உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, June 11, 2009

லக்ஷ்மியின் கதை

ன்று காலையில் நான் பஸ்ஸில் அலுவலகம் சென்றுகொண்டிருந்தபோது, நான் சென்ற பஸ் ஒரு பசு மாட்டின் மேல் லேசாக மோதிவிட்டது. ஆனால், அந்தப் பசுவின் மேல் அக்கறை கொண்டு யாரும் விசாரணைக்கு வரவில்லை. காரணம், அது கைவிடப்பட்ட, நிராதரவான அபலைப் பசு. அது பால் கறந்துகொண்டு இருந்தவரைக்கும் அதன் உரிமையாளர்களுக்குத் தேவைப்பட்டிருக்கும். அவர்களும் அதைக் கடமையும் கருத்தும் கரிசனமுமாகப் பார்த்துக்கொண்டு இருந்திருப்பார்கள். பால் வற்றிப் போனதும், வயதான பெற்றோர் மாதிரி அது அவர்களுக்கு அநாவசிய சுமையாகிவிட்டது. சம்பந்தப்பட்டவர்கள் அதைக் கொண்டு போய் அநாதை இல்லம், முதியோர் இல்லம் என்று எங்கேயும் சேர்க்காததால், பாவம் அது பாட்டுக்கு தெருவில் கிடக்கிற சக்கைகள், சினிமா போஸ்டர் என மேய்ந்து தன் ஜீவிதத்தைக் கழித்து வருகிறது.

நான் ஏழாம் வகுப்பு வரையிலும் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். எங்கள் தாத்தாவுக்கு ஏழெட்டுப் பசுக்கள் சொந்தமாக இருந்தன. எனக்கு நினைவு தெரிந்து லக்ஷ்மி என்ற பெயருள்ள பசு அதன் கன்றோடு எங்கள் தாத்தா வீட்டில் இருந்தது. அதற்குத் தீனி போடாமல் வீட்டில் யாரும் சாப்பிடக்கூடாது என்று ஓர் எழுதப்படாத உத்தரவே இருந்தது. தாத்தா வெளியே போய்விட்டு வரும்போது வாசலிலேயே கை கால் கழுவிக்கொண்டு முதல் வேலையாக லக்ஷ்மியின் அருகில் சென்று அதன் கழுத்தைச் சொரிந்து கொடுப்பார். அதுவும் தலையை அண்ணாத்தி உணக்கையாகக் காட்டிக்கொண்டு இருக்கும். 'சாப்பிட்டியாடி? தொப்பை ரொம்பித்தா? தண்ணி குடிச்சியா?' என்றெல்லாம் பரிவோடு அதனிடம் விசாரித்த பின்னர்தான் வீட்டின் உள்ளேயே செல்வார் தாத்தா. சமயங்களில் அவர் வரும்போது அது பசியால் கத்திக்கொண்டு இருந்தால், வீட்டில் உள்ளவர்களுக்கு செம டோஸ் கிடைக்கும். 'நீங்க உப்பு போட்டு சோறு திங்கலே? லக்ஷ்மியை பட்டினி போட்டுட்டுட்டு நீங்க மட்டும் கொட்டிக்கிறீங்களே, நீங்கெல்லாம் என்ன ஜென்மமோ!' என்கிற ரீதியில் அத்தனை போரையும் திட்டித் தீர்த்துவிடுவார்.

லக்ஷ்மி ரொம்ப புத்திசாலி என்று தாத்தா அடிக்கடி சொல்வார். எங்கள் தாத்தா வீட்டில் லக்ஷ்மி ரொம்ப சுவாதீனமாக அதுபாட்டுக்கு வீட்டுக்குள்ளே வந்து நடை, தாழ்வாரம், முற்றம், பின்கடை எனக் கடந்து தோட்டத்துக்குப் போய் தனக்கான தொட்டியில் தவிட்டுத் தண்ணீர் பருகும்.

ஒரு முறை அப்படித்தான், மேய்ச்சலுக்குப் போன மாடு வீடு திரும்பியதும் எப்போதும்போல் சகஜமாக வீட்டுக்குள்ளே வந்துவிட்டது. கூடத்தில் நடு வழியில் ஒரு துண்டு விரித்து, கைக்குழந்தையாக இருந்த என் தங்கையை அதில் படுக்கப் போட்டிருந்தார்கள். லக்ஷ்மி வீட்டுக்கு வரும் ஆர்வமோ என்னவோ, குழந்தையைக் கவனிக்காமல் முன் இரண்டு கால்களையும் குழந்தையைத் தாண்டி வைத்துவிட்டது. அப்புறம்தான் அது கவனித்து இருக்கிறது. அவ்வளவுதான், அது முன்னேயும் போகாமல் பின்னேயும் போகாமல் நின்ற இடத்திலிருந்தே குரல் எழுப்பிக் கத்திக்கொண்டு இருந்தது. புறக்கடைப் பக்கம் போயிருந்தவர்கள், வாசற் பக்கம் போயிருந்தவர்கள் எல்லாம் அதன் குரல் கேட்டு ஓடி வந்து பார்த்துக் குழநதையைத் தூக்கும் வரையில் அந்தப் பசு அப்படியே அசையாமல் நின்றிருந்தது; பின்னர்தான் தோட்டத்துக்குப் போயிற்று என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தாத்தா அந்தப் பசுவிடம் பால் கறக்கும்போது பின்னங்கால்களை அணைக்கயிறு கொண்டு கட்டமாட்டார். அது அவருக்குப் பிடிக்காத விஷயம். ஒருநாள் அப்படிப் பால் கறப்பதற்காக அதன் மடியில் அவர் கை வைத்ததுதான் தாமதம், கால்களை உதறி அவரை இடித்துத் தள்ளிவிட்டது லக்ஷ்மி. எகிறிப் போய் விழுந்தார் தாத்தா. சட்டென அந்தப் பசு, தான் ஏதோ தப்பு செய்துவிட்டது போன்ற பாவனையில் தாத்தாவின் முகத்தின் அருகில் தன் முகத்தைக் கொண்டு வந்தது. முத்தம் கொடுப்பது மாதிரி, ஸாரி கேட்பது மாதிரி கால்களை மாற்றி மாற்றி வைத்து நெளிந்தது. தாத்தா நிதானமாக அதன் மடியை ஆராய்ந்தார். பனியினால் ஏற்பட்ட வெடிப்புகள் இருந்தன. கீறலாக ரத்தம் கசிந்துகொண்டு இருந்தது. ௩0 ௪0 பட்டதும் தன்னையுமறியாமல் உதைத்துவிட்டிருக்கிறது. ஆனால், உதைத்த பின்பு மன்னிப்புக் கேட்பது போன்ற பாவனையில் அது தவித்த தவிப்பு... தாத்தா வர்ணித்தது இன்னும் என் காதுகளில் ஒளித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நான் தினமணி கதிரில் எழுதிய ‘மாடு காத்துக்கொண்டு இருக்கிறது’ கதையில் வைத்திருந்தேன்.

எங்கள் வீட்டு லக்ஷ்மி மட்டுமல்ல, அந்தத் தெருவில் இருக்கும் எல்லார் வீட்டுப் பசுக்களின் பெயர்களும் தாத்தாவுக்கு அத்துப்படி. அது மட்டுமல்ல, அத்தனைப் பசுக்களையும் தன் சொந்த பசு போலவே நேசித்தார். ஒரு முறை கிராம முன்சீப்பிடம் அவர் சவால் விட்டு ஒன்று நிகழ்த்திக் காட்டியதாகச் சொல்வார்கள். பசுக்கள் ரொம்ப அறிவுள்ளவை; ரொம்ப சென்சிடிவ்வானவை என்றெல்லாம் தாத்தா சொல்ல, கிராம முன்சீப் அதை மறுத்து, அவை வெறும் ஐந்தறிவு ஜீவன்கள்; அவற்றுக்கு உணர்ச்சியாவது, அறிவாவது என்றிருக்கிறார்.

அப்போது அவர்கள் நின்றிருந்த இடம் பரந்த புல்வெளிப் பிரதேசம். மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாடுகள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் கும்பலாக 30, 40 மேய்ந்துகொண்டு இருந்தன. “அவற்றில் ஏதாவது ஒரு மாட்டைச் சொல்லுங்கள்; அதை இங்கே நான் இங்கிருந்தே வரவழைக்கிறேன்” என்றார் தாத்தா. “அதோ அந்த வெள்ளையும் பழுப்புமாக, கொம்பில் ஒரு கறுப்புக் கயிறு கட்டியிருக்கிறதே, அந்தப் பசு” என்று முன்சீப் ஒரு பசுவைச் சொல்ல, தாத்தா உடனே குரலெடுத்து, “லலிதா... ஏ, லலிதா..!” என்று கத்த, சட்டென்று அந்தப் பசுக் கும்பலிலிருந்து குறிப்பிட்ட அந்த வெள்ளையும் பழுப்புமான பசு மட்டும் தலையை உயர்த்திக் குரல் வந்த திக்கில் பார்த்தது. தாத்தா இங்கிருந்தே தன் தோள் துண்டை எடுத்து ஆட்டி, “வா... வா” என்று கூப்பிட, அந்தப் பசு உடனே இவர் இருக்குமிடம் நோக்கி ஓடி வந்ததாம்.

பசுக்கள் என்றாலே பொதுவாக உயிர்கள் என்றுதான் பொருள். பதி என்றால் பகவான். பசுக்களாகிய நம்மைக் காத்து ரட்சிப்பதனால்தான் அவன் பசுபதி.

என் தாத்தாவைப் போன்ற பசு நேசர்கள் இப்போது கிராமங்களில் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இப்போதெல்லாம் பசு நேசன் என்றால் நமக்கெல்லாம் கேலியும் கிண்டலுமாக நினைவுக்கு வருவது ராமராஜன்தான் என்றாகிவிட்டது.

5 comments:

நெகிழ்ச்சியான விபரம். காமெடியான முடிவு.

அருமை.

தொடருங்கள்.
 
தி நகரில் நான் வசித்த போது ஒரு மாடு அடி பைப்பை கொம்பால் அசைக்க, அடுத்த மாடு குழாய்க்கு நேராய் வாயை வைத்து தண்ணீர் குடிப்பதை பார்த்து வியந்திருக்கிறேன்.
 
very nice.
 
தெருவில் திரியும் பசுமாட்டைப் பார்த்ததும் பழைய பசு ஞாபங்கள்!.... அருமை!
 
அண்ணே!! நானும் மாடு மேய்த்தவன் தான் இந்தக்கதை என் கண்ணில் நீரை வார்த்தது இப்போது என்னோட பசுக்கள் அத்தனையும் இழந்து இப்பொழுது ஒரு ஐ டி கம்பெனி ல கிராபிக் ஆர்டிஸ் டா வேலை பார்க்கிறேன். எனக்கு இப்பொழுது 26 வயது ஆகிறது. எங்கள் வீட்டில் எனக்குபால் வேண்டும் என்பதற்காகவே பால்மாடு வாங்கி வந்தார்கள் எங்கள் வீட்டில் பசுக்கள் மட்டுமே 25 ற்கு மேல் மற்றும் காளைகள் மூன்று ஜோடிகள் இருந்தது எல்லப்பசுக்கழுமே என்மீது பாசம் வைத்து இருந்தது. ஆனால் இப்பொழுது இரண்டு பசு மட்டுமே இருக்கிறது அதை என்னால் பராமரிக்க முடியவில்லை. போன காலம் திரும்ப கிடைக்குமா?