என்னைக் கல் மாதிரி உறையச் செய்திருந்தது.

அப்போது அன்னையிடம் நான் ஓர் விசித்திரமான, சிக்கலான வேண்டுதலை முன் வைத்தேன். ‘அன்னையே! ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டேன். ஆசிரியர் சாவி என்னை மன்னிப்பதாகவே இருந்தாலும், அவரிடம் என்னால் இனி எந்த முகத்தோடு தொடர்ந்து வேலை செய்ய முடியும்? அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது? எனவே, அவரே மன்னித்து என்னைச் சேர்த்துக் கொள்வதாக இருந்தாலும், நான் இனி அவரிடத்தில் வேலைக்குச் சேருவதாக இல்லை. ஆனால், பத்திரிகை உலக ஜாம்பவானான அவரிடம் தொடர்ந்து வேலை செய்ய இயலாமல் போயிற்றே என்கிற வேதனை என்னை அழுத்துகிறது. என்னைத் தொடர்ந்து அவரிடத்தில் பணிபுரிய வைப்பது உங்கள் பொறுப்பு!’

ராஜினாமா கடிதத்தைக் கொண்டு சென்ற ஜே.பாலசுப்பிரமணியன் திரும்பி வரும் வரையில் நான் அன்னை படத்தின் முன்பு பிரமை பிடித்தது போல் உட்கார்ந்திருந்தேன். ஒன்பதரை மணி சுமாருக்கு அவர் திரும்பி வந்தார். நடந்ததை அவர் விவரித்தார்...

காலை ஏழரை மணிக்கு அவர் சாவி அலுவலகம் போயிருக்கிறார். வழக்கம்போல் வாட்ச்மேன் சித்திரை வெளியே இருந்திருக்கிறார். அவரிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் ஜே.பி. ‘ஐயையோ! சாவி ஐயாவுக்குத் தெரிஞ்சா கொன்னுடுவாருங்களே!’ என்று அவரும் பதறியிருக்கிறார்.

பின்னர், மெதுவாக பயந்துகொண்டே மாடிக்குச் சென்றிருக்கிறார் ஜே.பி. திருமதி சாவி வந்து, “என்னப்பா ஜே.பி., ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா எங்கே இவ்வளவு தூரம்?” என்று யதார்த்தமாகக் கேட்டிருக்கிறார். “அது... வந்தும்மா... ரவி...” - ஜே.பி-க்குத் தொண்டையை அடைத்தது. வார்த்தை வெளிவரவில்லை.

“ரவி ராத்திரி ஒரு மணிக்கு வேலை முடிச்சுட்டு வீட்டுக்குப் போயிட்டானே!”

“அதில்லைம்மா... வந்து...”

“என்னப்பா, சொல்லு!”

“சாவி ஃபாரம் முடிச்சாங்க இல்லையா ராத்திரி, அதை ரவிதான் நடராஜா கிராஃபிக்ஸுக்கு எடுத்துட்டுப் போயிருக்கான். போற வழியில... அந்த கவர் எங்கேயோ விழுந்துடுச்சாம்..!”

ஜே.பி. முடிக்கு முன்பு அலறிவிட்டார் திருமதி சாவி. “என்னப்பா சொல்றே! இதை அவர் கிட்டே எப்படிச் சொல்றது? ஐயோ, எனக்குப் பயமா இருக்கே? நல்லாத் தேடிப் பார்க்கச் சொல்லு!” மாமிக்கு பீ.பி-யே வந்துவிடும் போல இருந்தது.

“இல்லை மாமி, விடிய விடிய தேடியும் கிடைக்காமதான் ராஜினாமா லெட்டர் எழுதிக் கொடுத்தனுப்பியிருக்கான் என் கிட்டே...”

“இரு, அவரை எழுப்பிக் கூட்டிட்டு வரேன். நீயே அவர் கிட்ட சொல்லிடு. எனக்குப் பயமா இருக்கு. நான் சொல்ல மாட்டேன்” என்று படபடத்த திருமதி சாவி, ஆசிரியரை எழுப்ப உள்ளே சென்றார்.

கை கால்கள் நடுநடுங்க, நெஞ்சு தடதடக்கக் காத்திருந்தார் ஜே.பி.

“இந்தாங்கோ! பாலா வந்திருக்கான். உங்க கிட்டே ஏதோ சொல்லணுமாம்!” என்று உள்ளே மாமி, ஆசிரியரை எழுப்புவது காதில் விழுந்தது.

தொடர்ச்சி அடுத்த பதிவில்...

7 comments:

மீண்டும் சஸ்பென்ஸா..??

என்ன நடந்தது..?? இனியும் சஸ்பென்ஸ் வேண்டாம்...
 
அன்புள்ள ரவிபிரகாஷ்,

வணக்கம்.

உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன். துப்பறியும் கதை போல ஒரு டெம்போ.வாழ்த்துக்கள்

நன்றி
அன்புடன்
மாலன்
 
அருமையாக இருக்கு!
பாராட்டிப் பாராடி எனக்கே என்னமோ போல இருக்குது!
 
enga ippadith thadak thadakkunnu niRuththareenga? nenjsu thookkith thookkip poduthillee? appuram enna aachchu? seekkiram sollungka.

:( K.R.Karthi
 
வண்ணத்துப்பூச்சி படபடத்தால் அழகுதான்! வண்ணத்துப்பூச்சியாரும்! தொடர்ச்சியை இன்றே பதிவிடுகிறேன்.ஆர்வத்துக்கு நன்றி!

’துப்பறியும் கதை போல ஒரு டெம்போ’ என்று சொல்லிவிட்டீர்களே மாலன் சார்! வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி! வேறென்ன சொல்ல?

பாராட்டிப் பாராட்டி என்னமோ போல் இருக்குன்னு சொல்லித் திட்ட ஆரம்பிச்சுடுவீங்களோன்னு பயமா இருக்கு லதானந்த் சார்! கையில துப்பாக்கி கிப்பாக்கி எதுவும் இல்லீங்களே?

கார்த்திக், என்னமோ எழுதியிருக்கீங்க. பாராட்டத்தான் செய்யறீங்கன்னு ரொம்ப கஷ்டப்பட்டுப் புரிஞ்சுக்கிட்டேன். யூனிகோட் தமிழ்ல அடிச்சீங்கன்னா மத்தவங்களும் படிக்க சுலபமா இருக்குமே? அன்புக்கு நன்றி!
 
பதிவிற்கு நன்றி ரவி சார்.

விரிவான பின்னூட்டமும் இட்டு விட்டேன்.

தொடர்ந்து எழுதுங்கள்.
 
செம விறுவிறு. அந்தக்கால கட்ட பத்திரிகை ஆபீசின் வார இறுதி கிளைமாக்ஸ் காட்சி கண் முன் விரிகிறது. கே.பி.ஜனா.